1955-’56 – இல் நான் பசுமலை உயர்நிலைப் பள்ளியில் IV Form படித்துக்கொண்டிருந்தேன். இன்றைய 9-ஆம் வகுப்பு அது. அப்போது எங்களுக்கு வாரம் ஒரு நாள் இந்தி வகுப்பு இருக்கும். ஆசிரியர் திரு.சங்கரநாராயணன். இந்தியில் அ, ஆ, இ, ஈ முதல் கற்றுத்தருவார்.
இந்தி உண்டேயொழிய அது கட்டாயம் இல்லை. தேர்வு நடக்கும். வினாத்தாள் இந்தியில் இருக்கும். நாங்கள் அதை அப்படியே drawing வரைவது போல் எழுதிக் கொடுத்துவிட்டு வருவோம்.
விடைத்தாள் கொடுக்கும்போது எங்கள்மீது வசைமாரி பொழிவார்.
”உங்களுக்கு இப்போது தெரியாதுடா இந்த சங்கரநாராயணன் அருமை. 1965 – இன்னும் பத்து வருஷம்தான். அப்புறம் இந்தியா முழுக்க இந்தி ஒண்ணுதான் ஒரே ஆட்சி மொழி. அப்போ கண்முழி பிதுங்கி நிப்பீங்க”
இவ்வாறு பேசிப்பேசி எங்கள் இந்தி வெறுப்பை உரம்போட்டு வளர்த்த பெருமை அந்த இந்தி ஆசிரியருக்கே உண்டு.
1957-’58. நான் அப்போது VI Form மாணவன். அது S.S.L.C எனப்படும். அதாவது பள்ளியிறுதி வகுப்பு. இன்றைய 11-ஆம் வகுப்பு. (12-ஆம் வகுப்பு P.U.C எனப்படும் Pre-University Class. அதைக் கல்லூரியில் ஒரு வருடம் படிக்கவேண்டும்.) அப்போது எங்கள் தலைமையாசிரியர் (த.ஆ) திரு ஜி.ஐ.மாணிக்கவாசகம். எங்கள் வகுப்பறையை ஒட்டி அவரது அலுவலகம் இருக்கும். ஒருநாள் வகுப்பு நடந்துகொண்டிருக்கும்போது வெளியே சாலையில் (சுமார் 100 அடி தூரத்தில்) பெருத்த சத்தம் கேட்டது. நாங்கள் எல்லாரும் வகுப்பைவிட்டு வெளியே வந்து வெராந்தாவில் நின்றுகொண்டு பார்த்தோம். சாலையில் ஒரு மாணவர் கூட்டம் இருந்தது. அவர்களுக்குத் தலைவனாக சித்தன் என்று ஒரு மாணவன் நின்றுகொண்டிருந்தார். அவர் கையில் தூக்கிப்பிடித்திருந்தது கறுப்பு-சிவப்பு தி.மு.க கொடி.
இந்தி ஒழிக, தமிழ் வாழ்க, வெளியே வாங்கடா என்று அவர்கள் குரல் எழுப்பிக்கொண்டிருந்தார்கள். எங்கள் த.ஆ எங்களிடம் வந்தார்.
“இந்தாப்பா, நீங்க படிச்சு முடிக்கிறவங்க. நல்லபடியா படிச்சு முடிச்சு வெளியே போற வேலையை மட்டும் பாருங்க.” என்று சொல்லி எங்களை வகுப்பிற்குள் அனுப்பினார்.
அந்தச் சித்தன் அருகில் இருக்கும் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்தவர். அந்தக் காலத்தில் அருகிலிருக்கும் பல ஊர்க்காரப் பையன்கள் பசுமலைக்குப் படிக்க வருவார்கள்.
அந்தச் சித்தன் பிற்காலத்தில் ’குன்றத்துச் சித்தன்’ என்ற பெயரில் முழுநேர அரசியலில் இறங்கினார்.
பள்ளிப்படிப்பை முடித்து 1958-’59 – இல் மதுரை தியாகராசர் கல்லூரியில் புகுமுகவகுப்பு எனப்படும் P.U.C –இல் சேர்ந்தேன். அங்கு எனக்குத் தமிழாசிரியர்களாக இருந்தவர்கள், திருவாளர்கள்: மெ.சுந்தரம், கன.சிற்சபேசன், நா.பாலுசாமி, கதி.சுந்தரம் ஆகியோர். யாராவது ஆசிரியர்கள் விடுமுறையில் சென்றால் தற்காலிகமாக பாடம் எடுக்க வேறு ஆசிரியர்கள் வருவர். அப்படி வந்தவர்கள்: டாக்டர்.இராஜமாணிக்கனார். ஔவை.துரைசாமி அவர்கள், அ.கி.பரந்தாமனார். அப்போது தி.மு.க தலைவர்கள் ஆளுக்கொரு பத்திரிகை நட்த்துவார்கள். நம்நாடு, முரசொலி, தென்றல் போன்றவை. இவற்றை நூலகத்தில் தேடிப் படிப்போம். இந்த ஆசிரியர்கள் ஊட்டிய தமிழ்ப்பாலும், இந்த பத்திரிகைகள் வாயில் வார்த்த தமிழ்த்தேனும்தான் என்னை ஒரு ,மொழிப்பற்றாளனாக மாற்றின.
அப்போது தொலைக்காட்சி கிடையாது. வானொலி (Radio) தான். அது ஆல் இந்தியா ரேடியோ (A.I.R) எனப்பட்டது. திடீரென்று ஒருநாள் அது ஆகாசவாணி என்ற பெயர் மாற்றம் பெற்றது. இந்த இந்திச் சொல்லை எதிர்த்து மாணவர்கள் போராடினர். கி.ஆ.பெ போன்ற தமிழ்ப் பெரியோர் முன்னின்று வழிநடத்தினர். மத்திய அரசு அடிபணிந்தது. தமிழ்நாட்டில் மட்டும் அது ஆல் இந்தியா ரேடியோ என்று அழைக்கப்படும் என்று அறிவித்தது.
1959-’62 – இல் பட்டப்படிப்புக்கு அமெரிக்கன் கல்லூரிக்கு வந்தேன். ஒருநாள் மாணவர்களிடையே பேச அறிஞர் அண்ணா வந்தார். பேரவைக் கட்டிடத்தில் பெருங்கூட்டம். கல்லூரி முதல்வர் திரு.சவரிராயன் தலைமைதாங்கினார். அரசியல் பேசக்கூடாது என்று நிபந்தனை விதித்தார். அப்போதெல்லாம் அறிஞர் அண்ணா பேசுவதற்குரிய தலைப்பு மேடையில்தான் கொடுக்கப்படும். மாணவர்சங்கத் தலைவர் சவுந்திரராஜன் எழுந்து “இப்போது அண்ணா அவர்கள் ‘மழை’ என்ற பெயரில் பேசுவார்” என்று அறிவித்தார். அடுத்த ஒரு மணி நேரத்திற்கு அண்ணா மழையாகப் பொழிந்தார்.
அவர் அங்கு பேசி முடித்த பின் அடுத்து தியாகராசர் கல்லூரியில் பேசுவதாக ஏற்பாடு. இதை அறிந்துகொண்ட நாங்கள், அண்ணா பேசி முடித்த பின், வெளியே ஓடிச்சென்று 6-ஆம் நம்பர் பஸ்ஸைப் பிடித்து (கலைக்டர் ஆபீஸ் – தெப்பக்குளம்) அந்தக் கல்லூரிக்கும் சென்று அண்ணாவின் பேச்சைக் கேட்டு மகிழ்ந்தோம்.
தி.மு.க மேடைகளில் நாங்கள் கேட்ட தமிழ் : அடடா ! அறிஞர் அண்ணா, நாஞ்சில் மனோகரன், சி.பி.சிற்றரசு, இ.வி.கே.சம்பத், நெடுஞ்செழியன், கலைஞர் போன்றோரின் பேச்சுக்கள்தாம் இந்தி எதிர்ப்பு என்ற எதிர்மறை எண்ணத்தையும், தமிழ்ப்பற்று என்ற நேர்நிலை எண்ணத்தையும் தராசின் இருதட்டுகளாக சமநிலையில் வளர்த்துவந்தன.
ப.பாண்டியராஜா