ஆசிரியர் தொழில் மிகவும் புனிதமானதாக இருந்தது நாங்கள் படிக்கும் காலத்தில்,
அப்போதும் பள்ளியில் ஆசிரியராக செயல்பட்டோர் தங்கள் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு ஊதியம் வாங்கிக் கொண்டே கற்பித்தனர்.
ஊதியம் வாங்காமல் கற்றுத் தரவில்லை.
ஆனால் அந்தத் தொழிலின் மேன்மையைக் கருத்தில் கொண்டு அவர்கள் கற்பிக்கும் முறைக்கு மரியாதை செலுத்தி உளபூர்வமாக கற்றுத் தந்தனர்.
இப்போது ஆசிரியர் தொழில் வெறும் பணம் ஈட்டும் தொழிலாகத்தான் இருக்கிறதே தவிர மொழி வளர்ச்சியைப் பற்றியோ, மாணவர்களின் அறிவுத்திறன் வளர்ச்சியைப் பற்றியோ கவலைப்படுவதில்லை என்பதே எம்போன்றோரின் வருத்தம்.
இன்னமும் நான் படித்த அமலக்ஷண்ட் ஜெயின் பள்ளியில் எங்களுக்கு இருந்த தமிழ் ஆசான் அவர்கள் பாடம் நடத்திய முறை நினைவிருக்கிறது.
ஒரு முறை கரும்பலகையில் பாடலை எழுதிப் போட்டுவிட்டு பல முறை தெளிவான உச்சரிப்பில் உரக்கப் படிப்பார். அவர் படிக்கும்போதே எங்களுக்கு பாடல் மனப்பாடமாகிவிடும்.
மேலும் அவர் விளக்கம் சொல்லும்போது கேட்ட மாணவர்கள் மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டிய அசியமே இல்லாமல் எப்போது கேட்டாலும் சொல்லக் கூடிய அளவிலே மனதிலே பதிந்துவிடும்.
அப்போதைய ஆசிரியர்களை குருவாக நாங்களும் மதித்தே செயல்பட்டோம்
அவர்களும் எங்களை தங்கள் பிள்ளைகள் போல் பாசம் காட்டி கற்பித்தனர்.
இப்போது இவை இரண்டுமே இல்லை.
தமிழை நாம் உச்சரிக்கும்போது நாம் உச்சரிக்கும் சொற்களின் கடைசீ எழுத்துவரை அதற்குரிய உச்சரிப்பின் ஒலியோடு கேட்பவர் காதைச் சென்றடைய வேண்டும் என்பார் எங்கள் ஆசிரியர்.
அவர் அளித்த பயிற்சிதான் இன்றளவும் நான் மேடையில் பேசுதற்கும் , நடிப்பதற்கும் உரமாக அமைந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.
அதெல்லாம் ஒரு பொற்காலங்கள்!