(குறட் கடலில் சில துளிகள் 47: நல்லினத்துடன் சேர்க! – தொடர்ச்சி)
குறட் கடலில் சில துளிகள் 48
ஆவது, அழிவது, விளைவதை ஆய்ந்து செய்க!
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல். (திருக்குறள், ௪௱௬௰௧ – 461)
ஒரு செயலைத் தொடங்கும் முன் அதனால் ஏற்படும் அழிவுகளையும் ஆகக் கூடியவற்றையும் மொத்தத்தில் ஏற்படும் ஆதாயத்தையும் ஆராய்ந்து முடிவெடுத்துச் செய்க.
பதவுரை
அழிவதூஉம்=அழிவதும், கெடுவதும்; ஆவதூஉம்=ஆகக்கூடியதும், உண்டாகுவதும்; ஆகி=உண்டாகி, ஆய்; வழிபயக்கும்=தரும், அதன் வழியாக உண்டாதல், பின்வரும்; ஊதியமும்=நன்மையும், ஆதாயமும், வருவாயும், பயனும்; சூழ்ந்து செயல்=ஆராய்ந்து செய்க.
வழிபயக்கும் ஊதியம்=எதிர்காலப் பயன்
வழிபயக்கும் என்ற தொடர் பின்வரும் என்ற பொருளையும். ஊதியம் என்ற சொல் ஆதாயம் அதாவது பயன் என்ற பொருளையும் குறிப்பன.
வழிபயக்கும் ஊதியம் என்பது எதிர்காலப் பயன் என்ற பொருள் தரும்.
உரையாசிரியர் பரிதி இத்தொடர்க்கு “தொன்றுதொட்டு மரபுவழி வரும் ஊதியம் அஃதாவது தலைமுறை தலைமுறையாக வரும் ஊதியம்” என உரைக்கிறார். உரையாசிரியர் பரிப்பெருமாள் “வழிபயக்கும் ஊதியமாவது முன்பு நன்றாகத் தோன்றிப் பின்பு தீது ஆகாத வினை” என்கிறார். “தீது ஆகாத வினை” என்கிறார் உரையாசிரியர் பரிமேலழகர். பொருள் அல்லது பயன் என்று சொல்லாமல் வினையாகவே கூறுகிறார். எனவே, வழிபயக்கும் ஊதியம் என்பது பொருளாகத்தான் இருக்கவேண்டும் என்றில்லை; முயற்சியால் உண்டாகும் நற்பெயரும் வெற்றியும் ஊதியமாகக் கருதப்படும்.
ஒரு செயல் வெற்றிகரமாக முடிந்தது என்றால் அதன் பயன் நன்மையாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. தீமையும் வரலாம். எனவே, ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். வழிபயக்கும் ஊதியம் என்பதற்கு நீண்ட கால ஆதாயம் என்று சொல்வது சிறப்பாக இருக்கும் என்பர் திருக்குறள் விளக்குநர்.
‘அழிவதூஉம்’ ‘ஆவதூஉம்’ இன்னிசை யளபெடைகள்.
ஒரு செயலால் நிகழும் இழப்பு, ஆக்கம், ஆதாயம் ஆகியவற்றைச் செலவு, வரவு, ஆதாயம்(இலாபம்) ஆகியவைபோல் கருதிப் பார்க்கின்றனர். ‘ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாது அல்லவா? எனவேதான் நன்கு ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.
(ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும் அழிந்த பின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.
ஆவதூஉம் ஆகி என்பதற்குத் தேவநேயப் பாவாணர், மு.வ. முதலான பலரும் அழிந்த பின் ஆவதையும் எனப் பொதுவில் கூறுகின்றனர். எனினும் படிப்போர்க்குத் தெளிவில்லாமல் உள்ளது. அழிந்தால்தான் அதனால் வரும் ஆவதைப் பார்க்க வேண்டுமா? வினையால் வரும் கேடு, நன்மை எனத் தனித்னியே ஆராய்ந்து பார்க்கலாம் அல்லவா? அழிவையும் ஆகிவருவதையும் தனித்தனியே நோக்குவதே எளிதாக உள்ளது.
குறள்நெறி அறிஞர் பேரா.முனைவர் சி.இலக்குவனார், ஆவதூஉம்=செய்து முடித்தால் உண்டாகக் கூடிய பயன் என்கிறார். இதுவே ஏற்கத்தக்கதாக உள்ளது. அழிந்த பின் ஆவது என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் பின்வருமாறும் விளக்கம் தருகிறார்.
“ஒரு வினையைச் செய்யத் தொடங்குங்கால், அழிவன பலவாக இருக்கலாம். அழிவிலிருந்துதான் ஆக்கம் தோன்றும். பொருளைச் செலவழித்துத்தான் ஆக்கம் தோன்றும். பொருளைச் செலவழித்துத்தான் பொருளைப் பெருக்குதல் வேண்டும். செலவு என்ன வரவு என்ன என்று ஆராய்ந்து பார்த்துச் செலவினும் வரவு மிகுதியாக இருந்தால்தான் ஒரு வினையைத் தொடங்குதல் வேண்டும். வரவும் மேன்மேலும் தொடர்ந்து பெருகக் கூடியதாய் இருத்தல் வேண்டும். அங்ஙனமின்றி வரவினும் செலவு மிக்கிருந்தாலும் வரவும் செலவும் ஒத்திருந்தாலும் ஒருவினையைத் தொடங்கி முடிப்பதால் பயனில்லை என்பதாம். (பேரா.சி.இலக்குவனார், வள்ளுவர் வகுத்த அரசியல், இலக்குவம், பக்கம் 775)
ஒரு செயலைத் தொடங்கும் முன்னர், அதற்கான முயற்சியில் இறங்கும் முன்னர், அச்செயலை நிறைவேற்றினால் ஏற்படக்கூடிய அழிவுகளைக் கருதிப் பார்க்க வேண்டும். அடுத்து, அவ்வழிவிற்குப்பின் ஏற்படக் கூடிய வேறு விளைவுகளையும் பார்க்க வேண்டும். பின்னர், அச்செயல் நிறைவேறினால், ஏற்படக்கூடிய ஆதாயங்களைக் கணக்கிட வேண்டும். மேற்கொள்ளும் செயலால் கிடைக்கும் தொடர் பயனையும் ஆராய்ந்து காண வேண்டும். உடனடியாகக் கிடைக்கக்கூடிய பயனை விட அதன் பின் தொடர்ந்து வரும் பயன் மிகுதியாக இருக்கலாம். அல்லது குறைவாகவும் இருக்கலாம். எனினும் செயலால் கிடைக்கக்கூடிய மொத்த பயனையும் ஆராய வேண்டும். இவ்வாறு ஒரு செயலால் ஏற்படக் கூடிய தீய விளைவு, பயன், தொடர் பயன் ஆகியவற்றை ஆராய்ந்து அவற்றுள் மிகை நாடி அதற்கேற்பச் செயலைத் தொடங்குவதா இல்லையா என்று முடிவெடுக்க வேண்டும்.
சூழ்ந்து என்றால் சூழ இருத்தல் என்று மட்டும் பொருளில்லை. ஆராய்தல் என்றும் பொருள். பிறருடன் கலந்து பேசி முடிவெடுத்தல் என்றும் பொருள்.
“நின்னொடுசூழ்வறோழி” (கபிலர், கலித்தொகை 54.18)
நானாக முடிவெடுக்காமல் உன்னிடம் ஆராய்ந்து பேசி முடிவெடுப்பேன் தோழி என்கிறார் தலைவி.
என்னொடும்சூழாது (பெருஞ்சித்திரனார், புறநானூறு 163.5)
“என்னிடம் கலந்து பேசாமல் அஃதாவது என்னை எதுவும் கேட்காமல் எல்லார்க்கும் வழங்குவாயாக” என்கிறார் புலவர்.
சூழ்ந்து செயல் என்றால் ஆராய்ந்து செய்தல் என்றே பொருளாகும். இப்பொழுது சூழ்ச்சி என்றால் தீய செயலுக்குத் திட்டமிடல் என்று பொருளாகும்.
குறள் வழியில் செயலின் அல்லது தொழிலின் தீய விளைவு, நல்ல விளைவு ஆகியவற்றை ஆராய்ந்து நிறைவில் பயன்தரும் செயலையே தொடங்குவோம்!
– இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1556-1560 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1561-1565
படப் பொறி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் படப் பொறி வெருளி.
சிலருக்கு ஒளிப்படம் எடுத்தால் வாழ்நாள் குறையும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒளிப்படம் பார்ப்பதவர்கள் அழகற்று இருப்பதாகவும் முதுமை தெரிவதாகவும் உணர்வார்கள் என்றெல்லாம் எண்ணியும் ஒளிப்படம் குறித்த பேரச்சம் சிலருக்கு இருக்கும். இத்தகையோர் ஒளிப்படம் எடுக்கும் படப்பொறி மீது தேவையற்ற பேரச்சம் கொள்கின்றனர். படம் எடுக்கப் பயன்படும் ஒளிவீச்சாலும் படப்பொறி மீது அளவுகடந்த பேரச்சம் கொள்கின்றனர்.
00
படர்வு ஆட்டம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் படர்வாட்ட வெருளி.
Cubranophobia/Minecraftphobia என்றும் சொல்வர்.
00
படிகளில் ஏறுவது தொடர்பான தேவையற்ற அளவற்ற பேரச்சம் படிகள் வெருளி.
படி என்னும் பொழுது வாசற்படிகள், மாடிப்படிகளாகவும் இருக்கலாம் ஏணிப்படிகளாகவும் இருக்கலாம்.
படி என்பது ஏறி இறங்க உதவும். இங்கு இந்தப் பொருளிலேயே வருகிறது. உயரமான இடத்தில் ஏறுவதும் படி வெருளி. மலை போன்ற உயர இடங்களில் ஏறுவதை நாம் உயர்பு வெருளி(Acrophobia) எனத் தனியாகக் குறித்துள்ளதால், படி ஏறுவது தொடர்பில் படி வெருளியாக Climacophobia என்பதைச் சேர்த்துள்ளோம்.
பொதுவாகச் சிறுவர்களுக்கும் முதியோர்களுக்கும் மிகுதியாக இது வருகிறது. சிறு அகவையில் படியில் தவறி விழுந்தமை அல்லது பிறர் படிகளில் இருந்து உருண்டு விழுந்ததைப் பார்த்தமை அல்லது இதுபோன்று கதைகளில் படித்தமை, திரைப்படங்களில் அல்லது தொலைக்காட்சிகளில் பார்த்தமை போன்றவற்றால் படி வெருளி வருகிறது. படிவெருளி என்றால் படிப்பு வெருளி என எண்ணக்கூடாது என்பதற்காகப் படிகள் வெருளி என்று குறிக்கப்பெறுகிறது.
படிகளில் ஏறும் பொழுது ஏற்படும் அளவுகடந்த பேரச்சம் ஏறுவெருளி(Climacophobia). (படி)ஏறு வெருளி, படிகள் வெருளி(Bathmophobia)யில் இருந்து மாறுபட்டது என்கின்றனர். படிகளைக் கண்டு அஞ்சுவதும் படிகளில் ஏறுவதற்கு அஞ்சுவதும் ஒன்றுதானே எனவே, இரண்டையும் ஒன்றாகக் குறித்துள்ளேன்.
படி வெருளி என ஒருமையில் குறித்தால் படிப்பதை எண்ணித் தவறாகப் பொருள் கொள்ளலாம் என்பதால் படிகள் எனப் பன்மை கையாளப்பட்டுள்ளது.
bathmளs என்னும் பழங்கிரேக்கச்சொல்லின் பொருள் படிக்கட்டு. இச்சொல்லில் bath என்பது குளியலைக் குறிக்கவில்லை. ஆழமான என்னும் பொருளைத் தருகிறது.
வீழ்பு வெருளி(basophobia / basiphobia) யுடன் தொடர்புடையது.
klîmax, என்னும் பழங்கிரேக்கச்சொல்லின் பொருள் ஏணிப்படி, படிக்கட்டு.
00
படிகம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் படிக வெருளி
மணிக்கல், பளிங்கு, படிகம் , கண்ணாடிப்பொருள்கள் மீதான தேவையற்ற வெறுப்பும் அளவு கடந்து பேரச்சமும் உடையவர்களாக இத்தகையோர் இருப்பர்.
தங்களிடம் இவை இருக்கும்போது பாதுகாப்பு குறித்த அச்சமும் பிறரிடம் இருக்கும்போது ஆடம்பரமாகக் கருதி எரிச்சலும் கொள்வோர் உள்ளனர்.
crystallo என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் பளிங்கு.
00
படித்தல் குறித்த வரம்பற்ற பேரச்சம் படித்தல் வெருளி.
படிப்பதற்குப் பள்ளிக்கூடம் போகவும் புத்தகங்கள் படிக்கவும் காரணமின்றிப் பேரச்சம கொள்வோர் உள்ளனர். புத்தகங்கள் படிப்பது குறித்த வெருளியை நூல் வெருளி(Bibliophobia) என்று வகைப்படுத்தி உள்ளதால், படிப்புக்கூடம் செல்வது தொடர்பான பேரச்சத்தை மட்டும் இதில் வகைப்படுத்தலாம்.
மழலைப்பள்ளி வெருளி, தொடக்கப்பள்ளி வெருளி, நடுநிலைப்பள்ளி வெருளி, உயர்நிலைப்பள்ளி வெருளி, மேனிலைக்கல்வி வெருளி, கல்லூரிக் கல்வி வெருளி எனப் பலவகையாக இதனைக் குறிக்கலாம்.
நன்றாய்ப் படியுங்கள்! நாட்டின் குழந்தைகள்
ஒன்றாய் இருங்கள் உயர்வினை எண்ணுங்கள்!
என்னும் பாரதிதாசன் பாடல் வரிகளை மழலைப் பருவத்திலிருந்தே பிள்ளைகளுக்கு உணர்த்திப் பாடக்கூடங்கள் செல்வதில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்.
பெண்கல்வியை வலியுறுத்தும் பாவேந்தர் பாரதிதாசன் பாடிய பின்வரும் பாடல் இருபாலருக்கும் கல்வியை உணர்த்துவதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட
சாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை
சிலைபோல ஏனங்கு நின்றாய் – நீ
சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்
விலைபோட்டு வாங்கவா முடியும்? – கல்வி
வேளைதோறும் கற்று வருவதால் படியும்!
மலைவாழை அல்லவோ கல்வி? – நீ
வாயார உண்ணுவாய் போ என் புதல்வி!
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5