மதிப்பிற்குரிய திரு. திருவள்ளுவன் ஐயா,
வணக்கம். பிழைகளில்லாப் பிழை திருத்திகள் தேவை! என்ற
கட்டுரையைப் படித்தேன். தமிழகத்தில் கணினித்தமிழில் அடுத்தகட்டத் தேவையையும், முக்கியத்துவத்தையும் புரிந்துகொண்டு செயலாற்றுவது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. தங்களின் உயர்ந்த நோக்கத்திற்குத் தலைவணங்குகிறேன்.
இந்தக் கட்டுரையில் “மென்தமிழ் - தமிழ்ச் சொல்லாளர்” குறித்த சில கருத்துரைகள் இடம்பெற்றுள்ளன. இந்த “மென்தமிழ் – தமிழ்ச் சொல்லாளர்” உருவாக்கத்தில் என்னுடைய சிறு பங்களிப்பும் உள்ளது என்ற முறையில் சில கருத்துகளைத் தங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
// எண்களை எழுத்தால் குறிக்கும்பொழுது பெரும்பான்மையர் தவறாகவே குறிக்கின்றனர். இருபத்தி ஒன்று, முப்பத்திநான்கு, அறுபத்தி எட்டு என்பதுபோல் உகரம்வரவேண்டிய இடத்தில் இகரம் பயன்படுத்தி எழுதுகின்றனர். (அவ்வாறே பேசவும் செய்கின்றனர்.) இதனைப் பிழைதிருத்திகள் மூலம் திருத்திப் பார்த்தால் இயலவில்லை.
இறுபத்தி நாலு
முப்பத்தி ஒம்பது
என்பத்தி எட்டு
என உள்ளீடு செய்தால்,
இருபத்தி நாலு
முப்பத்தி ஒன்பது
எண்பத்தி எட்டு
என்றுதான் மென்தமிழ் சொல்லாளர் திருத்துகிறது.//
இருபத்து / இருபத்தி என்ற இரண்டு வழக்கும் தற்காலத் தமிழில் வழக்கில் (மக்கள் அதிகம் பயன்படுத்துவதால்) இருப்பதால் இரண்டையும் நாங்கள் சரியானதாகக் கருதியிருக்கிறோம். ஆனால், இருபத்து என்பதே மிகச் சரி. இதை வலியுறுத்துவதற்காகத்தான் எண் – எழுத்து மாற்றியில் அதைமட்டும் (இருபத்து) பரிந்துரைக்கிறோம். இருப்பினும், தங்களின் மேலான கருத்து கட்டாயம் கருதவேண்டியதுதான். நன்றி!
// “அரசு வழங்கிய புதிய பஸ்களை,” என்பதை எச்சொல்லாளரும் திருத்த வில்லை. ஆனால், மென்தமிழ் தனியாக இச்சொல் இடம் பெற்றால் பேருந்து எனத் திருத்துகின்றது. எனவே, சொல் அடையும் மாற்றத்திற்கேற்ற திருத்தம் அமையவில்லை எனலாம். //
முழுமையான இலக்கணவிதிகளின் அடிப்படையில் (Rule Based), கணினிக்கான தமிழ் இலக்கண மாதிரியை உருவாக்கி, அதனடிப்படையில்தான் (சில வரன்முறைகளுடன் - Limitations) “மென்தமிழ் – தமிழ்ச் சொல்லாளர்” உருவாக்கப்பட்டுள்ளது. தாங்கள் குறிப்பிட்டுள்ள அதே செய்தியை “அரசு வழங்கிய புதிய பஸ்களை,” , தாங்களே மென்தமிழில் தட்டச்சு செய்துபாருங்கள், நீங்கள் எதிர்பார்க்கும் விடை கிடைக்கும். வலைத்தளங்களில் இருக்கும் பல தமிழ்த்தொகுப்புகள் ஒருங்குறியில் இருந்தாலும், அவற்றில் பல சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதற்குப் பல்வேறு வகை விசைப்பலகைகள் பயன்பாட்டில் இருப்பதே காரணம். இங்கு, “அரசு வழங்கிய புதிய பஸ்களை,” புதிய, பஸ்களை என்ற இரண்டு சொற்களுக்கிடையில் இடைவெளி இருப்பதாகத்தான் வெளியில் தெரிகிறது. ஆனால், உண்மையில் உள்ளீட்டில் இரண்டிற்கும் இடைவெளி இல்லை. இதற்கு, மென்தமிழ் பொறுப்பாகாது.
// மினி பேருந்துகளை, //
இதிலும் மேற்சொன்ன இடைவெளிச் சிக்கலே.
// “மதுரைக்குசென்று அவணை பார்.”
என்னும் தொடருக்கு மென்தமிழ்
“மதுரைக்குச் சென்று அவனை பார்.”
என்று மட்டும் திருத்தம் செய்கிறது.
இரண்டாம் வேற்றுமை உருபிற்கு அடுத்து வல்லினம் மிகும் வகையில் மென்தமிழ் திருத்தங்கள் மேற்கொண்டாலும் இங்கே பார் என்பதை மதுவகத்தின் ஆங்கிலச் சொல்லாகக் கருதித் திருத்தவில்லை. இதுபோன்ற குழப்பங்கள் கூடா. //
மென்தமிழ் பிழைகளை இரண்டுவிதமாகக் கையாள்கிறது. ஒன்று, சொற்பிழைதிருத்தி – இது ஒரு சொல்லுக்குள் இடம்பெற்றுள்ள எழுத்துப்பிழைகளையும், அகச்சந்தி, சாரியைப்பிழைகளையும் இனங்கண்டு அதற்குரிய பரிந்துரைகளைத் தரும். இரண்டாவது, சந்திப்பிழைதிருத்தி – இது தொடர்ச்சந்தியைக் கையாளும். மென்தமிழில், ஒரு ஆவணத்தைச் சரிபார்க்க முதலில் சொற்பிழைதிருத்தியையும் பிறகு சந்திப்பிழைதிருத்தியையும் பயன்படுத்துமாறு மென்தமிழ் உதவிக்கோப்பில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
எனவே, தாங்கள் ‘அவணை பார்’ என்ற தொடரிலுள்ள எழுத்துப்பிழையைத் திருத்தச் சொற்பிழைதிருத்தியையும், சந்திப்பிழையைத் திருத்தச் சந்திப்பிழைதிருத்தியையும் பயன்படுத்தியிருந்திருக்கவேண்டும்.
// மதுரைதமிழ்சங்கம்
மதுரை காமராசர் பல்கலைகழகம் //
இங்கு, மென்தமிழ் – சொற்பிழைதிருத்தி, ‘பல்கலைகழகம்’ என்பதைத் தவறு என்று சுட்டி அதற்கான சரியான பரிந்துரையைக் கொடுக்கும். ‘மதுரைதமிழ்சங்கம்’ என்பது தொகைச்சொல்லாதலால் இதனால் பரிந்துரை தர இயலாது. தொகைச்சொற்களும், தொகைச்சந்தியும் மென்தமிழின் திறனெல்லைக்கு அப்பாற்பட்டவை; தற்போதைய தமிழ்க் கணினிமொழியியல் ஆய்வுநிலையில் இது இயலவில்லை. இதுபற்றிய குறிப்பை உதவிக்கோப்பில் காணலாம்
// செய்தித்தாள்களில் வருவனவற்றைப் பிழையின்றி வலைத்தளங்களில் பதிவதற்காக மென்தமிழ் மூலம் திருத்த முயன்றேன். பயனில்லை. இது குறித்து அதன் உருவாக்குநரிடம் கேட்ட போது, “தினமலர் எனில் ஒன்றும் திருத்த இயலாது. தினமணி எனில் ஓரளவு திருத்தும். இனி அயலெழுத்துகளை நீக்கித் திருத்தும் முயற்சி மேற்கொள்ககின்றேன். குறைபாடு காணும் பொழுதெல்லாம் தெரிவியுங்கள் செப்பம் செய்கின்றேன்.” என்றார். //
மென்தமிழ் தற்கால எழுத்துத்தமிழுக்காக உருவாக்கப்பட்ட மென்பொருள். எனவே, இது தன் எல்லைக்குட்பட்டதை எவ்விதக் குழப்பமுமின்றிச் சிறப்பாகவே செய்யும். தினமலர், தினமணி இரண்டிலும் இடம்பெற்றிருப்பது தமிழே. ஆனால், இரண்டின் நடைகளும் வேறு.
1. எனது பேராசிரியர் தங்களிடம் கூறியிருந்தது தங்கள் கேள்விக்கான பதிலே. அதாவது, வலைத்தளங்களில் மேற்சொன்ன உள்ளீட்டுச் சிக்கல்கள் தினமணியில் குறைவு. ஆனால், தினமலரில் கொஞ்சம் அதிகம். பேராசிரியரின் விடையைத் தாங்கள் சரிவர உள்வாங்காமல் இருந்திருக்கலாம்.
2. மென்தமிழில் குறைபாடுகள் கட்டாயம் இருக்கும். எக்காலத்திலும், மனித மூளைக்கு இணையாக, கணினியால் முடியாது என்பதைத் தெளிவாக உணர்ந்தே இப்பணியில் ஈடுபட்டுள்ளோம். குறைகளைக் குறைக்கத்தான் முயல்கிறோம். இனியும் முயல்வோம். தாங்கள் இதுவரை எவ்விதக் குறைபாடுகளையும் பகிர்ந்துகொண்டதாகத் தெரியவில்லை. இனியாவது பகிர்ந்துகொண்டால் நாங்கள் மகிழ்வோம்.
பிழைதிருத்திகளைப் பயன்படுத்துபவர்கள் அதன் செயல்பாடுகளைமட்டும் தெரிந்துகொண்டால் போதும். ஆனால், பிழைதிருத்திகளைக்குறித்த கருத்துரைகளை வழங்கவிரும்புபவர்கள் அதன் நோக்கம் என்ன? பயனர்கள் யார்? திறனெல்லை எது? அடிப்படை ஆய்வுகள் எவை? அதன் முழுமையான செயல்பாடுகள் என்னென்ன? போன்ற சில அடிப்படையான கேள்விகளுக்கு ஆய்வுபூர்வமான விடைகளுடன் முன்வந்தால் உண்மையிலேயே நலம் பயக்கும். மேலும் கணினிமொழியியல், மொழித்தொழில்நுட்பம் ஆகிய துறைகளின் அடிப்படையில் மென்பொருள்களின் செயல்பாட்டுத்திறன்பற்றிக் கருத்துரைகள் வழங்கினால் சிறப்பாக அமையும்.
தங்கள் கட்டுரைக்கு ‘ பிழைகளில்லாப் பிழைதிருத்திகள்’ என்று தலைப்பு கொடுத்துள்ளீர்கள். தமிழ் மென்பொருள்களில் உள்ள பிழைதிருத்தியின் செயல்பாட்டுத்திறனின் எல்லையானது, இன்றைய தமிழ்க்கணினிமொழியியலின் வளர்ச்சியின் நிலையை ஒட்டியதாகும். இயற்கைமொழிகளுக்கான பிழைதிருத்திகளை உருவாக்குவது – அதுவும் அதிகமான ஒட்டுக்களை - விகுதிகளையுடைய தமிழ்மொழிபோன்ற மொழிகளுக்கு உருவாக்குவது என்பது சவாலான ஒரு செயலாகும். எனவே அவற்றின் இன்றைய நிலையைப் பிழைகள் என்று கூறுவது சரியாகாது. பிழைதிருத்திகளின் செயல்திறன் மேலும் வளரவேண்டும் என்றும் கூறலாமே ஒழிய , அவற்றின் இன்றைய எல்லை வரையறையைப் பிழைகள் என்று கூறுவது சரியாகாது. பிழைகள் என்பதற்கு உள்ள வரையறை வேறு.
// பெயரளவிற்குப் பிழை திருத்திகள் இருப்பன, பயன்படுத்துநரின் நேரத்தைத்தான் வீணடிக்கின்றன //
கணினியில் தமிழைத் தவறில்லாமல் பயன்படுத்தவேண்டும், பயனர்களின் நேரத்தை மிச்சப்படுத்தவேண்டும் என்ற விருப்பத்தில்தான் பல்லாண்டு காலத் தமிழ்க் கணினிமொழியியல் ஆய்வின் அடிப்படையில், பல்துறைகளைச் சார்ந்தவர்களின் கூட்டுமுயற்சியில் உருவாக்கப் பட்டதுதான் “மென்தமிழ் – தமிழ்ச் சொல்லாளர்”. இதுவரை, தமிழ் ஆய்வாளர்கள், இதழாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பயனர்களும் மென்தமிழால் தங்களின் நேரம் மிச்சப்படுவதாகவும், பிழைகளைப் பெரும்பாலும் தவிர்க்க உதவுவதாகவும்தான் கூறியுள்ளனர். ஆனால், மென்தமிழ் தங்களின் மேலான நேரத்தை வீணடித்திருக்குமாயின் அதற்காக நாங்கள் வருந்துகிறோம்.
அன்புடன்
கி. உமாதேவி