"தீ பரவட்டும்"
ஆசிரியர் - அண்ணாதுரைபதிப்பு ஆண்டு 1954
பதிப்பு ஆண்டு 1953
பதிப்பு ஆண்டு 1943
துறை / பொருள்: சமூக அறிவியல்
கிடைக்குமிடம் :
தமிழ் இணையக் கல்விக்கழகம் - தமிழ் மின் நூலகம் -
https://tamildigitallibrary.in/book-search-new/%20தீ%20பரவட்டும்
இந்நூலில் இரண்டு சொற்போர்கள் உள்ளன
சொற்போர் 1 :
பங்கேற்றவர்கள் - தோழர் அண்ணாதுரை
தோழர் சேதுப்பிள்ளை அவர்களின் மறுப்பு
தோழர் ஈழத்து அடிகள் பேச்சு
தோழர் அண்ணாத்துரை பதில் மறுப்பு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சொற்போர் 2 :
பங்கேற்றவர்கள் - தோழர் அண்ணாதுரை
பேராசிரியர், சோமசுந்தர பாரதியார் சொற்பொழிவு
அண்ணாத்துரை அவர்களின் பதில்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தீ பரவட்டும்!
சொற்போர் 1
(9-2-43 செவ்வாய்ககிழமை மாலை 4-30 மணிக்குச் சென்னைச் சட்டக் நல்லூரி மண்டபததில ஆரியச் சுவடிகளான கமபராமாயணம், பெரிய புராணம் பற்றிய ஓர் உரையாடல் (டிபேட்) நடைபெற்றது. கூட்டத்திற்கு இந்துமத பரிபாலன நிலையத் தலைவர், தோழர். இராமச்சந்திரஞ் செட்டியார் பி.ஏ., பி.எல். அவர்கள் தலைமை வகிததார. உரையாடலில், தோழர் கள் சி.என். அண்ணாத்துரை எம். ஏ., ஈழத்தடிகள் பி.ஏ., ஆர். பி. சேதுப்பிள்ளை பி.ஏ., பி.எல்., சீனிவாசன் ஆகியவர்கள் கலந்துகொண்டு தத்தம் கருத்துககளை எடுத்துக் கூறினார்கள்.)
கூட்ட நிகழ்ச்சி
கூட்டத்தைப்பற்றிய எவ்விதமான விளம்பரமும் செய்யப்படவில்லை என்றபோதிலும், மக்கள் திரளாக வந்து குழுமிபிருந்தனர். தன்மதிப்பு இயக்கத் தோழர்கள் பல நூற்றுக் கணக்கானவர்களும், சட்டக்கல்லூரி மாணவர்களும், புலவர்களும், தாய்மார்கள் பலரும் மண்டபம் நிறையக் குழுமியிருந்தனர்.
சட்டக்கல்லூரித் தமிழ்க்கழக அமைச்சர் தோழர் வேணுகோபாலன், தலைவரைப் பிரேரேபிக்கையில், "பெரியோர்களே! தமிழருக்குச் செல்வம் போன்ற கம்பராமாயணம், பெரியபுராணம் ஆகிய நூற்களைக் கொளுத்தவேண்டும்; அல்லது அழிக்கவேண்டும் என்று பெரியார் ஈ. வெ. இராமசாமி அவர்கள் கூறியதுகேட்டுத் தமிழ் மக்கள் கோபம் கொள்வது இயற்கை. ஆனால், சுயமரியாதைக்காரர்களின் தீர்மானத்தைப்புறக்கணிப்பதும் கூடாது. ஆகவே, அதுபற்றி அவர்களின் கருத்தை அறிய, தோழர் அண்ணாத்துரை அவர்களை அழைத்துள்ளோம். அவர் இந்திரசித்துக்குச் சமம் என்று கூறுவேன். அவருரையை மறுத்துப்பேச, திருவாளர் சேதுப்பிள்ளை அவர்கள் இராமபிரான் போல் வந்திருக்கிறார்கள். இதற்கு நடுநிலைமையாளராக இருக்க, ஜனக மகாராஜனைப்போல உயர்திரு இராமச்சந்திரஞ் செட்டியார் அவர்கள் வந்திருக்கிறார்கள். விவாதம் மிக மேலான முறையினதாக இருக்கவேண்டுமென விழைகிறேன்" என்று கூறினார்.
தலைமை தாங்கிய திரு. சி. எம். இராமச்சந்திரஞ் செட்டியார்(இந்துமத தர்மபரிபாலன போர்டு கமிஷனர்) அவர்கள், விவாதிக்கப்படும் இவ்விஷயம் மிக முக்கியமானது; விவாதிக்க வந்திருப்போரும் வல்லவர்கள். ஆகவே, விவாதம் மேலான நிலையிலேயே இருக்கும். நான் அவர்கள் பேசியபின்னர் ஏதேனும் கூறுவதே முறை. ஆதலால், முன்கூட்டி ஏதுங்கூறாது, முதலில் தோழர் அண்ணாத்துரையைப் பேசும்படி அழைக்கிறேன் என்றுரைத்தார்.
தோழர் அண்ணாதுரை பேச்சு
தலைவரவர்களே, தாய்மார்களே, தோழர்களே! சட்டக்கல்லூரித் தமிழ்க் கழகத்தினர் இவ்விவாதத்தை அமைத்து என்னை அழைத்தமைக்கு, என் நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அமைச்சர் கூறிய வண்ணம் நான் இந்திரஜித்தன்; ஏதோ மாயாஸ்திரங்களை ஏவுவேன் என்று யாரும் கருதிவிடத் தேவையில்லை; இன்று நடைபெறப்போவது யுத்தகாண்டமுமல்ல! எனக்குப் பிறகு பேச இருக்கும் நண்பர் தோழர் சேதுப்பிள்ளை அவர்கள் புராணப் பண்டிதர்கட்கும் பகுத்தறிவாளருக்குமிடையே உள்ள பிளவை, தமது பெயருக்கேற்ப, அடைத்துச் சேதுபந்தனம் செய்தல் வேண்டும், அணைகோலல் வேண்டும் என்ற அவாவுடையேன்.
விவாதங்கள் என்றால், நான் வெகுண்டு விடுபவனல்ல; வரவேற்பவனே. அதிலும் கற்றுணர்ந்த நம் சேதுப்பிள்ளை அவர்களிடம், தமிழ்ப் பெரியாரும், சைவத் திருவினருமான தோழர் இராமச்சந்திரஞ் செட்டியார் அவர்களின் தலைமையில், நீதிமன்றங்களுக்கு நீதிமான்களையும், நீதியுரைப்போரையும் தமாரித்துத் தரும் சட்டக்கல்லூரி மன்றத்தில், விவாதம் நிகழ்த்துவது மிக்க சந்தோஷம். விவாதம் மிக மேலான முறையினதாக இருக்கும்.
இராமாயணம் பெரியபுராணம் முதலியவற்றைக் கண்டித்தால், அறிவிற்சிறந்தோர் கூடியுள்ள இங்கு, நாங்கள் கண்டிப்பது, அவைகளிலே புகுந்துள்ள பொய்ம்மைகள், ஆபாசங்கள் ஆகியவற்றையே என்பதை அறிவர். சாதாரண மக்கள் கொண்ட பொதுக் கூட்டத்திலோ, இராமாயணத்தைக் கண்டிக்கின்றனர் என்றால் உடனே ஆத்திரப்படுவர். வழக்கொன்றுண்டு, இராம கதை படிக்குமிடந்தோறும் அனுமன் வந்திருப்பான் என்று. இராமாயணக் கண்டனம் என்றதும், ஆர்ப்பரிக்கும் அனுமன் இங்கு இரான். ஆகையினால், விவாதம் மிக மேலான முறையிலேயே செல்லும் என்று கூறுகிறேன்.
கம்ப இராமாயணம் பெரிய புராணம் ஆகியவற்றைக் கொளுத்தவேண்டும் என்று எனது தலைவர் பெரியார் ஈ.வெ. இராமசாமி கூறியது கண்டு, மக்களுக்குக் கோபம் வருவது இயற்கை என்று அமைச்சர் உரைத்தார். உண்மை. மக்கள் கோபிப்பர் என்பதை நாங்களறிவோம். நாங்கள் துவக்கிய எக்காரியத்துக்கும், நாங்கள் புகுத்திய எக்கருத்துக்கும் எதிர்ப்பு ஏற்பட்டு, மக்கள் கோபித்துப், பின்னர் எம்முடன் சேர்ந்து எமது பாசறைகளுக்கு வந்துற்றனர் என்பதை, அவர் அறிய வேண்டுகிறேன்.
ஆனால், யாரையும் புண்படச் செய்யவேண்டு மென்பதற்காக, இக்காரியத்தை நாங்கள் துவக்கினோமில்லை.
கலையை அழிக்கின்றனர்; கம்பர் புகழை மறைக்கின்றனர் என்று கூறப்படும் பழிச்சொல்லை, நாங்களறிவோம். கலையிலே தேர்ந்து, அதிலே ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு கம்பனின் இராமாயணமும் சேக்கிழாரின் பெரியபுராணமும் கலை என்று கருதும் அன்பர்கள் ஒரு பெரியாரின் போரால், ஓர் அண்ணாத்துரையின் அனலால் அக்கலை அழிந்துபடும் என்று கருதுவரேல், அவ்வளவு சாமான்யமானது கலையாகாது, அத்தகைய கலை இருத்தலுமாகாது என்றுரைக்க ஆசைப்படுகிறேன். கலையைக் குலைக்கும் செயலல்ல. எமது கலையிலே புரட்சி உண்டாக்க விழைகிறோம்-தக்க காரணங்களோடு.
கலை, ஓர் இனமக்களின் மனப்பண்பு; அவ்வின மக்களிடையே தோன்றும் தெளிவு, வீரம், ஆகியவற்றின் எடுத்துக்காட்டு. எனவே, கலை இனவளர்ச்சிக்கு ஏற்றபடி மாறியும், விரிந்தும் வருமென்பதே நுண்ணறிவினரின் துணிபு. கலை உலகில், அவ்வப்போது மாறுதல் உண்டாகும். இனத்துக்கோர் கலையும், இடத்தின் இயல்பு, தட்பவெப்பம் ஆகியவற்றுக்கு ஏற்ற முறையிலும், கலை உண்டாகும், வளரும், மாறும்.
அரபு நாட்டுக் கலையிலே, தென்றலைப்பற்றிய கவிதைகள் அதிக மிருக்க முடியாது. எஸ்கிமோ நாட்டுக் கலையிலே, கதிரோனின் ஒளி பற்றிய கவிகள் அதிகமிராது. ஆப்பிரிக்கா நாட்டு ஜூலு வகுப்பினரின் கலையிலே அவர்களின் நாட்டியம் கவியிலே இருக்கும். அது போலவே ஆரியக் கலையிலே, கங்கையின் கவர்ச்சியும், கரையோரக் காட்சியும், சோலை மாட்சியும் என்பன போன்றவைகள் கவிதைகளாக, இலக்கியமாக இருக்கும்.
இந்தியா என்ற இந்த உபகண்டம், பல இனங்கள் வசிக்கும் இடம். ஆகவே, இங்குப் பல கலைகள் உண்டு, இனத்திற்கோர் கலை என்றுண்டு. எனினும், இருபெரும் கலைகள் இங்குள்ளன என்று அறிவாளிகள் கூறியுள்ளனர். ஆரியக் கலை ஒன்று, திராவிடக் கலைபிறிதொன்று. இடத்திற்கோர் கலை உண்டென்றும், இனத்திற்கோர் கலை யுண்டென்றும் கூறினேன் .. அவை ஒன்றை ஒன்று தழுவாவிடினும், மோதிக்கொள்ளாமல் இருத்தலுண்டு, அவை தனித்தனி அமைப்புப்பெற்றுத் நிகழ்வதால் இந்துக்கலை என்று கூறப்படுவதும், இஸ்லாமியக்கலை என்று கூறப்படுவதும் வேறு வேறு. எனினும் அவை ஒன்றை ஒன்று மோதிக் கொள்ளாதபடி தனித் தனிஅமைப்புக்களாகி விட்டன.
ஆனால், ஆரியக் கலையும் திராவிடக் கலையும் அப்படிக்கன்றி, ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகவும், மோதிக் கொள்வதாகவும் இருத்தலை, அறிஞர் ஒப்புக்கொள்கின்றனர். இந்நிலையின் பயனாகத் திராவிடர்கலை மீதும், சமுதாயத்தின் மீதும், சட்டதிட்டங்கள் மீதும், ஆரியம் ஆதிக்கம் செலுத்தலாயிற்று. இக்கல்லூரியில் பன்னெடு நாட்களுக்கு முன்பு இருந்தவரும், சட்டநிபுணருமான மிஸ்டர் நெல்சன் என்பார், 'இந்து சட்டம் என்பது, ஆரியர்களின் மனு, பராசர், யாக்ஞவல்கியர் ஆகியோரின் நூற்களின் அடிப்படைகளின் மீது அமைக்கப்பட்டிருப்பதாலும், தென்னாட்டு மக்களில், பார்ப்பனரல்லாத பெருங்குடி மக்கள் ஆரியரல்லாதார் ஆகையினாலும், அவர்கள் மீது இந்து சட்டத்தைத் திணிப்பது தவறு' என்று எடுத்துக் காட்டினார்.
அவரது பேச்சு, காட்டுக் கூச்சலாகி விட்டது. இந்துசட்டமே-ஆரிய நீதியே, இன்று நம்மை ஆள்கிறது. தமிழருக்குத் தேச வளமைபோன்ற சட்டமோ, அல்லது குறள் நீதியோ இல்லை, ஆரியமே சட்டத்தை ஆள்கிறது! கலையிலே ஆரியத்தை ஆதிக்கம் செய்யவிட்டதனால், நாம் கண்ட பலன் இதுவென்றுரைக்க ஆசைப்படுகிறேன்.
எனவேதான், தமிழருக்குத் தமிழ் நெறி, தமிழ் முறை, ஒழுக்கம், வீரம், கற்பு, காதல் எனும் பண்புகளைத் தரக்கூடியன கலையாக இருத்தல் வேண்டுமேயொழிய, வேறோர் இனத்தைப் புகழ்வதும், அதற்கு ஆதிக்கமளித்துத் தமிழ் மக்கள் மனதிலே தன்னம்பிக்கையற்றுப் போகும்படி செய்வதும், தமது இனத்தைப்பற்றியே தாழ்வாகக் கருதிக்கொள்ளும்படியான நிலைமை உண்டாக்குவதுமான கதை. காவியம், இலக்கியமென்பவைகளைக் கொளுத்தவேண்டுமென்று நாங்கள் கூறுகிறோம். தமிழர் என்று நான் கூறும்போது, தமிழ்மொழி பேசுவோர் என்பவனரை மட்டுமல்ல நான் குறிப்பது, தமிழ் இனத்தை என்பதை நினைவூட்கிறேன்.
கலை, இலக்கியம், கற்பனை நூல் ஆகியவற்றின் மீதெல்லாமா எங்களுக்கு விரோதம்? இல்லை. தொல்காப்பியத்தைத் தொட்டோமில்லை. நற்றிணையை, நல்லகுறுந் தொகையை, கற்றறிந்தோர் ஏத்துங் கலியை அகத்தைப் புறத்தை அழிக்கப் புறப்பட்டோமில்லை. ஆரியத்தை அழகுறப் புகுத்தித், தமிழரை அழிக்கும் நூற்களையே கண்டிக்கிறோம்.
தொல்காப்பியமே, அதற்குமுன் இருந்த புலவர்களின் பொன்னுரைகளின் பெட்டகம் எனில், 700 ஆண்டுகட்குமுன் தோன்றிய கம்ப இராமாயணம் பழம்பெரும் புலவர்களின் இலக்கியங்களின் கூட்டாகவே இருக்கும். பழைய மூல நூற்கள் இருக்கும்போது, இடையே ஆரியத்தைப் புகுத்தவந்த இராமாயணத்தை அழிப்பதனால் இலக்கியம் இறந்துபடுமா? கலை கெடுமா? என்று கேட்கிறேன். இவ்விரு நூற்களைக் கொளுத்துவதால் கலைபோகும் என்று கூறும் பண்டிதர்களை நான் கேட்கிறேன். இவை இரண்டொழியத் தமிழனிடம் இலக்கியமே இல்லையா? கலை கிடையாதா? என்று.
கலை விஷயமான கிளர்ச்சியை நாங்கள் எடுத்துக் கட்டிக்கொண்டு வர ஆசைகொள்ளவில்லை. முதலிலே ஆரியக்கலையின் சார்பாக ஜெர்மன் பேராசிரியர் மாக்ஸ் முல்லரும், திராவிடக் கலை சார்பாகச் சர். ஜான் மார்ஷலும் வாதிட்டனர். இந்தியக் கலை என்றாலே ஆரியக்கலை என்று நம்பிய காலமும், ஆரியதருமம், நாகரிகம் என்பது குறித்துத் திருவல்லிக்கேணியும் மயிலாப்பூரும் பூரித்த காலமும் உண்டு. நான் சிறுபிள்ளையில் படித்தது, ஆரியமத உபாக்கியானம் என்பதுதான். பிறகு, மனோன் மணிய ஆசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்களும், சைவத் திருவாளர் வி.பி. சுப்பிரமணிய முதலியாரும், திராவிட நாகரிக மேம்பாட்டை எடுத்துரைத்தனர்.
மறைமலை அடிகளாரும், இது குறித்துக்கூறினார். நாங்கள் கூறுவதைக் காட்டிலும் கடுமையாகவே, ஆரிய மன்னன் மகன் இராமனைத் தெய்வமாக்கித், தமிழரைச் சிறு தெய்வ வழிபாடாற்றும் சிறுமதியினராக்கிற்று ஆரியம் என்று கூறினார். அரசியலில் வேறுபாடான கருத்தைக்கொண்ட பண்டித ஜவஹருங்கூட, ஆரிய திராவிடப் போராட்டக் கதையே, இராமாயணம் என்று உரைத்ததைக் கூறவிழைகிறேன்.
எனவே, ஆராய்ச்சியாளர்களின் முடிவு, இராமாயணம் ஆரியக் கதை என்பதும், ஆரிய திராவிடப் போராட்ட விவரம் என்பதுமாகும். அதனைக் கம்பர் எழுதியுள்ள முறை, தமிழர் ஆரியத்தை ஏற்றுக்கொள்ளும் தூண்டுகோலாகவும், தமிழ் இனம் ஆரிய இனத்தலைவனிடம் தோற்றுவிட்டது என்பதை ஒப்புக்கொள்ளச் செய்வதாகவு மிருப்பதனால், அந்நூலைப் படித்திடும் தமிழ்இனம், தன்னம்பிக்கை, தன் மானம்இழந்து கெடுகின்றது என்று கூறுகிறோம். தமிழ் இனம் புத்துயிர்பெற, இத்தகைய ஆரியக்கலையை அழிப்போம் என்றுரைக்கிறோம். இது, இன எழுச்சியின் விளைவு. முடியுமா? முடியாதா? என்பது கேள்விக்குரியதுமல்ல; இலட்சிய வாதிகளுக்கு அதைக்குறித்து யோசிக்க அவ சியமும்இல்லை என்பேன்.
சீப்பை ஒளித்தால் திருமணம் நிற்குமா என்ற சிறுமொழிகளெல்லாம், பெருமதி படைத்த நமது சபையினரின் மனதில் உண்டாகாது என்று கருதுகிறேன். வெற்றி எமக்குக் கிடைக்குமா என்பது, உமது ஒத்துழைப்பைப் பொறுத்தது. நீங்கள் எதிர்ப்பதானால், உமது எதிர்ப்பைச் சமாளிக்கும் சக்தியை நாங்கள் பெறுவதைப்பொறுத்திருக்கிறது. எனவே எமது நோக்கம், கலையைக் கெடுத்தலுமல்ல; இலக்கியத்தை அழித்தலுமல்ல. கலைப்புரட்சி மூலம், இனஎழுச்சி இனவிடுதலை கோருவதேயாகும். எனக்குப் பிறகு பேச இருக்கும் தோழர் சேதுப்பிள்ளை அவர்கள், கம்பரின் கவித்திறனை, காவியத்திலே வரும் அணியழகை, உவமை நயத்தை எடுத்துரைப்பார்கள். அவர் அங்ஙனம் கூறினதை, நான் பலமுறை கேட்டு மகிழ்ந்துள்ளேன். இன்றும் கேட்கும் அவாவுடையேன். செந்தமிழ்ச் செல்வியில் அவர் கம்பச் சித்திரங்கள் தீட்டியதை நான். அறிவேன். எனவே, அவர்க்கும் உமக்கும் ஒன்றுரைப்பேன்.
நாங்கள் கம்பனின் கவித்திறமையைக் குறித்து விவாதிக்கும் நோக்கமுடையவர்களல்ல. இச்சபையிலும், சீத்தலைச் சாத்தனாரும், ஒட்டக்கூத்தர், புகழேந்தி என்பார் போன்ற கவிகளும் கூடிக் கம்பன் கவியிலே, திறமை உளதா இல்லையா என ஆராய்வது போன்றும் நாம் கூடவில்லை. திறமைவேறு, தன்மை வேறு, விளைவு வேறு. கம்பரின் கவித்திறமையைக் கண்டு நாங்கள் வியக்கிறோம். அந்தத் திறமை, ஆரியத்தை ஆதரிக்கும் தன்மையாயிற்றே என்பது கண்டு திகைக்கிறோம். அவரது கவிதையின் விளைவாகத் தமிழ் இனம் தாழ்ச்சியுற, ஆரியத்திடம் அடிமைப்படும் விளைவு நேரிட்டதைக் கண்டு நாங்கள் வேதனைப்படுகிறோம். நாங்கள் கண்டிப்பது கம்பனின் கவித்திறனையல்ல; அதன் தன்மையை, விளைவை என்பதை, அறிஞர்கள் தெரியவேண்டுகிறேன். கம்பர், இராமகாதை பாடிய தன் நோக்கம் யாது? என்று கேட்கிறேன்.
பழந்தமிழ் நூலான சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகள், தமது பாயிரத்தில், தாம் காதை பாடுவது எதற்கு என்பதைக் கூறும்போது, பத்தினியை உலகு புகழ்ந்தத்தும், நீதி தவறிய அரசுகெடும் அவனவனின் செயலின் விளைவு அவனவனைத் தாக்கும் என்ற கருத்துக்களைக் கூறவே, நான் இப்பாட்டுடைச் செய்யுளை இயற்றினேன் என்று எழுதினார் தெளிவாக. ஆனால் கம்பரோ? தாம் இராமாயணம் எழுதியதற்கு நோக்கம் கூறாது, நொந்த மனங்கொண்டு, வையகம் என்னை இகழுமோ? மாசுவந்து எய்துமோ? என்று கூறுகிறார். ஆண்டவனின் அவதாரம் என்று ஆரியராலும் கம்பராலும் போற்றப்படும் இராமகாதை பாடுவதற்குக் கம்பர் ஏன் இவ்வளவு சஞ்சலப்படுகிறார்? இதனால் உலகு பழிக்குமோ என்ற சந்தேகம் ஏன் கொண்டார்! என்று கேட்கிறேன். ஆரியக்காதையைப் பாடுவது அடாது என்பதையும், அதற்குப் பூச்சுவேலை செய்து வைப்பது தமிழருக்குத் தீங்காகும் என்பதையும் ஒருவாறு உணர்ந்தே, இங்ஙனம் உரைத்தாரோ என்று கேட்கிறேன்.
பள்ளி மாணவன், பரீட்சையில் கேள்விகளுக்கு விடை எழுதினால், வெளியே வந்தபின், எட்டுக் கேள்விகளில் ஐந்துக்கே விடையிறுத்தேன், அதிலே மூன்று நல்ல முறையிலே எழுதினேன், இரண்டு ஒருவிதமாக எழுதினேன் என்று ஆயாசப்படுவதுபோல இல்லையா, கம்பரின் பாயிரம் என்று கேட்கிறேன். ஏன் வந்தது அவருக்கு அந்தச் சந்தேகம்? மேலும் அவர் கூறினார், தேவபாடையில் இதனை மூவர் செய்தனர். மூவரில் முதல்வரான வான்மீகரது நூலை நான் மூலமாகக் கொண்டேன் என்றுரைக்கிறார். ஆரியர் தமது மொழியாம் வடமொழியைத் தேவபாடை என்று கூறுவர்; தம்மையே பூதேவர் என்று கூறுவர்; அதனைக் கம்பர் கூறுமிடத்து, ஆரியரால் தேவபாடை என்று கூறப்படுவதான வடமொழி என்று எழுதாது, தேவபாடை என்று ஏற்றுக்கொண்டு எழுதுவது சரியாகுமா? அம்மொழியைத் தேவபாடை என்று ஏற்றுக்கொண்டால், அம்மொழியினரைத் தேவர் என்றும், தமிழரைத் தாழ்ந்தோரென்றும் கம்பர் ஒப்புக்கொண்டதோடு, தமிழரையும், ஒப்புக்கொள்ளச் செய்கிறார் என்று ஏற்படுகிறது, ஓர் இன எழுச்சிக்கு இது ஆக்கம் தருமா என்று கேட்கிறேன்.
கம்பர் திறமைபற்றித் தோழர் சேதுப்பிள்ளை கூறுவார் பிறகு. ஆனால், அவரும் பண்டிதர்களும் கம்பரை எந்தத் திறமைக்காகப் புகழ்கின்றனரோ, அதேதிறமையே, தமிழர் கெட உதவி செய்தது என்பதே எமது குற்றச்சாட்டு. கதையிலே வரும் பாத்திரங்களின் மனப்பாங்கையும் செயலையும் விளக்குவதிலே, கம்பர் மிகச் சமர்த்தர் என்றுரைக்கின்றனர். அந்தச் சமர்த்துத்தான், குற்றங்குறைகள்கொண்ட ஆரியத் தலைவர்களைச் சற்பாத்திரர்களாக்கிக் காட்டித், தமிழரின் வணக்கத்துக் குரியோராக்கிவிட்டது. எனவே தான், தமிழ் இனம், ஆரிய இனத்தலைவனைத் தேவனெனக் கொண்டது என்று நாங்கள் கூறுகிறோம்.
காடேக இராமன் கிளம்பும்போது உடன் வரப் புறப்பட்ட சீதையுடன் வாதிடுகையில், சீதை கூறும் மொழியின் தன்மையையும், இலக்குவன் கைகேயியை நிந்திக்கும் பகுதியையும், சீதையை இராவணன் எடுத்துச் சென்ற விதத்தையும் வான்மீகி கூறியுள்ளபடியே கம்பர் எடுத்தெழுதியிருப்பின், அந்த ஆரியப் பாத்திரங்களிடம் ஆபாசக் குணங்கள் கிடந்ததைத் தமிழர் கண்டு, அவர்களைத் தெய்வங்களென்று போற்றும் கீழ்நிலைக்கு வந்திருக்கமாட்டார்கள். கம்பரோ தமது கவித்திறமையினால் ஆரிய இராமனைக் குற்றங் குறையற்ற சற்பாத்திரனாக்கிக்காட்டி, வழிபாட்டுக்குரிய தெய்வமாக்கிவிட்டார்.
இராவணன் மிக்க வல்லமைசாலி, திறமையுடையோன், வேதம் பயின்றோன், சிவபக்தன், இலங்கை சகல சுகமும் நிரம்பிய இடம் என்று வர்ணித்துவிட்டு, இவ்வளவு குணாளனும் திறமை சாலியுமான இராவணன், ஓர் ஆரிய மங்கையைக் கண்டு காமுற்றுக் கருத்தழிந்து, அறம்விட்டு அழிந்தான் என்று முடிப்பது திராவிட இனப்பெருமைக்கே ஊறு தேடுவதாகும், திராவிட இனமக்கள், நாம் எவ்வளவு ஆற்றல் படைத்திருப்பினும். கல்வி கேள்வி இருப்பினும், ஆரிய மங்கையரிடம் சபலப்பட்டுச் சஞ்சலத்துக்குள்ளாவோமோ? அழிந்து படுவோமா? என்ற சந்தேகத்தையும், மண்டோதரி எனும் பேரழகியின் நாயகனாகவும், தேவமாதரும் ஏவலராக இருக்கும் நிலைபெற்ற சுந்தரனுமாகிய இராவணனா சீதை எனும் ஆரிய மங்கையைக் கண்டதும் மையல் கொண்டான்! இராவணனுக்கே அந்நிலை வந்ததென்றால், நாம் தப்பமுடியுமா என்ற திகைப்பும் ஏற்படுமன்றோ? ஆற்றல் மிக்க ஓர் திராவிடத் தலைவன், அறிவுமிக்க ஓர் அரசன், ஆரிய மங்கையைக் கண்டு காமுற்றுக் கருத்தழிந்தான் என்ற கதையைப் படிப்பது, திராவிடருக்கும் ஆபத்து; ஆரியருக்கும் ஆபத்து என்றுரைப்பேன்.
கவிநயத்தைக் காட்டி, இராமகாதையிலே, வீரம் செறிந்திருக்கிறது, தியாகம் ததும்புகிறது, நட்புக்கு உதாரணம் நன்றாகக் காண்கிறோம், கற்புக்கும் காதலுக்கும் சான்றுகள் உள என்று கூறி, அவ்வின்பத்துக்காகக் கம்ப இராமாயணம் தேவை என்று பின்னர்ப் பேசுவோர் உரைப்பர்.
நான் கூறுகிறேன், காதலுக்கும் கற்புக்கும், இராம காதையிலுருக்கும் இன்ப நுணுக்கப் பொருள் களைவிட, மிகச் சிறப்புடைத்தான பொருள்கள் நமது அகப்பொருளில் உண்டு. எனவே, கம்பராமாயணமழியின், காதலுக்கும் கற்புக்கும் கவிதை இராதே என்று, பண்டிதர்கள் கவலைகொள்ளத் தேவையில்லை. நட்புக்குறித்துக்கூறுவரேல், இராமனுக்கும் படகோட்டிக் குகனுக்கும், கண்டதும் ஏற்பட்ட நட்பு எத்தகையசிறப்புடையது என்று வியந்து கூறுவர். வால்மீகி நூற்படி, குகன் அயோத்தி எல்லையினன்; இராமனின் நண்பன் என்பது விளங்கும். கம்பன் மொழி பார்த்திடின், குகன் இராமனைக் கண்ட அன்றே நட்புக் கொண்டான் என்று கூறினார். நட்பின் சிறப்புச் சாற்ற, 'இராமனும் குகனுமாவது கண்டதும் நட்புக்கொண்டனர். கம்பச் சித்திரத்தின் மாண்பு அது என்றால், கோப்பெரும் சோழனெனும் அரசனும், பிசிராந்தையாரும் ஒருவரையொருவர் காணாமலே-ஒருவர் பற்றி ஒருவர் கேட்டே, மாறா நட்பினராக இருந்ததை விளக்கும் சங்கக்கவி நம்மிடமிருக்கும் மாண்பு பற்றிப் பண்டிதர்களுக்குக் கவனமூட்டி, நட்பின் பெருமையைக் கம்ப இராமாயணம் ஒழிந்தால் நாடு மறந்திடாது, முன்னாள் இலக்கியமுண்டு என்று கூறுகிறேன்.
தியாகத்தைக் குறித்துக் கூறுவர். இராமன் அரசுரிமை துறந்து காடேகினான். மரவுரி தரித்து மன்னன் மைந்தன், மாலின் அவதாரம் சென்றபோது, அத்தியாக மூர்த்தியிண் முகம் அன்றலர்ந்த செந்தாமரை போலிருந்தது, தியாகத்தின் சிறப்பு இது. கம்பனின் கவித்திறம் இது என்றுரைப்பர். அரசு போவதறிந்த இராமனின் முகங் கோணியதை, வான்மீகர் கூறினார். கம்பர் மெழுகினார். கம்பர் மொழியைக் குறைகூறாது அங்ஙனமே கொண்டுபார்ப்பினும், அந்தத் தியாகத்தை விட அதியற்புதமான தியாகங்கள் உள்ளன என்பதை மறக்கவேண்டாமென கூறுகிறேன். இராமனாவது தந்தை சொல்லால், சிற்றன்னையின் கொடுமையால் அரசு துறந்தான். இளங்கோவடிகளோ, தாமாகவே மனமுவந்து அரசு துறந்தார். இந்தத் தியாக நிகழ்ச்சியைத் தமிழனறிய, ஓர் ஆரியஇளவரசனுக்கு நேரிட்ட அவதியைக் காதையாக்கிக் காட்டவேண்டுமா? என்று கேட்கிறேன். நாம் காணாத அந்நிகழ்ச்சிகள் கிடக்கட்டும் நம் காலத்திலேயே, காதலுக்காக வேண்டித் தம் மணி முடியைத் துறந்த எட்வர்ட் அவர்களின் மாண்பு கண்டோமே!
காதல் கற்பு என்பன பற்றிக் கவனிப்போம்.
தனது இளமை, எழில், செல்வம், யாவற்றையும் பரத்தைக்கு ஈந்து, வறியனாகித்திரும்பிடும் கோவலனைக் கண்ணகி கண்டபோது, தனக்குற்ற இடரெல்லாம் மறந்து கோவலனிடம் கனிமொழி பேசிய அம்மாண்புடன், காட்டுக்கு வராதே என்றதும் இராமனை நோக்கிச் சீதை பேசும் மொழியுடன் ஒப்பிட்டுப் பார்த்து கற்பின் மாண்புக்குச் சிலம்பதிகாரமிருக்க, கம்பனின் ஆரியக்கதை வேண்டுமா என்று யோசிக்கும்படி வேண்டுகிறேன், கம்பனின் கவிதை, அதற்குப் பயன்படவில்லையே என்று கவலையுறுகிறேன்.
வீரம் செறிந்துளது கம்ப இராமாயணத்திலே என்பர் புலவர். தமிழ் நாட்டவருக்கு வீரத்தை உணர்த்த ஆரிய இராமகாதையன்றி வேறு வழி இல்லையா உண்மையில் என்று கேட்கிறேன்.
இராமனின் போரிலே வீரமிருந்ததென்று கூறினும், அது மனிதருக்குள் நடந்த போரல்ல; திருமாலின் அவதாரமாம் இராமன் மாயா அஸ்திரங்களின் வலிமை கொண்டு போரிட்டு வென்றான். இது வீரமாகாது. ஆண்டவனின் பிரபாவம் என்று கூறலாம். ஆண்டவனின் வீரத்தை வியந்துரைக்க வேண்டுமா?
தன் மனைவி சீதையை, இராவணன் எடுத்துச் சென்றான் என்று கேள்விப்பட்டதும், இராமன் வீரமாகச் செய்திருக்கவேண்டியது என்ன? எங்கே அந்த இராவணன் என்று முழக்கமிட்டு, இலந்கை சென்றிருக்க வேண்டும். இராவணனை எதிர்த்தொழித்திருத்தல் வேண்டும். அதுவே வீரம். யுக்தியுடன் காரியம் செய்ய வேண்டுமென்று கருதினால், உடனே அயோத்திக்கு இலக்குவனை அனுப்பி, தன் நாட்டுப் படைகளை இலங்கைமீது படையெடுக்க அழைத்திருக்கவேண்டும்.
இராமனின் பாதுகைக்குப் பட்டாபிஷேகம் செய்வித்த பரதன், படை அனுப்பாதிரான். அப்படி, அயோத்தியினின்றும் கிளம்பி இலங்கை சென்று போரிட்டால், ஆரிய வீரம் விளங்கியிருக்கும். அதையும் செய்யவில்லை ஆரிய இராமன். ஹிட்லருக்கு ருமேனியப்படை கிடைத்ததுபோல அண்ணன் தம்பி சண்டையில் புகுந்து வானர சேனையைப் பெற்று, அதை இலங்காதிபதியின்மீது ஏவினான். இது இராஜதந்திரம் என்று கூறுங்கள், ஒப்புக்கொள்கிறேன். ஆரிய தர்மம் என்றுரையுங்கள், பொருத்தமாக இருக்கும். ஆனால், இதனை வீரமென்று கூறாதீர்கள், எவரும் ஒப்பார்.
சேரன் செங்குட்டுவன், கங்கை கரை வரை சென்று வெற்றிக்கொடி நாட்டியதை வீரமென்று கூறுங்கள், பொருத்தமாக இருக்கும். தமிழ் இனப் புகழினை மாநிலம் அறியும். அலைகடலை அடக்கும் மரக்கலம் செலுத்தி, இராஜேந்திரன் பர்மாவை வென்றதைக் கூறுங்கள், அது வீரச்செயல். கலிங்கத்தின் மீது படையெடுத்த மன்னன், 'கலிங்கநாடு மலையரண் உடைத்து, வேழப் படையுடன் செல்க' என்று தளபதிக்குப் பணித்ததுடன், தரைப்படை செல்லுகையில் 'கப்பற் படையும் செல்லட்டும்' என்று பணித்ததையும் காணின், வீரம், போர்த்திறம், போர்முறையின் மாண்பு யாவும் விளங்கும். கலிங்கத்துப் பரணியிலே வீரமிருக்கிறதென்று கூறுங்கள், முறை. வேறு எந்தப் பகுதிக்காக கம்ப இராமாயணம் இருந்தே தீரவேண்டும் என்றுரைக்கப் போகிறீர்கள் என்று கேட்கிறேன்.
கலை, கலை என்று பேசும் அன்பர்கள், இந்நாட்டு மக்களின் நிலையுணர்ந்தனரா என்று கேட்கிறேன். 100-க்கு 93-பேர் இங்கு பாமரர். ஓய்வும், ஆர்வமும், தெரிந்துகொள்ளக்கூடிய தன்மையும் கொண்ட என் போன்றவர்களிடமே தோழர் சேதுப்பிள்ளையைப் போன்றவர்கள் யாப்பு அணி என்பவைகள் பற்றிக் கூறிடுகையில், இவர்களால் இதைத் தெரிந்துகொள்ள முடியவில்லையே என்று அயர்வர். ஓய்வின்றி, பக்குவமின்றி, எழுத்தறிவேயின்றி உள்ள 93 பேர்களிடம், தோழர் சேதுப்பிள்ளை அவர்கள், கம்ப இராமாயணத்திலே உள்ள அணியழகு, உவமை உயர்வு கூறியா தெளியவைப்பார்? பொதுமக்கள் இராமாயணம் என்றதும், மண்ணுக்கும் விண்ணுக்குமாக ஓங்கி வளர்ந்த அனுமனின் அடிவீழவும், ஆரியரை வணங்கவும் அறிவரே யன்றி, யாப்பும் அணியும் தெரிந்து, இராமகாதை கற்பனை, அதிலே உள்ள கவித்திறனைக் கண்டு களிப்பதே முறைமை என்றா எண்ணுகின்றனர்? நமது பண்டிதர்களாவது இன்றுவரை பொது மக்களிடம் சென்று, இத்தகைய புராணஇதிகாசங்கள் புனைந்துரை கவிகளின் கற்பனை, மக்களுக்குச் சில நீதிகளைப் புகுத்தும் நூற்கள், ஒழுக்கத்துக்காகக் கருத்துக்கூறும ஏடுகள், கோயில் கட்டிக் கும்பிட அல்ல என்று கூறினது உண்டா, கூறுவரா?
சன்யாட்சென் காலத்திலே, சீன மக்கள் பலப்பல, தெய்வ வணக்கம் செய்து கிடந்தனர். சன்யாட்சென் அந்நாட்டுப் படித்தோரை அழைத்து, கடவுள்களின் பட்டியலைக் காட்டிக் கேட்டாராம், மக்களுக்கு ஒரு முழு முதற் கடவுள் இருந்தால் போதுமல்லவா என்று. ஆமென்றனர் அறிஞர். அப்படியானால், இந்தப்பெயர் வரிசையிலே ஒன்று வைத்துக்கொண்டு, மற்றவற்றைச் சிகப்புக் கோடிட்டு விடுக என்று செப்பினாராம். பிறகு, ஒன்றே தேவன் என்றனர் மக்கள். இங்கோ, நமது சைவசமயத் தலைவர்கள், ஐம்பதாண்டுகளுக்கு மேலாகவே, சிறு தெய்வ வணக்கம் கூடாது; எமது சிவமொன்றே முழுமுதற் கடவுள் என்று கூறினர். பலன் என்ன? இன்றுவரை பெரியபாளையத் தம்மனுக்கு வேப்பஞ்சேலை கட்டும் வழக்கத்தைக்கூட ஒழித்த பாடில்லை!
எனவேதான், மக்களின் பொது அறிவு வளர்ந்த நாடுகளில், தெளிவுகொண்ட மக்கள் உள்ள தேயங்களில், இத்தகைய கற்பனைக் கதைகள் இருப்பினும் கவியழகை மட்டும் கண்டு, கருத்துரையிலே உள்ள ஆபாசத்தை, மூடத்தனத்தை நீக்குகின்றனர். கிரேக்க ரோமானியர்கள், இதிகாசகாலக்கடவுள்களாகக்கொண்டிருந்த வீனஸ், அபாலோ முதலியனவற்றை, ஏசுவிடம் விசுவாசம் வைத்ததும் விட்டொழித்தனர். பிரிட்டனிலே கிறிஸ்தவமார்க்கம் பரவியதும், பழங்காலத்திலே வணங்கிய, தார் ஒடின் எனும் தெய்வங்களை மறந்தனர்.
இங்கோ, அன்றுதொட்டு இன்றுவரை, ஆரியக்கற்பனையான சிறு தெய்வங்களிலே ஒன்றை நீக்கவும், மக்கள் தயாரில் இல்லை. இந்நிலைகண்டு, புலவர்கள் என்செய்தனர் என்று கேட்கின்றேன். ஆரியர், தம் இனவளத்துக்காக வேண்டிப் புனைந்துகொண்ட கற்பனைகளை எல்லாம், கடவுளெனக் கொண்டுள்ள மக்களின் மதியைத் திருத்த முன்வந்தனரா என்று கேட்கிறேன்.
இராவணன் சீதையை எடுத்துச்சென்றது, காமச்செயல் என்றல்லவோ இன்றும் கூறுகின்றனர். அக்காலப் போர் முறையிலே ஆநிரை கவர்தல், மாதரை எடுத்தல், கோட்டை தாக்குதல் என்பன முறைகள் ஆகையால், இராமனைப் போருக்கிழுக்க, தன் தங்கையை மானபங்கம் செய்த பின்னர்ப் போருக்கிழுக்க, அந்தச் சமயத்திலே இராமனிடம் எஞ்சியிருந்த விலை மதிக்கக்கூடிய பொருள் சீதை மட்டுமேயாகையால்,. சீதையை எடுத்துச்சென்றான் என்ற உண்மையை உரைக்கலாகாதா?
கலை என்ற பெயரால், எவ்வளவு இழிவுகளையும் ஓர் இனத்துக்கு உண்டாகுவது ஆகுமா? கலையிலே சுயமரியாதைக்காரர்கள் கைவைத்தால், மக்களின் ஒழுக்கம் மதத்தின் மாண்பு கெட்டுவிடும் என்று கூறுகின்றனர். சுயமரியாதைக்காரர்களை நாத்திகர்கள் என்று நிந்திக்கின்றனர். எங்களின் காலத்தையும் கிளர்ச்சியையும் கவனிக்கவேண்டாம். மெய்யன்பர்களும், பக்திமான்களும், தோடுடைய செவியனைப் பாடுவோரும் நிறைந்திருந்த தமிழகத்திலே, ஆலயங்களிலே உள்ள நிலைமை என்ன என்பதைப் பாருங்கள். சுயமரியாதைக்காரர் களாகிய எங்களின் வர்ணனையை நம்பவேண்டாம். கோயில்களின் நிலைமைபற்றிக் காந்தியார் கூறியுள்ள கடுமையான மொழியையும் கவனிக்கவேண்டும். சைவப்பெரியார் ஒருவர், ஆலய நிலைமை பற்றிக் கூறியுள்ளதைப் படிக்கிறேன் கேளுங்கள்.
"செடி கொடிகள் முளைத்த கோபுரங்கள், இடிந்த மதில்கள், முள் முளைத்த பிரகாரங்கள், குப்பைகள் நிறைந்த மண்டபங்கள், ஆடு மாடு மேய்ந்த தளவாடங்கள், பாசி படர்ந்த தடாகம், பொரிகடலைசிந்தியபடிகள், இருண்டு வெளவால் புழுக்கை நிறைந்த மண்டபங்கள், தடுக்கி விழக்கூடியநடைபாதை, எண்ணெய் சிந்தியபடி அது தடவியசுவர், மினுக்கு மினுக்கெனும் தீபம், புகைநிறைந்த உள், புகை தூசிவிழும் தளம், நாற்றம் வீசும் தீர்த்தத் தொட்டி, புழுக்கள் உறையும் ஆவுடையார், கரப்பான் உலாவும் திருமேனி, பெருச்சாளி பூனைவசிக்கும் கர்ப்பக்கிருகம், அழுக்கு அகலாமேனியும் பொடி முதலிய லாகிரி நுகரும் திருமூக்கும் வாயும் கொண்ட திருமேனி தீண்டுவார் முதலிய அநேக புனிதங்களையும் காணமல், ஆலயம் செல்லும் ஓர் அன்பன் தன் வீட்டிற்குத் திரும்பினால், அவன் பாக்கியமே பாக்கியம்."
இது இன்று நமது கூட்டத்திற்குத் தலைமை வகித்துள்ளவர், மைலத்தில் ஆற்றிய சொற்பொழிவின் ஓர் பகுதி. சைவப்பெரியாரின் இவ்வர்ணனையைப் படித்துக் காட்டியதன் காரணம், கலையில் நாங்கள் கை வைப்பதால், மக்களின் ஒழுக்கமும் பண்பும் போய்விடும் என்று கூறுகிறார்களே, நாங்கள் ஏதும் செய்யாதிருக்கையிலேயே, மெய்பன்பர்கள் ஏன் இத்தகைய சீர்கேட்டை ஆலயங்களிலே புகுத்தினர் என்பதை யோசியுங்கள் என்று உங்களைக் கேட்டுக் கொள்வதற்கேயாகும்.
இனத்தைத் தாழ்த்தும் கருத்துரைகளை நாங்கள் கண்டிக்கவே, பெரிய புராணத்தையும் கண்டிக்கிறோம். அந்தப் புராணத்திலே வரும் அடியவர்களின் கதையினால் ஏற்படும் கடவுட் கருத்துரைகள், எவ்வளவு அறிவீனமானதாக இருக்கிறது என்பதைப் பாருங்கள். பக்திக்காக அடியவன் எதுவும் செய்வான் என்று அவன் பெருமையைக் கூறப் பெரியபுராணம் எழுதப் பட்டதென்றால், ஆண்டவன் இத்தனை கடுமையும் கொடுமையும் நிரம்பிய சோதனைகளைச்செய்தார் என்று கூறுவது, கடவுள் இலக்கணத்துக்கே இழிவைத் தராதா என்று கேட்கிறேன்.
உலகிலே எந்நாட்டிலும் எந்தப்பக்திமானுக்கும் நேரிடாத சோதனை. இங்குமட்டும் நேரிடக் காரணம் என்ன? ஆண்டவனுக்குமா இந்நாட்டிடம் ஓர வஞ்சனை? மற்ற எங்கும் நேரிடாத நிகழச்சி, துர்ப்பாக்கியமிகுந்த இந்நாட்டில் மட்டுந் தானே நடந்திருக்கிறது. பிள்ளைக்கறி கேட்பதும், பெண்டை அனுப்பிவைக்கச் சொல்வதும், கண்ணைப் பறித்துக் கொடுக்கச் செய்வதுமான கடவுட் சோதனைகள் இங்குமட்டுமே உள்ளன. காரணம் என்ன? இவைகளைப் படித்து நம்பும் மக்களின் மனப்பான்மை எவ்வளவு கெடும் என்பதைக் கண்டே, நாங்கள் பெரியபுராணத்தைக் கண்டிக்கிறோம். இத்தகைய புராணங்களால் மக்களின் அறிவு பாழ்படுவதைக் கண்டே நாங்கள் அப்புராணங்களைக் கணடிககிறோம். என்வே கலை இடம் இனம்காலம் என்பவற்றிற்கேற்ப உளது. ஆரியக்கலை வேறு, திராவிடக் கலை வேறு. ஆரியக் கலை நம்பொணாக் கருத்துக்களும் ஆபாசமும் நிரம்பியிருப்பதுடன், திராவிட இனத்தை அடக்கவும், பண்பை அழிக்கவும் பயன்பட்டுப் பாமரரின் மனதைப் பாழாக்குகிறது என்ற குற்றச் சாட்டுகளைக் கூறிக் கம்ப ராமாயணத்தையும் பெரிய புராணத்தையும் கண்டிக்கிறோம்; கொளுத்துக என்று கூறுகிறோம். இவைகட்குச் சேதுப்பிள்ளை அவர்கள் சமாதானம் கூறியபின், எனது மறுப்புரை கூறும் சந்தர்ப்பம் கிடைக்குமென்று நம்புகிறேன்.
பண்டிதர்கள் எங்களைப் பற்றித் தவறாக எண்ணி வருவது சரியல்ல. அவர்களுக்கு நாங்களே துணை. எமக்கு அவர்கள் அரண். நம்மிருவருக்குள் பகைமூட்டி, இராமன் மரத்தின் மறைவிலிருந்து வாலிமீது அம்பு எய்தது போலச் செய்ய, ஒரு கூட்டம் காத்துக்கொண்டிருக்கிறது என்பதைக் கவனமூட்ட விரும்புகிறேன், மக்களிடம் இத்தகைய புராணங்கள் கற்பனை என்பதை எடுத்துரைக்காது அவர்கள் மனப்பாங்கைக் கெடுப்பதன் பலனாக, மக்களின் நிலை கெட்டுவிட்டது.
திருமூலர் வேறோர் விஷயத்துக்காகக் கூறினார், குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளாது, குருட்டுக் குருவைக்கொண்டு, குருடுங் குருடுங் குருட்டாட்டமாடிக் குருட்டில் வீழ்ந்தனர் என்றுரைத்தார். நமது மக்களின் நிலைமை அதுவாக இருப்பதை உணருங்கள் என்று பேசி முடித்தார்.