1. உ.வே.சா.வின் என் சரித்திரம் 55 : தளிரால் கிடைத்த தயை ++ 2. தோழர் தியாகு எழுதுகிறார் 227 : மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES)

6 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Sep 30, 2023, 5:01:38 PMSep 30
to thiru thoazhamai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Dr. Ku.Muthukumar, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, limra...@gmail.com, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, antony louis, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, rajendran krishnan, raman kannusamy, Guberan Rajan, பூங்குழலி Poonkuzhali, Batchaa Thiruchi, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, meen...@gmail.com, Dr. Namadhu MGR, H...@ammkitwing.in, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan s, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, chitr...@gmail.com

தோழர் தியாகு எழுதுகிறார் 227 : மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES)

 


ஃஃஃ   ++++++ இலக்குவனார் திருவள்ளுவன்      01 October 2023      அகரமுதல


(தோழர் தியாகு எழுதுகிறார் 226 : அன்று ஈழத்தில், இன்று மணிப்பூரில் இனவழிப்பு-தொடர்ச்சி)

மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES)

இனிய அன்பர்களே!

காதை (1)

எனக்கு வயது 18, மணிப்பூரில் குக்கி இனத்தைச் சேர்ந்த பழங்குடிப் பெண். கிழக்கு இம்பாலில் இது நடந்தது: ஆயுதமேந்திய மெய்த்திப் பெண்கள் குழு ஒன்று, அதன் பெயர் மீரா பைபிசு, பெண் சுடரேந்திகள் என்று பொருள். மற்றொரு பெயர் “மணிப்பூர் அன்னையர்” என்பதாகும். இந்தக் குழுவினர் என்னைப் பிடித்து கறுப்பு உடையணிந்த நான்கு இளைஞர்கள் கொண்ட ஒரு மெய்த்திக் குழுவிடம் ஒப்படைத்தனர்.

மே 15 மாலை 5 மணி இருக்கும். அந்த நான்கு இளைஞர்களும் நீலநிற மகிழுந்தில் என்னை வாங்கி அயங்பாலி என்ற இடத்துக்குக் கடத்திச் சென்றார்கள். என்னை மாறி மாறிக் குத்தவும் அடிக்கவும் செய்தார்கள். மீரா பைபிசு அமைப்பைச் சேர்ந்த பெண்களையும் உள்ளூர் ஆண்களையும் அழைத்தார்கள். அவர்களும் மாறி மாறி எங்களை அறைந்தார்கள், முகத்தில் குத்தினார்கள், கடுமையாக அடித்தார்கள். அந்தப் பெண்களில் ஒருத்தி ‘அரம்பை தெங்கோல்’-ஐ அழைக்க வேண்டும் என்று சொல்லக் கேட்டேன்.

கருஞ்சட்டை அணிந்த நால்வர் வந்து சேர்ந்தனர் சட்டையில் ஏதோ இலச்சினை பதித்திருந்தார்கள். துப்பாக்கி வைத்திருந்தார்கள். நால்வரில் இருவருக்கு 35 வயது இருக்கலாம், இருவர் 50க்கு மேல். கூட்டத்திலிருந்து பெண் ஒருத்தி என்னைக் கொன்று விடும் படி அவர்களுக்குக் கட்டளையிட்டாள். அந்த நால்வரும் என்னை வேறொரு மகிழுந்தில் தூக்கிப் போட்டுக் கொண்டு கிளம்பினார்கள்.

அவர்கள் என்னிடம் ஏதோதோ கேட்டுக் கொண்டே வந்தனர். நான் விடை சொன்னாலும், மௌனமாகவே இருந்தாலும், அறைவார்கள். ஓரிரு முறை துப்பாக்கிக் கட்டையால் மொத்தவும் செய்தார்கள். ஒரு மலையுச்சி போல் இருந்த இடத்தை அடைந்தோம். அங்குதான் என்னைக் கொலை செய்யத் தீர்மானித்தார்கள்.

அவர்கள் என்னை எப்படிக் கொலை செய்யலாம் என்று பேசிக் கொண்டிருந்ததை நானே கேட்டேன். அவர்களுள் மூத்தவரின் காலில் விழுந்து உயிர்ப்பிச்சை கேட்டு மன்றாடினேன். என்னை விட்டு விடுங்கள், ஓடிப்போகிறேன், இம்பாலுக்குத் திரும்பி வரவே மாட்டேன், என் தாய் தந்தையைப் பார்க்க வேண்டும்” என்று கதறினேன்.

மீண்டும் என்னை மகிழுந்தில் ஏற்றிக்கொண்டு, கொலை செய்யப் பொருத்தமான இடம் தேடினார்கள். சிறிது நேரம் சுற்றி விட்டு ஒரு மலை உச்சிப் பகுதிக்கு வந்து சேர்ந்தார்கள். என்னை மகிழுந்திலிருந்து இழுத்துப் போட்டு, உதைத்தும் குத்தியும் அறைந்தும் என்னைக் கடுமையாகத் தாக்கினார்கள். ஒரு முறை துப்பாக்கிக் கட்டையால் ஓங்கிக் குத்திய போது கொஞ்ச நேரம் எனக்கு எல்லாமே இருண்டு போயிற்று. கண்கள் திறந்த போது முகத்தில் தூறல் விழுவதை உணர்ந்தேன்.

எனக்கு உணர்வு வந்தவுடன் அவர்கள் மீண்டும் என்னை அறைந்து படுக்க வைத்து நால்வரில் மூவர் ஒருவர் பின் ஒருவராக என்னிடம் வல்லுறவு கொண்டார்கள். என் செவிகளிலும் முகத்திலும் தலையிலும் குருதி வடிந்து ஆடைகளையும் முகத்தையும் நனைத்து விட்டது. அந்த மூவருக்கும் எஞ்சிய ஒருவருக்கும் இடையே என்னைக் கொன்று விடுவது பற்றி வாக்குவாதம் நடந்தது.

நாங்கள் உன்னைப் போக விட்டால் காவல்துறையிடம் சென்று முறைப்பாடு செய்து விடுவாய், ஆனால் நீ அப்படிச் செய்தால் உன்னைத் தேடிப் பிடித்துக் கொன்று விடுவோம் என்று மிரட்டினர். என்னை விட்டு விடுவதா? கொன்று விடுவதா? என்று அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ஒருவன் மகிழுந்தைத் திருப்ப முயன்று விபத்தாக என் மீது மோதி நான் ஓடையில் விழுந்து மலை உச்சியிலிருந்து உருண்டு விட்டேன்.

உருண்டு உருண்டு ஒரு சாலையில் வந்து விழுந்தேன். அவ்வழியாகச் சென்ற ஒரு மிதியுந்தை( ‘ஆட்டோ ரிக்சுசா’வை) உதவிக்கு அழைத்தேன். அந்த ஓட்டுநர் என்னைக் காய்கறிக் குவியலுக்குள் மறைத்து பிட்ணுபூர் காவல் நிலையத்துக்குக் கொண்டுசென்றார். என்னை வீட்டிலே கொண்டுபோய் விட வேண்டிய அந்தக் காவல் துறையினர் மெய்த்தி சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்தவுடன் “என்னை இந்தக் காவல் நிலையத்தில் விட வேண்டா, என்னைப் புது இலாம்புலேன் பகுதியில் எங்கள் வீட்டில் விட்டு விடுங்கள், நான் காவல்துறையை நம்பவில்லை” என்று மான்றாடினேன்.

மே 16ஆம் நாள் விடிகாலை 4.30 அளவில் இம்பாலை விட்டு வெளியேறி சபோர்மீனாவுக்கு வந்து சேர்ந்தேன். பிறகு காங்குபோக்குபி மாவட்ட மருத்துவமனைக்குச் சென்று உடல்நிலை மோசமானதால் நாகாலாந்திலுள்ள கோகிமா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டேன். ஓரளவுக்குத் தேறி விட்டாலும் இவ்வளவு காலமும் காவல் துறையில் முறைப்பாடு செய்ய அஞ்சிக் கொண்டிருந்தேன்.

மே 4ஆம் நாள் தௌபாலில் மூன்று பெண்களை அம்மணமாக்கி வலம்விட்டு, அவர்களில் ஒருத்தியைப் பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்ச்சியின் காணொளி அண்மையில் வெளிவந்த பிறகுதான் துணிச்சல் பெற்றுக் காவல்துறையில் முறைப்பாடு செய்ய முன்வந்தேன்.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 258

+++

உ.வே.சா.வின் என் சரித்திரம் 55 : தளிரால் கிடைத்த தயை

 


ஃஃஃ     இலக்குவனார் திருவள்ளுவன்      01 October 2023      அகரமுதல



(உ.வே.சா.வின் என் சரித்திரம் 54 : அத்தியாயம் 29. தந்தையார் விடைபெற்றுச் செல்லுதல் 2/2 – தொடர்ச்சி)

என் சரித்திரம்
அத்தியாயம் 30. தளிரால் கிடைத்த தயை

சவேரிநாத பிள்ளையிடம் நைடதம் பாடங்கேட்டு வரும்போது இடையிடையே நான் அவரைக் கேள்விகேட்பதை என் ஆசிரியர் சில சமயம் கவனிப்பதுண்டு. என் கேள்விக்கு விடை சொல்ல முடியாமல் அவர் சும்மா இருக்கும்போது பிள்ளையவர்கள், “என்ன சவேரிநாது, இந்த விசயங்களை எல்லாம் நீ தெரிந்துகொள்ள வேண்டாமா? அவர் தாமே படித்து விசயத்தைத் தெரிந்துகொண்டிருக்கிறாரே” என்று சொல்லுவார். அப்போது எனக்கு ஒரு திருப்தி உண்டாகும். என் இயல்பைப்பற்றிப் பாராட்டுவதனால் உண்டான திருப்தி அன்று; எனக்குக் கற்பிக்கும் தகுதி சவேரிநாத பிள்ளையிடம் இல்லையென்பதை அவர் தெரிந்துகொண்டாரே என்ற எண்ணத்தால் உண்டான திருப்தியே அது.

இளமை முறுக்கு

பிள்ளையவர்கள் அருகில் இருக்கும் சமயங்களில் நான் அடிக்கடி கேள்விகள் கேட்பேன். எப்படியாவது பிள்ளையவர்களே நேரில் எனக்குப் பாடம் சொல்லித்தர வேண்டும் என்பது என் நோக்கம். நான் இவ்வாறு கேள்வி கேட்பதனால் சவேரிநாத பிள்ளைக்கு ஒரு சிறிதும் கோபம் உண்டாகவில்லை. வேறொருவராக இருந்தால் என்மேல் பிள்ளையவர்களுக்கு வெறுப்பு உண்டாகும்படியும் செய்திருப்பார். எனது ஆசையும் இளமை முறுக்கும் சேர்ந்துகொண்டன; சவேரிநாத பிள்ளையின் நல்லியல்பு இணங்கி நின்றது. நான் அவரைக் கேள்வி கேட்பது குறைவென்று அவர் நினைக்கவே இல்லை. என்னிடம் அன்பாகவே நடந்து கொள்வார். இனிமையாகப் பேசுவார்; பிள்ளையவர்கள் பெருமையையும் அவர்களிடம் தாம் வந்த காலம் முதல் நிகழ்ந்த பல செய்திகளையும் எடுத்துச் சொல்வார்.

நைடத பாடம் நடந்து வந்தது. பிள்ளையவர்களிடம் பாடம் கேளாமையால் அவரை நேரே கண்டு பேசிப் பழகுவதற்குரிய சமயம் வாய்க்கவில்லை. அவரிடமே பாடம் கேட்க வேண்டுமென்ற என் விருப்பத்தைத் தெரிவிப்பதற்கும் பயந்தேன்.

தோட்டம் வளர்த்தல்

பிள்ளையவர்கள் இருந்த வீடு அவர் தம் சொந்தத்தில் விலைகொடுத்து வாங்கியது. அவ்வீட்டின் பின்புறத்தில் விசாலமான தோட்டமும் அதன்பின் ஒரு குளமும் உண்டு. அவர் இயற்கைத் தோற்றங்களிலே ஈடுபட்டவர். கவிஞராகிய அவர் பச்சைப் பசும்புல் வெளிகளிலும் பூம்பொழில்களிலும் மரமடர்ந்த காடுகளிலும் ஆற்றோரங்களிலும் இத்தகைய பிற இடங்களிலும் போக நேர்ந்தால் அப்படியே அங்குள்ள காட்சிகளைக் கண்டு இன்புற்று நின்றுவிடுவார். தாம் வாங்கிய புதிய வீட்டின் தோட்டத்தில் மரங்களையும் செடி, கொடிகளையும் வைத்து வளர்த்து வரவேண்டுமென்பது அவர் எண்ணம். சிவபூசை செய்வதில் நெடுநேரம் ஈடுபடுபவராகிய அவர் தோட்டத்தில் நிறையப் பூச்செடிகளை வைத்து வளர்க்க வேண்டுமென்ற ஆசையுடையவராக இருந்தார். நாரத்தை, மா, முதலிய மரங்களின் பெரிய செடிகளை வேரோடு மண் குலையாமல் தோண்டி எடுத்து அம்மண்ணின் மேல் வைக்கோற்புரி சுற்றி வருவித்து ஆழ்ந்த குழிகளில் நட்டு வளர்ப்பது அப்பக்கங்களில் உள்ள வழக்கம். என் ஆசிரியரும் அவ்வாறு சில செடிகளை வருவித்துத் தோட்டத்தில் வைத்திருந்தார். நான் அவரிடம் பாடம் கேட்க வந்தபோது இந்த ஏற்பாடு நடந்து வந்தது.

தளிர் ஆராய்ச்சி

ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் என் ஆசிரியர் தோட்டத்துக்குப் போய்ச் செடிகளைப் பார்வையிடுவார். அவற்றில் ஏதாவது பட்டுப்போய் விட்டதோ என்று பார்ப்பார்; எந்தச் செடியாவது தளிர்த்திருக்கிறதாவென்று மிக்க கவனத்தோடு நோக்குவார். ஏதாவது தளிர்க்காமல் பட்டுப்போய் விட்டதாகத் தெரிந்தால் அவர் மனம் பெரிய தனத்தை இழந்ததுபோல வருத்தமடையும். ஒரு தளிரை எதிலாவது கண்டுவிட்டால் அவருக்கு உண்டாகும் சந்தோசத்திற்கு அளவே இராது. வேலைக்காரர்களிடம் அடிக்கடி அவற்றைச் சாக்கிரதையாகப் பாதுகாக்கும்படி சொல்லுவார். மாலைவேளைகளில் தம்முடைய கையாலேயே சில செடிகளுக்குச் சலம் விடுவார்.

அவர் இவ்வாறு காலையும் மாலையும் தவறாமல் செய்து வருவதை நான் கவனித்தேன். அவருக்கு அந்தச் செடிகளிடம் இருந்த அன்பையும் உணர்ந்தேன். “இவருடைய அன்பைப் பெறுவதற்கு இச்செடிகளைத் துணையாகக் கொள்வோம்” என்று எண்ணினேன்.

மறுநாள் விடியற்காலையில் எழுந்தேன்; பல்லைக்கூடத் தேய்க்கவில்லை. நேரே தோட்டத்திற்குச் சென்றேன். அங்குள்ள செடிகளில் ஒவ்வொன்றையும் கவனித்தேன். சில செடிகளில் புதிய தளிர்கள் உண்டாகியிருந்தன. அவற்றை நன்றாகக் கவனித்து வைத்துக்கொண்டேன். சிறிது நேரத்தில் ஆசிரியர் அங்கே வந்தனர். அவர் ஒரு மரத்தின் அருகே சென்று மிக்க ஆவலோடு தளிர்கள் எங்கெங்கே உள்ளனவென்று ஆராயத் தொடங்கினார். நான் மெல்ல அருகில் சென்றேன். முன்பே அத்தளிர்களைக் கவனித்து வைத்தவனாதலின், “இக்கிளையில் இதோ தளிர் இருக்கிறது” என்றேன்.

அவர் நான் அங்கே எதற்காக வந்தேனென்று யோசிக்கவுமில்லை; என்னைக் கேட்கவுமில்லை. “எங்கே?” என்று ஆவலுடன் நான் காட்டின இடத்தைக் கவனித்தார். அங்கே தளிர் இருந்தது கண்டு சந்தோசமடைந்தார். பக்கத்தில் ஒரு செடி பட்டுப் போய்விட்டது என்று அவர் எண்ணியிருந்தார். அச்செடியில் ஓரிடத்தில் ஒரு தளிர் மெல்லத் தன் சிறுதலையை நீட்டியிருந்தது. “இதைப் பார்த்தால் பிள்ளையவர்கள் மிக்க சந்தோசமடைவார்கள்” என்று நான் எண்ணினேன். ஆதலின், “இதோ, இச்செடி கூடத் தளிர்த்திருக்கிறது” என்று நான் சொன்னதுதான் தாமதம்; “என்ன அதுவா? அது பட்டுப்போய்விட்டதென்றல்லவா எண்ணினேன்! தளிர்த்திருக்கிறதா? எங்கே, பார்க்கலாம்” என்று சொல்லிக்கொண்டே விரைவாக அதனருகில் வந்தார். அவர் பார்வையில் தளிர் காணப்படவில்லை. நான் அதைக் காட்டினேன். அந்த மரத்தில் தளிர்த்திருந்த அந்த ஒரு சிறிய தளிர் அவர் முகத்தில் மலர்ச்சியை உண்டாக்கியது; அம்மலர்ச்சியைக்கண்டு என் உள்ளம் பூரித்தது. “நம்முடைய முயற்சி பலிக்கும் சமயம் விரைவில் நேரும்” என்ற நம்பிக்கையும் உண்டாயிற்று. அத்தளிர்களை வாழ்த்தினேன்.

நான் அதோடு விடவில்லை. பின்னும் நான் ஆராய்ந்து கவனித்து வைத்திருந்த வேறு தளிர்களையும் ஆசிரியருக்குக் காட்டினேன். காட்டக் காட்ட அவர் பார்த்துப் பார்த்துச் சந்தோசமடைந்தார்.

அது முதல் தினந்தோறும் காலையில் தளிர் ஆராய்ச்சியை நான் நடத்திக்கொண்டே வந்தேன். சில நாட்களில் மாலையிலே பார்த்து வைத்துக்கொள்வேன். பிள்ளையவர்களும் அவற்றைக் கண்டு திருப்தியடைந்து வந்தனர்.

அன்பு தளிர்த்தல்

ஒரு நாள் அவர் எல்லாச் செடிகளையும் பார்த்துவிட்டுத் திரும்பியபோது என்னை நோக்கி, “இந்தச் செடிகளைப் பார்த்து வைக்கும்படி யாராவது உம்மிடம் சொன்னார்களா?” என்று கேட்டார்.

ஒருவரும் சொல்லவில்லை. நானாகவே கவனித்து வைத்தேன்” என்றேன் நான்.

“எதற்காக இப்படி கவனித்து வருகிறீர்?”

“[1]ஐயா அவர்கள் தினந்தோறும் கவனித்து வருவது தெரிந்தது; நான் முன்னதாகவே கவனித்துச் சொன்னால் ஐயா அவர்களுக்குச் சிரமம் குறையுமென்று எண்ணி இப்படிச் செய்து வருகிறேன்” என்றேன்.

சாதாரண நிலையிலிருந்தால் இவ்வளவு தைரியமாகப் பேசியிருக்க மாட்டேன். சில நாட்களாகத் தளிரை வியாசமாகக்கொண்டு அவரோடு நெருங்கிப் பழக நேர்ந்தமையால் தைரியம் எனக்கு உண்டாயிற்று. நாளடைவில் அவரது அன்பைப் பூரணமாகப் பெறலாமென்ற துணிவும் ஏற்பட்டது.

“நல்லதுதான். இப்படியே தினந்தோறும் பார்த்து வந்தால் அனுகூலமாக இருக்கும்” என்று என் ஆசிரியர் கூறினார். நானாகத் தொடங்கிய முயற்சிக்கு அவருடைய அனுமதியும் கிடைத்துவிட்ட தென்றால் என் ஊக்கத்தைக் கேட்கவா வேண்டும்?

தினந்தோறும் காலையில் பிள்ளையவர்களை இவ்வாறு சந்திக்கும்போது அவரோடு பேசுவது எனக்கு முதல் இலாபமாக இருந்தது. அவர் வர வர என் விசயத்தில் ஆதரவு காட்டலானார். என் படிப்பு விசயமாகவும் பேசுவது உண்டு. “இப்போது பாடம் நடக்கிறதா? எது வரையில் நடந்திருக்கிறது? நேற்று எவ்வளவு செய்யுட்கள் நடைபெற்றன?” என்ற கேள்விகளைக் கேட்பார். நான் விடை கூறுவேன்.

நைடதம் முடிந்தது

எங்களுடைய சம்பாசணை வர வர எங்களிருவருக்கும் இடையே அன்பை வளர்த்து வந்தது. நான் ஒரு நாள், பிள்ளையவர்களிடமே பாடம் கேட்க வேண்டுமென்ற ஆவல் இருப்பதை மெல்ல நேரிற் புலப்படுத்தினேன். “நைடதம் முழுவதும் பாடம் கேட்டாகட்டும். பிறகு ஏதாவது நூலைப் பாடம் கேட்கத் தொடங்கலாம்” என்று அவர் கூறியபோதுதான் என் மனத்திலிருந்த பெரிய குறை தீர்ந்தது. “நைடதம் எப்போது முடியும்?” என்று எதிர்பார்த்திருந்தேன். சவேரிநாத பிள்ளை சில செய்யுட்களே பாடம் சொன்னாலும் நான் வற்புறுத்தி மேலும் சில செய்யுட்களைச் சொல்லும்படிக் கேட்பேன். எப்படியாவது அந்நூலை விரைவில் பூர்த்தி செய்துவிட்டுப் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்க வேண்டுமென்பதில் எனக்கு அவ்வளவு வேகம் இருந்தது.

நைடதம் எத்தனை காலந்தான் நடக்கும்? ஒரு நாள் அது முடிவு பெறவேண்டியதுதானே? சில நாட்களில் அது முடிந்துவிட்டது. அது நிறைவேறிய அன்றே நான் பிள்ளையவர்களிடம் சென்று, “நைடதம் பாடம் கேட்டு முடிந்தது” என்று சொன்னேன்.

“சரி, நாளைக்கு ஏதாவது பிரபந்தம் பாடம் சொல்லுகிறேன்” என்று அவர் கூறினார்.

முதற் பாடம்

மறுநாட் காலையில் என் ஆசிரியர் தாமே என்னை அழைத்து, “உமக்குத் திருக்குடந்தைத் திரிபந்தாதியைப் பாடம் சொல்லலாமென்று நினைக்கிறேன்” என்று சொல்லி அந்நூல் எழுதியிருந்த ஏட்டுச் சுவடியை வருவித்துக் கொடுத்தார். நான் பாடம் கேட்கத் தொடங்கினேன்.

திருக்குடந்தைத் திரிபந்தாதி என்பது பிள்ளையவர்கள் இயற்றியது. கும்பகோணத்தில் எழுந்தருளியுள்ள சிரீகும்பேசுவரர் விசயமானது. திரிபந்தாதியாதலால் சற்றுக் கடினமாகவே இருக்கும்.

அந்நூலில் நாற்பது பாடல்களுக்கு மேல் அன்று பாடம் கேட்டேன். திரிபு யமக அந்தாதிகளில் ஒரு நாளைக்கு ஐந்து, ஆறு பாடல்களுக்கு மேல் பாடம் சொல்பவரை அதுவரையில் நான் பார்த்ததில்லை. பிள்ளையவர்கள் பாடம் சொல்லுகையில் விசயங்களை விரிவாக உபமான உபமேயங்களோடு சொல்லுவதில்லை. எந்த இடத்தில் விளக்க வேண்டியது அவசியமோ அதை மாத்திரம் விளக்குவார். அவசியமான விசேசச் செய்திகளையும் இலக்கண விசயங்களையும் சொல்லுவார். மாணாக்கர்களுக்கு இன்ன விசயம் தெரியாதென்பதை அவர் எவ்வாறோ தெரிந்துகொள்வார். நான் படித்து வரும்போது எனக்கு விளங்காத இடத்தை நான் கேட்பதற்கு முன்னரே அவர் விளக்குவார்; எனக்குத் தெரிந்ததை அவர் விளக்க மாட்டார். “நமக்கு இது தெரியாதென்பதை இவர் எப்படி இவ்வளவு கணக்காகத் தெரிந்து கொண்டார்” என்ற ஆச்சரியம் எனக்கு உண்டாகும். தம் வாழ்வு முழுவதும் மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லிச் சொல்லிப் பழகியிருந்த அவர் ஒவ்வொருவருடைய அறிவையும் விரைவில் அளந்தறிந்து அவர்களுக்கு ஏற்ப பாடம் சொல்வதில் இணையற்றவராக விளங்கினார்.

நிதிக்குவியல்

அவர் பாடம் சொல்வது பிரசங்கம் செய்வதுபோல இராது. அரியிலூர்ச் சடகோபையங்கார் முதலிய சிலர் ஒரு செய்யுளுக்கு மிகவும் விரிவாகப் பொருள் சொல்லிக் கேட்போர் உள்ளத்தைக் குளிர்விப்பார்கள். பிள்ளையவர்கள் பாடம் சொல்லும் முறையே வேறு. அவர்களெல்லாம் தம்மிடம் ஒரு குறிப்பிட்ட அளவு செல்வத்தைப் பாதுகாத்து வைத்திருப்பவர்களைப்போல் இருந்தார்கள். யாருக்கேனும் பணம் கொடுக்கும்போது ஒவ்வொரு காசையும் தனித்தனியே எடுத்துத் தட்டிக்காட்டிக் கையிலே கொடுப்பார்கள். பிள்ளையவர்களோ நிதிக்குவியல்களை வாரி வாரி வழங்குபவரைப்போல இருந்தார். அங்கே காசு இல்லை. எல்லாம் தங்க நாணயமே. அதுவும் குவியல் குவியலாக வாரி வாரி விடவேண்டியதுதான். வாரிக்கொள்பவர்களுடைய அதிருட்டம்போல இலாபம் கிடைக்கும். எவ்வளவுக்கெவ்வளவு ஆசை அதிகமாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு வாரிச் சேமித்துக்கொள்ளலாம். பஞ்சமென்பது அங்கே இல்லை.

பசிக்கு ஏற்ற உணவு

எனக்கிருந்த தமிழ்ப்பசி மிக அதிகம். மற்ற இடங்களில் நான் பாடம் கேட்டபோது அவர்கள் கற்பித்த பாடம் யானைப் பசிக்குச் சோளப்பொரி போல இருந்தது. பிள்ளையவர்களிடம் வந்தேன்; என்ன ஆச்சரியம்! எனக்குப் பெரிய விருந்து, தமிழ் விருந்து கிடைத்தது. என் பசிக்கு ஏற்ற உணவு; சில சமயங்களில் அதற்கு மிஞ்சிக்கூடக் கிடைக்கும். அமிர்த கவிராயரிடம் திருவரங்கத்தந்தாதியில் ஒரு செய்யுளைக் கேட்பதற்குள் அவர் எவ்வளவோ பாடுபடுத்திவிட்டாரே! அதற்குமேல் சொல்லுவதற்கு மனம் வராமல் அவர் ஓடிவிட்டாரே! அந்த அனுபவத்தோடு இங்கே பெற்ற இன்பத்தை ஒப்பிட்டுப் பார்த்தேன். “அடேயப்பா! என்ன வித்தியாசம்! தெரியாமலா அவ்வளவு பேரும் ‘பிள்ளையவர்களிடம் போனால்தான் உன் குறை தீரும்’ என்று சொன்னார்கள்?” என்று எண்ணினேன். “இனி நமக்குத் தமிழ்ப்பஞ்சம் இல்லை” என்ற முடிவிற்கு வந்தேன்.

அடிக்குறிப்பு

  1. பிள்ளையவர்களை ஐயா அவர்களென்றே வழங்குவது வழக்கம் நேரில் பேசும்போது அப்படியே கூறுவோம்.

(தொடரும்)
என் சரித்திரம், உ.வே.சா
.




--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages