ஒன்று செய்யலாம். சான்றோர் என்பதற்கு வகுக்கப்பட்டிருக்கும் இலக்கணங்களை பல்வேறு இலக்கியங்களிலிருந்து தொகுப்போம். எங்கெல்லாம் சான்றோர் என்று வருகிறதோ, அங்கெல்லாம் அவருக்குச் சொல்லப்பட்டிருக்கும் பண்பு நலன்கள் எவை என்பதைத் தொகுத்துக்கொண்டே வருவோம். 'ஆன்றவிந்தடங்கிய' சான்றோர், தண்ணடை நல்கல் சான்றோர்க்கு கடனே என்றெல்லாம் வரும் இடங்களில் சான்றோர் என்பவர் யார் என்று சொல்லப்படுகிறது அல்லவா?
முதலில் திருக்குறளில் (எனக்கு) நினைவுக்கு வரும் சில சான்றோர் இலக்கணங்களை எடுத்துக் கொள்ளலாம்.
கேடும் பெருக்கமும் இல் அல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க்கு அணி
நெஞ்சம் கோடாமை உள்ளவர்கள் சான்றோர்.
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்து ஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி
தராசுபோல நின்று, விருப்பு வெறுப்பின்றி, ஒருபக்கமாகச் சாயாமல் இருப்பவர் சான்றோர். (அப்படியானால், இரு பக்கமும் சம எடைகொண்ட பொருட்களை நிறுக்கும்போதுதான் அது சாத்தியம். ஒரு பக்கம் எடை அதிகம் உள்ள பொருளை நிறுக்கும்போது, ஒருபக்கம் கோடுவதே சான்றோர்க்கு அணி. துலாக்கோல் உதாரணத்தை ஒப்புக் கொண்டால், இதையும் மனத்தில் கொள்ள வேண்டும்)
பிறன் மனை நோக்காத பேர் ஆண்மை சான்றோர்க்கு
அறன் ஒன்றோ ஆன்ற ஒழுக்கு
அடுத்தவன் பெண்டாட்டியை விரும்பாதவர்கள் சான்றோர்கள்.
மன நலம் நன்கு உடையர் ஆயினும் சான்றோர்க்கு
இன நலம் ஏமாப்பு உடைத்து
மனநலம் என்றால் என்ன, இனநலம் என்றால் என்ன? டாக்டர் பட்டம் வாங்கியவர்கள் எல்லாம் நிறைந்திருக்கும் இந்தக் குழுவில் அப்படிப்பட்ட அறிஞர்கள் விளக்கவும் கொஞ்சம் இடமிருக்கட்டுமே. அவர்களுக்கு இதையும் பின்வரும் குறட்பாக்களையும் விட்டுவிடுகிறேன்.
நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை மற்று அதற்கு
உப்பு ஆதல் சான்றோர் கடன்
கழாஅக் கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்
உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப்பட வேண்டாதார்
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என் மற்றுச்
சான்றோர் முகத்துக் களி
குண நலம் சான்றோர் நலனே பிற நலம்