தமிழ்மணி - கவிஞர்களின் கவிஞர் "மீரா"

1,107 views
Skip to first unread message

Kannan Natarajan

unread,
Apr 24, 2011, 12:02:59 AM4/24/11
to Min Thamizh

ஸ்ரீ சன கவிதை தந்த பாரதிக்குப் பின்னர் புதுக்கவிதையின் தந்தையாய்த் திகழ்ந்த ந.பிச்சமூர்த்திக்குப் பிறகு, கவிதையின் காலம் முடிந்தேவிட்டது என்று ஆரூடம் கணித்தவர்களின் வாக்குப்பொய்க்க, நவகவிகளுக்கு நிலைபேறுமிக்க வாழ்வு கொடுத்த கவிஞர்களின் கவிஞர் மீரா, திராவிடச் சிந்தனையில் அரும்பிப் பொதுவுடைமைத் தத்துவத்தில் பூத்துக்குலுங்கிய கவிதை நந்தவனம்.

10.10.1938இல் தோன்றி, 01.09.2002இல் மறைந்த சிவகங்கைச் சீமையின் கவிதைக் குயில். 

"பிறந்ததுதான் பிறந்தேன் நான் பெண்ணாய்ப் பிறந்தேனா'' என்று கவிதை பாடிய கவிஞர் மீ.
ராசேந்திரனின் முதல் இரு எழுத்துகளின் இணைப்பிலிருந்துதான் கவிஞர் மீரா என்னும் பெயர்ப் பிறப்பு.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். 

- இலக்குமி அம்மாவும், எஸ்.மீனாட்சிசுந்தரமும் என் மாதா பிதாக்கள்
- புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் என் குரு
- மகாகவி பாரதி என் தெய்வம்.

என் குருவின் மூலமே என் தெய்வத்தைத் தரிசித்தேன்.

"பாரதிதாசனின் தாசன் ஆன நான், மற்றும் ஒரு பாரதிதாசன் ஆனேன்'' என்று குறிப்பிடும் மீரா எழுத்துக்கும், வாழ்வுக்கும் இடையில் எந்தத் தடையுமின்றி குறிக்கோளுடன் வாழ்ந்து சிறந்தவர்.

- அண்ணா
- பாரதிதாசன்
- கண்ணதாசன்
- மு.வ.

ஆகியோர் எழுத்துகளில் ஏற்பட்ட ஈர்ப்பால் எழுத வந்த மீரா, தொடக்கத்தில் மரபுக்கவிதைகள் எழுதியவர். 

சாகாத வானம் நாம்; வாழ்வைப் பாடும் 
சங்கீதப் பறவை நாம்; பெருமை வற்றிப் 
போகாத நெடுங்கடல் நாம்; நிமிர்ந்து நிற்கும் 
பொதியம் நாம்; இமயம் நாம்; காலத் தீயில் 
வேகாத பொசுங்காத தத்துவம் நாம்; 
வெங்கதிர் நாம்; திங்கள் நாம்; அறிவை மாய்க்கும் 
ஆகாத பழமையினை அகற்றிப் பாயும் 
அழியாத காவிரி நாம்; கங்கை யும் நாம்; 


என்ற மீராவின் இப்பாடல், அக்காலத்தில் திராவிட இயக்க மேடைகளில் பாரதிதாசன் பாடல்களுக்கு அடுத்ததாக ஒலித்த பாடல் இது என்பார் அப்துல்ரகுமான். 

தெய்வங்கள் திருநாட்கள் எங்கட்கில்லை, 
தெருவோரச் சாக்கடைக்கு வருமா தெப்பம்? 

என்ற மீராவின் கவிதை அண்ணாவை ஈர்த்த கவிதை.

அவர் அரங்குகளில் எடுத்து முழங்கிய கவிதை.

மதுரைத் தியாகராசர் கல்லூரியில் தமிழ் பயின்ற கவிஞர் மீரா, சிவகங்கை மன்னர் கல்லூரியில் பேராசிரியப் பணி ஏற்றார். அக்காலத்தில் மதுரைப் பல்கலைக்கழகக் கல்லூரி ஆசிரியர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்குத் தொடங்கப்பட்ட மூட்டா  இயக்கத்தில் தீவிரப் பங்காற்றினார். அவ்வமைப்பின் ஜர்னல் ஆசிரியரானார். போராட்டத் தீவிரத்தால், கல்லூரியினரால் இருமுறை பணிநீக்கம் செய்யப்பட்டார். அதுசமயம் உருவானதே அன்னம் பதிப்பகம். அகரம் அச்சகத்தின்வழி, நவீன படைப்பிலக்கியங்களை உருவாக்கித் தமிழுலகுக்குத் தந்தார்.

"அபியின் மெளனத்தின் நாவுகள்" என்ற தொகுப்பை அடுத்து,

- நீலமணி
- கல்யாண்ஜி
- இரா.மீனாட்சி

உள்ளிட்டோர் கவிதைகளை, நவகவி என வரிசைகளாக்கி வழங்கினார்.

கி.ரா.வின் படைப்புகளை வெளியிட்டுப் பெருங் கவனிப்பை ஏற்படுத்தியது அன்னம். பின்னர், "அன்னம் விடு தூது கவி" என்ற கவிதைக்கான சிற்றேடு ஆகியவற்றையும் அன்னம் வாயிலாக வெளியிட்டார் மீரா. 

மொழிபெயர்ப்பு, இலக்கிய விமர்சனம், படைப்பிலக்கியம் எனத் தமிழின் துறைதோறும் பதிப்பாக்கங்களை வலுப்படுத்தித் தேர்ந்த பதிப்பகராகத் தம்மை நிலைநிறுத்திக் கொண்டார். தரமான இலக்கியக் கூட்டங்களை ஏற்பாடு செய்து இனிது நடத்தினார். அவற்றுள் மிகவும் குறிப்பிடத்தக்கது, சிவகங்கையில் அவர் மூன்று நாள்கள் நடத்திய "பாரதி நூற்றாண்டு" விழா. 

பதிப்பகத் துறையில் எழுத்துப் பரம்பரையை உருவாக்கி வளர்த்த அவர், தம் கல்லூரிப் பணியிலும் சிறப்பான மாணவர்களை உருவாக்கினார். எந்தக் கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்துத் தெருவில் இறங்கிப் போராடினாரோ, அந்தக் கல்லூரியிலேயே பின்னர் தமிழ்த்துறைத் தலைமைப் பொறுப்பையும், பொறுப்பு முதல்வர் பணியையும் அவர் ஆற்ற நேர்ந்தது. அதுசமயம் கல்லூரி நிர்வாகத்தைச் சீர்செய்து, மாணவர்களிடையே ஒழுக்கக் கட்டுப்பாடுகளை வலியுறுத்திய அவர், அவ்வூரின் பெரிய மனிதர் ஒருவரது பிள்ளையின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததன் விளைவாக, கும்பகோணம் அரசுக் கல்லூரிக்குப் பணிமாற்றம் செய்யப்பட்டார்.

"கல்லூரிப்பணி, தமிழ்த்துறைத் தலைமைப்பணி, முதல்வர் பொறுப்புப்பணி, கல்லூரிப் போராட்டப்பணி, கல்லூரி ஆசிரியர்கள் தொழிற்சங்கப்பணி, கவி இதழ்ப்பணி, அன்னம் விடு தூது இதழ்ப்பணி, அன்னம் பதிப்பகச் சிறப்பாசிரியர் பணி, அகரம் அச்சக மேற்பார்வைப்பணி, கொஞ்சம் குடும்பப் பணி இவை எல்லாம் சேர்ந்து என் எழுத்துப் பணியை வளைத்துப் பிடித்துக் கட்டிப் போட்டுவிட்டன'' என்று தாம் பணிகளால் பிணிக்கப்பட்டு கவிப் பறவையானதைக் குறிப்பிடும் மீரா, அவற்றையும் மீறித் தமிழுக்குச் சிறப்பான ஆக்கங்களை அளித்துள்ளார். 

"கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்", அக்காலத்தில் கல்லூரிக் காதலர்களின் வேதப்புத்தகமாகத் திகழ்ந்தது. இவர்தம் இலக்கிய, இலட்சியக் கவிதைகளின் ஆவணமாகத் திகழ்ந்த, மூன்றும் ஆறும் கவியரங்கக் கவிதைகளின் தொகுப்பு. ஊழல் அரசியலையும், நாணயமற்ற வாழ்வின் போக்குகளையும் அங்கதமாகக் குத்திக் காட்டும் கவிதைக் கூர் முனைகள், ஊசிகள், ஹைகூவும் சென்ரியூவும் தமிழுலகில் இறக்குமதியான காலத்தில் தமிழ்மரபில் இவரிடமிருந்து ஒலித்தது குக்கூ, 

அழுக்கைத்தின்னும் 
மீனைத்தின்னும் 
கொக்கைத் தின்னும் 
மனிதனைத்தின்னும் 
பசி! 


என்பது அவர்தம் குக்கூக் கவிதைகளுள் ஒன்று.

- இராசேந்திரன் கவிதைகள்
- மீராவின் கவிதைகள்
- கோடையும், வசந்தமும்

ஆகியன இவர்தம் பிற கவிதைத் தொகுப்புகள்;

"எதிர்காலத் தமிழ்க்கவிதை" கவிதை விமர்சன நூல்.

"வா இந்தப்பக்கம்" நிகழ்காலச் சமுதாய நிகழ்வுகளை அங்கதமாக விமர்சிக்கும் கட்டுரைத் தொகுப்பு. 

இனிமையும், அன்பும், தோழமையும் நிறைந்த புன்சிரிப்பு கவிஞர் மீரா, எழுத்திலும், பேச்சிலும் பொங்கிப் பெருகும் அங்கதம் இவர்தம் உயிர்த் துடிப்பு.

நிறைவு காலத்தில் "ஓம் சக்தி" இதழின் ஆசிரியராகவும், சிறிதுகாலம் கோவையில் தங்கிப் பணியாற்றிய மீரா, எஸ்.ஆர்.கே.யைப்போல் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டார். 

"பாரியின் பறம்பை மூவேந்தர்கள் முற்றுகையிட்டதுபோல் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீரிழிவு, இதய நோய், வாதநோய் ஆகிய முந்நோய்களால் தாக்கப்பட்டுப் படுக்கையில் கிடக்கிறேன். இப்போதாவது கடவுளைக் கும்பிடுங்கள், கோயிலுக்குப் போங்கள்.... என்று நெய்வேலியிலிருந்து வரும்போதெல்லாம் என் அருமை மகள் செல்மா சொல்லிப்பார்த்தும் எதுவும் நடக்கவில்லை,. என்னால் முடியவில்லை. கடவுள் இருந்து காப்பாற்றினால் நல்லதுதான். (நான் பிழைத்துப்போகிறேன்). ஆனால், இயல்பாய் எனக்கு அந்த நம்பிக்கை வரவில்லை. இனி சாகப்போகும்போதா வரப்போகிறது திராவிடர் கழகத் தலைவர் திரு.கி.வீரமணி கொடுத்த பெரியார் விருது என் படுக்கை அருகே இருக்கிறது'' என்று அக்காலக்கட்டத்திலும் அங்கதத்தோடு தன் நிலையை எழுதினார் மீரா. 

அப்துல் ரகுமான் வழங்கிய கவிக்கோ விருதும், கவிஞர் சிற்பி அறக்கட்டளை வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருதும் இவருக்குப் பெருமை சேர்த்தன. இவர்தம் பதிப்பாக்கங்களால் மிகச்சிறந்த விருதுகள் பெற்ற படைப்பாளிகளை உருவாக்கிய படைப்பாளி கவிஞர் மீரா. 

தனியாய்.. தனித்தனியாய்.. தன்னந் தனியனாய்.. இது மீரா எழுத நினைத்திருந்த நாவலின் தலைப்பு. நிறைவேறாது விடப்பட்ட இந்நாவலைப் போலவே இவர்தம் கனவாகிய, மாமல்லபுரச் சாலையில் கவிஞர்களுக்காக, பாரதி கவிதா மண்டலம் அமைக்கவேண்டும் என்ற ஆவலும்... கவிக்கனவு பலிக்கக் காலம் துணை செய்யட்டும்.

கிருங்கை சேதுபதி

நன்றி:- தினமணி

கிருஷ்ணமூர்த்தி

unread,
Apr 24, 2011, 12:59:52 AM4/24/11
to மின்தமிழ்
கவிஞர் மீராவைப் பற்றி அவரை அறிந்தவர்கள் வழியாக ஒரு
பன்முகப்பார்வை......! ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால் வெளிவந்த ஒரு
கட்டுரை. திண்ணை இணைய இதழுக்கு நன்றியுடன்

----------------------------------------


காகிதங்கள் + கனவுகள் = மீரா

நெப்போலியன்

மீ.ராசேந்திரன் எனும் மீரா நம்மை விட்டுப் பிரிந்து இரண்டு வருடங்கள்
(1-09-2002) ஓடிவிட்டன. ஆனால், மீரா என்ற பீனிக்ஸ் தமிழ் இருக்கும்வரை
உயிர்த்தெழுதலுடன் இலக்கியவானில் சிறகசைத்துக் கொண்டுதான் இருக்கும்.
அர்ப்பணிப்பான வாழ்க்கையை இறுதிவரை இயக்கி முடிக்கும் இயல்புகொண்டோரை
காலம் அவ்வளவு எளிதில் உதிர்த்து விடுவதில்லை மீரா என்ற இலக்கியவாதியை,
பதிப்பகத்தானை, நேசமிகு மாமனிதனை தமிழ் இலக்கியவரலாறு தன் கருப்பையின்
கருவாய் சுமந்தபடியே இருக்கும். சிவகங்கை அன்னம் அகரம் என்ற சாகாத
வானத்தில் மீரா எனும் வெள்ளி மீன் சிமிட்டிக்கொண்டுதான் இருக்கும்.

மீரா ஒரு அர்ப்பணிப்பு ஆத்மா...

'நவீன இலக்கியத்தின்பால் எழுபதுகளிலும் எண்பதுகளிலும் தமிழுலகில் உருவான
ஈர்ப்புக்கு மீரா தொடங்கிய அன்னம் பதிப்பகத்தின் செயல்பாடு மிக
முக்கியமான காரணம். வலிமையான இலக்கியச் சூழலை உருவாக்குவதில் ஒரு
பதிப்பகத்துக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. கவிதைகளிலேயே இயங்கி வந்த
மீராவும் ஏதோ ஒரு கட்டத்தில் இப்படி நினைத்ததால்தான் தன் இயங்கு தளத்தை
மாற்றிக் கொண்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. '
---- பாவண்ணன்

மீரா ஒரு பொதுநலப்பூங்கா...

'1959 முதல் துவங்கி 1965 - 1966 ம் ஆண்டுகளில் உள்ள அவரது கவிதைகளின்
நோக்கமும் , தாக்கமும் மிக மிக அதிகம். மீராவின் கவிதைகள் முதன் முதலில்
1965ல் வெளியானது பிறகு அவரின் அடுத்த பதிப்பு 2002ல்தான் வெளியானது.
இந்த 37 ஆண்டுகால இடைவெளிக்கு என்ன காரணம் ? ' ---- மு.மாரிமுத்து

மீரா ஒரு சிந்தனைச் சிவப்பு...

'திராவிட இயக்கத்தில் வளர்ந்து மலர்ந்தவர் மீரா. அண்ணாவாலும், கலைஞராலும்
பாராட்டப் பெற்றவர் அவர். 70-களில் படிப்படியாக இடதுசாரித் திசையில்
நகர்ந்து உறுதியான இடதுசாரிப் படைப்பாளியாகவும்,சிந்தனையாளராகவும்
விளைந்தார். ' -- பொன்னீலன்
மீரா ஒரு புதுமரபி...

'தமிழ் இலக்கியத்தில் மரபுக்கவிதை சவலை நோயால் பீடிக்கப்பட்டு
கவலைக்கிடமாகி நலிவுறும் நிலைக்கு வந்தபோதுதான், கவிஞர் மீரா புதுக்கவிதை
என்னும் சிவப்பு அணுக்களை அதன் ரத்தத்தில் பாய்ச்சினார். ' ---- கவிஞர்
பவேரா

மீரா ஒரு பதிப்பகத்தேனீ...

'மீரா ஒரு கவிஞர் மட்டுமல்ல வணிக நோக்கம் இல்லாத பதிப்பக உரிமையாளர்.
ஜீவநேசமும் தோழமையும் குடிகொண்ட மாமனிதர். சிறந்த சிந்தனையாளர். கல்லூரி
முதல்வர். ' --- தேனிசீருடையான்

மீரா ஒரு அங்கதப்பூ...

'அவரைக் கடைசி முறையாகப் பார்த்தது ஒரு குதூகலமான சூழ்நிலையில். ஒரு
விநாயக சதுர்த்தி நாளன்று கவிக்கோவுடன் என் வீட்டிற்கு வந்திருந்தார்.
கொழுக்கட்டைகள் தந்து உபசரித்தார் என் மனைவி. ‘உங்க வீட்டிற்கு வரும்போது
கொழுக்கட்டை கிடைக்கலாம் என்று நினைத்துக்கொண்டுதான் வந்தேன்’ என்றார்
கவிக்கோ. ‘அவருக்கு டயாபடீஸ் .கேட்டாலும் கொடுக்க வேண்டாம் என்று
சொல்லத்தான் நானும் கூட வந்தேன்’ என்றார் மீரா. அறை முழுக்கச் சிரிப்பு.
அதை நினைத்தால் இப்போது மனம் கனத்துப் போகிறது. '--- மாலன்

மீரா ஒரு கிரியாவூக்கி...

'நான் பதிப்பாளன் ஆனதற்கு ஒருவகையில் மீராதான் காரணம் என்று சொல்ல
வேண்டும் ' -- காவ்யா சண்முகசுந்தரம்

மீரா ஒரு வினைத்தொகை...

'அவர் கவிதையை வாழ்க்கையாகவும், வாழ்க்கையை கவிதையாகவும் ஆக்கியவர்.
சிவகங்கையில் மீராவுக்கு ஒரு நினைவு நூலகம் அமைக்க வேண்டும் என்பது என்
ஆசை. நல்லவர்கள் அதை நிறைவேற்றித் தருவார்கள் என்று நம்புகின்றேன் ' ---
கவிக்கோ.அப்துல் ரகுமான்

மீரா ஒரு குருபீடம்...

'கவிஞர் மீராவின் மாணவர்கள் மற்றும் சீடர்களைப் பற்றிக் குறிப்பிடுவது
அவசியம். முனைவர் ம.பெ.சீனிவாசன்
(சிவகங்கை), முனைவர் இரா.பாலச்சந்திரன்(ஆங்கிலப்பேராசிரியர் மனோன்மணீயம்
சுந்தரனார் பல்கலைக்கழகம்),பேராசிரியர் சாகுல் அமீது(புதுக்கல்லூரி
சென்னை), முனைவர் .ஏ.குணசேகரன்(பாண்டிச்சேரி) ஆகியோர். அவருக்கு சீடர்கள்
பலர். அவர்களில் முனைவர் சுபாசு சந்திரபோசு(திருச்சி), முனைவர் மு.பழனி
இராகுலதாசன்(தேவகோட்டை) முக்கியமானவர்கள். ஓய்வுபெற்ற ஆசிரியரும் அவருடைய
உறவினருமான முகவை சோ.சண்முகம் மீரா நடத்திய இலக்கிய விழாக்களில்
ஒத்துழைத்தார். அவரின் மாணவர் ரா.பாஸ்கரன். மீராவின் இறுதிக்காலத்தில்
அவருடன் நெருங்கிப் பழகிய இரண்டு இளைஞர்கள் குறும்படத்தயாரிப்பாளரும்
எழுத்தாளருமான செழியன், அடுத்தவர் சந்திரகுமார். ' ---- நா.தர்மராஜன்

மீரா ஒரு சமர்க்களச்சிங்கம்...

வார்த்தை வசீகரங்களுக்காக எந்தக் கொள்கையையும் எழுதியவர் அல்ல மீரா.
பிள்ளைகளுக்கு கலப்பு திருமணம் செய்து வைத்தார். சொந்தமென்று
ஏற்றுக்கொண்ட கோட்பாடு காரணமாகச் சொந்தச் சாதி ஆதிக்கக்காரர்களோடு சமரசம்
செய்துகொள்ளாமல் சமர்க்களத்தில் இறங்கிய வரலாறு அவருக்கு
உண்டு.பணிபுரிந்த கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக சாதி அபிமானங்களைத்
தூரத்தள்ளியவர் இந்த இலட்சியக்கவிஞர். '---- கவிஞர் சிற்பி

மீரா ஒரு கற்பகதரு...

'மீரா ஓராயிரம் பெயர்களை ஊட்டி வளர்த்த ஒற்றைப்பெயர் . எப்படிப்
போட்டாலும் பூ விழும் நாணயம்’---- பழநிபாரதி

மீரா ஒரு காரணி...

'மீராவின் படைப்புகள் மிகப் பொருத்தமான தேவையான நூல்கள். சமுதாயத்தை
விழிப்படையச் செய்யக்கூடிய நூல்கள். மனித சமுதாயத்திற்கு ஏற்புடைய
நூல்கள். '---- கலைஞர் மு.கருணாநிதி

மீரா ஒரு புதுக்குறிஞ்சி...

'அவர் ஒரு குறிஞ்சிப்பூ. போதிய அளவு கண்டு போற்றப்படாத கவிஞர் அவர்.
திராவிட இயக்கக் கவிஞர்களுக்கு நேர்ந்த கதிதான் அவருக்கும் நேர்ந்தது.
துதி பாடத் தெரியாதவர்கள் அங்கே தலை நிமிர்தல் இயலாது.மீரா எனும் பாவலன்
தனித்திறன் உடையவன். மரபுப் பாடல்களில் பல சித்து விளையாட்டுக்கள்
கண்டவன். அவனது உரை வீச்சுக்கள் ஒப்பற்றவை. உள்ளடக்கமும் புதுமையுடையது.
வடிவ யாப்பும் புதிய பரிணாமம் காட்டுவது’ ---- அறிஞர் தமிழண்ணல்

மீரா ஒரு காகிதச்சிற்பி...

'மீராவின் காகிதங்கள் கல்வெட்டுக்களாய் காலத்தை வென்று வாழக்கூடியவை.
அக்காகிதங்களில் அவர் தமிழ் இலக்கியமாக நிலைத்து நின்று நீடித்து
வாழ்வார். '---- இரா.சுப்பராயலு

மீரா ஒரு விழிப்புணர்வு வாக்கியம்...

'தமிழக மக்களிடையே புத்தகப் புத்தாடைகளை வாங்கும் பழக்கத்தை ஊக்குவிக்க
பிற பதிப்பாளர்களையெல்லாம் ஒன்று கூட்டிப் புத்தகக் கண்காட்சி நடத்தும்
திருவிழாவிலும் மீரா ஒரு அறங்காவலர் போல விளங்கினார் '----
சு.குழந்தைநாதன்

மீரா ஒரு தேமா...

'மீரா இந்த தேமாச் சீருக்குரிய ஈரசைப் பெயர், பெற்ற புகழ் இணையற்றது.
மீரா இந்தப் பெயரை நினைக்கும்போது பெண்மைக்கேயுரிய நல்லியல்புகள் யாவும்
நம் முன் தோன்றும். ராசேந்திரன் இந்த இயற்பெயரை எண்ணும்போது ஒரு பெரு
வீரனுக்கே உரிய வீறும் வினைத்திறமும் விளங்கித் தோன்றும். அவரது
கவிதைகளில் இவ்விரு இயல்புகளையும் கண்டு மகிழலாம்.’- ==ம.பெ.சீனிவாசன்

மீரா ஒரு போராளி...

'அறிஞர் அண்ணா மீராவின் கவிதைகளைப் படித்ததோடு, கவனித்தும் வந்த
காரணத்தால் அண்ணாவின் கடைசி மடலில் திராவிட இயக்கக் கவிஞர்களில்
மீ.ராசேந்திரன் ஒருவர் என்று குறிப்பிட்டுள்ளார். அண்ணா தன் இயக்க
மாநாட்டுக்குத் தொண்டர்களை அழைத்து எழுதிய கடிதத்தில் 'சாவா சந்திப்போம்,
வாழ்க்கை நமக்கென பூவா புறப்படுவோம், புல்லியரைத்தூள் செய்வோம் ' எனும்
போர்க்குணம் மிக்க மீராவின் கவிதையை மேற்கோள் காட்டியுள்ளார் ' ----
சுபாசு சந்திரபோசு

மீரா ஒரு மையம்...

'அறுபதுகளின் பிற்பகுதியில்... சென்னை வந்தால் திருவல்லிக்கேணியிலிருந்து
கோட்டை, அங்கிருந்து பிராட்வே,அப்படியே மூர் அங்காடிப் பழைய புத்தகக்கடை,
மீண்டும் திருவல்லிக்கேணி, பழைய புத்தகக்கடை வரிசை என்று ஒரு நிதானமான
சூறாவளியாய்... ஏதாவது கேட்டுத் துளைத்துக் கொண்டே வரும் தம்பிமார்கள்
கொண்ட ஒரு சின்ன மேகக்கொத்தைத் தள்ளிக்கொண்டு நடந்தே திரிந்து வந்த
அந்தக் கால்கள் மிகுதியும் வாங்குவது புத்தகங்கள்தாம். அந்தச் சுமையைப்
பறித்தாலும் தர மறுத்துத் தாமே சுமந்து வரும் அந்த உறுதியான கைகள்...
மறுபடியும் மாலையில் மரீனா மணலில் வளையும் பெரியசாமி தோளில் கைபோட்டு
உந்தியபடி இலக்கியம் பேசிக்கொண்டு முந்தி எட்டுவைத்துப் போகும் இவரைப்
பார்த்தபடி பொன்னம்பலம் கேட்பான். 'அன்ணனுக்குக் கால் வலிக்கவே
செய்யாதா ? ' 'ஒரு சொல்லைக்கூட இழந்துவிடக்கூடாது ' என்று ம.பெ.சீ.யும்,
ப.கா.வும்,ஞானசேகரனும், இராசரத்தினமும் நானும் ஈடுகொடுத்து நடக்க
என்னதான் முயன்றாலும் ஓரடி முந்தியே போய்க்கொண்டிருக்கும் இந்தக்
கால்கள். எந்த ஊரில் இருந்தாலும் பார்க்கச் சென்றால் பேருந்து நிலையம்
வரை கூடவே நடந்து வந்து வழியனுப்பிவிட்டுச் செல்லும் அந்தக் கால்கள்... '
---- இக்பால்

மீரா ஒரு சினேகமழை...

'இறுதியாக நினைத்து மகிழ்வதற்கு மனிதநேயர்களிடம் கண்டதும் கொண்டதுமான
நட்புதான் இருக்கும் என்று நம்புகிறேன். முதல் நாள் காட்டிய அன்பையும்
பரிவையும் வாழ்வின் இறுதிவரை காட்டுபவர்களை நினைத்துப் பார்க்கும்போது
அவர்கள் காட்டும் அன்பும் பரிவும் அவர்களது இயல்பு என்ற முடிவுக்கு
வருகிறேன். கவிஞர் மீரா அவர்கள் இயல்பும் அதுதான். '---- இன்குலாப்

மீரா ஒரு கனவு...

'மீரா உடல்நலக் குறைவினால் சிறைப்பட்டுவிட்டார் என்று அறிந்து சிவகங்கை
போனேன். மனம் கனத்துக் கிடந்தது. அண்ணி, பஞ்சு வந்திருக்கிறார் என்றவுடன்
எழுந்து வந்தார். தாடியோடு கூடிய அந்த முகத்தைப் பார்க்கப் பார்க்க
எனக்கு அழுகையாக வந்தது. சமாளித்துக் கொண்டு 'என்ன அண்ணே இது ? '-அவரும்
கலங்கினார். 'கி.ராஜநாராயணன் எப்படி இருக்கிறார் ? '- விசாரித்துப்
பேச்சை மாற்றினார். 'படுக்க வைத்து விட்டது ' என்பதுதான் அவரால்
சகித்துக்கொள்ள முடியாத துயரமாக இருந்தது. ' ---- க.பஞ்சாங்கம்

மீரா ஒரு அசரா அலை...

'அப்போது சிவகங்கையிலிருந்து சென்னைக்கு திருவள்ளுவர் போக்குவரத்துக்
கழகத்தின் ஒரே பேருந்துதான் இருந்தது. வசதியான சாய்வு இருக்கைகள்
இருக்காது. சென்னையிலிருந்து சிவகங்கை வந்தால் நாள் முழுக்கத்
தூங்கினாலும் அழுப்புத் தீராது. ஆனால் பயணங்களில் அவருக்கிருந்த ஆர்வம்
அதிசயமானது. சென்னையிலிருந்து காலையில் வருவார். ஒன்பது மணிக்கு
மதுரைக்கு கிளம்புவார். திருச்சி, பிறகு பொள்ளாச்சி, கோயம்புத்தூர் ,
கூட்டங்கள், சந்திப்புகள், பதிப்பகவேலைகள், ஒரு சாம்பல் நிறப்பெட்டியுடன்
கிளம்பிவிடுவார். உடன் சதுரம் சதுரமாக சசியின் புத்தகக்கட்டுகள். அவர்
வாழ்நாளின் பெரும்பகுதி பயணங்களிலேயே கழிந்தது. மதுரையிலிருந்து
சிவகங்கைக்கு வரும் கடைசி இரவுப் பேருந்துகளில் குறைந்தது வாரம் இரண்டு
முறையாவது அவரைப் பார்க்க முடியும். இத்தனை உழைப்புக்கிடையில்
கேட்பவருக்கெல்லாம் முன்னுரை எழுதினார். பாரதி நூற்றாண்டு விழா
நடத்தினார். நவீன வாசனையற்ற செம்மண் நிலத்தில் கவிதை இரவு நடத்தினார்.
புத்தகங்கள் மீதான அவரது காதல் அளவிடமுடியாது. வீட்டில் திரும்பும்
இடமெல்லாம் புத்தகங்கள். கையெழுத்துப் பிரதிகள். வடிவமைப்பு பற்றியும்
புத்தகங்களைப் பற்றியும் ஆர்வமாகப் பேசுவார் ' ---- செழியன்

மீரா ஒரு விருது...

'வாழ்ந்த வாசம் மட்டும்தான்... மீராவின் குடும்பம் சுவைக்க முடிந்த
அவரின் சொத்து. அவரின் பெட்டியில் இருந்தவையெல்லாம் ஒரு வேட்டியும் நூறு
ரூபாய்வரை கொடுத்து வாங்கும் சட்டையும் தவிர முழுவதும் பலரின்
எழுத்துக்கள்தான். இன்று பேசப்படும் பல புத்தகங்கள் அவர் தீண்டியதால் கலை
வடிவமானவை. வார்த்தைகளையும் வரிகளையும் செதுக்கி அழகியல் கொள்ள மறைந்து
தொழில் செய்தவர். படைப்பாளியாக மட்டும் மீரா செயல்பட்டு இருந்தால் தமிழ்
இலக்கியத்திற்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்திருக்கும் '----
க.வை.பழனிசாமி

மீரா ஒரு வானம்...

'குறிப்பாக, எழுதுபவர்களுக்கு வலதுகையில்தான் அதிக இயக்கம். வலது கையில்
கடிகாரம் கட்டிக்கொண்டால் பார்த்துக்கொண்டிருக்கும் வேலையை நிறுத்தாமலே
நேரம் பார்த்துவிடலாம். வலது கைக்கு கடிகாரத்தைக் கொண்டு வந்து கட்டிய
காரணம் இது என்ரு வெகு சிலர்க்கே தெரிந்திருந்தது. அவர்களுள் கவிஞர் மீரா
ஒருவர். மீரா உலக மக்கள் எல்லோரும் கவிதை எழுத வேண்டுமென்றும் முடிந்தால்
அவை அத்தனையும் புத்தகங்களாகப் போட வேண்டுமென்றும் நினைத்தார். கவிதை
வெளிப்பாட்டில் அவ்வளவு விரிந்த மனம் மீராவுக்கு ' --- கந்தர்வன்

மீரா ஒரு யுகம்...

'எனது மனைவியை அழைத்துக்கொண்டு சிவகங்கையில் அவர் வீட்டுக்குச்
சென்றபோது, மனித நேயராக கடைசி நிமிடம் வரை வாழ்ந்த ஒரு கவிஞன் மரணமற்ற
பெருவாழ்வில் இருப்பதையும் அதே சமயம் அவர் வசித்து வந்த அந்தத் தேகம்
அசைவற்றுக் கிடந்ததையும் பார்த்துக் கலங்கினேன். கை குவித்தேன் '----
பெ.சிதம்பரநாதன்

மீரா ஒரு புத்தகச்சந்தை...

'புத்தகம் சம்பந்தமாய் வந்தாய் -- ஒரு
புத்தகச் சந்தையில் பார்த்துக் கொண்டோம்
புத்தகமாகவே ஆனாய், நண்பனே. '---- கி.ராஜநாராயணன்

மீரா ஒரு தராசு...

'மீரா என்ற கல்லூரி ஆசிரியரின் போராட்ட முகத்தையும் நாம் உற்று
நோக்கவேண்டும். எமக்குத் தொழில் கவிதை என்பதை முகமூடியாய் அணிந்து கொண்டு
தன்னை அவர் தனிமைப்படுத்திக் கொண்டதில்லை. கல்லூரியில் நேருக்கு நேர்
நின்று எதிர் கொண்ட போர்க்குணம் அவருடையது. ஆசிரியர் நலன் காப்பதற்கான
போராட்டங்களின்போது உண்ணாவிரதம் இருப்பதற்கோ, கைதாகிச் சிறைச்சாலைகளில்
அடைபடுவதற்கோ அவர் என்றைக்கும் பின்வாங்கியதே இல்லை. கல்லூரி
ஆசிரியர்களின் போராட்டத்தின் ஒரு பகுதியாக அண்ணா சாலையில் ஒரு நாள்
முழுக்கச் சுட்டெரிக்கும் வெயிலில் உடலை வருத்திக்கொண்டு உண்ணாவிரதம்
இருந்ததை இன்று நினைதாலும் நெஞ்சம் பதைக்கும் '---- இளம்பாரதி

மீரா ஒரு இளகியநிலவு...

'எழுத்தாளர்கள்மீது மிகுந்த மரியாதையும் அக்கறையும் கொண்டவராக இருந்தார்
மீரா. அவர்களில் பலர் வாழ்க்கை நன்றாக இல்லையே என்று
வருந்தியிருக்கிறார். மலையாள எழுத்தாளர்கள்போல் அவர்களுக்கும் போதிய
வருமானம் உத்திரவாதம் செய்யப்படவேண்டும். அதற்காக அங்கிருப்பதுபோல்
எழுத்தாளர் கூட்டுறவு பதிப்பகம் தோன்ற வேண்டும் என்று
ஆசைப்பட்டிருக்கிறார் ' ---- எஸ்.விஸ்வநாதன்

மீரா ஒரு உலகம்...

'மீரா வெறும் கவிஞர் மட்டுமன்று. அவர் சிறந்த வாசகர். பேராசிரியத்
தன்மையற்ற பேராசிரியர். மனிதர்கள் சாகிறபோது அவர்களுக்குள் உலகங்கள்
சாகின்றன என்றும் சொல்வார்கள். கவிஞர் மீரா மறைந்தபோது எனக்குள் பல
இலக்கிய உலகங்கள் இறந்து போய்விட்டன ' ---- இந்திரன்

மீரா ஒரு ஒளி...

'திராவிட முன்னேற்றக்கழகம், இடதுசாரி இயக்கங்கள், பல்கலைக்கழகங்கள்,
மூட்டா, பதிப்பகத்துறை, படைப்பாளிகள், சாகித்ய அகாதமி, தமிழ்
வளர்ச்சித்துறை இவற்றின், இவர்களின் எந்த வெளிச்சமும் மீராவின் மீது உரிய
நேரத்தில் உரிய அளவில் விழவில்லை ' ---- கல்யாண்ஜி

மீரா ஒரு சமத்துவப்புறா...

'புதுமைக்கவிஞன், போர்க்களப்புலவன், அறத்தின் நாயகன் , அனைவர்க்கும்
தோழன், சமத்துவ வேட்கையால் சரித்திரம் படைத்தோன், தன்னலமின்றித்
தமிழ்ப்பணி புரிந்தோன், தமிழ் உள்ளவரை அவன் புகழ் வாழும் ! '----
தி.க.சிவசங்கரன்

மீரா ஒரு நம்பிக்கை...

'கவிஞர் மீரா நம்பிக்கை மனிதர். தனக்கு எதிராக உலகமே சுழன்று தாக்கிய
போதிலும் நம்பிக்கை மனிதர்கள் தளர்ந்து விடுவதில்லை. கம்பீரமாக எழுந்து
நின்று தனக்காக வாழ்க்கையைப் பிரபஞ்சத்தில் பதிவு செய்து விடுகிறார்கள் '
---- சி.மகேந்திரன்

மீரா ஒரு தோழமைக்கடல்...

'இப்படியொரு கலப்படமற்ற அன்பை, நிபந்தனைகளற்ற நட்பை இனி யாரிடம் பெறப்
போகிறோம். பூமிக் கிண்ணத்தில் வார்க்கப்பட்ட அவரது வாழ்வென்னும் பாலினை
ஓர் துளியும் மிச்சம் வைக்காது அருந்திவிடும் அன்னம். ஆம் அவரது வாழ்வும்
கலப்படமற்றது. அது அகரம். ' ---- கலாப்ரியா

மீரா ஒரு சரி...

'அன்னம் பதிப்பகத்தின் நூல்களையெல்லாம் அச்சிடத் தாமே அகரம் என்ற பெயரில்
அச்சகம் ஒன்றையும் நடத்தினார். பிழைகள் இல்லாது நூல்களை அச்சிட்ட பெருமை
அகரத்திற்கு உரியது '---- பு.இராசதுரை

மீரா ஒரு முரண்...

'மீராவின் கனவுகள் ஏதும் நனவாகுமா என்பது தெரியவில்லை. ஆனாலும் அவர்
கனவொன்று பொய்த்ததை இங்கு சொல்ல வேண்டும். மீரா நாத்திகராக வாழ்ந்தார்.
தனது சாவிலும் கூட அவர் அவ்வாறே வாழ முடியும் என கற்பனைகள்
செய்திருக்கக்கூடும். பகுத்தறிவு, பொதுவுடைமைச் சிந்தனைகள் மீதும்
இயக்கங்கள் மீதும் பெரும் மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தார். ஆனாலும்
அவரது உடல் இந்து மதச் சடங்குகளோடு எரியூட்டப்பட்டது. தன்னை ஏங்கல்ஸின்
மாணவன் என்று பெருமையோடு தன் காதலியிடம் அறிமுகம் செய்து கொண்டவர் அவர்.
அவரது மரணத்தையும் விஞ்சிய அழுத்தத்தை அவரது உடல் எரியூட்டு
உண்டாக்கியது. பாரதி குடில் உருவாக்க அவர் நினைத்த இடத்தில் அவரை அடக்கம்
செய்திருக்கவேண்டும். '---- குருசாமி மயில்வாகணன்

மீரா ஒரு கறையிலாக் கவிதை...

'மீரா ஓர் இனிய கவிதை. மீரா கடவுள் எழுதிய கவிதையா... காலம் எழுதிய
கவிதையா... சமூகம் மாற்றி வடிவமைத்த காவியமா... ? ' ---- தனுஷ்கோடி
ராமசாமி

மீரா ஒரு வரலாறு...

'உ.வே சாமிநாதய்யரால் பல பழைய இலக்கியங்கள் நமக்குக் கிடைத்தன. மீரா
இருந்திராவிட்டால் நமக்குப் பல புதிய இலக்கியங்கள் கிட்டியிரா ' ----
நீலமணி

மீரா ஒரு காதலன்...

'குழல் ஊதும் கண்ணனைக் காதலித்தால் மீரா. இனிதான பாடும் குரலுக்காக
என்னைக் காதலித்தார் கவிஞர் மீரா சிவகங்கை மன்னர் துரைசிங்கம்
கல்லூரியில் பொருளாதாரத்தில் இளைங்கலைப் பட்டம் முதலாண்டு படித்த காலம்
1979. எங்களுக்கிடையே காதல் அரும்பிய காலம் அது. ' ---- கே.ஏ.குணசேகரன்

மீரா ஒரு பன்முகவெண்பா...

'சமணர் மொழியில் சொன்னால் அவர் ஒரு பக்குவ சீவன். பேராசிரியர் கூற்றில்
சொன்னால் அவர் புதுக்கவிதையின் உ.வே.சா. மூட்டாவினர் கருத்துப்படி அவர்
கோரிக்கைகள் நிறைவேற்றிய கோடிக்கைகள். அரசுக் கல்லூரி ஆசிரியர்
பார்வையில் அவர் கல்லூரி ஆசிரியரின் குரல். சுருங்கச் சொன்னால் மனிதம்
என்பதின் மருதுவின் கோட்டோவியம் அவர். '---- க.முத்துச்சாமி

மீரா ஒரு சிவகங்கை...

'என் தந்தையையொத்த வயதில் ஒரு நெருங்கிய நண்பரைப்போல் மூத்த
சகோதரரைப்போல் தனது இறுதிக் காலங்களில் என்னோடு அவர் கொண்ட அன்பு .
சிவகங்கை எனும் ஊரின்மீதான பாசத்தைத்தான் விதைத்து விட்டிருக்கிறது. மீரா
அவர்களின் ஊர்ப்பாசம் தாய்ப் பாசத்திற்கு நிகரானது. '---- சந்திரகுமார்

'மீரா எனக்குச் சிறுகதவாய் இருந்தார். லேசாகத் தொட்டாலே திறந்து கொள்ளும்
கதவு. மீராவுக்கு ரொம்பவும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன் நான். ஆனால்,
அந்த மீராவை நேரிலோ கூட்டங்களிலோ ஒரு முறை கூட நான் பார்த்ததில்லை.
சந்தித்ததில்லை. பெரிய இழப்பாக உணர்கிறேன் இப்போது ' என்று சொல்லும்
பெருமாள் முருகனின் வார்த்தைகள் எனக்கும் பொருந்தும்...
காரணம் நான் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்திருந்த அந்த மாகவியின்
படைப்புகளிலேயே எனக்குள் அவன்.
பார்த்ததில்லை... பேசியதில்லை... பழகியதில்லை... இருப்பினும்,மீரா எனும்
வார்த்தையும் அது செய்த இயக்கமும் என் ஆத்ம நெருங்குதலின் இனிய பதியமாய்
என்றென்றும்...மீரா என்ற புல்புல்லின் நினைவோசை அவர் படைத்த சாகாத
வானத்தில் சஞ்சரித்துக்கொண்டுதான் இருக்கும் எந்நாளும்... விடியலின்
ஒவ்வொரு பூபாளமும் மீரா என்ற கீர்த்தனையை இசைத்துக் கொண்டுதான் இருக்கும்
யுகத்தின் இறுதிவரை...

மீரா நம்மை விட்டுப் பிரிந்த வருடங்கள் தங்களின் தொலைவைச் சொல்லலாம்
ஆனால், தோன்றி மறைந்து மறையாமல் இருத்தலின் உயிர்ப்பை உணர்கின்ற ஓவ்வொரு
படைப்பாளிக்குள்ளும் மீரா வாழ்கிறார்...

---- நெப்போலியன்


On Apr 24, 9:02 am, Kannan Natarajan <thara...@gmail.com> wrote:

N. Kannan

unread,
Apr 24, 2011, 2:39:03 AM4/24/11
to mint...@googlegroups.com
குக்கூ கவிதை செய்த மீராதான் எனது, ‘ஹைக்கூ, பொய்க்கூ, புதுக்கூ’
கட்டுரையை வாங்கி, ‘ஓம் சக்தி’ இதழில் பிரசுரித்தார். நா.விச்வநாதன்
புத்தகத்திற்கு முன்னுரையாக எழுதிய என் உரையை மீரா காண, அதை அப்படியே ஓம்
சக்தியில் போட்டுவிட்டார். நா.விச்வநாதனுக்கு நான் மீண்டுமொரு முன்னுரை
எழுத வேண்டியதாகிப்போச்சு.

மீராவை நான் நேரடியாக அறிந்தேனில்லை. அவரது "கனவுகள் கற்பனைகள்
காகிதங்கள்" என்னையும் கவிதை எழுத வைத்தது!

நா.கண்ணன்.

2011/4/24 கிருஷ்ணமூர்த்தி <kris...@gmail.com>:

Innamburan Innamburan

unread,
Apr 24, 2011, 2:43:02 AM4/24/11
to mint...@googlegroups.com
தமிழ் மரபு அறக்கட்டளையின், மின் தமிழின் அபிலாஷைகளை மதிக்கும் இழை, இது.
இரண்டு கட்டுரைகளும் மன நிறைவையும், தமிழறிவையும் கூட்டின. நா.க.
பாக்கியசாலி.

இன்னம்பூரான்
24 04 2011

N. Ganesan

unread,
Apr 24, 2011, 7:08:28 AM4/24/11
to மின்தமிழ்

On Apr 24, 1:39 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> குக்கூ கவிதை செய்த மீராதான் எனது, ‘ஹைக்கூ, பொய்க்கூ, புதுக்கூ’
> கட்டுரையை வாங்கி, ‘ஓம் சக்தி’ இதழில் பிரசுரித்தார். நா.விச்வநாதன்
> புத்தகத்திற்கு முன்னுரையாக எழுதிய என் உரையை மீரா காண, அதை அப்படியே ஓம்
> சக்தியில் போட்டுவிட்டார். நா.விச்வநாதனுக்கு நான் மீண்டுமொரு முன்னுரை
> எழுத வேண்டியதாகிப்போச்சு.
>
> மீராவை நான் நேரடியாக அறிந்தேனில்லை. அவரது "கனவுகள் கற்பனைகள்
> காகிதங்கள்" என்னையும் கவிதை எழுத வைத்தது!
>
> நா.கண்ணன்.


பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டபின் கோவை ஓம்சக்தியைப்
பார்த்துக் கொண்டு கடைசிவரை இருந்தார்.

ஒரு நல்ல செய்தி. ஓம்சக்தி யுனிகோட் ஆகிறது.
இக்குழு உறுப்பினர் சிவா செய்கிறார்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Apr 24, 2011, 7:09:50 AM4/24/11
to மின்தமிழ்

On Apr 23, 11:59 pm, கிருஷ்ணமூர்த்தி <krishn...@gmail.com> wrote:
> கவிஞர் மீராவைப் பற்றி அவரை அறிந்தவர்கள் வழியாக ஒரு
> பன்முகப்பார்வை......! ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால் வெளிவந்த ஒரு
> கட்டுரை. திண்ணை இணைய இதழுக்கு நன்றியுடன்
>

இணையத்தில் அவரது பண்பையும் தொண்டையும் பற்றி
எழுதியவை கிடைக்கின்றன. இவ்விழையில் தொகுக்கலாம்.

நா. கணேசன்

Geetha Sambasivam

unread,
Apr 27, 2011, 8:53:44 AM4/27/11
to mint...@googlegroups.com
பல அரிய தகவல்கள் நிறைந்த தொகுப்புக்கு நன்றி.

2011/4/24 Kannan Natarajan <thar...@gmail.com>



கிருங்கை சேதுபதி

நன்றி:- தினமணி

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Reply all
Reply to author
Forward
0 new messages