உரையாசிரியர்கள்
பகவத் கீதை பல முரண்பாடான கருத்துக்களைக் கொண்ட ஒரு நூல். இந்நூலுக்கு பலர் உரை எழுதியுள்ளனர். உரை எழுதியவர்கள் யாரும் ஒத்த கருத்துடையவர்கள் அல்லர். பகவத் கீதை ஆத்மா என்பது உலகத்தில் ஒன்றுதானா அல்லது பல ஆத்மாக்கள் உள்ளனவா என்பதைப் பற்றித் தெளிவாகக் கூறவில்லை. ஆத்மா என்பது சுதந்திரமாகச் செயல்படுமா அல்லது பிறவற்றினால் செயல்படுமா என்பது பற்றியும் தெளிவாக் கூறவில்லை. ஆனால் ஜீவாத்துமா, பரமாத்துமா, உலகம் ஆகிய எல்லாமே ஒன்றுதான் என்ற கொள்கையை உடையவர்களும் தம் கொள்கைக்கு ஏற்றவாறு கீதையின் உரையை எழுதியிருக்கிறார்கள். பரமத்மாவின் (கடவுளின்) உடலாக இருக்கக் கூடியவை ஜீவாத்துமாக்களும் (உயிர்கள்) உலகமும் என்ற கருத்துடையவர்களும் தம் கருத்துக்கு ஏற்ற வகையில் கீதைக்கு உரை யயழுதியுள்ளனர். மேற்கூறிய மூன்று வகையினரும் கீதை பகவானால் பகரப்பட்ட பனுவல் என்ற கருத்தை உடையவர்கள்தான். இவர்கள் யாவரும் தங்கள் கருத்தை தெய்வ நூலாகக் கருதப்படும் கீதையின் உரைமூலமாகத் தெரிவிக்கின்றார்களே தவிர கீதாநூலாசிரியனின் நெஞ்சத்தைத் தெரிவிக்கவில்லை. இருபதாம் நூற்றாண்டிலே (1974 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஸ்ரீமத் பகவத்கீதை - சுவாமி சித்பவானந்தர் - விரிவுரை) சுவாமி சித்பவானந்தர் என்பவர் பகவத் கீதைக்கு விரிவுரை எழுதியுள்ளார். அவர் மேற்கண்ட விரிவுரையின் முகவுரையில் இவ்வாறு எழுதுகிறார், ‘பாஷ்யங்கள் (விரிவுரை) பல இருப்பதால் அவைகளுள் முரண்பாடு உண்டாவது இயல்பு. பகவத்கீதை ஒரு நிலைக் கண்ணாடி என்று வைத்துக் கொண்டால் ஒவ்வொரு பா´யமும் அதில் தோன்றும் பிம்பம் போன்றதாகும். அவரவர் முகம் எப்படியோ அப்படியே பிம்பமும் தென்படுகிறது’ .
கீதைக்கு மிகச் சிறப்பான உரைகண்டவர் என்று சொல்லப்படுகின்ற சித்பவானந்தரே மேற்கண்டவாறு தன்னுடைய முகவுரையில் எழுதுகிறாரென்றால் நாம் அவருடைய கீதை விரிவுரையைப் படித்தால் சித்பவானந்தர் பிம்பம்தானே தெரியும். பகவத்கீதை நிலைக்கண்ணாடி என்றால் கண்ணாடியின் உயரம், அகலம், அதனுடைய அடர்த்தி, அதன் மீது படிந்துள்ள தூசி, கண்ணாடியின் பின்புறம் பூசப்பட்டுள்ள இதள் கலவை (பாதரசம்) கண்ணாடி குவிந்துள்ளதா, குழிந்துள்ளதா, பிம்பத்தைச் சரியாக காட்டுகிறதா என்பது பற்றிக் கூறுவது தானே கண்ணாடியை ஆராய்வது என்பது. கண்ணாடியில் பிம்பம் தெரியாவிட்டாலோ, இயல்புக்கு மாறாகப் பருமனாகவோ அல்லது சுருங்கியோ பிம்பம் காணப்பட்டால் கண்ணாடி சரியில்லை என்று தூக்கி எறிந்துவிட்டு வேறு ஒரு நல்ல கண்ணாடியைத் தானே தேட வேண்டும். சித்பவானந்தர் போன்றவர்கள் கண்ணாடியல் பிம்பம் சரியாகத் தெரியாவிட்டால் கண்ணாடியை மாற்றுவதும் கிடையாது, பிம்பத்திற்குத் தக்கவாறு தங்களுடைய உருவத்தை நீட்டிக் கொள்வதோ அல்லது வெட்டிக் கொள்வதோ கிடையாது. இப்படிதான் பல கீதை உரையாசிரியர்கள் குழம்பிய கீதை என்ற குட்டையைத் தங்கள் விளக்கவுரையால் மேலும் கலக்கிக் குழப்புகிறார்கள்.
பகவான் அருச்சுனனுக்கு கீதை முழுவதும் உபதேசித்து விட்டுக் கடைசியாகக் கூறுகிறான், ‘தவமில்லானுக்கும். பக்தி இல்லாதவனுக்கும் தொண்டு புரியாதவனுக்கும், என்னை இகழ்பவருக்கும் இக்கோட்பாட்டை நீ இயம்பாதே’. (18-67)
மேற்கண்ட பகவானின் பாடலின் பொருள் வெளிப்படையாகத் தெரிகிறது. பகவானின் கருணை உள்ளம் எப்படி என்பது புரிகிறது. இதற்கு விளக்கம் வேண்டியதில்லை. இருந்தாலும் சித்பவனாந்தர் விரிவுரை எழுதுகிறார்,
‘வாழ்க்கைத் தத்துவங்கள் அனைத்தும் அடங்கப் பெற்றது பகவத்கீதை. அதை முறையாக எல்லாருக்கும் எடுத்து வழங்க வேண்டுமென்பதே பகவானது கருத்து. இந்த அறிவு பரவுமளவு வாழ்க்கை திருந்தி அமையும். ஆனால் இதை யாருக்கும் புகட்டலாகாது என்கிற எச்சரிக்கையை பகவான் பண்ணுகிறார். கண்ணில்லாதவற்குச் சித்திரம் பயன்படாதது போன்று தவம் அல்லது நெறியான வாழ்க்கையில்லாதவர்களுக்குக் கீதாபதேசம் பெரும் பயன் அளிக்காது’.
இப்பொழுது நாம் உரையாசிரியர் சித்பவானந்தர் பற்றியும் அவர் உரை பற்றியும் சிந்திக்க வேண்டியவை:
1. கீதையை எல்லாருக்கும் சொல்லக் கூடாது என்பதுதான் பகவானின் கருத்து. ஆனால் எல்லார்க்கும் எடுத்து வழங்கவேண்டுமென்பது பகவானது கருத்து என்று சித்பவானந்தர் கூறுவது பொருந்தாது.
2. பசியோடு இருப்பவனுக்குத்தான் சோறு கொடுக்க வேண்டும். நாள்தோறும் உண்டு கொழுத்திருக்கும் செல்வந்தனுக்குச் சோறு கொடுப்பதால் பெரும்பயன் விளையாது. தவமுடையவனுக்கும் பக்தியுள்ளவனுக்கும் கீதையால் பெரும் பயன் இல்லை. ஏனென்றால் அவன்தான் ஏற்கனவே தவமுடையவனாயிருக்கிறானே. தவமில்லாதவனுக்குக் கீதையைச் சொல்லக் கூடாது. அப்படியயன்றால் வாழ்க்கைத் தத்துவங்கள் அடங்கிய நூலால் யாருக்கும் பயனில்லை என்பதுதானே பொருளாகிறது.
3. கண்ணில்லாதவர்க்குச் சித்திரம் பயன்படாது என்கிறார் சித்பவானந்தர். ஏதோ சொல்ல வேண்டுமென்பதற்காக ஓர் உவமையைச் சொல்ல வேண்டுமா? கண்ணில்லாதவர்க்குச் சித்திரத்தை ஏன் கொடுக்க வேண்டும்? கண்ணில்லாதவர்க்கு மேடு பள்ளங்களைத் தட்டி உணர்ந்து செல்வதற்கு உதவியாக ஓர் ஊன்று கோலைக் கொடுக்கலாமே.
4. தவமில்லாதவருக்கும், பக்தியில்லாதவருக்கும் கீதையைப் புகட்டக் கூடாது என்று எச்சரிக்கை விடுகிறான் பகவான் என்று கூறுகிறார் சித்பவானந்தர். அவர் கீதைக்கு உரை எழுதி மலிவுப் பதிப்பில் ஆயிரக்கணக்கான புத்தகங்களை நாடு முழுவதும் வெளியிடுவது பகவானின் எச்சரிக்கையை மீறிய செயலாகுமே. தவமுடையவனையும், பக்தியுள்ளவனையும் பொறுக்கி எடுத்து அவர்களுக்கு மட்டும்தானே கீதையைப் புகட்ட வேண்டும்.
பகவான் கீதையின் ஐந்தாவது படலத்தில் பதினெட்டாவது பாடலாகக் கூறுவது,
‘கல்வியடக்கமுடைய பிராம்மணனிடத்தும், பசுவினிடத்தும், யானையிடத்தும், நாயினிடத்தும், நாயைத் தின்னம் கீழோனிடத்தும் ஞானிகள் சமதிருஷ்டியையே வைக்கின்றனர்’ . (5-18) இப்பாடலுக்குச் சித்பவானந்தர் கூறும் விளக்கம், ‘உலகத்தவர் காட்சியில் கல்வி அடக்கமுடைய பிராம்மணன் மக்களுள் மேலானவன், நாயையுண்பவன் கடைப்பட்டவன். மிருகங்களுன் பரிசுத்தமானது பசு. அதிசயிக்கத்தக்கது யானை. அருகில் வரத் தகுதியற்றது நாய். அஞ்ஞானிக்கு வேற்றுமையை உண்டுபண்ணும் இந்த உயிர் வகைகளையெல்லாம் ஞானி பிரம்ம சொரூபமாகவே காண்கின்றான். சமதிருஷ்டி என்பது சமமான பார்வை. வேற்றுமை பாராட்டாமல் எல்லாரையும் ஒன்றாகக் காண்பது. பகவானும் சரி, சித்பவானந்தரும் சரி இருவருமே கல்வியடக்கமுடைய பார்ப்பனனையும் அருகில் வரத் தகுதியற்ற நாயையும் ஒன்றாகப் பார்ப்பவர்களே ஞானிகள் என்று கூறிவிட்டார்கள். பின் ஏன் அவர்கள் கீதையைத் தவமில்லாதவனுக்கும், பக்தியில்லாதவனுக்கும் சொல்லக் கூடாது’ என்கிறார்கள்? அப்படியயன்றால் சமதிருஷ்டி இல்லாத பகவானும் சித்பவானந்தரும் ஞானிகளில்லையா? நாயை நாம் எப்படி மதிக்கிறோமோ அப்படியே கல்வியடக்கமுடைய பிராம்மணனையும் மதிக்க வேண்டுமென்று கீதையே கூறுகிறது என்று சனாதனதர்மத்தை வெறுப்பவர்கள் கூட கீதையை மேற்கோள்காட்டிப் பேசுவதற்கு கீதை வாய்ப்பைத் தருகிறது. கீதை நூலா சிரியனுடைய உண்மையான நெஞ்சைப் புரிந்துக் கொள்ளாமல் கீதையின் பாடல்களுக்கு சனாதன இந்துமதத்தின் உயிர் மூச்சாக விளங்கக் கூடிய வருணாசிரமக் கொள்கையை (பிறவியின் அடிப்படையிலேயே மனிதர்களிடையே உயர்வு தாழ்வு பாராட்டும் கொள்கை) ஏற்றி விளக்கமளிக்க இந்துத்வா பேசும் உரையாசிரியர்கள் அரும்பாடுபடுகிறார்கள். வருணாசிரமத்தைக் கட்டிக்காப்பதற்காக உரையாசிரியர்கள் காட்டும் ஆர்வமும் துடிப்பும் வருண தர்மத்தைப் படைத்த பகவானுக்கே இருக்குமா என்பது ஐயம்தான். கீழ்க்கண்ட கீதையின் இரண்டு பாடல்களுக்கு இரண்டு உரையாசிரியர்கள் அளிக்கும் விளக்கத்தைக் காண்பது நலம்.
மாம் ஹி பார்த்த வயபாச்ரித்ய யேபி ஸ்யு : பாபயோனய:
ஸ்த்ரியோ வைச்யாஸ்ததா சூத்ராஸ்தேபி யாந்தி பராம் கதிம்-IX‡32 கிம் புனர்ப்ராஹ்மணா : புண்யா பக்தாராஜர்யஸ்ததா அனித்யமசூகம் லோகமிமம் ப்ராப்ய பஜஸ்வ மாம் IX‡33
ஒருவருடைய சாதிப் பெயரைச் சொல்லி அவரை இழிவாகப் பேசுவது, சட்டப்படி குற்றம், தண்டனைக்குரிய குற்றம். மனிதர்களை இழிவாகப் பேசுகிறார் பகவான். பகவான் மீது வழக்கு தொடுக்க முடியாது. ஆனால் பகவானின் கீதைப் பாடல்களுக்கு விரிவுரை என்ற பெயரில் மனிதர்களில் ஒரு சில பிரிவினரை இழி பிறிப்பாளர்கள் என்று வசைபாடும் உரையாசிரியர்களை யார் தண்டிப்பது? மேற்கண்ட பாடல்களில் முதலாவது பாட்டில் ‘பாபயோனய’ என்ற கூட்டுச் சொல் வருகிறது. அதற்கு இரண்டு விதமான பொருள்களைக் கூறலாம்.
1. பாவ யோனியில் ஜனித்த அதாவது இழிபிறவியில் பிறந்த - பெயர் அடைமொழி - Adjளctivள 2. பாவ யோனியில் பிறந்தவர்கள் - இழிபிறவியில் பிறந்தவர்கள் - வினையாலணையும் பெயர்- Participlள Noun முதற்பாடலை சுவாமி சித்பவானந்தர் இவ்வாறு மொழி பெயர்க்கிறார். ‘பார்த்தா! (அருச்சுனனே) கீழான பிறவியாளர்களாகிய பெண் பாலர், வைசியர், சூத்திரர் ஆகியவரும் என்னைச் சார்ந்திருந்து நிச்சயமாகப் பரகதி (மேலான நிலையை) அடைகின்றனர்’ . 9-32.
சுவாமி சித்பவானந்தர் பாபயோனய என்ற சொல்லைப் பெயரடைமொழியாகப் பயன்படுத்துகிறார். சித்பவானந்தர் கூறும் விளக்கம் சுருக்கமாக இங்கே தரப்படுகிறது.
‘ஈண்டு இயம்பப் பெற்ற மூவரும் (பெண்கள், சூத்திரர், வைசியர்) கீழான பிறவியரே. எக்குலத்தில் பிறந்தவராயினும், இயல்பாக மாதர் உறுதியான உள்ளம் உடையர் அல்லர். பேதமையே பெண்டிரது இயல்பு. பொதுவாகப் பெண்மக்களைக் கீழான பிறவியர் என்பது இயற்கைக்கு ஒத்ததொரு சொல்லாகும். இழிச்சொல் அல்ல. அருளை நாடாது பொருளை நாடுவது வைசியர்கள் போக்கு. ஆகவே வைசியர்களும் கீழான பிறவியுடையவர்களாகக் கருதப்படுகின்றனர். அதிலும் கீழ்ப்பட்டவர் சூத்திரர். ஏனென்றால் பிறரிடத்து அடிமைத் தொழில் செய்தல் ஒன்றுதான் அவர்களுக்கு இயலும்’.
பெண்கள் எந்த சாதியில் பிறந்தவர்களேயென்றாலும், (அதாவது பார்ப்பனப் பெண்களானாலும் சத்திரிய, வைசிய, சூத்திரப் பெண்களானாலும) அவர்கள் கீழான பிறவியர் என்று சுவாமி சித்பவானந்தர் கூறுகிறார். பெண்ணின் வயிற்றிலிருந்துதானே அனைவரும் பிறக்கிறார்கள். அனைவரும் இழிபிறவிகளா? பார்ப்பனன் மட்டும் இன்னொரு பார்ப்பனனின் வயிற்றிலிருந்து பிறக்கிறானா? அல்லது வானத்திலிருந்து நேரே இங்கு குதிக்கிறானா? பொருள் சேர்ப்பது ஒரு குற்றமா? தேவைக்கு மேல் பொருள் சேர்ப்பவனை பேராசைச்ககாரன், திருடன், கயவன் என்று கூறலாமே தவிர கீழான பிறவியுடையவன் என்று எப்படிக் கூறமுடியும்?. அரசு நிறுவனங்களிலும், தனியார் நிறுவனங்களிலும் வேலை பார்க்கிறவர்கள் அனைவரும் இழிபிறவிகளா? மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்று கூறுகிற பெண்கள் கீதையைத் தெய்வநூல் என்று நம்பலாமா?
அடுத்து ஸ்ரீ ஜயதயால் கோயந்தகா என்ற உரையாசிரியர்கள் விளக்கத்தைக் காணலாம். சித்பவானந்தர் உரைநூல் அரை கிலோ என்றால் கோயந்தககாவின் உரைநூல் ஒரு கிலோ எடை இருக்கும். அவ்வளவு பெரிய விளக்கவுரை மேற்காட்டிய (IX‡32) பாடலை கோயந்தகா இவ்வாறு மொழி பெயர்க்கிறார்,
‘ஏனெனில் அர்ஜுனா! பெண்கள், வைசியர்கள், நான்காம் வர்ணத்தவர்கள் அவ்வாறே சண்டாளர் முதலிய இழிந்த பிறவி அடைந்தவர்கள் எவர்களாக இருந்தாலும், அவர்களும் என்னையே தஞ்சமடைந்து மேலான பெரும்பேறான மோசத்தை அடைகிறார்கள்’ . IX‡32) கோயந்தகா ‘பாபனோய’ என்ற சொல்லை வினையாலணையும் பெயராகக் கொண்டு பாபயோனய என்பதற்கு சண்டாளர் முதலிய இழிந்த பிறவி அடைந்தவர்கள் என்று பொருள் கூறுகிறார். சித்பவானந்தர் பெண்கள், வைசியர், சூத்திரர் ஆகிய மூவருக்குமே பாபயோனய என்ற அடைமொழியைக் கொடுத்தார். கோயந்தகாவோ இன்னும் ஒருபடி முன்னால் சென்று சண்டாளர்களும், பெண்களும், வைசியர்களும், சூத்திரர்களும் (நான்காம் வருணத்தாரும்) என்று கூறி (பகவான் படைத்ததோ நான்கு வர்ணம்தான்) சண்டாளர்கள் (பாபயோனய) என்ற ஐந்தாம் வர்ணத்தை இவரே உண்டாக்கி மகிழ்கிறார்.
(
கோயந்தகா விளக்கவுரையில் கூறுகிறார், ‘பாவப்பிறவி என்ற அடைமொழி ஸ்திரீ, வைசியர், நான்காம் வர்ணத்தவர் என்ற சொற்களுக்கு அடைமொழி ஆகாது. கீழ்பிறவியாளர்கçளயே (சண்டாளர்களையே) குறிக்கும். இப்படி பொருள் கொள்வதுதான் உசிதம்’ .
உரையாசிரியர் கோயந்தகா ஒரு வைசியன். அதனால்தான் பாபயோனய என்ற அடைமொழி தன்னுடைய சாதிக்கு வந்துவிடக் கூடாது என்று மிகவும் திறமையோடு உரை எழுதுகிறார். பகவானுடைய திருவாயினின்றும் வெளிவந்த தெய்விகத் தத்துவங்கள் நிறைந்த அமுதமொழியாம் கீதைக்கு ஆயிரத்து இருபது பக்கங்களுக்கு மேல் விளக்கவுரை எழுதிய கோயந்தகாவுக்கே வைசிய சாதிப்பித்து ஒழியவில்லை என்றால் என்ன பொருள்? மனிதர்களிடையே சாதிவெறியைத் தூண்டுகிறது என்பதுதானே பொருள்.
கோயந்தகா தன்னுடைய கீதையின் உரைநூலின் (தத்வ விவேசனி) முன்னுரையில் இவ்வாறு எழுதுகிறார், ‘பிறப்பினால் நான் வைசியன், கல்வி, அறிவு என்ற நோக்கிலும் நான் மிகவும் தகுதியற்றவன். எல்லாரும் மதித்துப் போற்றுகின்ற கீதை என்ற மஹத்தான நூலுக்கு உரையயழுத நான் தகுதியற்றவன்தான்’ . தகுதியற்றவன் ஆயிரம் பக்கம் உரை எழுதினால் தகுதியுள்ளவன் எத்தனை ஆயிரம் பக்கம் உரை எழுதுவான்?
தகுதியற்றவன் என்று தன்னைச் சொல்லிக் கொள்கிற கோயந்தகா பாபயோனய என்ற சொல்லுக்குக் கூறும் விளக்கத்தைப் பாருங்கள்,
‘முற்பிறவிப் பாவங்களின் காரணமாகச் சண்டாளர் முதலிய குடிகளில் பிறந்தவர்கப் பாபயோனிகள் என்று சொல்கிறார் (பகவான்) இவர்களைத் தவிர சாஸ்திரங்களின் படி ஹீணர்கள், வேடர்கள், மலைஜாதியினர், மிலேச்சர்கள் முதலானவர்களும் இவ்வகையைச் சேர்ந்தவர்களே! இங்கு அந்தச் சொல் இவர்கள் எல்லோரையும் குறிப்பிடும்’ . எத்தகைய நஞ்சினும் கொடிய சொற்களை உரையயென்ற பெயரிலே அள்ளி வீசுகிறார் கோயந்தகா.
அடுத்த பாடலுக்கு பொருள் இவ்வாறு கூறுகிறார், ‘அங்ஙனமிருக்க (பெண்களும் ..... சண்டாளர்களும் கூட மோட்சத்தை அடைகிறார்கள் என்றால்) புனிதமான இயல்பு வாய்ந்த ப்ராம்மணர்கள், அவ்வாறே ராஜரி´கள் ஆகிய பக்தர்கள் என்னைச் சரணடைந்து பரமகதி அடைகிறார்கள் என்பதில் சொல்வதற்கு என்ன உள்ளது. ’ இந்தப் பாடலில் பார்ப்பனனுக்கு முன்னால் (புண்யா) புனித இயல்பு வாய்ந்த என்ற அடைமொழியைப் போடுகிறார் கோயந்தகா . இதுதானே ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்பது.
பகவத்கீதைக்கு உரையயழுதியவர் பலர். பகவத்கீதை சமஸ்கிருத மொழியிலே எழுதப்பட்டது. அதற்கு சமஸ்கிருதத்திலேயே பலர் பாஷ்யம் (வியாக்யாணம் விரிவுரை) எழுதியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. சமஸ்கிருதம் பேச்சுவழக்கில் இல்லாத காரணத்தால் இப்பொழுது பலர் கீதையின் பாடலை ஆங்கிலத்லோ, தமிழிலோ அல்லது பேச்சுவழக்கிலும், இலக்கிய வழக்கிலும் இருக்கின்ற மொழிகளில் மொழி பெயர்க்கின்றனர். உரையாசிரியர்களோ, விரிவுரை செய்பவர்களோ (வியாக்கியானம்) தங்கள் கருத்தை கீதைக்கு ஏற்றியோ அல்லது கீதையின் கருத்துக்குத் தக்கவாறு எழுதுவாரகள். ஆனால் மொழிபெயர்ப்பாளர்கள் கீதையில் சொன்ன கருத்துக்களை அப்படியே பிறமொழிகளில் கருத்து மாறுபடாமல் மொழி .பெயர்க்க வேண்டும். இது கீதைக்கு மட்டுமல்ல, எல்லா நூல்களுக்கு மேதான். ஆனால் கீதைப்பற்றாளர்கள் கீதையைப் பிறமொழிகளில் மொழிபெயர்க்கும் போது நேர்மையைக் கடைப்பிடிப்பதில்லை. இவர்கள் பன்மொழிப் புலமையில் குறைந்தவர்கள் அல்லர். சமஸ்கிருதம் தெரியாதவர்கள் இப்படிப்பட்ட மொழிபெயர்ப்பாளர்களைத் தான் நம்ப வேண்டியிருக்கிறது. நேர்மையான, சரியான முறையில் கீதையை மொழிபெயர்த்தால் கீதையின் உண்மைநிலை புலப்பட்டுவிடும் என்ற அச்சத்தில்தான் மூலத்தின் பொருளை மாற்றி மொழிபெயர்க்கின்றார்கள்.