எங்கே விலாசம்...?

39 views
Skip to first unread message

Kannan Natarajan

unread,
Feb 7, 2009, 4:15:14 PM2/7/09
to Min Thamizh
உலகில் தோன்றிய மிகப் பழமையான மொழிகள் பல காலப்போக்கில் உலக வழக்கு மற்றும் இலக்கிய வழக்கை இழந்து பெயரளவோடு அறியப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டன. ஆனால் "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த தமிழ்" பழங்காலத்தில் இருந்தே சீரிளமை குன்றாமல் சிறப்புற்று நிற்பதற்குக் காரணம், அதிலுள்ள இலக்கியங்களே ஆகும். இவ்விலக்கியங்களை;
  • சிற்றிலக்கியம்
  • பேரிலக்கியம்
என்று பிரித்தனர்.

"பிரபந்தங்கள்" என்னும் வட சொல்லால் குறிக்கப்படும் சிற்றிலக்கியங்கள் தமிழில் தொண்ணூற்று ஆறு வகைப்படும் என்ற கருத்து நிலவுகிறது.

"பிள்ளைக் கவிமுதல் புராணம் ஈறாகத்
 தொண்ணூற் றானெனும் தொகைய தான."

என்று பிரபந்த மரபியல் நூற்பா கூறுகிறது.

மொத்தப் பிரபந்தங்கள் தொண்ணூற்று ஆறெனக் குறிப்பிட்டாலும், எழுபத்திரண்டு பிரபந்தங்களின் பெயர்களே நாம் காணக் கிடைக்கிறது.


  • அந்தாதி
  • பிள்ளைத்தமிழ்
  • கலம்பகம்
  • பரணி
  • உலா
  • தூது வரிசையில் விலாசமும் ஓர் சிற்றிலக்கியம்.
சில நல்ல இலக்கியங்கள் அறிமுகம் இல்லாமையால் அவற்றின் சிறப்பை பலரும் அறிய முடியாமல் போய்விடுவதுண்டு. அவ்வரிசையில் உள்ள சிற்றிலக்கியம் தான் "விலாசம்".

விலாசம் என்ற இலக்கிய வகையைச்
  • சதுரகராதி
  • பொருட்டொகை நிகண்டு
போன்றவை அன்றிப் பிற பிரபந்தத் தொகைகள் குறிப்பிடவில்லை.

96 வகைப் பிரபந்தங்களில் விலாசமும் ஒன்று என்பதை அறிஞர் பெருமக்கள் பலர் ஏற்றுக் கொண்டுள்ளனர். மற்ற பிரபந்தங்களுக்கு வரையறுக்கப்பட்ட இலக்கணங்கள் விலாச இலக்கியங்களுக்குக் கூறப்படவில்லை.

"விலாசம்" என்ற சொல்லுக்கு,
  • அழகு
  • ஆடவர் மகளிர் விளையாட்டு
  • நாணக் குறிப்பு
  • பத்திரிகையின் புறவெழுத்து
  • பொழுதுபோக்கு
  • விளையாட்டு
  • வினோதம்
  • வேடிக்கை
  • கூச்சம்
  • நாடகநூல்
  • சுகானுபவத்திற்குரிய இடம்
  • முகவரி
  • வியாபாரக்குறி
  • வாழை
  • தீபம்
ஆகிய பொருள்களைத் தருவதாக கழகத் தமிழகராதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அகராதியில் காணப்படும் பொருள்களில் பலவற்றை விளக்கும் விதத்தில் விலாசங்கள் அமைந்திருப்பது புலப்படும்.

இன்றைக்குள்ள விலாசங்கள் 17,18,19ம் நூற்றாண்டுகளில் தோன்றியவை. 16ம் நூற்றாண்டிலும் சில விலாச நூல்கள் தோன்றியுள்ளதாகத் தெரிய வருகிறது. 1950ல் பதிப்பிக்கப்பட்ட "சங்கர விலாசம்" என்ற நூலின் பதிப்புரையில், 350 ஆண்டுகளுக்கு முன்னர் அது எழுதப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட ஒரு தலைவன் அல்லது தலைவியின் புகழைச் சிறப்பித்துப் பேசும் நாடகம் விலாசம் எனப்பட்டது.
  • அரிச்சந்திர விலாசம்
  • மோகனாங்கி விலாசம்
என்பவை அவ்வாறு பெயர் பெற்றவை. பிற நாடகங்கள் மறைந்து போனதைப் போன்று விலாசங்கள் மறையாமைக்குக் காரணம், தனிமனித வழிபாடும், கதைச் சுவையும், கற்பனை நயங்களுமேயாகும்.

விலாச இலக்கியங்களைத் தனிவகை இலக்கியங்களாகக் கருதாமல் பிற சிற்றிலக்கியங்களுக்கு உள்ளேயே அடக்கிக் காணும் போக்கையும் காணமுடிகிறது.
  • கோவை
  • பள்ளு
  • உலா
  • குறவஞ்சி
  • தூது
போன்ற இலக்கியத்திற்குள் விலாசங்கள் அடங்கும் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது.
  • யாப்பமைதியிலும்
  • பாத்திரப்படைப்பு
  • நிகழ்ச்சியமைப்பு
போன்றவற்றாலும் அப்பிரபந்தகளினின்றும் இவ்விலாச இலக்கியங்கள் வேறுபடுவதால் இவை அவற்றிலிருந்தும் வேறுபட்ட தன்மையுடையதாக இருக்கிறது.

பிற சிற்றிலக்கிய நூல்களில் காணமுடியாத அளவிற்குச்
  • சிலேடை நயங்களும்
  • மடக்கு
  • திரிபு
போன்ற அணி நயங்களிலும், சிந்தை கவர்கின்ற பல்வேறு வகைச் சந்தங்களும் விலாச இலக்கியங்களின் சிறப்பை விளக்குகின்றன.

வடமொழியில் விலாசங்கள் என்ற பெயரில் சில நாடகங்கள் உள்ளன. மேல்நாட்டு நாடக முறைகளைப் பின்பற்றி அங்கம், களம் போன்ற அமைப்புகளுடன், பல்வேறு வகையான இசைப் பாடல்களையும், விருத்தங்களையும் இடையிடையே வசனங்களையும் பெற்று அமைந்த விலாசங்களும் உண்டு.

சில விலாசங்களைப் படைத்த ஆசிரியர்களே தங்களது நூல்களை, நாடகங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர். விலாச இலக்கியங்களை, அவை உணர்த்தும் கருத்தின் அடிப்படையிலும், உணர்த்தக் கையாளும் யாப்பின் அடிப்படையிலும் வகைப்படுத்தலாம். புராண, இதிகாச நிகழ்ச்சிகளைச் கருவாக அமைத்துத் தத்தம் மதக் கருத்துகளைக் கூறுவதற்காக எழுதப்பட்ட விலாசங்கள்;
  • மாணிக்கவாசக சுவாமிகள் விலாசம்
  • திருஞானசம்பந்தர் பூம்பாவை விலாசம்
போன்ற நாயன்மார்களின் பெருமைகளைக் கூறிச்
  • சமுதாயச் சீர்கேடுகளைச் சாடும்
  • இறைவன் புகழ் பாடும்
  • தனி மனிதர்
  • உலகின் தன்மைகள்
  • அமைப்புகள்
முதலியவற்றை விளக்கும் விலாசங்களாக இவற்றைக் கருத்தின் அடிப்படையில் வகைப்படுத்தலாம்.

ஒவ்வொரு சிற்றிலக்கியத்திற்கும் தனித்தனிக் கட்டுக்கோப்புகள் உண்டு. அக்கட்டுக்கோப்புகளுக்குள் அடங்காத புது மரபை உடையவையே விலாச இலக்கியங்கள்.

1877ல் திண்டிவனம் இராமசாமி இராசு என்பவர் "பிரதாப சந்திர விலாசம்" என்னும் சமூக நாடகத்தைக் கவிதை, உரைநடை கலந்து அங்கக்களப் பிரிவுகளுடன் எழுதிய விலாசம், தமிழ் நாடக உலகில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1857ல் காசிவிசுவநாத முதலியார் இயற்றிய "டம்பாச்சாரி விலாசம்" 19ம் நூற்றாண்டின் தலைசிறந்த நாடகமாக விளங்குகிறது. பாத்திரப் படைப்பைப் பொருத்தமட்டில், பாத்திரங்களை அறிமுகம் செய்து, பண்புகூட்டி, உறுதிப்படுத்தி நிறைவாக முழுமையாக்கிக் காட்டுதல் வேண்டும் என்பர். அத்தகைய பாங்கினைப் பல விலாச நூல்களில் காணலாம்.

விலாச இலக்கியங்களைப் படைத்தவர்கள் அனைவரும் தாம் எதற்காகப் படைக்கிறோம்; அதனால் என்ன பயன் ஏற்படவேண்டும் என்பதை மிகத் தெளிவாக எழுதி வைத்துள்ளனர். தீயவழியில் சென்று துன்பப்படுபவர் திருந்த வேண்டுமென்ற நோக்கத்தில், பிரதாப சந்திர விலாசத்தின் முன்னுரையில்,

"அந்தோ! வேசையர் முதலிய மாதர்களோடும், ஒயின், பிராந்தி முதலிய சாராய வர்க்கங்களோடும் தம் வாழ்நாளை நமனார்க்குக் கொள்ளை கொடுக்கும் துரதிஷ்டப் பிராணிகளின் தொகை எண்ணி முடியுமோ? ஆகையால் என் சக்தி புத்திகளுக்குத் தக்கபடி யான் லோகோபகாரமாக நினைத்து இயற்றிய இந்த நூலை நடுவுநிலையுற்ற மேலோர் நன்கு மதிக்கின், அது யான் இயற்றும் விசயத்தில் செய்த முயற்சிக்கு ஓர் பயனாம்,"என்று விளக்குகிறார்.

தனிப்பட்ட எந்த அரசனையோ, மதவாதியையோ மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பதற்காக எந்த விலாசமும் பாடப்பட்டதாகத் தெரியவில்லை. அப்படிப்பாடப்பட்ட விலாசங்கள் கூட, உலகிற்குத் தேவையான கருத்துகளையும், உண்மைகளையுமே எடுத்துக் கூறியுள்ளன.

"நாட்டை ஆளும் ஒருவன் கேட்டை விளைவிப்பவனாக இருந்த போதிலும் எத்தனைபேர் அவனை எதிர்க்கத் துணிகின்றனர். பெரும்பாலும் ஆளுவோர்க்கு அடங்கி நடந்து அதன் மூலம் தாம் நினைப்பதைச் சாதித்துக் கொள்வதுதான் பொதுவாக மக்களின் மனநிலையாக இருக்கிறது. தமக்கு சரியென்று எது பட்டதோ அதை மட்டுமே துணிந்து செய்வோரும், மனத்துணிவு உடையோராகவும் காட்டப்படும் "அப்பர் பர்மா யுத்த விலாசம்" என்னும் நூலின் முன்னுரையில், கொடிய அரசன் ஒருவன் நாட்டை ஆள்வதைக் காட்டிலும் ஆங்கிலேயர் அதை ஆள்வதே சிறந்தது. இனியும் அவ்வரசன் செய்துவந்த எல்லா வனியாயத்தையும் எழுதி முடிக்க வேண்டுமானால் இச்சரித்திரம் நீளும்," என்று சுருங்கக் கூறி விளங்க வைத்துள்ளார் ஆசிரியர்.


  • சாதிக் கொடுமை
  • வறுமையின் கொடூரம்
  • பரத்தையின் இழிவு
  • அமைச்சனின் இயல்பு
  • அரசியல் கடமை
என உயர்ந்த பல சமுதாயக் கருத்துகளை, இன்றைய உலகிற்குப் பயன்படும் வகையில் அன்றே எடுத்தியம்பும் இவ்விலக்கியங்களைக் காட்டிலும் தகுதியில் குறைந்த பல இலக்கியங்கள் நாட்டில் வலம்வரும் போது இவை ஏன் திரைமறைவில் உள்ளன?

எங்கே அந்த விலாசங்கள்...?

இடைமருதூர் கி.மஞ்சுளா

நன்றி: தமிழ்மணி (தினமணி)
Reply all
Reply to author
Forward
0 new messages