SUN IN MATHEMATICS

0 views
Skip to first unread message

Pandiyaraja

unread,
6:29 AM (2 hours ago) 6:29 AM
to மின்தமிழ்

நான் அமெரிக்கன் கல்லூரியில் மூன்றாண்டுகள் B.Sc கணிதம் படித்து (1959-1962), அப்போது அங்கு M.Sc கணிதம் இல்லாததால், மதுரைக்கல்லூரியில் அதனை முடித்தேன். (1962-1964). அப்போது அமெரிக்கன் கல்லூரியில் Tutor in Mathematics என்ற பதவி காலியாக இருந்தது. அதற்கு விண்ணப்பித்து, தேர்வுசெய்யப்பட்டு, 1964 ஜூலை 1-ஆம் நாள் அங்கு அப்பணியினில் சேர்ந்தேன். எனவே, எனக்கு ஆசிரியர்களாக இருந்த அனைவரும் என் உடனாசிரியர்கள் ஆனார்கள். நான் அவர்களின் மாணவன் என்பதனால் என்னை மிகவும் அன்புடன் நடத்தினார்கள்.

நான் பணியில் சேர்ந்தபோது துறைத்தலைவராக இருந்தவர் Pro.T.Natarajan. சற்று அதிகார தோரணையுள்ளவர். நான் சேர்ந்த மூன்றாண்டுகளில் அவர் ஓய்வுபெற்றார். அவரை அடுத்த துறைத்தலைவர் Prof.B.Gunaraj. என் மீது தனியான பரிவும் பாசமும் கொண்டவர். அவரை அடுத்து வந்தவருக்கும் எனக்கும் சற்று கருத்து மாறுபாடு வந்தது. வெளிப்படையாக இல்லாவிட்டாலும் பனிப்போர் அவ்வப்போது நிகழும்.

ஒருநாள் எங்கள் துறையின் ஆசிரியர் அறைக்கு Prof.V.Srinivasan வந்தார், அவர் இயற்பியல்துறைத் தலைவர் (Physics UG Head). எங்கள் துறைத்தலைவர் (து.த) மேஜைக்கு எதிரில் அமர்ந்தார். அவருக்கும் எங்கள் து.த-வுக்கும் நடந்த உரையாடல் இப்படிப்போனது.

”யோ, Physics department சார்பா ஒரு inter departmental symposium வைக்கலாம்னு நினைக்கிறேன்”

”அப்படியா? என்ன தலைப்பு?”

”சன்”

“சன்னுன்னா சூரியனா, உம்ம மகனா?” (வெடிச்சிரிப்பு)

“S – U – N, SUN”

“சூரியனப்பத்தி என்னய்யா inter departmental symposium?”

”அதாவது: SUN IN TAMIL LITERATURE, SUN IN ENGLISH LITERATURE, SUN IN ECONOMICS, SUN IN COMMERCE, SUN IN MATHEMATICS, SUN IN PHYSICS, SUN IN CHEMISTRY, SUN IN BOTANY, SUN IN ZOOLOGY”. ஒவ்வொரு department – இல இருந்தும் ஒரு ஆள் பேசணும். ஒவ்வொருத்தருக்கும் 10 நிமிஷம். MATHS சார்புல நீர் பேசும்”

என் து.த உடனே ஒத்துக்கொள்ளவில்லை. அவர் கேட்டார் : SUN IN TAMIL LITERATURE, SUN IN ENGLISH LITERATURE யார் பேசுறது?

அவர் இரண்டு பெயர்களைச் சொன்னார்.

இவர்: ”ஏன்யா, இவங்க பேசுனதுக்கு அப்புறம் நான் கணக்கப்பத்திப் பேசுனா யார்யா கேப்பா?”

அவர் சொன்னார்: ”SUN IN ENGLISH LITERATURE முதல்ல, SUN IN TAMIL LITERATURE கடைசியில. இடையில மத்தவங்க”.

இவர் ஒத்துக்கொள்ளவில்லை. ”SUN IN ENGLISH LITERATURE பேசுறவரு ரொம்ப நல்லாப் பேசுவாரு. அதுக்கப்புறம் யார் பேச்சும் எடுபடாது, அதனால என்னய முதல்ல போடும்”.

அவர் ஒத்துக்கொள்ளவில்லை. ”SUN IN ENGLISH LITERATURE பேசுறவருகிட்ட நீங்கதான் முதல்லன்னு சொல்லிட்டேன். நீரு ரெண்டாவதாகப் பேசும்”

“இல்ல என்னால முடியாது. முதல்லன்னாத்தான் பேசுவேன்”

Physics department து.த நிமிர்ந்தவர். டக்கென்று கேட்டார்.

“அப்ப நீர் வரல்லன்னா, ஒங்க department –ல வேற யார்கிட்டயும் கேக்கலாமா?”

எங்கள் து.த முகம் சுருங்கிவிட்டது. இருப்பினும் ”சரி, கேட்டுப்பாரும்” என்றார்.

 Physics department து.த என்னைப் பார்த்துக் கேட்டார், “பாண்டி, நீ பேசுறயா?”

அவர் என்னிடம் மிகவும் நெருங்கிப் பழகுகிறவர். என்னைப் ’பாண்டி’ என்று அழைக்கும் வெகு சிலரில் அவரும் ஒருவர்.

“சரி VS, நான் பேசுறேன்”

எங்கள் து.த-வுக்கு முகம் மேலும் சுருங்கிவிட்டது. என்னைப் பார்த்துச் சொன்னார்: “இன்னார், இன்னாரெல்லாம் பேசும்போது நீர் பேசுவது எடுபடுமான்னு யோசிச்சுச் சொல்லும்”

“சார், யார் பேசுனாலும் எனக்கு அதப்பத்தி கவலயில்ல.”

அவர் விடவில்லை.

“ஆமா, SUN IN MATHEMATICS –ன்னா அங்க போயி Equation derive பண்ணப்போறீரா?” (வெடிச்சிரிப்பு)

நான் ஒன்றும் சொல்லவில்லை.

அவரும் விடவில்லை.

“என்ன பேசணும்னு ஏதாவது ஐடியா இருக்கா?”

”இருக்கு சார். நான் பேசப்போறது : SUN’S MOTION”

”SUN’S MOTION – ஆ, SUN எங்கயா நகருது?” (வெடிச்சிரிப்பு)

நான் சொன்னேன் : SUN’S APPARENT MOTION

அவர்: SUN’S APPARENT MOTION – ன்னா? காலையில கிழக்க உதிச்சு, சாயந்திரம் மேற்க செட் ஆகிறதப் பத்தி பத்து நிமிஷம் பேசப்போறீரா?” (வெடிச்சிரிப்பு)

VS எழுந்துவிட்டார்.

“சரி, பாண்டி. பிரின்சிபல்தான் தலைமை தாங்குறார். தேதிய அப்புறம் சொல்றேன்”

குறிப்பிட்ட தேதியில், Binghampton Hall – இல் B1 அறையில் கூட்டம் நடந்தது. அறை நிரம்பி வழிந்தது. முதல்வர் எம்.ஏ.தங்கராஜ் தலைமை வகித்தார். அவருக்கு எதிரில் முன் வரிசையில் பேச்சாளர்கள் அமர்ந்திருந்தோம்.

தலைவரின் முன்னுரைக்குப் பின், SUN IN ENGLISH LITERATURE பற்றி JV பேசினார். மிகச் சிறந்த பேச்சாளர். கூட்டத்தை ரொம்பவே கவர்ந்துவிட்டார். அடுத்து வந்த பொருளியல், வணிகம் சார்ந்த துறையினர் ஏராளமான புள்ளிவிவரங்களுடன் சிறப்புடன் பேசினாலும் மாணவர்கள் ரசிக்கவில்லை. எல்லாப் பேச்சுகளும் ஆங்கிலத்தில்தான் இருந்தன.

அடுத்து SUN IN MATHEMATICS . என் பெயர் அழைக்கப்பட, நான் எழுந்தேன். எங்கிருந்தோ வேகமாக VS என்னிடம் வந்தார். என் காதுக்குள் கிசுகிசுத்தார்.

“பாண்டி, தமிழ்ல பேசு”

எனக்கு ‘குப்’பென்று வியர்த்தது. கல்லூரியில் வகுப்புகளில் ஆங்கிலத்தில் பேசித்தான் பழக்கம். இந்தப் பேச்சுக்கும், அப்படித்தான் நான் என்னைத் தயார்செய்திருந்தேன்.

மெதுவாக நடந்து, எனக்குரிய பேச்சுமேடையை இரு கைகளாலும் பற்றிக்கொண்டு சில நொடிகள் யோசித்தேன். தமிழா? ஆங்கிலமா?

அந்த அறையின் அமைப்பு Gallery போன்றது. அடுக்கடுக்காக, பின் வரிசைகள் உயர உயரமாக இருக்கும். கடைசி வரிசை ஏறக்குறைய பத்தடி உயரத்தில் இருக்கும். கழுத்தை உயர்த்தி, முன் வரிசையிலிருந்து , கடைசி மேல் வரிசை வரை உள்ள மாணவர்களை ஆழமாக ஒருமுறை பார்த்தேன். ஒரே அமைதி. நான் ஆரம்பித்தேன்:

“நமக்கெல்லாம் தெரியும்”

வெடிச்சத்தத்துடன் பீறிட்டுக் கிளம்பிய கைதட்டலால் அந்த அறையே அதிர்ந்தது.

அடுத்த 10 நிமிடங்களில், சூரியனின் மூன்றுவிதமான தோற்ற இயக்கங்களைப் பற்றியும், அவற்றை நாம் எவ்வாறு நம் அன்றாட வாழ்வில் காணலாம் – உணரலாம் என்பதைப் பற்றியும் பேசி முடித்தேன். முடித்த பின் எழுந்த கைதட்டல் ஓய சில மணித்துளிகள் ஆயின.

பின்னர், மற்ற துறையினர் பேச்சுக்களுக்குப் பின் தமிழ்த்துறைப் பேச்சும் எதிர்பார்த்ததைப் போல் பலத்த கரவொலிகளுடன் நடந்தது.

இறுதியில் பேசிய கல்லூரி முதல்வர், ஒவ்வொரு துறையினர் பேச்சைப்பற்றியும் பாராட்டிப்பேசினார். ஆனால் கணிதத்துக்கு மட்டும் அவர் சில மணித்துளிகள் அதிகமாகவே பேசும்போது மீண்டும் எழுந்த கரவொலி தமிழுக்கா, கணிதத்துக்கா? தமிழில் கணிதத்துக்கு.

ப.பாண்டியராஜா

 

 

 

Reply all
Reply to author
Forward
0 new messages