சிறுமைப் பண்புகளில் இருந்து விலகி இரு!
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும். (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௫௰௧ – 451)
பெருமைப்பண்பு சிற்றினத்தைக் கண்டு அஞ்சும்; சிறுமைப்பண்பு சிற்றினத்தையே சுற்றமாகக் கொள்ளும்.
பதவுரை: சிற்றினம்-சிறுமைக் குணத்தை ; அஞ்சும்-அஞ்சி ஒதுங்கும்; பெருமை-பெருமைப் பண்பு; சிறுமைதான்-சிறுமைப்பண்பு ; சுற்றமா-சிறுமைக் குணத்தையே உறவாக; சூழ்ந்துவிடும்-சூழவும் பிணைத்துக் கொள்ளும்.
பெருமை என்பதற்குப் பெருமைப்பண்பு உடைய பெரியோர் என்றும் சிறுமை என்பதற்குச் சிறுமைக் குணம் உடைய சிறியோர் என்றும் அனைவரும் விளக்குகின்றனர்.
“தீயனைக் கண்டால் தூர விலகு” என்பர். எனவே, சிறுமைக் குணம் உடைய தீயவனைக் கண்டு ஒதுங்க வேண்டும் எனவே, பெருமைப் பண்புடையோர் கருதுவர். பெரியோர் என்று கருதாமல் பெருமைப் பண்பு உடைய யாரும் அவ்வாறுதான் நடந்து கொள்வர் எனக் கருத வேண்டும். எனவேதான் பெரியோர் என்று சொல்லாமல் பெருமைப்பண்பு எனக் கருத வேண்டும். அதைப்போல்தான் சிறியோர் என்று கருதாமல் சிறுமைப்பண்பு எனக் கருத வேண்டும். அதனாலதான் தெய்வப்புலவர் திருவள்ளுவர் பெரியோர், சிறியோர் என்று கூறாமல் பண்பின் அடிப்படையில் பெருமை, சிறுமை எனக் கூறியுள்ளார்.
“இனத்தோடே இனம்சேரும்” என்கிறார் சொக்கநாதப் புலவர்
அல்லி பெற்ற பிள்ளை(1959) என்னும் திரைப்படத்தில் பாடலாசிரியர் அ. மருதகாசி
“எசமான் பெற்ற செல்வமே!” எனத் தொடங்கும் பாடலில்
“தீயவரோடு நீ சேராதே நம்பி!“
என எழுதியிருப்பார்.
“இனத்தை இனம் சேரும்”
“இனத்தை இனம் தழுவும்”
“இனம் இனத்தோடே”
“இனம் இனத்தோடு சேரும்”
என்பன பழமொழிகள்.
நாம், நல்லோரை அறிந்து நல்லோர் கூட்டத்தில் சேர வேண்டுமே தவிர, தீய இனத்தவருடன் சேரக் கூடாது. எனவேதான் உலகநாதரும் உலகநீதியில்,
“வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டா”
என்கிறார். சிறுமைப்பண்பினர்தானே வஞ்சனைகள் செய்வர்.
சிற்றினச் சேர்க்கையால் தீயனவே விளையும் என்பதால்தான், பெருமைப் பண்பினரும் பெரியோரும் சிறியவரோடு பழக அஞ்சுவர்; கீழ்மக்களின் கூட்டத்தோடு சேர மாட்டார்கள். ஆனால், சிறியோர்களோ இனம் இனத்தோடு சேருமென்பதுபோல் அந்தக் கீழ் மக்கள் கூட்டத்துடன் சேர்ந்து கொள்வார்கள்.
சிறுமைப் பண்புகளினால் நாம் ஈர்க்கப்படாமல் இருக்க வேண்டுமானால், நாம் பெருமைப் பண்புகளுடன் திகழ வேண்டும். அப்போதுதான் சிறியாரோடு சேராமல் இருக்க முடியும்.
எனவே, சிறுமைப் பண்புகளில் இருந்து விலகி இருப்போம்!
– இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 781-785 தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 786-790
கிண்ண வெதுப்பம்(muffin) குறித்த வரம்பற்ற பேரச்சம் கிண்ண வெதுப்ப வெருளி.
உணவு வெருளி(Cibophobia) உள்ளவர்களுக்குக் கிண்ண வெதுப்ப வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
கிண்ணவெதுப்பன்(The Muffin Man) மழலைப்பாடல்களை அடிப்படையாகக் கொண்ட திகில் தொடரில் எதிராளராக வருபவன். சிலர் இதனை அதனடிப்படையில் கிண்ண வெதுப்பன் வெருளி என்கின்றனர்.
கிலி வெருளி உள்ளவர்களுக்குக் கிண்ண வெதுப்பன் வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
00
கிராண்டு தாம்பசன்(Grant Thompson)என்னும் இளைஞர் மீதான அளவுகடந்த பேரச்சம் கிராண்டு தாம்பசன் வெருளி.
நேர்ப்பு மன்னர் வெருளி(The King of Random-TKOR) என்னும் நம் ஒளியலை(You Tube) எனப்படும் காணொளிக் குழல் தளப்பதிவைக் கிராண்டு தாம்பசன்(Grant Thompson)என்னும் இளைஞர் உருவாக்கினார்.(இவர் 2019இல் காலமானார்.)
நம் ஒளியலையைச் சிலர் வலை ஒளி என்கிறனர். இது பொதுவான சொல்லாக உள்ளதாலும் மக்களின் பதிதல், பகிர்தல் முதலான அனைத்துவகைப் பயன்பாட்டிற்குமான காணொளித்தளம் என்பதாலும் நேர் பொருளாக உம் ஒளியலை எனக் குறிப்பிட்டுப் பின்னர் உட்பொருளாக நம் ஒளியலை என மாற்றியுள்ளேன்.
முட்டாள்தன வெருளிகளில் இதுவும் ஒன்று.
00
பருவநிலைப் போராளியாகிய கிரெட்டா தின்தின் எலியோனரா எரண்மன் துன்பெருகு (Greta Tintin Eleonora Ernman Thunberg) என்னும் சுவீடன்நாட்டுச்சிறுமி மீதான தேவையற்ற அளவுகடந்த பேரச்சம் கிரெட்டா துன்பெருகு வெருளி.
00
கிரேக்க அல்லது இலத்தீன் சொற்கள் குறித்த தேவையற்ற பேரச்சம் கிரேக்க வெருளி.
பல கலைச்சொற்கள் கிரேக்கமாகவும் இலத்தீனாகவும் உள்ளன. அதனால் பொருள் வெளிப்படையாகப் புரிவதில்லை. எனவே கிரேக்க, இலத்தீன் சொற்கள்மீது பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
Hellen என்னும் பழங் கிரேக்கச்சொல் ஒளி /அறிவொளி என்பனவற்றைக் குறிக்கும். அறிவொளி வாய்ந்த மொழி என்னும் பொருளில் கிரேக்கத்தையும் பின்னர் இச்சொல் குறிக்கத் தொடங்கியது.
00
கிலி(horror) குறித்த வரம்பற்ற பேரச்சம் கிலி வெருளி.
கிலி ஏற்படுத்தும் படங்கள், தொலைக்காட்சிப் படங்கள், திரைப்படங்கள், செய்திகள் முதலியன குறித்துப் பேரச்சமும் கவலையும் கொள்வது.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5