சிங்கப்பூரில் அமைந்திருக்கும் ஒரே ஒரு ஆலயம் '' ஸ்ரீ மன்மத காரூணீஸ்வரர் சிவன் ஆலயம் ''
சுமார் 120 ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ மன்மத காரூணீஸ்வரர் சிவன் ஆலயம் தோற்றம் கண்டது. காலாங் காஸ்வேர்க்ஸ் (Kallang Gas Works) சிவன் கோயில் என பெரும்பாலான பக்தர்களால் அழைக்கப்பட்ட
இவ்வாலயத்திற்கு ஒரு வளமான பாரம்பரியம் உண்டு.
போக்குவரத்து அதிகம் உள்ள காலாங் சாலையிலும்,சிங்கப்பூர் குடியேற்ற(இமிகிரேஷன்) கட்டடத்திலிருந்து
சுமார் 300 மீட்டர் தொலைவிலும், அமைதியான, பசுமையான சுற்றுபுறம், ஆலயத்தின் பின்புறத்தில் நெளிந்
-தோடும் அழகான காலாங் நதி..., இந்த சுழ்நிலையில் அமைந்துள்ளது ஆலயம்.
தமிழ் மக்கள் வழிபாட்டுக்கு ஒரு தலம் அமைத்துக்கொள்ள ஸ்ட்ரேஸ் செட்டல்மெண்டு(Governor of Straits Settlement) கவர்னரால் வழங்கப்பட்ட பட்டா நிலத்தில் 1888 - ஆம் ஆண்டு சனவரி 1-ம் தேதி கோயில்
ஸ்தாபிக்கப்பட்டது. இருபத்தொரு ஆண்டுகளுக்குப் பின் 1909 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பழைய பட்டாவுக்கு பதில் புதிய பட்டா 99 ஆண்டு குத்தகைக்கு கொடுக்கப்பட்டது.
இடைப்பட்ட இருபத்திரண்டு ஆண்டு காலத்தில், 1909 ல் பட்டாவில் கையெழுதிட்ட அனைவரும் இயற்கை எய்தி விட்டதால், 1931ல் காஸ்வேர்க்கில் தலைமை போர்மேனாகப் பணியாற்றிய
திரு.ஏ.வி.இருளப்ப பிள்ளை கோயிலின் விவகாரங்களை எடுத்து நடத்தினார்.அவரும் அவர்களது நண்பர்களும், சகாக்களும் ஆலயத்தை காரை, காங்கிரீட் கட்டிடமாக மாற்றினார்கள். ஆனாலும் அவர்கள்
அவர்கள் நிதிப் பற்றாக்குறையை எதிர்நோக்கினார்கள்.
1934-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி திரு.ஏ.வி. இருளப்ப பிள்ளை கேட்டுக் கொண்டதற்கு இணங்க மறைந்த தங்களின் தந்தை கு.வேலுப்பிள்ளை நினைவாக கோயிலைக் கட்ட திரு.பக்கிரிசாமி பிள்ளையும்
அவரின் சகோதரர் திரு.வி.நாராயணசாமி பிள்ளையும் ஒப்புக்கொண்டனர்.
சுவான் அண்ட் மெக்லரண்ட்(Swan & Mclaren) எனும் கட்டடக் கலை நிறுவனம் கோயில் வரைபடங்களை
தயாரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. 1934ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி புதிய வரைப்டம் தயாரானது. விமானம் மற்றும் அலங்கார வேலைகளை மேற்கொள்ள திரு.கந்தசாமி,திரு.எஸ்.ராஜாமணி ஆகிய ஸ்தபிதகள்
1935-ஆம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி தமிழ்நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டனர். 1937 ம் ஆண்டு கும்பாபிஷேகம் கண்டது.
இருளப்ப பிள்ளையும் அவரது குழுவினரும் தொடர்ந்து நிதிப்பற்றாக்குறை பிரச்சனையை எதிர்நோக்கியதால்
1939 ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி திரு.வி.பக்கிரிசாமி பிள்ளை கோயில் தலைவராக நியமிக்கப்பட்டதுடன்
ஆலய விவகாரங்களை கவனித்துக் கொள்ளவும், மிகுதியாக ஏற்படும் செலவுகளை ஏற்றுக்கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டார். அவரின் தலைமைத்துவத்தின் கீழ் 1951-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதியும்,
1974 நவம்பர் 29-ம் தேதியும் ஆலயத் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
1993-ம் ஆண்டிலிருந்து நிர்வாக அறங்காவலரான திரு.பி சிவராமனும் நிர்வாகக் குழுவினரும் சிறுசிறு புதுப்பிப்பு பணிகளை மேற்கொண்டனர். கடைசி புதுப்பிப்பு பணி 1997-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி அதாவது, 1937 ம் ஆண்டில் வந்த ஈஸ்வர தமிழ் ஆண்டின் 60 கால சுழற்சிக்குப் பிறகு மேற்கொள்ளப்
பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
மூலவர் மூர்த்திகள் (ஆலய வலம்)
நந்திகேஸ்வரர்.
முதலில் நம்மை வரவேற்பவர் நந்திகேஸ்வரர். சிவபெருமானின் ரிஷப வாகன்மாகும். ஈஸ்வரருக்கு மிகவும்
அருகில் இருப்பவர். நந்தி பெருமான் எப்போதுமே சிவனை நோக்கி அமர்ந்திருப்பார்.பரமாத்மவுடன் ஆத்மா
இணைய வேண்டும் என்பதை பிரதிபலிக்கும் வகையில் நந்திகேஸ்வரர் சிவபெருமானை வணங்கும் நிலையில்
இருக்கிறார்.
மன்மத காரூணீஸ்வரர்.
ஆலயத்தில் நுழைந்தவுடன் நமக்கு முதலில் காட்சியளிப்பர் ஸ்ரீ மன்மத காரூணீஸ்வரர். மூல மூர்த்தியாக
இவ்வாலயத்தில் அமைப்பட்டு அருவுரு சிவலிங்கம் ஸ்ரீ மன்மத காரூணீஸ்வர சிவன் என்று அழைப்படுகிறது.
சிவலிங்கம் சிவரூபமாக அமைந்துள்ளது. நம் கண்ணுக்கு புலப்படும் சிவலிங்கத்தின் மூன்று பிரிவுகள் முத்
தேவர்களையும் பிரதிபலிக்கின்றன்.
சதுர அடிப்பாகம் பிரம்மா, எண் கோண தூண்வடிவம் விஷ்ணு, வட்டமான மேற்பகுதி ருத்ரர்.
சுத்த வித்யா தத்துவம் எனும் பிரிவில் ஒருபெரும் பகுதியாக இந்த முத்தேவர்கள் அமைந்துள்ளனர்.
வட்டமான மேற்பகுதியில் சிவதத்துவத்தின் ஐந்து கூறுகள் அமைந்துள்ளன. அதைப் போலவே விஷ்ணுவிற்கு ஏழு வித தத்துவமும் பிரம்மாவிற்கு 24 ஆத்ம தத்துவமும் உள்ளன.
சிவலிங்க ரூபங்களை அதாவது உச்சிமுகம் ஈசானம், கிழக்கு முகம் தற்புருடம், தெற்கு முகம் அகோரம்,
வடக்கு முகம் வாமதேவம், மேற்கு முகம் சத்தியோசாதம் ரூபங்களை சிருஷ்டித்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளிச்செய்தல் ஆகிய ஐமுட் செயல்களை சிவலிங்கம் பிரதிபலிப்பதாகக் கூறுவதுண்டு.
இதனை திருமூலர் திருமந்திரத்தில் இப்படி கூறுகிறார்.
ஐந்து முகம்உள ஐம்மூன்று
ஐந்தினோடைந்து கரதலம் தானுள
ஐந்துடன் ஐந்தாயுதமுள நம்பி என்
நெஞ்சு புகுந்து நிறைந்தது நின்றானே.
விநாயகர்
அருவுரு சிவலிங்கத்தின் இடது புறம் வெற்றிகரமாக எல்லா காரியங்களும் நிறைவேறவும், விக்கினங்கள்
நீங்கவும் அருள்புரியும் விக்னேஷ்வரர் விநாயகர்.
தண்டாயுதபாணி
வலது புறம் எளிமையான வாழ்வு வாழவேண்டும் என்ற நோக்கில் முருகன் தண்டாயுதபாணி உருவத்தில் உள்ளார்.
பர்வதவர்த்தினியம்பாள்(பார்வதி)
எல்லா உயிரினங்களுக்கும் கருணை கொண்டு காக்கும் அன்னையாக பர்வதவர்த்தினியம்பாள்(பார்வதி)
அருள்பாலிக்கிறாள்.
தட்சிணாமூர்த்தி.
சிவனின் மறு உருவமே தட்சிணாமூர்த்தி. பேருண்மையை போதிக்கும் குருவாக இங்கும் அருள்புரிகிறார்.
சண்டீஸ்கேஸ்வர்.
சிவபெருமானையே சதாகாலமும் தியானித்துக்கொண்டு இருக்கும் சண்டீஸ்கேஸ்வர்.
நவகிரங்கள்
சிவ தரிசனத்தின் முழுப்பயனை இவரின் அருளாலேயே கிடைக்கப்படுகிறது.கோளங்களின் தாக்கத்தால் ஏற்படும் தீங்குகள் குறைய நவகிரங்கள் தனி மண்டபத்தில் ஒரு பீடத்தின் மீது வைக்கப்பட்டுள்ளது.
பைரவர்.
ஆலயத்தின் காவல் தெய்வாமாக இருப்பவர் பைரவர்.ஆலய நிறைவு பூஜையான அர்த்தஜாம புஜையை இவர் சன்னதியில் பூர்த்தி செய்து விடைபெறுவது சிவாகம மரபில் இருந்து வருகிறது.இங்கும் ஆலயத்தையும் நகரத்தையும் காவல் தெய்வமாக இருந்து காத்து அருள் புரிகிறார்
அன்பொடு,
கிருஷ்ணன்,
சிஙகை
........................................
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி
Krishnan,Singapore
For your Book Mark
http://ezilnila.com/saivam
http://www.singai-krishnan.blogspot.com/