இந்திர விழா
டாக்டர்.பத்மாவதி
இந்திரவிழா சோழநாட்டுக்காவிரிப்பூம்பட்டினத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டதை சிலப்பதிகாரமும் மணிமேகலையும் குறிப்பிடுகின்றன. அவ்வாறு குறிப்பிடும்போது விழா கொண்டாடப்பட்ட முறையையும் மிக அழகாக எடுத்துக் கூறுகிறது சிலப்பதிகாரம்.
காவிரிப் பூம்பட்டினத்திலுள்ள ஐந்து வகை மன்றங்களிலும் வழிபாடு செய்துவிட்டுக் கோயிலில் வைக்கப்பட்டிருந்த முரசை எடுத்து அரசனுடைய யானையின் மேல் ஏற்றி, இந்திர விழா தொடங்கும் நாள், முடியும் நாள் ஆகியவற்றை முரசறைந்து நகர மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
விழாத் தொடங்கும்போது கற்பகத்தருக் கோட்டத்தில் உள்ள ஐராவதம் என்னும் யானையின் உருவம் வரையப்பட்ட கொடியை ஊர்வலமாக எடுத்து வந்து, தருநிலைக் கோட்டத்தில் வானுயர உயர்த்தி கால்கோள் விழா செய்தனர்.
இவ்விழாவின் (கால்கோள்) போது நகரங்களில் உள்ள நெடுநிலை மாளிகைகளின் வாயில்கள்,முத்துக்கள் நிறைந்த மகரவாசிகை, தோரணங்கள், பசும்பொற்பூரண கும்பம், பொலிந்த பாலிகை, (முளைப்பாரி) பாவை விளக்கு, பசும் பொற்படாகை (கொடி) தூமயிர்க்கவரி, சுந்தரச் சுண்ணம் ஆகிய மங்கலப் பொருட்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
இத்தகைய மாளிகைகள் நிறைந்த நெடுவிதிகளில் ஐம்பெருங்குழுவினராகிய --அமைச்சர், புரோகிதர், சேனாபதியர், தூதுவர், சாரணம், எண்பேராயத்தினராகிய--கரணத்தியலவர், கருமகாரர், கனகச்சுற்றம், கடைக்காப்பாளர், நகர மாந்தர், நனிபடைத்தலைவர், யானை வீரர், இவுளி மறவர் ஆகியோர், அரசகுமாரர், பரத குமாரர்(வணிகர்) கவர் வரிப்புரவியராகிய விரைந்து செல்லும் குதிரைப்படை வீரர்கள், யானைப்படையினர், குதிரைகள் பூட்டிய தேர்ப்படையினர் ஆகியோர் ஒன்று சேர்ந்து அரசனின் கொற்றம் மேலும் மேலும் மேம்படுவதற்கு வாழ்த்திச் செல்வர். அவ்வாறு வாழ்த்திக் கொண்டே தண்ணறுங்காவிரி பெருந்துறையிலிருந்து புண்ணிய நன்னீர் பொற்குடத்தேந்தி வந்து மண்ணகம் மருள, விண்ணகம் வியப்ப விண்ணவர் தலைவனாகிய இந்திரனை விழுநீராட்டினர். பின்னர் பிற கோயில்களிலும் வழிபாடுகள் நிகழ்த்தினர்.
இதைப்போலவே காளிதாசரின் இரகுவம்சமும் (4 ஆவது சர்க்கம், 3ஆவது சுலோகம்) இந்திரவிழா பற்றியும் எவ்வாறு நடந்தது என்பது பற்றியும் கூறுகின்றது. இந்திரனுடைய கொடியை உயர்த்தி இந்திரவிழா நடத்தும்போது நகரமக்கள் வந்து பார்த்து மகிழ்வதைப் போல, மன்னன் இரகுவின் முடிசூட்டுவிழாவைக்கண்டு நகரமக்கள் மகிழ்ந்தனர் என்று காளிதாசர் ஒரு சுலோகத்தில் கூறுகிறார்.1
இந்த சுலோகத்திற்கு உரை எழுதிய மல்லி நாதர் இந்திரவிழாவைப் பற்றி மூன்று சுலோகங்களை மேற்கோள் காட்டுகின்றார். நகர வாயிலில் நான்கு கம்பங்களில் யானை உருவம் வரையப்பட்ட கொடிகள் ஏற்றப்பட்டிருந்தன. சதுர வடிவமான இந்திரனின் கொடி (சக்கர துவஜம்) அரசனுடைய அரண்மனைக்கு எதிரில் நாட்டப்பட்டிருந்தது. அது நகர மக்களுக்கு மகிழ்ச்சியையும் ஆரோக்கியத்தையும் அளிக்க வல்லது என்கிறார். பாடலிபுத்திரத்தில் நடந்த ஒரு விழாவில் பெளத்த ஊர்வலம் சென்றதை பாஹியான் குறிப்பிடுகின்றார்.
இந்திரவிழாவை முதன்முதலில் தொடங்கி வைத்தவன் சேடிமன்னன் உபச்சரிகா என்ற வசு என மகாபாரதம் மூலம் தெரிகிறது. வசு அரசனாக முடிசூடிய முதலாம் ஆண்டு ஒரு மூங்கிற்கழியில் கொடியைக் கட்டி உயர்த்தி இந்திரனை வழிபட்டானாம். அவனைப் பின்பற்றி அவன் தலைமுறையினரும் இந்திரனுக்கு விழா எடுத்து வழிபட்டனர்.
சேடிமன்னன் இந்திரனுக்கு விழா எடுத்தது அவன் அரசன் என்ற ஒரு அந்தஸ்தைப் பெற்ற தினத்தில் என்பதும், அந்நாளில் அரசருள் அரசனாக, வெற்றிக் கடவுளாகக் கருதப்பட்டு வந்த இந்திரனை வணங்குவதற்காக என்பதும்--
தெரிகிறது.2
சேடி மன்னர் இந்திரவிழா கொண்டாட ஆரம்பித்த பின்னர் தான் இந்திர விழா பிற நாடுகளிலும் பரவியிருக்கிறது. வசு வாழ்ந்த காலம் கி.மு. 5,6 ஆம் நூற்றாண்டாகும். வசுவால் விழா எடுத்துக் கொன்டாடப்படுவதை அறிந்த இந்திரன், 'எனக்கு மகிழ்ச்சியுடன் விழா எடுக்கும் அரசர்களும் பிறரும் சிறந்த தகுதியை அடைவார்கள்'--என்று கூறினான் என்கிறது மகாபாரதம். சேடிமன்னன் வசு தொடர்ந்து இவ்விழா எடுத்து வந்ததால் தொடர்ந்து கடவுள்களுக்கெல்லாம் அரசனாக விலங்கினான் என்றும் மஹாபாரதம் கூறுகிறது.3
இரகு வம்ச உரையில், 'எந்த அரசன் இந்திரனுக்கு விழா எடுத்துக் கொடி நாட்டுகிறானோ அந்த அரசனுடைய நாட்டில் சந்தேகமேயில்லாமல் வேண்டிய அளவு மழை பெய்யும்'-- என மல்லிநாதர் கூறியிருப்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது.
சிலப்பதிகாரமும் மணிமேகலையும் வசியும் வளமும் (மழையும் செல்வமும்) பெருக வேண்டி வாழ்த்தி விழா எடுக்கப்பட்டதைக் கூறுகிறது. மணிமேகலையில் இந்திரவிழா எடுக்கத்தவறும் அரசர்களின் ஆநிரைகளையும் ஆடுகளையும் கடல் கொள்ளும் என்ற கருத்து நிலைநாட்டப்பட்டுள்ளதும் இங்கு கவனிக்கத் தக்கது.
சங்க கால பாண்டிய மன்னன் ஒருவன், 'அம்பொற் சித்திரம் உயர்' விழா கொண்டாடியதை சின்னமனூர் பெரிய செப்பேடு கூறுகிறது. இதற்கு விளக்கம் எழுதிய எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார் அவர்கள், இந்திரவிழாவின் போது இந்திரனுடைய கொடியை ஏற்றித் திருவிழா செய்ததை 'அம்பொற் சித்திர முயரி' என்ற வாசகம் குறிக்கிறது என்கிறார்...4 இது பற்றிக் கூறும் சின்னமனூர் பெரிய செப்பேடு,
"தடம் பூதம் பணி கொண்டும் தடாகங்கள் பல திருத்தியும்
அடும்பசி நோய் நாடகற்றி அம்பொற்சித்திர முயரியும்"
என்கிறது. அம்பொற் சித்திரமாகிய இந்திரனுடைய கொடியை, உயர்த்தி இந்திர விழா எடுக்கப்பட்டதைக் கூறும்போது தடாகங்கள் பல திருத்தியது பற்றியும் அடும்பசி நோயாகிய வறுமையை ஒழித்ததையும் கூறிவிட்டு, இந்திர விழா எடுத்ததைக் குறிப்பிடுவது , மக்களின் பசியை அகற்றி செங்கோலாட்சி செய்யும் மன்னனே இந்திரவிழா எடுக்கும் தகுதியுடையவன் என்பதும் பெறப்படுகிறது.
இவ்வாறு அம்பொற் சித்திர முயரி விழா எடுத்தவனை சின்னமனூர் பெரிய செப்பேடு கூறும்போது,
'அம்பொற்சித்திர முயரியும் தனியாலங்கானத்திற் தன்னோக்குமிருவேந்தரைக் கொலை வானிற் தலை துமித்தும்'
எனக் கூறுவதால் இப்பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனாக இருத்தல் வேண்டும்.
காளிதாசர் இந்திரனுடைய கொடியை உயர்த்தி இந்திர விழா நடத்தும்போது, நகர மக்கள் வந்து பார்த்து மகிழ்வதைப் போல நகர மக்கள் இரகுவின் முடிசூட்டு விழாவைக் கண்டு மகிழ்ந்தார்கள்5 எனக் கூறியது போல, சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் இந்திர விழாவைக் கண்டு மகிழும் பூம்புகார் நகர மக்களைப் பற்றிக் கூறும்போது 'கரிகாற்வளத்தான் தன் பதங்கொள்ளும் நலைநாட்போல' மகிழ்ந்தார்கள் என்கிறார்.6
மன்னர்களின் முடிசூட்டுவிழா போன்றுதான் இந்திரவிழாவின் போதும் நகரம் அலஙகரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டு அரச அதிகாரிகள் புடைசூழ இந்திரனுக்கு அபிஷேஹம் செய்யப் பட்டது. எனவே அரசர்க்கெல்லாம் அரசனாகவும் தெய்வமாகவும் திகழும் இந்திரனுக்கு வருடந்தோறும் மன்னர்கள் தாங்கள் முடி சூட்டிய அன்றோ வேறோர் நாளிலோ நடத்தப்படும் அபிஷேக விழாவாகிய முடிசூட்டு விழாதான் இந்திர விழா. எனவே இந்திர விழாவும் மன்னர்கள் முடிசூட்டு விழாவும் ஒரே மாதிரியான விழா என்பது தெரிய வருகிறது. அதனால் தான் சிலப்பதிகாரம், இந்திர விழா, கரிகால் சோழனின் தண்பதங்கொள்ளும் (முடி சூட்டு விழா) தலை நாள் போல இருந்தது எனக் கூறுகின்றது. மகாபாரதமும் சேடி மன்னன் முடிசூடிய தினத்தில் தான் வருடந்தோறும் இந்திர விழா கொண்டாடப்பட்டது என்கிறார்.
இந்திர விழாவும் காமன் விழாவும்
இந்திரவிழாவுடன் காமனுக்கு மகரக் கொடியேற்றி எடுக்கப்படும் மகரத்வய புஜோத்சவம் பற்றி 'வசந்த திகல பான' என்ற நூலில் வரதாச்சாரியார் கூறுகிறார்.7 மதுரையிலும் வருடந்தோறும் நடக்கும் சித்திரைத் திருவிழாவுடன் காமன் பண்டிகையும் கொண்டாடப் படுகிறது.
சித்திரை விழா--சித்திரைமாதத்தில் சித்திரை தினத்தில் நடக்கும் இந்திர விழாவாகும். இவ்விழாவுடன் காமன் பண்டிகையும் கொண்டாடப் பட்டது பற்றிப் பின்னர் காண்போம்.
இந்திரவிழா--கலைவிழா--கல்வித் திறனுக்கும் விழா
இந்திரன் ஒரு வெற்றி வீரன் என்பதால் அரசர்கள் தங்கள் அபிஷேக நாளில் இந்திரனுக்கு அபிஷேகம் செய்து நிரந்தர வெற்றிகளைத் தங்களுக்கு அளிக்குமாறு வேண்டினர்.
இந்திரன் -ஒரு மழைக்கடவுள் என்பதால்--அரசர்கள் தங்கள் நாட்டில் வசியும் வளனும் சுரக்க வேண்டியும் விழா எடுத்தனர்.
இந்திரன் ஒரு கலைக்கடவுள் என்பதால் இந்திர விழாவன்று கலைகள் முக்கியத்துவம் பெற்றன. இந்திரனின் அவையிலே நடந்த நடனம், இசைக்கலைகள் பற்றி சிலப்பதிகாரம் கூறுகின்றது. இந்திரனின் சாபத்தில் நடன அரசி ஊர்வசி மாதவியாக பூமியில் பிறந்தாள் என்கிறது சிலப்பதிகாரம்.
வீரத்தைப் பாராட்டி இந்திரலோகமான அமராவதிக்கு அழைத்து வரப்பட்ட அர்ஜுனன் அனைத்து விதமான போர்ப் பயிற்சியையும், நடனம், இசை போன்ற கலைகளிலும், அரசியல், நிர்வாகம் போன்ற நூல்களையும் கற்றுத் தேர்ந்தான் என்கிறது மஹாபாரதம்.8
அரசர்கள் (இந்திரனைப் போன்று) போர்ப்பயிற்சி, அரசியல், நிர்வாகம், நீதி போன்ற நூற்பயிற்சிகள் மட்டுமின்றி கலை, கல்விப் பயிற்சியிலும் தகுதியுடையவர்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள். நாட்டை ஆட்சி புரிய அவர்களுக்கு இத்தனையும் நிறைந்த அறிவு வேண்டும் என நீதி நூல்களில் வரையறுக்கப்பட்டுள்ளன.
வீரத்திலும் நிர்வாகத்திலும் மேம்பட்டு பெரரசனாக ஆட்சி புரியும் மன்னர்கள் இந்திரவிழாக் கொண்டாடும்போது கல்விக்கும், கலைக்கும் அங்கு இடமளிக்கப்பட்டிருந்தது. அறிவுக்கும் ஐம்புலன்களுக்கும் இந்திரவிழாவில் விருந்தளிக்கப்பட்டது.
இந்திர விழாவன்று அரசனது அவையில் மக்கள் பங்கு பெறும் பொதுவிடங்களிலும் அரசவைக் கணிகையரால் நாட்டியம் நிகழ்த்தப்பட்டது. தரும உபதேசங்கள், பந்தல்களிலும் அம்பலங்களிலும் நடந்தன. வித்யா மண்டபங்களில் சமய வாதங்கள் நடந்தன. அது மட்டுமின்றி புதிதாக எழுதப்பட்ட நூல்கள் இந்திரவிழாவன்று அரங்கேற்றம் செய்யப்பட்டன.9 இந்நாளின்போதுதான் பரதரின் நாட்டிய சாஸ்திரம் அரங்கேற்றம் செய்யப்பட்டதாக சம்ஸ்கிருத மரபுச் செய்தி ஒன்றில் காணப்படுகின்றது.
இந்திரவிழாவன்று நடிப்பதற்கென்றே நாடகங்கள் எழுதப்பட்டன என்றும் தெரிய வருகிறது.10 அவற்றுள்
காளிதாசரின் -மாளவிகாக்னிமித்ரம்
ஹர்சரின் -ரத்னாவளி, பிரியதர்சிகா
சாதனியின் -வசந்திக பரினயம்
ஆகிய நூல்கள் அடங்கும்.
கடலாடு காதையில் அர்சகுமாரரும் பரதகுமாரரும், கணிகையரும் ஆடவரும் பெண்டிரும் எவ்வாறெல்லாம் மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்று கூறியிருப்பதை நோக்க, மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் எதிர்நோக்கும் விழா என்று தெரிகிறது. இந்திர விழாவுடன் காமன் விழாவும் கொண்டாடப்பட்டது என்ற செய்தி, இந்திர விழாமுடிந்தபின் அதாவது இந்திரனுக்கு நீராட்டும் நிகழ்ச்சி முடிந்த பின் மக்கள் கடலாடு காதையில் காமக்களிப்பில் மூழ்கி நீராடி மகிழ்ந்த செய்தி இந்திர விழா--காமன் விழா இணைந்து நடந்ததையே குறிப்பிடுகிறது.
இந்திரவிழாவும் அரசர்க்கரசர்களும்
சோழ மன்னன் கரிகாலன், சேடி மன்னன் வசு, ரகுவம்ச மன்னனாகிய ரகு ஆகியோர் வெற்றி வீரர்கள் என்றும், அவர்கள் இந்திரவிழாவைக் கொண்டாடினர் என்றும் அறிந்தோம்.
அதுபோலவே மணிமேகலையில் தூங்கெயில் எறிந்த தொடிதோட்செம்பியன் என்ற மன்னன் இந்திரனின் அனுமதி பெற்று விழா எடுத்தான் எனக் கூறப்பட்டுள்ளது. 11
தூங்கெயில் என்றால் ஆகாயத்தில் உள்ள கோட்டை எனப்பொருள் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு பொருள் கூறுவதை விட, முகில்கள் தூங்குமளவு உயரமான மதில் என்றே பொருள் கொள்ளல் வேண்டும். பகைவனின் உயரமான மதிலை எறிந்து வெற்றி பெற்று சிறந்த வீரன் என்ற அந்தஸ்தை நிலை நாட்டிய வெற்றி வீரனாகிய தொடிதோட் செம்பியன், வெற்றி வீரனும் கடவுளுமாகிய இந்திரனுக்கு விழா எடுக்கும் சிறப்பைப் பெற்றிருக்கிறான். இத்தகைய பெருவீரர்கள் தோளில் தொடி அணியும் தகுதி படைத்தோர். அதனால் இச்செம்பியன், தொடிதோட் செம்பியன் எனப் புகழப்பட்டான். தொடி--என்பது தோளில் அணியும் அணியாகும். இதற்கு வீரவலை என்ற பெயரும் உண்டு.
முற்காலப் பாண்டியர்கள் தங்கள் செப்பேடுகளில் இந்திரனின் வளையை எறிந்ததையும் முடியை உடைத்ததையும் பெருமையாகக் கூறிக்கொள்கின்றனர்.12 வெற்றிக் கடவுளாகிய இந்திரன் அணிந்திருந்த வீர வளையாகிய தோள் வளையை எறிந்ததையும் முடியை உடைத்ததையும் கூறுவதன் மூலம், பல அரசர்களை வென்று, அரசர்க்கெல்லாம் அரசனாக விளங்கிய அரசனை வென்று தாங்கள் பேரரசர்களாக விளங்கியதையே அவ்வாறு கூறிக்கொள்கின்றனர். மேலும் இவ்வாறு கூறுவதன் மூலமாக இந்திரனைத் தங்கள் அரச தெய்வமாக கொண்டாடிய களப்பிரர்களையும் அவர்கள் சார்ந்திருந்த பெளத்த மதத்தையும் பெளத்த மதக்கடவுளின் செல்வாக்கையும் குறைத்ததை பாண்டியர்கள் அவ்வாறு கூறினர் என்ற செய்தி புதைந்து கிடக்கின்றது என்பதனை நாம் ஆய்வுக் கண்ணோட்டத்தின் மூலம் அறிந்து கொள்ள இயலும்.
சிலப்பதிகாரத்தில் இந்திரவிழா நடத்திய சோழன் கரிகாலன், இவன் இமயம் வரை படையெடுத்துச் சென்று புலிச்சினத்தைப் பொறித்தான். மகத நாட்டு, வஜ்ஜிர நாட்டு, அவந்தி நாட்டு மன்னர்களை வென்றான். அவர்களை வென்று அவர்கள் அளித்த பரிசுப் பொருட்களைக் கொணர்ந்து காவிரிப்பூம்பட்டினத்தில் வைத்தான். எனவே இந்திர விழா கொண்டாடும் தகுதியைப் பெற்றிருந்தான்.13
அரசனாக அந்தஸ்துப் பெற்ற வசு, தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன், வடபுலம் வரை வெற்றி கொண்டு இமயத்தில் வில் பொறித்த கரிகாலன் ஆகிய இவர்களைப் போலவே கானப்பேரெயில் எறிந்த உக்ரப் பெருவழுதி என்ற பாண்டியனும் இந்திர விழா கொண்டாடியிருத்தல் வேண்டும். இவ்விழாவே சித்திரை விழா என மருவி வழங்கி வருகிறது என்பதைப் பின்னர் காண்போம்.
இந்திர விழாவும் பெளத்தமும்
வட இந்தியாவில் மகதப் பேரரசு உருவானபோது அங்கு பெளத்தம் அதிக செல்வாக்குப் பெற்றிருந்தது. இனக்குழுக்கள் உடைந்து நிலப்பரப்பின் அடிப்படையிலான ஒரு அரசு மகதத்தில் புத்தரின் கொள்கைப்படி தோன்றியது. எனவே பெளத்தம் அதிக செல்வாக்குப் பெறத் தொடங்கியது. அது வரையில் ஆரியர்களின் மாபெரும் வெற்றிக் கடவுளாகத் திகழ்ந்த இந்திரனும் பெளத்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டான். அதாவது பெளத்தம் மிகவும் செல்வாக்குள்ள பிறமத தெய்வங்களையும் தங்கள் மதத்தில் ஏற்றுக் கொண்டது. அவ்வாறு ஏற்றுக் கொண்டு மிக உயர்ந்த இடத்தில் வைத்து வணங்கப்பட்டவன் இந்திரன். வேதக் கடவுளாகிய இந்திரன் புத்தருக்கு வணக்கம் செலுத்துவதாகக் காணப்படும் சிற்பங்கள் மதுராவில் உள்ளன. இதன் கருத்து என்னவென்றால் இந்திரன் புத்தரின் உயர்வை ஏற்றுக் கொண்டான் என்பதாகும். மதுராவில் இந்திரனின் உருவம் ஐந்து இடங்களில் உள்ளன.14 புத்தரின் உருவங்களைத் தவிர நாக வழிபாடும் இந்திர வழிபாடும் இருந்திருக்கிறது. நாகம் வளத்தின் கடவுள். இந்திரன் வெற்றிக் கடவுளாகவும் மழைக்கடவுளாகவும் போற்றப் பட்டவன்.
இந்திர விழா--பெளத்த விழாவான பின் பெளத்தம் சார்ந்த மன்னர்கள் இந்திரனைச் சிறப்பாகக் கொண்டாடினர். இந்திரன் அசுரர்களுடன் போரிடச் சென்றபோது, அமராவதி நகரை முசுகுந்த சோழன் என்பவன் காத்தான் என்பதால் ஐந்து வகை மன்றத்து பூதங்களும் இந்திரனின் ஏவலால் மன்னர்களுக்கு வரும் தீங்கை நீக்க வேண்டி அனுப்பப் பட்டனர் எனச் சிலப்பதிகார உரையில் கூறப்பட்டிருக்கிறது. அமராவதி ஒரு தலை சிறந்த பெளத்த நகரம். பெளத்த மையங்களுள் ஒன்று என்பதை அனைவரும் அறிவர்.
கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் பாடலிபுத்திரத்தில் பாஹியான் -- ஒரு விழாவில் நடந்த பெளத்த சமய ஊர்வலம் பற்றிக் கூறியது, சிலப்பதிகாரத்தில் நடந்த ஊர்வலம் போன்றதே... பூம்புகாரில் எடுக்கப்பட்ட இந்திரவிழாவிலும் பெளத்த சமயப் பிக்குகள் ஊர்வலம் சென்றனர் என்பதை முன்னர் குறிப்பிட்டோம்.
மணிமேகலை அனைவராலும் ஒப்புக் கொள்ளக் கூடியதொரு பெளத்த நூல். அநூலிலும் இந்திர விழாவின் முக்கியத்துவம் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இந்திர விழா எடுக்காத அரசனின் நாட்டைக் கடல் கொள்ளும்படி இந்திரன் தனக்குக் கட்டளையிட்டிருப்பதாக மணிமேகலா தெய்வம் கூறுகிறது. மணிமேகலா தெய்வம் பெளத்த சமய தாரா தேவியே என்பதும் அது கடல் தெய்வம் என்பதும் இந்நூலாசிரியரால் வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்திரவிழாவும் வைணவமும்
ஆரியரல்லாத இனக்குழுத் தலைவன் கிருஷ்ணனுடன் ஆரியக் கடவுள் இந்திரன் போரிட்டு அவனைத் தோற்கடித்ததை ரிக்வேதம் கூறுகிறது. இந்திரன் தனது விருப்ப பாணமாகிய த்ரப்சபாணம் (drapsa--diluted sour milk) காரணமாகக் கிருஷ்ணனைத் தோற்கடித்தான் என்றும், இப்போரில் கிருஷ்ணன் பத்தாயிரம் வீரர்களுடன் அம்சுநதி ஆற்றங்கரையில் இந்திரனுடன் போரிட்டுத் தோற்றான் என்றும் கூறுகிறது. இந்த அம்சுநதி ஆற்றை யமுனை ஆறென்றும், ஆரியரல்லாத இனத் தலைவனை அசுரன் என்றும் சாயனர் கூறுகின்றார். 15
ஆனால் விஷ்ணு தர்மோத்ர புராணமும் பிருகத்சம்ஹிதையும் தான் இந்திர விழா பற்றிக் கூறும்போது கிருஷ்ணனை முதன் முதலாகக் கடவுளாக உயர்த்திக் கூறியிருக்கிறது. 16
அசுரர்களின் தொல்லைக்குட்பட்ட தேவர்கள் இந்திரனின் தலைமையில் விஷ்ணுவை அணுக, விஷ்ணு தனது கொடியை இந்திரனிடம் கொடுத்தான். அதுவே அசுரர்களைத் தோற்கடித்து வெற்றி பெறும் மன்னர்கள் இந்திர விழாவைக் கொண்டாடும்படி இந்திரன் அக்கொடியை மன்னர்களுக்குக் கொடுத்தான் என்றும் மேற்கூறிய நூல்கள் கூறுகின்றன. மேலும் இந்திர விழா கொண்டாடும் அரசர்கள், தங்கள் எதிரிகளை வென்று பேரரச்ர்களாக விளங்குவார்கள் என்றும் கூறுகின்றன.12
மேலும் அந்த நூல்கள் இந்திரனின் மூங்கிற்கொடி, இந்நூல்களில் விஷ்ணுவின் கொடியாகவும், விஷ்ணுவிடமிருந்து அக்கொடியைப் பெற்று இந்திரன் வெற்றியடைந்தான் என்றும் வெற்றி பெறும் மன்னர்களுக்குக் கொடுத்து இந்திரவிழா கொண்டாடச் செய்தான் என்றும் முற்றிலும் மாற்றப்பட்ட கதையாகச் சித்தரிக்கின்றன.
கிருஷ்ணனைப் பற்றிய கதைகள், இந்திரனின் பாரிஜாத மரத்தைக் கிருஷ்ணன் கைப்பற்றியதையும், இந்திரவிழாவை நிறுத்தியதையும் கூறுகின்றன.18 இக்கதை ஆரியரல்லாத மக்களின் வாசுதேவ கிருஷ்ண வழிபாட்டிற்கும் ஆரிய மக்களின் இந்திர வழிபாட்டிற்கும் இடையே நடந்த போராட்டமாகக் கருதப் படுகிறது.
ஆரிய இன மக்களின் கடவுளாகவும், பெருவீரனாகவும் வணங்கப்பட்ட ஒப்பற்ற வீரக்கடவுளான இந்திரன் இப்போராட்டத்தில் தோற்று, ஆரியரல்லாத இனத் தலைவர்களின் வெற்றியைத் தொடர்ந்து செல்வாக்கிழந்த வரலாறே மேற்கூறிய கதைகள் மூலம் வெளிப்பட்டிருக்கின்றது.
பெளத்த மதத்தினரால் பெளத்தத்திற்குள் கொண்டு வரப்பட்ட ஆரியக் கடவுள் இந்திரன், பெளத்தம் செல்வாக்குப் பெற்றபோது செல்வாக்குடன் திகழ்ந்தான். பெளத்தத்தை எதிர்த்து சைவமும் வைணவமும் வெற்றி பெற்று, பெளத்தம் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டபோதும், செல்வாக்குக் குறைக்கப்பட்டபோதும் இந்திரன் கிருஷ்ணனிடம் தோற்றவனாகவும் கிருஷ்ணனின் ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டவனுமாகக் காட்டப் பட்டிருக்கிறான் எனலாம்.
கி.பி. 404 ஐச் சேர்ந்த மான்டசோர் கல்வெட்டு ஒன்று, கிருஷ்ணன் கோவர்த்தனகிரியை உயர்த்தி இந்திரனை வென்ற கதையைக் கூறிப் பின்னர் கிருஷ்ணன் இந்திரவிழாவைத் தொடர்ந்து நடத்த அனுமதியளித்ததைக் கூறுகிறது. இவ்விழா மழைக்காலத்தில் தொடங்கும் என்றும் கூறுகிறது அக்கல்வெட்டு.
இவ்வாறு கிருஷ்ணனிடம் இந்திரன் தோற்றதாகக் கதைகள் எழுந்த பின்னரும் இந்திரவிழா கொண்டாடப் பட்டிருக்கிறது என்பதும் உண்மை.
சேடி நாட்டு (வட இந்திய) காமன் விழா பற்றி இளங்கோவடிகள்
கடலாடு காதையின் தொடக்கத்திலேயே,
வெள்ளிமால்வரை வியன் பெரு சேடி
கள்ளவிழ் பூம்பொழிற் காமக் கடவுட்கு
கருங்கயல் நெடுங்கண் காதலி தன்னோடு'
விருந்தாட்டயருமோர் விஞ்சை வீரன்.
ஒருவனைப் பற்றிக் கூறுகிறார். 19
அதாவது வெள்ளிமால்வரையாகிய இமயமலை அருகிலுள்ள சேடி நாட்டில் காமக் கடவுளுக்கு விழா எடுத்து மகிழும் ஒரு வீரன் தன் காதலியுடன் வந்ததைக் கூறுகிறார்.
அவன் வந்தது,
தென்திசை மருங்கினோர் செழும்பதி தன்னுள்
இந்திர விழவு கொண்டு எடுக்கு நாள் இதுவென---
தென்னாட்டில் உள்ள ஒரு செழுமையான ஊரில் நடக்கும் இந்திர விழாவைக் காணுதற்கு --என்கிறார் இளங்கோவடிகள்.
சேடிமன்னன் வசு தான் முதன்முதலில் வெற்றிக் கடவுள் இந்திரனுக்கு விழா கொண்டாடினான் என்றும் தொடர்ந்து அவ்வாறு அவன் விழா கொண்டாடியதால் வெற்றி வீரனாக தொடர்ந்து வந்தான் என்றும் மகாபாரதம் கூறியதை முன்னர் கண்டோம்.
இத்தகைய ஒரு வரலாற்றுச் சம்பவத்தைத் தெரிந்திருந்த தமிழ்நாட்டு இளங்கோவடிகள், பூம்புகாரில் நடந்த இந்திர விழாவைக் காண சேடி நாட்டிலிருந்து ஒரு வீரன் வந்தான் என்றும் அவன் காமக் கடவுட்கு விழா எடுக்கும் வீரன் என்றும் ஒரு சிறந்த வரலாற்றுச் செய்தியைக் கூறியிருப்பது பிரமிக்கத் தக்கதாக உள்ளது. சேடி நாட்டு விழாவை மகாபாரதம், விருந்து எனக் குறிப்பிடுவதைப்போலவே இளங்கோவும் சேடி வீரனைக் குறிப்பிடும்போது 'விருந்தாட்டு அயரும் ஓர் விஞ்சை வீரன்' என்று கூறியிருப்பது மேலும் மேலும் வியப்படையச் செய்கிறது.
சேடி நாட்டு விழாவிலும் பூம்புகாரில் நடந்த விழாவிலும் காமனுக்கும் சேர்த்தே விழா நடந்தது என்பது தெரிகிறது. இந்திரவிழாவூரெடுத்த காதையின் மூலமாக--அமைச்சர், சேனாதிபதி, இளவரசர், வணிகர் போன்ற முக்கியப் பதவி வகித்தவர்களும் முக்கியமானவர்களும் இந்திரவிழாவில் பங்கு பெற்றிருந்தனர் என்பதையும், கடலாடு காதையின் மூலமாக--மக்கள் கடலில் நீராடி மகிழ்ந்த்தையும் நோக்க, இந்திர விழாவுடன் காமன் விழாவையும் இணைத்து நடத்தும் மரபு இருந்திருக்கிறது எனத் தெரிகிறது.
இந்திர விழா அறிவுக்கும் ஐம்புலன்களுக்கும் விருந்தாகவும் காம விழா காமநுகர்ச்சிக்கு விருந்தாகவும் இருந்திருக்கிறது. இந்திரனும் அத்தகைய கதைகளோடு தொடர்புடையவன் என்பதை அகல்யை கதை மூலம் அறிந்து கொள்ளலாம். எனவேதான் இந்திரனது வெற்றியும் கொண்டாடப் பட்டிருக்கிறது, இன்ப நாட்டமும் கொண்டாடப் பட்டிருக்கிறது. வெற்றியில் திளைத்த மன்னர்களும் வீரர்களும் உல்லாசமான கேளிக்கைகளில் ஈடுபடுவது இயல்பு தானே.
அடிக்குறிப்புகள்
1. பாண்டியர் செப்பேடுகள் பத்து பக். அ 42
2. Megasthanese and Indian Religion. p. 135--Allen Dalurest
3. Ibid. p. 135
4. பாண்டியர் செப்பேடுகள் பத்து பக். அ 41
5. பாண்டியர் செப்பேடுகள் பத்து பக். அ. 42
6. சிலப்பதிகாரம், கடலாடு காதை வரி...159--160
7. Dr.R. Nagaswamy, Poompuhar p. 9 to 11
8. Mahabaratham
9. Dr. R.Nagaswamy, Poompuhar
10 Ibid
11. மணிமேகலை--விழாவறை காதை வரிகள் 5--10
12. பாண்டியர் செப்பேடுகள் பத்து ---சின்னமனூர் பெரிய செப்பேடு--சுலோகம்--8
13. சிலப்பதிகாரம்--ஆய்ச்சியர் குரவை பாடல் 38 திருவிளையாடற்புராணம்*
14. Megasthanese and his Indian Religion --P. 134--Allen Dalquest
15. Mahabaratham P. 91
16. Ibid
17. Ibid
18. Origin and Development of Vaishnavism P.66 Suvira Jayaswal
19. சிலப்பதிகாரம்--கடலாடு காதை வரிகள் 1--4