சீவில்லிபுத்தூரில் வாணாதிராயனின் முக்கியமான
கல்வெட்டு (13 - மார்ச் - கி. பி. 1454) இருக்கிறது. அதனைக் கண்டு
படி எடுத்து முதலில் நல்ல முறையில் வெளியிட்டவர் கோவை
கிழார் ஆவார். கோவை கிழார் டிகேசியிடம்
சிபாரிசு செய்து திருச்சி ர. பஞ்சநதம் பிள்ளையை
ஆசிரியராக வைத்து தமிழ்நாட்டுக் கோயில்கள்
பற்றிய பல நூல்களை இந்து சமய அறநிலையத்துறையை
வெளியிடச் செய்தார். டிகேசி, கோவைகிழார் இருவருக்கும்
தமிழ்நாட்டில் இந்துசமய அறநிலையத் துறை சுதந்திரத்திற்கு
பின் அமைந்ததில் பெரும்பங்குண்டு.
ரஜனிகாந்த் ’எஜமான்’ என்ற படத்தில் நடித்தார். அதில்
சமத்தூர் வாணவராயர் அரண்மனை வரும். அவருக்கு
அந்த மாளிகையில் வசிப்போர் வரலாறு தெரிந்துகொள்ள
ஆவல் என்று கேட்டார். சிற்பி, ராமராஜ் + கிருஷ்ணராஜ் வாணவராயர்
போன்றோர் பேரா. கு. அருணாசல கவுண்டரைக் எழுத வேண்டிக்
கேட்டுக் கொண்டனர். கு. அருணாசலனார் உவேசா அவர்களிடம்
எம்.ஏ. படித்தவர், அவர் சொல்ல எழுதிய கட்டுரை - சுமார்
15 ஆண்டு இருக்கும். ”காலவெளியில் ஒரு ஜீவநதி: வாணவராயர்
வரலாறு” என்ற புத்தகம் (ந.க.ம. கல்லூரி வெளியீடு) உள்ள
கட்டுரை. அக் கட்டுரையையே ஆர். கோவிந்தராஜன்,
மதுரகவி சீனிவாச அய்யங்கார் தமிழ்ப்படுத்திய கோதாஸ்துதி
என்னும் நூல் மறு அச்சு ஆனபோது அச்சாக்கி உள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவலி வாணாதிராயன் கல்வெட்டு
சாசனத்தை அறிமுகப்படுத்தும் என் கட்டுரையும், கல்வெட்டின்
மூல வாசகத்தையும், வித்யா தேஹிஜியா அவர்களின் ஆங்கில
மொழிபெயர்ப்பும் பிடிஎஃப் ஆக இணைக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக, கிராம முன்சீப் வீரசிக்கு கவுண்டர் (கம்பம் - புதுப்பட்டி)
1936-ல் மதுரகவி தன் 73-ஆம் வயதில் கோதாஸ்துதி தமிழாக்கிப்
பாடிய வரலாற்றைப் பதிவு செய்துள்ளார். வைத்தியம், சோதிடம்,
இருமொழிப் பாண்டித்யம், பக்தி, ஊராருக்கு உதவி, கவி யாத்தல்,
புராணம், இதிகாசம் புகட்டல் போன்றவைகள் நிரம்பிய கிராம
பண்டிதர்களின் வாழ்க்கைக்குச் சான்றாக
மதுரகவி வாழ்க்கை விளங்குகிறது. இன்று இல்லாமல் அழிந்துபோன
கிராம வாழ்க்கைமுறையை நன்றாக விளக்கும் கட்டுரை -
“தட்டிப் பறித்துவந்தேன்” - படித்து மகிழவும்.
ஒருவகையில் பார்த்தால், உவேசா, தி. வே. கோபாலையர்,
வே. ரா. தெய்வசிகாமணியார், கம்பராமன் ஐயா, ... போன்றோர்
வாழ்க்கையும் இதுபோல்தான். முன்பெல்லாம், உயர்நிலைப்
பள்ளி தமிழாசிரியர்கள் செய்த தமிழ்ப்பணி இன்று பலரும்
நினைத்துக்கூடப் பார்க்கவியலாது. நம் கண்முன்னாலேயே
மாறிவிட்ட வாழ்வுமுறைகள்!
திரு. ரகுவீர தயாள் மதுரகவி, கோதாஸ்துதி முழுமையாக
வலையேற்றி உள்ளார். அவருக்கு என் நன்றி.
என்னிடம் 1936-ல் மதுரையில் அச்சான மதுரகவி, கோதாஸ்துதி
இருக்கிறது. பலரும் பார்த்தேயிராத முதற்பதிப்பு,
ஸ்கான் செய்து தருவேன். கோவிந்தராஜன் பதிப்பில்
நாகரி எழுத்தும் சேர்ந்துள்ளது. பழைய பதிப்பில் இல்லை.
யுனிக்கோடில் க்ரந்த லிபி வரும்போது முதற்பதிப்பு போலவே
வெள்ளுரையாக (ப்லெய்ன் - டெக்ஸ்ட்) வைத்திடலாம்.
நா. கணேசன்