களப்பிரர் வரலாறு

579 views
Skip to first unread message

தேமொழி

unread,
Nov 2, 2022, 3:50:04 PM11/2/22
to மின்தமிழ்
Subashini Thf

Kalabhra history.jpg
நூல்: புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு
நூலாசிரியர்: ஆ.பத்மாவதி
வெளியீடு: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
விலை: ரூ 250/-
இணையம் வழி வாங்க விரும்புவோர்:
https://dialforbooks.in/product/புதிய-நோக்கில்-களப்பிரர்/?fbclid=IwAR2C_pgKyZT8eMS2sQdWCCwJ27k2m_bLcslyiBTPNalcV-u4qWUqrYRczg8

புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு - நூல் திறனாய்வு
- முனைவர் க.சுபாஷிணி

களப்பிரர் காலம் இருண்ட காலம் எனத் தமிழ் இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள் நீண்ட காலமாகக் கூறி வருவதை நாம் வாசித்தும் கேட்டும் அறிந்துள்ளோம். நான் மலேசிய சூழலில் தமிழ் மொழி பற்றிய வரலாறு, தமிழக வரலாறு என வாசிக்கத் தொடங்கிய காலகட்டத்தில் கூட கிபி 2ஆம் நூற்றாண்டு அதாவது, சங்கம் மருவிய காலம் முதல் பல்லவர் காலம் வரை இருண்ட காலம் என தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுவதை  அப்போது தமிழ் கற்றபோது படித்தது இப்போதும் நினைவுக்கு வருகிறது.

களப்பிரர் காலம் என்பது இருண்டு காலம் என்றால் அது யாருக்கு இருண்ட காலம் என்ற கேள்வியும் கூடவே எழுகிறது; ஆயினும் பெரும்பாலும் இதனை நாம் யோசிப்பதில்லை. இந்த கேள்வியை எழுப்ப வேண்டியதும் ஆராய வேண்டியதும் அவசியம் அல்லவா?

சேர, சோழ, பாண்டியர், பல்லவர், நாயக்கர் கால வரலாற்றை அறிந்து கொள்ள இன்று நமக்குக் கிடைக்கின்ற பல்வேறு கல்வெட்டுகள், செப்பேடுகள், காசுகள் அல்லது ஏதாவது தொல்லியல் தடயங்கள், களப்பிரர் வரலாறு கூறும் வகையில் கிடைக்குமா என்பது பல வரலாற்று ஆசிரியர்களுக்கு இருந்த ஒரு ஏக்கமாகவும் இருந்தது எனலாம். களப்பிரர் காலம் பற்றி விவரிக்கும் ஆய்வு நூல்கள் சில வெளிவந்துள்ளன. அவை களப்பிரர் பற்றிய சில தகவல்களை வழங்கினாலும் ஓரிரு நூல்கள் பொருந்தாத பல தகவல்களை வழங்கி குழப்பத்தை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கின என்பதை மறுக்க முடியாது.

இத்தகைய சூழலில், முழுமையான தொல்லியல் மற்றும் வரலாற்று ஆதாரங்கள், இலக்கிய ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, தமிழக தொல்லியல் துறையில் நீண்ட காலம் பணியாற்றி பணி ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து வரலாறு மற்றும் கல்வெட்டு ஆய்வுகளை நிகழ்த்தி வரும் முனைவர் ஆ.பத்மாவதி அவர்கள் எழுதி, மிக நீண்ட காலமாக வெளிவரும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு  செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் வெளியீடாக வெளிவந்திருக்கும் நூல் 'புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு’ என்ற இந்த நூல்.

2010ஆம் ஆண்டு செம்மொழி மாநாடு கோவையில் நடைபெற்றபோது  நானும் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கவும் அமர்வுகளுக்குத் தலைமையேற்கவும் அழைக்கப்பட்டிருந்தேன். அந்தச் சூழலில் முனைவர். பத்மாவதி அவர்களோடு உரையாடிக் கொண்டிருக்கும் போது இந்தக் களப்பிரர் கால ஆய்வுகள் பற்றி மிகுந்த ஆர்வத்துடனும் அவருக்கே உரித்தான எக்ஸைட்மண்ட் குறையாமலும்  என்னிடம் பேசிக் கொண்டிருந்தார்.  

அதற்கு மறு ஆண்டு சென்னையில் மீண்டும் சந்தித்த போது  அவரை விளக்கச் சொல்லி களப்பிரர் கால வரலாறு பற்றிய  சில ஒலிப்பதிவுகளைச் செய்திருந்தேன். அப்பதிவுகளைத் தமிழ் மரபு அறக்கட்டளை ‘மன்ணின் குரல்’ வெளியீடாக அப்போது வெளியீடு செய்திருந்தேன்.  http://voiceofthf.blogspot.com/2012/02/blog-post.html

2021ஆம் ஆண்டு இறுதியில் அவரது ஆய்வு நூல் வடிவில் வெளிவந்தது.  களப்பிரர் கால வரலாற்றை அறிந்து கொள்ள அடிப்படையை வழங்கும் நூலாக இந்த நூல் அமைந்திருக்கின்றது.

இந்த நூலின் முதல் அத்தியாயம் களப்பிரர் என்பவர் யார்? அவர்கள் ஆட்சி செய்த காலம், களப்பிரர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் போன்ற தரவுகள் எத்தகைய மூலச்சான்றுகளில் கிடைக்கப்பெற்றுள்ளன என்ற தகவல்களை வழங்குகின்றது. அந்த வகையில், இன்றைக்கு இதுவரை நமக்குக் கிடைத்துள்ளவற்றுள் களப்பிரர் பற்றிய மூலச் சான்றுகளுள் மிகப் பழமையானதாக, புத்ததத்தர் என்ற பௌத்த தேரர் எழுதிய வினய விநிச்சயம் என்ற நூலையும், பூலாங்குறிச்சி கல்வெட்டையும் நூலாசிரியர் முனைவர். ஆ.பத்மாவதி குறிப்பிடுகின்றார்.

பூலாங்குறிச்சி கல்வெட்டுகள் என்பன இன்றைய தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள, திருப்பத்தூர் பேரூராட்சிக்கு அண்மையில் உள்ள பூலாங்குறிச்சி என்ற ஊராட்சியில் உள்ள பூலாங்குறிச்சி குன்றின் சரிவுப் பகுதியில் அமைந்துள்ளன. இக்கல்வெட்டுகள் 1979ஆம் ஆண்டில் கல்வெட்டு ஆய்வாளர் ஆசிரியர் கரு.ராஜேந்திரன் அவர்களால் கண்டறியப்பட்டன. களப்பிர மன்னர்கள் ஆட்சி காலத்தில் அவர்களது ஆட்சி நிர்வாகம், கோயில் நிர்வாகம் போன்றவை பற்றிய தகவல்களை இக்கல்வெட்டுகள் வழங்குகின்றன.

பாண்டியர் காலத்து வேள்விக்குடி செப்பேடு மற்றும் தளவாய்புறச் செப்பேடு கூறும் களப்பிரர் பற்றிய செய்திகள், பல்லவர் காலத்து முப்பது செப்பேடுகள், சாளுக்கியர் காலத்து செப்பேடுகள் போன்றவற்றையும், இலக்கியச் சான்றுகளாகத் திருத்தொண்டர் திருவந்தாதி கூறும் மூர்த்தி நாயனார், கூற்றுவ நாயனார் புராணங்களோடு வருகின்ற சில செய்திகளையும், கல்லாடம், யாப்பெருங்கலும் போன்ற இலக்கியங்களையும் நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.

இத்தகைய மூலச் சான்றுகள், கல்வெட்டுகள், செப்பேடுகள், இலக்கியங்கள் கூறும் செய்திகளின் அடிப்படையில் களப்பிரர்கள் இன்றைய கர்நாடக பகுதியில் இருந்து வந்தவர்கள் என்பதும், பாண்டிய மன்னர்களால் சங்ககாலத்தில் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்ட பிரம்மதேய நிலங்களை மீட்டவர்கள் என்ற செய்தியையும், சேர சோழ பாண்டிய மன்னர்களை வென்று அவர்களுடைய சின்னங்களை தமது சின்னங்களாகக் கொண்டிருந்தனர் என்றும் அவர்கள் பௌத்த, சமண சமயத்தைச் சார்ந்தவர்கள் என்ற வகையிலும் களப்பிரர் கால நிலையின் அடிப்படையை நூலாசிரியர் முதல் அத்தியாயத்தில் விவரிக்கின்றார்.

இந்த நூலின் இரண்டாவது அத்தியாயம் களப்பிரர் காலம் பற்றியும், களப்பிரர்கள் பற்றியும், அவர்களது பூர்வீகம் பற்றியும் பல்வேறு வரலாற்று அறிஞர்கள் எழுதிய கருத்துக்களை ஆய்வு செய்வதாக அமைகிறது.

தமிழக வரலாற்று ஆய்வறிஞர்களான சதாசிவ பண்டாரத்தார், மு. ராகவ ஐயங்கார், மயிலை சீனி வேங்கடசாமி. க.ப. அறவாணன், பி. ஜி. எல். சுவாமி, சி.மீனாட்சி, இரா. பன்னீர்செல்வம், மா. இராசமாணிக்கனார், பா. மாசிலாமணி, ந. சுப்பிரமணியன், கிருஷ்ணசாமி ஐயங்கார், கே. கே. பிள்ளை, நடன காசிநாதன், பி.டி. ஸ்ரீனிவாச ஐயங்கார் மற்றும் இன்னும் சில ஆய்வாளர்களின் நூல்கள், கட்டுரைகள், அறிக்கைகள் ஆகியவற்றை ஆராய்ந்து அவர்களது கருத்துக்களை அலசும் வகையில் இந்த அத்தியாயத்தை நூலாசிரியர் ஆ.பத்மாவதி அமைத்திருக்கின்றார்.

வரலாற்றறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் களப்பிரர் சைன மதத்தையும் பௌத்த மதத்தையும் ஆதரித்தவர்கள் என்பதையும், இவர்கள் இன்றைய கர்நாடகத்தைச் சேர்ந்த கோலாரில் உள்ள நந்தி மலை பகுதியைச் சார்ந்தவர்களாக இருக்கலாம் என்பதையும், ஆய்வாளர் க.ப.அறவாணன் களப்பிரர்கள் தமிழர்களே என்றும், அவர்கள் பிராமணர்களையும் பிராமணர்களின் யாகங்களை எதிர்த்து புரட்சி செய்தவர்கள் என்று கூறுவதைச் சுட்டிக்காட்டுகிறார். ஆய்வாளர் மா. ராஜமாணிக்கனார், ’தமிழக வரலாறு’ என்னும் தனது நூலில் களப்பிரர் ஆட்சி செய்த காலம் பல்வேறு குழப்பங்கள் நிறைந்த காலமாகியதால் அதாவது கிபி 300 இருந்து கிபி 575 வரை, ’தமிழகத்து வரலாற்றின் இருண்டு காலம்’ எனக் கூறுவதையும் குறிப்பிடுகின்றார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பொற்கோ அவர்கள், ’களப்பிரர் தமிழர் அல்லர் என்றும் அவர்கள் காலம் இருண்ட காலம் என்று கூறுவதும் சரியல்ல. களப்பிரர் காலம் தமிழர் ஆட்சி செய்த காலம்தான்; ஒளியுள்ள காலம் தான்; அது பதினென்கீழ்கணக்கு போன்ற நூல்கள் தோன்றிய காலம் தான்’, என்று கூறுவதையும் நூலாசிரியர் சுட்டிக் காட்டுகின்றார்.

களப்பிரர்கள் தமிழர்கள் தானா அல்லது வேங்கடத்திற்கும் இன்றைய தமிழ்நாட்டின் எல்லைக்கும் இடைப்பட்ட பகுதிகளில் வாழ்ந்த வடுகர்களா அல்லது கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களா அல்லது முத்தரையர்கள் என குறிப்பிடப்படுபவர்களா என்ற பல்வேறு கருத்துக்களும் இந்த அத்தியாயத்தில் அலசப்படுகிறன.

நூலாசிரியர் இந்த ஆய்விற்கு எடுத்துக் கொண்டுள்ள ஏராளமான நூல்கள், வரலாற்று ஆய்வாலர்களுக்குத் தமிழக வரலாற்றின் பல்வேறு பார்வைகளை வழங்கக்கூடியவை.

இந்த நூலில் மூன்றாம் அத்தியாயம் சங்க காலத்து தமிழ் நிலத்து மன்னர்களைப் பற்றியும், அவர்களின் அரசு, ஆட்சி மற்றும் சமூகம் பற்றிய சங்கப்பாடல்கள் தரும் சான்றுகள் சிலவற்றோடு தொடங்குகிறது.

சேர, சோழ, பாண்டிய மன்னர்களை ஆதரித்தும் எதிர்த்தும் ஆட்சி செய்த கொங்கர், கோசர், வேளிர் போன்ற சிற்றரசர்கள், சிற்றூர் தலைவர்கள் பற்றிய சங்கப் பாடல் குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஊர் தலைவர்களாக இருந்தவர்களும் புலவர்களாக கவி பாடியிருக்கின்றனர் என்ற செய்தியும், கல்வியாளர்களாக ஆட்சியாளர்கள் இருந்த செய்தியையும் இப்பகுதி விளக்குகிறது.

வணிகர்கள் சமண சமயத்தையும் பௌத்த சமயத்தையும் பேணியவர்களாக இருந்த செய்திகள்; கடல் கடந்து சென்று வணிகம் செய்து வந்த செய்திகள்; தூர நாடுகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு வணிகம் செய்ய வந்த அயல் நாட்டினர் உள்ளூர் வணிகர்களுடன் கொண்டிருந்த தொடர்பு மற்றும் வணிகப் பொருட்கள் பற்றி சங்கப்பாடல்கள் கூறுகின்ற செய்திகளும் இப்பகுதியில் விளக்கப்படுகின்றன.

கல்வி வளர்ச்சியும், வளமான சமூகச் சூழலும், சிறந்த வணிகச் சூழலும் இருந்த காலகட்டத்தில் ஆரியர்களின் தென்னாட்டிற்கான வருகை மிகப் பெரிய மாற்றத்தைத் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியது. வேதத்தை முதன்மையாகக் கொண்டு வேள்விகள் நடத்துகின்ற மரபினர் தமிழ்நாட்டில் நுழைந்த பின்னர் அவர்கள் தமிழ்நாட்டு மக்களுடன் இரண்டறக் கலந்து மன்னர்களின் நம்பிக்கையைப் பெற்றனர். இதன் காரணத்தால் மன்னர்களும் வேதத்தை முதன்மையாகக் கொண்டு வேள்விகளில் ஈடுபாடு கொண்டு அந்தணர்களுக்கு பொன்னையும் பொருளையும் நிலங்களையும் வழங்கத் தொடங்கிய சமூக மாற்றமும் தொடங்கியது. அந்தணர்கள் அரசு நிர்வாகத்துறையில் புகுந்து பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதோடு சடங்குகள் நிறைந்த மதக் கோட்பாட்டை ஆதரித்துத் தங்கள் ஆட்சியில் மாற்றத்தைப் புகுத்தினர் என்று விளக்குகிறார் நூலாசிரியர்.

இத்தகைய சூழலில், சங்க கால மன்னர்களுக்குத் தாங்கள் வழங்கி வந்த ஆதரவை வணிகர்கள் விலக்கிக் கொள்ள நேர்ந்தமையே களப்பிரர் கால ஆட்சி தமிழ்நாட்டில் தடம் பதிக்கக் காரணமாக அமைந்தது என்பதாக இந்த அத்தியாயம் நமக்குச் சங்கம் மருவிய காலத்திற்கான காரணத்தை விளக்குகிறது.

இதன் தொடர்ச்சியாக அமைகின்ற நூலின் நான்காவது பகுதி களப்பிரர் கால அரசமைப்பு பற்றிய செய்திகளை விளக்குவதாக அமைகின்றது.

வரலாற்று ஆய்வறிஞர்களுக்குக் களப்பிரர் கால சமூக சூழலை அறிந்து கொள்வதற்கு தேவையான சான்றுகள் கிடைக்கவில்லையே என்ற ஒரு குறை மிக நீண்ட காலமாக இருந்தது. இதற்கு நூலாசிரியர் தெரிந்ததைக் கொண்டு தெரியாததை ஊகித்தரியும் செயல் முறையை பயன்படுத்தும் வகையைச் சுட்டிக்காட்டுகிறார்.

சிறு மன்னர்களும், வேளிர்களும், வணிகத் தலைவர்களும் சங்க கால அரசர்கள் வேத கேள்வியை அடிப்படையாகக் கொண்ட அந்தணர்களின் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அவர்களை ஆதரிக்க தொடங்கிய பின்னர் இயல்பாகவே தங்களது ஆதரவை விலக்கிக் கொண்டு களப்பிரர்க்கு ஆதரவளித்து அவர்களின் அரசு தமிழகத்தில் அமைய காரணமாகியது என்ற காரணத்தை நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

பூலாங்குறிச்சி கல்வெட்டும் கரூர் கல்வெட்டும் களப்பிரர் கால வரலாற்றை அறிந்து கொள்ள நமக்கு கிடைக்கின்ற முக்கியச் சான்றுகளாக அமைகின்றன. இதில் குறிப்பாக கரூர் கல்வெட்டு ஐம்பெருங்குழு, சங்கம் போன்ற முக்கிய செய்திகளை வெளிப்படுத்துகிற ஒரு கல்வெட்டாக அமைகிறது. சங்கம் என்பது பௌத்த அறிஞர்களும், சமண அறிஞர்களும் தங்கள் சமயப் பணியை ஆற்ற ஏற்படுத்திக் கொண்ட ஓர் அமைப்பு என்பதோடு ஐம்பெரும் குழுக்கள் என்ற வணிகக் குழுக்கள் நிர்வாகத்தை நடத்துகின்ற பாதுகாக்கின்ற பொறுப்பை ஏற்றிருந்த செய்திகளையும் அறிய முடிகின்றது.

பூலாங்குறிச்சி கல்வெட்டு, முக்கியமாக மூன்று பௌத்த ஆலயங்கள் இருந்த செய்தியை வெளிப்படுத்துகின்றது. இந்தப் பௌத்த கோயில்கள் ஏரியின் கண்மாயை ஒட்டியவாறு அமைந்தது என்றும், தேவகுலம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்பதையும், இது பற்றிய கல்வெட்டை உருவாக்கிய போது மன்னர் இந்த ஆணையை வெளியிட, அறிஞர் குழு இதனை ஓலையில் எழுதி சரி பார்த்து பின்னர் இது கல்வெட்டில் செதுக்கப்பட்டது என்ற செய்தியையும் நாம் அறிய முடிகிறது. இந்த தேவகுலம் என குறிப்பிடப்படும் கோயில் அமைப்பானது சிறந்த நிர்வாக மையமாகவும் இருந்தது என்பதை நூலாசிரியர் சுட்டிக்காட்டுகின்றார்.

இதில் வருந்தத்தக்க செய்தி என்னவென்றால், இங்கு முக்கியமாக குறிப்பிடப்படும் கரூர் கல்வெட்டு இப்போது தொலைந்து போய்விட்டது என்ற செய்தி. அது ஒரு சிறு பாறையாக இருந்ததாலும், நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்ததாகவும், அதனைப் பற்றிய செய்தியை
அறிந்து அது பதியப்பட்ட பின்னரும் கூட பாதுகாப்பு
ஏற்பாடுகள் செய்யப்படாத காரணத்தினால் சாலை விரிவாக்கத்தின் போது அல்லது ஏதோ ஒரு காரணத்தினாலோ அது சிதைந்து உடைந்து காணாமல் போய்விட்டது. ஐம்பெரும் குழுவான வணிகக் குழுவைப் பற்றி கூறுகின்ற இந்த மிக முக்கியம் வாய்ந்த கிபி 5 அல்லது 6ஆம் நூற்றாண்டு கல்வெட்டு இன்று நாம் தொலைத்த ஒரு வரலாற்றுச் சின்னமாகிவிட்டது.

இந்த ஒரு கல்வெட்டு மட்டுமல்ல; நமது அக்கறையின்மை காரணத்தினாலும் வரலாற்றுச் சான்றுகளை மதிக்க தெரியாத மூடத்தனத்தினாலும் தமிழ்நாட்டு மக்கள் இழந்தவை ஏராளம்.
இழந்து கொண்டிருப்பதும் ஏராளம்!

தொடர்கிறது..!

-சுபா







தேமொழி

unread,
Nov 15, 2022, 8:57:09 PM11/15/22
to மின்தமிழ்
புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு
நூலாசிரியர்: ஆ.பத்மாவதி
வெளியீடு: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

- நூல் விமர்சனம்
முனைவர் க.சுபாஷிணி

தொடர்ச்சி . . .

​நூலின் ஐந்தாவது அத்தியாயம் களப்பி​ரர் கால ஊரமைப்பு பற்றியும் ​ நடைமுறைகளைப் பற்றியும் விவரிப்பதாக அமைகிறது. ​’​மங்க​லங்களின் பங்களிப்பு​’​ என தலைப்பிலேயே, இந்த அத்தியாயம் எதைப் பற்றி விவரிக்கிறது என்பதையும் வெளிப்படுத்தி விடுகிறார் நூலாசிரியர்.
களப்பிரர் கால ஆய்வுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால்  போதிய நேரடி ஆதாரங்கள் மிகக் குறைவாக கிடைத்திருப்பது தான்​.​ இந்தச் சூழலில் களப்பி​ரர் கால சமூக​, அரசியல் அமைப்பு மற்றும் நிர்வாக​ச்​ செய்திகளை அறிந்து கொள்வது எப்படி என்பது ஆய்வாளர்களுக்கு இருக்கும் ஒரு சவால்​.​ ஆயினும் கிடைக்கின்ற சான்றுகளை அடிப்படையாகக் கொண்டும்​,​ களப்பி​ரர் காலம் என சொல்லப்படுகின்ற கி.பி 300 இருந்து 500 காலகட்டத்திற்கு முன்னும் பின்னும் கிடைத்த சான்றுகளையும் வைத்து ஆய்வு செய்​யும் உத்தியையும் நூலாசிரியர் நூல் முழுமைக்கும் பயன்படுத்தியிருக்கிறார்.

அத்தியாயத்தின் தொடக்கத்தில் முற்கால பாண்டியர்களின் முக்கிய ஊர்களான பாண்டிமங்கலம்​,​ மூவேந்தமங்கலம்​,​ பாண்டி அமிர்த மங்கலம்​,​ வீரமங்கலம் பாண்டி இளங்கோ மங்கலம் ஆகிய பெயர்களை ஆய்வுக்கு உட்படுத்தி அவை குறிப்பிடப்படுகின்ற கல்வெட்டுகளை​,​ அவை கூறுகின்ற செய்திகளை ஆராய்வதாக இப்பகுதி தொடங்குகிறது.

மங்கலம் என்ற ஊர் பெயரில் கவனம் செலுத்திய போது ​'​மங்க​லம்​’​ என்பதே ​’​மங்கை​’​ என குறிப்பிடப்படுவது பற்றி சில உதாரணங்களோடு நூலாசிரியர் தரவுகளை வழங்குகிறார்​​. சான்றாக​,​ தஞ்சாவூர் மாவட்டத்தில் ​புள்ளமங்கலம் கல்வெட்டில் மங்கலமாகவும் தேவார இலக்கியங்களில் ​பு​ள்ள மங்கை என்று குறிப்பிடப்படுவதையும் வி​சயமங்கை​,​ கல்வெட்டில் விஜயமங்கலம் என குறிப்பிடப்படுவதையும் புத்தமங்கலம்​,​ போதிமங்கை என குறிப்பிடப்படுவதையும் நூலாசிரியர் இதற்கு​ச்​ சான்றாக விளக்குகின்றார்.

அதேபோல சங்கமங்கை​,​ மனற்றி மங்கை, போதிமங்கை போன்ற ஊர்கள் பௌத்தர்கள் வாழ்ந்த ஊர்கள்​;​ இவை ​’​மங்கை​’​ என்றும் அழைக்கப்பட்டன​;​ இங்கு மங்கை என்ற பெயரில் தெய்வம் வழிபாட்டில் இருந்தது என்பதையும் பிடாரி​,​ காளாபிடாரி​,​ மங்கை​,​ நங்கை ஆகிய பெயர்களில் ​இத்​தெய்வம் அழைக்கப்பட்டது என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.

தமிழ்நாட்டில் மகாயான பௌத்தம் பௌத்த துறவிகளால் கிபி ​3ஆம் நூற்றாண்டு அளவில் விரிவாக்கம் செய்யப்பட்டபோது தாராதேவி வழிபாடும் புகுத்தப்படுகிறது​.​ பின்னர் நகரலட்சுமி, தேவி​,​ குமரி​,​ கன்னி​,​ மங்கை ஆகிய தெய்வ வழிபாடுகள் இதன் தொடர்ச்சியாக அமைவதையும் காண்கிறோம். மகாயான பவுத்தம் தமிழகத்தில் நுழைவதற்கு முன்ன​ரா​கவே பவுத்தம் கிமு ​2ஆம் நூற்றாண்டு அளவில் காலூன்றி விட்டது​.​ ஆயினும் ம​கா​யானம் கிபி ​3ஆம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது பின்னரோ நுழைந்தது என்பதோடு மங்க​லம் என்ற ஊரமைப்பு ஏற்படவும் காரணமாகியது​ என்பதையும் இந்த அத்தியாயம் விளக்குகிறது. ​

மகிழ்ச்சி​,​ கொண்டாட்டம்​,​ வெற்றி ஆகியவற்றை பிரதிபலிக்கும் சொல்லான ​’​மங்கலம்​’​ என்பது வெற்றி தெய்வ​மான​ மங்​கை இருக்கும் ஊர் என்று வழங்கப்பட்டது என்றும் மங்கையே ​ மங்கலம் என்றும் வலியுறுத்துகிறார் நூலாசிரியர்.

காஞ்சிபுரம் பவுத்த தாக்கங்கள்​,​ தொல்லியல் அகழாய்வுகள்​,​ காம கோட்டம் என்ற சொல்லின் பௌத்த பின்னணி​,​ நேபாளச்சுவடி கூறும் காஞ்சிபுரம் பற்றிய தகவல்கள் ​போன்றவை ​​ இந்த அத்தியாயத்தில் விளக்கப்படுகின்றன.

மன்றங்கள் அமைக்கப்பட்டு அங்கு விவாதங்கள் நிகழ்த்தப்பட்​டு நிர்வாக அமைப்பு முறை​,​ பல்வேறு ஊர்களில் இருந்த காம கோட்டங்கள் பற்றிய செய்திகள் ஆகியவை களப்பி​ரர் கால சமய மற்றும் அரசு நிர்வாக அமைப்பு என்பது பவுத்த பின்னணியோடு நெருக்கமான முறையில் அமைந்திருந்தது என்பதை அறிய முடிகிறது.

களப்பி​ரர் தங்கள் ஆட்சியில் புதிய நகரங்களை ​’​மங்கலங்கள்​’​ என்ற பெயரில் உருவாக்கினர்​;​ மங்களங்களின் நடுவே உருவாக்கப்பட்ட கோயில்களில் ​’​மங்கை​’​ என்ற தெய்வம் வழிபடப்பட்டது​;​ ​  இத்​ தெய்வம்  காளி என்றும் பிடாரி என்று​  முன்னரே தமிழ் மக்களால் வணங்கப்பட்ட தெய்வங்கள் என்பது​ம்​ க​ளப்பிரர் காலத்தில் பவுத்த மதம்​, குறிப்பாக மகாயான பவுத்தம் இத்தெய்வங்களையும் உள்வாங்கிக் கொண்டு மங்கை என்ற பெயரில் இவ்வழிபாட்டை தொடர்ந்தது என்றும் நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

அதன் தொடர்ச்சியாக ஆறாம் அத்தியாயம் களப்பிரர்கால ஊராட்சி முறை பற்றி விவரிக்கிறது. மங்கலங்கள் உள்ள மங்கை கோட்டங்களில் மன்றங்கள் அல்லது சபைகள் செயல்பட்ட செய்தியும், சபாபதி என்ற தெய்வம் பற்றியும், இதற்கு முந்தைய அத்தியாயம் விளக்கியது. அதன் தொடர்ச்சியாக மங்கை கோட்டங்கள் என உருவாக்கம் கண்ட அமைப்பு முறை பிற்கால சதுர்வேதி மங்கலங்களின் சபை நடவடிக்கைகளுக்கு முன்னோடியாக இருந்திருக்க வேண்டும் என்றும், அதற்கு உதாரணமாக சாத்த மங்கலத்தில் உள்ள இரண்டாம் நந்திவர்மனின் கல்வெட்டு அமைகின்றது என்பதையும் நூலாசிரியர் முனைவர் பத்மாவதி குறிப்பிடுகின்றார்.

பல்லவ மன்னன் காலத்து கல்வெட்டாகினும் களப்பிரர் கால மங்கலம் என்ற ஊர் நிர்வாக முறையின் தொடர்ச்சியைக் காட்டுகின்ற கல்வெட்டாக இது அமைவதால் பிற்காலங்களில் காணப்படுகின்ற ’மன்றாடுதல்’ மற்றும் ’நிர்வாக முறை’ விவாதங்கள் போன்றவற்றிற்கான வளர்ச்சிக்கு ஆதாரமாக இவை உள்ளன என்பதையும் சுட்டிக் காட்டுகின்றார்.

களப்பிரர் காலத்திற்கு பின்னர் தோன்றிய சதுர்வேதி மங்களங்களின் வளர்ச்சிகண்ட  ஆட்சி முறை பற்றிய செய்திகள் வரலாற்று ஆசிரியர்களால் போற்றப்படுவதைச் சுட்டிக்காட்டி அவை களப்பிரர் காலத்தில் கூறப்பட்ட ’குடும்பாடுதல்’, ’மன்றாடுதல்’ போன்றவற்றின் தொடர்ச்சி தான் என்பதை கவனிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறார்.

ஊராட்சி பற்றி கூறும் தமிழகத்தின் மிகப் பழமையான கல்வெட்டு மானூர் என்ற பகுதியில் உள்ள மானூர் கல்வெட்டு. இது வேள்விக்குடி செப்பேட்டை வெளியிட்ட ஜடிலவர்மன் பராந்தக நெடுஞ்செடையன் அதாவது கிபி 804 ஆம் ஆண்டைச் சார்ந்த கல்வெட்டாகும். இந்தக் கல்வெட்டும் ஊர் நிர்வாகம் பற்றி தகவல் வழங்கும் முக்கிய ஒரு கல்வெட்டாக அமைகிறது. களப்பிரர்கால ஊராட்சி முறையின் அடித்தளத்தின் மேல் கட்டப்பட்டது தான் பாண்டியர், பல்லவர், சோழர் கால ஊராட்சி முறை என்பதை இத்தகைய கல்வெட்டுச் சான்றாதாரங்களோடு வரலாற்றைப் பின்னோக்கிச் சென்று நூலாசிரியர் விவரிக்கின்றார்.

இதன் தொடர்ச்சியாக சாஸ்தா என்ற தெய்வம் பற்றிய விளக்கமும் தொடர்கிறது. களப்பிரர்கால ஊர்களில் மங்கை கோட்டங்களில் உள்ள மண்டபங்களில் சபாபதி என வழிபடப்பட்ட தெய்வமே சாஸ்தாவாக வளர்ச்சி காணும் நிலை உருவாகியது. களப்பிரர் காலத்தில் மங்கை கோட்டங்களில் முக்கியத்துவம் பெற்ற மங்கை என்ற தெய்வமே மணிமேகலா தெய்வம் என்பதும், சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படுகின்ற மணிமேகலா தெய்வம் இந்தத் தெய்வமே என்பதையும் இங்கு நாம் நினைவு கூறலாம்.

களப்பிரர் காலத்துக்குப் பின்னான பல்லவர், பாண்டியர், சோழர்கள் காலத்து சதுர்வேதி மங்கலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட பல்வேறு நிர்வாக முறை நடவடிக்கைகளுக்குக் களப்பிரர் கால நிர்வாக முறை செயல்பாடுகள் அடித்தளம் அமைத்திருக்கின்றன என்ற கருதுகோளுக்கு இதன் வழி நாம் வர முடிகின்றது.

சங்ககாலம் முதல் அறியப்படுகின்ற அய்யனார் கோயில்கள் சாஸ்தா கோயில்களுடன் தொடர்புடையனவாக அமைகின்றன. இத்தகைய அய்யனார் கோயில்களில் ஊர் கூடி, ஊர் காரியங்கள் விவாதிக்கப்பட்டு, முடிவு எடுக்கப்பட்ட நிகழ்வுகளைக் கல்வெட்டுகள் பதிகின்றன.

களப்பிரர் ஆட்சி காலத்தில் சபை நிர்வாக ஒன்று கூடுதல்கள் சாஸ்தா கோயில்களில் நிகழ்ந்தமையும், 'மகாசாஸ்தா’ எனப்படும் சபாபதியே முக்கிய தெய்வமாகவும், அதேபோல மங்கை என்ற தெய்வம் முக்கிய தெய்வமாக திகழ்ந்தமையும் கல்வெட்டுச் சான்றுகளின் தொடர்ச்சியுடன் அறிய முடிகின்றன. ஊராட்சி நிர்வாகம் பற்றி விரிவாக விளக்கும் உத்திரமேரூர் கல்வெட்டுகள் போன்று மேலும் பல முக்கிய கல்வெட்டுகள் களப்பிரர் காலத்து சமூக நிர்வாக அமைப்பின் தொடர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் அமைகின்றன என்றே கருதலாம்.

நூலின் ஏழாவது அத்தியாயம் மிகக் குறிப்பாக மங்கை கோட்டத்து மன்றங்கள் என்ற தலைப்பில் பௌத்த சான்றுகளை விவரிக்கின்றன.
நூலாசிரியர் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை காப்பியத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் முதியோள் கோட்டம் என்ற கோட்டம் இருந்ததையும், அதில் சம்பாபதி கோயிலின் முன்னே உலக அருவி என்ற அம்பலம் இருந்தது என்பதையும் சுட்டிக்காட்டி விளக்கம் தருகின்றார். கண்ணகிக்கு எடுத்த கோட்டம் பற்றிய செய்திகள் சிலப்பதிகாரத்தில் மங்கல மடந்தைக் கோட்டம் என கூறப்பட்டிருப்பதையும் நூலாசிரியர் சுட்டிக்காட்டுகின்றார்.

களப்பிரர் காலத்தில் அம்மன்னர்களுக்கு மூத்த அரையர்களாக பணியாற்றிய முத்தரையர்கள் பிடாரிக்கு கோயில் எடுத்த செய்தியும், மூவேலி நிலம் மங்கலமாக கொடுக்கப்பட்ட செய்தியும் விளக்கப்படுகிறது. நியமத்தில் அழகிய தூண்களுடன் அமைக்கப்பட்டுள்ள சபைகளில் அதன் தூண்களில் முத்தரையர்களின் சிறப்பு பெயர்கள் பொறிக்கப்பட்ட செய்தியும் இக்கல்வெட்டில்  முத்தரையர்களின் தலைமுறை வரிசையாக கூறப்பட்டுள்ளது என்ற செய்தியும்  கிடைக்கின்றன. களப்பிரர் காலத்தில் பௌத்த சமயத்தை பின்பற்றிய இவர்கள் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் சைவத்திற்கும் வைணவத்திற்கும் மாறிய நிலையை இப்பகுதி விளக்குகிறது.

நூலின் எட்டாம் அத்தியாயம் தளவாய்புரச்செப்பேடு  கூறும் செய்து பற்றி விவரிக்கின்றது. நமக்கு கிடைத்திருக்கின்ற செப்பேடுகளில்  சுவாரசியமான தகவலை கொண்ட செப்பேடுகளின் வரிசையில் இதனையும் கூறலாம். முற்கால பாண்டியர் காலத்தில் பிரம்மதேயமாக பிராமணர்களுக்கு அளிக்கப்பட்ட நிலங்களைக் கடற்றிருக்கை கிழவன் என்ற மன்னன் எல்லைகள் அமைத்து மதுரதரநல்லூர் எனப் பெயரிட்டு குடிநிலமாகச்செய்துவிட்டான்; அந்த நிலத்தை அவனிடமிருந்து பெற்று மீண்டும் தங்களுக்கே தர வேண்டும் என முன்னர் பிரம்மதேயம் பெற்றிருந்த பிராமணர்களின் வழித்தோன்றல்கள் பாண்டிய மன்னனிடம் முறையிட அதை பாண்டிய மன்னன் பராந்தக வீரநாராயணன் அவைகளை மீட்டு பிராமணர்களுக்கே கொடுத்த செய்தி இந்தச் செப்பேட்டையில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த செப்பேட்டில் கூறப்பட்டிருக்கின்ற கடற்றிருக்கை கிழவன் என்பவன் களப்பிர மன்னர்களில் ஒருவராக இருக்கலாம்.

மேலும் திருத்தொண்டர் புராணத்தில் வருகின்ற கூற்றுவ நாயனார் என்பவருடைய ஊரான களந்தை என்ற ஊர் எதைக் குறிப்பிடுகிறது என்பதைப் பற்றியும் நூலின் இந்த அத்தியாயம் ஆராய்கிறது.  இந்தக் களந்தை என்ற ஊரில் தான் கூற்றுவநாயனார் அரசனாக வாழ்ந்தார் என்றும், இதுவும் களப்பிரர் காலச் சூழலை விவரிக்கும் இலக்கியத் தரவாக அமைகிறது என்பதையும் நூலாசிரியர் இந்த எட்டாம் அத்தியாயத்தின் வழியாக வெளிப்படுத்துகின்றார்.


தொடர்கிறது..!

-சுபா

---------------------------------------

நூல்: புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு
நூலாசிரியர்: ஆ.பத்மாவதி
வெளியீடு: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
விலை: ரூ 250/-
இணையம் வழி வாங்க விரும்புவோர்:  
https://dialforbooks.in/product/புதிய-நோக்கில்-களப்பிரர்/
---------------------------------------
பார்க்க:
https://www.facebook.com/photo/?fbid=3485620348348004&set=a.1388119661431427
https://www.facebook.com/subashini.thf/posts/pfbid02Ntj3cEDyMFvSQBzemfwzseZMcEgVNq3TZTsYczzRFuYSfLjEePr7dbNqEt8dR17gl
https://www.facebook.com/photo/?fbid=3491848967725142&set=a.1388119661431427

தேமொழி

unread,
Nov 22, 2022, 7:28:04 PM11/22/22
to மின்தமிழ்
 . . .புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு
 . . .  நூலாசிரியர்: ஆ.பத்மாவதி
 . . .  வெளியீடு: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

 . . .  - நூல் விமர்சனம்
 . . .முனைவர் க.சுபாஷிணி

 . . .  தொடர்ச்சி . . .

ஆறாம் நூற்றாண்டு தொடக்கம் பாண்டிய அரசர்கள் கால செயல்பாடுகளும், சங்ககாலத்தின் இறுதிப்பகுதி பாண்டிய மன்னர்களின் செயல்பாடுகளும், இரண்டும் அம்மன்னர்கள் வேத கேள்விகளை நடத்திய மறையோர்களை ஆதரித்தமையை வெளிப்படுத்துகின்றன. ஆக இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஆட்சி செய்த மன்னர்கள் அதற்கு எதிரான கொள்கையைக் கொண்டவர்களாக இருக்கலாம் என்ற கருத்து வலுவாகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் வேதியர்களுக்கு வழங்கப்பட்ட பிரம்மதேய நிலத்தை இந்த இடைப்பட்ட காலத்து மன்னன் ஒருவன் கைப்பற்றிக் கொண்டதை விவரிக்கும் கல்வெட்டுச் செய்திகளும் செப்பேட்டு செய்திகளும் இக்கருத்தை ஆதரிக்கும் வகையில் அமைகின்றன.
வேள்விக்குடி செப்பேட்டை போலவே தளவாய்புரம் செப்பேடும் களப்பிரர்கள் வேதியருக்கு எதிரானவர்கள் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அமைகிறது. இது கூறும் செய்திகளுள் கடுங்கோன் என்ற மன்னன் வேதியர்களுக்குப் பிரம்ம தேயமாக ஒரு ஊரைக் கொடுத்த செய்தி அமைகிறது. இந்தக் கடுங்கோன் என்ற பாண்டிய மன்னன் களப்பிர அரசர்களை போரிட்டு வென்று பாண்டிய நாட்டில் மீண்டும் ஆட்சியை நிலைநாட்டியவன்.

இந்த இரண்டு செப்பேடுகளுமே பாண்டிய மன்னர்கள் வைதீகர்களுக்கு நெருக்கமான உறவில் இருந்தமையை வெளிக்காட்டுகின்றன. இதனை மிக நுணுக்கமாகவும் விரிவாகவும் நூலாசிரியர் நூலின் ஒன்பதாம் அத்தியாயத்தில் பட்டியலிட்டுக் காட்டுகின்றார்.
வரலாற்று அறிஞர் மயிலை சீனி வேங்கட சாமி அவர்களது களப்பிரர் ஆட்சியில் தமிழகம் என்ற நூல் குறிப்பிடும் செய்திகளும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை.
பாண்டியர் கால செப்பேடுகள் கூறுகின்ற தகவல்களைப் போல பல்லவர் காலத்து செப்பேடுகளும் களப்பிரர்கள் பற்றிய சில தகவல்களை குறிப்பிடுவது பற்றியும் இந்த அத்தியாயம் மேலும் தொடர்கிறது. ‌‌

நூலின் பத்தாவது அத்தியாயம் பாண்டியருக்கு ஆதரவளித்த தலைவர்கள் பற்றிய குறிப்புகளை வழங்குகிறது. அந்த வகையில் மாறன்காரி என்பவன் மாறன் எயினன், மூர்த்தி எயினன், சாத்தன் கணபதி, ஏனாதி சாத்தன் சாத்தன் போன்ற தலைவர்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டு அவர்கள்  தொடர்பான தகவல்கள் இப்பகுதியில் விளக்கப்படுகின்றன. பாண்டியர் ஆட்சி செய்த பகுதிகளில் அரசியல் தலைவர்களாக இருந்தவர்கள் பெயர்கள் விவரிக்கப்படுகின்றன. யானைப்படை தலைவர்கள்.. பல்வேறு வகையில் ஆதரவளித்த இனக் குழு தலைவர்கள் என்போர் பற்றிய செய்திகளும் இடம்பெறுகின்றன.

சிற்றரசர்களாக வளர்ச்சி கண்ட முத்தரையர்கள் பற்றியும் இப்பகுதியில் நீண்ட விளக்கம் கிடைக்கின்றது.
பாண்டியர் காலம் என்பது மட்டுமல்லாமல் சோழ நாட்டில் சோழர் ஆட்சி விரிவான பின்னர் களப்பிரர்கள் அங்கு வாழ்ந்தமையும், அவர்களது ஆதரவு மற்றும் செயல்பாடுகளும் பற்றிய செய்திகளும் தொடர்கின்றன. முதலாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் நெற்குன்றவாணர் என்ற களப்பாளராயர் திருப்புகலூரில் மருத்துவமனையை நிறுவி தானம் செய்த செய்தி நல்ல சான்றாக அமைகின்றன. அதேபோல இரண்டாம் ராசாதிராசன் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்திலும்  பல களப்பாளராயர்கள் உயர் பதவியில் இருந்து அரசுக்கு துணை நின்ற செய்தியும் கிடைக்கின்றன.

களப்பிரர் காலத்தில் பேசப்பட்ட அல்லது பயன்பாட்டில் இருந்த மொழி எதுவாக இருக்கும் என்ற விடைதேடும் வகையாக நூலின் அத்தியாயம் 11 அமைகிறது. பல்வேறு ஆய்வாளர்கள் தமிழ் அல்லாத வேற்று மொழியாக இருக்கலாம் என்ற கருத்துக்களை முன் வைக்கும் போது அவற்றிற்குப் பதில் அளிக்கும் வகையில் பூலாங்குறிச்சி கல்வெட்டை ஆதாரமாகக் கொண்டு தனது விளக்கத்தை வழங்கியிருக்கிறார் நூலாசிரியர் முனைவர் பத்மாவதி.

சங்க காலத்துச் செய்திகளைக் குறிப்பிடுகின்ற தமிழி கல்வெட்டுகளின் தொடர்ச்சியில் அமைவது இந்தப் பூலாங்குறிச்சி கல்வெட்டாகும். இந்தப் பூலாங்குறிச்சி கல்வெட்டில் உள்ள வாக்கிய அமைப்புகள், உரைநடைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைகின்ற நிலையையும், இவை அழகிய தமிழ் நடையில் பிறமொழிச் சொற்கள் கலப்பில்லாமல் எழுதப்பட்டிருக்கின்ற விதத்தையும் ஆசிரியர் சுட்டிக் காட்டுகின்றார். ஆக, களப்பிரர்கள் பிற மொழி கலக்காத தமிழ் மொழி பயன்பாட்டைக் கொண்ட அரசு நிர்வாகத்தைக் கொண்டிருந்தனர் என்பதற்கு இது ஒரு சான்றாக உள்ளது. தமிழி எழுத்து வடிவத்தில் இருந்து வளர்ச்சி கண்ட எழுத்துருவான வட்டெழுத்தையும் தமிழ் மொழியையும் களப்பிரர்கள் ஆட்சி மொழியாகக் கொண்டிருந்தனர் என்பதையும் நிறுவுகிறார்.

அதேபோல தமிழ்நாட்டில் கலைகள், கட்டிடக்கலை போன்றவை இக்காலகட்டத்தில் வளர்ச்சி பெறாமல் இருந்தன என்ற குற்றச்சாட்டுகளுக்கு விளக்கங்களை அளித்து இக்காலகட்டத்தில் கலைகளும் கட்டிடக்கலைகளும் நடனக் கலைகளும் வளர்ச்சி கண்டன என்பதையும் விளக்குகின்றார்.
களப்பிரர்களின் சமயம் என்பதை பற்றி ஆராயும் போது பல்வேறு கருத்துக்களை ஆராய்ந்து அவற்றிற்குப் பதில் அளித்து, களப்பிரர்கள் பௌத்த சமயத்தை பின்பற்றி வளர்த்த பௌத்தர்களே என்பதை தெளிவாக நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.

நூலின் அடுத்த அத்தியாயம் சங்க காலத்திலும் அதற்கு அடுத்து களப்பிரர் காலத்திலும் கிடைத்த நடுகல்களை ஆராய்கிறது. கி.மு 4 அல்லது 3ஆம் நூற்றாண்டு புலிமான் கோம்பை நடுகற்கள் தாமரைக்கரை நடுகல், இன்னும் சில சற்றே பிற்காலத்தைவையும் ஈமக்கிரியைச் சடங்குகளுடன் தொடர்புடைய வகையில் அமைந்திருப்பதை இப்பகுதி விளக்குகிறது.
வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு உருவாக்கப்பட்ட களப்பிரர் கால நடுகற்களை அடையாளம் காட்டுவதற்குச் சங்க காலத்தைச் சார்ந்த புலிமான் கோம்பை நடுகல் கல்வெட்டு உதவி இருக்கின்றது என்று நூலாசிரியர் இப்பகுதியை நிறைவு செய்கிறார்.

களப்பிரர் காலத்து மொழி, சமூக நிலை, கலைகளின் வளர்ச்சி, சமயம், இறப்புச் சடங்குகள், வாழ்வியல், வணிகம் எனப் பல்வேறு கோணங்களில் நூலாசிரியர் தனது ஆய்வை உருவாக்கி இந்நூலைக் கொண்டு சென்றிருப்பது வாசிப்போருக்குக் களப்பிரர் காலத்தைப் பல்வேறு கோணங்களில் புரிந்து கொள்ள வாய்ப்பளிக்கிறது.

நூலின் 13 வது பகுதி பாண்டியர்களும் பல்லவர்களும் சமய ரீதியாக வைதீக சமயத்தையும் சமண சமயத்தையும் ஆதரித்த சான்றுகளையும் அவை தொடர்பான செய்திகளையும் ஆராய்கின்றது.பாண்டிய மன்னன் மாறவர்மன் இராஜசிம்மனுக்குப் படைத்தளபதியாகப் பணியாற்றிய மாறங்காரி அதன் தொடர்ச்சியாக ஜடிலவர்மன் பராந்தக நெடுஞ்செழியன் காலத்திலும் தொடர்ந்து மாறங்காரியும் அவனது தம்பிகளும் துணை இருந்த செய்திகள், இவர்கள் கட்டிய வைணவக் கோயில்கள், சிவன் கோயில்கள் பற்றிய செய்திகள் இதற்குச் சான்றாக காட்டப்படுகின்றன. அது மட்டுமின்றி, வேள்விக்குடி செப்பேட்டின் மூலம் அறியப்படுகின்ற, பாண்டிய மன்னன் அந்தணர்களுக்குப் பிரம்மதேயம் வழங்கிய செய்திகளும் பாண்டியர்களின் வைதீக ஆதரவை வெளிப்படுத்துகின்றன.

அதேபோல பாண்டியர்கள் சமண வழிபாட்டை ஆதரித்தவர்களாக இருந்த செய்திகளும் இவர்களது சமண ஆதரவை வெளிப்படுத்துகின்றன. சித்தன்னவாசல் குடைவரை கோயில் புதுப்பிக்கப்பட்ட செய்திகள், சமணப் பள்ளிக்கு வழங்கப்பட்ட கொடைகள் ஆகியவற்றை இங்குக் குறிப்பிடலாம். வைதீக சமயத்தவரும் சமணர்களும் கைகோத்திருந்த முக்கிய செய்தியைக் கல்வெட்டு தெரிவிக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டி, பாண்டியர்கள் சமண சமயத்திற்கும் வைதீக மதத்திற்கும் ஆதரவளித்தவர்கள் என்பதை நூலாசிரியர் விவரிக்கின்றார்.

தங்களைப் பிரம்மசத்திரியர் என்று கூறிக் கொள்கின்ற பல்லவர்களும் வைதீகத்தை ஆதரித்தனர்; பௌத்தத்தை கேலி செய்யும் வகையில் எழுதப்பட்ட மத்த விலாச பிரகசனம் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனால் எழுதப்பட்டது போன்ற செய்திகளோடு, வைதீகத்தோடு சமணத்திற்கும் பேராதரவு வழங்கியவர்களாக பல்லவர்களின் சமய ஆதரவு இக்காலகட்டத்து செப்பேடு, கல்வெட்டுத்தரவுகள் வழி வெளிப்படுகின்றது. பாண்டியர்களும் பல்லவர்களும் வைதீக சமயத்திற்கும் சமண சமயத்திற்கும் பேராதரவு அளித்ததும் அதில் முக்கியமாக வைதீக சமயத்தைத் தழுவி ஆட்சி புரிவதை அரசின் கொள்கையாக வகுத்து ஆட்சி செய்தனர் என்றும், அவர்களுக்குப் பொது எதிரி பௌத்த சமயம் தான் என்றும் நூல் ஆசிரியர் சுட்டிக்காட்டி இக்கால கட்டங்களில் எந்த பௌத்த கோயில்களிலும் வழிபாடுகள் பற்றிய செய்திகள் கிடைக்கவில்லை என்பதையும் குறிப்பிடுகின்றார்.

வைணவத்தோடு தொடர்புடையவையாக, மேலும் களங்குடி வைத்திய குல சிகாமணி மாறங்காரியை ஆனைமலை கல்வெட்டு மதுரகவி என்று குறிப்பிடுவதால் மாரங்காரியே மதுரகவி ஆழ்வார் என்பதை இரா.நாகசாமி கூறியிருப்பதையும் சுட்டிக்காட்டுகின்றார். அதுபோல காரிமாறன் என்ற நம்மாழ்வார் குருகூர் என்ற ஊரில் வாழ்ந்ததாகவும் அவர் ஊரின் தலைவராக, சிற்றரசர்ப்போல வாழ்ந்தார் என்ற செய்தியையும் மாறங்காரி நம்மாழ்வாரின் சீடர் என்பதையும் இப்பகுதி விளக்குகின்றது. நம்மாழ்வாரும் மதுரகவி ஆழ்வாரும் ஜடிலவர்மன் பரந்தக நெடுஞ்சடையன் காலத்தவர்கள். இம்மன்னனது மகன் ஸ்ரீமாரன் ஸ்ரீவல்லவன் பெரியாழ்வார் சமகாலத்தவர் என்பதோடு, பெரியாழ்வார் பாடல்களில் ஸ்ரீமாறன் பல இடங்களில் புகழப்படுவதையும் இப்பகுதி விளக்குகின்றது. இச்செய்திகள் இப்பாண்டிய மன்னர்களின் வைதீக மற்றும் வைணவ ஆதரவை வெளிப்படுத்துகின்றன.

களப்பிரர் காலத்தில் பௌத்தம் முக்கிய சமயமாக இருந்ததையும், அவர்கள் ஆட்சி காலத்தில் களப்பிர ஆட்சியாளர்கள் முத்தரையர்கள் மற்றும் வணிகர்கள் பலரால் ஆதரிக்கப்பட்டு வந்த செய்தியை நூலின் முதல் சில பகுதிகளில் விளக்கப்பட்டுவதை முந்தைய பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். களப்பிரர்களுக்குப் பின்னர் ஆட்சியைக் கைப்பற்றிய பாண்டியர்களும் பல்லவர்களும் பௌத்த சமய எதிர்ப்பாளர்களாக இருந்து முக்கியமாக வைதீகத்தை ஆதரித்திருக்கின்றனர். தங்களுக்கு முத்தரையர்கள் அளித்த ஆதரவை விலக்கிவிட்டு சோழ மன்னன் விஜயாலயனுக்கு அளித்த ஆதரவு படிப்படியாக பல்லவர்கள் வீழ்ச்சிக்கு காரணமாகியது. அதேபோல களக்குடி வைத்திய குலத்தினர் ஆதரவை இழந்த பாண்டியர்கள் ஆட்சியும் வலுவிழந்து சோழர்கள் ஆட்சி தமிழ்நாட்டில் விரிவு காண காரணமாகியது என்றும், இதன் அடிப்படையில் களப்பிர அரசுக்கு ஆதரவளித்து பணிபுரிந்த இத்தலைவர்கள் வலிமையும், படைபலமும், அரசியல் நுணுக்கமும் அறிந்த நிபுணர்கள் தான் என்பதையும் நூலாசிரியர் நூலின் 13ஆம் பகுதியில் வலியுறுத்துகின்றார்.

 . . . தொடர்கிறது..!

 . . .   -சுபா

 . . .   ---------------------------------------

 . . .   நூல்: புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு
 . . .   நூலாசிரியர்: ஆ.பத்மாவதி
 . . .   வெளியீடு: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
 . . .   விலை: ரூ 250/-
 . . .   இணையம் வழி வாங்க விரும்புவோர்:  
 . . .   https://dialforbooks.in/product/புதிய-நோக்கில்-களப்பிரர்/
 . . .   ---------------------------------------
 . . .   பார்க்க:

Dr. Mrs. S. Sridas

unread,
Nov 22, 2022, 7:59:25 PM11/22/22
to mint...@googlegroups.com
முனைவர் தேமொழி அவர்களுக்கு,

நான் மாசி மாதத் தொடக்கத்தில் தமிழ் நாட்டிற்று வரவுள்ளேன். இது ஒரு மாத தென் இந்தியச் சுற்றுலா. எப்போ சென்னையில் இருப்போம் என்று கூற முடியவில்லை. உங்கள் வரலாற்று நூல்கள் அனைத்தையும் கொள்வனவு செய்ய விரும்புகிறேன். சென்னையில் யாரைத் தொடர்பு கொள்ளவேண்டும், அவர் முகவரி, தொலைபேசி எண் போன்றவற்றை அறியத்தந்தால் பெரும் உதவியாக இருக்கும். நன்றி.
அன்புடன்

Dr. Mrs. S. Sridas




--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/ed1e08b5-ee8a-410f-aaae-1c8cf53c7330n%40googlegroups.com.

தேமொழி

unread,
Nov 23, 2022, 3:38:56 AM11/23/22
to மின்தமிழ்
புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு
நூலாசிரியர்: ஆ.பத்மாவதி
வெளியீடு: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

padmavathi - new kalapirar history book.jpg
நூல் விமர்சனம்
முனைவர் க.சுபாஷிணி

தொடர்ச்சி . . .

இந்த நூலின் இறுதிப் பகுதி களப்பிரர்களது போராட்டமும் வெற்றியும் என்ற பொருளில் கிபி 6ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு களப்பிரர் ஆதரவு பெற்றவர்களின் நிலை, அவர்கள் அளித்த ஆதரவு, அதன் தொடர்ச்சியாக பௌத்த, சமண மதங்களின் நிலை ஆகிய செய்திகளையும் ஆராய்கிறது.
புத்ததத்தர் களப்பிர மன்னனை கலபகுளம் என பாலி மொழியில் குறிப்பிடுவது.. கலப என்பது இளம் யானை அல்லது யானை குட்டி என்று பொருள் தருவதால் கங்க மன்னர்களின் கொடியில் யானைச் சின்னம் இருப்பதையும் நூலாசிரியர் ஒப்பிட்டு களப்பிரரும் யானைச் சின்னத்தைத் தங்கள் கொடியில் கொண்டிருக்க வேண்டும் என்ற ஊகத்தையும் முன்வைக்கின்றார். இதன் அடிப்படையில் அவர்கள் களப்பிரர் என அழைக்கப்பட்டிருக்கலாம் என்று குறிப்பிடுகிறார்.

அடுத்து கலிதேவ வழிபாடு கன்னடத்தில் பரலாக இருந்த செய்தியையும், கலிகுலத்தையும் அது பற்றிய செய்திகளையும், இரண்டாம் புலிகேசியின் கொப்பரம் செப்பேடு கூறுவதையும் சுட்டிக்காட்டி, இதனால் தான் தமிழ் செப்பேடுகள் களப்பிரரை கலியரசர் என்றும் கூறுகின்றன என்ற கருத்தையும் முன்வைக்கின்றார்.
பல்லவர்களும், பாண்டியர்களும் களப்பிரர்களை வெற்றி கண்ட பின்னர் பௌத்த மதத்திற்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. ஓரளவிற்குச் சமணம் ஆதரவை பெற்று படிப்படியாக வளர்ச்சி உற்ற போதிலும், வைதீக சமயமே முன்னிலை பெற்று அரச சார்பும் ஆதரவும் பெற்ற மதமாக மாற்றம் கண்டது என்பதையும் காணமுடிகின்றது.

கொங்குப் பகுதியிலும் களப்பிர அரசர்கள் தொடர்புடைய செய்திகள், குறிப்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொன்னிவாடி, வெள்ளலூர் ஆகிய ஊர்களில் கிடைத்த கல்வெட்டுகளின் வழி கூறப்படும் செய்திகளாக வெளிப்படுகின்றன.
சமணத் தீர்த்தங்கரர்களின் சிலைகளும் புத்தர் சிலைகளும் சிதைந்து உடைந்து பல இடங்களில் காணப்பட்டாலும் கூட பௌத்தமும் சமணமும் கருத்தளவில் ஆங்காங்கே தாக்குப் பிடித்துக் கொண்டு நிலைத்து வந்துள்ளன என்ற நூலாசிரியரின் கருத்து நோக்குதற்குரியது.
நூலின் இறுதியில் முடிவுரையாக ஆசிரியர் வழங்கி இருக்கும் செய்திகள் இந்த ஆய்வை முழுமையாகப் புரிந்து கொள்ள உதவும் வகையில் அமைகின்றன. நூல் கூறும் முக்கியச் செய்திகள் இப்பகுதியில் தொகுத்து வழங்கப்பட்டிருக்கின்றன. மேலும் ஒரு செய்தியையும் நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். குடைவரை கோயில்கள் எனும் போது பல்லவர்களே தமிழ்நாட்டில் குடைவரை கோயில்களுக்கு முன்னோடிகள் என்ற கருத்துக்கு மாறாக பாண்டிய நாட்டில் ஏராளமான குடைவரைக் கோயில்கள் முற்றுப்பெறாமல் பல்லவர் காலத்திற்கு முன்பே அமைக்கப்பட்டன என்ற செய்தியையும், அவற்றுள் களப்பிரர் தோற்றுவித்த குடைவரை என்பதையும் அதற்குச் சான்றாக பிள்ளையார்பட்டி விநாயகர், அங்குள்ள கல்வெட்டு ஆதாரங்களைச் சான்றாக காட்டுகின்றார். மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேலைச்சேரி குடைவரை கோயிலையும் களப்பிர சிற்றரசன் ஒருவனின் மனைவி தோற்றுவித்த கதையையும் செய்தியையும் குறிப்பிடுகின்றார். இது ஒடிசாவிற்குச் சென்றிருந்த போது நான் அங்கு நேரில் பார்த்த கிபி2ம் நூற்றாண்டு குடைவரையையும் அங்குள்ள ஆரம்பகால பிள்ளையார்  சிலையையும் நினைவுறுத்துகின்றன.

களப்பிரர் ஆட்சிக்குப் பின்னர் பாண்டியர்களும் பல்லவர்களும் முந்தைய ஊர் ஆட்சியையும் நிர்வாகத்தையும் அரசியல் ரீதியாக மாற்றி அமைத்தாலும் ஆட்சி முறையையும் நிர்வாக முறையையும் அதன் உள்ளடக்கத்தை உள்வாங்கிக் கொண்டு தங்கள் கொள்கைக்கு ஏற்றார் போல் ஆட்சி அமைத்தனர் என்ற கருத்தை முன்வைக்கின்றார்.
களப்பிரர்கள் யார் என்ற கேள்விக்கு விடை காணும் வகையில் கர்நாடக பின்னணி கொண்ட தலைவர்கள், தமிழ்நாட்டில் இருந்த சிற்றூர் தலைவர்கள் மற்றும் வணிகர்கள் இணைந்து அமைத்த கூட்டு ஆட்சியே களப்பிரர்கள் ஆட்சி என்ற வகையில் விளக்கம் அளிக்கின்றார். இந்த களப்பிரர்கள் பிரம்மதேய எதிர்பாளர்களே தவிர தமிழ் எதிர்பாளர்கள் அல்ல என்றும், மாறாக தமிழ் ஆதரவாளர்கள என்றும் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு தமிழ், தமிழர், தமிழ்நாடு என்பதை காப்பாற்றி வளர்த்து வளர்ச்சி பாதையில் முன்னெடுத்துச் சென்றவர்கள் களைப்பிரர் .. அவர்கள் தமிழ்த் தலைவர்களே என்று தனது முடிவுரையாக நூலை முடித்திருக்கின்றார் நூலாசிரியர்.
விரிவான ஒரு ஆய்வு.

நடுகல்கள், கல்வெட்டுக்கள், செப்பேடுகள், இலக்கியங்கள் போன்ற முக்கிய சான்றாதாரங்களைப் பயன்படுத்தி, சங்க கால செய்திகள், களப்பிரர் காலத்துக்குப் பிந்தைய பல்லவர் பாண்டியர் சோழர்கள் கால செய்திகள் ஆகியவற்றை ஒப்பீடு செய்து களப்பிரர் காலத்து நிர்வாக ஆட்சி முறை, சமயம் தமிழ் மொழி நிலைப்பாடு, வணிகம் என்ற வகையில் இந்த நூல் பலகோணங்களில் ஆய்வுப்பார்வையுடன் வெளிவந்துள்ளது.

வரலாற்று மாணவர்கள் அனைவரும் பயன்படும் வகையில் நூலை ஆசிரியர் முனைவர்.ஆ.பத்மாவதி உருவாக்கி இருக்கின்றார். தமிழ்நாட்டு கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் தங்களது தமிழ்த் துறை மற்றும் வரலாற்றுத் துறை பாட நூல்களில் ஒன்றாக இதனை ஏற்றுக்கொண்டு வரலாற்றில் புதிய பார்வையைக் மாணவர்களுக்கு வழங்க முயற்சிக்க வேண்டும்.
நூலாசிரியர் முனைவர் ஆ.பத்மாவதிக்கு எனது பாராட்டுக்களும் நல்வாழ்த்துக்களும்.

 -சுபா

------------------------------------
---நூல்: புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு
---  நூலாசிரியர்: ஆ.பத்மாவதி
---  வெளியீடு: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
---  விலை: ரூ 250/-
---  இணையம் வழி வாங்க விரும்புவோர்:  
---    https://dialforbooks.in/product/புதிய-நோக்கில்-களப்பிரர்/
-----------------------------------------
Reply all
Reply to author
Forward
0 new messages