புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு
நூலாசிரியர்: ஆ.பத்மாவதி
வெளியீடு: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
- நூல் விமர்சனம்
முனைவர் க.சுபாஷிணி
தொடர்ச்சி . . .
நூலின் ஐந்தாவது அத்தியாயம் களப்பிரர் கால ஊரமைப்பு பற்றியும் நடைமுறைகளைப் பற்றியும் விவரிப்பதாக அமைகிறது. ’மங்கலங்களின் பங்களிப்பு’ என தலைப்பிலேயே, இந்த அத்தியாயம் எதைப் பற்றி விவரிக்கிறது என்பதையும் வெளிப்படுத்தி விடுகிறார் நூலாசிரியர்.
களப்பிரர் கால ஆய்வுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் போதிய நேரடி ஆதாரங்கள் மிகக் குறைவாக கிடைத்திருப்பது தான். இந்தச் சூழலில் களப்பிரர் கால சமூக, அரசியல் அமைப்பு மற்றும் நிர்வாகச் செய்திகளை அறிந்து கொள்வது எப்படி என்பது ஆய்வாளர்களுக்கு இருக்கும் ஒரு சவால். ஆயினும் கிடைக்கின்ற சான்றுகளை அடிப்படையாகக் கொண்டும், களப்பிரர் காலம் என சொல்லப்படுகின்ற கி.பி 300 இருந்து 500 காலகட்டத்திற்கு முன்னும் பின்னும் கிடைத்த சான்றுகளையும் வைத்து ஆய்வு செய்யும் உத்தியையும் நூலாசிரியர் நூல் முழுமைக்கும் பயன்படுத்தியிருக்கிறார்.
அத்தியாயத்தின் தொடக்கத்தில் முற்கால பாண்டியர்களின் முக்கிய ஊர்களான பாண்டிமங்கலம், மூவேந்தமங்கலம், பாண்டி அமிர்த மங்கலம், வீரமங்கலம் பாண்டி இளங்கோ மங்கலம் ஆகிய பெயர்களை ஆய்வுக்கு உட்படுத்தி அவை குறிப்பிடப்படுகின்ற கல்வெட்டுகளை, அவை கூறுகின்ற செய்திகளை ஆராய்வதாக இப்பகுதி தொடங்குகிறது.
மங்கலம் என்ற ஊர் பெயரில் கவனம் செலுத்திய போது 'மங்கலம்’ என்பதே ’மங்கை’ என குறிப்பிடப்படுவது பற்றி சில உதாரணங்களோடு நூலாசிரியர் தரவுகளை வழங்குகிறார். சான்றாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் புள்ளமங்கலம் கல்வெட்டில் மங்கலமாகவும் தேவார இலக்கியங்களில் புள்ள மங்கை என்று குறிப்பிடப்படுவதையும் விசயமங்கை, கல்வெட்டில் விஜயமங்கலம் என குறிப்பிடப்படுவதையும் புத்தமங்கலம், போதிமங்கை என குறிப்பிடப்படுவதையும் நூலாசிரியர் இதற்குச் சான்றாக விளக்குகின்றார்.
அதேபோல சங்கமங்கை, மனற்றி மங்கை, போதிமங்கை போன்ற ஊர்கள் பௌத்தர்கள் வாழ்ந்த ஊர்கள்; இவை ’மங்கை’ என்றும் அழைக்கப்பட்டன; இங்கு மங்கை என்ற பெயரில் தெய்வம் வழிபாட்டில் இருந்தது என்பதையும் பிடாரி, காளாபிடாரி, மங்கை, நங்கை ஆகிய பெயர்களில் இத்தெய்வம் அழைக்கப்பட்டது என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.
தமிழ்நாட்டில் மகாயான பௌத்தம் பௌத்த துறவிகளால் கிபி 3ஆம் நூற்றாண்டு அளவில் விரிவாக்கம் செய்யப்பட்டபோது தாராதேவி வழிபாடும் புகுத்தப்படுகிறது. பின்னர் நகரலட்சுமி, தேவி, குமரி, கன்னி, மங்கை ஆகிய தெய்வ வழிபாடுகள் இதன் தொடர்ச்சியாக அமைவதையும் காண்கிறோம். மகாயான பவுத்தம் தமிழகத்தில் நுழைவதற்கு முன்னராகவே பவுத்தம் கிமு 2ஆம் நூற்றாண்டு அளவில் காலூன்றி விட்டது. ஆயினும் மகாயானம் கிபி 3ஆம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது பின்னரோ நுழைந்தது என்பதோடு மங்கலம் என்ற ஊரமைப்பு ஏற்படவும் காரணமாகியது என்பதையும் இந்த அத்தியாயம் விளக்குகிறது.
மகிழ்ச்சி, கொண்டாட்டம், வெற்றி ஆகியவற்றை பிரதிபலிக்கும் சொல்லான ’மங்கலம்’ என்பது வெற்றி தெய்வமான மங்கை இருக்கும் ஊர் என்று வழங்கப்பட்டது என்றும் மங்கையே மங்கலம் என்றும் வலியுறுத்துகிறார் நூலாசிரியர்.
காஞ்சிபுரம் பவுத்த தாக்கங்கள், தொல்லியல் அகழாய்வுகள், காம கோட்டம் என்ற சொல்லின் பௌத்த பின்னணி, நேபாளச்சுவடி கூறும் காஞ்சிபுரம் பற்றிய தகவல்கள் போன்றவை இந்த அத்தியாயத்தில் விளக்கப்படுகின்றன.
மன்றங்கள் அமைக்கப்பட்டு அங்கு விவாதங்கள் நிகழ்த்தப்பட்டு நிர்வாக அமைப்பு முறை, பல்வேறு ஊர்களில் இருந்த காம கோட்டங்கள் பற்றிய செய்திகள் ஆகியவை களப்பிரர் கால சமய மற்றும் அரசு நிர்வாக அமைப்பு என்பது பவுத்த பின்னணியோடு நெருக்கமான முறையில் அமைந்திருந்தது என்பதை அறிய முடிகிறது.
களப்பிரர் தங்கள் ஆட்சியில் புதிய நகரங்களை ’மங்கலங்கள்’ என்ற பெயரில் உருவாக்கினர்; மங்களங்களின் நடுவே உருவாக்கப்பட்ட கோயில்களில் ’மங்கை’ என்ற தெய்வம் வழிபடப்பட்டது; இத் தெய்வம் காளி என்றும் பிடாரி என்று முன்னரே தமிழ் மக்களால் வணங்கப்பட்ட தெய்வங்கள் என்பதும் களப்பிரர் காலத்தில் பவுத்த மதம், குறிப்பாக மகாயான பவுத்தம் இத்தெய்வங்களையும் உள்வாங்கிக் கொண்டு மங்கை என்ற பெயரில் இவ்வழிபாட்டை தொடர்ந்தது என்றும் நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
அதன் தொடர்ச்சியாக ஆறாம் அத்தியாயம் களப்பிரர்கால ஊராட்சி முறை பற்றி விவரிக்கிறது. மங்கலங்கள் உள்ள மங்கை கோட்டங்களில் மன்றங்கள் அல்லது சபைகள் செயல்பட்ட செய்தியும், சபாபதி என்ற தெய்வம் பற்றியும், இதற்கு முந்தைய அத்தியாயம் விளக்கியது. அதன் தொடர்ச்சியாக மங்கை கோட்டங்கள் என உருவாக்கம் கண்ட அமைப்பு முறை பிற்கால சதுர்வேதி மங்கலங்களின் சபை நடவடிக்கைகளுக்கு முன்னோடியாக இருந்திருக்க வேண்டும் என்றும், அதற்கு உதாரணமாக சாத்த மங்கலத்தில் உள்ள இரண்டாம் நந்திவர்மனின் கல்வெட்டு அமைகின்றது என்பதையும் நூலாசிரியர் முனைவர் பத்மாவதி குறிப்பிடுகின்றார்.
பல்லவ மன்னன் காலத்து கல்வெட்டாகினும் களப்பிரர் கால மங்கலம் என்ற ஊர் நிர்வாக முறையின் தொடர்ச்சியைக் காட்டுகின்ற கல்வெட்டாக இது அமைவதால் பிற்காலங்களில் காணப்படுகின்ற ’மன்றாடுதல்’ மற்றும் ’நிர்வாக முறை’ விவாதங்கள் போன்றவற்றிற்கான வளர்ச்சிக்கு ஆதாரமாக இவை உள்ளன என்பதையும் சுட்டிக் காட்டுகின்றார்.
களப்பிரர் காலத்திற்கு பின்னர் தோன்றிய சதுர்வேதி மங்களங்களின் வளர்ச்சிகண்ட ஆட்சி முறை பற்றிய செய்திகள் வரலாற்று ஆசிரியர்களால் போற்றப்படுவதைச் சுட்டிக்காட்டி அவை களப்பிரர் காலத்தில் கூறப்பட்ட ’குடும்பாடுதல்’, ’மன்றாடுதல்’ போன்றவற்றின் தொடர்ச்சி தான் என்பதை கவனிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறார்.
ஊராட்சி பற்றி கூறும் தமிழகத்தின் மிகப் பழமையான கல்வெட்டு மானூர் என்ற பகுதியில் உள்ள மானூர் கல்வெட்டு. இது வேள்விக்குடி செப்பேட்டை வெளியிட்ட ஜடிலவர்மன் பராந்தக நெடுஞ்செடையன் அதாவது கிபி 804 ஆம் ஆண்டைச் சார்ந்த கல்வெட்டாகும். இந்தக் கல்வெட்டும் ஊர் நிர்வாகம் பற்றி தகவல் வழங்கும் முக்கிய ஒரு கல்வெட்டாக அமைகிறது. களப்பிரர்கால ஊராட்சி முறையின் அடித்தளத்தின் மேல் கட்டப்பட்டது தான் பாண்டியர், பல்லவர், சோழர் கால ஊராட்சி முறை என்பதை இத்தகைய கல்வெட்டுச் சான்றாதாரங்களோடு வரலாற்றைப் பின்னோக்கிச் சென்று நூலாசிரியர் விவரிக்கின்றார்.
இதன் தொடர்ச்சியாக சாஸ்தா என்ற தெய்வம் பற்றிய விளக்கமும் தொடர்கிறது. களப்பிரர்கால ஊர்களில் மங்கை கோட்டங்களில் உள்ள மண்டபங்களில் சபாபதி என வழிபடப்பட்ட தெய்வமே சாஸ்தாவாக வளர்ச்சி காணும் நிலை உருவாகியது. களப்பிரர் காலத்தில் மங்கை கோட்டங்களில் முக்கியத்துவம் பெற்ற மங்கை என்ற தெய்வமே மணிமேகலா தெய்வம் என்பதும், சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படுகின்ற மணிமேகலா தெய்வம் இந்தத் தெய்வமே என்பதையும் இங்கு நாம் நினைவு கூறலாம்.
களப்பிரர் காலத்துக்குப் பின்னான பல்லவர், பாண்டியர், சோழர்கள் காலத்து சதுர்வேதி மங்கலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட பல்வேறு நிர்வாக முறை நடவடிக்கைகளுக்குக் களப்பிரர் கால நிர்வாக முறை செயல்பாடுகள் அடித்தளம் அமைத்திருக்கின்றன என்ற கருதுகோளுக்கு இதன் வழி நாம் வர முடிகின்றது.
சங்ககாலம் முதல் அறியப்படுகின்ற அய்யனார் கோயில்கள் சாஸ்தா கோயில்களுடன் தொடர்புடையனவாக அமைகின்றன. இத்தகைய அய்யனார் கோயில்களில் ஊர் கூடி, ஊர் காரியங்கள் விவாதிக்கப்பட்டு, முடிவு எடுக்கப்பட்ட நிகழ்வுகளைக் கல்வெட்டுகள் பதிகின்றன.
களப்பிரர் ஆட்சி காலத்தில் சபை நிர்வாக ஒன்று கூடுதல்கள் சாஸ்தா கோயில்களில் நிகழ்ந்தமையும், 'மகாசாஸ்தா’ எனப்படும் சபாபதியே முக்கிய தெய்வமாகவும், அதேபோல மங்கை என்ற தெய்வம் முக்கிய தெய்வமாக திகழ்ந்தமையும் கல்வெட்டுச் சான்றுகளின் தொடர்ச்சியுடன் அறிய முடிகின்றன. ஊராட்சி நிர்வாகம் பற்றி விரிவாக விளக்கும் உத்திரமேரூர் கல்வெட்டுகள் போன்று மேலும் பல முக்கிய கல்வெட்டுகள் களப்பிரர் காலத்து சமூக நிர்வாக அமைப்பின் தொடர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் அமைகின்றன என்றே கருதலாம்.
நூலின் ஏழாவது அத்தியாயம் மிகக் குறிப்பாக மங்கை கோட்டத்து மன்றங்கள் என்ற தலைப்பில் பௌத்த சான்றுகளை விவரிக்கின்றன.
நூலாசிரியர் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை காப்பியத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் முதியோள் கோட்டம் என்ற கோட்டம் இருந்ததையும், அதில் சம்பாபதி கோயிலின் முன்னே உலக அருவி என்ற அம்பலம் இருந்தது என்பதையும் சுட்டிக்காட்டி விளக்கம் தருகின்றார். கண்ணகிக்கு எடுத்த கோட்டம் பற்றிய செய்திகள் சிலப்பதிகாரத்தில் மங்கல மடந்தைக் கோட்டம் என கூறப்பட்டிருப்பதையும் நூலாசிரியர் சுட்டிக்காட்டுகின்றார்.
களப்பிரர் காலத்தில் அம்மன்னர்களுக்கு மூத்த அரையர்களாக பணியாற்றிய முத்தரையர்கள் பிடாரிக்கு கோயில் எடுத்த செய்தியும், மூவேலி நிலம் மங்கலமாக கொடுக்கப்பட்ட செய்தியும் விளக்கப்படுகிறது. நியமத்தில் அழகிய தூண்களுடன் அமைக்கப்பட்டுள்ள சபைகளில் அதன் தூண்களில் முத்தரையர்களின் சிறப்பு பெயர்கள் பொறிக்கப்பட்ட செய்தியும் இக்கல்வெட்டில் முத்தரையர்களின் தலைமுறை வரிசையாக கூறப்பட்டுள்ளது என்ற செய்தியும் கிடைக்கின்றன. களப்பிரர் காலத்தில் பௌத்த சமயத்தை பின்பற்றிய இவர்கள் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் சைவத்திற்கும் வைணவத்திற்கும் மாறிய நிலையை இப்பகுதி விளக்குகிறது.
நூலின் எட்டாம் அத்தியாயம் தளவாய்புரச்செப்பேடு கூறும் செய்து பற்றி விவரிக்கின்றது. நமக்கு கிடைத்திருக்கின்ற செப்பேடுகளில் சுவாரசியமான தகவலை கொண்ட செப்பேடுகளின் வரிசையில் இதனையும் கூறலாம். முற்கால பாண்டியர் காலத்தில் பிரம்மதேயமாக பிராமணர்களுக்கு அளிக்கப்பட்ட நிலங்களைக் கடற்றிருக்கை கிழவன் என்ற மன்னன் எல்லைகள் அமைத்து மதுரதரநல்லூர் எனப் பெயரிட்டு குடிநிலமாகச்செய்துவிட்டான்; அந்த நிலத்தை அவனிடமிருந்து பெற்று மீண்டும் தங்களுக்கே தர வேண்டும் என முன்னர் பிரம்மதேயம் பெற்றிருந்த பிராமணர்களின் வழித்தோன்றல்கள் பாண்டிய மன்னனிடம் முறையிட அதை பாண்டிய மன்னன் பராந்தக வீரநாராயணன் அவைகளை மீட்டு பிராமணர்களுக்கே கொடுத்த செய்தி இந்தச் செப்பேட்டையில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த செப்பேட்டில் கூறப்பட்டிருக்கின்ற கடற்றிருக்கை கிழவன் என்பவன் களப்பிர மன்னர்களில் ஒருவராக இருக்கலாம்.
மேலும் திருத்தொண்டர் புராணத்தில் வருகின்ற கூற்றுவ நாயனார் என்பவருடைய ஊரான களந்தை என்ற ஊர் எதைக் குறிப்பிடுகிறது என்பதைப் பற்றியும் நூலின் இந்த அத்தியாயம் ஆராய்கிறது. இந்தக் களந்தை என்ற ஊரில் தான் கூற்றுவநாயனார் அரசனாக வாழ்ந்தார் என்றும், இதுவும் களப்பிரர் காலச் சூழலை விவரிக்கும் இலக்கியத் தரவாக அமைகிறது என்பதையும் நூலாசிரியர் இந்த எட்டாம் அத்தியாயத்தின் வழியாக வெளிப்படுத்துகின்றார்.
தொடர்கிறது..!
-சுபா
---------------------------------------
நூல்: புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு
நூலாசிரியர்: ஆ.பத்மாவதி
வெளியீடு: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
விலை: ரூ 250/-
இணையம் வழி வாங்க விரும்புவோர்:
https://dialforbooks.in/product/புதிய-நோக்கில்-களப்பிரர்/
---------------------------------------
பார்க்க:
https://www.facebook.com/photo/?fbid=3485620348348004&set=a.1388119661431427https://www.facebook.com/subashini.thf/posts/pfbid02Ntj3cEDyMFvSQBzemfwzseZMcEgVNq3TZTsYczzRFuYSfLjEePr7dbNqEt8dR17glhttps://www.facebook.com/photo/?fbid=3491848967725142&set=a.1388119661431427