ஃஃஃ அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 17 April 2026
(வெருளி நோய்கள் 1271 -1275 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1276 -1280
திரைப்படம் அல்லது திரையரங்குபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் திரைப்பட வெருளி.
திரைப்படம் பார்ப்பதற்கும் திரையரங்குகள் செல்வதற்கும் காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர். இருட்டு வெருளிக்கு ஆளானவர்களுக்கும் திரைஅரங்கு இருட்டு அளவற்ற பேரச்சத்தை அளிக்கிறது. திரையரங்க வசதிக் குறைபாடுகளால் எரிச்சலுற்றும் வெறுப்பு கொள்கின்றனர். திரைப்படங்களில் வரும் சண்டைக்காட்சிகள், கூச்சமளிக்கும் நெருக்கமான காட்சிகள் போன்றவற்றாலும் திரைப்பட வெறுப்பு கொள்வோர் உள்ளனர். இவற்றைப்பார்க்கும் இளம் பருவத்தினர் கெட்டுப்போவர் எனவும் இவற்றின்மீது வெறுப்பு கொள்கின்றனர். இப்பொழுது திரையரங்கு சென்று படம் பார்க்கும் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் இந்த வெறுப்பு தொலைக்காட்சிகள் மீதும் தொலைக்காட்சித் தொடர்கள் மீதும் மாறியுள்ளது.
00
தோல்சுருக்கம் குறித்த காரணமின்றி வரும் அச்சம் திரைவு வெருளி.
திரைவு என்றால் தோல் சுருக்கம் எனப்பொருள். உடலில் காணப்படும் தோல் சுருக்கங்கள், குறிப்பாக முகத்தில் விழும் சுருக்கங்கள், கண்களைச் சுற்றியும் வாயைச் சுற்றியும் ஏற்படும் தோல்சுருக்கங்கள் குறித்து அச்சம் ஏற்படும். இது முதன்மையின் அடையாளம் எனக் கருதியும் இளமை கடக்கிறது என்று அஞ்சியும் அழகு குறைகிறது எனக் கவலைப்பட்டும் சுருக்கம் மீது வெறுப்பும் அச்சமும் கொள்கின்றனர்.
rhyti என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் திரைவு.
00
குழந்தைகள் வண்டி, பந்தய வண்டி முதலான திறந்த வண்டி(go-cart) குறித்த அளவு கடந்த பேரச்சம் திறந்த வண்டி வெருளி.
முதலில் இது நடைவண்டியைத்தான் குறித்தது. பின்னர், நடைவண்டியுடன் மேலே மூடப்படாமல் திறந்துள்ள சிறிய வண்டிகளையும் குறிக்கலாயிற்று.
Go karro என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் நடைவண்டி/ திறந்த வண்டி.
00
குவளை, குப்பி, சிறு கலன் முதலானவற்றின் மூடியைத் திறக்கும் திறப்பி(can opener/ tin opener) மீதான அளவுகடந்த பேரச்சம் திறப்பி வெருளி.
மின் திறப்பிகளும் வந்துவிட்டன. இருவகைத் திறப்பிகளையும் கவனத்துடன் கையாள்வது குறித்த தேவையற்ற வரம்பு கடந்த பேரச்சம் கொள்கின்றனர்.
00
திறவுகோல்(Key) குறித்த வரம்பற்ற பேரச்சம் திறவுகோல் வெருளி.
திறவுகோல்களால்/தாழ்க்கோல்களால் அறைகளை அல்லது வீட்டினைச் சரியாகப் பூட்ட முடிவதில்லை, சரியாகத் திறக்கவும் முடிவதில்லை என்று அளவுகடந்த பேரச்சம் கொள்கின்றனர். மூடப்பட்ட அறை குறித்து வெருளி உள்ளவர்களுக்குத் திறவுகோல் சரியாகத் திறக்காவிட்டால் என்னாவது என்று கவலாை ஏற்பட்டுப்பேரச்சமாக மாறுகிறது.
Kleidi என்னும் கிரேக்கச் சொல்லிற்குத் திறவுகோல் எனப் பொருள்
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5
ஃஃஃ அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 17 April 2026
(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 22. அத்தனை, இத்தனை, எத்தனை ஆகியன அடுத்து வல்லெழுத்து மிகாது – தொடர்ச்சி)
எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 23
எத்தனை, எத்துணை, எவ்வளவு வேறுபாடு
இதே நேரம் நாம் எத்தனை, எத்துணை என்பவற்றை வேறுபாடு தெரியாமல் பயன்படுத்துகிறோம் என்பதையும் பார்க்க வேண்டும். உரிய வேறுபாட்டை நன்கு அறிந்து அதற்கேற்ப பயன்படுத்த வேண்டும்.
எத்தனை என்பது எண்ணிக்கையைக் குறிப்பிடும். சான்றாக ஒரு புத்தகம், இரண்டு மடல்கள், மூன்று வீடுகள், நான்கு அறைகள், ஐந்து பேர்கள், ஆறு வகைகள், ஏழு குளங்கள், எட்டு வேலைகள், ஒன்பது குறிப்புகள், பத்து முறைகள் என்பன போல் எண்ணிக்கையைக் குறிப்பிடும் இடங்களில் எத்தனை என்னும் வினாச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
அதே நேரம் அளவு, காலம், பயன், பருமன், பண்பைக் குறிப்பதற்கு எத்துணை என்னும் சொல்லப் பயன்படுத்த வேண்டும். பொதுவாக வியந்து சொல்லும் பொழுது எத்துணை என்பதைப் பயன்படுத்த வேண்டும்.
எ. கா.
எத்துணை பெரிய மலை
எத்துணை பெரிய கப்பல்
எத்துணை பெரிய கட்டடம்
எத்துணை காலம் தொன்மையானது
எத்துணை ஆண்டு பழமையானது
எத்துணை தடிமனான புத்தகம்
எத்துணை இனிமையானது
எத்துணை அழகு
எத்துணை நல்லவர்
எத்துணை நேரமாயிற்று
எத்துணை சிறிய பூச்சி
எத்துணை சிறிய வீடு
எத்துணை பருமனான கம்பு
எத்துணை நன்மை விளையும்
எத்துணை தீமை விளையும்
அத்துணை சிறந்த கோப்புகளும் எங்கே இருந்தன?
அத்துணை துயரக் குறிப்புகளையும் காண்க
அத்துணை நல்ல பள்ளிகளும் மூடப்பட்டே உள்ளன
அத்துணை நன்மை தரும் திட்டங்கள்
இத்துணை பெரிய கட்டடங்களும் சிதைந்த நிலையில் உள்ளனவா?
இத்துணை சிறிய கடிதங்களும் பார்க்கப்படவில்லையே!
இத்துணை சிதைந்த குடிசைகளும் எரிந்தனவா?
இத்துணை தீமை தரும் செயற்பாடுகள்
எத்தனை, எத்துணை சொற்களை அறியும் பொழுது எவ்வளவு என்னும் சொல் குறித்தும் அறிய வேண்டும்.
எவ்வளவு, எம்மட்டு. எவ்வளவாகிலும், எவ்வளவும், எவ்வள வேனும், எவ்வளவுக்கெவ்வளவு… அவ்வளவுக்கவ்வளவு, எவ்வளவும் என்பனவெல்லாம் அளவு குறித்தன.
எண்ணிக்கையைக் குறிப்பிடும் இடங்களில் எவ்வளவு என்று சொல்லக் கூடாது.
எத்தனை பால் கிடைக்கும் என்பது தவறு. எத்தனைப் படி பால் கிடைக்கும்? எத்தனை புதுப்படிப் பால் கிடைக்கும், எத்தனைப் பொதிவு (பாக்கெட்டு) பால் கிடைக்கும்? எத்தனைப் பொட்டலம் பாற்பொருள் கிடைக்கும்? என்பனபோல் வரலாம். ஆனால், எத்தனை பால் கிடைக்கும்? எத்தனை எண்ணெய் கிடைக்கும்? எத்தனை தண்ணீர் கிடைக்கும்? எனச் சொல்வன தவறாகும்.
ஒரு நாளைக்கு எத்தனை பால் குடிக்க வேண்டும்? எத்தனை தண்ணீர் குடிக்க வேண்டும்? என்பன தவறென உணரலாம். எவ்வளவு பால் குடிக்க வேண்டும்? எவ்வளவு தண்ணீர் குடிக்கவேண்டும் என வினவுவதே சரியாகும்.
ஆகவே, எண்ணிக்கையைக் குறிப்பிடும் இடங்களில் எத்தனை என்றும் எண்ணிக்கையைக் குறிக்க முடியாத இடங்களில் எவ்வளவு என்றும் குறிக்க வேண்டும்.
ஒரு பகுதியில் வீடு பார்க்கப் போகிறோம். அங்கே எத்தனை வீடுகள் உள்ளன எனக் கேட்கலாம். ஆனால் எவ்வளவு வீடுகள் உள்ளன என்று கேட்கக் கூடாது. எத்தனை மின் கட்டணம் வாங்குவீர்கள் என்பது தவறு. எவ்வளவு மின் கட்டணம் வாங்குவீர்கள் எனக் கேட்க வேண்டும். இங்கே எவ்வளவு பூச்செடிகள் உள்ளன என்பது தவறு. எத்தனைப் பூச்செடிகள் உள்ளன என்பதே சரி. எத்தனை முறைதான் சொல்வது எனலாம். எவ்வளவு முறைதான் சொல்வது என்பது தவறாகும். எத்தனைத் தேர்தல்களில் வாக்களித்தீர்கள் எனலாம். எவ்வளவு தேர்தலில் வாக்களித்தீர்கள் எனக் கூடாது. எத்தனைத் தடவை போட்டியிட்டீர்கள் எனலாம். எவ்வளவு தடவை போட்டியிட்டீர்கள் எனக் கூடாது.
எத்தனை தண்ணீர் வரும் என்பது தவறு. எவ்வளவு தண்ணீர் வரும் என்பதே சரி. மிக மிகக் குறைவான அளவு நெல் இருப்பின் எண்ணமுடியும். அதுவே பெருமளவு இருக்கும் பொழுது எண்ணிக்கையில் சொல்லக் கூடாது. ஆதலின், எத்தனை நெல் விளையும் என்பது முறையல்ல. எவ்வளவு நெல் விளையும் என்பதே முறையாகும்.
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்
என்பது ‘மலைக்கள்ளன்’ திரைப்படத்தில் வரும் பாடல். எழுதியவர் மருதகாசியா அல்லது வேறொருவரா என்னும் கருத்தாடல் இன்னும் உள்ளது. யார் எழுதியிருப்பினும் எத்தனை காலம் என்று சொல்லியருப்பது தவறுதான்.
எத்தனை எத்தனை இன்பமடா எல்லாம் உனக்கே சொந்தமடா
என்பது 1963 ஆம் ஆண்டு வெளியான என்பது 1963 ஆம் ஆண்டு வெளியான ‘யாருக்குச் சொந்தம்’ திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு புகழ்பெற்ற தமிழ்த் திரையிசைப் பாடல். கவிஞர் அ. மருதகாசியால் எழுதப்பெற்றது.
எவ்வளவு இன்பம் என்றுதான் பாடியிருக்க வேண்டும். எனினும் இங்கே பெண்ணின்பம், பொருளின்பம், இயற்கை இன்பம், மலரின்பம் என வகைப்படுத்திப் பாடுவதால் எத்தனை வகை எனக் குறிப்பதாகக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு நாம் எத்தனை, எத்துணை, எவ்வளவு ஆகிய சொற்களின் வேறுபாடுகளைப் புரிந்து கொண்டு செவ்வனே பயன்படுத்த வேண்டும்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்