காட்டுப்புத்தூர் இவரை பொறுத்தவரை பாட்டுப்புத்தூராக இருந்தது என்கிறார். அவ்வூரின் ஜமீந்தார் உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சுந்தரம் ஐயர் என்பார். காட்டுப்புத்தூர் பள்ளிக்கூடத்தில் இவர் ஆங்கிலம், சயின்ஸ், பூகோளம் ஆகியவை கற்பித்தார். 7ஆம் வகுப்புக்கு கணக்கும் பாடம் எடுத்தார். அங்கு மாணவர்களை இவர் கேட்டார், "நீ எதற்கு பள்ளிக்கூடம் வந்தாய்?" என்று. ஒவ்வொருவரும் ஒரு பதிலை அளித்தனர். அப்பா அனுப்பினார் வந்தேன் என்றான் ஒருவன். வீட்டில் பொழுது போகவில்லை வந்தேன் என்றான் மற்றொருவன். ஒரே ஒருவன் மட்டும் சொன்னான் "அறிவு வளர்ச்சி பெற வந்தேன்" என்று. இவருக்கு சாரணர் பயிற்சி அளிக்கப்பட்டது. இவரும் அதனை ஆவலுடன் கற்றுக் கொண்டு மாணவர்களையும் அதில் பயிற்றுவித்தார். அந்தப் பள்ளி மாணவர்களுக்குத் தீக்குச்சி செய்ய கற்றுத் தருகிறேன் என்று இவர் எதையோ போட்டு அரைக்க அது வெடித்து, இவரது ஆசிரியர் பதவிக்கும் வேட்டு வைத்துவிட்டது.
மற்றவர்கள் இவரைப் போகச் சொல்லாவிட்டாலும், இவருக்கு அங்கிருக்கப் பிடிக்கவில்லை. வேலையை விட்டுவிட்டு சுற்றுப்புற ஊர்களுக்கெல்லாம் செல்ல ஆரம்பித்தார். ஆங்காங்கே மக்களைக் கூட்டிவைத்து பேசினார். இவரது தோற்றம், இவரது பாடல்கள், பேச்சு முதலியன மக்களைக் கவர்ந்ததால், இவர் போகுமிடங்களிலெல்லாம் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
"நச்சரிக்கும் வாழ்வைநீ நம்பாதே என்று அம்மான்
எச்சரிக்கை செய்தான், இனிநானும் - அச்சமுறேன்
சாவையும் வெல்லுமொரு சக்திப் பணிசெய்யப்
போவேன், அவனே புகல்" என்று அங்கிருந்து வெளியேறினார்.
இவர் கரூர், நெரூர், தாந்தோன்றிமலை ஆகிய இடங்களுக்கும், அகண்ட காவிரி பாயும் பகுதிகளுக்கும் சென்று அங்கெல்லாம் அமர்ந்து "பாரத மகாசக்தி காவியம்" என்ற பெயரில் ஒரு காவியத்தை எழுதினார்.
இவர் புதுச்சேரி சென்று வ.வெ.சு.ஐயரையும் பாரதியாரையும் பார்த்தார். பாரதி இவருடைய "பாரதசக்தி" நூலைப் பாராட்டி "தமிழுக்கு ஒரு மகாகாவியம் விளங்கட்டும், செய் பாண்டியா, பராசக்தி உனக்கு நல்ல வாக்குத் தருவாள்" என்று ஆசிர்வாதித்தார். பாரதியைப் போற்றி இவர் எழுதிய வெண்பா:-
"வீரங் கனலும் விழிக்கனலும், பிள்ளைபோல்
ஈரந் திகழும் இளநெஞ்சும் - பாரதியின்
சொல்லும் பொருளும் சுதந்திரப் பேரிகையும்
வெல்லும் புவியை விரைந்து".
இவருக்கு சுதந்திர வேட்கை பிறந்தது. திருச்சியில் அப்போது இருந்த காங்கிரஸ் ஆபீசுக்குச் சென்றார். அங்கு கல்கியின் அறிமுகமும், டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜனின் அறிமுகமும் கிடைத்தது. அங்குதான் இவர் காந்திஜியைச் சந்தித்துப் பேசினார். அவர் அழைப்பை ஏற்று காங்கிரஸ் பிரச்சாரப் பணியில் இறங்கினார். சுத்தானந்தர் கரூரில் அரசியல் கூட்டங்களில் பேசினார். அங்கு கள்ளுக்கடை மறியலில் கலந்து கொண்டார். கரூர் காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையோடு தொடர்பு ஏற்பட்டது.
காந்தியடிகளுடன்
மகாத்மா காந்தி ரயிலில் திருச்சி வருகிறார், அவரை கட்டளை ரயில் நிலையத்தில் சந்திக்க இரவு பன்னிரெண்டு மணிக்குத் தன்னுடன் மாணவர்கள் பலரையும் சேர்த்துக் கொண்டு காந்திஜியைச் சந்திக்கச் சென்றார். ரயில் வந்து நின்றபோது நள்ளிரவு. அனைவரும் தூங்கும் நேரம். ரயில் வந்து நின்றதும் இவரும் நண்பர்களும் 'மகாத்மா காந்திக்கு ஜே!' என்றும் 'வந்தேமாதரம்' என்றும் குரல் கொடுத்தனர். ஜன்னல் திறந்தது. செளகத் அலி எனும் தலைவர் தலையை வெளியே நீட்டி, "அரே அங்கு என்ன கூச்சல்! மகாத்மா தூங்குகிறார்" என்றார். உடனே கொண்டுவந்திருந்த மாலையையும், பணத்தையும் செளகத் அலியிடம் கொடுத்துவிட்டு மகாத்மாவிடம் சமர்ப்பியுங்கள் என்றார்.
இந்த சந்தர்ப்பத்தில் காந்தி எழுந்து விட்டார். உடனே அவரைப் பார்த்து சுத்தானந்தர் "நமஸ்தே" என்றார். காந்தி மலர்ந்த முகத்துடன் நாங்கள் கொடுத்தவற்றை வாங்கிக் கொண்டார். "சிரமம் கொடுத்துவிட்டோம், படுத்துக் கொள்ளூங்கள், நாங்கள் திருச்சியில் தங்களைச் சந்த்க்கிறோம்' என்று சொல்லி திரும்பி வந்துவிட்டார். அதன்படி மறுநாள் திருச்சியில் மகாத்மா காந்திஜியை சந்தித்தார்.
திருப்பதி யாத்திரை
பிறகு இவர் திருப்பதி, காளகஸ்தி ஆகிய இடங்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். காங்கிரசில் இருந்த பிளவு குறித்து மனம் வருந்தி இவர் அதிலிருந்து ஒதுங்கி ஒரே இடத்தில் தங்கிவிட முடிவு செய்தார். சொந்த ஊரான சிவகங்கைக்கு வந்தார். இவருக்கு தேவகோட்டையில் நண்பர் ஒருவர் தொடங்கிய பள்ளிக்கூடத்தில் வேலை கிடைத்தது. அங்கு பணி புரிந்தார். தினமும் ஆறு மணி நேரம் மட்டும் பேசுவதும், மற்ற நேரங்களில் மெளன விரதமும் அனுஷ்டித்தார். விடுமுறை நாட்களில் முழுவதும் மெளனம்தான். தினமும் காலை 3 மணிக்கு எழுந்துவிடுவார். உடனே தியானம். பள்ளிக்கூடத்தில் பாடம் நடத்துவதில் முழு உழைப்பையும் நல்கினார்.
தேவகோட்டையில் இவர் பொது சேவையில் ஈடுபட்டிருந்த சமயம் வ.வெ.சு.ஐயரிடமிருந்து இவருக்கு ஒரு கடிதம் வந்தது. இவரை அவரது பரத்வாஜ ஆசிரமத்துக்கு வரசோல்லி. இவரும் காத்துக் கொண்டிருந்தார். ஆனால் இவர் வீட்டில் எதிர்ப்பு இருந்தது. வ.வெ.சு.ஐயர் ஒரு புரட்சிக்காரர். அவரோடு போய் இவர் சேருவதை குடும்பத்தார் விரும்பவில்லை. அது குறித்து இவர் எழுதியிருப்பதைப் பாருங்கள்:-
"சில நண்பர்களைக் கொண்டு எனக்கு வீட்டில் புத்தி சொல்லச் சொன்னார்கள். ஒருவர் கண்டபடி திட்டினார். நான் மெளனமாக பொறுத்துக் கொண்டு என் வேலையைப் பார்த்தேன். உலகுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருந்தால் கழுதை விற்ற கந்தப்பன் கதைதான். அனைவரும் என்னை பைத்தியம் என்றனர். அது சரிதான் என்று நிரூபிப்பது போல நான் எனது தலைப்பாகையைக் கழற்றி எறிந்தேன். என் உடைமைகள், உடைகள் அனைத்தையும் தீயிட்டு எரித்தேன். நான் எழுதிய கையெழுத்துப் பிரதிகளில் "பாரத சக்தி"யை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற நாவல்கள், நாடகங்கள் அனைத்தையும் தீயிட்டு எரித்தேன்."
அப்போது ராமேஸ்வரத்தில் நடந்த காங்கிரஸ் மகாநாட்டுக்கு இவர் சென்றார். அங்கு ந.சோமையாஜுலு, ஸ்ரீனிவாசவரதன் ஆகியோரை சந்தித்தார். அங்கு மாநாடு முடிந்ததும் தனுஷ்கோடி, மதுரை போய்விட்டு சேரன்மாதேவிக்குப் போனார். அங்கு வ.வெ.சு.ஐயர் இவரை வரவேற்றார்.
வ.வெ.சு.ஐயரின் 'பரத்வாஜ் ஆசிரமத்தில்'
தியாகச்சுடர், மாவீரன் வ.வெ.சு.ஐயரிடம் இவருக்கு நல்ல பழக்கம் உண்டு. திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் ஐயர் நிறுவிய பரத்வாஜ் ஆசிரமத்திலும், அவரது பத்திரிகையான 'பாலபாரதி'யிலும் சுத்தானந்தருக்கு தொடர்பு உண்டு. இவரது தமிழார்வத்தையும், கவிதைத் திறத்தையும் ஐயர் வெகுவாக புகழ்ந்திருக்கிறார். ஐயர் மீது இவருக்கு இருந்த அன்பை விளக்க இவர் ஐயருக்கு எழுதிய கடிதமொன்றில் இவரது வாசகத்தைப் பார்க்கலாம். அதில் இவர் ஐயரை, "வீரவிளக்கே! விக்ரமச் சிங்கமே! வ.வெ.சுப்பிரமணிய தீரனே! தீப்பொறி சிந்தும் சிங்கம் போல பாரத தேவியின் துயர் தீர்க்க வீறுகொண்டெழுந்த வித்தகனே! என்றெல்லாம் போற்றியிருக்கிறார்.
ஐயரை இவர் வர்ணிப்பதைப் பார்க்கலாம்:
"சிங்க முகம், நீலமணிக் குன்று போல் திண்ணுடல்; புதிய வைரம்போல் உறுதியான அங்கங்கள்; கர்லாவும் பஸ்கியும் செய்து இறுகிய தசைகள்; செவ்வரி படர்ந்த கூர்விழிகள்; அடர்ந்த தாடி; வகுடெடுத்துஒழுங்காகச் சீவி விட்ட கேசம். அகன்ற மார்பு, பஞ்சகச்ச வேஷ்டி, மேலே கதர் துப்பட்டா, பிறைச்சந்தனத்தின் நடுவே குங்குமப் பொட்டு. அவரது கிண்கிணிக் குரலுடன் நாணப் புன்னகையும் சேர்ந்து என் உள்ளத்தில் அன்பு மின்சாரம் பாய்ச்சின"
சேரன்மாதேவியில் வ.வெ.சு.ஐயரின் குருகுலம் அமைக்கப்பட்டது. அதற்கு தலைவர் வ.வெ.சு.ஐயர். அங்கு சுத்தானந்தர் இலக்கியம், கல்வி விளம்பரம், பத்திரிகை காரியாலயம் நிர்வாகம் ஆகியவற்றைக் கவனித்தார். "பாலபாரதி" இதழ் பொறுப்பு முழுவதும் இவருடையது. வ.வெ.சு.ஐயரின் குருகுல வாழ்க்கை பற்றி இவர் எழுதியதைப் படித்தால்தான் அந்த குருகுலம் எப்படிச் செயல்பட்டது என்பது புரியும். அங்கு ஒருநாள் வாழ்க்கை எப்படி இருந்தது தெரியுமா?
காலை நாலறைக்கு அனைவரும் எழவேண்டும். காலைக்கடன்கள் அனைத்தும் முடியும். பல்துலக்க மாவிலை பறித்து அதில்தான் துலக்க வேண்டும். சிறிது உடற்பயிற்சி. பின்னர் ஆசிரமத்தைக் கூட்டி சுத்தம் செய்தல்; பின்னர் குளிக்க வரிசையில் தாமிரபரணி ஆற்றுக்குச் செல்வர். ஆசிரமம் திரும்பியதும் காலை உணவாக வாழைப்பழம், வேர்க்கடலை, மோர் அல்லது பழைய சோறு. வகுப்புகள் தொடங்கும். பதினோரு மணிக்கு மதிய உணவு. சாப்பிடும்போது யாரும் பேசக்கூடாது. உணவு, சோறு, கூட்டு, மோர், பழம், தேங்காய் இவைகளே. புளி, மிளகாய், வெங்காயம், காபி, டீ இவை அறவே கிடையாது. உணவுக்குப் பின் தட்டுக்களைக் கழுவுதல், இடத்தை சுத்தம் செய்தல் அனைத்தும் மாணவர்களே. பிற்பகல் சந்தைக்குச் சென்று சிலர் வேண்டிய சாமான்களை வாங்குவர். மற்றவர் ராட்டையில் நூல் நூற்பர். பிற்பகல் நான்கு மணிக்கு வகுப்புகள் தொடங்கும். மாலையில் விளையாட்டு. இரவு பஜனை தொடர்ந்து உணவு. ஒன்பது மணிக்கு ஆசிரமம் தூங்கிவிடும்.
இங்கு சுத்தானந்தர் எழுதிய பாரதசக்தி மகாகாவியம் ஐயரால் மேலும் மெருக்கூட்டப்பட்டது. இங்கு தலைவர்களின் விழாக்கள் நடக்கும். திலகர் ஜெயந்தி, காந்தி ஜெயந்தி, நவராத்திரி உத்சவம், உடல்நலம் கெட்டால் இயற்கை வைத்தியம் இப்படி. பாலபாரதி பத்திரிகைக்கு சுத்தானந்தரே முழுப்பொறுப்பெடுத்து வெளியிட்டார். படிப்பு தவிர மாணவர்களை அடிக்கடி வெளியில் சுற்றுலா அழைத்துச் சென்று இயற்கை வளங்களைக் காண்பிப்பார்கள். அப்படி அவர்கள் சென்ற இடங்கள், கல்யாண அருவி, குற்றாலம், நாகர்கோயில், குமரி முனை, பத்மநாபபுரம், திருவனந்தபுரம், கொல்லம், திருச்செந்தூர் இப்படி பல இடங்களுக்கும் சென்று நல்ல அனுபவம் பெற்றனர் மாணவர்கள்.
இவர் அங்கிருந்த காலத்தில்தான் வ.வெ.சு.ஐயர் மீது ஜாதிப்பிரிவினைப் பார்த்து உணவு வழங்குகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இவ்வளவுக்கும் ஐயர் மிகப் பரந்த மனப்பாங்கு உள்ளவர். குறுகிய ஜாதிப்பிரிவுகளில் உட்படாத புரட்சிக்காரர். அவருக்கே இப்படிப்பட்ட குற்றச்சாட்டு எழுந்ததை சிறுபிள்ளைத்தனமாக இருந்தது என்கிறார் சுத்தானந்தர். பிரயாணங்களில் நாங்கள் அனைவரும் ஒன்றாக கலந்தே சமைத்து உண்டோம் என்கிறார் இவர்.
இவரிடம் ஐயர் மனம்வருந்தி பேசிய மற்றொரு செய்தி எவருடைய மனதையும் நெகிழச்செய்து விடும். அது என்ன? சுத்தானந்தர் எழுதுகிறார்:- "மணி பதினொன்று. நான் கீதை காட்டும் பாதை எழுதிக் கொண்டிருந்தேன். "ஸஞ்சலம் ஹி மனக் கிருஷ்ண' என்ற பகுதியை உரக்கப் படித்தேன். அப்போது ஐயர் வந்தார். ஆம், மனம் ஸஞ்சலமாகத்தான் இருக்கிறது. தைர்யவானையும் காலம் சோதிக்கத்தான் செய்கிறது. மனம் உடைகிறது. சோதனைகளை வென்றுதான் நமது தார்மிக வாழ்வை நிலைநாட்ட வேண்டும் என்றார்.
வ.வெ.சு.ஐயர் அருவியில் விழுந்து இறப்பதற்கு முதல்நாள் ஐயர் தன் மகளுடன் கல்யாண அருவிக்குப் புறப்பட்டார். அப்படி புறப்பட்ட ஐயரை இவர் வர்ணிக்கும் பகுதி இது: "சிங்கம் போன்ற முகம்; நெற்றி நிறைய விபூதி; அழகாகச் சீவி கழுத்தில் படிந்த கேசம்; நீண்டு வளர்ந்த தாடி - இரவும் பகலும் போல் கருப்பும் வெள்ளையும் காட்டுகிறது. வீரக்கனல் விழிகள்; நீர்க்காவி ஏறிய கதர் பஞ்சகச்சம்; மேலே பூப்போட்ட கதர் அங்கவஸ்திரம்; இறுகிப் புடைத்த தோளில், பை; அந்தி அழகெல்லாம் ஐயர் மேல் பொலிகிறது. மஞ்சள் வெயிலில் அவரது வீர வடிவம் தெரிகிறது. அந்தி மல்லிகைக் கொடிபோல் சுபத்திரா தவழ்கிறாள். நமஸ்காரம்.... என்றேன். அந்தோ! அதுதான் அவரது கடைசி சமஸ்காரமானதோ!"
பிறகு, மறுநாள் நடந்தவைகளை அவர் வாக்கால் கேட்டால்தான் அதன் ஆழம் புரியும். அவர் சொல்லுகிறார்:-
"மறுநாள் அனந்தகிருஷ்ணய்யர் ஓடிவந்தார். வாருங்கள் என்று என்னை மாடிக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர் விம்மி விம்மி அழுதார். 'சுபத்ரா கால் தவறி அருவியில் விழுந்தாள். அவளை எடுக்க ஐயரும் குதித்தார். இதுகாறும் உடல் கிடைக்கவில்லை' என்றார். என் தலை சுழன்றது. தமிழகம் சுழன்றது. உலகமே சுழன்றது."
"கல்யாண அருவியை நோக்கி ஓடினேன். அப்போதுதான் ஐயரின் உடலை எடுத்துப் போட்டிருக்கிறார்கள். பார்க்கச் சகிக்கவில்லை. தாடி மீசையெல்லாம் முகம் முழுவதும் மீன்கள் கொத்தி விகாரப்படுத்தியிருந்தன. அழகான பெண் சுபத்ரை பிணமாகக் கிடக்கிறாள். மனைவி பாக்கியலட்சுமி அம்மாள் வந்தாள். அந்த சோகமயமான சூழ்நிலையை எப்படிச் சொல்வது. இறுதி கிரியைகள் முடித்து அந்த அம்மாள் தன் மகன் கிருஷ்ணமூர்த்தியுடன் திருச்சிக்குச் சென்றாள்." இப்படி அந்த சோக நிகழ்ச்சியை வர்ணிக்கிறார் யோகி.
மறுநாள் அந்த கல்யாண அருவிக்குப் போனார் சுத்தானந்தர். முதல்நாள் நடந்தவை அவர் மனக்கண்ணில் ஓடுகின்றன. ஐயரின் நினைவு அவர் மனத்தை வாட்டுகிறது. ஒரு பாடல் தோன்றுகிறது.
"சிங்கம் போல் வீறுடையான், சேய்போல் வஞ்சமிலான்
தங்க மணிக்குரலான் சாவிற்கும் அஞ்சாதான்;
முனிபோல் முகமுடையான் முத்துநகையுடையான்
கனிபோல் மொழியுடையான் கண்ணிலினிக் காண்பேனோ?"
தஞ்சையில் "சமரஸபோதினி"
அதன் பின் இவர் பாலபாரதியை நடத்த முயன்றாலும் முடியவில்லை. பத்திரிகை நின்று போனது. ஆசிரமத்திலிருந்தும் சுத்தானந்தர் வெளியேறினார். பின்னர் தஞ்சையில் அப்போது வெளியான "சமரஸபோதினி" எனும் பத்திரிகைக்கு ஆசிரியரானார். அதுகுறித்து அவர் சொல்லும் செய்திகளைப் பார்ப்போம். இதில் தி.ஜ.ரங்கனாதன் துணை ஆசிரியர். (இவர் பின்னாளில் மஞ்சரி போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியவர்) மற்றும் பலரும் பத்திரிகை வெளிவர துணை புரிந்தனர். அப்போது இவரை டாக்டர் கோபு, பூவராகவன் ஆகியோர் வந்து காண்பராம். பத்திரிகை அலுவலகத்திலேயே இவரும் தங்கிக்கொண்டார்.
தஞ்சையில் இவருக்குப் பிடித்த இடங்களாக இவர் குறிப்பிடுபவை, வெண்ணாற்றின் பொழில், கருந்திட்டைக்குடி தமிழ்ச்சங்கம், சேதுபாவா மடம், பூர்ணானந்தர் தோட்டம், பிரஹதீஸ்வரர் கோயில், கருவூரார் சந்நிதி, பங்காரு காமாட்சி ஆலயம் இங்கெல்லாம் இவர் மனம் பறிகொடுத்து தியானத்திலும் பாடல்களைப் பாடுவதிலும், பிரசங்கங்கள் செய்வதிலும் கழித்ததோடு பல பெரியவர்களையும் தரிசித்துப் பழகியிறுக்கிறார். இவர் அடிக்கடி தியானம் செய்யச் செல்லும் மற்றொரு இடம் 'நீலகிரி தோட்டம்''. இங்கு சுவாமி கேவல்ராம் என்பவர் இருந்தாராம். இவர் அரவிந்தருக்கும் நண்பராம்.
தஞ்சையில் இருந்தபோது இவர் திருப்பூந்துறுத்தி சென்றிருக்கிறார். அங்கு ஓர் வேதாந்த சுவாமிகள் இருந்தாராம். அப்பர் மடம் இடிந்து கிடந்ததாம். அங்கிருந்து திருவையாறு சென்றிருக்கிறார். தியாகப்பிரம்மத்தின் சமாதியில் கீர்த்தனங்களை இயற்றிப் பாடினாராம். கல்யாணமஹால் சம்ஸ்கிருத கல்லூரிப் புலவர்களுடன் அளவளாவியிருக்கிறார்.
சமரஸபோதினி எனும் இந்த பத்திரிகை வாரம் இருமுறையாக வெளிவந்தது. இவர் பத்திரிகையில் சாத்தூர் விஸ்வநாத ஐயர் பாரதியார் பற்றி எழுதிவந்தார் என்கிறார். இவர் பாரதியாரின் தம்பி சி.விஸ்வநாத ஐயராக இருக்க வேண்டும். இவர் தஞ்சையில் இருந்த போது 1925இல் காஞ்சிபுரம் காங்கிரஸ் மகாநாடு நடந்திருக்கிறது. அதில் திரு வி.க. தலைமை வகிக்க வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேண்டி பெரியார் தீர்மானம் கொண்டு வந்து அது ஏற்றுக்கொள்ளப் படாமையால் அதிலிருந்தும் காங்கிரசிலிருந்தும் வெளிநடப்பு செய்தார். அந்த மாநாட்டிலும் இவர் கலந்து கொண்டிருக்கிறார். அந்த மகாநாட்டுக்கு முதல்நாள் நடந்த 'விஷயாலோசனைக் கூட்டம்' எப்படி நடந்தது என்பதை இவர் எழுதுகிறார். "விஷயாலோசனைக் கூட்டம் சந்தைக்கூட்டமாக இருந்தது. பேச்சுக்கு பேச்சு வாள்வீச்சாக இருந்தது. ஒருவர் பேசியபின் மற்றவர் பேசினால் நன்றாக இருக்கும், இவர்கள் சளசளவென்று ஒரே நேரத்தில் அனைவரும் கூக்குரல் இட்டனர்"என்கிறார்.
காஞ்சிபுரம் மகாநாட்டையடுத்து வேதாரண்யத்தில் நடந்த காங்கிரஸ் மகாநாட்டிலும் கலந்துகொண்டு இவர் பேசியிருக்கிறார். அதன் பின் சீர்காழியை அடுத்த எருக்கூர் சென்றார். இவ்வூரில்தான் புரட்சிவீரன் நீலகண்ட பிரம்மச்சாரி பிறந்தார் என்பதை நினைவு படுத்திக் கொள்ளலாம். இங்குள்ள பாரத சமாஜத்தில் இவர் பேசினார்.
திருவையாற்றில் நடக்கும் தியாகபிரம்ம உத்சவத்திலும் கலந்துகொண்டு பல பாகவதர்களிடம் பேசியிருக்கிறார். அப்போது மைசூர் நாகரத்தினம்மாள் இவரிடம் உமக்கு எதற்கு அரசியலும் பத்திரிகையும். பேசாமல் கீர்த்தனாஞ்சலி செய்து கொண்டு இரும், என்று கூறியிருக்கிறார்.
ஒரு முறை ஈரோட்டுக்குச் சென்று பெரியாரின் அண்ணன் கிருஷ்ணசாமி நாயக்கரிடம் பேசிவிட்டு பெரியார் வீட்டுக்குப் போக வழி கேட்க, அவர் சொன்னாராம், "சை! அவன் பாமரன், நாத்திகன், ராமாயண விரோதி, பிராமண விரோதி" என்று அஷ்டோத்திரம் நடத்தினார். பிறகு ஒரு மாட்டு வண்டியில் இவரை தன் தம்பி ராமசாமி நாயக்கர் வீட்டுக்கு அனுப்பினாராம். அங்கு இவரை ஈ.வே.ரா. அன்புடன் வரவேற்று மனைவிக்கு அறிமுகப்படுத்தினாராம். இவர் பெரியாரின் இல்லத்தில் ஸ்நானம் செய்து நித்ய அனுஷ்டானங்களை முடித்து சூரிய நமஸ்காரம் செய்வதை அவர் பார்த்துக் கொண்டிருந்தாரம். அதற்குள் அந்த அம்மாள் கூடத்தில் கோலம் போட்டு, ஊதுவத்தி கொளுத்தி, விளக்கேற்றி தட்டில் பழங்களைக் கொண்டு வைத்தாராம். பெரியார் இவரிடம் "பூஜை சேயண்டி" என்றார். இவரும் ஜபமும் தியானமும் செய்து கற்பூரம் ஏற்றி அந்தச்சுடரை தியானம் செய்ய, பெரியார் "பாகு பாகு சரியண்டி (நல்லது சரி சரி) என்றாராம். பெரியாரைப் பற்றி இவர் கூறுவது: "நாயக்கர் காந்தியிடம் அன்பு வைத்திருந்தார். சாதி இறுமாப்பையும் கடவுள் பெயரால் நடக்கும் போலி நாடகங்களையும் அவர் கண்டித்தார். அரசியல் நாடகத்தில் புகுந்த கூனி வேலைகளையும் கோமாளிக் கூத்துக்களையும் அவர் வெறுத்தார், கண்டித்தார்."
பத்திரிகை தொழிலை விட்டுவிட்டு திருத்துரைப்பூண்டி அருகிலுள்ள பாமணி கிராமத்தில் மக்கள் நல்வாழ்வுக்காகப் பல சீர்திருத்தங்களைக் கற்றுக் கொடுத்து அந்த கிராம மக்களின் மனங்களில் இடம் பிடித்தார். பின்னர் அங்கிருந்து பாலையூர் எனுமிடத்துக்குப் போய் அங்கு தங்கி ஆசிரமம் ஏற்படுத்திக்கொண்டு கிராம முன்னேற்றத்துக்குப் பாடுபட்டார். மக்களின் மகோன்னத ஆதரவு இவருக்குக் கிடைத்தது.
அப்போது காங்கிரசை விட்டு விலகிய பெரியார் தொண்டர்கள் நாகப்பட்டினத்தில் ஒரு சுயமரியாதை மகாநாடு நடத்தினார்கள். அதில் மாயவரம் சின்னையா பிள்ளை தலைமை வகித்தார். அதில் காந்தி படத்தைத் திறந்து வைத்து சுத்தானந்தர் பேசினார். இந்த மகாநாட்டில் பட்டுக்கோட்டை அழகிரி, மாயவரம் நடேசன், சுப்பிரமணிய பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர். அதில் பலரும் பார்ப்பனீயம் என்றும் பிராமணர்கள் பற்றியும் கேலியாகப் பேசினர். ஒருவர் "பார்ப்பனீயம் ஒழிக!" என்றார். பின்னர் சுத்தானந்தர் பேசுகையில் சொன்னது:- "நான் ஒரு பார்ப்பான். எதைப் பார்ப்பான் தெரியுமா? எல்லோர் மனதையும் ஊடுருவிப் பார்ப்பான். சமரசத்தால் உங்களைப் பார்ப்பான். சாதி மதம் ஒழியப் பார்ப்பான் (கைதட்டல் கேட்கிறது) நான் ஒரு புரட்டன். ஆன்மாவைப் புரட்டிப் பார்ப்பவன். நான் ஒரு பஞ்சாங்கன், மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய பஞ்ச அங்கமுடையோன். பசியும் தாகமும் அனைவருக்கும் ஒன்றுதான். தோலைத் தாண்டினால் உள்ளம் ஒன்றுதான். நம்மைக் கெடுப்பது மனமயக்கம்தான். உள்ளறிவால் கண்டால் ஒருமையே தெரியும். இதைத்தான் அருட்சுடர் வள்ளலார் சொன்னார்" என்று பேசியதை பலரும் வரவேற்றார்கள்.
திருவாரூரில் ரயிலேறி பயணம் செய்கையில் இவருக்கு தொண்டு செய்யும் சீடர்கள் போல நடித்து இருவர் இவர் பெட்டியைத் திருடிச்சென்று விட்டனர். டிக்கட் இல்லாமல் பயணம் செய்த இவரை மாயவரம் ஸ்டேஷனில் இறக்கி விசாரித்தபோது இவர் விவரங்களைச் சொல்ல, அந்த ஸ்டேஷன் மாஸ்டருக்கு இவரைத் தெரிந்திருந்தமையால் அங்கு சிலநாட்கள் தங்கி பின் பயணத்தை தொடர்ந்தார்.
சென்னையில்
சென்னையில் இவர் மனம் கவர்ந்த இடம் மைலாப்பூர். அடையாற்றில் இவர் அன்னிபெசண்ட் அம்மையாரையும் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியையும் சந்தித்துப் பேசினார். அப்போது சென்னை இந்தி பிரச்சார சபா திருவல்லிக்கேணியில் இருந்தது. அங்கிருந்த பாரதியின் உறவினர் ஹரிஹர சர்மாவோடு பழக்கம் ஏற்பட்டது. இந்த காலகட்டத்தில் இவர் பெங்களூர் மற்றும் வடநாட்டுத் தலங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். காந்திஜியின் சபர்மதி ஆசிரமத்துக்கும் சென்றார். பம்பாய் பெருநகரத்திலும் இவரது வாசம் சில நாட்கள் இருந்தன. சென்னையில் இவருக்கு காந்திஜியோடு இருக்கும் பாக்கியம் கிடைத்தது. காந்திஜி இவரை ஆசீர்வதித்தார்.
"ஸ்வராஜ்யா"
இவர் சென்னையில் இருந்த சமயம் டி.பிரகாசம் "ஸ்வயராஜ்யா" பத்திரிகையை நடத்த இவரை அழைத்தார். அதே காரியாலயத்தில் இவருக்குத் தங்க இடம் தரப்பட்டது. அவர் "சுயராஜ்யா" பத்திரிகையில் ஆசிரியராக இருந்தது பற்றி அவரே கூறும் செய்தியைப் பார்ப்போம்.
"பிராட்வேயில் மிகப் பெரிய மாளிகையில் 'ஸ்வராஜ்யா' காரியாலயம் இருந்தது. முதல் தளத்தின் முன்புறம் இரண்டு 'லைனோக்கள்' வேலை செய்தன. அடித்த்தளத்தின் பின்புறம் பெரிய ஆங்கில இயந்திரம் ஆங்கில 'ஸ்வராஜ்யா'வை அச்சடித்துக் கொண்டிருக்கும். மூன்றாம் மாடிக்குச் சென்றால் இவருடைய அறை. ஒரு கோவணத்தைக் கட்டிக்கொண்டு மின்னல் வேகத்தில் பேனரை ஓட்டிக் கொண்டிருப்பார். இவர் ஸ்வராஜ்யா ஆசிரியராக இருந்த சமயம் "பால்ய விவாகம்" பற்றிய சர்ச்சை எழுந்து பல கூட்டங்களில் விவாதங்கள் நடந்தன. அங்கெல்லாம் இவர் போய் பால்ய விவாகத்தை எதிர்த்தார். அப்போது சிலர் 'பெண்களுக்கு எட்டு வயதில் திருமணம் செய்ய வேண்டும், அதுதான் சாஸ்திரம். விதவைத் திருமணம் விபசாரமாகும்" என்றெல்லாம் பேச அங்கெல்லாம் கலவரம் நடந்தது. இந்த பத்திரிகை சிலகாலம் வரை வெளிவந்து கொண்டிருந்தது.
ஸ்ரீபெரும்புதூர்
ஸ்ரீபெரும்புதூரில் பெண்ணுரிமை கூட்டமொன்று நடந்தது. அவ்வூரில் பால்ய விவாகத்தின் காரணமாகப் பல விதவைகள் இருந்தனர். அதன் கொடுமைகள் குறித்து இவர் பேச அங்கு சென்றார். கோயில் மண்டபத்தில் கூட்டம். பெண்கள் பலர் அங்கு வந்து கன்னத்தில் கைவைத்துக் கொண்டு நின்றிருந்தனர். சில வைதீகர்கள் அவர்களை விரட்டியடித்தனர். "புருஷாள் கூட்டத்தில் உங்களுக்கு என்ன வேலை, போங்கோ" என்று விரட்டினார். அவர்கள் சுற்றியிருந்த வீட்டுத் திண்ணையில் கூடி கூட்டத்தைக் கேட்டனர். வைதீகர்கள் 'கலிகாலம் கலிகாலம்' என்றனர்.
உள்ளூர் பிரமுகர் யாரும் முன்வராததால் சுத்தானந்தர் பேசத் தொடங்கினார். அவர் பராசர ஸ்மிருதி, வேதம், பகுத்தறிவு இவற்றை ஆதாரமாகக் கொண்டு வாதம் புரிந்தார். ஆண்டாள் புரிந்தது காதல் திருமணம் என்றார். அங்கிருந்த வைதீகர்கள் சிலர் "நீங்கள்தான் கலிகால தூதர்கள், உங்களால்தான் மழை பெய்யவில்லை, கம்மனாட்டிகளுக்குக் கல்யாணமாம், திரண்டு குளித்த பெண்டுகளை மணையில் வைப்பதாம், காதலாம் கத்தரிக்காயாம், கலியாணமாம், போங்காணும்; கோயில் மண்டபத்தில் அபசாரமாகப் பேசக்கூடாது" என்று கூச்சலிட்டனர். அப்போது விசாலாட்சியம்மாள் என்பவர் பேச வந்தார். "ஏய்! பெண்கள் புருஷாள் முன் பேசக்கூடாது" என்று தடுத்தனர். இவர்கள் கோயிலுக்கு வெளியே ஒரு மேஜையைப் போட்டு அதில் ஏறி பேசிமுடித்துவிட்டே அங்கிருந்து கலைந்தனர். முத்துலட்சுமி ரெட்டி தலைமையில் தேவதாசி முறை ஒழிப்பையும் இவர் ஆதரித்துப் பேசியும் எழுதியும் வந்தார்.
"சக்தி"
நமக்கெல்லாம் "சக்தி" கோவிந்தன் பற்றி தெரியும். இவர் வெளியிட்ட சக்தி எனும் பத்திரிகை மிகவும் பிரபலம். அதில் ஆரம்பகாலத்தில் கவியோகிதான் ஆசிரியராக இருந்தார். "மஞ்சரி" பத்திரிகையில் இருந்த தி.ஜ.ரங்கநாதன் என்பவர்தான் இவருக்கு "சக்தி"யில் உதவி ஆசிரியர். "சக்தி" ஒரு மிகச்சிறந்த இலக்கியப் பத்திரிகை. அதில் யோகியின் கவிதைகள், கட்டுரைகள் அதிகம் இடம்பெற்றன.
"இயற்கை போதினி"
இவை தவிர "இயற்கை போதினி" என்ற ஒரு குறும் பத்திரிகையிலும் இவருக்குத் தொடர்பு இருந்தது. அல்லயன்ஸ் குப்புசாமி ஐயர் 1908 முதல் 1924 வரை நடத்தி வந்த "விவேக போதினி" பத்திரிகையிலும் யோகி எழுதி வந்தார்.
கவிதைகள்:
யோகி சுந்தானந்தருடைய கவிதைகள் கணக்கிட வேண்டுமென்றால் அது சாத்தியமான காரியமாக இருக்காது. பல்லாயிரக்கணக்கான பாடல்களை இவர் பாடியிருக்கிறார். மகாகவி பாரதியாரைப் போன்றே இவரும் சக்தியைப் பற்றிப் பாடியிருக்கிறார். "சுத்த சக்தி தாண்டவம்" எனும் தலைப்பில் அமைந்த பாடலின் மேன்மையைப் பார்ப்போம்.
"ஓங்குயர் மோன ஒளி அதனில்
ஓமென யாழிசைத்தாய் அந்த
நீங்கறு பாட்டினிலே - பராசக்தி
நீளுலகைப் படைத்தாய்.
ஈருயிர் யாவினுக்கும் - உயிராய்
எங்கும் இருப்பவளே - எம்மைத்
தாங்கி வளர்ப்பவளே - சுத்த சக்தி
தர்மச் சுடர் மணியே!"
இன்னொரு பாடல்:
"ஓடும் அருவியெலாம் அம்மா உன்
ஓங்கார வீணையன்றோ?
பாடும் பறவையெல்லாம் திருப்
பாவை முழக்கமன்றோ"
கூடும் மணத் தென்றல் கண்ணன்
குழலமுத மன்றோ?
ஆடும் அவனியெல்லாம் ஓம் சச்சி
தானந்த தாண்டவமே!"
இங்கே ஒரு திருப்பள்ளி எழுச்சி. கேட்போமா?
"விண்முகம் கனிந்தது விடிந்தது காலை
வீங்கிருள் அகன்றது தூங்கின குமுதம்
தண்முகம் அருளைத் தணல்முக மானது
தடங்களில் விரிந்தன தாமரை யெல்லாம்
மண்முகம் புதுப்பசும் பொன்முக மாகிட
மங்கலச் செங்கதிர் மலர்ந்தது வானில்
எம்முகம் பார்த்தருள் புரிவதற் கெண்ணி
எழுந்தருள் இத்தினம் இன்பக் கொழுந்தே!"
பெண்மைக்கு இலக்கணம் சொல்கிறார் இந்தப் பாட்டில்:
"வசந்த சோலை போலே மின்னும் வான்முகிலைப் போலே
இசைந்த காதல் போலே நல் இன்பமான பெண்மை
கலை வளர்க்கும் பெண்மை கவிகனிய நிற்கும் பெண்மை
தலை சிறந்த இன்பம் நல்கும் தாயமுதப் பெண்மை
தேன் மொழிகள் பேசி அன்புத் திருநகையை வீசி
வானமுதம் ஊட்டி நம்மை வளர்க்கும் பெண்மை வாழ்க"
'இளங்கதிர்' என்றொரு கவிதை:
"இளங்கதிர் காலை இயற்கையின் அழகில்
இலக்கியங்காணோமோ?
களங்க மில்லாத மலை அருவியினிலே
கவிதைகள் கேளோமோ?
உளங்குளிர் காதல் ஒருமையில் இன்பம்
ஊறிடக் காணோமோ?
வளம்பெறும் ஆண்பெண் சிவசக்தி எனவே
வாழ்ந்திட மகிழோமோ?
"யசோதரையும் சித்தார்த்தனும்" எனும் தலைப்பில் ஒரு கவிதையை சுத்தானந்தர் இயற்றியிருக்கிறார்.
தமிழிசைப் பற்று.
கர்நாடக இசையில் பெரும்பாலும் தெலுங்குப் பாடல்கள்தான் அதிலும் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் பாடல்களைத்தான் எல்லோரும் பாடுகிறார்கள். ஓரிருவர் முத்துசாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகியோர் பாடல்களையும், ஒரு காலத்துக்குப் பிறகு கன்னட மொழிப் பாடல்களையும் பாடிவருகின்றனர். இதையொட்டி தமிழ்நாட்டில் தமிழிசை இயக்கம் தொடங்கியது. செட்டிநாட்டரசர் தலைமையில் கல்கி, ராஜாஜி ஆகியோரும் தமிழிசைக்கு ஆர்வம் காட்டி வளர்க்கத் தொடங்கினர். தமிழிசை பரவ வேண்டுமானால் தமிழில் நல்ல சாகித்தியங்கள் இயற்றப்பட வேண்டும் என்று பாரதியார் கூட விரும்பியிருக்கிறார். அதையொட்டி சுத்தானந்தர் கச்சேரிகளில் பாடக்கூடிய பல நல்ல தமிழ் சாகித்தியங்களை இயற்றினார்.
இவருடைய தமிழ்ப் பாடல்களை திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமி, எம்.எம்.தண்டபாணி தேசிகர், டி.கே. பட்டம்மாள், ஜி.என்.பாலசுப்பிரமணியம், சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோர் பாடிப் பிரபலப்படுத்தினார்கள். எம்.எம்.தண்டபாணி தேசிகர் பாடி பிரபலமான பாடல் "இல்லையென்பான் யாரடா" எனும் பாடல். தமிழில் பாட பாடல்கள் எங்கே இருக்கிறது என்று கேட்டவர்களுக்கு பதிலடி கொடுப்பது போல இந்தப் பாடல் அமைந்தது என்று தேசிகருக்கு பெருமகிழ்ச்சி.
தமிழில் சாகித்தியங்கள்
இவர் திரைப்படங்களிலும் பாடல்களை எழுதியிருக்கிறார். அந்தக் காலத்தில் வந்த போஜன், ஆண்டாள், சுதர்சன், பொன்வயல், பார் மகளே பார், மரகதம் போன்ற படங்களில் இவரது பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. இவற்றில் சுதர்சன் படத்தில் பி.யூ.சின்னப்பா பாடியுள்ள
"உன்னடியில் அன்பு வைத்தேன்
கண்ண பரமாத்மா
உலகெல்லாம் நீயே அன்றோ
கண்ண பரமாத்மா" எனும் பாடலும்
"பொன்வயல்" படத்தில், "சிரிப்புத்தான் வருகுதையே, உலகைக் கண்டால் சிரிப்புத்தான் வருகுதையே" எனும் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய பாடலும், "பார் மகளே பார்" எனும் படத்தில் வரும் "வெட்கமாய் இருக்குதடி இந்த வேலவர் செய்திடும் வேலை இல்லா வேலை" எனும் பாடலும், "மரகதம்" படத்தில் வந்து பிரபலமாக விளங்கிய "மாலை மயங்குகின்ற நேரம், பச்சை மலை வளரும் அருவி ஓரம்" எனும் சுப்பையா நாயுடு இசை அமைத்த பாடல் இவை சிறப்பாக விளங்கிய பாடல்களாகும்.
சர்வமத சம்மதம்
இவருக்கு மத பாகுபாடு இல்லை. இந்து மதத்தாராயினும் மற்ற மதங்களையும் பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரைப் போல, அந்தந்த மதத்தில் ஈடுபாடு கொண்டு அந்த மதத்தாராகவே இருக்கப் பழகியவர். மற்ற மதங்களின் நூல்களைப் பழுதறக் கற்றவர். ஜைன மத்தின் தத்துவங்களை ஆழமாகக் கற்றுத் தேர்ந்தவர் இவர். அது போலவே பைபிள் முழுவதும் இவர் கற்று அறிந்து வைத்திருந்தார்.
இஸ்லாம் தத்துவங்களைக் கற்றுக் கொள்வதற்காக திருக்குர்ரானை முற்றிலுமாக ஓதியவர். அவர் இயற்றியுள்ள "பாரத சக்தி மகா காவியம்" எனும் நூலில் இந்த சர்வமதக் கருத்துக்களை ஆழ்ந்து படித்து நமக்குக் கொடுத்திருக்கிறார். இவர் கிறிஸ்தவ மதம் பற்றிய "கிறிஸ்து சாதனம்" எனும் கட்டுரையொன்றை எழுதி அந்த மதம் சார்ந்த கருத்துக்களைச் சிறப்பாக எடுத்து விவரிக்கிறார். கிருஸ்துவ மத நூலான பைபிளில் 25000 சொற்கள் உண்டு என்றும், இதை வைத்துக் கொண்டு பாதிரிமார்கள் அரிய தொண்டினை இயற்றுவதாகக் கூறுகிறார். பைபிள் உலகிலுள்ள 400 மொழிகலில் இருப்பதாகவும் இவர் ஒரு தகவலைக் கொடுக்கிறார். தான் சென்ற உலக நாடுகள் அனைத்திலும் பைபிள் படிக்கப்படுவது குறித்தும் இவர் குறிப்பிடுகிறார்.
இவர் "புத்தர் கருணை" எனும் சிறிய நூலொன்றை எழுதியிருக்கிறார். புத்தரைப் பற்றி இவர் கூறும் கருத்துக்கள். "புத்தர் அரச போகத்தைத் துறந்தார். அரச மரத்தினடியில் அமர்ந்து இவர் உலகத்தார் துயர் நீங்க ஓர் மார்க்கம் கண்டார். பெளத்தம் அறவழியை போதிக்கிறது. அன்பு, இரக்கம், எளிமை, தன்னலமில்லாதிருத்தல், தானம், சீலம், நல்லொழுக்கம் இவை அமைதிக்கான வழி என்கிறார் சுத்தானந்தர். புத்தமத பிரச்சாரத்திலும் இவர் ஈடுபட்டார். ஜைனர்களின் மகாவீரர் பற்றியும் இவர் விளக்குகிறார்.
அவர் சொல்கிறார்: "மகாவீரர் என்ற பெயரால் அவர் ஏன் அழைக்கப்பட வேண்டும் தெரியுமா? அதிமுத்தம் என்கிற பயங்கரமான சுடுகாட்டில் மகாவீரர் தியானத்தில் இருந்தார். கடுமையான இடி மின்னலுடன் மழை பெய்தது. பேய்க்கணங்களும், கொள்ளிவாய்ப் பிசாசுகளும் அவரை அச்சுறுத்தின. மகாவீரர் அசையவில்லை. பின்னும் அவரது பிரம்மச்சரியம் மாயப்பெண்களால் மாசுபடுத்த முயல்கின்றன. ஒன்றுக்கும் அசையாத மகாவீரரை ஒரு தேவதை "முனிவரே, உம்மை சோதித்தோம், நீரே பிரம்மச்சாரி, உம்மை மகாவீரர் என்பேன் என்கிறது அந்த தேவதை.
இப்படி இவர் மற்ற மதங்களையும் விரும்பி அதன் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு அதன் பெருமைகளையெல்லாம் ஊருக்குச் சொன்னவர். ஆனாலும் அவர் அடிப்படையில் ஓர் அத்வைதி. ஆதி சங்கரரின் மீது அசைக்கமுடியாத பக்தி கொண்டவர்.
மகாகவி பாரதியாரோடு சுத்தானந்தர்
மகாகவியின் பெருமையை மக்கள் பெரிதும் உணராதிருந்த காலத்தில் அந்த மாபெரும் கவிஞனைச் சரியாக அடையாளம் கண்டு கொண்டவர் சுத்தானந்தர். பாரதி குறித்து அவர் "பாரதி விளக்கம்", "கவிக்குயில் பாரதியார்" என இரு நூல்களை எழுதியிருக்கிறார். பாரதிக்கும் தனக்கும் இருந்த பழக்கம் குறித்து அவரே எழுதியதைப் பார்க்கலாம்.
"பாரதியாரை சிறுவயதில் நான் மதுரையில் பார்த்தேன். அப்போது அவர் வாட்டசாட்டமாக களை பொருந்தியவராக இருந்தார். புதுச்சேரியில் அவரைப் பார்த்தபோது அவர் மெலிந்து போயிருந்தார். நெற்றியில் நாமமும், கூரிய பார்வையும், பாவறா வாயும், தைரிய மீசை தாடியும் பாரதியை விளக்கின. இப்போது எவ்வளவு வேற்றுமை. ஆள் இளைத்திருந்தார். ஆனால் விழிகளில் அதே கனல். வெற்றிலைக் காவியேறி உதட்டில் அதே முத்து நகையைக் கண்டேன். மீசை ஜயமுண்டு பயமில்லை என்று பேசியது. தாடியில்லை."
கடையத்துக்குச் சென்று பாரதியைக் கண்ட காட்சியை இப்படி விளக்குகிறார். "முதலில் அக்கிரகாரத்துக்குச் சென்று பாரதியார் வீடு எது என்று வினவினேன். அடடா! நீர் வைதிகமாயிருக்கிறீர். அவனை ஏன் பார்க்கிறீர், அவன் முழு அனாச்சாரம் என்றார் ஒருவர். 'அது கிறுக்குப் பிடித்து கஞ்சா போட்டு எங்காவது திரியும்' என்றார் இன்னொருவர். 'நாங்கள் யாரும் அவன் வீட்டுக்குப் போவதில்லை, அவன் கழுதையைக் கொஞ்சும் கவி' என்றார் இன்னொருவர்.
நான் அவர்கள் வாயை அடக்கினேன். 'ஐயா! தமிழ்நாடு முழுவதும் கொண்டாடும் கவிக்குயிலை காகமும், கூகையும் வெறுத்தால் பரவாயில்லை, அவர் பெருமையை நான் அறிவேன் என்றேன்.
ஒருவர் மட்டும் கடையம் சத்திரத் திண்ணையிலிருந்து வந்து "அதோ அந்த ஆற்றங்கரை தோப்பில் தாண்டுகால் போடுகிறார்" என்றார்.
ஓடினேன். "விட்டு விடுதலை ஆகிடுவாய் இந்தச் சிட்டுக் குருவியைப் போலே" என்ற பாட்டு என்னை வரவேற்றது. பாரதியார் அந்தப் பாட்டைப் பாடிக்கொண்டு வெகு முறுக்காக ராணுவ நடைபோட்டுக் கொண்டிருந்தார். இடையிடையே மீசையை நகாசு செய்து கொண்டே, அஸ்தமனச் சூரியனைப் பார்த்தார். பசுஞ்சோலையில் தங்க முலாம் பூசியது போல மஞ்சல் வெயில் படர்ந்தது." இப்படிச் சொல்லிக்கொண்டே போகிறார் சுத்தானந்தர்.
மறுமுறை திருச்செந்தூரிலும் பாரதியாரைச் சந்தித்திருக்கிறார். அங்கு பாரதியார் "முருகா, முருகா" எனும் பாடலைப் பாடியதைக் கேட்டிருக்கிறார். கடைசி முறையாக பாரதியைச் சென்னைக் கடற்கரையில் பார்த்திருக்கிறார். அப்போதுதான் பாரதியார் "பாரத சமுதாயம் வாழ்கவே" எனும் பாடலைப் பாடியதையும் அப்போது வ.வெ.சு.ஐயரும் கூட இருந்ததையும் விவரிக்கிறார். அந்தக் கூட்டம் மழை காரணமாக சீக்கிரம் முடிந்துவிட்டதாம்.
வ.உ.சிதம்பரம் பிள்ளையுடன்
தூத்துக்குடி சென்று இவர் வ.உ.சி.யைச் சந்தித்தார். அப்போது காங்கிரசில் இரு பிரிவுகள். ஒன்றுக்கு வரதராஜுலு நாயுடு தலைவர். இவர் அங்கு சென்றதும் மற்றொரு கோஷ்டி இவரை கூட்டங்களில் பேச அழைத்தது. வ.உ.சியுடன் நெருங்கிப் பழகிய காலமும் இதுதான். அவரைப் பற்றி சுத்தானந்தர் கூறுவது: "உரம் பெற்ற வீர உள்ளம், கம்பீரமான கருமேனி, முரசம் போன்ற தமிழ்ப்பேச்சு, பேச்சுக்கேற்றபடி துடிக்கும் மீசை, வக்கீல் உடை, அன்பான மனம், புலமை நிரம்பிய சொல் - எல்லாம் என் மரியாதையை அதிகரிக்கச் செய்தன. 'வீரச்சிதம்பரம் பிள்ளை' என்ற பாட்டைப் பாடினேன்." என்கிறார்.
பாட்டைக் கேட்ட வ.உ.சி. "பாட்டு கம்பீரமாக இருந்தது. பாரதி கேட்டால் மகிழ்வார். ஸ்வயராஜ்யாவில் தங்கள் தலையங்கம் படித்தேன், நடையில் பழைய விறுவிறுப்பும் புதிய மறுமலர்ச்சியும் உள்ளன. ஆனால் எல்லாம் காந்தி மயமாக இருக்கிறது. திலகரும் உமது நண்பர்தானே?" என்றார் பிள்ளைவாள்.
அதற்கு சுத்தானந்தர், "திலகரிடமும் எனக்கு உள்ளன்புதான். அந்த மராட்டிய வீரம் தங்கள் தமிழ் மீசையில் துடிக்கிறதே. வெள்ளையரை விரட்டியடிக்க அவர் வீரம் பேசினார். தாங்கள் வெள்ளையன் வெட்கும்படி கப்பல் விட்டீர்கள். தங்கள் தியாகத்தை சுதந்திர பாரதம் பொன் எழுத்துக்களால் பொறிக்கும்" என்றேன்.
பிள்ளை சொன்னார், "நான் சிறையை விட்டு வெளிவந்தபோது எனக்கு மாலை சூட்டி வரவேற்க ஒரு தமிழன்கூட இல்லை. எண்ணைக்கடை வைத்துப் பிழைத்தேன். வறுமையில் வாடினேன். வாலஸ் துரை எனது சன்னத்தை மீட்டுத்தந்தார். அந்த நன்றிக்கே என் பிள்ளைக்கு வாலேசன் என்று பெயரிட்டேன். அதற்கொரு குறள்:
"கொன்றன்ன இன்னா செயினும் அவர் செய்த
ஒன்று நன்றுள்ளக் கெடும்".
இன்று எனக்கு மாதம் முன்னூறு ரூபாய் தந்தால் இப்படியே அரசியல் மேடையில் குதிக்கிறேன். நான் ஒருவன் கிளம்பினால் போதும், நாட்டை உரிமைக்கு அழைத்துச் செல்வேன்" என்றார்.
"தங்கள் உணர்ச்சிதான், பாரதி வாணியாகப் பாடியது. தங்கள் பேச்சு, பாரதி பாட்டு, ஐயர் எழுத்து, சிவாவின் ஆவேசம் - இந்த நான்கும் தமிழுலகைத் தட்டி எழுப்பின. இன்று வகுப்புவாதம்தான் நாட்டைப் பிளக்கிறது" என்றேன்.
அதற்கு வ.உ.சி. சொன்னார், "என் குருநாதர் காலத்தில் வகுப்புவாதமே கிடையாது. இன்று நாடு வகுப்புக் கந்தலாயிருக்கிறது. இந்து, முஸ்லீம், பார்ப்பான், அல்லான், வைதிக ஒத்துழையாமை, ஸ்வயராஜ்யக் கட்சி என்ற பிரிவெல்லாம் தற்கால அரசியல் ஊழலையே காட்டுகின்றன. எனக்கு மட்டும் வாய்ப்பளித்தால், தமிழரை ஒன்று சேர்ப்பேன். நாயக்கரும், நாயுடுவும், ஐயங்காரும், ஐயரும் என்னுடன் கைகோர்த்து நடக்கச் செய்வேன்" என்றார்.
அன்று நடந்த கூட்டத்துக்கு சிதம்பரம் பிள்ளை தலைமை வகித்தார். வரதராஜுலு நாயுடு, எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர், குப்புசாமி முதலியார், அண்ணாமலைப் பிள்ளை, சுப்பையர் ஆகியோர் பேசினர். கடைசியில் சுவாமி சுத்தானந்த பாரதியார் பேசுகிறார், பேசத்தான் வேண்டும், பேசும் பாரதியார் என்று அழைத்தார் தமிழ்ச்சிங்கம் வ.உ.சி. காலமும் கடமையும் என்று நான் பேசினேன், இல்லை கர்ஜித்தேன் என்கிறார் சுத்தானந்தர்.
சுத்தானந்தரைப் பற்றிய பொதுவான சில செய்திகள்
1979ஆம் வருஷம். சென்னை பள்ளிப்பட்டு ஸ்ரீராம் நகரில் யோகி சுத்தானந்த பாரதியார் தனது "யோக சமாஜம்" அமைத்து அதில் தங்கி இருந்தார். அங்கே அவருடைய சீடர்கள் சிலர் தங்கியிருந்தனர். அந்த காலத்தில் அவர் பல ஊர்களுக்கும் கூட்டங்களுக்கும் மற்ற நிகழ்ச்சிகளுக்கும் போய்வந்தார். பெரும்பாலான நேரங்களில் அந்த கட்டடத்தின் மாடியில் எழுதிக்கொண்டோ அல்லது தியானத்திலோ இருப்பது வழக்கம். இவருக்கு உதவியாகச் சில சீடர்களும் உடன் இருந்தார்கள். அடிக்கடி பல பெரியவர்கள் இவரைப் பார்க்க வருவார்கள். அவர்களுடன் இவர் இலக்கியம், கவிதை, யோகம், அரசியல் என்று ஒன்றுவிடாமல் பேசினார்.
அவர் ஃபிரெஞ்சு மொழியிலிருந்து தமிழாக்கம் செய்த கதையான "ஏழை படும் பாடு" என்ற பெயரில் ஒரு திரைப்படம் எடுத்தார்கள் அல்லவா, அதில் நடித்த வி.நாகையா பற்றி இவருக்கு நல்ல அபிப்பிராயம். அவர் நன்றாகப் பாடுவார், நல்ல சங்கீத ஞானமுள்ளவர் என்பார். இவர் ஃபிரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்த மற்றொரு கதையை எம்.ஆர்.ராதா படமெடுக்க விரும்பினார் என்றும், ஆனால் அது நடக்கவில்லை என்றும் கூறுகிறார்.
இவர் தன்னை மட்டும் பற்றி சிந்திக்கவில்லை, அவர் காலத்து மற்ற எழுத்தாளர்கள், படைப்பாளிகள் பற்றியெல்லாம் இவருக்கு நல்ல எண்ணம் உண்டு. புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன் இவர்களது சிறுகதைகளை இவர் பெரிதும் பாராட்டியிருக்கிறார். பாரதிதாசனனின் கவிதை வேகத்தையும் இவர் புகழ்ந்து பேசுகிறார். கம்பதாசன் குறித்து இவர் சொன்னது, "அந்த ஆள் அற்புதமான கவிஞன், ஆனால் ஒண்ணாம் நம்பர் குடிகாரன்" என்றார். கண்ணதாசன் குறித்து, "அவர் நல்ல கவிஞர், என் மீது நிரம்ப மரியாதை உள்ளவர்" என்கிறார்.
கவிஞர் சுரதா பற்றி இவர் கூறுவது: "சுரதாவை எனக்கு அவரது இளமைக் காலம் தொட்டே தெரியும். அவர் என் புத்தகங்களை எல்லாம் படித்து என்மீது ஆர்வம் கொண்டு தன் பெயரை "சுத்தானந்த தாசன்" என்று வைத்துக் கொண்டார். பின்னாளில் பாரதிதாசனிடம் ஐக்கியமாகி சுப்புரத்தினதாசன் என ஆனார்" என்கிறார்.
காஞ்சி மகாசுவாமிகள்
காஞ்சி மகான் பற்றி இவர் எழுதியதைப் பார்ப்போம். 'இவர் துறவுலகத்துக்கே தூய ஒளியாகத் துலங்குகிறார். அவரை நான் ஐந்து முறை தரிசித்துள்ளேன். 1922இல் அவர் சிவகங்கைக்கு வந்தபோது ராஜா சத்திரத்தில் தங்கியிருந்தார். நானும் என் தமயனாரும் சென்று தரிசித்தோம். எப்போதும் அவர் மகா தேஜஸ்வியாகத் துலங்கினார். அவர் பேச்சு மிக இனியது. அவர் குறித்து நான் பாடினேன்.
"தேனினும் இனிய சொல்லான், தீச்சுடர் மேனிகொண்டான்
ஊனுயிர்க்குயிரதான ஒன்றினைக் கலந்து நின்றான்
ஏனினிக் கவலை நெஞ்சே; இன்றுனக் கருள்செய் தானிஞ்
ஞானவான் - காமகோடி நாதனை நம்புவோமே"
அவருடைய திருக்கரத்தால் தேங்காயும் கனிகளும் திருநீறும் அளித்தார். மறுமுறை நான் திருப்பெருந்துறைக் கோயில் குறுந்தமரத்தடியே நிஷ்டைகூடி மாணிக்கப்பாட்டு எழுதிக் கொண்டிருந்தேன். அப்போது அடியார் சூழ ஆசாரியார் வந்தார். ஒரு பாட்டுப் படித்தேன். என்னை ஆசீர்வதித்தார். ஒரு வாரம் அவருடனே இருந்தேன். பிறகு காஞ்சி, சென்னை, திருப்பதி மூன்றிடங்களுக்குத் தலைமை வகித்து அவரைப் பற்றிப் பேசினேன்.
ரமண மகரிஷியும் அரவிந்த மகானும்
அரசியல், ஆசிரியர் பணி, ஊர் சுற்றல், வாதம் புரிதல், கிராம நிர்மாணத் திட்டங்கள் இப்படி பல அவதாரங்களை எடுத்த இவர் அடிக்கடி தியானத்தில் அமர்ந்துவிடுவார் என்பதைப் பார்த்தோம் அல்லவா? ஒரு நிலையில் இவரது தியானத்தில் ரமணமகரிஷி தோன்றத் தொடங்கினார். அது முதல் ரமணர் குறித்தும், அவர் வாழ்ந்த திருவண்ணாமலை, அவர் தவமிருந்த விருபாக்ஷி குகை இவை மனதில் ஓடத்தொடங்கின. விடுவாரா இவர்? எங்கெங்கோ சுற்றி மறுபடி திருவண்ணாமலை வந்து சேர்ந்தார்.
திருவண்ணாமலையில் வந்து இறங்கியதும் அண்ணாமலைப் பிள்ளை, ஜானகிராம அய்யர் ஆகிய இருவர் இவரை வரவேற்றனர். இவர் அண்ணாமலை குன்றில் ஏறி அங்கு அருவியில் நீராடிவிட்டு விருபாக்ஷி குகைத் திண்ணையில் அமர்ந்து தியானத்தில் மூழ்கினார். பின்னர் அங்கிருந்து ரமணாசிரமம் சென்றார். அங்கு அப்போது இருந்த பிரபல காங்கிரஸ் தலைவரும் ஆன்மீகத்துறையில் பெரியவருமான காவ்யகண்டம் கணபதி சாஸ்திரிகள் இருந்தார். மகரிஷியிடமும் காவ்யகண்டம் சாஸ்திரிகளிடமும் சுத்தானந்தர் நன்கு அளவளாவினார். இந்த சந்திப்பினால் தான் 'ரமணப்பிரகாசத்தின்' பெருமையை அறிந்தேன் என்கிறார் சுத்தானந்தர். இவர் திருவண்ணாமலையில் பகவான் ரமணரின் அனுமதியோடு மலைமீது ரமணர் தவமிருந்த விரூபாக்ஷி குகையில் அவரைப் போலவே மெளனத் தவத்தில் அமர்ந்து இருந்திருக்கிறார்.
ரமணாசிரமத்தில் சுத்தானந்தர் வசித்து வரும் போது அங்கிருந்த காவ்யகண்டம் கணபதி சாஸ்திரிக்கு அரவிந்தரை தரிசிக்க வருமாறு அழைப்பு வருகிறது. தானும் அரவிந்தரை தரிசிக்கவும் தன் வங்கிக் கணக்கிலிருந்த பணத்தை அரவிந்தரிடம் கொடுத்துவிட வேண்டுமென்கிற எண்ணமும் உதயமாகியது. ரமணரின் சந்நிதியில் இருக்கும்போதுதான் 'ரமணரைப் பார்த்தாலே போதும், அவர் அடைந்த உயர் நிலையைப் பிறரும் அடையத் தூண்டும் சக்தி கிடைக்கும்' என்று உணர்ந்தார் சுத்தானந்தர். திருவண்ணாமலை வாசத்தின் போதுதான் சேஷாத்ரி சுவாமிகளையும் தரிசித்தார். அவர் சொன்ன மகா உபதேசம் "சுத்தானந்தமாக இரு" என்பது. அந்த ஆசியை மனதில் வாங்கிக்கொண்டு திருவண்ணாமலையை விட்டுப் புறப்பட்டார்.
அங்கிருந்து புதுச்சேரி வந்தார். அங்கு அரவிந்தரையும் அன்னையையும் தரிசித்தார். 5-12-1950இல் அரவிந்தர் முக்தி அடைந்தார். அதன் பின் ஆரோவில் எனும் ஊர் உருவானது. அதில் 200 பேர் அயல்நாட்டார் சிறு குடில்களை அமைத்துக்கொண்டு வாழ்ந்தனர். அப்போது அன்னையும் காலமானார். அதன்பின் அங்கு தொடர்ந்து வாழ்ந்து வந்த சுத்தானந்தர் முதல் ஏழு ஆண்டுகளில் அரவிந்தரின் நூல்கள் அனைத்தையும் பயின்றார். பல நூல்களை மொழி பெயர்த்தார். அவர் கவிதைகளை வரிவரியாக ஆழ்ந்து படித்தார். அதைப்பற்றியெல்லாம் சுமார் 40 நூல்கள் எழுதி வெலியிட்டார். அங்கு மெளனமும், நூல் எழுதுதல், படித்தல் என்று பொழுது போயிற்று.
அரவிந்த ஆசிரமத்தில் தொடர்ந்து 25 ஆண்டுகளைக் கழித்தபின் அவர் புதுவையை விட்டு வெளியேறினார். புதுவையில் இருந்த 25 ஆண்டுகளும் அவர் மெளன விரதம் பூண்டிருந்தார். முதல் பத்து ஆண்டுகளில் அரவிந்தரின் நூல்கள் அனைத்தையும் படித்துத் தேர்ந்தார். பின்னர் பற்பல நூல்களை எழுதிக் குவித்தார். அத்தனையும் தனது மெளன விரதத்தோடேயே நடந்தது. அங்கு இவர் யோகம் பயின்றதோடு, அரவிந்தரின் அன்புக்கும், அன்னையின் கருணைக்கும் பாத்திரமானார். தினம் இவர் அவர்களை தரிசித்தபின் தான் தனது வேலைகளைத் தொடங்குவார். அரவிந்த அன்னை இவருக்குத் தினமும் ஒரு மலரைக் கொடுத்து ஆசி வழங்கி வந்தார். வாழ்க்கைப் பலனைப் பெற்றதாகவும், அவர்களது அருளாசி தனக்கு முழுமையாகக் கிடைத்ததாகவும் இவர் கருதினார். நான் ஏன் அரவிந்தாசிரமத்தை விட்டு வெளியேறினேன் என்பதற்கு "கடவுள் ஆணை' என்கிறார். அரவிந்த ஆசிரமத்தைவிட அரவிந்தரை மேலாக நினைக்கிறேன் என்கிறார். அங்கிருந்து சிதம்பரம் அண்ணாமலை நகருக்குச் செல்கிறார். அங்கு ராஜா சர் அண்ணாமலை செட்டியார் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பேசினார். பிறகு தருமபுரம் ஆதீனம் சென்று அவர்களோடு சைவ சித்தாந்தத்தைப் பரப்புவது குறித்து பேசினார். அங்கிருந்து வைத்தீஸ்வரன்கோயில் சென்று தரிசித்தார். சுவாமி சிவானந்த சரஸ்வதி, ஆரிய சமாஜ் தலைவர் சுவாமி ஸ்ரத்தானந்தா, ஷீரடி சாய்பாபா, புட்டபர்த்தி பாபா, மேகர் பாபா, இவர்கள் தவிர பிரபல விஞ்ஞானி சர் சி.வி.ராமன், கே.எம்.முன்ஷி, ஜவஹர்லால் நேரு, ராஜாஜி, திருக்கோயிலூர் தபோவனம் சுவாமி ஞானானந்தா ஆகியோர்களோடும் இவருக்கு பழக்கம் இருந்தது. இதன் பின் உலக நாடுகள் பலவற்றுக்கும் யாத்திரை சென்றார். அதன் விவரங்கள் இதோ:
வெளிநாட்டுப் பயணங்கள்.
இன்றைய சூழ்நிலையில் வெளிநாடு செல்வது என்பது நம் ஊரிலிருந்து சென்னைக்குப் போய் திரும்புவது போலத்தான். ஆனால் அதிக வசதிகள் இல்லாத நிலையில் யோகி சுத்தானந்த பாரதி பல ஊர்களுக்கும் சென்று வந்ததென்பது சிறப்பான செய்தி. இவர் சென்ற நாடுகளிலெல்லாம் இவரது தோற்றமும், பேச்சும் இவர் மீது மக்கள் மதிப்பும் பக்தியும் கொள்ள வைத்தது. இந்து சமயத்தைப் பற்றி பேசும் இவர் மற்ற சமயங்களையும் போற்றிப் பேசியதை மக்கள் வரவேற்றனர்.
இவர் வெளிநாட்டுப் பயணங்கள் இவர் மட்டும் கண்டும் வசித்தும் வந்த நிகழ்ச்சியாகி விடாமல் அவற்றை "நான் கண்ட ரஷ்யா", "நான் கண்ட ஜப்பான்" என்றெல்லாம் நூல்களை எழுதி மக்களும் படிக்க வசதி செய்து கொடுத்தார். இவர் சென்று வந்த நாடுகள் ரஷ்யா, இலங்கை, மலாயா (மலேசியா), தாய்லாந்து, ஜப்பான், பிரான்ஸ், லண்டன் (இங்கிலாந்து), ஜெர்மனி, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, இத்தாலி ஆகியவைகளாகும்.
ரஷ்ய அனுபவம்.
மாஸ்கோவிலிருந்து சுமார் 100 மைல் தூரத்திலிருந்த டால்ஸ்டாய் பண்ணையும், அவரது மாளிகையும் இவர் சென்று பார்த்த இடங்களில் முதலாவதாகும். அங்கு டால்ஸ்டாயின் வீட்டில் ஒரு நினைவகம் இருக்கிறது. அங்கு டால்ஸ்டாய் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் கண்டு களித்தார். பின்னர் அங்கு அமர்ந்து தியானம் செய்தார். அங்கு போய் டால்ஸ்டாயின் நினைவிடத்தில் அமர்ந்து கொண்டு நமது ஊரில் வடலூரிலுள்ள வள்ளலாரின் நினைவிடத்தையும் அப்படி மாற்ற வேண்டுமென்று எண்ணமிடுகிறார்.
அங்கிருந்து லெனின்கிராட் செல்கிறார். அங்கு இவர் ஒரு பள்ளிக்கூடத்துக்குச் செல்கிறார். அங்கு ஒரு மாணவனிடம் போய் இவர் "நீ கடவுளை நம்புகிறாயா?" என்றார். அந்த மாணவன் சொன்னானாம், "ஆம் நான் நம்புகிறேன், ஆனால் இந்த விஷயம் என் ஆசிரியருக்குத் தெரியக்கூடாது" என்றானாம். இதை அவரே எழுதுகிறார்.
இவரது ரஷ்யப் பயணத்தின் போது இவர் எழுதிய இரு ஆங்கிலக் கவிதைகள் படிக்க சுவாரசியமாக இருக்கும்.
“Gandhiji's spirit is speaking here
With Tolstoy soul to soul
What they are speaking I can hear
With my heart so closely near
When shall we see a world of peace
Where wicked, wasteful wars shall cease
Where Nations are one human fold
And all countries form a unique world
Where lovers unite like gem and gold
Where truth is bright and love is bold
Where bread comes out of workers sweat
Where joy smiles out of every heart
Where the toiler to his field goes
Kissing the lips of blooming rose
Where existence is Master's treat
And peace keeps on in cold and heat
Where all have work, dress and food
Where government goes on as it should be
To the rhythm of the people's voice
Such is the New World of our Choice.”
மற்றொரு அருமையான கவிதை.
“Work and food and cloth for all
Equal status for all
Health and Home and School for all
A happy world for all
No idle rich, no more beggars
All are equal workers”.
வார்சா நகருக்குப் போனபோது அவர் மனதில் தோன்றிய ஓர் அருமையான ஆங்கிலக் கவிதை:-
“Warsaw saw War
We saw ruins
Let the war be ruined
What a pitiful havoc
Ukraine comes
Wheat Wheat everywhere
Eat Eat Ukraine bread
It looks like Marvari turban”
இலங்கை அனுபவம்
இவர் இலங்கை சென்ற சமயம் அங்கு அமைதி நிலவியிருந்தது. மன்னார் சென்றடைந்த இவர் அங்கிருந்து கதிர்காமம் வரை சென்ற போது இவருக்கு அதி விமரிசையான வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஒவ்வோர் ஊரிலும் ஆடலும், பாடலும், நாட்டியம், ஊர்வலம் என்று தடபுடலாக வரவேற்பு இருந்தது. சைவம் தழைத்தோங்கிய பகுதி அது. அங்கு அனைத்து மதத்தினரும் அன்பு, பக்தி, நேர்மை இவற்றோடு ஒற்றுமையாக வாழ்வதை இவர் கண்டதாக எழுதுகிறார். ஆறுமுக நாவலரின் சைவம், சுவாமி விபுலானந்தரின் சங்கத் தமிழ், பொலநருவாவில் புத்தர் காட்சியும், திரிகோணமலையின் கடற்கரையும், ச்கிரியா மலையின் மேல் சித்திரக் காட்சிகளும், சிங்கக் குகையும், அனுராதபுரத்தில் அசோகனின் மகள் சங்கமித்திரையால் நடப்பட்ட அரச மரம், புத்த நாகரிகச் சின்னங்கள் இவைகளைக் கண்டு இவர் மனம் நெகிழ்ந்து போயிருக்கிறார்.
கண்டியில் புத்தருடைய பல் இருப்பதை தரிசனம் செய்திருக்கிறார். அங்கு இவர் "சமயோக தர்மம்" எனும் தலைப்பில் ஒரு சொற்பொழிவு நிகழ்த்தியிருக்கிறார். இவர் நாவலப்பிட்டி, வதுளை, குவீன்ஸ்மேரி, கல்யோயா ஆகிய ஊர்களுக்குச் சென்றபோது கடுமையான மழை பெயதபோதும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து இவர் பேச்சைக் கேட்டனர். வவுனியாவில் சுத்தானந்தர் இளைஞர் மன்றம் எனும் ஓர் அமைப்புச் செயல்பட்டு வந்தது. அங்கு ஏராளமான தமிழ் அன்பர்கள் இவருக்கு மறக்கமுடியாத வரவேற்பு கொடுத்தனர்.
மலாயா பயணம்
மலாயா செல்வதற்காக இவர் முதலில் சிங்கப்பூர் சென்று அங்கு நகரசபை மண்டபத்தில் மாபெரும் கூட்டத்தில் உரையாற்றினார். தலைப்பு "சர்வமத சமரசம்" என்பது. அங்கிருந்தவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தது, எனவே இவர் ஆங்கிலத்தில் பேசினார். அங்குள்ள பத்திரிகைகள் இவரது பேச்சை விவரமாக வெளியிட்டிருந்தன. தமிழ் முரசு, மலாயா மெயில், தமிழ்நேசன், டைம்ஸ் ஆகிய பத்திரிகைகள் தினமும் இவரது பேச்சை வெளியிட்டன. கோலாலம்பூர் முதலான இடங்களிலும் இவரது பேச்சைக் கேட்க மக்கள் திரளாக வந்திருந்தனர்.
தாய்லாந்து பயணம்
இவர் தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கிற்கு சென்றதும் அங்கு பரவியிருந்த இந்திய பண்பாடு கலை இவைகளைக் கண்டு ரசித்திருக்கிறார். புத்தர் கோயில், ராமாயண சிற்பங்கள் இவை இவருக்கு உள்ளக்கிளர்ச்சியை உண்டு பண்ணியதாக இவர் குறிப்பிடுகிறார். சயாம் சங்கத்தில் இவர் கம்ப ராமாயண சொற்பொழிவு நிகழ்த்தியிருக்கிறார். இவர் பன்மொழிப் புலவர் அல்லவா? அங்கு இந்தியில் வேதம் குறித்த சொற்பொழிவொன்றையும் நிகழ்த்தியிருக்கிறார். தற்போதைய வியட்நாமிலுள்ள சைகோனுக்கும் சென்றார். இப்படி தென்கிழக்கு ஆசியா முழுவதும் இவர் பயணம் செய்தார்.
ஜப்பான் பயணம்
ஜப்பானின் பயணம் இவருக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்ததாம். அவர் சொல்கிறார், "ஆசியாவின் ஆற்றல் பெற்ற வீரத் திருநாடு ஜப்பான்" என்று. அங்கு போனதும் அது இவரது தாய்வீடு போல உணர்ந்தாராம். யோகஹாமா துறைமுகம் பார்த்துவிட்டு அங்கு நடந்த உலக பெளத்த மகாநாட்டில் ஜென் புத்தம் எனும் தலைப்பில் ஒரு மணிநேரம் பேசினாராம். டோக்கியோ பல்கலைக்கழகத்தையும் இவர் கண்டு களித்திருக்கிறார்.
ஃபிரான்ஸ் பயணம்
ஃபிரான்சின் வண்ணமிகு தலைநகர் பாரிசுக்கு இவர் சென்றார். அங்கு ஜோன் ஆஃப் ஆர்க் கையில் வைத்திருந்த வாளைக் கண்டு அதைக் கண்களில் ஒத்திக் கொண்டாராம். ஈஃபிள் டவர் இவரைக் கவர்ந்த இடம். இவருக்கு ஃபிரெஞ்சு மொழி நன்றாகத் தெரியும். கவிதைபாடும் ஆற்றலும் உண்டு. ஆகவே அங்கு இவர் பல ஃபிரெஞ்சு புலவர்களைக் கண்டு உரையாடியிருக்கிறார்.
லண்டன் பயணம்
லண்டன் சென்று அங்கிருந்து ஷேக்ஸ்பியர் கிராமமான ஸ்டாட்ஃபோர்டு சென்று அங்கு ஷேக்ஸ்பியர் விழாவில் கலந்து கொண்டார். ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்களுக்குச் சென்று வந்தார்.
ஜெர்மனி பயணம்
பெர்லினில் உலக சமாதான மகாநாடு நடைபெற்றது. அதில் பங்குகொண்டு இவர் பேசினார். இவர் பேச்சுக்கு ஜெர்மானியர்கள் அடிக்கடி எழுந்து வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ஆர்ப்பரித்தனராம்.
இந்த நாடுகள் தவிர இவர் அமெரிக்கா, இத்தாலி, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கும் சென்று வந்தார். உலக நாடுகள் முழுவதையும் சுற்றி பார்த்த பின் பூரண ஞானத்துடன் இவர் தனது வாசத்தைச் சென்னையில் நிலைநிறுத்தினார். அங்கு ஒரு யோக சமாஜம் எனும் இடத்தை அமைத்துக் கொண்டு அங்கு சந்நியாச வாழ்க்கையைத் தொடர்ந்தார். இவர் தனது தென்னாப்பிரிக்கப் பயணத்தின் போது டர்பன், ஜோஹன்ஸ்பர்க், கேப்டவுன், கிம்பர்லி, ஆகிய இடங்களுக்குச் சென்று அங்குள்ள தமிழர்களிடையே பேசினார். அவர் சென்ற இடங்களிலெல்லாம் தமிழர்கள் கூட்டம் கூட்டமாக வந்து இவர் பேச்சைக் கேட்டனர்.
ராஜராஜன் விருது
இவர் சென்னையில் தனது "யோக சமாஜத்தில்' இருந்த காலத்தில்தான் தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகம் இவருக்கு முதன்முதலாக அறிவிக்கப்பட்ட "ராஜராஜன் விருதை"க் கொடுத்து கெளரவித்தது. இந்த விருதைப் பெற்ற முதல் அறிஞர் இவர்தான். தமிழ்ப் பல்கலைக் கழகம் தோன்றி அறிவித்த முதல் விருது இது. இதனைப் பெறும் பாக்கியத்தைப் பெற்றவர் யோகி சுத்தானந்த பாரதியார்.
இவர் பாடல்களிலும், எழுத்திலும் மணிப்பிரவாள நடையே அதிகமிருக்கும். தனித்தமிழ் இயக்கத்தார் சிலர் இவரது இந்த மணிப்பிரவாள நடையை ஏற்றுக் கொள்ளவில்லை, குறை சொன்னவர்களும் உண்டு. அவர் அதிகம் உறங்குவது கிடையாது. அது பற்றி வ.வெ.சு.ஐயர் கூறுகிறார்; "அவர் பேனா நள்ளிரவில்கூட ஓடிக்கொண்டிருக்கும்" என்பார். அதிக நேரம் தியானத்தில் இருப்பார். உணவு வகைவகையாக சாப்பிடமாட்டார். அரிசியோடு காய்கறிகளையும் ஒன்றாகப் போட்டு வேகவைத்து சாப்பிட்டுவிடுவார். வயதான காலத்திலும் கிணற்றில் நீர் இறைத்து குளித்து தன் உடைகளைத் தானே துவைத்து உணர்த்திப் போட்டுக் கொள்வார்.
சென்னை அடையாறு யோக சமாஜத்தில் இருந்து கொண்டிருந்த சுவாமிஜிக்கு திடீரென்று தான் பிறந்த சிவகங்கையின் நினைவு வந்தது. அங்கு தொடங்கிய அவரது வாழ்வு உலகம் முழுவதும் சுற்றித் திரிந்தபின் சென்னை அடையாற்றில் பல காலம் யோக சாதனையில் ஈடுபட்டுப் பிறகு தன் வாழ்வின் அந்தி நேரம் நெருங்குகிறது என்பதை உணர்ந்தோ என்னவோ தன் சொந்த ஊருக்கு வர எண்ணினார்.
1973இல் சிவகங்கை ராஜா உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த ஆர்.வெங்கடகிருஷ்ண ஐயருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் சிவகங்கை நகரையொட்டிய புறநகர் பகுதியில் ஓர் பள்ளிக்கூடம் தொடங்க வேண்டும், அதற்கு ஆகவேண்டிய காரியங்களைத் தொடங்குங்கள் என்று எழுதப்பட்டிருந்தது. ஆனால் ஒரு பள்ளிக்கூடம் தொடங்க வேண்டுமானால் அதற்கான பூர்வாங்க வேலைகள் எவ்வளவு சிரமம் என்பது அதில் ஈடுபட்டவர்களுக்குத்தான் தெரியும். எத்தனை நடைமுறைகள், எத்தனைத் தடைகள், அலைச்சல், செலவு, இதையெல்லாம் எண்ணி தலைமை ஆசிரியர் சற்று திகைத்தார். இருந்தாலும் இப்படியொரு பள்ளி தொடங்குவது என்பது வரவேற்கத்தக்கதுதான் என்று முடிவு செய்து அதற்காக ஒரு கமிட்டி ஏற்படுத்தி வேலைகளில் இறங்கினார்.
பள்ளிக்கூடம் தொடங்குவது என்றால் அதனை ஏதாவது ஒரு அமைப்பின் சார்பில்தான் தொடங்க வேண்டுமென்று சுவாமிஜி விரும்பியதால் "யோக சமாஜம்" எனும் பெயரில் ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. உடனே சிவகங்கையைச் சுற்றி பள்ளிக்கூடத்துக்கு ஏற்ற இடம் கிடைக்கிறதா என்று தேடத் தொடங்கினார்கள். அப்படியொரு பெரிய இடம் சோழபுரம் எனும் கிராமத்தில் இருந்தது. அதன் உரிமையாளர்களான இரு செல்வந்தர்கள் தங்கள் இடத்தைத் தானமாகக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார்கள். நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த இரு தனவந்தர்கள் மனமுவந்து இந்த நற்பணிக்காகத் தங்கள் 27.37 ஏக்கர் நிலத்தைத் தானமாகக் கொடுத்தனர். வாழ்க அவர்களது தர்ம சிந்தை. ஒருவருடைய இடம் 22 ஏக்கர் மற்றொருவருடையது 7.37 ஏக்கர். இரண்டும் ஒரே இடத்தில் அமைந்திருந்தது. 1977 ஜனவரியில் Gift Deed பதிவு செய்யப்பட்டது.
சிவகங்கை கம்பன் விழாவுக்கு வந்த யோகி சுத்தானந்த பாரதியார் யோக சமாஜத்துக்கு "சுத்தானந்தா யோக சமாஜம்" எனப் பெயரிட்டு பதிவு செய்யச் சொன்னார். 1978இல் பள்ளிக்கூடம் தொடங்க அனுமதி கேட்டு மனுச்செய்தனர். கே.என்.ராமநாதன் செட்டியார் என்பவர் தனது மாளிகையொன்றை தற்காலிகமாக பள்ளிக்கூடம் நடத்த கொடுத்தார். பல அரசு அதிகாரிகளும் இப்படியொரு பள்ளிக்கூடம் தொடங்க, அதுவும் சுவாமி சுத்தானந்தர் தொடங்குவதனால் அனைத்து ஒத்துழைப்பையும் தந்தனர். ஆனால் ஒரே ஒருவர் Joint Director of School Education அனுமதி தர மறுத்துவிட்டார். எனவே கமிட்டி சென்னையிலிருந்த டைரக்டருக்கு மேல் முறையீடு செய்தனர். அப்போது டைரக்டராக இருந்தவர் கல்வியாளர் டாக்டர் கே.வெங்கடசுப்பிரமணியம். அவர் அவசரமாக மும்பை செல்லவிருந்ததால் வந்தவுடன் அனுமதி தந்துவிடுவதாகச் சொல்லி மனுவைத் தன் உதவியாளரிடம் கொடுத்துச் சென்றார். அந்த உதவியாளர் வேண்டுமென்றோ அல்லது தவறாகவோ அதனை அனுமதி மறுத்த அதிகாரிக்கு அனுப்பி வைத்துவிட்டார். மறுபடி தேர் புறப்பட்ட இடத்திலேயே சென்று நின்றது.
அப்போது எதிர் கட்சி தலைவராக இருந்த உ.சுப்பிரமணியமும் அவர் தம்பி உ. பில்லப்பன் என்பவரும் முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் இது குறித்து பேசினார். பண்ருட்டி ராமச்சந்திரனிடமும் பேசினார். உடனே பண்ருட்டி டைரக்டருக்கு போன் செய்து அனுமதி தருவது குறித்து முடிவு என்ன ஆயிற்று என்று முதலமைச்சர் கேட்பதாகக் கேட்டதும், அவசர அவசரமாக கையெழுத்தாகியது. இப்படி மலையைக் கெல்லி ஒரு எலியைப் பிடிக்க வேண்டியிருந்தது, இப்படியொரு பள்ளிக்கூடம் தொடங்குவதற்காக.
சிவகங்கை ராஜா உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்த வெங்கடகிருஷ்ணன் தான் இந்த பள்ளிக்குத் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். 1-9-1979 அன்று பள்ளிக்கூடம் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை தொடங்கப்பட்டது. அடுத்த ஆண்டில் பத்தாவது ஆரம்பிப்பது என்று முடிவானது. அதுவரை 59 பேர் பள்ளியில் சேர்ந்திருந்தனர்.
பள்ளிக்கூடத்துக்கு தானமாக வந்த இடத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. 1-6-1987இல் இந்த புதிய கட்டடத்துக்கு பள்ளிக்கூடம் மாற்றப்பட்டது. அந்தக் கட்டடம் Dr.K.வெங்கடசுப்பிரமணியம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. உதவி செய்த அத்தனை கல்வித்துறை அதிகாரிகளும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டார்கள்.
சென்னை அடையாறு யோக சமாஜத்தில் தங்கியிருந்த யோகியார் சிவகங்கை சோழபுரத்துக்கு வந்து நிரந்தரமாகத் தங்குவதென்று முடிவுக்கு வந்தார். 1982 டிசம்பரில் இவர் சிவகங்கை வந்து சேர்ந்தபோது மகிழ்ச்சி வரவேற்பு அளிக்கப்பட்டது. இங்கு அவருக்கு பல ஊர்களிலிருந்தும் சீடர்களும், ஆர்வலர்களும் வந்து சேர்ந்தார்கள். இவருடைய ONE GOD, ONE WORLD AND ONE COSMIC RACE எனும் சித்தாந்தம் தீவிரமாக பிரச்சாரம் செய்யப்பட்டது.
1990இல் அவரே சோழபுரம் பள்ளிக்கூடத்தில் தன் வரலாற்றைப் பேசினார். அது:- "என்னை ஆட்கொண்டு ஆளாக்கிய மகான்கள் பலர். தேவி மீனாட்சி அருளால் அருட்கவியானேன். பூர்ணானந்தர், ஞானசித்தர், ரமணர், ஷீரடி சாயிநாதர், சேஷாத்ரி சித்தர், சித்தாரூடர், அப்துல்லா மெளல்வி, சாது சுந்தர் சிங், மெஹர்பாபா, அரவிந்த அன்னை, அனிபெசண்ட், வ.வெ.சு.ஐயர், கவிக்குயில் பாரதியார் போன்ற எத்தனையோ அருளறிவுச் செல்வருடன் பழகிய அனுபவங்கள் இங்கே செயல்வடிவம் பெற வேண்டும்.
பல மொழிகளைக் கற்றேன், பல சமயங்களையும் பழகிப் பயின்றேன். பாரத நாட்டைப் பலமுறைச் சுற்றினேன். உலகைப் பலமுறை வலம் வந்தேன். நாடு நாடாகச் சுற்றி, மலைக் குகைகளிலும், காடுகளிலும் அரவிந்தர் ஆசிரமத்திலும் முப்பதாண்டுகள் மோனத்தவமிருந்து எனது அனுபவங்களையெல்லாம் ஆயிரம் நூல்களில் எழுதிக் குவித்துள்ளேன். அவை அனைத்தும் மீண்டும் அச்சேறி வரவேண்டும். பிற்காலத்தில் இதை ஒரு அன்புப் பணியாக மேற்கொள்க" என்று உரையாற்றினார்.
சுவாமிஜி அந்த முதிர்ந்த வயதிலும் மறுபடி ரிஷிகேஷ், சிம்லா, ஐதராபாத், பாட்னா ஆகிய இடங்களுக்குச் சென்று வந்தார். 1990 பிப்ரவரியில் இவர் ஊர் திரும்பினார். அது முதல் அவரது உடல் நிலை கெடத்தொடங்கியது. ஜோதி விழா நடந்த சமயம் கூட அவரால் பேச முடியவில்லை. மார்ச் மாதம் 4ஆம் தேதி முதல் சுவாமிஜி உணவு உட்கொள்ள மறுத்து விட்டார்.
வயது மூப்பும், தள்ளாமையும் யோகி சுத்தானந்தரை மிகவும் வாட்ட 7-3-1990இல் இவ்வுலக வாழ்வை நீத்து அமரரானார். அன்று காலை 9 மணிக்கு பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர் யோகியார் அதுவரை எழுந்திருக்கவில்லை என்பதை உணர்ந்து அவர் அறைக்குச் சென்று பார்க்க அங்கு கவியோகி சுத்தானந்த பாரதியார் மீளாத அமரத்துவம் பெற்றுவிட்டதைக் கண்டார். 11-5-1897இல் பிறந்த அவர் தனது 93ஆம் வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார். யோகியாரின் பூதவுடல் அந்தப் பள்ளி வளாகத்திலேயே சமாதி வைக்கப்பட்டு அங்கு ஓர் கோயில் எழுப்பப் பட்டது. ஏற்கனவே ஒரு நகரத்தார் நண்பரிடம் பள்ளி வளாகத்தில் ஒரு ஆலயம் எழுப்பி அதிலொரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்ய வேண்டும், அதற்காக ஒரு லிங்கம் கொண்டு வரப் பணித்திருந்தார். அந்த லிங்கம் இவர் காலமான சமயம் வந்து சேர்ந்தது. அது சுவாமிஜியின் சமாதி ஆலயத்திலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்றளவும் மிகச்சிறப்பாக பராமரிக்கப்பட்டு பஜனை முதலிய வழிபாடுகள் நடந்து வருகின்றன. அவரது பூதவுடல் மறைந்தாலும் தமிழில் அவர் படைத்த படைப்புக்கள் அனைத்தும் என்றென்றும் வாழ்ந்திருக்கும். நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை இவரைப் பற்றி பாடிய பாடல் ஒன்றை நினைவுகூர்வோம்.
Retrieved with thanks on 06 03 2012 from:
http://bharathipayilagam.blogspot.com/2010/10/blog-post.html
மல்லிகை: ஓம் சுத்த சக்தி ! - சந்திரசேகரன் - April 16, 2007
"ஓம் சுத்த சக்தி" என்ற அவர்தம் கணீர் முழக்கம் என் செவிகளில் இப்போதும் ஒலிக்கிறது. சிறுவனாய் வியந்தும், பயந்தும் பார்த்த சுத்தானந்தர், எனக்கு வயது ஏற, ஏற என்னுள் ஏற்படுத்திய தாக்கம் மிக அதிகம். படிக்கப் படிக்கப் பிடிக்க முடியாத அந்த உயர்ந்த சிந்தனை!
நமக்குக் கைக்கெட்டும்தூரம் இருந்தும் கண்மூடி இருந்தோமே என எண்ணி வருந்திய நாட்கள் அதிகம். இனியும் தாமதித்தால் வாழ்நாட்கடன் தீராப் பெருஞ்சுமையாக நெஞ்சை வருத்தும். எனவே, என்னால் முடிந்ததை மறு தட்டச்சுச் செய்து தருகிறேன் ;வியாக்கியானமோ, பொழிப்புரையோ தர நான் எத்தகுதியுமற்றவன். நான் ஒரு கருவி; அவன் இயக்குகிறான். அவ்வளவே.
எங்கள் வாழ்வுகளில் எத்தனை ஒளி வீசச் செய்துள்ளார் என்பனவற்றைக் கூற இந்த மின்மடல் போதாது. எனவே, முதலில் அவர்தம் படத்துடன் கண்ட ஆங்கில வாழ்க்கைக் குறிப்பை விட,த.ம.அ முதுசொம் பகுதியில் அவர்தம் வாழ்க்கை குறிப்பை இடுவதே மிகவும் பொருத்தமாக இருக்கும் என்பதால், முதலில் அவரது வாழ்க்கைக் குறிப்பைத் தருகிறேன்.
இதை அவருடைய சீடர் சுத்தானந்த தாசன், கம்பரசம்பேட்டை அமரர் ஸ்ரீ.பா.கோபாலகிருஷ்ணன் முதலில் எங்கள் சமாஜம் நடத்தும் பள்ளியின் மாணவர் கூட்டு வழிபாட்டின் கையேட்டுக்காக எழுதினார். சிற்சில மாற்றங்களுடன் நான் அதையே மறுபதிவு செய்கிறேன்.
*
முல்லை: Subashini ஆல் எழுதப்பட்டது
கவியோகி மஹரிஷி டாக்டர். சுத்தானந்த பாரதியார் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு.
”சிவகங்கை என் ஜீவகங்கை” என்று சுத்தானந்தர் பாராட்டும் சிவகங்கை மண்ணில் காமாக்ஷி அம்மையாருக்கும், சிவிகுல ஜடாதர அய்யருக்கும் தெலுகு பிராம்மண குலத்தில் ஹேவிளம்பி ஆண்டு சித்திரைத் திங்கள் 31-ஆம் நாள் (11-5-1897) உத்திர நக்ஷத்திரத்தில் சுத்தானந்தர் அவதரித்தார். தாயார் ராமாயண, மகாபாரதக் கதைகளை சுயமாகவே பாடல்களாய்ப் பாடி உணவு ஊட்டுபவர்.
தந்தை வேத வித்தகர். உடன் பிறந்தோர்களில் மூத்த தமையனார் ஜெ. வேங்கடராமய்யர். இவர் போராட்ட வீரர்களுக்கு மட்டும் கோர்ட்டில் ஆஜராகும், தானே நெய்த கதராடை அணியும் தேச பக்த வக்கீல்! இரண்டாவது தமையனார் ரங்கசாமி அய்யரே பின்னாளில் குடும்பம் முழுவதும் பார்த்துக் கொண்ட ஸ்திதப்ரக்ஞர். அண்ணன் தேசீயவாதி, தம்பி சுதந்திரப் போராட்டக்காரன் மட்டுமின்றி, ஒரு துறவியும் கூட! இவர்களது ஒரே தமக்கை ரங்கநாயகி.
சுத்தானந்தரின் இயற்பெயர் வேங்கட சுப்ரமணியன். இவர் பிறப்பதற்கு முன்பு நடந்த செவி வழிச் செய்தி ஒன்று எங்கள் வீட்டில் பெரியவர்கள் பேசக் கேட்டதுண்டு. இவர்தம் அன்னையார் கர்ப்பம் தரித்ததும், மீண்டும், மீண்டும் குழந்தை பெற்றுக் கொள்வதா என்று எரியும் கர்ப்பூரத்தை அப்படியே வாயால் விழுங்கி வயிற்றில் செலுத்திக் கொண்டார், அதே இரவில்,இறைவன் அவர்தம் கனவில் தோன்றி, “கர்ப்பூர நெருப்பால் இந்த உலகிற்குக் குருவாகும் பேரொளியை அணைக்க இயலுமா? அவன் என் மகன்; உலகில் பெரும் யோகியாய்ச் சுடர் விடுவான்,”என்று சொன்னதாகச் சொல்லுவார்கள்.
எட்டாம் வயதில், அன்னை பராசக்தி மதுரை மீனாக்ஷியம்மனின் பேரருளால், குண்டலினிக் கனல் தூண்டப்பெற்று கவிதா சக்தி பெற்றார்; அன்றே அவருக்கு ஆன்மிக மலர்ச்சியும் ஏற்பட்டது.தாய்வழிச் சிறிய பாட்டனார் பூர்ணாநந்தர் இவருக்கு யோகம் பயிற்றுவித்தார். இமாலய மகான் ஞான சித்தர் ‘சுத்தானந்தம்’ என்று தீட்சா நாமம் வழங்கி, பராசக்தி மந்திர உபதேசம் அருளினார். அவரே இதய (தஹர) வித்தையையும், ஸஹஸ்ரார ஸித்தியையும், ஆதார ரகசியங்களையும் உணர்த்திச் சென்றார்.
புலவர் தெய்வசிகாமணி அய்யர், இவரது தமிழ் அறிவை வளர்த்தார்.சிருங்கேரி ஜகத்குரு சங்கராசார்யர் ஸ்ரீ நரசிம்ம பாரதி ஸ்வாமிகள் ‘கவியோகி’, ‘பாரதி’ என்றும், இமயஜோதி ஸ்வாமி சிவானந்தர் ‘மஹரிஷி’ என்றும் சிறப்புப் பட்டம் அளித்தனர்.
ஷிர்டி சாய்பாபா இவர்தம் செவியில் ’ஓம்’ ஒலியை ஓதி, என்றும் சித்தத்தில் அது நிலைத்திருக்கத் தலைமேல் காதைச் சுற்றி ஒரு காவித் துணியைக் கட்டிவிட்டார். பகவான் ரமணர் ‘தன்னறிவு’ பெறச் செய்தார்.
சேஷாத்ரி ஸ்வாமிகள், சித்தாரூடர், மேஹர் பாபா, அரவிந்தர், அன்னை போன்றோர் இவர்தம் ஆன்மிக உயர்வுக்கு வழிவகை செய்தனர். மஹரிஷி வ.வே.சு ஐயரின் உறவால் கவியோகியின் வாழ்வில் தேசீயமும் புகுந்தது. மகான் அரவிந்தர் தொடர்பால் சுத்தானந்தரின் வாழ்வில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது. அன்னாரின் புதுவை ஆசிரமத்தில் இருபது ஆண்டுகள் மோனத் தவம் புரிந்து சாதனை செய்தார். ஏற்கெனவே இமயமலைக் குகைகளிலும், விரூபாட்சி குகைகளிலும் ஐந்துஆண்டுகள் தவமியற்றி இருந்தார். மோனத்தவம் புரிந்த இவ்விருபத்தைந்து ஆண்டுகளில் சுவாமிகள் பல ஸித்திகளையும், சக்திகளையும் பெற்று ஒரு விஜயதசமி நன்னாளில் மஹாதுரீய ஸமாதி அனுபூதி அடைந்தார்கள்.
மனமாறச் சமய ஒற்றுமை போற்றிய தூயவர் சுத்தானந்தர். கிறிஸ்தவம், இஸ்லாம், சமணம், பவுத்தம், சீக்கியம், ஜரதுஷ்ட்ரம் ஆகிய சமயங்களில் அவர்களாகவே வாழ்ந்து, அவர்தம் நூல்களைக் கற்றார். அவை காட்டிய நெறிகளையும் பழகி வந்தார். சமயங்கள் போதிக்கும் உண்மை ஒன்றே என்று கண்டார். ”’ஒரே கடவுள், ஒரே உலகம், ஒரே ஆன்ம நேயர் நாம்,” என்பதை உலகுக்கு அறிவுறுத்தினார், வேற்றுமையில் ஒற்றுமை கண்ட சுத்தானந்தர்.
மோனத்தவம் புரிந்த காலங்களில் பல ஆயிரம் நூல்களை இயற்றினார்.
பெரும்பாலானவை தமிழ் நூல்களே. வடமொழி, இந்தி, தெலுங்கு, ஆங்கிலம், ஃப்ரெஞ்சு மொழிகளிலும் நூல்களை இயற்றியுள்ளார்.
கவிதைகள், உரைநடை, பயணநூல், இலக்கணம், கீர்த்தனைகள், நாட்டியப் பாடல்கள், நாடகம், திறனாய்வு, நவீனம், சிறுகதை, அறிவியல், வாழ்க்கை வரலாறு போன்ற பலதுறைகளிலும் நூல்களை எழுதிக் குவித்தார்; எனினும் சுத்தானந்தர் தமது படைப்புகளில் பெரிதும் போற்றியவை ‘பாரத சக்தி மஹாகாவியம்’ என்னும் நூலும், ’யோகசித்தி’ என்னும் குறட்பாக்களாலான நூலுமாகும். பாரத சக்தி ஐம்பதாயிரம் வரிகள் கொண்ட ஒரு படைப்பிலக்கியம். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் முதல் ராஜராஜன் விருதை இந்த நூலுக்கே அளித்தது. யோகசித்தியின் ஆங்கில வடிவத்தையும் சுத்தானந்தரே ”THE GOSPEL OF PERFECT LIFE” என்னும் பெயரில் இயற்றியுள்ளார். "யோகசித்தி" ஃப்ரெஞ்சு, ஸம்ஸ்க்ருத மொழிகளிலும் வெளிவந்துள்ளது. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்ய அறிஞர் அண்ணா அவர்களால் பரிந்துரை செய்யப்பட்டவர் சுத்தானந்தர்.
காட்டுப்புத்தூரிலும், தேவகோட்டையிலும் ஆசிரியராகவும், சாரண ஆசிரியராகவும் பணியாற்றிய காலங்களில்,
தேசீயச் சிந்தனைகளைத் தூண்டும் பாடல்களை இசையோடு இயற்றி அவற்றை மாணவரிடையே பரப்பினார்.
திலகர், காந்திஜி, நேதாஜி, வ.வே.சு ஐயர், சிதம்பரனார், சுப்ரமணிய சிவா, சுப்ரமணிய பாரதியார், செண்பகராமன், ராஜா மகேந்திர ப்ரதாப் போன்ற பெருந்தலைவர்களுடன் நெருக்கம் கொண்டிருந்தார் யோகியார். காந்தியடிகளின் அறிவுரைப்படி கிராமப்பணி,கதர்ப் பணி, மதுவிலக்கு ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, உயிர் பலி தடுத்தல், பெண்கள் மறுவாழ்வு போன்ற சீர்திருத்த இயக்கங்களையும் மேற்கொண்டு நாட்டுப் பணியும் ஆற்றியுள்ளார். தமிழ்த் தென்றல் திரு.வி.க அவர்கள் இப்பணியில் சுவாமிகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்கள்.
1947ம் ஆண்டு சுதந்திர இந்தியாவில் தாம் மேற்கொண்டிருந்த மௌனத்தைக் கலைத்து முதன் முதலில் ரிஷி கேசத்தில், ஸ்வாமி சிவானந்தர் முன்னிலையில், சுதந்திரச் சொற்பொழிவு செய்து அன்றிலிருந்து ஆன்மிகத் தேடற் பயணங்களை விரிவுபடுத்தினார்;. பாரதம் முழுவதும் பயணம் மேற்கொண்டார். ஜெனிவா, பெர்லின் நகரங்களில் நடந்த உலக அமைதி மாநாடுகளில் கலந்து கொண்டார். சோவியத் யூனியன், ஃப்ரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, இங்கிலாந்து, இத்தாலி, டென்மார்க், ஹாலந்து போன்ற ஐரோப்பிய நாடுகளிலும், சீனம், ஜப்பான், கொரியா, தாய்லாந்து, இந்தோனேஷியா, ஃபிஜி, மலேஷியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய ஆசிய நாடுகளிலும், அமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளிலும், ஆஸ்திரியாவிலும் சுற்றுப் பயணங்கள், சொற்பொழிவுகள் தொடர்ந்தன.
சுத்தானந்தர் உலகிற்கு அளித்த செய்தி ‘சமயோகம்’.அகவாழ்வு சிறந்திட யோகம்; புறவாழ்வு சிறந்திட அறிவியல். யோகமும், அறிவியலும் மனித வாழ்வில் இணைந்து விட்டால் மானுடம் அமர நிலையை அடையும்; மண்ணில் விண்ணரசு தோன்றும். இச்சமயோக வேள்விக்கென்றே ‘யோக சமாஜம்’ தோன்றியது. வடலூரிலும், சென்னை அடையாற்றிலும், யோக சமாஜம் சுமார் முப்பது ஆண்டுகள் நடந்தது.
1977 ஆம் ஆண்டு சிவகங்கையில், ’சுத்தானந்த யோக சமாஜம்’ என்னும் அமைப்பை சுத்தானந்தர் நிறுவினார். தமது ஆன்மிக குரு ஞானசித்தர் உபதேசம் அருளிய சோழபுரம் கிராமத்திலேயே சமாஜப் பணிகளுக்கென நிலமும் நன்கொடையாக வந்தது!
1979-ல் சுத்தானந்த தேசிய வித்யாலயம் உயர்நிலைப்பள்ளியை அங்கு கவியோகி நிறுவினார். அருகிலேயே தமது தவக்குடிலை அமைத்துக் கொண்டு, சமாஜம் ,பள்ளி ஆகியவற்றின் வளர்ச்சியில் ஈடுபாடு காட்டி வழிநடத்தினார். பிணியின்றி எளிமையாய் வாழ்ந்து பேனா முனையில் தானாயுழைத்து ஈட்டியதனைத்தையும் சமாஜப் பணிக்கே அர்ப்பணித்தார்.
குழந்தைச் சிரிப்பும், நகைச்சுவைப் பேச்சும், கணீர் குரலில் பாடலும், சுறுசுறுப்பும் இறுதி வரை மாறவேயில்லை.முதிர்ந்த வயதிலும் இமயம் வரைப் பயணம் மேற்கொள்ளும் திண்மை ஒரு யோகியிடம் மட்டுமே இருக்க முடியும்.
அனைவரிடமும் அன்புகாட்டி வாழ்ந்த கவியோகி மஹரிஷி சுத்தானந்த பாரதியார் 7-3-1990 அன்று மஹாசமாதி அடைந்தார்.ஆண்டுதோறும் மாசிமாதம் சுக்லபட்ச ஏகாதசியன்று சுத்தானந்த ஆராதனை சோழபுரத்திலுள்ள சுத்தானந்தர் நினைவாலயத்தில் நடத்தப் படுகிறது.
இன்பமே சூழ்க! எல்லாரும் வாழ்க!
Retrieved with thanks on 06 03 2012 from:
http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=147&Itemid=216