வரலாற்றில் போலி செப்பேடுகள் — விக்னேஷ் சீனிவாசன்

68 views
Skip to first unread message

தேமொழி

unread,
Apr 17, 2024, 6:34:09 PM4/17/24
to மின்தமிழ்
வரலாற்றில் போலி செப்பேடுகள்

 — விக்னேஷ் சீனிவாசன்


ஆய்வுச் சுருக்கம்:
பண்டைய தமிழகத்தை ஆட்சி செய்த பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், சேரர்கள், விஜயநகர அரசர்கள், நாயக்கர்கள், மராத்தியர்கள், சிற்றரசர்கள் என அனைவரின் காலக்கட்டங்களிலும் செப்பேடுகள் வழங்கப்பட்டு வந்திருக்கின்றன. சோழ மரபின் தொடர்ச்சியை வரலாற்று ரீதியாக நிலைநிறுத்த இராஜேந்திர சோழனின் திருவாலங்காட்டுச் செப்பேடு தான் பெரிதும் உதவியது. அதேபோல் தமிழக அரசர்களின் வழிவழியாக வந்த தலைமுறையினைக் காலவாரியாக வரிசைப்படுத்த செப்பேடுகள் பெரிதும் பயன்பட்டன என்றால் அது மிகையாகாது. அரசர்களின் ஆட்சிப் பரப்பு, அன்றைய சமய பண்பாட்டு நிலை, அரசியல் வரலாறு, கொடை என பண்டைய தமிழகத்தின் பல்வேறு பண்பாட்டு நிலைகளை செப்பேடுகள் நமக்கு உணர்த்தினாலும் அவற்றின் உண்மைத்தன்மை குறித்தும் நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.

ஒருபக்கம் செப்பேட்டின் உண்மைத்தன்மையைச் சோதிப்பது போலவே, மறுபக்கம் செப்பேடுகளில் கூறப்படும் மிகைப்படுத்தப்பட்ட வரலாற்றுத் தகவல்களை, செம்பில் கலந்திருக்கும் களிம்பினைப் பிரித்தெடுப்பது போல செப்பேட்டில் கலந்திருக்கும் போலியான உருவகங்களையும் பகுத்தறிந்து உண்மையான தமிழக வரலாறு மற்றும் பண்பாட்டினை வெளிக்கொணர வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாட்டிலும் இன்னபிற இடங்களிலும் கிடைக்கப்பெற்ற போலி செப்பேடுகளின் வரலாறு, அவை உருவாக்கப்பட்டதற்கான நோக்கம், அவை கண்டுபிடிக்கப்பட்ட விதம், கால மாற்றத்தில் செப்பேட்டில் எழுதும் வழக்கம் மறைந்து காகிதத்தில் எழுத வேண்டிய தேவை எழுந்தமைக்கான காரணம் எனப் பல்வேறு கண்ணோட்டங்களில் போலி செப்பேடுகள் குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

முன்னுரை:

பண்டைய தமிழகத்தின் அரசியல் மற்றும் பண்பாட்டுச் சூழலை அறிந்துகொள்ளச் செப்பேடுகள் பெரிதும் உதவுகின்றன என்றபோதிலும் செப்பேடுகளின் உருவாக்கும் மற்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகளின் உண்மைத்தன்மை குறித்து அவசியம் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலும் 1500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே போலி செப்பேடுகளின் புழக்கம் இருந்துள்ளதையும் அவற்றை அக்காலம் முதல் இக்காலம் வரை கண்டறிந்த வரலாற்றையும், கண்டறியும் முறைமைகளையும் இக்கட்டுரையில் விரிவாக அறிய இருக்கிறோம்.

செப்பேடுகளின் நம்பகத்தன்மையை எவ்வாறெல்லாம் ஆராய்ந்து உறுதிப்படுத்தலாம் எனும் பல்வேறு கண்ணோட்டங்களையும் அதற்குரிய எடுத்துக்காட்டுகளுடன் இக்கட்டுரை வழங்க இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் கிடைக்கப்பெற்ற பெரும்பாலான செப்பேடுகள் வடமொழி, தமிழ் மொழி ஆகிய இரண்டு மொழிகளிலும் அமைந்துள்ளன. அவற்றை இருவேறு வகையில் அணுகி ஆராய வேண்டிய தேவை உள்ளது. அதேபோல் நேரடியாக அரசரின் ஆணையைப் பெற்றிடாமல் தனக்குத் தானே தயாரித்துக் கொண்ட செப்பேடுகளும் ஏராளமாகக் கிடைக்கின்றன. இப்படி உருவாக்கப்படும் செப்பேடுகளுக்கான நோக்கமும் தேவையும் என்ன என்பது குறித்து இக்கட்டுரையில் விரிவாகக் காண்போம்.

செப்பேடுகளின்‌ உண்மைத்தன்மையை ஆராயும் பொதுவான முறைமைகள்:
பொதுவாகவே செப்பேடுகளைக் கண்டெடுக்கும்போது அல்லது ஆராய்ச்சி செய்யும்போது கீழ்க்கண்டவற்றைக் கவனமாகக் கருத்தில் கொள்ள வேண்டும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அவை,

1. செப்பேட்டின் வடிவமைப்பு, அதன் தொடர் ஏடுகள், அவை கோர்க்கப்பட்ட வளையம், அந்த வளையத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் அரச முத்திரை மற்றும் அவை கிடைக்கப்பெற்ற இடம் இவற்றைக் கொண்டு செப்பேட்டின் நம்பகத்தன்மையை அனுமானிக்க முடியும்.
2. செப்பேட்டின் எழுத்தமைவு மற்றும் எழுத்திலக்கணம். இதனைக் கண்டறிய Paleography எனப்படும் பண்டைய எழுத்துரு ஆய்வு துணை செய்யும்.
3. செப்பேட்டில் பொறிக்கப்பட்டிருக்கும் காலக்குறிப்பு, ஆண்டு, நாள், நட்சத்திரம், திதி, வானியல் நிகழ்வு உள்ளிட்ட செய்திகள் முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறதா என்பதை உறுதி செய்வது.
4. செப்பேட்டில் குறிப்பிடப்படும் அரசன், அவனது குலத்தினர் குறித்த செய்திகள், வரலாற்றுத் தகவல்கள் மற்றும் கொடை பெற்றவர் குறித்த தகவல்கள். இவை போன்றவற்றைக் கவனமாகப் பரிசோதித்து அது செப்பேட்டின் காலக்கட்டத்துடன் பொருந்துகிறதா என்பதையும் ஒப்பிட்டு உறுதி செய்ய வேண்டும்.

இவைதான் பொதுவான ஆராய்ச்சி முறைமைகள். இவற்றைக் கருத்தில் கொண்டு ஆராய்ந்ததில் பல போலி செப்பேடுகள்  தமிழ்நாடு மட்டுமல்லாது வெவ்வேறு மாநிலங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டும் இக்கட்டுரையில் காண்போம்.

ஹர்ஷவர்தனின் மதுபன் செப்பேடு:
உத்தரப்பிரதேச மாநிலம் மதுபனில் கிடைத்த புகழ்பெற்ற ஹர்ஷவர்தனின் 25ஆம் (பொ.ஆ.631) ஆட்சியாண்டைச் சேர்ந்த செப்பேடு மிக முக்கியமான தகவலைத் தருகிறது. சோமகுண்டகா எனும் கிராமத்தை வாமரத்யா எனும் பிராமணர் போலியான ஒரு செப்பேட்டுச் சாசனத்தை வைத்துக்கொண்டு நீண்ட காலமாகத் தனது உடைமையாக அனுபவித்து வருகிறார். இதனைக் கண்டறிந்த அரசன், அந்தப் போலி சாசனத்தை உடைத்தெறிந்ததுடன், அந்தக் கிராமத்தின் உரிமையை வட்டசுவாமி, சிவதேவசுவாமி எனும் இரு பிராமணர்களுக்கு மாற்றிக் கொடுத்ததாக மதுபன் செப்பேடு  கூறுகிறது[1] . மதுபன் செப்பேடானது, ‘போலி சாசனம்’ என்பதை kūṭaśāsana என்று சங்கத மொழியில் குறிப்பிடுகிறது. இந்த kūṭaśāsana எனும் சொற்பதம் மனுஸ்மிருதியிலும்[2]  யாஜ்ஞவல்க்ய ஸ்மிருதியிலும்[3]  இடம்பெறுகிறது. ‘அரச உத்தரவுகளைப் போலியாக உருவாக்குபவர்கள், மக்களிடையே வெறுப்பை விதைப்பவர்கள், பெண்கள், சிசுக்களைக் கொன்றவர்கள், பிராமணர்களைக் கொன்றவர்கள், எதிரிகளுக்குச் சேவை செய்பவர்கள் - அரசனால் கொல்லப்பட வேண்டும் ”[4]  என்று மனுஸ்மிருதி குறிப்பிட்டிருந்தபோதிலும் ஹர்ஷவர்தன் மேற்குறிப்பிட்ட தண்டனையை அளித்ததுபோல் குறிப்புகள் கிடைக்கப்பெறவில்லை. பொ.ஆ. 7 ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்திலேயே போலி செப்பேடுகள் புழக்கத்தில் இருந்ததையும் அதனை அரசனே கண்டறிந்ததையும் வெட்ட வெளிச்சமாகக் குறிப்பிடும் மிக முக்கியமான சாசனம் இந்த மதுபன் செப்பேடு.

மதுபன் செப்பேட்டினை மேற்கோள் காட்டி,  கிழக்கு வங்காளத்தில் கிடைத்த செப்பேடு ஒன்றினைப் போலி என்று உறுதிப்படுத்துகிறது இந்தியத் தொல்லியல் துறை[5]. இது 1908 ஆம் ஆண்டு கல்கத்தாவில் வங்காளி ஒருவரிடம் இருந்து கிடைத்த செப்பேடாகும். செப்பேட்டின் எழுத்தமைதி ஏறத்தாழ 6-7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குப்தர்களின் காலத்தியதாக அறியப்பட்டாலும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள பயனாளியின் பெயர் சமீபத்திய நடையில் எழுதியிருந்ததே இதனைப் போலி என்று வரையறுக்கக் காரணமாக இருந்தது என்று குறிப்பிடும் அக்கட்டுரை, இந்தச் செப்பேடு ஓர் உண்மையான செப்பேட்டின் துணையோடு தான் உருவாக்கப்பட்டுள்ளது என்பதையும் குறிப்பிடுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு  பரித்பூர் மாவட்டத்தில் கிடைத்த செப்பேடு ஒன்றைப் படித்தறிவதற்காக முனைவர்.ஹார்ன்லேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுத் தொடக்க வரிகள் மட்டும் படிக்கப்பட்டிருந்தது[6] . அந்தச் செப்பேட்டின் வரிகளுடன் இந்தக் கிழக்கு வங்காளத்தில் கிடைத்த செப்பேட்டு வரிகள் பெரிதும் ஒத்திருப்பதால், இந்தச் செப்பேட்டினை உருவாக்குவதற்கு பரித்பூர் செப்பேடு பயன்பட்டிருக்கிறது எனும் கருத்தை இந்தியத் தொல்லியல் துறை கூறியிருப்பது இங்கு கவனிக்கத்தக்கது. அதாவது ஓர் உண்மையான செப்பேட்டின் அடிப்படையில் அது விவரிக்கும் அரசனின் கீர்த்திகள், தலைமுறை பெருமை, ஆட்சியாண்டு முறைமைகள், நில எல்லை உள்ளிட்டவற்றை  மாதிரியாக (Model) பயன்படுத்தி அக்காலத்தில் அவர்களுக்கு ஏற்ப அதனை மாற்றிக்கொள்வது தான் இதன் முறைமையாக இருந்துள்ளது.

சேர அரசன் அரிவர்மன் செப்பேடு:
அசோகனின் கல்வெட்டிலேயே கேரளபுத்திரர் என்று சேரர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். சேர அரசர்களின் தலைமுறை தொடர்ச்சியினை மெர்காரா செப்பேடு குறிப்பிடும்போது, அதில் மூன்றாவது அரசனாக அரிவர்மன் எனும் பெயரைச் சுட்டுகிறது. மஹாராஜாதிராஜ அரிவர்மனின் ஆட்சிக்காலத்தில் சக ஆண்டு 169 (பொ.ஆ. 247)ல் வடிமதகஜேந்திரா எனும் பௌத்தச் சமயத்தைச் சேர்ந்த அறிஞர் தலவனபுரா அரண்மனைக்கு வந்து உயிர்களின் நிலையாமை குறித்து தன்னிடம் வாதிடுமாறு அழைப்பு விடுக்கிறார்‌. இதற்குப் பதிலளிக்கும் விதமாக உயிர்கள் நிலைப்பெறும் தன்மையை நிலைநாட்டி வடிமதகஜேந்திரனை தன் வாதத் திறமையால் வென்ற பிருகு கோத்திரத்து கோவிந்த பட்டனின் மகனான மாதவ பட்டன் எனும் பிராமணருக்கு ஒரிகோடு எனும் கிராமத்தைத் தானமாகக் கொடுத்த தகவலை செப்பேடு வழங்குகிறது. இது இந்தியாவில் கிடைத்த தொன்மையான செப்பேடு என்று பர்னெல் குறிப்பிட்டாலும், இதன் எழுத்தமைதி பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருப்பதால் இச்செப்பேட்டினைப் போலி[7]  என்று அவர் வரையறுக்கிறார்.
 
ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு லண்டன் சென்று இச்செப்பேட்டினைப் பார்வையிட்ட தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநர் முனைவர் இரா.நாகசாமி அவர்கள் இது போலியான செப்பேடு அல்ல[8]  என்று குறிப்பிட்டிருக்கிறார். இது தஞ்சாவூரில் கிடைக்கப்பெற்ற செப்பேடு என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் பொ.ஆ. 3 முதல் 7 ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் பொறிக்கப்பட்டதாகக் கிடைக்கும் செப்பேடுகள் எல்லாம் பொ.ஆ. 9,10 ஆம் நூற்றாண்டுகளில் உருவாக்கப்பட்டவையாகத் தெரிகிறது.

சாளுக்கியர் செப்பேடுகள்:
1. சக ஆண்டு 411, வைகாசி மாதம் முழுநிலவு நாளில் மேலை சாளுக்கிய அரசன் முதலாம் புலிகேசியின் (பொ.ஆ.489) ஆளுநர் சாமியாரா என்பவரால் அலக்தகனகரா எனும் ஊரில் உள்ள ஜினாலயத்திற்கு 700 கிராமங்களை அரசனின் ஆணைக்கு இணங்க தானமாக வழங்கிய தகவலைத் தருகிறது இச்செப்பேடு. ஆனால் செப்பேட்டின் எழுத்தமைதி பொ.ஆ. 12ஆம் நூற்றாண்டை ஒத்திருப்பதாகத் தெரிவிக்கிறார் முனைவர் ப்ளீட்[9] . அதோடு மட்டுமின்றி இரண்டாம் இராஜராஜன் மற்றும் குலோத்துங்க சோழனின் செப்பேட்டு எழுத்தமைதியைப் பெரிய அளவில் தழுவி இச்செப்பேட்டுச் சாசனம் உருவாக்கப்பட்டிருப்பதுடன் இச்செப்பேட்டின் முத்திரையும் பிற்காலத்திய தாக தெரிகிறது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.  
2. மேலும் சக ஆண்டு 532-ல் மேலை சாளுக்கிய அரசன் முதலாம் விக்ரமாதித்யன் (பொ.ஆ.610) வழங்கியதாகத் தெரிவிக்கும் செப்பேடு ஒன்றும் 9 அல்லது 10 ஆம் நூற்றாண்டின் எழுத்தமைதியைக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார் ப்ளீட்[10] . இச்செப்பேடு மூன்றாம் கோவிந்தன் காலத்தில் எழுதப்பட்டதாக இருக்கலாம் என்றும் கருதுகிறார்.
3. பண்டைய மதராஸ் மாகாணத்தில் அஹாதனகாரம் என்ற பகுதியில் கிடைத்த செப்பேடு ஒன்று கீழைச் சாளுக்கிய அரசன் மஹாராஜன் ஐந்தாம் விஷ்ணுவர்தன் ப்ருத்வி பல்லவ பட்டணம் எனும் ஊரைத் தானமாகக் கொடுத்த தகவலைத் தருகிறது. முதல் 17 வரிகள் சங்கதத்திலும் பின்னர் பழந்தெலுங்கிலும் இச்செப்பேடு அமைந்துள்ளது. ஆனால் ஆண்டு, தேதி, கிழமை உள்ளிட்ட எந்தத் தகவலும் இதில் கிடைக்கப்பெறவில்லை. இதன் எழுத்திலக்கணம் குழப்பமானதாக இருப்பதால் இது மிகுந்த சந்தேகத்திற்குரிய செப்பேடு என்று வரையறுக்கிறார் ப்ளீட்[11] .

காஞ்சிபுரத்தில் கிடைத்த  செப்பேடுகள்:
1. வடாற்காடு ஜில்லாவின் ஆட்சியரிடம் ஒரு தனியார் செப்பேடு கிடைக்கிறது. அதில் சந்திர சூரியனுடன் காமாட்சியம்மன் உருவமும் அதன் பின் பகுதியில் ஐந்து மனித உருவங்களும் காணப்படுகின்றன. இது முழுக்க முழுக்க தமிழ் மொழியில் அமைந்துள்ள செப்பேடு. அதில் இடங்கை சாதியினரான பஞ்ச கம்மாளர்கள் காஞ்சி காமாட்சியம்மன் தேர்த் திருவிழாவை நடத்தியபோது, வலங்கை பிரிவைச் சேர்ந்த சேனை சிங்கப்புலி எனும் மந்திரவாதி தனது மந்திர சக்தியால் தேரை நிறுத்தியதால், காமாட்சியம்மன் பஞ்ச கம்மாளர்களின் கனவில் தோன்றி கொச்சியில் இருந்து மந்திரவாதியை அழைத்து வந்தால் தான் இப்பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்று கூறுகிறது. உடனடியாக கம்பளத்தானின் மனைவியான மங்கம்மாவிற்கு தகவல் தரப்படுகிறது. தேரினை தனது மகனின் உதவியால் மங்கம்மாள் நகர்த்துவதாக உறுதியளிக்கிறார். பின்னர் தனது தாய் தந்தையுடன் காஞ்சிபுரம் வரும் மங்கம்மாளின் மகன். அங்கு ஏராளமான பிசாசுகள் சுற்றித்திரிவதைக் கவனித்துவிட்டு உடனடியாக ஒரு மனிதப் பலி சடங்கினைச் செய்தால் தான் இதை விரட்ட முடியும் என்று கூறுகிறார். இதற்குத் தயாராகாத பஞ்ச கம்மாளர்கள் செய்வதறியாது திகைத்து நிற்கும்போது, சிங்கப்புலி மீண்டும் வந்து மங்கம்மாள் மகனிடம் தகராறு செய்கிறார். இருவருக்கும் சண்டை மூண்டதால் இருவரையும் ஓர் அறையில் அடைத்துவிட்டு கொளுத்துகிறார்கள். இருவரையும் மூட்டையில் கட்டி ஆற்றில் விடுகிறார்கள். இப்படியாகப் பலவிதமான சோதனைகளுக்கு உள்ளாக்கியும் இருவருமே சிறு காயமும் இன்றி தப்பித்து வருகிறார்கள். ஒருகட்டத்தில் மங்கம்மாள் மகன் காமாட்சியம்மன் கோயில் முன்பு சூலத்தை நிறுத்தி அதில் ஏறி அமர்ந்தும் மூன்று நாட்கள் உயிருடன் இருக்கிறார். சிங்கப்புலி ஏகாம்பரநாதர் கோயில் முன்பு சூலத்தில் படுக்க வைக்கப்படும்போது எதிர்பாராத விதமாக அவர் இறக்கிறார். பின்னர் தனது இரண்டாவது மனைவியை பலியிட்டு தேரை நகர்த்துகிறார் மங்கம்மாள் மகன். இவரின் மந்திர சக்தியால் தான் தேர் நகர்த்தப்பட்டது என்பதால் ஆண்டுதோறும் அவருக்கு இரண்டு மரக்கால் அரிசியை பஞ்ச கம்மாளர்கள் படைக்க வேண்டும் என்று கலியாண்டு 4421, சக ஆண்டு 1098, சர்வதாரி வருடம் வைகாசி மாதம் 11 ஆம் நாள் இச்செப்பேடு வழங்கப்பட்டது என்று தெரிவிக்கிறது. இதில் குறிப்பிடப்படும் கலியாண்டும் சக ஆண்டும் பொருந்தவில்லை என்றும் எழுத்தமைதி மிக பிற்காலத்தியதாக தெரிகிறது என்றும் குறிப்பிடுகிறார் சென்னை அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளர் ஜே.ஆர். ஹெண்டர்சன்[12].
2. திருப்பதி பஜாரில் வாங்கப்பட்ட ஒரு தெலுங்கு செப்பேடு, பஞ்ச கம்மாளர்கள் காஞ்சிபுரம் காளிகாதேவிக்கு எடுத்த தேர்த் திருவிழாவின் போது, மந்திரவாதி ஒருவன் தேரை நிறுத்தியதால், மற்றொரு மந்திரவாதி தனது கர்ப்பிணி மகளைப் பலிகொடுத்து தேரை நகர்த்தியதாலும் வெட்டப்பட்ட அப்பெண்ணின் தலையை மீண்டும் உடலுடன் பொருத்தி உயிர்ப்பித்த செயலாலும் கம்மாளர்கள் இணைந்து அந்த மந்திரவாதிக்கு சில தானங்களை அளிக்கும் தகவலைக் கூறுகிறது. இச்செப்பேடு சக ஆண்டு 1200, விசாக மாதம், ஐந்தாம் திதியில் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கிறது. இதன் நேரடியான பொது ஆண்டு 1278 ஏப்ரல் 28 ஆகும். ஆனால் இச்செப்பேட்டின் எழுத்தமைதி பிற்காலத்தியதாக உள்ளதால் இதனைப் போலி என்று அடையாளப்படுத்துகிறார் ஜே.ஆர்.ஹெண்டர்சன்[13] . இச்செப்பேட்டுத் தகவல் முன்பு பார்த்த செப்பேட்டுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

மேற்குறிப்பிட்ட  செப்பேடுகள் காஞ்சிபுரத்தில் நடந்த வலங்கை - இடங்கை சமூக மோதலின் தாக்கத்தால் உருவாக்கப்பட்டதாகக் கருத முடிகிறது. காஞ்சிபுரத்தில் பல்லாண்டு காலமாக நிலைபெற்ற இந்த வலங்கை இடங்கை மோதலைக் கருத்தில் கொண்டு தான் கிருஷ்ண சாஸ்திரி போன்ற கல்வெட்டியலாளர்கள் காஞ்சியில் கிடைக்கும் செப்பேடுகளைக் கவனமாக ஆராய வேண்டும் என்பர்.

விஜயநகரக் காலச் செப்பேடுகள்:
1. பெல்லாரி மாவட்டத்தில் கிடைத்த ஒரு தெலுங்கு செப்பேடு சக ஆண்டு 1109, ஜெய வருடம் அஸ்வயுஜ மாதம் 10வது திதியில் விஜயநகர அரசன் இராஜாதிராஜ பரமேஸ்வர வீர பிரதாப விஜயபுக்கராயன் காலத்தில் ஜகதாபி குட்டி துர்கா மாகாணம் மகாசயங்காச்சாரியார் தளவாக்கிலி ஜோகிநாயகாவிடம் சம்பசி திப்பராஜய்யரால் வழங்கப்பட்டது என்றும், இந்த திப்பராஜய்யரின் அனுமதியுடன் கம்பதூர் உட்பட பல கிராமங்கள்  நிறுவப்பட்டன என்றும் குறிப்பிடுகிறது. இதில் குறிப்பிடப்படும் சக ஆண்டுடன் ஜெய வருடம் பொருந்தவில்லை. சக ஆண்டு 1096ல் தான் ஜெய வருடம் பொருந்துகிறது என்பதோடு சக ஆண்டு 1109 என்பதன் நேரான பொ.ஆ. 1187 ஆகும். இந்தக் காலத்தில் விஜயநகர அரசு தோன்றவே இல்லை என்பதோடு இதில் குறிப்பிடப்படும் பெயரில் விஜயநகர அரசர்கள் யாரும் அதிகாரப்பூர்வமாக ஆட்சி செய்ததாகத் தெரியவில்லை. இதன் எழுத்திலக்கணமும் வெகு பிற்காலத்தியது என்பதால் இச்செப்பேடு போலியானது என்று வரையறுக்கிறார் ஹெண்டர்சன்[14] .
2. கர்னூல் மாவட்டத்தில் கிடைத்த தெலுங்கு செப்பேடு ஒன்று, பெத்த நாகனா கவுடா, சின்ன நாகனா கவுடா, லிங்கல கவுடா எனும் மூன்று சகோதரர்கள் தங்களது பூர்வீகக் கிராமத்தைக் கைவிட்டு தெற்கே பெடஹூர்தி எனும் கிராமத்திற்கு வந்து அங்குள்ள மலைமீது சௌடேஸ்வரி தேவிக்குக் கோவில் எடுப்பித்திருப்பதாக விஜயநகர அரசரின் துணை அரசர் சம்மேள திம்மராஜூலு என்பவர் விஜயநகர அரசன் ஸ்ரீ வீரப் பிரதாப ஹரிஹர ராயனிடம் அறிமுகப்படுத்தி வைக்கிறார். அரசனும் அக்கோவிலின் பராமரிப்பு மற்றும் வழிபாட்டுச் செலவுகளுக்காக சில கிராமங்களைக் கொடையாக அளித்த செய்தியைத் தருகிறது. இச்செப்பேடு சக ஆண்டு 1420, ஸ்ரீமுக வருடம் வைகாசி மாதம் பத்தாம் திதியில் வழங்கப்பட்டதாகக் கூறுகிறது. ஆனால் ஸ்ரீமுக ஆண்டானது சக ஆண்டு 1435ல் தான் வருகிறது. அதன் நேரடியான பொ.ஆ. 1513 ஆகும். ஆனால் இச்செப்பேடு வழங்கியதாகச் சொல்லப்படும் ஹரிஹர ராயன் பொ.ஆ. 1404லேயே இறந்து விடுகிறார். ஆதலால் இது போலி செப்பேடு என்று வரையறுக்கப்படுகிறது[15] .

போலி செப்பேடுகள் உருவாக்கப்படுவதன் நோக்கங்கள்:
தனியாருக்கு அளிக்கப்பட்ட ஆவணங்களில் தான் பெரும்பாலும் போலிகள் உருவாகிறது என்பது மேற்குறிப்பிட்ட செப்பேடுகளை வைத்துக்கொண்டு ஆராயும்போது வெளிப்படையாகத் தெரிகிறது. மனு உள்ளிட்ட சாத்திர புத்தகங்கள்  போலி உருவாக்கங்கள்  நடைமுறையில் இருந்தன என்ற உண்மையைக் கூறுகின்றன. இந்தப் போலிகளைக் கண்டறிவது எளிது. தென்னிந்தியாவில் உருவான சமய பிரிவுகளின் வளர்ச்சி படிநிலைகள் வெளிப்படையாக வரலாற்றில் அறியப்படுவதால் அக்கருத்தாக்கங்களைத் தாங்கி வரும் பெயர்களைக் கொண்டே போலிகளைக் கண்டறிய முடியும் என்கிறார் பர்னெல்[16] . இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு, விஜயநகரக் காலத்தில் வித்யாரண்யரை உருவாக்க முயன்றது தான். விஜயநகர ஆட்சியின் தோற்றுவாயாக இருந்தவராகக் கூறப்படும் வித்யாரண்யர் எனும் பிம்பமே அச்சுதராயர், சதாசிவராயர் காலத்தில் தான் உருவாக்கப்படுகிறது. ஆனால் ஹரிஹரர் மற்றும் புக்கராயர் காலத்திய நிவந்தங்களை மீண்டும் உறுதிப்படுத்தும் கல்வெட்டுகளில் விஜயநகர என்பதற்குப் பதிலாக வித்யாநகர எனும் சொல்லாடல் பயன்படுத்தப்பட்டிருப்பதால் விஜயநகர அரசர்களின் தொடக்கக் காலத்திலேயே வித்யாரண்யர் இருந்திருக்கிறார் என்பதை வரலாற்று ரீதியாக நிறுவ முயன்றிருக்கிறார்கள் என்று ஹிராஸ் பாதிரியார் விரிவாக எழுதியிருக்கிறார்[17] .

பண்டைய காலத்தில் ஓலைகள் மூலமே அரசரின் ஆணைகள் முதலில் கடத்தப்படும், பின்னர் அதனைக் கல்லிலும் செம்பிலும் வெட்டிக்கொள்ளுமாறு ஓலையிலேயே குறிப்பிடுவார்கள். ஏனெனில் ஓலையின் ஆயுட்காலம் குறைவு என்பதால் பொதுமக்கள் அறியும் வகையில் அதனைக் கோவில் சுவற்றில் கல்லிலும், கொடை பெற்றவர் செம்பில் எழுதி அதனைத் தங்களின் சொந்தப் பயன்பாட்டிற்கும் வைத்துக்கொள்வார்கள். இப்படியாக வெளிவரும் செப்பேடுகளில் பெரும்பாலும் அரசரின் நேரடி ஆணையாக இருந்தால் அரசனின் தனித்துவமான முத்திரையை அந்தச் செப்பேட்டுத் தொகுப்பில் பொறித்திருப்பர். எடுத்துக்காட்டாக, சோழர்களின் திருவாலங்காடு, திருவிந்தளூர், லெய்டன் செப்பேடுகளில் இந்த முத்திரையினைக் காணலாம். ஆனால் பிற்காலத்தில் குறிப்பாக 12 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு கொடுக்கப்பட்ட சில செப்பேடுகளில் இந்தத் தனித்துவமான அரச முத்திரை காணப்படுவது இல்லை.

மேலும் ஆட்சி மாற்றங்கள் நடைபெற்ற காலமாகவும் சமூகத்தில் பலவகையான பிளவுகள் ஏற்பட்ட குழப்பமான அரசியல் சூழலாலும் உந்தப்பட்ட மக்கள் புதிதாக எழுந்த அரசு தங்களுக்குச் சாதகமாக இருக்கும்பட்சத்தில் அவனைப் புகழ்ந்து, அவன் தலைமுறை பெருமைகளைக் கவித்துவமாகக் கூறி, முந்தைய அரசு எங்களிடம் இருந்து பறித்துவிட்ட நிலங்களை எங்களுக்கு மீண்டும் வழங்குமாறு கோருவதற்கு ஆதாரமாக இப்படி சில செப்பேடுகளை உருவாக்கியோர்களும் உண்டு.  பாண்டியன் அளித்த வேள்விக்குடி செப்பேட்டில் குறிப்பிடப்படும் பல்யாகசாலை முதுகுடுமிப்  பெருவழுதியின் வழிவந்தவனாகவும், கொற்கை நற்கொற்றனின் வழிவந்தவனாகவும் சொல்லிக்கொள்ளும் இவ்வாறான செய்திகள் நம்பத்தகுந்தது அல்ல என்கிறார்  ஹெர்மன் ஜோசப் டீகர்[18] .

காகிதங்களின் புழக்கமும் செப்பேடுகளின் மறைவும்:
சீனாவில் இருந்து இந்தியாவிற்குக் காகிதங்களின் புழக்கம் பொ.ஆ‌ 4 ஆம் நூற்றாண்டளவிலேயே வந்துவிட்டது என்றாலும் அது அரச ஆவணங்களுக்குப் பயன்படுத்தப்படவில்லை. இந்தியாவில் இஸ்லாமிய அரசர்களின் ஆட்சிக்காலத்தில் செப்பேடுகள் பெரிய அளவில் பயன்படுத்தப்படாமல் படிப்படியாகக் காகிதப் பயன்பாடுகள் வளரத் தொடங்கியது. இதற்குக் காரணம் எளிதாக ஆணைகளை வெளியிடலாம் என்பதுடன் செப்பேட்டுச் செலவினை ஒப்பிடும்போது செலவுகள் மிக மிகக் குறைவு, அதுபோக அரசரின் ஆணையைப் பெற்ற உள்ளூர் அதிகாரியும் அதில் முத்திரை பொறித்து வழங்குவார். இதனால் போலி ஆவணங்கள் தயாரிப்பது மட்டுப்படுத்தப்பட்டது‌. ஆனால் தென்னிந்தியாவில் விஜயநகர அரசர்களும், மராத்திய அரசர்களும் இந்து அரசர்களாக இருந்ததால் பழைய மரபின்படி செப்பேடுகளிலேயே ஆணைகளைப் பிறப்பித்தனர் என்கிறார் ஜொனாதன் ப்ளூம்[19] . இதனை ஒப்பிடும்போது விஜயநகர ஆட்சிக்காலத்தில் கிடைக்கப்பெறும் பல செப்பேடுகள் போலியானவை அல்லது சந்தேகத்திற்குரியது என்று கோபால்[20]  குறிப்பிடுவது இங்குக் கவனிக்கத்தக்கது.

விஜயநகர ஆட்சியாளர்களின் நினைவுகள் மராத்திய அரசர்களிடமும் இருந்ததால்[21]  மீண்டும் இந்து இராஜ்யத்தினை நிலைநாட்ட மராத்தியர்களும் பழைய செப்பேட்டு முறையைப் பின்பற்றியதால் அவர்கள் காலத்திலும் போலிகள் உருவாகத் தொடங்கின. காகிதத்தில் வழங்கப்படும் ஆணைகளைக் கூட உள்ளூரில் செப்பேடுகளில் பொறித்துக்கொள்ளும் மனநிலை உருவாகியிருந்தது. இப்படியாக மராத்திய அரசர் சிவாஜி போன்ஸ்லே காலத்தில் வழங்கப்பட்டதாக ஒரு போலி செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டதைக் குறிப்பிடுகிறார் புஷ்கர் சோஹோனி[22] . உள்ளூர் மக்கள் காகித ஆணைகளைச் செப்பேடுகளில் பொறித்துக்கொண்டதற்கு இரண்டு காரணங்கள் தான் உள்ளன. ஒன்று செப்பேட்டின் வடிவமைப்பு, அது சமூகத்தில் பெருமைமிகு அடையாளமாகக் காணப்பட்டது. மற்றொன்று காகிதத்தை ஒப்பிடும்போது செப்பேடு நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பது என்கிறார் புஷ்கர் சோஹோனி[23] .

சில சமயங்களில் உண்மையான அரச உத்தரவுகள் தொலைந்துவிட்ட அல்லது காணாமல்போகும் பட்சத்தில் அவை மறுவுருவாக்கம் செய்யப்பட்டும் வந்திருக்கின்றன. ஆனால் இப்படி மறுவுருவாக்கம் செய்யப்பட்ட செப்பேடுகள் சில சமயம் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டும் வந்திருக்கிறது என்கிறார் சாலமன்[24] . ஆனால் அவற்றின் நம்பகத்தன்மையை உள்ளூர் அதிகாரிகள் உறுதி செய்வார்கள் எனக் குறிப்பிடுகிறார் அவர்.

செப்பேட்டில் வடமொழி மற்றும் தமிழ் மொழி:
இதுவரையில் போலியாக  உருவாக்கப்பட்ட செப்பேடுகள் எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பதை விரிவாகப்  பார்த்தோம். இப்போது செப்பேட்டில் இரண்டு மொழிகள் கையாளப்பட்ட   தகவல்களையும் சமகாலக்  கொடையினையும், கொடையாளர் விவரங்களையும், நில எல்லைகளையும், சாட்சிகளையும் தமிழ் மொழியில் (Vernacular Language) குறிப்பிட்டு அமைகின்றன. தமிழ்நாட்டில் கிடைத்த பெரும்பாலான செப்பேடுகள் இவ்வாறான முறையிலேயே அமைந்துள்ளன.  எடுத்துக்காட்டாகப் பல்லவ அரசன் சிம்மவர்மனின் பள்ளன் கோவில் செப்பேட்டையும் இராஜேந்திர சோழனின் திருவாலங்காடு செப்பேட்டையும் ஒப்பிடுகையில் மேற்சுட்டிய விடயங்களை எளிமையாக அறியலாம். இவற்றில் வடமொழி பகுதியைப்  பெரும்பாலும் பிராமணர்களே எழுதி வந்துள்ளார்கள் என்பது திருவாலங்காடு போன்ற சோழர்காலச்  செப்பேடுகளில்[25] இருந்து அறியமுடிகிறது.  இவை பெரும்பாலும் புராணத் தொன்மையை மட்டுமே உயர்த்துவதால் இதன் நம்பகத்தன்மை முற்றிலும் சந்தேகத்திற்குரியது. ஆனால் வரலாற்றுச்  செய்திகளையும் சமகாலத்  தகவல்களையும் வழங்கும் பகுதி வெகுமக்கள் மொழியான தமிழில் மட்டுமே இருப்பது ஆழ்ந்து கவனிக்கத்தக்கது. இதனால் புராணத்தையும் வரலாற்றையும் பண்டைய காலம் முதலே தனித்தனியாக வெவ்வேறு மொழி வழி அணுகியிருப்பதும், தமது புராணப்  பெருமைகளை எல்லாம் வெகுமக்களுக்குப்  புரியாத வகையில் வடமொழியிலும், உண்மையான வரலாற்றுத்  தகவல்களைப்  புரியும்படி தமிழ் மொழியிலும் எழுதி இருப்பது உறுதியாகிறது. ஆகையால் ஒரு செப்பேட்டினை ஆராயும்போது பலதரப்பட்ட கண்ணோட்டங்களிலும் ஆராய்ந்து அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்வது அவசியமாகிறது.

முடிவுரை:
மேற்படி தகவல்களை முழுமையாகத் தொகுத்துப் பார்த்தால் நில உரிமைகளைக் கோருவது, கோவில் சார்ந்த நிர்வாகம் மற்றும் வழிபாட்டு உரிமைகளைக் கோருவது, சுயசாதிப்பற்று அல்லது குடிப்பெருமைகளும் தான் போலி செப்பேடுகள் உருவாக முக்கிய காரணங்களாக இருக்கிறது என்பதை வெளிப்படையாகவே அறிந்துகொள்ள முடிகிறது. வரலாற்றுக் காலத்தில் மட்டுமல்ல இன்றுவரையிலும் இதே காரணங்களுக்காகப் போலி ஆவணங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. எனவே, தமிழக வரலாற்றையும் பண்பாட்டையும் உண்மையாகவும் நேர்மையாகவும் அறிந்துகொள்ள, செப்பேடுகளைக் கவனமாக அணுகவேண்டியது அவசியமாகிறது.

இக்கட்டுரை வாயிலாக வரலாற்று ரீதியாகப் போலி ஆவணங்கள் உருவான வரலாற்றையும், அதன் நோக்கம் மற்றும் தேவையையும், அவற்றைக் கண்டறியும் முறையையும் விரிவாக நிறுவியிருப்பதன் காரணம், தமிழக வரலாற்றை வெறும் சாதி, மதம், மொழி, இனம் என்ற எந்தவொரு சார்பிலும் அணுகாமல் அறிவியல் துணைகொண்டு அணுகி ஆராய்ந்தால் மட்டுமே உண்மையான வரலாற்றையும் பண்பாட்டையும் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இவ்வுலகிற்கு எடுத்துக்காட்ட முடியும் என்பதை உணர்த்துவதற்கேயாகும்.


குறிச்சொற்கள்:
போலி செப்பேடுகள், சமய பண்பாடு, கொடை, ஆட்சிப் பரப்பு, காகிதம், செப்பேடு உருவாக்கம்

சான்றாதாரங்கள்:
1.  Epigraphia Indica Vol. 1, page 67
2.  மனுஸ்மிருதி 9.232
3.  யாஜ்ஞவல்க்ய ஸ்மிருதி ii.240
4.  கூடஷாஸனகர்த்ரூʼம்ʼஷ்ச ப்ரக்ருʼதீனாம்ʼ ச தூஷகான் ।
      ஸ்த்ரீபாலப்ராஹ்மணக்னாம்ʼஷ்ச ஹன்யாத் த்விஷ் ஸேவினஸ்ததா ?? ॥ 232 ॥
5.  ‘A forged copper plate inscription from Eastern Bengal’- Annual Report 1907- 08 of Archaeological Survey of India, page 255
6.  Indian Antiquary Vol 21, page 44
7.  Elements of South Indian Paleography from fourth century to the Seventeenth Century A.D by A.C.Burnell, page 28
8.  Indian Charters on Copper Plates by Albertine Gaur, page 8
9.  Indian Antiquary Vol.7, page 209
10.   Ibid. Page 217
11.  Indian Antiquary Vol. 13, page 185
12.   Catalogue of Copper-Plate Grants by J.R.Henderson, page 67
13.  Ibid. Page 78
14.  Ibid. Page 43
15.   Ibid. Page 48
16.  Elements of South Indian Paleography by A.C.Burnell, page 77
17.   Beginnings of Vijayanagara History by Rev. H. Heras, page 28 - 34
18.  Kāvya in South India: Old Tamil Caṅkam Poetry by Herman Joseph Hugo Tieken, page 132
19.  Paper before print: The history and impact of paper in the Islamic world by Jonathan M. Bloom
20.  Inscriptions of the Vijayanagara Rulers, Vol.2 by B.R. Gopal & Shrinivas Ritti
21.   The Frontiers of Memory: What the Marathas Remembered of Vijayanagara by Sumit Guha, Modern Asian Studies, Vol 43, page 269
22.  A large feature article with illustrations was published by Baban Thakkar, "Kartavyakathör Dayäsägar" in the Marathi newspaper Sakal, Pune edition, 15. January 1995, Sunday Supplement no. 2, p. 4.
23.  Paper documents and copper plates: localization of hegemonic practices by Pushkar Sohoni, Bulletin of SOAS, Vol 79, page 91
24.  The fine art of forgery by Saloman, page 107
25.  இராசேந்திர சோழனின் திருவாலங்காட்டுச் செப்பேடுகள், சா.கிருஷ்ணமூர்த்தி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2014





விக்னேஷ் சீனிவாசன்,
முனைவர் பட்ட ஆய்வாளர்,
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை.
அலைபேசி - +91 97883 99539.
மின்னஞ்சல்: vigneshsr...@gmail.com
</>  </>  </>  </>  </>
Reply all
Reply to author
Forward
0 new messages