(வெருளி நோய்கள் 484-488: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 489-493
எட்டின் கூறுகள் குறித்த வரம்பற்ற பேரச்சம் எட்டின் கூறு வெருளி.
எட்டாம் எண் வெருளி உள்ளவர்களுக்கு எட்டின் கூறு வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
00
(தொல்காப்பியமும் பாணினியமும் – 5 : மிகவும் பழமை வாய்ந்தது தொல்காப்பியம் – தொடர்ச்சி)
தொல்காப்பியமும் பாணினியமும்
6
பாணினியத்தின் சிறப்பு?!
தொல்காப்பியம் இயல்பிலேயே தமிழாகிய சிறந்த மொழிக்கான இலக்கணம் என்பதால் சிறப்பானதாக அமைந்துள்ளது. ஆனால் பாணினியின் அட்டாத்தியாயி சிறப்பாகத் திரித்துக் கூறப்படும் சிறப்பற்ற மொழியான சமற்கிருததத்திற்கானது என்பதால் திரிக்கப்பட்ட சிறப்பையும் உண்மையில் சிறப்பின்மையையும் கொண்டுள்ளது.
பாணினியத்துக்கு மிக விரிந்ததொரு உரை செய்த பதஞ்சலி, “இச்சூத்திரங்களின் பெருமையை நோக்குமிடத்து, பொருளில்லாத ஒரு எழுத்தையேனும் அவற்றினுள்ளே யான் காண்கிலேன்” என்று அட்டத்தாயி குறித்துக் கூறியுள்ளார். “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்பது போன்றது இது. ஆராய்ச்சி யறிஞர்கள் பொருளற்ற எழுத்துகளைக் குறிப்பிட்டுப் பொருள் உள்ள சொற்களாகத் தவறாக விளக்குகின்றனர் என்றும் அகராதிகளில் அத்தகைய பொருள் உள்ள எழுத்துகள் இல்லை என்றும் ஆராய்ந்து தெரிவித்துள்ளனர்.
கல்லைப்போல் வறட்சியான மொழி அறிவியலை மலராக்கியவர் பாணினி. பாணினியின் அட்டாத்தியாயி நவமணிகள் நன்கு பதித்த ஒரு பெரிய அணிகலன். 396 சூத்திரங்களில் சமற்கிருதத்தின் சொல் வளம் முழுவதையும் நுணுக்கமாக அமைத்தார் பாணினி. இவ்வாறு தினமலர் நாளிதழில் பாணினியின் சிறப்பாகக் கூறப்படுகிறது. ஆனால் சொல் வளமாகக் கூறப்படும் கருத்து மிகப் பிழையானது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கருத்துகள் உணர்த்துகின்றன.
பேச்சுவழக்கொழிந்த வடமொழிக்கு இலக்கணம் செய்த பாணினி வேர்ச்சொல்லாய்வு என்ற பெயரில் அறுபது விழுக்காட்டிற்கு மேலான சொற்களுக்கு முற்றும் கற்பனையான, முற்றிலும் முழுப்பொய்யான வேர்களைக் கூறியுள்ளார் என்றும் அவ்வாறான சொற்கள் வடமொழி இலக்கியங்களில் எங்கும் காணப்படவில்லை யென்றும் வடமொழி விற்பன்னர்களே கூறியுள்ளதையும் பேராசிரியர் ப.மருதநாயகம் (வடமொழி ஒரு செம்மொழியா?) எடுத்துரைக்கிறார்.
1884இல் விட்டினி(Whitney), எட்கிரன்(Edgren) ஆகிய மேலை மொழியியல் வல்லார், பாணினியின் தாது பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 1750 வேர்களுள் பெரும்பாலானவை கற்பனையானவை என மெய்ப்பித்துள்ளனர். பாணினி குறிப்பிடும் வேர்ச்சொற்கள் பாதிக்கு மேற்பட்டவை எந்தச்சமற்கிருத நூலிலும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்று பாணினியின் புரட்டை அம்பலப்படுத்துகிறார் விசுவநாத காய்ரே(Bishwanath Gaire) இவற்றைப் பேரா.ப.மருதநாயகம் தம் நூலில்(வடமொழி ஒரு செம்மொழியா?) தெளிவாக விளக்கியுள்ளார்.
இந்தோ ஐரோப்பிய மொழிகளில் வேர்கள் என ஊகிக்கப்படுபவை பொருள் தொடர்பற்ற வெறும் குறியீடுகள்; திராவிட மொழி வேர்களோவெனில் ஐயத்திற்கிடமின்றிப் பொருளையும் காரணத்தையும் காட்டுபவையாக உயிரோட்டமுள்ளவை; வேர்ச்சொல்லாய்வு என்னும் ஏமாற்றுவேலை தவிரப் பாணினியின் இலக்கணம் வேறு பல குறைபாடுகளையும் உடையது எனப் பேரா.ப.ம.நா. தெரிவிக்கிறார்.
ஆனால், உண்மையில் செருமானிய அறிஞர்கள் ஆரிய இனப்பற்று காரணமாகச் சமற்கிருதத்திலுள்ள இலக்கண இலக்கிய நூல்களையும் அம்மொழியையும் அளவுக்கு மீறிப் பாராட்டி எழுதியும் பேசியும் வருகின்றனர். சமற்கிருத நூல்களைப் படிக்காமலேயே அவற்றில் இல்லாத கருத்துகளை இருப்பதாகக் கூறிப் பாராட்டுகின்றனர். அறக்கேடான கருத்துகளை உடைய நூல்களை எல்லாம் சிறந்த அற நூலாகக் கூறுகின்றனர். அந்த வகையில் பாணினியத்தையும் இல்லாச் சிறப்புகளைக் கூறிப் பாராட்டுகின்றனர்.
பதஞ்சலியின் திட்பத்தைத் தன்னுள் கொண்டும்
பாணினியின் செறிவுதனைத் தன்னுள் கொண்டும்
தொல்காப்பியம் அமைந்ததாகப் பாவலர் கருமலைத் தமிழாளன் கூறுகிறார். இஃது இவரது கருததல்ல. இவருக்கு முன்பே சிலர் இவ்வாறு எழுதிவைத்துவிட்டமையால் இவரும் அவ்வாறே குறிப்பிட்டு விட்டார்.
நம்பருந்திறலோடொரு பாணினி
ஞால மீதில் இலக்கணங் கண்டதும்
என்னும் பாரதிபோல் பலர் பாணினியை உயர்த்திக் கூறுவதால் உண்மையை ஆராயாமல் அப்படியே ஏற்று விடுகின்றனர். இவ்வாறுதான் உண்மையறியாமல் பாணினியதி்தைச் சிறப்பித்துக் கூறியவற்றை வழி வழி வந்தோரு்ம் குறிப்பிட்டு வருகின்றனர்.
அஃதாவது, ஆரியப்புரட்டுகளைத் நடுநிலைத் தமிழ்ப்பற்றர்களே நம்புவதால் அவற்றை ஏற்று எழுதி விடுகின்றனர். இதைக் காணும் பிறர் இவற்றை உண்மை என நம்பித்தமிழ் இலக்கியங்களைக் குறைத்து மதிப்பிடுகின்றனர். தொல்காப்பியத்தைக் குறைத்து மதிப்பிடும் வகையில் பாணினியம் குறித்த புரட்டுகள் மிகுதி.
தமிழர்கள் சமற்கிருதத்திற்கு எதிரான போக்கையே உடையவர்கள். எனவே, பாணினியத்தின் சிறப்புகளை மறைத்துக் குறை கூறுகின்றனர் என்கின்றனர் ஆரிய தாசர்கள். உண்மையில் தமிழர்கள்மட்டுமல்லாமல் இந்திய ப்பெரு நிலத்தில் பிற மொழிப்பகுதிகளிலும் தவறாக உயர்த்தப்படுகிற சமற்கிருதத்திற்கு எதிரான போக்கு எப்போதும் உள்ளது. சமற்கிருத எதிர்ப்பு என்பது தமிழ் நிலத்தில் மட்டுமல்லாமல் பிற மொழி நிலங்களிலும் தொடக்கத்திலிருந்தே இருந்துள்ளது என்று ஆராய்ந்து தெரிவிக்கிறார் பேராசிரியர் ப.மருதநாயகம். இராசசேகரின் காவிய மீமாமுசா என்னும் சமற்கிருத நூலில், “குசராத்தியரே சமற்கிருதத்திற்கு முதல் பகைவர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். சமற்கிருதம் தவளை கத்துவதுபோன்ற இனிமையற்ற ஓசைகளைக் கொண்டதென்றும், உயர்ந்த காப்பியங்கள் எழுதுவதற்குத் தகுதியற்ற மொழி யென்றும் பிராகிருத மொழியினர் பலமுறை கூறியுள்ளனர். இந்தி மொழிக் கவிஞர் கபீர்தாசு, “சமற்கிருதம் தேங்கிய குட்டை. இந்தி மொழியே நீர் ஓடும் ஆறு” என்று கூறி அதனால்தான் தம் காவியத்தை இந்தி மொழியில் எழுதியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்மொழியில் உள்ள சொற்களின் சிறப்பு வேறு எம்மொழியிலும் இல்லை என்னும் மேலை அறிஞர்களின் கருத்துகளையும் இக்கட்டுரை மேற்கோளாகத் தருகிறது.
தொல்காப்பியம் வாழும் தமிழ்மொழிக்கான நூல் என்பதால் வாழ்வியல் நூலாகச் சிறக்கின்றது. மக்கள் நாவில் நடமாடாத சமற்கிருத மொழிக்கான நூல் என்பதாலும் இல்லாத சொற்களைக் கற்பனையாக வருவித்து அதற்கேற்ப இலக்கணம கூறுவதாலும் அட்டாத்தியாயி வாழ்வியல் நூலாக அமையவில்லை.
தொல்காப்பியம் அளவிடற்கரிய சிறப்பு உடையது. இதன் சிறப்பு உலகெங்கும் இன்னும் பரவ வேண்டும். என்றபோதும். இப்போதுதான் அட்டாத்தியாயியின் உண்மை முகம் ஆய்வறிஞர்களால் தெரிய வருகிறது. முற்றிலும் முழு உண்மையும் தெரிந்து பாரெங்கும் பரவ வேண்டும். தொல்காப்பியத்துடன் மட்டுமல்லாமல் வேறு எந்த நூலுடனும் ஒப்பிடுவதற்குத் தகுதி அதற்கு இல்லை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேணடும்.
(தொடரும்)
தொல்காப்பியமும் பாணினியமும்
இலக்குவனார் திருவள்ளுவன்