செம்புலப் பெயல்நீர்!

99 views
Skip to first unread message

Kannan Natarajan

unread,
Oct 24, 2009, 5:09:30 PM10/24/09
to Min Thamizh
அவனோ (தலைவன்), நாகரிகப் - பண்பாட்டின் இருப்பிடமாம் தமிழகத்தின் சிற்றூர் ஒன்றில் பிறந்து வளர்ந்தவன்; அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி ஆகிய பண்புகளால் உயர்ந்தவன்; அவற்றால் பிறர் போற்றும் புகழ் வாய்க்கப் பெற்றவன்; தன் முயற்சியால் பொருளீட்டி வாழ்வாங்கு வாழக் கருதுபவன்.

அவளோ (தலைவி), வடபுலமான வேற்று மாநிலத்தில் சின்னஞ்சிறு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள்; அச்சம், மடம், நாணம் என்னும் பெண்மைக்குரிய பண்புகளில் உறுதியாக நின்றவள்; அவற்றால் நிமிர்ந்த நன்னடை கொண்டவள்.

இத்தலைவன் யார்?

அவன் பெயர் என்ன?

எச்சமயத்தைக் - குலத்தைச் சார்ந்தவன்?

என்ன மொழி பேசுபவன்?

என்பன போன்ற அவனைக் குறித்த தகவல் எதுவும் அத்தலைவிக்குத் தெரியாது; அதுபோலவே அவளைப் பற்றிய தகவல் - செய்தியும் அவனுக்குத் தெரியாது.

இருப்பினும், அவனும் அவளை நோக்கினான்; ஆரணங்காம் அவளும் அவனை மெல்ல நோக்கினாள்.

ஆம்! அவ்விருவர்தம் கண்களும் கலந்து பேசின. உண்ணவும் நிலை பெறாது உணர்வும் ஒன்றிட மாறிப்புக்கு இதயத்தால் இருவரும் கூடினர்.

இவ்வாறு, மதத்தால், குலத்தால், மொழியால், மாநிலத்தால் வேறுபட்ட அவ்விருவரும் அன்பினால் கண்டுண்டனர். ஒருவரை ஒருவர் அறிந்து புரிந்துகொண்டார்கள். அவனும், அவள்மேல் கொண்ட காதலால்,

"அன்னமே! உன்னைவிட்டு என்றும் பிரியமாட்டேன்; ஒருவேளை உன்னைப் பிரிய நேரின் உயிர் தரியேன், இது சத்தியம்,"என்று அவளிடம் உறுதி அளித்தான்.

அவளும், "அன்பரே! இப்பிறப்பு நீங்கி மறு பிறப்பு வாய்க்கினும் நீங்களே என் கணவர்; நான் ஒருத்தியே உமது நெஞ்சிலே குடியிருக்க உரியவள்!" என்று பேரா அன்பினை வெளிப்படுத்தினாள்.

எவ்வாறெனில், தன் மனதைக் கவர்ந்த கள்வனை - சொன்ன சொல் பிழையாத வாய்மையாளராக - காலம் உள்ளளவும் தன் நெஞ்சிற்கு இனியவராக - என்றும் என் தோளைப் பிரியாதவராக இருப்பாரென்று அவன்மேல் முழு நம்பிக்கை கொண்டிருந்தாள். இவ்வாறு, இருவரும் அன்புக்கு ஊறு ஏற்படாவண்ணம் இரண்டு ஆண்டுகள் உள்ளத்தளவில் பழகினர்!

"தானே அவளே தமியர் காணக்காமப் புணர்ச்சி இருவயின் ஒத்தல்," என்னும் இறையனார் அகப்பொருள் (சூ.2) கூற்றிற்கேற்ப மனமொத்த காதலராக இருவரும் திகழ்ந்தனர். இருப்பினும், அவர்களின் திருமணம் தள்ளிப்போனது. இந்நிலையில், தன் தலைவன் தன்னைத் தவிக்கவிட்டுப் பிரியப்போகிறான் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட தலைவி மிக வருந்தினாள். அச்செய்தியால் அதிர்ச்சியுற்ற அவளது செயல்பாட்டிலே மாற்றம் இருந்ததைக் குறிப்பால் உணர்ந்தான் தலைவன். அதனால் அவனது மனதில் கலக்கம் ஏற்பட்டது. ஆகவே, அவன், அவளிடம் வைத்த அளவிலாக் காதலை அவளுக்கு உணர்த்த முற்படுகிறான்.

"என்பால் அன்பு அகலாத மங்கையே! என் தாயும் உன் தாயும் நாம் பழகுவதற்கு முன் எத்தகைய உறவினர்? அவ்வாறே, என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையில் உறவு முறையினர்? போகட்டும், இப்பொழுது பிரியாமல் அன்பு பாராட்டும் நானும், நீயும் எவ்வண்ணம் அறிந்திருந்தோம்? ஆம்! நம் பெற்றோரும் முன்பின் அறியாதவர்; ஏன், நாம் இருவரும் இதற்கு முன் ஒருவரை ஒருவர் பார்த்துப் பழகியதுண்டா? இருந்தும், நம்மிடையே ஏற்பட்ட இவ்வுறவு, நம்மாலன்றி ஊழ்வினையின் வலிமையால் - தெய்வத்தின் அருளால் நாம் இன்று இணைந்திருக்கிறோம், இல்லையா? இப்பிணைப்பு எத்தகையது என்பதை நீ அறிதல் நலம்.

நீலவானில் கோல நிலா ஒளிக் கற்றைகளை அள்ளிவீசி மண்ணுலகின் காரிருளையும் ஓட்டுகிறது. அந்நிலவையும் மறைத்துக்கொண்டு கருமேகங்கள் அவ்வானில் உலா வருகின்றன; மலைச் சிகரங்களையும் முத்தமிட்டுச் செல்கின்றன. இடையிடையே மாந்தரை அதிரவைக்கும் இடியும் மின்னலும் தோன்றி வேடிக்கை காட்டுகின்றன. அம்மேகங்கள் மழையைப் பொழிகின்றன. அப் பெயல்நீர் செம்மண் நிலத்தில் படிகிறது.

ஆம்! கறுத்த மேகம் பெய்த மழைநீர் செம்மண்ணில் விழுந்ததும் அம்மண்ணின் செந்நிறத்தைப் பெறுகிறது. அதுமட்டுமா? அம்மண்ணின் தன்மையாகிய சுவையையும் பெற்று உருமாறிவிடுகிறதல்லவா அம் மழைநீர்? கருமணிப் பாவையே! அப் பெயல்நீர் போலவே நம்முடைய இரு நெஞ்சமும் ஒன்றாகக் கலந்துவிட்டனவே! அவ்வாறிருக்க, உன்னை நான் எப்படிப் பிரியவோ, மறக்கவோ முடியும்? ஆமாம், உன்னைவிட்டு ஒரு நொடியும் பிரிந்து அகலேன் என்பதை உன் நெஞ்சில் அழுத்தமாகப் பதிந்துகொள்" என்று சொல்லி, தன் மனதிற்கு உகந்தவளைத் தேற்றுகிறான்.

போலியான புகழை விரும்பும் மாந்தர் பலர் இம்மண்ணகத்தில் இருக்க, தேனிலே ஊறிய இப்பாடலைப் பாடிய புலவர் தம் பெயரைக் குறிக்காமலேயே சென்றுவிட்டார்!

செம்புலப் பெயல் நீர் - இவ் உவமையின் அழகுதான் என்னே!

புலனல்லாதன புலப்படுத்தப் பயன்படுத்தப்படுவதுதானே உவமை!

இந்த உவமையின் வாயிலாகப் புலவர்தம் கற்பனைத் திறனையும், காதலின் நுட்பத்தைப் புலப்படுத்தும் பான்மையையும் நம்மால் உணரமுடிகிறதன்றோ!

திருவள்ளுவரும் இவ்உவமையின் சீர்மை கருதி, "நிலத்தியல்பான் நீர்திரிந் தற்றாகும்" (452) என்றும், "நிலத்தொடு நீரியைந் தன்னார்" (1328) என்றும் தம் இரு குறட்பாக்களில் இந்த உவமையைக் கையாண்டுள்ளமை ஈண்டு குறிக்கத்தக்கது.

இனி, தேன் பிலிற்றும் அப்பாடலைக் காண்போம்.

"யாயும் ஞாயும் யாரா கியரோ
 எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
 யானும் நீயும் எவ்வழி அறிதும்
 செம்புலப் பெயல் நீர் போல
 அன்புடை நெஞ்சந் தாம்கலந் தனவே." (குறு - 40)

இக்குறுந்தொகை (40) பாடல் நம்மை இன்பத்தில் திளைக்கச் செய்கிறதல்லவா?

முனைவர் க.வெள்ளிமலை


நன்றி:- தினமணி

chithan

unread,
Dec 4, 2009, 11:52:26 PM12/4/09
to மின்தமிழ்
வணக்கம் கண்னன் நடராஜன்
தினமணி கட்டுரை மீதான எதிர்வினையாக சேலத்திலிருந்து இளங்கோ யுகமாயினிக்கு
அனுப்பியிருக்கிறார். அது உங்கள் பார்வைக்கும் கருத்துக்கும்
சித்தன்

இலக்கியச் சிந்தனை
புலம் பெயல் நீர்
சேலம் கி.இளங்கோ
“ Taking into consideration the cumulative evidence of the linguistic,
epigraphic, archeological numismalies and historical data, both
internal and external, it is undoubtedly possible to arrive at the
finalconclusion: the earliest corpus of Tamil Literature may be dated
between 100 B.C and 250 A.D” என்கிறார் தமிழறிஞர் கமில் சுவலபில்.
2000 ஆண்டுப் பழமையான சங்க இலக்கியங்களலால் தமிழர்க்குப் பெருமை; இவை
தமிழர் வாழ்க்கைச் சுவடுகள்; வரலாற்று ஆவணங்கள்; பண்பாட்டுப் பதிவுகள்;
தனிழரின் அறிவிற்கும் , வீரத்திற்கும் , வளமைக்கும், கவித்திறத்திற்கும்
சான்றுகள்.
எட்டுத்தொகைகளில் முதல் தொகுப்பு குறுந்தொகை என நிறுவப்பட்டுள்ளது. 29
உரையாசிரியர்களால் 236 பாடல்கள் மேற்கோளாக எடுத்தாளப்பட்ட பெருமை
பெற்றது.
பாடலில் சொன்ன உவமையால், “ செம்புலப் பெயல் நீரார்” என்றே அறியப்படும்
கவிஞர் எழுதிய இந்தக் குறிஞ்சித்திணைப் பாடல் பலரையும் ஈர்த்து, வியந்து
அவ்வப்போது நினைவிற்கு வந்து கொண்டே இருப்பது –

“யாயும் ஞாயும் யார் ஆகியரோ


எந்தையும் நுந்தையும் எம்முறைக்கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல

அன்புடை நெஞ்சம்தாம் கலந்தனவே”
காதல், களவின் பின் தலைவன் தன்னைப் பிரிந்து விடுவானோ என ஐயுற்ற
தலைவியின் மனதைக் குறிப்பால் அறிந்த தலைவன் அவள் அச்சத்தைப் போக்கியப்
பாடல்
என்று துறை கூறப்படுகிறது.
குறிஞ்சித்திணை நிலம், மலையும், மலை சார்ந்த இடமும். இவ்விடம் வாழ்
மக்களுக்குரிய ஒழுக்கம் ( உரிப்பொருள்) புணர்தல் ( தலைவன் தலைவியைச்
சந்தித்து இருவரும் மனம் ஒன்றிக் காதல் வயப்பட்டுக் கூடுதல்) என்பது
நம்பியகப் பொருள் கூறும் இலக்கணம்.
சங்கப்பாடல்களுக்கு உரையாசிரியர்கள் விளக்கம் அளித்திருக்கிறார்கள்.
புலவர்கள், முனைவர்கள், பேராசிரியர்கள் தமக்குத் தோன்றியவாறு கதையுரை
எழுதியிருக்கிறார்கள். பேராசிரியர் முனைவர் க. வெள்ளீமலை அவர்கள்
மேற்சொன்ன பாடலுக்கு ’தினமணி’ –தமிழ்மணியில் ( 25-10- 2009) எழுதிய
கதையுரையைப் படித்ததின் விளைவாக எனக்கு எழும் சிந்தனைகளை இங்கு
வைக்கிறேன்.
இப்பாடல் நான்கு செய்திகளை ஓர் உவமையுடன் சொல்கிறது.
1. தலைவனின் தாயும், தலைவியின் தாயும் யார்யாரோ
2. தலைவனின் தந்தையும், தலைவியின் தந்தையும் உறவினரல்லர் –
3. தலைவனும் தலைவியும் முன்பே அறிந்தோரல்லர் –
4. இருவரின் அன்புடை நெஞ்சங்கள் ஒன்று கலந்தன.
அன்புடை நெஞ்சம் கலந்த வகையினைச் சொல்லும் உவமை – செம்மண் நிலத்தில்
பெய்த நீர்.
குறிஞ்சி மண் பெரும்பாலும் செம்மண். பெருமழையால் நிகழும் மலைச் சரிவுப்
படங்களில் செம்மண்ணே காணப்படுகிறது.
செம்புலத்தில் பெய்யும் நீர் செந்நிறமாகும். கரிசல் நிலம் மீது பெய்தால்?
உவர் மண்ணிற் பெய்தால்?
புலம் எதுவெனினும்,அதன் மீது பெய்யும் நீர், அம்மண் நிறமே பூண்டு, அம்மண்
சுவை ஏற்று, தேங்கி நின்றோ, வழிந்தோடியோ மாற்ரம் கொள்ளுதல் இயல்பு.
அன்புடை நெஞ்சம் தாம் கலப்பது கரிசல் நிலப் பெயல்நீர், உவர் நிலப் பெயல்
நீர் போலத்தானே அமையும்?
செம்புலத்தார் எழுதிய பாடல் என்பதால்,’ செம்புலப் பெயல் நீர்’ உவமை
சொன்னார். வேறு வகைப்புலம் வாழ்ந்தவரெனின் செம்புலம் பற்ரி
சொல்லியிருக்க வாய்ப்புமுண்டோ?
நிலத்தே பெய்யும் நீர் அளவிற் குறைவாயின் தேங்கி நிற்கும்; காலப்போக்கில்
நிலத்தால் உறிஞ்சப் பெறும் அல்லது கதிரவன் வெப்பத்தால் ஆவியாகிவிடும்.
பெருமளவு பெய்ததெனின் வழிந்தோடிவிடும். குறிஞ்சிநிலம் என்பதால்
காட்டாற்ரு வெல்லமாய்ப் பெருகி, மலையினிழிந்து, சமவெளியில் அமைதியுற்று,
தெளிந்தவாறு முல்லை, மருத நிலவழியோடி நெய்தல் நிலங்கடந்து கடலிற்
சேரும்.
காதலிற் தொடங்கி, களவிற் தொடர்ந்து, கற்பில் அமைதியுறும் இல்லற வாழும்
ஒரு நாள் முடிவுறும்.
முல்லை, மருதம், நெய்தல் நிலம் வாழும் அன்புடை நெஞ்சம் தாம் கலப்பது
உண்டல்லவா? அவர்களுக்கும் இதே உவமைதானா?
களவின் பின் தலைவன் தன்னைப் பிரிந்து சென்றுவிடுவானோ என்று தலைவி
ஐயுறும் மனக்குறிப்பு இப்பாடலில் காட்சிப்படுத்தப்படுவதில்லை.
அவள் அச்சம் போக்கும் வகையில் தலைவன் உரைத்த தேறுதல் மொழிகளும்
இப்பாடலில் இடம் பெறுவதில்லை.
இப்பாடலைத் தலைவன், தலைவி தொடர்பற்ற ஒரு பொதுப் பாடலாக்கிப் பார்த்தால்,
நண்பர்கள் இருவரில் ஒருவர், தோழியரில் ஒருவர், தோழியிடம் தோழன், தோழனிடம்
தோழி அல்லது செம்புலப் பெயல் நீரார் கண்டது போலப் பிறப்பினால் அல்லாத
தாய், தந்தை, மகள், மகன், சகோதர உறவினரில் ஒருவர் மற்றவரிடம் அன்புடை
நெஞ்சத்தினராய்க் கலந்த நிலையில் உரைக்கும் பாடலாகவும் கொள்ளலாமே!
தலைவனும் , தலைவியும் காதல் கொண்டு, கூடிக் களித்த காலத்தில் இப்பாடல்
தலைவனிடத்துத் தலைவியோ, தலைவியிடத்து தலைவனோ ஐயமோ, அச்சமோ போக்கும்
வகையானன்றி இயல்பாக மகிழ்ந்து நெகிழ்ந்துரைத்திருக்க வாய்ப்பு இல்லையா?
தலைவன் தன்னைப் பிரிந்து விடுவானோ என ஐயுற்ற தலைவியின் மனதைக்
குறிப்பால் அறிந்த தலைவன் அவள் அச்சத்தைப் போக்கிய பாடல் என்று துறை
வகுத்தவர் யார்? இப்பாடலில் சொல்லப்படும் நான்கு செய்திகளைக் கொண்டு
எவ்வாறு இத்துறை இவ்வாறு வகுக்கப்பட்டது?
பேராசிரியர் முனைவர் க.வெள்ளிமலை அவர்களின் “ தினமணி தமிழ்மணி’
கட்டுரையில் சொல்லப்படவற்றுள் சில:
1. தலைவன் தமிழகத்தின் சிற்றூர் ஒன்றில் பிறந்து வளர்ந்தவன்.அறிவு, முறை,
ஓர்ப்பு, கடைப்பிடி ஆகிய பண்புகளாலுயர்ந்தவன்; அவற்றால் பிறர் போற்றும்
புகழ் வாய்க்கப் பெற்றவன்; தன் முயற்சியால் பொருளீட்டி வாழக் கருதுபவன்
-----?
2. தலைவி வடபுலமான வேற்று மாநிலத்தில் சின்னஞ்சிறு குக்கிராமத்தில்
பிறந்து வளர்ந்தவள்; அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும்


பெண்மைக்குரிய பண்புகளில் உறுதியாக நின்றவள்; அவற்றால் நிமிர்ந்த

நன்னடைக் கொண்டவள்.---------?
3. இவ்வாறு மதத்தால், குலத்தால், மொழியால், மாநிலத்தால் வேறுபட்ட
அவ்விருவரும் அன்பினால் கட்டுண்டனர்.------?
4. இருவரும் அன்புக்கு ஊறு ஏற்படாவண்ணம் இரண்டாண்டுகள் உள்ளத்தளவில்
பழகினர்’-------?
5. தலைவன் தன்னைப் பிரியப் போகிறான் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட
தலைவியின் வருத்தத்தை, அதிர்ச்சியால் செயல்பாட்டில் மாற்றம் இருந்ததை
குறிப்பால் உணர்ந்த தலைவன், தலைவியைப் பலவாறு சொல்லித் தேறுகிறான்
---------?


எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் தலைவனும், தலைவியும்
கட்டுரையாசிரியருக்கு நன்கு அறிமுகமானவர்களாக இருத்தல் வேண்டும்.அல்லது
இவர் செம்புலப் பெயல் நீராரைச் சந்தித்தபோது அவர் தம் பாடலில் சொல்லாமல்
விடுபட்ட பலவற்றை இவரிடம் சொல்லியிருக்க வேண்டும்.


K R A Narasiah

unread,
Dec 5, 2009, 12:00:29 AM12/5/09
to mint...@googlegroups.com

இதே பெயரில் எனது சிறுகதையொன்று வடக்கு வாசலில் பிரசுரமானது
நரசய்யா
2009/12/5 chithan <chitha...@yahoo.co.in>

RAJAGOPALAN APPAN

unread,
Dec 5, 2009, 3:10:48 AM12/5/09
to mint...@googlegroups.com

செம்புலம் என்பதைச் செம்மண் நிலம் என்று கொள்வதைவிட, செம்மையாகச் செய்யப்பட்ட சமதளம் என்று கொள்வது மிகுந்த பொருளுடையதாக இருக்கும். செம்மண் நீரை, மண் வேறாகவும் நீர் வேறாகவும் காய்ச்சி வடித்தல் மூலம் பிரித்துவிட முடியும். அன்புடைய நெஞ்சங்கள் செம்மையான தளத்தில் பெய்த இரு நீர்த்துளிகள் ஒன்றோடொன்று இனி என்றுமே எவ்வகையிலும் பிரிக்கமுடியாதபடி கலந்துவிடுவதாகக் கொள்ளலாம். நீர்த்துளிகளில் ஆண் பெண் சமத்துவத்தையும் காணமுடியும்.

அ.ரா.
2009/12/5 chithan <chitha...@yahoo.co.in>
Reply all
Reply to author
Forward
0 new messages