தமிழ்நாடு அள்ள அள்ளக் குறையாததொரு தொல்லியல் சுரங்கம் ஆகும். தமிழர்களின் மகத்தான வரலாற்றைச் செருக்குடன் பறைசாற்றும் தொல்லியல் தடங்கள் தமிழக மண்ணில் திசையெட்டும் பரவிக் கிடக்கின்றன.
தமிழர்களுக்குத் தமது வரலாற்றை அறிவது குறித்து எப்போதுமே பேராவல் உண்டு. பண்டைய வரலாற்றை அறிவதற்குத் தொல்லியல் ஆய்வுகள் எனப்படும் அகழாய்வுகள் மிகுந்த மதிப்பு மிக்கவை ஆகும். இருப்பினும் பல்வேறு காரணங்களால் தமிழ் நாட்டு மண்ணில் அதன் பெருமைக்கு உரிய அளவில் மிகப் பெரும் ஆய்வுகள் எதுவும் பெரிதாக முன்னெடுக்கப்படவில்லை. ஒன்றிய அரசு இதற்கு முக்கியத்துவம் அளித்துப் போதுமான நிதி ஒதுக்கி உதவவில்லை என்பதும் ஒரு காரணம்.
அண்மையில் கீழடி அகழாய்வு முடிவுகள் வெளியாகித் தமிழ்நாடு மட்டுமின்றி உலகெங்கும் உள்ள வரலாற்று ஆர்வம் கொண்ட தமிழர்களைப் பெருமிதத்தில் திளைக்க வைத்துள்ளது என்று சொன்னால் அது கொஞ்சமும் மிகையாகாது. ஒன்றிய பாஜக அரசு கீழடி உள்ளிட்ட பல தமிழகத் தொல்லியல் தடங்களில் ஆய்வுகளுக்கு முட்டுக் கட்டை போட நினைத்தாலும், மாநிலத்தில் திமுக அரசு பதவியேற்ற பின்னர் இந்த ஆய்வுகள் ஓரளவு வேகம் பெறத்துவங்கின. தமிழ்நாடு மாநில அரசு தற்போது தொல்லியல் ஆய்வுகளுக்குப் போதுமான அளவு நிதி ஒதுக்கி அதற்கு ஊக்கமளித்து வருகிறது.
அந்த வகையில் அண்மையில் நடைபெற்ற, இன்னமும் தொடர்ந்து நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வு காரணமாக கவனத்தை ஈர்க்கிறது துலுக்கர்பட்டி தொல்லியல் களம்.
திருநெல்வேலி மாவட்டத்தின் ராதாபுரம் தாலுகாவில் பாயும் நம்பி ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ளன துலுக்கர்பட்டி, கண்ணநல்லூர் மற்றும் பணகுடி ஆகிய ஊர்கள். இங்கு மார்ச் 2022இல் தமிழ்நாடு தொல்லியல் துறை தொல்லியல் அகழாய்வுப் பணிகளைத் தொடங்கியது.
அதற்கு முன்னதாக, 2010ஆம் ஆண்டு நம்பியாற்றின் கரையில் அமைந்துள்ள ராஜக்கமங்கலம் எனுமிடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் சுண்ணாம்புப் பூச்சுடன் கூடிய செங்கல் கட்டுமானங்கள், கற்சிலைகள் மற்றும் அரைசாந்து உருவங்கள் (stucco images) போன்றவை கிடைக்கப் பெற்றதை அடுத்து, பல தொல்லியல் சான்றுகளைக் கொண்ட துலுக்கர்பட்டியை நோக்கி ஆய்வாளர்களின் கவனம் திரும்பியது எனக் கூறலாம். ஆனால் கெடுவாய்ப்பாக ராஜக்கமங்கலம் அகழாய்வு பற்றிப் பின்னர் அதிகத் தகவல்கள் வெளிவரவில்லை.
நம்பி ஆற்றின் கரையை ஒட்டி சுமார் 36 ஏக்கர் பரப்பளவிலான பகுதியில் கருப்புப் பாண்டங்கள், சிவப்புப் பாண்டங்கள் மற்றும் கருப்பு-சிவப்புப் பாண்டங்கள் மற்றும் முதுமக்கள் தாழிகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டன. பின்னர் அந்த 36 ஏக்கர் பரப்பளவிலான பகுதியில் அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டது. நம்பியாற்றின் படுகையில் விளாங்காடு என்றழைக்கப்படும் வாழ்வியல் மேடு அமைந்துள்ள பகுதியில் 2021ஆம் ஆண்டு அகழாய்வு தொடங்கப்பட்டது. தேவை ஏற்படின் அகழாய்வு நடத்தப்படும் பரப்பு விரிவாக்கப்படும் என்று அகழாய்வைத் தொடங்கி வைத்த அமைச்சர் தங்கம் தென்னரசு அப்போது கூறினார்.

அங்கு நடத்தப்பட்ட முதல் கட்ட அகழாய்வில் குவளைகள், பாசி மணிகள், ஓடுகள், பீங்கான் பாண்டங்கள், இரும்புப் பொருட்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. துலுக்கர்பட்டியை ஒட்டியுள்ள கண்ணநல்லூர் மற்றும் பணகுடி போன்ற இடங்களிலும் முதுமக்கள் தாழிகளின் எச்சங்கள் போன்றவை கிடைத்தன.
ஏப்ரல் 2023 முதல் தமிழ்நாடு தொல்லியல் துறை துலுக்கர்பட்டியில் இரண்டாம் கட்ட அகழாய்வுகளைத் தொடங்கியது. எட்டு குழிகளில் நடத்தப் பட்ட இந்த அகழாய்வில் முதலில் புலி என்ற தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுகளில், தமிழி எழுத்துகளில் குவிர(ன்), திஈய, திச ஆகிய எழுத்துகள் பொறிக்கப்பட்ட தொன்மை மிகுந்த பானை ஓடுகள் கிடைத்தன. இவ்வெழுத்துகள் அநேகமாக அந்தப் பானைகளின் உரிமையாளர்களின் பெயரைக் குறிப்பதாக இருக்கக் கூடும். துலுக்கர்பட்டியில் வாழ்ந்த மக்கள் எழுத்தறிவு பெற்ற சமூகத்தைச் சார்ந்தவர்களாக இருந்தனர் என்பதையே இது சுட்டிக் காட்டுகிறது. கீழடியில் கிடைத்த பானை ஓடுகளிலும் குவிர(ன்) என்ற எழுத்துகள் கிடைத்துள்ளது இந்தத் தருணத்தில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
இந்த இரண்டாம் கட்ட அகழாய்வில் சதுரங்கம் விளையாடப் பயன்படுத்தும் சுடுமண்ணாலான காய்கள், செம்பு மோதிரம், சுடுமண் காதணிகள், ஈட்டி முனை, பாசிகள், கவண் கல், எலும்புகள், இரும்புப் பொருட்கள், வெண்மை நிறத்தில் அலங்கரிக்கப்பட்ட பானை ஓடுகள், கண்ணுக்கு மைதீட்டும் செம்புக் கருவி, செம்பு அணிகலன்கள் மற்றும் கூரை வீடுகள் இருந்தமைக்கான சான்றுகள் உள்ளிட்ட 1900க்கும் மேலான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
இவை மட்டுமின்றி, மூன்று இரும்பு உருக்கு உலைக்களங்கள், இரும்புத் தாதுப் பொருட்கள், இரும்புக் கசடு, ஊதுலைக் குழாய், இரும்பு உளி உள்ளிட்ட பல ஆர்வமூட்டும் தொல்லியல் சான்றுகளும் இந்த இரண்டாம் கட்ட அகழாய்வில் கிடைத்துள்ளன. இவை சுமார் 2400 ஆண்டுகளுக்கு முந்தியதாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் இந்தச் சான்றுகளை முறையான ஆய்வுகளுக்கு உட்படுத்தினால் மட்டுமே அவற்றின் காலத்தை ஐயத்திற்கு அப்பாற்பட்ட வகையில் உறுதி செய்ய முடியும். இருப்பினும் துலுக்கர்பட்டி மக்கள் இரும்பின் பயன்பாட்டை அறிந்திருந்தனர் என்பது ஓர் ஆர்வமூட்டும் தகவலாகும். அது மட்டுமின்றி வரலாற்று ரீதியாக அது மிகுந்த முக்கியத்துவம் உடையதும் கூட.
தொல்லியல் மற்றும் வரலாற்று நோக்கில் பார்க்கின், இரும்பின் பயன்பாடு என்பது ஒரு குறிப்பிட்ட மக்கள் சமூகம், அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கிப் பயணித்ததைக் குறிப்பதாகும். இரும்பை உருக்கக் கற்றுக் கொண்ட மக்கள், இரும்பிலான உற்பத்திக் கருவிகளையும் போர்க்கருவிகளையும் உருவாக்கிப் பயன்படுத்துவது, விவசாயத் துறையிலும் உற்பத்தியின் அனைத்துத் துறைகளிலும் மட்டுமின்றிப் போர்க்கலையிலும் பெருத்த மாற்றத்தைக் கொண்டு வரும். இரும்பின் பயன்பாட்டை அறிந்த மக்களால் மட்டுமே அடர்ந்த காடுகளை அழித்து, நிலத்தை விவசாயப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடியும். அது போலவே, இரும்பினால் செய்யப்பட்ட கொழுமுனைகள், கதிர் அறுக்கும் கருவிகள் போன்றவை விவசாயத்தை அதிகப் பயனளிப்பதாக மாற்றியமைக்கும். புதிய வாழ்க்கைத் தொழிலை மேற்கொள்ளும் ஒரு மக்கள் கூட்டத்தையும் உருவாக்கும். இவற்றின் ஒட்டுமொத்தத் தொகுப்பானது அன்றைய மக்கள் சமூகத்தின் மீதும், அவர்களது வாழ்க்கை முறை மீதும் உறுதியான தாக்கத்தைச் செலுத்தும், அது அன்றைய தொல்லியல் எச்சங்களின் மூலம் வெளிப்படும். மேற்கண்ட காரணங்களால் தான் பண்டைய சமூகங்கள் இரும்பின் பயன்பாட்டை அறிந்திருப்பது குறித்து ஆய்வாளர்கள் அதிகக் கவனம் செலுத்துவார்கள்.
இந்தியாவைப் பொறுத்த வரையில் கி.மு. ஆயிரம் ஆண்டு அளவில் தான் இரும்பு யுகம் துவங்கியது என்பது வெகு காலமாக ஆய்வாளர்கள் கொண்டுள்ள பொதுவான கருத்தாகும். ஆனால் அண்மைக் காலங்களில் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து கிடைத்துள்ள தொல்லியல் சான்றுகள் இந்த முடிவினைக் கேள்விக்குள்ளாக்கி உள்ளன.
குறிப்பாகத் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள மயிலாடும் பாறையில் கிடைத்த தொல்லியல் பொருட்கள் மீது செய்யப்பட்ட காலக் கணிப்பு பரிசோதனைகளின் படி, தமிழ்நாட்டில் 4200 ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பு பயன்படுத்தப் பட்டது தெரியவந்துள்ளதாக தமிழ்நாடு தொல்லியல் துறை ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்தியாவில் இரும்புக் காலத்தின் துவக்கம் குறித்து இதுகாறும் முன்வைக்கப்பட்டு வந்த அனுமானங்களைக் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.
மேலும் பொற்பனைக் கோட்டைப் பகுதியில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வுகளிலும் இரும்பு உருக்கு உலைகள், மற்றும் இரும்பின் பயன்பாட்டைப் பறைசாற்றும் சான்றுகள் பெருமளவில் கிடைத்துள்ளன. அதன் தொடர்ச்சியாக தற்போது துலுக்கர்பட்டியிலும் இரும்பு உருக்கு உலைக்களங்கள் போன்றவை கிடைத்துள்ளது பண்டைத் தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு மிகப் பரவலாக அறியப்பட்டதாக இருந்தது என்பதை உறுதி செய்கிறது.
துலுக்கர்பட்டியில் தொடர்ந்து நடைபெறும் அகழாய்வுகள் இது போன்ற இன்னும் பல பயனுள்ள வரலாற்றுத் தகவல்களை வெளிக்கொணரும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அத்தகைய சான்றுகளை உரிய காலக்கணிப்புப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தி உரிய முடிவுகளைப் பெற வேண்டியது தமிழ்நாட்டு அரசின் அத்தியாவசியக் கடமையாகும். அதற்குத் தேவையான ஆதரவும் அழுத்தமும் தருவதற்கு அறிவுசார் தமிழ்ச் சமூகம் தயாராக இருக்க வேண்டும்.
நன்றி: ஜனசக்தி அக்டோபர், 2023