மலையக மக்களின் அடையாளமான காமன்கூத்தின் நூறுவது வருடம் அரங்கேற்றம்
அருணாசலம் லெட்சுமணன்அமைப்பாளர், நிகர் சமூக கலை இலக்கிய அரங்கம்.
அதிபர்- ம.மா-கொத்- உனுக்கொட்டுவ தமிழ் வித்தியாலயம்.
தென்னிந்தியாவிலிருந்து வருகைதந்து இலங்கையின் பெருந்தோட்டப் பொறிமுறையினை விருத்தி செய்வதில் இந்திய வம்சாவளி தமிழர்களின் பங்கேற்பு மிக முக்கியத்திற்குரியதாக விளங்குகிறது. இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான பூர்வீகத் தொடர்பு நிலைகள் குறித்த ஆதாரங்கள் பல உள்ளன. அவ் ஆதாரங்களை முன்வைப்பதில் இராமாயணச் சித்தரிப்புக்கள் குறித்த பார்வை மிகுந்த கவனத்தைப் பெறுகின்றன. இவ்வாறான தொடர்பு நிலைகள் பல இருந்த போதிலும் 1823ம் வருடத்தைப் பிரதானப்படுத்திய நகர்வு 'மலையகச் சமூக' உருவாக்கத்தில் மிக முக்கிய கட்டமாக அமைகிறது. அப் பிரயத்தனத்தில் 'மலையகம் - 200' என்ற கோசத்தின் பின்னணியில் இடம்பெற்ற நிகழ்வுகள் அவதானத்திற்குரியதாக அமைந்தன. இவ் இருநூறு வருடகால அவதானிப்பில் மலையக மக்களின் வரவு, வாழ்வு, புலம்பெயர்வு, இருப்பின் ஆர்வம், புலம்பெயர்வின் நிர்ப்பந்தம், பிரயோக அரசியலின் பலம் பலவீனம், கலை, பண்பாட்டு அம்சங்கள், கல்வி நிலைகள், பொருளாதார நகர்வுகள் போன்றவை பற்றிய அவதானங்களும் கவனத்தைப் பெறுகின்றன. மலையக மக்களின் இருப்பை தக்க வைப்பதிலும் அவர்களின் அடையாளத்தைப் பிரதிபலிப்பதிலும் கலைகள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. அக் கலைகளுள் முத்தாய்ப்பாகவும், மலையகத்தின் முக்கூத்துக்களில் மூலமாகவும் அமையும் காமன்கூத்து மலையக மக்களை ஒருங்கிணைப்பதில் முக்கிய வகிபங்கை பெறுகிறது எனலாம்.
இந்திய வம்சாவளி தமிழர்களின் புலம்பெயர்வு இலங்கையின் வழிபாட்டு மரபிலும் பல்வேறு மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளன. பிரித்தானியக் காலனித்துவப் பொறிமுறையில் இலங்கையில் பெருந்தோட்டத்துறையை விருத்தி செய்யும் முனைப்பில் சொல்லெனா துயரங்களை அனுபவித்தவர்களாக இவர்கள் திகழ்கிறார்கள். இலங்கையில் 1823ம் வருடத்திற்கு முன்னர் வர்த்தக நோக்கம் கருதிய புலம்பெயர்வுகள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறான புலம்பெயர்வுகள் இலங்கையில் பூர்வீகத்தில் இருந்த முருக வழிபாட்டை மேலும் வலுப்படுத்தும் கைங்கரியத்தை ஆற்றியுள்ளது. மலையகம் உட்பட நாடுமுழுவதும் செட்டிமார்களின் வர்த்தக நடவடிக்கை நோக்கம் கருதிய வரவுகளால் சத்திரங்கள் உருவெடுத்தன. பின்னர் அச் சத்திரங்கள் முருகன் ஆலயங்களாக உருவெடுத்தன. அவ்வாறான ஆலயங்களுள் நாவலப்பிட்டி ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயமும் குறிப்பிடத்தக்கதாகும்.
1823ம் வருடத்தைப் பிரதானப்படுத்திய புலம்பெயர்வானது இலங்கையில் அம்மன் வழிபாட்டை நிலைநிறுத்துவதில் பெரிதும் துணைபுரிந்துள்ளது. அதன் தொடர்ச்சி நிலையிலேயே மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம், நாவலப்பிட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் ஆகியன அமையப்பெற்றமை கவனத்திற்குரியதாகும். மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் இருநூறு வருடத்தை அடையாளப்படுத்தும் வகையில் கடந்த வருடம் தபால் திணைக்களத்துடன் இணைந்து நினைவு முத்திரையை வெளியிட்டுள்ளது. ஒரு கல்வி நிறுவனம் என்ற வகையில் கினிகத்தேனைக்கு அருகிலுள்ள நகரமாக நாவலப்பிட்டி விளங்குகிறது. நாவலப்பிட்டி நகரில் அமைந்துள்ள கதிரேசன் மத்தியக் கல்லூரியும் தனது நூற்றாண்டைக் கொண்டாடிய மகிழ்வில் 'அடையாள முத்திரையை வெளியிட்டுள்ளது. மலையகம் - 200 தொடர்பில் இலங்கையும் இந்தியாவும் இரு வேறுபட்ட முத்திரைகளை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அவ் இரு நாடுகளும் வெளியிட்டுள்ள முத்திரைகள், வழமை போலவே நமது தேயிலை பறிக்கும் காட்சியை மாத்திரம் பொதித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். நிகர் சமூக கலை இலக்கிய அரங்கம் தபால் திணைக்களத்துடன் இணைந்து தனிப்பட்ட ரீதியாக நினைவு முத்திரையினை வெளியிட்டது. 'நிகர்' அமைப்பு வெளியிட்ட முத்திரை மலையகத்தின் வாழ்வியலையும், வரலாற்றையும், வளர்ச்சி நிலைமையினையும் எடுத்துக்காட்டும் முனைப்பில் திருப்தியை உணர்த்துவதாக அமைகிறது. அம்முத்திரை மலையக மக்களின் நேசிப்பிற்குரிய கலையான காமன்கூத்தையும் அடையாளப்படுத்தியுள்மை கவனத்திற்குரியதாகும்.
'கினிகத்தேனை' இலங்கையில் இராமாயணத்துடன் தொடர்பு முக்கிய தளமாகிறது. இராமாயணத்தின் சித்தரிப்பிற்கமைய அனுமனால் வைக்கப்பட்ட தீ நூராமல் எரியத் தொடங்கியது. நூரள, நூரளை என்ற பிரயோகத்தின் அடையாளமாகிப் போன பெயராக 'நுவரெலியா' அமைகிறது. கினிகத்தேன நீர் வளமிக்க களமாகிறது. இலங்கையின் மிக நீளமான நதியும், அகலமான நதியும் இத்தளத்தின் ஊடாகவே செல்கின்றன. நீர் வளமிக்கதான நிலையில் அனுமனால் மூட்டப்பட்ட தீ இப் பகுதியில் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றது. தீ பரவவில்லை என்பதைச் சிங்களத்தில் 'கினி கத்த நே' எனக் கூறுவார்கள். அப் பிரயோகத்தின் அடையாளத்துடனே 'கினிகத்ஹேன' என அழைக்கப்பட்டு வந்துள்ளது. இராமாயணத்தில் தமிழ் மன்னன் இராவணனோடு தொடர்புபடும் 'இராவணன் கல்வெட்டு' தொடர்பில் பல இடங்களில் அவதானிக்கலாம். கல்வெட்டுக்களுக்கு ஏற்ற கற்களாக கிரனைட் கற்கள் விளங்குகின்றன. அவ்வகையான கற்கள் இப்பிரதேசத்திலும் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. புவியியல் ரீதியான தொடர்ச்சி நிலையில் இம்புல்பிட்டி, கல்லாறு, ஹோல்கம ஆகிய பிரதேசங்களுக்கு மிக அண்மையிலே இத் தோட்டமும் காணப்படுகின்றது. குறித்த பிரதேசங்களில் கிரனைட் கற்கள் அதிகம் விளைகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். 'சீதை' இராமாயணத்தின் முக்கிய பாத்திரம் என்ற வகையில் இத் தோட்டமும் 'சீத்தாலெட்சுமி தோட்டம்' என அழைக்கப்படுகின்றமை கவனத்திற்குரியதாகும்.
அவ்வாறே இருநூறு வருடங்களுக்கு முன்னர் இந்திய வம்சாவளி தமிழர்களின் வரவுப் பாதையின் முக்கிய அங்கமாக கினிகத்தேனையின் சுவடுகள் கவனத்திற்குரியவனாகும். மாத்தளை, கண்டி, கினிகத்தேன என்றவாறே தொப்பித்தோட்டமான அட்டன் பகுதிக்கான நடைப் பயணம் தொடர்ந்துள்ளது. அக் காலக்கட்டத்தில் இப் பாதையினூடாக பயணித்தவர்கள் கினிகத்தோனையை 'ஒத்தக்கடை' என்றே அடையாளப்படுத்தியுள்ளார்கள். கொழும்பு, கண்டி பிரதானப் பாதைகளின் கேந்திர நிலையம் என்ற வகையிலும் இந்நகரம் முக்கியத்துவம் பெறுகிறது. இலங்கையின் முக்கியத்துவம் பெற்று விளங்கும் சிவனொளிபாதமலைக்கு அண்மித்த நகரம் என்ற வகையிலும் இத்தளம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்நகரத்தின் ஊடாகவே சிவனொளிபாத மலைக்கான பயணப்பாதையும் அமைந்துள்ளது. ஒத்தக்கடை என்ற நிலையிலிருந்து மிக விரைவாக முன்னேறி வரும் நகரமாக இந்நகரத்தின் வளர்ச்சி நிலை அவதானத்திற்குரியதாகும். இந்நகரத்திற்கு அருகில் அமைந்த தோட்டங்களில் மலையக மக்களின் வாழ்வியலை அடையாளப்படுத்தும் பிரயத்தனங்கள் முக்கியம் பெறுகின்றன. அவ்வகையில் சீத்தாலெட்சுமி தோட்டத்தின் பங்கேற்கும் (பிளக்குவாட்டர் தோட்டம்) கலை நேசிப்பும் சிறப்பிடம் பெறுகின்றன.


மலையகத்தில் பல தோட்டங்கள் நமது அடையாளமான முக்கூத்துக்களையும் வளர்த்தெடுப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளன. சிற்சில பிரதேசங்களில் பொன்னர் சங்கர், அருச்சுனன் தபசு ஆகிய கூத்துக்கள் பயில் நிலையிலிருந்துள்ளன. மலையகத்தின் சகல பிரதேசங்களிலும் காமன் கூத்து செல்வாக்கு பெற்றிருந்தது. கடந்த காலங்களில் வட மாகாணத்திற்கு மலையக மக்கள் புலம்பெயர்ந்த நிலையில் அப் பிரதேசத்திலும் காமன் கூத்தை நிலைபெறச் செய்திருந்தார்கள். கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் காமன் கூத்தின் பயில் நிலை குறைந்து வருகின்றமையும் கவலைக்குரியதாகும். அவ்வாறே பொன்னர் சங்கர் கூத்தை அரங்கேற்றுவதிலும் ஆர்வம் குறைந்து வருகிறது. அருச்சுனன் தபசு கூத்தை அரங்கேற்றுவது மிக அரிதாகவே இடம்பெறுவதும் கவலைக்குரியதாகும். இந்நிலையில் நமது பாரம்பரியத்தைக் காக்க வேண்டிய பிரயத்தனத்துடன் ஒவ்வொரு வருடமும் இக் கூத்துக்களை அரங்கேற்றப் பங்களிப்பு செய்யும் நம் மண்ணின் கலைஞர்கள் போற்றுதற்குரியவர்கள்.
கினிகத்தேனை, பிளக்குவாட்டர் தோட்டத்தில் இக் காமன் கூத்து பாரம்பரியத்தை நிலைபெறச் செய்வதில் மூத்த காமன் வாத்தியார் அமரர் இராமசாமி கோபால் அவர்களது பங்கேற்பு மிகுந்த கவனத்தைப் பெறுகிறது. மிக நீண்ட காலமாக இத் தோட்டத்தில் காமன் கூத்தை அரங்கேற்றுவதைக் கட்டாயக் கடமையாகக் கொண்டு தன் வாழ்நாளை அர்ப்பணித்த நம் மண்ணின் உயரிய கலைஞராக கோபால் ஐயா திகழ்ந்தார். மிக அமைதியான சுபாவம் கொண்டவரான கோபால் வாத்தியார் சிறந்த அணுகுமுறையில் அனைவரையும் ஒன்றிணைத்து வருடந்தோறும் காமன் கூத்தை அரங்கேற்றுவதில் பெரும் பங்காற்றி வந்துள்ளார். பிளக்குவாட்டர் தோட்டத்து பொது மக்களை, இளைஞர்களை, அண்மையத் தோட்டத்து மக்களை, அருகிலுள்ள காமன் வாத்தியார்களை, வேடதாரிகளை, பாட்டு வாத்தியார்களை, தப்பிசை கலைஞர்களை, ஒப்பனை கலைஞர்களை ஒருங்கிணைத்து ஒவ்வொரு வருடமும் காமன் கூத்தை அரங்கேற்றும் அவரது முனைப்பு மிகுந்த அவதானத்திற்குரியதாகும். பாடல் பாடுவதிலும் சிறந்த முன் மாதிரியாக விளங்கிய அண்ணார் இக் கூத்தின் உள்ளடக்கத்தைத் தெளிவுறுத்துவதிலும் முன் மாதிரியானவராக விளங்கினார். எல்லாவற்றுக்கும் மேலாகத் தனக்குத் தெரிந்த இக் கலையம்சத்தை இளந் தலைமுறையினருக்குப் போதிப்பதிலும் இவரது முன் மாதிரி போற்றுதற்குரியதாகும். இவ்வாறான ஓர் ஆளுமையின் அமரத்துவம் இத் தோட்டத்து மக்களால் ஜீரணிக்க முடியாவதென்றாக அமைந்திருந்தது.
உதவி காமன் வாத்தியார் நல்லு மோகனதாஸ் அவர்களை நெறிப்படுத்தியதிலும் இக் கலையில் ஆர்வலர்களை உருவாக்குவதிலும் இ. கோபால் வாத்தியாரின் பங்கேற்பு பெருமிதமானதாகும். கோபால் ஐயா அவர்களது நெறிப்படுத்தலில் உதவி வாத்தியார் ந. மோகனதாஸ் உட்பட ஏனைய கலைஞர்களும், ஆர்வலர்களும் பரிபூரணமான ஒத்துழைப்பை வழங்கி வந்துள்ளார்கள். அவ் அனுபவங்களைக் கொண்டு நூறாவது காமன் கூத்து அரங்கேற்றம் காமன் வாத்தியார்; நல்லு மோகனதாஸ் ஐயாவின் தலைமையில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
காமன் கூத்து பல இடங்களில் அரங்கேற்றப்படுகிறது. அரங்க நெறிமுறைகளைக் கற்பிதங்களாகக் கொண்டும் பல இடங்களில் இக் கூத்து அரங்கேற்றப்படுகிறது. கால வரையறையைக் கருத்திற் கொண்டு அரங்க மயப்படுத்தும் முனைப்புகளும் தொடரப்படுகின்றன. இவ்வாறான பிரயோகங்களின் போது காமன் கூத்தின் உள்ளடக்கம் சிதைக்கப்படுகின்ற நிலையும் கவலைக்குரியதாகும். அவ்வாறான பலவீன அம்சங்களைத் தவிர்த்து இக் கூத்தின் முழுமையான உள்ளடக்கத்தையும் அவதானிக்கின்ற போக்கினை இத் தோட்டத்துக் காமன் கூத்து கொண்டுள்ளது. எனது அனுபவத்திலும் பல தோட்டங்களில் இடம்பெறும் காமன் கூத்துக்களை அவதானித்திருக்கிறேன். ஓர் ஆய்வுப் பார்வையில் இத் தோட்டமே எனது முதல் அவதானத்திற்குரியதாகத் திகழ்கிறது. 2011ம் வருடம் தினக்குரல் 'உதயசூரியன்' இதழில் காமன் கூத்து கலையறிவோம் தொடர், கொழும்புத் தமிழ்ச் சங்கம் 2012ம் வருடம் நிகழ்த்திய உலகத் தமிழ் இலக்கிய மாநாடு ஆய்வரங்கத்தில் நிகழ்த்திய 'பன்முக நோக்கில் காமன் கூத்து' எனும் தலைப்பிலான ஆய்வுக்கட்டுரை உருவாக்கம், 2016ம் வருடம் பிரான்சில் இடம்பெற்ற உலகத் தமிழ் நாடக விழாவில் காமன் கூத்தை அரங்கேற்றுவதற்கான அழைப்பு (பங்கேற்க முடியவில்லை), சமகாலத்தில் தாய்வீடு சஞ்சிகையில் தொடரும் 'மலையக மக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த கலையாக காமன் கூத்து' எனும் தலைப்பிலான ஆய்வுத் தொடர் ஆகியவற்றைத் திருப்திகரமாக முன்னெடுக்கின்றமைக்கு பிளக்குவாட்டர் தோட்டத்துக் களம் மிகுந்த ஆதர்சத்திற்குரியதாகத் திகழ்ந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இத் தோட்டம் காமன் கூத்து நேசிப்பாளர்களின் ஆழ்ந்த ஈடுபாடு அக்கறைத் தன்மை, அமரர்களான வாத்தியார்களின் ஆசீர்வாதம், கோபால் வாத்தியாரின் வாக்கு, ஆசி என்பதெல்லாம் காமன் கூத்துக் கலையின் இருப்பிடமாக நிலைபெறும் என்பது அசைய முடியாத நம்பிக்கையாகும். இளந் தலைமுறையினர் இக் கூத்தோடு தொடர்புபடுகின்ற அக்கறையும் ஈடுபாடும் மேலும் நம்பிக்கையை வலுவாக்குகிறது எனலாம். இத் தோட்டத்தில் இடம்பெறும் நூறாவது காமன் கூத்து அரங்கேற்றம் திருப்தியையும் மகிழ்வையும் உணர்த்துகிறது. இம்முயற்சியில் உழைத்த அத்தனை நல்லுள்ளங்களும் போற்றப்பட வேண்டியவர்கள்.
14.03.2026