குறிக்கோள் மோப்பக் குழைந்தது அனிச்சம்
— எ. இரவிச்சந்திரன்
நாட்டிலே தன்துயர் தன்னோடு முடிய
தான்பெற்ற துளிர்கட்கு இனியேனும் விடிய
மூட்டை தூக்கியே வாழ்ந்த சண்முகம்
முனைந்தே தூக்கினான் வாழ்வின் சுமையை
வீட்டிலே பெற்றது ஐந்து செல்வங்கள்
விளைந்தனள் கடைசியாய் ஆருயிர் ஓர்மகள்
கூட்டிலே இருப்பது அனிச்ச மலரெனக்
குறித்திடத்தானோ அனிதா வென்றழைத்தான்
தொட்டாலே தீட்டென்று மனிதரை அஞ்சுவார்
தொட்டிலில் இடம்தந்து நாய்களைக் கொஞ்சுவார்
இட்டது சட்டமாய் இருந்த நாட்களில்
இருண்டது சமூகம் இழந்தனர் வாழ்வே
எட்டாது கல்வியென ஏங்கியே துடித்தோர்க்காய்
எரிமலை ஒன்று ஈரோட்டில் வெடித்தது
கிட்டாத படிப்பினைக் கிட்டத்தில் நகர்த்தினார்
கீழ்வானின் விடிவெள்ளி ஞானத்தின் தந்தை
நோயினால் இழந்த தன்தாயினை எண்ணி
நொடிந்துபோன தன் சமூகத்தை நாணி
தாயுமான அவள் தந்தையை உயர்விக்க
தன்னூர் சமூகத்தை நோயின்றி உய்விக்க
காயும் கதிரும் ஒருநாள் ஓயும்
கைஒடிந்த நிலையிலும் ஓயாது ஓடி
ஆயிரம் கனவுடன் படித்தனள் அனிதா
ஆகிடத் துடித்தாள் மருத்துவப் புனிதா
சட்டென நீட்டினார் நீட்டெனும் தேர்வினை
சமதூரம் ஓடென்றார் காலில்லா முடவரை
ஒட்டிட வேண்டாமோ கல்வியின் ஓட்டையை
ஓர்கல்வி வேண்டாமோ ஒருதேர்வு இங்கெனில்
பட்டெனக் கொணர்வதா அவகாசம் வேண்டாமா
பலஆண்டு முடங்கியோர்க்குச் சிலஆண்டு வேண்டாமா
வெட்டுண்ட ஆடெனத் துடித்தாள் அனிதா
வீணுன்ட மதிப்பெண்கள் லட்சியம் நினைத்தாள்
தொட்டார்ச் சிணுங்கி வாடிடும் மீளும்
தொலைந்த குறிக்கோளால் தொங்கிய மகளோ
பட்டாலே மோப்பம் குழைந்திடும் அனிச்சம்
பாருள்ள நிலைமைக்கு மெழுகான வெளிச்சம்
கெட்டது கல்வியெனத் தொலைதூரம் போனாள்
கேவியழும் தந்தைக்கு பாரமாய் ஆனாள்
நட்டது கெட்டதை நாடாள்வோன் அறிவனோ
நீட்டோலை வாசியான் நெடுமரம் புரிவனோ
(2017 - தமிழ் நதி - குயின்ஸ்லாந்து தமிழ் மன்றம்,
பிரிஸ்பேன், ஆஸ்திரேலியா)