பாமயன் எழுதிய 'திணையியம்: தமிழின் ஆதி மெய்யியல்' என்ற மெய்யியல் நூல் வெளிவந்துள்ளது.
திணையியல் தமிழர்களின் ஆதி மெய்யியல், அது உலக அளவிலும், இந்திய அளவிலும் அறிஞர் பெருமக்களால் பேசப்படாமல் ஒதுக்கப்பட்ட ஓர் ஆழமான மெய்யியல். அது எதிர்கால உலகத்திற்குத் தேவையான மெய்யியல் கூட.,
தொல்காப்பியரை மீட்டெடுக்கும் ஓர் அறிவுப் பயணமாகவும் இந்நூல் உள்ளது.
ஒரு சமூகம் உயிர்வாழ உணவு, தங்குமிடம், பாதுகாப்பு தேவை. ஆனால் ஏன் வாழ வேண்டும், எப்படி வாழ வேண்டும் என்ற கேள்விகளுக்கான விடை மெய்யியலின்றி சாத்தியமில்லை. தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் பாலினுள் நெய்யாக விளக்கப்பட்டுள்ள மெய்யியல் அடிப்படையகள், சொல் விளையாட்டு அல்ல. அது நாகரிகங்களை வழிநடத்தும் திசைகாட்டி; பண்பாட்டிற்கு உயிரூட்டும் உள்கட்டமைப்பு; அறிவை செயலாக மாற்றும் அடித்தளம்.
இந்த நூல், 'மெய்யியல் கிரேக்கத்துக்கே சொந்தம் என்ற 'ஐரோப்பிய மையவாதத்தையும், 'இந்திய மெய்யியல் என்பது வேதாந்தமே' என்ற கதையாடலையும் கேள்விக்குள்ளாக்குகிறது.
தொல்காப்பியம் வெறும் இலக்கண நூலா? அல்லது நிலம், பொழுது, உயிர், உணர்வு, ஒழுக்கம் ஆகியவற்றை இணைக்கும் 'இயைபு உறவியல்' (Harmonistic relationalism)
என்னும் மெய்யியலின் உலகளாவிய வடிவமா? என்பதை 350 பக்கங்களுக்கு மேலாக விளக்குகிறது.
சாக்ரடீஸ் 'பேசிய' வார்த்தைகளுக்காக ‘மெய்யியலின் தந்தை’ என உயர்த்தப்பட்ட வரலாற்றின் பின்னணியில், 3900 வரிகளுக்கு மேல் 'எழுதிய' தொல்காப்பியர் எவ்வாறு புறக்கணிக்கப்பட்டார் என்பதையும், அந்தப் புறக்கணிப்பு அறிவியல் அல்ல, அரசியல் என்பதையும் இந்த நூல் தெளிவாக எடுத்துரைக்கிறது.
சூழலியல், பெண்ணியம், அறிதலியல், சமூக நீதி, மனிதனைத் தாண்டிய இயற்கை நேயம் என்று இன்றைய அறிவு உலகம் தேடும் அனைத்துச் சிந்தனைச் சாவிகளும் சங்க இலக்கியங்களிலும், தொல்காப்பியத் திணை மெய்யியலிலும் இருப்பதை இந்த நூல் மெய்ப்பிக்கிறது.
தொல்காப்பியரை ஒரு மெய்யியல் அறிஞராக மீட்டெடுப்பது தமிழ் அறிவுலகத்திற்கு நீதி வழங்குவது மட்டுமல்ல; உலக மெய்யியல் வரலாற்றை மீண்டும் எழுதுவதற்கான ஓர் அவசியமான முயற்சியும் ஆகும். இன்று வேண்டுமானால் அறிவமைப்புகள் தொல்காப்பிய ஒளியை மறைக்க முனையலாம். ஆனால் ஒருநாள் அது உலகையே மிளிரச் செய்யும். அந்த ஒளிவிளக்கிற்கு இந்நூல் எளியதொரு திரி.
நூல் வேண்டுவோர் தொடர்பு கொள்க.
email:
pamaya...@gmail.comதொலைபேசித் தொடர்புக்கு : செம்பரிதி - 94898 79902