தொல்காப்பியத்தில் அகமும் புறமும்: புலவர் ஆ.காளியப்பன்

868 views
Skip to first unread message

தேமொழி

unread,
Nov 7, 2022, 4:12:10 PM11/7/22
to மின்தமிழ்
தொல்காப்பியத்தில் அகமும் புறமும்    

         —  தொல்காப்பியச் செம்மல்  
          புலவர் ஆ.காளியப்பன்,க.மு,.கல்.மு.,
          தலைவர், தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்


தொல்காப்பியத்தில் அகம்
          சொல்லெனும் பூம்போது தோற்றிப் பொருளென்னும்
          நல்லிரும் தீந்தாது நாறுதலால் – மல்லிகையின்
          வண்தார் கமழ்தாமம் அன்றே மலையாத
          தண்தாரான் கூடல் தமிழ். – மதுரைக்காஞ்சி  
என்ற வாக்கின்படி இலகுவது நம் செந்தமிழ் மொழி இதன்கண் மக்கள் பிறப்பின் பயனான அறம் பொருள் இன்பம் வீடுகளை அறிந்து உய்ய அறிஞர் ஆக்கிய நூல்கள் பல. அவை பண்டைய தமிழரின் வாழ்வியலையும் பண்பாட்டுக்கூறுகளையும் உயர்ந்த ஒழுக்கங்களைத் தம் நெறியாகக் கொண்டு வாழ்ந்து வந்த தமிழர் வாழ்வையும் எடுத்துரைக்கின்றன.

அறம் பொருள் இன்பம் என்பனவற்றுள் அறம் பொருள் என்பன புறமாகும். இன்பம் என்பது அகமாகும். புறம் புறவாழ்வியலோடு இணைந்த புகழ் ஆண்மை, வீரம் பற்றி எடுத்துக் கூறும். அகம் அகவாழ்வான இன்ப உணர்வுகளோடு இணைந்த இல்வாழ்வு பற்றி விவரிக்கும்.  இப்படி வளமாக வாழ்ந்த  தமிழினத்தின் உயர்ந்த கொள்கைகளையும் எண்ணங்களையும் உலகிற்கு உணர்த்தும் விழுமிய நூலாய் தொல்காப்பியம் ஒளிர்கின்றது.  உலக மொழிகளில் எழுத்துக்கும், சொல்லுக்கும் மட்டுமே இலக்கணம் இருக்க தமிழ் மொழிக்கு மட்டுமே வாழ்வியல் கருத்துகள் பொதிந்து கிடக்கும் பொருளதிகாரம் தொல்காப்பியரால் அமைந்தது.      

முப்பொருள் முதன்மை:
தமிழின் இலக்கியக் கோட்பாடும் அறம், பொருள், இன்பம் என்பனவற்றை முன்னிறுத்தியவை ஆகும். அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூற்பயனே என நன்னூல் உரைத்தாலும் அவற்றுள் வீடு என்பது  சிந்தையால் சிந்திக்கலாமே அன்றி மொழியால் உரைக்கப்படுதல் இல்லாதது.  மேலும் இம்மைக்கண் இல்லாதது  அதனால்  ஏடுகளால் இயம்பப்படுவன அறம் பொருள் இன்பம் என்ற மூன்றே.  

அக்காரணம் பற்றியே திருவள்ளுவரும் தம் நூலை  அறம், பொருள், இன்பம் என்னும் முப்பிரிவுகளாகப் பிரித்திருக்கின்றார். இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு தொல்காப்பியரும்  அந்த   மூன்றையே முதன்மைப்படுத்தி உள்ளார்.
          இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
          அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
          காமக் கூட்டம் காணும் காலை ( தொல்காப்பியம்)

          சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்
          அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல  (புறம். 31)
எனக் கோவூர் கிழார் வரையறுக்கிறார்.

வேட்கைமுறை பற்றி இன்பம் - பொருள் - அறம் எனவும்,  செய்கை முறை பற்றி அறம் பொருள் இன்பம் எனவும் எண்ணுதல் மரபு.

இம்மூன்றனுள்ளும்  உலகில் தோன்றிய  ஓரறிவு உயிராகிய  பயிர் முதல் ஆறறிவு  உயிராகிய மானிடர் வரை எல்லா உயிர்களும் இன்பத்தையே விரும்புகின்றன; தேடுகின்றன. அந்த இன்பம் என்பது பசி ஆறுவதலாலேயே கிடைக்கிறது. அந்தப்பசி உடற்பசி  குடற்பசி என இருவகைப்படும்.   அந்தப் பசியால்தான் காதலும் வீரமும் தோன்றுகின்றன.அந்தக் காதலை அகம் என்றும் வீரத்தை புறம் என்றும் தமிழர் கூறினர். அகம், அன்பின் சிறப்புக்களைப் பாடித் தனிமனிதர்களிடையே காதல் வாழ்வையும் குடும்ப வாழ்வையும் நெறிப்படுத்தியது. புறம், பொதுவாழ்வையும் மனிதன் உயர்நிலை எய்தும் சிறப்பையும் பாடியது.

எல்லா உயிர்க்கும் இன்பம் என்பதே  நோக்கம்;
இன்பம் பெருகும் இயல்பினால்  என்று பெரியபுராணமும்.
இன்பம் தெங்கும் நிலைகொண்டிருக்கவும் என்று தொல்காப்பியர் பிள்ளைத் தமிழும்  கூறுகின்றன.

உலகம் உயிர்கள் எல்லாம் இன்புற்றிருக்கவே ஞானிகள் விரும்பினர்.
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்  என்றும்,
          எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே
          அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே” 26. பராபரம் – 155 என்றும்,
          அன்பர்பணி செய்யஎனை ஆளாக்கி விட்டுவிட்டால்
          இன்பநிலை தானேவந்து எய்தும் பராபரமே என்றும் கூறினர்.
 
          எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது              
          தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும் -தொல்.பொருளதிகாரம்-219.
என்பது தொல்காப்பிய இலக்கணப்படி அமைந்த இன்பியற் கோட்பாடாகும்.

ஆகவே, இன்பத்தை அடைதலே எல்லா உயிர்க்கும் இறுதி முடிவு.

தொல்காப்பியம் உள்ளமும் உடலும் ஒன்றாய்த் தோய்வதில் வரும் இன்பமே எல்லா உயிர்க்கும் இன்பம். உடலும் உள்ளமும் ஒன்றாய்த் தோயும் இன்பம் எது? மனிதர்களுக்குக் கல்வியில் தோயும்; தவத்தில் தோயும்; தானத்தில் தோயும்.

மற்ற உயிர்களுக்கோ? காமத்தில் மட்டுமே தோயும். எனவே, எல்லா உயிர்களுக்கும் பொதுவான தோயும் இன்பம் காமமே.
கற்றனர் ஞானம் இன்றேல் காமத்தைக் கடக்கல் ஆமோ  கம்பன்   பொன்மொழிகள்  
          கண்டுகேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும்  ஐம்புலனும்
          ஒண்தொடி கண்ணே உள (குறள் 1101)    
இந்தக் காம உணர்வு என்பது அந்தந்த உயிரிகளின் பிறப்பிலேயே தானாக விரும்பிப் பொருந்தி வருவதாகும். இந்த உணர்வு இருப்பதால்தான் எதிர்பால் ஈர்ப்பு உண்டாகி ஒன்றினுள் கலந்து உலகில் உயிர்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன.  

இதுவே இறுதியான முடிவு அதனால்தான் திருவள்ளுவரும் இறுதிக்குறளில்
          ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
          கூடி முயங்கப் பெரின்”  (குறள் 1330) என்றார்.
உயிரினம் பெருகிக்கொண்டு இருக்க வேண்டும் என்பதற்காக இயற்கை அவற்றுக்கு ஆண், பெண் எனத் தனித்தனி வடிவங்கள் கொடுத்தது. ஒன்றின் மீது மற்றதற்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது என்று மகாபாரதத்தில் ‘காம கீதங்கள்’ கூறுகின்றன. பிள்ளைப் பேற்றிற்காக இயற்கை ஆக்கிவைத்த ஆண் / பெண் ஈர்ப்பு என்ற உணர்வு அன்றாட தேவையில் ஒன்றாக மாறிப்போனது. ஏனென்றால் மனித இனத்தைத் தவிர்த்து மற்ற உயிரினங்களுக்கு மனம் சார்ந்த தேவையாகக் காமம் இருப்பது இல்லை. உறவின் உச்ச நிலையில் மட்டும்தான் மனிதன் தன்னையே மறக்கிறான். சில நொடிகளோ, நிமிடமோ,  ஆண்-பெண் உறவின்போதுதான்,  ‘நான்’ என்பது அறவே மறைந்த,  எந்த சிந்தனையும் இல்லாத நிலையை, அவனால் அடைய முடிகிறது.

          உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
          கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு.
          களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
          வெளிப்படும் தோறும் இனிது (குறள் 1145)
காமமானது ஒருவருக்கு தாம் கற்ற கல்வியையும் மறக்கச் செய்யும் அளவிற்கு மாற்றும் தன்மை உடையது. விரும்பிய பெண்ணை அடைவதற்குத் தடை வரும் போது தலைமகன் மடலேறும் வழக்கம் பண்டைக் காலத்தில் வழக்கிலிருந்தது. தலைவியின்பாற்  காதல் கொண்ட தலைவன் தன் காதலுணர்வை அவளுக்கு வெளிப்படுத்த மடலேறுதல் நிகழ்த்துவான். மடலேறுகின்ற தலைமகன் எருக்கம்பூவை தலையில் கண்ணியாகத் தொடுத்து அணிந்துகொண்டு பனங்கருக்கினால் செய்த குதிரை மீதேறி ஊரார் அறியும்படி தன் காதலை வெளிப்படுத்துவான். இதனை,
          பொன்ஏர் ஆவிரைப்  புதுமலர் மிடைந்த
          பல்நூல் மாலை பனைபடு            
          கலிமாப் பூண்மணி கறங்க ஏறி   என்பர்  

இன்பம் என்பது காதல் உணர்வு.  பருவம் அடைந்த ஆடவர் பெண்டிர் அகத்தே பூத்து மலரும் பொற்பு உடையது. இவ்வகப்பொருள் இத் தன்மைத்தன என்று சிறப்பாக எடுத்துக்கூறுவது ஒல்காப்பெரும் புகழ்த் தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல்.

ஆனால், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள காதல் என்பது தாகமும், குடிநீரும் போல ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை.  இந்த உலகில் வாழ, மனிதராய் பிறந்த நமக்கு எப்போதும் ஒரு துணை தேவை. நம்மைப் பெற்று, வளர்த்து விடும் பெற்றோர்கள் நமது குறிப்பிட்ட வயதுவரை தான் துணை நிற்க முடியும். அதற்குமேல் நமக்கு நம்பத் தகுந்த, அன்பு, அக்கறை செலுத்தக்கூடிய உயிர் ஒன்று தேவை. அஃது  ஆணுக்கு ஒரு பெண். பெண்ணுக்கு ஓர் ஆண்.   கடைசி வரை ஓர்  உயிர் எந்தவித சுயநலமுமின்றி நம்முடன் பயணிக்க வேண்டுமென்றால், காதல் எனும் ஆயுதம் அதற்குத் தேவை.

பழந்தமிழர் வாழ்வியலில் அகம் என்பது இன்ப நுகர்ச்சி, அதனால் விளையும் பயனை நுகர்வோர் மட்டுமே அறிய முடியும்.  அதை  உணர்வால் அறிவதன்றி  இவ்வாறு  இருந்தது என  வெளிக்கு எடுத்துரைத்தல் இயலாதது. அதனால் அகம் என்று தொல்காப்பியர் உரைத்தார். அப்படிப்பட்ட அகத்திணையை ஏழு வகைப்படுத்தி உள்ளனர். அவற்றுள் நிலம் சார்ந்த ஐந்து திணைகளை (குறிஞ்சி முல்லை, மருதம்,நெய்தல், பாலை) அன்பின் ஐந்திணை என்றும் எண்ணத்தைச்(உள்ளத்தே, இல்லத்தே) சார்ந்த திணை (பெருந்திணை, கைக்கிளை) என்றும் இரண்டும் சேர்த்து அகத்திணை ஏழு என்றனர்.  இதைப் பொருளதிகாரத்தின் முதல் நூற்பா கூறுகிறது.  அந்நூற்பா,
          கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
          முற்படக் கிளந்த எழுதிணை என்ப என்பதாகும்
அவற்றுள்,
          நடுவண் ஐந்திணை நடுவண தொழியப்
          படுதிரை வையம் பாத்தியப் பண்பே  (அகத் -2)
என்பதால் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஒருவனும் ஒருத்தியும் விரும்புகின்ற ஐந்திணைகள் மட்டுமே அன்பின் ஐந்திணை என்று போற்றப்பட்டது.
   
அகத்திணை என்பது காதல் சார்ந்த  ஒழுக்கம். அந்த ஒழுக்கம் வாழும் இடத்திற்கும் வாழும் காலத்திற்கும் ஏற்றபடியே நிகழும். எனவேதான் நிலமும் பொழுதும் முதற்பொருள் ஆயிற்று. திணைகளின் பொருள்களைக் கூறவந்த தொல்காப்பியர்,
          முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே
          நுவலுங் காலை முறைசிறந் தனவே
          பாடலுட் பயின்றவை நாடுங் காலை”(அகத்3)                                                
என்ற மூன்று பொருள்களைக் குறிப்பிடுகின்றார்.  மேலும்,
          முதல்எனப் படுவது நிலம்பொழுது இரண்டின்
          இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே(அகத்4)
என்று கூறுகிறார்.

அவற்றுள்ளும்  முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்னும் நான்கு திணைகளுக்கு மட்டுமே நிலம் கூறுகிறார். பாலைக்கு நிலம் கூறவில்லை. ஏனெனில் பாலை என்பது இயற்கை ஆனது அன்று.   மரத்தை மறந்த மனிதனாலும் மழையின் மாற்றத்தாலும் வருவது.

          முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து,
          நல் இயல்பு இழந்து, நடுங்கு துயர் உறுத்து,
          பாலை என்பது ஓர் படிவம் கொள்ளும்
என்கிறது சிலம்பு.   உலகில் நான்கு நிலங்கள் மட்டுமே உள்ளதால்தான் இவ்வுலகிற்கு நானிலம் என்னும் பெயருண்டாயிற்று.

          மாயோன் மேய காடு உறை உலகமும்,
          சேயோன் மேய மை வரை உலகமும்,
          வேந்தன் மேய தீம் புனல் உலகமும்,
          வருணன் மேய பெரு மணல் உலகமும்,
          முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
          சொல்லிய முறையான் சொல்லவும் படுமே.(அகத்5)

கருப்பொருள் என்பது அந்தந்தத் திணைக்கு உரியனவும், அவற்றின்கண் உள்ளனவும் ஆகிய பொருள்கள். ஒவ்வொரு நிலத்தையும் சார்ந்து அங்கு விளங்கும், வாழும், திகழும் பொருள்கள் யாவும் கருப்பொருள்களே. அவற்றைத் தொல்காப்பியர்,
          தெய்வம் உணாவே  மா மரம், புட்பறை
          செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
          அவ்வகை பிறவும் கருவென மொழிப  
என்று கூறுகிறார்.

கருப்பொருள் அகத்திணைக்குக் கருவாய் அமைவன. உரிப்பொருள் சிறந்து விளங்க கருப்பொருள் அமைகிறது. மனிதனின் வினை நிகழ்ச்சிக்குத் துணையாக இருப்பவையும் நிலம் பொழுது இவற்றின் இயல்பால் தோன்றுபவையும் படைக்கப்படும் மானுட நிகழ்ச்சியை விளக்குவதற்குரிய வாயிலாக அமைபவையும் கருப் பொருள்களாகக் குறிக்கப்படுகின்றன. ஐந்து நிலத்திணைகளுக்கும் அவற்றின் இயல்புக்கு ஏற்ப உரிப்பொருள்கள் உள்ளன.                                          
          புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
          ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை
          தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே (அகத்16)
இலக்கண நூல்கள் மக்களின் மனநிலையை 'உரிப்பொருள்' என்று கூறுகின்றன.

களவு:
அகம் என்பது உள்ளத்தையும் இல்லத்தையும் குறிக்கும்.  அகப்பொருள் என்பது காதல் வாழ்வைக் குறிக்கிறது.  காதல் இன்பத்தைத் துய்ப்பதில், களவு, கற்பு என்ற இரு வேறு நிலைகள் உள்ளன.                                            
          களவு கற்(பு)எனக் கண்ணிய ஈண்டையோர்
          உளம்நிகழ் அன்பின் உயர்ச்சி மேன
                    (இறையனார் அகப்பொருள் 60 )    

தொல்காப்பியர் கூறும் களவு அறத்திற்கு மாறில்லாதது. அறமாகவே கொள்ளப்படுவது.  பெருமையும் உரனும் உடைய ஓர் ஆணும், செறிவும் நிறையும் செம்மையும் செப்பும் அறிவும் அருமையும் உடைய ஒரு பெண்ணும்,  

          ஒன்றே வேறே என்றிரு பால்வயின்
          ஒன்றி உயர்ந்த பால தாணையின்
          ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப                                                                    
          மிக்கோ னாயினும் கடிவரை இன்றே (தொல் பொருள் 90)
என்ற தொல்காப்பியர் கூற்றுப்படி,
காதலனும் காதலியும் முன்பின் அறியாதவர்களாக இருந்தாலும் ஓரிடத்தில் சந்தித்துக் காதல் கொள்ளுகின்றனர். கலந்து இன்பம் துய்க்கின்றனர். நல்வினையால் எதிர்ப்பட்டு, காதல் கொள்வது ஆகும்.

          எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது              
          தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும் -தொல்.பொருளதிகாரம்-219.
என்பது தொல்காப்பிய இலக்கணம்.  

          யாயும் ஞாயும் யாரா கியரோ
          எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்
          யானும் நீயும் எவ்வழி யறிதும்
          செம்புலப் பெயல்நீர் போல
          அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே (குறுந்40)

நெஞ்சம் கலக்கக்காரணம் என்ன?   அறிவியல் அறிஞர்கள்  உலக இயற்கை, பொருள்களின் சேர்க்கை முறையால் புதுப்புதுப் பொருள்களை உண்டாக்கி உலகை வாழ்விப்பது போல ஆண்பால் பெண்பால் என்னும் வாழ்வியல் அறிவர்கள் ஆண், பெண் கருவை ஒன்று சேரும் பருவமறிந்து,  ஒன்றுசேர்ந்து உருவாக்கி உயிராக்கி உலகை வாழ்வித்து வருகின்றனர். ஆகவே கரு உருவாகும் நிலை அடைந்ததும் தானாக எழும் ஓர் உணர்ச்சியாகிய காமத்தால் தூண்டப்பட்டு ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் நாடிக் கூடிக்கழிக்கும் புணர்ச்சியே உலகுயிர்த் தோற்றத்திற்கும் வாழ்க்கை நலத்திற்கும் இன்றியமையக் காரணமாக இருக்கிறது.  

பருவம் அடைந்த சமயத்தில், உடலும் மனமும் புதுமையைத் தேடும் ஏக்கத்தில் இருக்கும்.  எதிர்பாலினர் மீது அன்பு, ஆசை கலந்து இளமையில் உருவாகும் ஈர்ப்பின் பெயர் 'காதல்!’..  இதை அறிவியல்பூர்வமாக பார்த்தால் காதல் என்பது பசி, தாகம், கோபம் போன்ற ஓர் இயல்பான உணர்வு பெரும் பசி கொண்டவன், உணவைக்  கண்டவுடன் உலகை வென்றது போல் மகிழும் உள்ள நிலை தான்.    காதலில்  வீழ்வது என்பது  ஒரு வித வேதியியல் மாற்றம். அது  நம் மனித உயிர்த் தொகுதியின் இன விருத்தியை நிலை நிறுத்தும் வகையில் உடலில் தொடர்ச்சியான பல வித வேதியியல் மாற்றங்களை உண்டு பண்ணுகிறது  என்கின்றனர் அறிவியலாளர்கள்.  

இயற்கை நம்மை ஒருவகையான நபருக்கு மட்டும் தயார் செய்து வைத்திருக்கிறதாம்.  ஒவ்வொருவர் மனத்தின் ஆழத்திலும் ஒரு தனிப்பட்ட  நாயகன் அல்லது நாயகி இருக்கிறார்கள்.  அவர்கள் எதிர்ப்படும்போது  புணர்ச்சிக்குக் காரணமாகிய காதல் அரும்பவே ஒருவனும் ஒருத்தியும் தாமாகவே எதிர்ப்பட்டுக் கூடுதல் இயற்கை. முற்செய் வினையது முறையாவுண்மையின் ஒத்த இருவரும் உள்ளகம் நெகிழ்ந்து எதிர்ப்பட்டுக் கூடுவது.   இயற்கைப்   புணர்ச்சி அன்புடைய இருவர் நல்வினையால் எதிர்ப்பட்டு காதல் கொள்வது.

இந்தக் காம வேட்கை மிகுதியால் தான்  காதல் உருவாகிறது. இதுவே காமப் புணர்ச்சி எனப்படுகிறது. இது நல்வினைப் பயனால் தன்னியல்பில் நிகழும் புணர்ச்சியாதலின் இயற்கைப் புணர்ச்சி எனவும், தெய்வப் புணர்ச்சி எனவும்படும். முன்னுறு புணர்ச்சி எனவும் இது வழங்கப்படும்.  நல்லூழின் ஆணையால் ஒத்த பிறப்பு, குடி, ஆண்மை, ஆண்டு, அழகு, அன்பு, நிறை, அருள், உணர்வு, திரு என்னும் பத்துப் பண்புகளுடன் இருக்கும் ஓர் ஆணும், பெண்ணும் கண்டு காதல் வயப்படுவர்.

இவ்விருவகை உணர்வும் இளமையில் முகிழ்ப்பனவே. காமம் என்பது அழியும். உடம்பைப் பற்றி நிகழும் அவா ஆகும். காதல் என்பது அழியாத உயிருணர்வைப் பற்றி  நிகழும் அன்பு ஆகும்.  வாழ்க்கையில் சிலநாள் கழித்தபின் காமம் தொலைவுறும் காதல் இறுதிவரை நிலையுறும் என்கிறது தொல்காப்பியம்.

இருவேறுருவினரான ஓர் ஆணையும் பெண்ணையும் ஒன்றாக்கி ஈருடல் ஓருயிராம் என்னும் நிலையை உண்டாக்கி ஒருவர்க்குண்டான நலம்,கேடு இருவருக்கும் ஒத்தபங்காகக் கொண்டொழுகும்படிச் செய்வது  இருவரையும் மூன்று காலோட்ட விளையாட்டின் நிலையில் வைப்பது இருபாலாரிடத்தும் தோன்றி ஒன்று பட்ட காதலன்பே ஆகும்.

பிணி மூப்புகளின்றி, எப்பொழுதும் ஒரு தன்மையராய், உருவும் திருவும் பருவமும் குணமும் குலமும் அன்பும் முதலியவற்றால் ஒப்புமையுடையவராய் தலைமகனும் தலைமகளும், பிறர் கொடுப்பவும் பெறவுமின்றி, ஊழ் வகையால் தாமே எதிர்ப்பட்டுக் கூடுவது. தமது மகள் பிறர்க்கு உரியவள் என்று  பெற்றோரால் கொடுக்கப்பட பெறுவதற்குரிய தலைவியை, அவர் கொடுப்பக் கொள்ளாது, இருவரும் கலந்த உள்ளத்தோடு எதிர்ப்பட்டுப் பிறர் அறியாது புணர்தலின் களவு எனப் பெயர் பெற்றது.  

களவு நெறியைக் குற்றமாகப் பெற்றோர் எண்ணினாலும் சமூகம் குற்றமாகக் கருதவில்லை. நட்புக்குரிய பருவத்தில் இருக்கும் ஒரு மகனும் ஒரு மகளும் ஒருவரை ஒருவர் சந்தித்தபோது தமக்குள் ஒரு பிணைப்புணர்வு ஏற்பட்டு மீண்டும் சந்திக்க விரும்பிச் சந்தித்துப் பழகுவது 'களவு' எனப்படுகிறது. இந்தச் சந்திப்பும் பழக்கமும் இரண்டு வீட்டார்களுக்கும்  தெரியாமலேயே நடப்பதால் வீட்டார் பார்வையில் 'களவு' என்று கருதப்பட்டிருக்கிறது. களவு என்றே பெயரும் பெற்றுள்ளது.  களவுக்காலத்தில்  நிகழும் செயல்பாடுகளைத்  தொல்காப்பியம் விளக்குகிறது.

தலைவி தன்னுடன் ஒத்த நலன்களால் சிறந்து தோன்றிய வழி தலைவனுக்கு 'இவள் - தெய்வ மகளோ?' என்ற ஐயம் தோன்றும். ஆனால் அவள் அணிந்துள்ள மாலை, அணிகலன் ஆகியவற்றைக் கண்டு அவள் மானிட மகளே எனத் தெளிவான். பிறகு அவள் தன்மேல் விருப்பம் கொண்டிருக்கிறாளா என அறிய அவள் கண்களை நோக்குவான். காம வேட்கையினால் அந்நான்கு கண்களும் தாம் கொண்ட காதலை உரைக்கும். ஒருவரை ஒருவர் காணும் முதற்காட்சியிலேயே மெய்யுறு புணர்ச்சிக்கு உடன்படாது, உள்ளப் புணர்ச்சி அளவிலேயே ஒழுகி மணந்து கொண்ட பின்னரே கூடி மகிழ்வர்.    

காதலன் காதலியிடம் பேச்சுக் கொடுத்தல், தன் சொல்லுக்கு அவளைக்  கட்டுப்படுமாறு செய்தல், கட்டுப்பட்டால் இன்ன நன்மை என விளக்குதல், அவளது புன்னகையின் பொருளை  உணர்ந்துகொள்ளுதல், அவளை நினைத்துத் தான் மெலிவதை உரைத்தல், அவள் இல்லாவிட்டால் தனக்கு நிகழப்போகும் தீங்கை எடுத்துரைத்தல், தன் கைவிடாத் தன்மையை அவளுக்குத் தெளிவுபடுத்துதல் முதலான பேச்சுக்களால் காதலன் காதலியை வயப்படுத்துவான்.  

காதலியைத் தொடுதல். அவள் அழகைப் பொய்யாகப் பாராட்டுதல். அவள் ஒப்புதலுடன் அணைத்துக்கொள்ளல். அவளிடம் வருவதற்குத் தனக்கு நேர்ந்த இடையூறுகளை எடுத்துரைத்தல். அவள் உறவு கிடைக்கவில்லையே எனப் பெருமூச்சு விடுதல். உடலுறவு கொள்ள முயல்தல், காதலியைத் துய்த்தல், ஆசை அடங்காமை என்னும் இவை எட்டும் ஒரு வகை பெற்றவழி மகிழ்தல், அவள் பிரிந்து செல்லும்போது கலங்குதல், நிகழவேண்டியதை எடுத்துரைத்தல், தன்னைக் குறை கூறும் பாங்கனுக்கு எடுத்துரைத்தல், பாங்கன் உதவியை வலியுறுத்தல், தன் ஊர், பேர், அவள் இல்லாவிட்டால் தனக்கு நேரும் கெடுதி முதலானவற்றைக் கூறித் தோழியின் உதவியை நாடல், தோழி தன் தலைவியை இணங்கச்செய்தல், தலைவி இணங்காவிட்டால் மீண்டும் மீண்டும் கெஞ்சுதல், இணங்கியபின் அரவணைத்தல், அவள் தயங்கும்போது தனக்கு நேரும் கெடுதியையும், தன் பெருமைகளை எடுத்துரைத்தல், மடலேறிப் பெறுதல் பற்றி நினைவூட்டுதல் முதலானவை அப்போது பேசப்படும். செல்லும் வழியில் நிகழும் சிலவும் உண்டு.  

களவு என்பது இன்ப உணர்வின் அடிப்படையில் நிகழக் கூடியது. தலைவியிடம் தோன்றும் ஏழு வகையான வேறுபாடுகள் தலைவிக்கும் தலைவனுக்கும் உள்ள உறவைக் காட்டிக் கொடுத்துவிடும். அவை (1) உடலில் தோன்றும் மணம், (2) தோற்றத்தில் பொலிவு, (3) உணவு செல்லாமை, (4) மறைவாகச் செயல்படுதல், (5) தோழியை விட்டு விலகிச் செல்லுதல், (6) தோழியிடம் புதுமையாகப் பழகுதல், (7) புணர்ச்சியை எதிர்பார்க்கும் உணர்ச்சி வெளிப்படுதல் ஆகியவை அந்த ஏழு.  மெய்யாகவும் பொய்யாகவும் பார்க்கும் பார்வை.  அவனை அறியாதவள் போல நடித்தல், பொதுப்பட உலகியல் பேசுதல், விலக்க முடியாமல் அவனை விலக்கல்,  அவனைப் பின்னர் வா என்று கூறுதல்.  அவனை ஏமாற்றிப் பித்தனாக்கல்,  முன்பே உள்ள உறவைக் கூறி அச்சுறுத்தல். இக் களவு ஒழுக்கம் நான்கு வகையாகப் பகுத்துக் கூறப்படும்.  

இந்த உலகத்தில் நாம் கற்காமலேயே நம்மில் தோன்றும் வியப்பான ஒருநிகழ்வு தான் காதல். அந்த உணர்வுக்கு மயங்காதவர் எவருமிலர். அதனை விரும்பாதவர் யாரும் இல்லை. அன்பு,  பாசம் போன்றவற்றுடன் அந்நியப்பட்டு நிற்பதுதான் அந்தக் காதல் வாழ்வுதான். காதல் காலத்தில் ஆசை மிகுதல், ஒருவர் மட்டும் நினைத்தல், நினைவால் உடலும் உள்ளமும் மெலிதல், இன்னது செய்தால் இன்னது நேருமோ என எண்ணுதல், நாணம் வரம்பைக் கடத்தல், பார்க்கும் பொருள்களிலெல்லாம் காதலர் நினைவே வருதல், தன்னையே மறந்து பித்தாதல், எண்ணச் சோர்வால் மயங்கி விழுதல், காதல் நிறைவேறாதபோது சாகத் துணிதல் முதலான நினைவலைகள் களவுக் காலத்தில் காதலர் உள்ளத்தில் மோதிக்கொண்டே இருக்கும்.

இவ்வாறு களவு முறையில் காதல் புரிபவர்கள்  பிறகு, பல்லோரறிய மணந்துகொள்வர். இதனைக் கற்பு என்று கூறுவர், இதனையே களவும் கற்று மற என்றனர் அறநிலைவழாமல் நிற்றலால் இஃது அறமெனப்பட்டது.    

கற்பு:
கற்பு என்பது இல்லற ஒழுக்கம்.  அதாவது,  களவொழுக்கம் ஒழுகி மணம் செய்து கொண்டோர் கூடியும் ஊடியும் வாழ்வதே கற்பெனப்படும்.   அவ்வொழுக்கத்தின் பாற்படும் மன உறுதியே கற்பெனப்படும்.   'கற்பெனும் திண்மை உண்டாகப்பெறின்' (குறள்54)என்கிறது குறள்.  தொல்காப்பியத்தில் கற்பு என்று வரும் இடங்களையெல்லாம் ஆராயின் அது "இல்லறம்" என்ற பொருளையே குறித்தல் அறியலாம்.  

தொல்காப்பியர் களவியல் ஒன்றை வகுத்தது போலவே  கற்பியல் என்ற ஒன்றையும் வகுத்துள்ளார். திருவள்ளுவரும் காமத்துப்பாலில் களவியலுக்குப் பின் கற்பியல் வைத்துள்ளார். திருமணம் முடிந்து இல்லறத்தை நல்லறமாக வாழும் கணவன் மனைவி வாழ்க்கை முறை கற்பு எனவும் கொள்ளப்பெறுகின்றது.    ஆண் பெண் இருவரும் காதலுக்குப்  பிறகு, இருவருடைய உறவையும் உறுதிப் படுத்த நிகழ்த்தும் சடங்கினையே  ‘கற்பு' என்கின்றனர் தொல்காப்பியர்.
          கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
          கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்
          கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதே
                            (பொருள் 140)
கற்பு என்பது தான் இல்லறவொழுக்க மாகும். அதை,
          மறைவெளிப் படுதலும் தமரிற் பெறுதலும்
          இவைமுத லாகிய இயல்நெறி பிழையாது
          மலிவும் புலவியும் ஊடலும் உணர்வும்
          பிரிவொடு புணர்ந்தது கற்பெனப் படுமே
                            (தொல்.செய்யுளியல் 179)
என்று குறிப்பிடுகின்றார்.

தமிழர் பண்பாட்டில் உயர்ந்த நிலையில் இருப்பது  இல்லறமாகும். 'அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை' என துறவறத்தைக் காட்டிலும் இல்லறமே உயர்ந்ததாகப் போற்றப்படுகிறது. இல்லறத்தைப் பேணுகின்ற கணவனும் மனைவியும் ஒத்த அன்புடையவர்களாக இருத்தல் வேண்டும். மனைக்கு அழகென அமைவது தலைவனும் தலைவியும் தன்னுள் கொண்ட புரிதல். இது  அக வாழ்வு எனப்படும். ஆணும்,பெண்ணும் ஒருவரையொருவர் கண்டு, காதலித்து, மணம்புரிந்து, இல்லறம் நடத்துவதோடு இல்லறத்தின் பயனாக நுகர வேண்டிய இன்பங்களை நுகர்ந்து அறிவார்ந்த மக்களைப் பெற்று, அன்போடு சுற்றத்தாரை, விருந்தினரைப் பேணி, இறுதியாகப் புகழ் பெறுதலே ஆகும். இதனை மனதில் கொண்டே வள்ளுவரும் இல்லறவியலின் இறுதி அதிகாரமாகப் புகழ் என்னும் அதிகாரத்தை அமைத்தார்.

'ஈதல் இசைபடவாழ்தல்' இல்லறத்தின் பயன் என்பது  வள்ளுவர் கூற்று. தொல்காப்பியம் பொருளதிகாரத்தின் 190ஆம் பாடல்,
           காமம் சான்ற கடைக்கோட் காலை
           ஏமம் சான்ற மக்களொடு துவன்றி
           அறம்புரி சுற்றமொடு கிழவனும், கிழத்தியும்
           சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே  (கற்பியல் – 51)  
என்கிறது.  களவிலும், கற்பு வாழ்க்கையிலும் இல்லற இன்பமெல்லாம் நுகர்ந்து,  பெயரன் பெயர்த்திகள் பெற்று,  அவர்களுக்கு வேண்டிய சிறப்புக்களை எல்லாம் செய்தபின் கடைசிக்காலத்தில் தமக்குப் பாதுகாவலாக இருக்கும்  மக்களோடு அவர்களை விட்டு என்றும் பிரியாமல் சுற்றத்தாரும் சேர்ந்திருக்கும் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு அகவை முதிர்ந்த மனைக் கிழவனும் மனைக் கிழத்தியும் இப்படித்தான் வாழவேண்டும் என்று அனைவருக்கும் பயிற்றுவிக்கும் பாங்கோடு  உலகியலோடு ஒன்றாமல் தாமரை இலைத்தண்ணீர் போல் விலகியிருந்து வாழ்வதுதான் 'இறந்ததன் பயன்' என்கிறார் தொல்காப்பியர்.

இதிலிருந்து வீட்டில் மூத்தோர்கள் உடன் இருத்தல் வேண்டும் என்பதும்.  அவர்கள் தம் பட்டறிவால் நமக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்பதும் அறியலாம்.  கற்பு என்பதற்கு இல்லறவொழுக்கம் எனப்பொருள் கொண்டு வீட்டின்கண் மனையறம் புரிதலை பெண்களும், வினையறம் புரிதலை ஆடவரும் மேற்கொண்டு இல்லறம் சிறக்க வாழ்வோமாக.    

ஊடலும், கூடலும் சேர்ந்ததுதான் வாழ்க்கை.   பெண் ஊடுதல் பற்றிய செய்திகள் திருக்குறளின் கடைசியில் உள்ள புலவி,  புலவி நுணுக்கம், ஊடல் உவகை என்னும் மூன்று அதிகாரங்கள்   ஊடல் பற்றிய செய்திகளைக் கூறுகின்றன

களவு வாழ்க்கையின்போது இருவரும் கூடுவதற்குக் காதலி குறிப்பிட்ட இடத்துக்கு அவள் வரத் தவறியபோது காதலன் ஊடுவான். இந்த ஊடல் புலவி என்னும் போலிப் பிணக்காகவும் இருக்கும்.  கற்பு வாழ்க்கையின்போது தலைவனின் பரத்தமைப் பிரிவாகும் தன்னைத் தவிக்கவிட்டு பரத்தையிடம் இன்பம் துய்த்து வந்த தலைவனிடம் தலைவி சினம் கொண்டு ஊடல் கொள்வாள்.  

அப்போதெல்லாம் தலைவியின் தோழி பக்குவமாக எடுத்துரைத்து அவர்களைக் கூட்டிவைப்பாள்.    புலத்தலும் ஊடலும் ஆகிய இடத்தும் சொலத்தகு கிளவி தோழிக்கு உரிய (தொல்காப்பியம் கற்பியல் 16).   தோழியின் ஊடல் நீக்கமானது களவு வாழ்க்கையில் காதலைத்தொடரச் செய்யும், கற்பு வாழ்க்கையில் இல்லறத்தைச் சிறக்கச் செய்யும்.

கற்பு வாழ்க்கையில் தலைவனின் பரத்தை ஒழுக்கத்தைக் கண்டிக்கும் விதமாகத் தலைவி ஊடுவாள். திருமணத்துக்குப் பின்னர் கூடி வாழும்போது மனைவி தன் ஆவலைத் தணிக்காதபோது கணவன் ஊடுவான். ஆக,  இந்த மனப்பாங்கு ஆண்களிடமும்  இருப்பதைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.                                
 
          உணர்ப்புவரை இறப்பினும் செய்குறி பிழைப்பினும்
          புலத்தலும் ஊடலும் கிழவோற்கு உரிய
                               (தொல்காப்பியம் கற்பியல்)

தலைவன், தலைவிக்குள் ஏற்படும் ஊடலை நீக்கும் பொறுப்பு தோழிக்கே.   ஊடல்  தோழி தலைவனுக்காகப் பரிந்து பேசுவாள். இதைத்தொல்காப்பியம்,
          உணர்ப்பு வயின்வாரா ஊடலுற்றோள் வயின்                                          
          உணர்த்தல் வேண்டி கிழவோன் பால்நின்று                                          
           தான் வெகுண்டாக்கிய தகுதி. (தொல் கற்பு 148)
 
ஊடலைத்தணிக்கத் தலைவன் பல்வேறு முயற்சிகளைச் செய்வான்,  காலில் விழக்கூடத் தயங்க மாட்டான்.   இதைத் தொல்காப்பியர்,                                                                
          கொடுமை ஒழுக்கம் கோடல் வேண்டி                                                
          அடிமேல் விழுந்த கிழவனை (தொல் கற்பு 145)                                  
என்கிறார்.  

இப்படி நாயகி ஊடல் செய்யும்போது நாயகன் அவள் காலிலேயே போய்விழுவதாகச் சொல்வது கவி மரபு  ஊடல் – கூடலின் தத்துவார்த்தம்.  மனைவியிடம் தோற்பவன் வாழ்க்கையில் அபார வெற்றி பெறுவான்.
          ஊடலிற் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
          கூடலிற் காணப் படும்
இவ்வாறு இல்லறத்தில் திளைக்கும் கிழவனும் கிழத்தியும்
          நிம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழி
          வன்சொற் பொச்சாப்பு மடிமையொடு குடிமை
          இன்புறல் ஏழைமை மறப்போ டொப்புமை
          என்றிவை யின்மை யென்மனார் புலவர்
                               (தொல்.பொருள் மெய்ப்பாடு 274)
பிறப்பு முதலிய பத்துப்  பொருத்தங்களும் ஒத்துள்ள தலைவனும் தலைவியும் மனையறம் பேணி இருவரும் கூடி இன்பவாழ்வு வாழ்கின்ற போது தம்மிடையே வரக்கூடாப் பன்னிரண்டு தீய ஒழுக்கங்களை விட்டு  வாழ்பவர் மனையறம் காத்து மாநிலம் போற்ற வாழ்வர்.  
               
தொல்காப்பியத்தில்  புறம்
இன்பத்தை அடையப் பொருள் தேவை அந்தப் பொருளை அறத்தின் வழியே ஈட்ட வேண்டும் அதை  வழிபடு தெய்வம் நிற்புறம் காப்பப் பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து பொலிமின்!   (தொல்.பொருள்.செய்யுள்422) என்று தொல்காப்பியரும், அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள் என்று  திருவள்ளுவரும் குறிப்பிடுகின்றனர். முப்பாலில்   அறத்தையும் பொருளையும் எடுத்துக் கூறுவதே புறப்பொருள் இதைப்புறம் என்றும் கூறுவர்.

புறம் என்பது காதல் தவிர்ந்த ஏனைய பொருள்களைப் பற்றியது புறப்பொருள் என்பது வீரம், போர், தூது, வெற்றி, கொடை, நிலையாமை முதலியவற்றைக் கூறுவது ஆகும். ஒரு குறிப்பிட்ட அரசனையோ வள்ளலையோ குறுநில மன்னனையோ பெயரைச் சுட்டி அவனுடைய வீரம், வெற்றி, கொடை முதலியவற்றைப் பாடுவது புறப்பொருள் மரபு ஆகும்.  தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர்  “புறப்பொருளாவது மறஞ் செய்தலும் அறஞ் செய்தலும் ஆகலான் அவற்றாலாய பயன் பிறருக்குப் புலனாதலின் புறம்" என்றார். இவ்வாறன்றி ஒருவருக்கு அறிவுரை சொல்லுவது போலவோ யாரையும் சுட்டிக் கூறாமலோ புறப்பொருள் பாடல் அமைவதும் உண்டு.  

தொல்காப்பியம் குறிப்பிடும் புறத்திணைகள்  தொல்காப்பியம் அகமரபுகளை எடுத்துக் கூறியதோடு புறத்திணை மரபுகளையும் அடையாளப்படுத்துகிறது.   மக்களின் அக வாழ்வானது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை என்று 7 பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு இருந்தது. புறத்திணை என்பது பொதுவாழ்க்கை பாங்கைக் கூறுவது.  போருக்கு ஆயத்தமாகும் செயல்களையும், போரின்போது  நிகழும் நிகழ்வுகளையும், போருக்குப் பின்பு நடைபெறுவனவற்றையும் காட்சிப்படுத்துகிறது.  வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் ஆகிய ஏழு திணைகளும் அகத்திணைகளுக்குப் புறமாக அமைவதாகத் தொல்காப்பியம் சுட்டிக்காட்டியுள்ளது.

அகவாழ்வு, புறவாழ்வுடன் ஒன்றுடன் ஒன்று இணைந்தே விளங்கியதைக் காணமுடிகின்றது.   தொல்காப்பியர் புறத்திணை இயலின் முதல் நூற்பாவில்,                
          அகத்திணை மருங்கின் அரில்தப உணர்ந்தோர்
          புறத்திணை இலக்கணம் திறப்படக் கிளப்பின்
          வெட்சி தானே குறிஞ்சியது புறனே;
          உட்குவரத் தோன்றும் ஈர்ஏழ் துறைத்தே
என்பதன் மூலம் அகத்திணை இலக்கணத்தை முழுமையாக உணர்ந்தோர் மட்டுமே புறத்திணை இலக்கணத்தைச் சிறப்பாக அறிய இயலும் என்ற கருத்தினைக் கூறுகிறார்.

வீர உணர்விற்கு அளிக்கும் முக்கியத்துவம் குறைந்து வரும் இன்றைய இளம் தலைமுறையினருக்குத் தமிழ் சமுதாயத்தில் நிலவிய போர் மரபுகளைக் காட்சிப்படுத்தும் நோக்கத்தில் ஒவ்வொரு திணையிலும் எத்தனை துறைகள் காணப்படுகின்றன. அதில் எத்தகைய மரபுகள் பின்பற்றப்பட்டிருந்தன என்பதை இனி இங்கு அறிவோம்.

அறம் சார்ந்த வாழ்வு:                                          
இலக்கியம் அறம் சார்ந்ததாக இருந்தாக வேண்டும் என வலியுறுத்துகிறார் தொல்காப்பியர். அறம் சாராத நடைமுறைகள் உலக வழக்கிலிருந்தாலும் அவற்றை மரபு எனக்கொண்டு இலக்கியம் படைப்பது பழிக்குரியதாகும் எனத் திட்டவட்டமாகத் தொல்காப்பியர் அறிவுறுத்துகிறார்.
          அறக்கழிவு உடையன பொருட்பயன்  வழக்கென
          வழங்கலும் பழித்தது என்ப (பொருளியல் – 22).
புறத்திணைப் பாகுபாடு  ஐந்திணை எனப் பெறும்.   முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை போலவே, இப்புறத்திணைகளும் பூக்களின் பெயரைக் கொண்டு பெயர் பெற்றிருப்பதைக் காணலாம். 'பாடாண்' மட்டுமே பூப்பெயரைக் கொள்ளவில்லை.  

அகத்திணைக்குரிய குறிஞ்சி இங்கு வெட்சி என்னும் திணை ஒழுக்கத்தைத் தனக்குப் புறத்திணையாகக் கொள்ளும்.
•    முல்லைக்கு வஞ்சித் திணை புறத்திணையாகும்.
•    மருத ஒழுக்கத்திற்குப் புறத்திணையாவது உழிஞைத் திணையாகும்.
•    நெய்தலுக்குத் தும்பை என்பது புறத்திணையாகும்.
•    பாலை என்னும் நடுவுநிலைத் திணைக்குப் புறத்திணையாக வாகைத்திணை அமையும்.
•    பெருந்திணை என்னும் பொருந்தாக் காமப் பொருளுடைய அகப் புறத்திணைக்கு நிலையாமைப் பொருள் குறித்த காஞ்சித் திணை புறத்திணையாகும்.
•    கைக்கிளை என்னும் ஒரு தலைக் காமத்திற்குப் புறத்திணையாகப் பாடாண் திணை அமையும்.
இவ்வகத்திணைகள் ஏழும், புறத்திணைகள் ஏழும் ஒன்றிற்கொன்று தொடர்புடையனவாகக் கூறப் பெறுதல், தொல்காப்பியரின் நுண்மாண் நுழை புலத்தைக் காட்டுகின்றன.

அகப்பொருள் பாடல் போலவே புறப்பொருள் பாடல்களும் திணை, துறை அடிப்படையில் அமைந்துள்ளன. ஆனால் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் போன்ற இலக்கணங்கள் புறப்பொருளுக்கு இல்லை. புறப்பொருள் திணைகள் போரை அடிப்படையாகக் கொண்டவை. போர் செய்யச் செல்லும் அரசனும் படைகளும் போரிடும் முறைக்கு ஏற்ப வெவ்வேறு பூக்களை அணிந்து சென்று போரிடுவர். அவர்கள் அணிந்து செல்லும் பூக்களின் பெயர்களே திணைகளுக்குப் பெயர்களாக அமைந்துள்ளன.  

போர் நெறி:
சங்க காலச் சமுதாயத்தில் புறவாழ்க்கை பெரும்பாலும் வீரத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை அறிந்து கொள்ளலாம்,    
          பொய்யகல நாளும் புகழ்விளைத்தல் என்வியப்பாம்
          வையகம் போர்த்த வயங்கொலிநீர்---- கையகலக்
          கற்றோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு
          முற்றோன்றி மூத்த குடி.
இப்பாடலில் எங்கும் தமிழர் என்ற சொல் வரவே இல்லை.குடிமக்களின் நிலையை உரைப்பதே இப்பாடலின் நோக்கம். குடிமக்கள் என்றால் ஆண்,பெண் என்னும் இருபாலரையும் குறிக்கும்.   இந்தப்பாடலில் ஆண்மக்களின் வீரம் போற்றப்பட்டது. இன்னொரு பாடலில் பெண்மக்களின் வீரம் போற்றப்படுகிறது.  அந்தப்பாடல் இதுதான்
          யானை தாக்கினும் அரவுமேற் செலினும்
          நீல்நீற விசும்பின் வல்லேறு சிலைப்பினும்
          சூல்மகள் மாறா மறம்பூண் வாழ்க்கை உடையவளாக இருந்தாள்.  

இதைத்தான் தொல்காப்பியம் குடிநிலை என்று கூறுகிறது.  இப்பாடல் மூலம் ஆணும் பெண்ணும் நிகர் என்றே அறியலாம்.

மறத்திலும் அறம்:  
தமிழர்கள் தாங்கள் வாழ்ந்த வாழ்வில் மறக்குடியில் பிறந்தவர்கள். எனினும் அறம்போற்ற மறந்திலர் என்ற கருத்தினை நெட்டிமையார் பாடியுள்ளார்.  போர் செய்வதிலும் அறம்போற்றி வாழ்ந்த அறச்சிந்தனைகளை தொல்காப்பியத்தின் மூலம் அறியலாம்.      

ஓர் அரசன் மற்றொரு நாட்டின்மீது போர்தொடுக்க எண்ணுகிறான். அதற்காக எல்லையில் படைகளைக் குவிப்பான்.போர் தொடங்குவதற்கு முன் பகைநாட்டின் எல்லைப்புற ஊரினுள் சென்று   நாங்கள் உங்கள் நாட்டின் மீது படையெடுத்து வந்துள்ளோம். ஆகவே மாடுகளும்,  பசுபோல் சாதுவான மக்களுக்கு அறத்தை உரைக்கும் ஆன்றோர்களும், பெண்களும், நோயாளிகளும், முன்னோர்களுக்கு ஈமக்கடன் ஆற்றுவதற்கு உரிய பொன்னான மக்களைப் பெற்றெடுக்காதவர்களும், நாங்கள் விரைவாக விடும் அம்புகள் தாக்காதவாறு பாதுகாப்பான இடத்திற்குச் சென்று விடுங்கள் என்று முரசறைந்து அறிவிப்பர். இவற்றுள் சொல்லுவதை அறிந்து கொள்ளா முடியாத மாடுகளைத் தவிர மற்றவர்கள் மனிதர்கள்.  எனவே அந்த மாட்டுக் கூட்டங்களைப் பகைவர்க்குத் தெரியாமல் கவர்ந்து வந்து பாதுகாப்புச்செய்வர். இக்கருத்து புறநானூறு 9 ஆம்பாடலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது அப்பாடல்;
          ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,
          பெண்டிரும், பிணியுடையீரும் பேணித்
          தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
          பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
          எம் அம்பு கடிவிடுதும், நும்அரண சேர்மின்
என அறத்து ஆறு நுவலும் பூட்கை மறத்திலும் அறம் என்பது புறம்.

வெட்சித் திணை:
          வெட்சி தானே குறிஞ்சியது புறனே
          உட்குவரத் தோன்றும் ஈரேழ் துறைத்தே
                              (புறத்திணையியல்)  
இந்நூற்பாவால் வெட்சித்திணைக்குரிய இடத்தையும், துறையையும் வரையறுத்துக் கூறியுள்ளார் தொல்காப்பியர். பழைய காலத்தில் பகை அரசனிடம் போர்செய்ய நினைக்கும் ஒருவன் போரின் முதல் கட்டமாகப் பகை அரசனது பசுக் கூட்டங்களைக் கவர்ந்து செல்வான். இது வெட்சித்திணை எனப்படும். வெட்சி வீரன் வெட்சிப் பூச் சூடி,போருக்குச் செல்வான்.
          வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின்
          ஆதந்(து) ஓம்பல் மேவற்றாகும்.
                              (தொல்.பொருள் புறத். 1003).
அரசனால் ஏவப்பட்டு, போர்முனையில் காத்திருந்த வீரர்கள், போர் தொடுப்பதற்கு முன்னாலேயே அரசனின் கட்டளைக்கு ஏற்ப பகைவர் நாட்டில் சென்று பிறர் அறியாமல் ஆநிரைகளைக் கவர்ந்து கொண்டு வருதல் ஆகும். அவ்வாறு கவர்ந்து வந்த ஆநிரைகளுக்குப் போதிய தீவனம் அளித்துக் காப்பதும் கடமையாகக் கருதப்பட்டது.   ஆநிரை கவர்வோர் வெட்சிப் பூமாலை சூடியிருப்பர். ஆநிரை மீட்போர் கரந்தைப் பூ மாலை சூடியிருப்பர். ஆநிரை கவர்தலைப் போர் தொடங்கு முன் தன் கருத்தைப் பகைவர்க்கு அறிவிப்பது போலவும் கொள்ளலாம்.

தொல்காப்பியர் வெட்சித்திணைக்கு 14 துறைகள் கூறியுள்ளார். நிரை கவர்தலுக்கும் (வெட்சி), மீட்டலுக்கும் (கரந்தை) இத்துறைகள் பொதுவானவை.  வீரர்கள் பகைவர் நாட்டில் ஆநிரை கவரச் செல்லும்போது படையில் ஓசை எழுகின்றது. வீரர்களால் நற்சொல், நல் நிமித்தங்கள் பார்க்கப்பட்டது. ஒற்றர்களின் துணையினால் பகைவரின் நாட்டுச் சூழல் அறியப்பட்டது. வீரர்கள் ஆநிரைகளை எந்த வருத்தமும் ஏற்படாமல் ஊர்ப்புறத்தே கொண்டு சேர்த்தனர். வீரர்கள் வெற்றிக் கூத்தாடி மகிழ்ச்சியுடன் உணவு உண்டனர். போரில் உதவிய அனைவருக்கும் ஆநிரைகளை கொடையாகக் கொடுத்தனர். இது போன்ற பல செயல்களும் வெட்சிப் போரில் போது நடைபெற்றது. போர் செய்வதற்கு முன்பாக பல ஆயத்த செயல்களும், போரின் போது பல நிகழ்வுகளும் போர் நடைபெற்ற பின்விளைவுகளாகப் பல செயல்களும் மேற்கொண்டதை அறிய முடிகின்றது.  

வெட்சியில் கரந்தை வெட்சித் திணையில் கரந்தை என்ற பகுதியையும் தொல்காப்பியர் கூறுவார். கரந்தையை ஒரு தனித் திணையாகக் கொள்ளவில்லை.  வெட்சி வீரர்களின் குடிப்பெருமை கூறப்பட்டது வெற்றித் தெய்வமாகக் கருதப்படும் கொற்றவை குறித்தும் குறிப்பிடப்படுகின்றது. இதனை, ’வெற்றி வெல்போர்க் கொற்றவைச் சிறுவ‘   திருமுருகு.258-259
என்ற பாடல் வரி குறிப்பிடுவதன் மூலம் உறுதியாகின்றது.
 
வஞ்சித்திணை:
அரசன் தன்னுடைய நாட்டின் எல்லையை விரிவு படுத்துவதற்காகவும், தன்னை மதியாதான்  நாட்டைக் கைப்பற்றக் கருதியும்,   மண் மீதுள்ள விருப்பத்தின் காரணமாகவும் வேற்று நாட்டின் மீது படை எடுத்துச் செல்வது வஞ்சித்திணை ஆகும்.  இதற்குத் தொல்காப்பியர் 13 துறைகளை வகுத்துள்ளார் வஞ்சியாகிய புறத்திணை முல்லையாகிய அகத்திணைக்குப் புறமாகும்.
          வஞ்சி தானே முல்லையது புறனை
          எஞ்சா மண்நசை வேந்தனை வேந்தன்
          அஞ்சுதகத் தலைச்சென்று அடல்குறித்தன்றே
                              (தொல். பொருள்.64)
என்ற நூற்பா குறிப்பிடப்படுகின்றது.

வஞ்சித் திணையில் பகைவர் நாடு தீயிட்டு அழிக்கப்படுகிறது. வீரர்களுக்குப் படைக் கருவிகளை வழங்குதல். பகைவர்களை எதிர்த்து நின்று போர் செய்தல். வீரனின் பெருமையை எடுத்துக் கூறப்படுகின்றது. வீரர்களுக்குப் பெருஞ்சோறு அளிக்கப்படுகிறது. திறைப் பொருட்களைத் தோற்றவனிடம் இருந்து பெறுதல் போன்ற 13 துறைகள் குறிப்பிடப்படுகின்றன. படையெடுத்துச் செல்லும்போது படை இளைப்பாறவும் நீர் அருந்தி, உணவு சமைத்து உண்ணவும், நிழல் சூழ்ந்த இடம் தேவைப்படும். நிழல் சூழ்ந்த காடும், கார்காலத்தில் வேண்டுமளவு நீரும் தேவைப்படுவதால் முல்லைக்கு வஞ்சி புறத்திணையாயிற்று.  

உழிஞைத்திணை:
உழிஞைத் திணையானது மருதத்திணைக்குப் புறமாக அமைகின்றது. கோட்டைகளின் மதிலை உள்ளிருப்பவர்கள் காவல் காப்பதும் மதிலுக்கு வெளியில் இருப்பவர்கள் மதிலைத் தாக்க முற்படுவதும் உழிஞைத் திணை ஆகும்.
          உழிஞை தானே மருதத்துப் புறனே
          முழு முதல் அரணம் முற்றலும் கோடலும்
          அனைநெறி மரபிற்று ஆகும் என்ப
                              (புறத்திணையில், 8)
என்று தொல்காப்பியர்  அரண் என்பது இயற்கையான, மற்றும் செயற்கையான அரண்களாகும்.

உழிஞைத் திணை மருதத்திற்குப் புறமாதற்குரிய காரணம் வருமாறு வஞ்சியில் போரிட்டுத் தோற்ற வேந்தன், தன் நாடு சென்று அரண்மனைக்குள் புகுந்து தாளிட்டுக் கொண்டிருப்பான். போரிட்டு வென்ற வேந்தன் அவன் நாட்டில் புகுந்து இரவில் முற்றுகையிடுவான். போரிடும் காலம் விடியற்காலமாகும். தொல்காப்பியர் படையெடுத்து முற்றுகையிடுதல் (உழிஞை), உள்ளேயிருப்பவன் அதைத் தடுத்துக் காத்தல் (நொச்சி) இரண்டையுமே உழிஞையாகக் கொண்டு 12 துறைகள் வகுத்தார்.  வீரர்கள் மதிலின் புறத்தே தறுகியிருத்தல் பகை அரசனின் வருந்திய நிலையை எடுத்துக் கூறுதல் உழிஞை வீரர்களை ஒரு பொருட்டாக மதிக்காமல் நொச்சி வீரர்கள் மதிலைக் காத்தல் இவை போன்ற செயல்கள் குறிப்பிடப்படுகின்றன.

நொச்சித் திணையைத் தொல்காப்பியர் தனித்திணையாகக் கொள்ளவில்லை. உழிஞையில் இணைத்தே கூறுகிறார். கோட்டையின் உள்ளே இருந்து கொண்டு தன் மதில் அழிவுபடாமல் காத்தல் நொச்சித் திணையாகும். மதில் காப்போர் நொச்சிப் பூவைச் சூடியிருப்பர்.

தும்பைத்திணை:  
தும்பை என்னும் புறத்திணை நெய்தல் என்னும் அகத்திணைக்குப் புறமாகும். இருபெரும் வேந்தரும் ஒரு களத்தில் போரிடுவர். அதற்குக் களரும் மணலும் பரந்த நிலமே போரிடும் களமாக அமையும். அவ்வாறு போரிடுவதற்குப் போதிய இடம் கடலைச் சார்ந்த மணல் பகுதியாக இருப்பது சிறப்புடையது.   கதிரவன் மறையும் காலம் போர் முடியும் நேரமாகும். எனவே நெய்தலுக்கு உரிய எற்பாடு நேரமே தும்பைக்கும் உரியதாயிற்று.  
இதனைத் தொல்காப்பியரும்
          தும்பை தானே நெய்தலது புறனே ;
          மைந்து பொருளாக வந்த வேந்தனைச்
          சென்று தலை அழிக்கும் சிறப்பிற்று என்ப
                              (புறத்திணையில், 12)
என்று உரைப்பர். இத்திணை 12 துறைகளை உடையது.   போர் புரிவதையே தன் வலிமையாகக் கருதிய பகை அரசனின்  வலிமையை அடக்குவதாகும். இரு அரசர்களும் ஒரு போர்க்களத்தில் போர் புரிகின்றனர்.  இது 12 துறைகளை உடையது.

வாகைத்திணை:
போரில் வெற்றி பெற்ற அரசனைப் புகழ்ந்துபாடுதல் வாகைத்திணை எனப்படும். வெற்றி பெற்றவர்கள் வாகைப்பூவைச் சூடி வெற்றியைக் கொண்டாடுவார்கள்.
          வாகை தானே பாலையது புறனே
          தாவில் கொள்கைத் தத்தம் கூற்றைப்
          பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப
                              (புறத்திணையில், 15) கூறும்.

வாகை என்பது வெற்றியைக் குறிக்கும். வாகைத் திணை பாலை என்னும் அகத்திணையினது புறமாகும்.  

தன் பகை அரசனை வென்று வெற்றி பெறுதல் வாகைத்திணையாகும். வென்ற மன்னன் வாகைப்பூச் சூடி வருவான். வெற்றி பெற்றதும், அதைச் சிறப்பாகக் கொண்டாடுவதும் வாகைத் திணையின் பாற்படும். வாகையின் துறைகள் 18 ஆகும். அரசர்கள் மட்டுமன்றி மற்றவர்களும் அவரவர் துறையில் வெற்றி பெறுதலும் வாகையுள் அடங்கும்.    மக்கள் (வலியும் வருத்தமும் இல்லாமல் இயல்பாக ஒழுக்கத்தை கடைபிடிப்பவர்கள்), அறிவர் (சான்றோர்கள்), தாபதர் (துறவிகள்) ஆகியவர்கள் தம்முடைய செயல்களில் சிறந்து விளங்குவதையே வாழ்க்கைக் குறிக்கோளாகக் கடைப்பிடித்தார்கள். அத்தகையவர்களுக்கு ஏற்படும் சிறப்பும் வெற்றியும் வாகை என்று குறிப்பிடப்படுகின்றது.

இத்திணை 18 துறைகளை உடையது. வீரர்கள் கூதிர், வேனில் என்ற இரு பாசறைகளில் தங்கியிருத்தல். தேரின் பின்னால் மகளிர் குரவைக் கூத்தாடினர். வீரர்கள் வெற்றி பெறுவதற்காக வஞ்சினம் கூறிக் கொண்டனர். துறவு குறித்தும் எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாக அமையக்கூடிய காம ஆசையை நீக்கி பக்குவப்பட்ட மனப்பான்மையைக் குறிப்பிடுகின்றது. இவை போன்ற பல ஒழுக்கங்களும் விளக்கப்படுகின்றன.

பாடாண் திணை:
பாடாண் திணையானது கைக்கிளைக்குப் புறத்திணையாகும். கைக்கிளையாவது ஒரு நிலத்திற்கோ, ஒரு பொழுதுக்கோ உரியதாகாமல் எல்லா நிலத்திற்கும், எல்லாப் பொழுதுக்கும் உரிய ஒருதலைக் காமமாகும். அதுபோல இதுவும் ஒரு பாலுக்கு உரியது அன்று. ஒருவனை ஒருவன் ஏதேனும் காரணம் பற்றிப் பாராட்டி நிற்பது பாடாண் திணையாகும். வெட்சி முதல் வாகை ஈறாக உள்ள திணைகள் போர் தொடுப்போரும் எதிர்ப்போருமாகிய இருவருக்கும் உரியது; காஞ்சி யாவருக்கும் உரியது.  

ஆண்மகனின் அருஞ்செயல்களையும், ஒழுகலாறுகளையும் எடுத்துரைக்கின்றது.  அவ்வாறு இல்லாமல் பாடாண் திணை பாடப்படுபவர், பாடுபவர் என்னும் இருவருள் பாடுவோர் விருப்பம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிருத்தலின் கைக்கிளை போல இதுவும் ஒருவர் விருப்பமாயிற்று. இதனைத் தொல்காப்பியர்,
          பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே
          நாடுங் காலை நாலிரண்டுடைத்தே
                    (புறத்திணையில், 20)
எனக் கூறுவார்.  

வெற்றி பெற்ற அரசனின் வீரம், புகழ், கொடை முதலிய பண்புகளைப் புகழ்ந்து பாடுதல் பாடாண் திணையாகும்.  இது 8 வகையாகக் குறிப்பிடப்படுகின்றன. அரசனின் இயல்பு குறித்து எடுத்துக் கூறப்படுகின்றது. மற்றவர்களுக்குப் பொருட்களைக் கொடுத்தவனைப் புகழ்ந்தும் கொடுக்காதவனை இகழ்ந்தும் கூறப்படுகின்றது. அரசன் அந்தணர்களுக்குப் பசுவைத் தானமாகக் கொடுத்ததை விளக்குகின்றது. அரசனைக் காக்கும்படி வழிபாடு தெய்வத்தை வேண்டினர். இவை போன்ற பல செயல்களும் விளக்கப்படுகின்றன.

காஞ்சித்திணை:
காஞ்சி என்பது நிலையாமையைக் குறிக்கும். காஞ்சித் திணை அகத்திணையாகிய பெருந்திணைக்குப் புறத்திணையாகும். அது நன்று அல்லாத சிறப்பினை உடையது; மேலும் நிலைபேறில்லாத இவ்வுலகத்தைப் பற்றிய வழியினைக் கூறுவது ஆகும். நன்றல்லாத சிறப்பாவது செயலால் நன்றல்லாதது போல் தோன்றி, கொள்கையால் சிறந்திருத்தல். அன்பின் ஐந்திணைகளில் பெருந்திணையாகிய மடல் ஏறுதல் போல்வனவரின் அவற்றிற்குப் புறமாக ஒதுக்கப்படுதல் போல, வெட்சி முதலிய புறத்திணைகளில் நிலையாமை உணர்வு வெறுக்கப்பட்டு ஒதுக்கப்படுதலின், காஞ்சி பெருந்திணைப் புறமாயிற்று. இதனைத் தொல்காப்பியர்,
          காஞ்சி தானே பெருந்திணைப் புறனே
          பாங்கரும் சிறப்பின் பல்லாற் றானும்
          நில்லா உலகம் புல்லிய நெறித்தே.
                    (புறத்திணையில், 18)
எனக் கூறுகிறார்.

பல்வேறு நிலையாமைகள் பற்றிக் கூறும் பகுதிக்குத் தொல்காப்பியர் காஞ்சித் திணை எனப் பெயரிட்டிருக்க ஒருவன் வீடுபேறு அடைவதற்காக மூன்று நிலைகளிலும் அறம், பொருள், இன்பம் என்றும் உயிரும், உடலும், செல்வமும், இளமையும் ஆகியவற்றின் நிலையில்லாத தன்மையைச் சான்றோர்கள் குறிப்பிடுவது காஞ்சித் திணை ஆகும். இது 20 துறைகளை உடையது. சான்றோர்கள் கூற்றுவனின் செயலை அறிவுறுத்திக் கூறியதைக் குறிப்பிடுகின்றது. வாழ்க்கை நிலையில்லாததால் வீரன் விழுப்புண்ணைக் கிழித்துக் கொண்டு இறக்கும் செயலைக் குறிப்பிடுகின்றது. வீரனைப் பேய்கள், காவல் காக்கும் செயலை எடுத்துக் கூறுதல் இறந்தவர்களின் நல்லியல்புகள் குறித்துச் சுட்டப்படுகின்றது. இவை போன்ற பல செயல்கள் விளக்கமளிப்பதை அறிய முடிகின்றது

புறத்திணைகள் கூறும் சமூகச் செய்திகள்:
புறத்திணைகள் போர்ப் பிரிவுகளை விளக்குகின்றன. ஆநிரைகளைக் கவர்தல் தான் போருக்குத் தொடக்கமாக அமைகின்றது. ஆநிரை கவர்வோர் செயலை ஆநிரையை மீட்போர் மிகக் கடுமையாக எதிர்த்துப் போரிடுவர். பகைவன் நாட்டைக் கைப்பற்றவோ, அவ்வரசனின் மகளைப் பெண் கேட்டு, அவன் தர மறுக்கும்போதோ, போர் நடத்தப்பெறுதல் பெரும்பான்மை நிகழ்வாக இருக்கும். சில நேரங்களில் இகழ்ந்து பேசியதாலும் இகழ்ச்சிக்கு ஆட்பட்டவன் போர்தொடுத்தலும் நடைபெற்றுள்ளது. புறத்திணைகள் போர்ப் பிரிவுகளைக் கூறினாலும் அவற்றிற்குரிய துறைகள் போரின் சிறு சிறு நிகழ்வுகளைக் கூறுவன ஆகும்.  போருக்கு அடிப்படைக் காரணம் உலகப் பொருள்கள் மேல் ஆசையும், பெண்ணாசையுமே ஆகும். புறத்திணைகளில் ஒன்றான காஞ்சித் திணை உலக நிலையாமையை எடுத்துரைக்கிறது. வாழ்வில் ஏற்படும் பல்வேறு அனுபவங்களையும் இது எடுத்துக்கூறுகின்றது. ஆசைகளால் பயன் இல்லை என்கிறது இது. போர் தொடங்குவதிலிருந்து போர் முடிந்து வெற்றி பெற்றோ, தோல்வியுற்றோ வரும்வரை ஓர் ஒழுங்கு கடைப்பிடிக்கப்பட்டதால் தான் போர் நிகழ்விற்கும் ஓர் இலக்கணம் கூறப்பட்டுள்ளது.  

தொல்காப்பியர் ஆநிரை கவர்தல், மண் கவர்தல், கோட்டையைக் கவர்தல் ஆகிய போர்ச் செயல்களில் கவர்பவர், அதனை எதிர்ப்பவர் ஆகியோரின் செயல்களை முறையே வெட்சி, வஞ்சி, உழிஞை ஆகிய திணைகளில் விளக்குகிறார்.  

முடிவுரை:
தமிழ்ச் சமூகமானது காதலையும், வீரத்தையும் முக்கியமாகக் கருதியது. வீர உணர்வுடன் வாழ்வதே பெருமையாக எண்ணப்பட்டது. வீரர்கள் தம் வீரத்தை நிலைநாட்டி தங்களைப் பெருமைப் படுத்திக் கொள்வதற்காகப் பாடுபட்டனர். அத்தகைய தன்மைகளின் தொல்காப்பியம் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் ஆகிய ஏழு திணைகளை அடிப்படையாகக் கொண்டு புறத்திணை மரபுகளை எடுத்துக் கூறி தமிழர்கள் வீரத்திற்கு அளித்த சிறப்பினை நினைவூட்டுவதாக அமைகின்றது.


 
தொல்காப்பியச் செம்மல்
புலவர் ஆ. காளியப்பன்,க.மு,.கல்.மு.,
  —  தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்
கோயமுத்தூர் 641101.
அலைபேசி  9788552993 / 8610684232                                                            
Email: amuthank...@gmail.com
www tholkappiyam.org
pulavarkaliappan.blogspot.in                                              
Reply all
Reply to author
Forward
0 new messages