இப்பொழுது, புரிதல் = தெரிதல், விளங்குதல், உணர்தல், ஓர்தல், Underdtanding என்று மிகப் பரவலாக வழங்கும் சொல்லுக்கு “ஓர்தல்” என்ற வினைச்சொல்லும், ஓர்ப்பு என்னும் பெயர்ச்சொல்லும் இடைக்காலத்தே பரவலாகப் பயன்பட்டுள்ளன. ஓர்ப்பு என்னும் சொல்லை, ஓர்மை என்றும் பாவிக்கின்றனர்.
’அவன் செய்தியின் கனத்தை ஓர்ந்தான்.” = அவன் செய்திக்கனத்தைப் புரிந்துகொண்டான்/உணர்ந்துகொண்டான்/யோசனைசெய்தான்.
ஓர்ப்பு ‘understanding'
-------------------------
தீர்ப்பாரை யாமினி யெங்ஙனம் நாடுதும் அன்னைமீர்,
ஓர்ப்பாலிவ் வொண்ணுதல் உற்றநன் னோயிது தேறினோம்,
போர்ப்பாகு தான்செய்தன் றைவரை வெல்வித்த, மாயப்போர்த்
தேர்ப்பாக னார்க்கிவள் சிந்தை துழாய்த்திசைக் கின்றதே - நம்மாழ்வார் பாசுரம்
இறையனார் அகப்பொருள் - களவு:
“தலைமகன் குணம் நான்கு
தமியராதல் என்பது, தம் உணர்வினர் அல்லராதல். தம்
உணர்வினர் அல்லராதல் என்பது என்னோ எனின், தலைமகற்கு அறிவு,
நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி என்பன குணம்.
அறிவு என்னோ எனின்,
‘எப்பொரு ளெத்தன்மைத் தாயினு மப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு’ [குறள் - 355]
என்றாராகலின், எப்பொருளாயினும் அப்பொருட்கண் நின்று
அம்மெய்ம்மையை உணர்வது அறிவு.
நிறை என்பது என்னோ எனின், காப்பன காத்துக் கடிவன கடிந்து
ஒழுகும் ஒழுக்கம்.
ஓர்ப்பு என்பது ஒரு பொருளை ஆராய்ந்து உணர்தல் என்பது.
கடைப்பிடி என்பது கொண்டபொருள் மறவாமை.
இந்நான்கையும் தலைமகற்கு வேட்கையான் மீதூரப்பட்டுப், புனல்
ஓடுவழிப் புற்சாய்ந்தாற்போலச் சாய்ந்து கிடப்பது.
தலைமகள் குணம் நான்கு
இனித் தலைமகட்கு நாண், மடம், அச்சம், பயிர்ப்பு என்பன குணம்;”
ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை. - குறள்
ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. - குறள்
ஓர்த்தல் - understanding.பரிமேலழகர்: அளவைகளானும் பொருந்துமாற்றானும் தெளிய
ஆராய்ந்து (குறள் - 357).
மூன்று கடன்கழித்த பார்ப்பானும் ஓர்ந்து
முறைநிலை கோடா அரசுஞ் - சிறைநின்று
அலவலை இல்லாக் குடியும்இம் மூவர்
உலகம் எனப்படு வார். - திரிகடுகம்
ஓர்தல் என்ற சொல்லை இன்றைய “புரிதல்” என்ற பொருளில் திருப்புகழில் உள்ளதாகத் தெரிகிறது.
மதன குரு ஓராத அ(ன்)னையர் கொடு வசை பேச ... காம
வேதனையைப் புரிந்து கொள்ளாத தாய்மார்கள் கொடிய வசை
மொழிகளைப் பேசி நகையாடவும்,
ஓர்தல் = புரிதல் (understanding).
"போகியாய் இருந்து யிர்க்குப் போகத்தைப் புரிதல் ஓரார்
யோகியாய் யோக முத்தி உதவுதல் அதுவும் ஓரார்
வேகியா னாற்போற் செய்த வினையினை வீட்டல் ஓரார்
ஊகியா மூட ரெல்லாம் உம்பரின் ஒருவன் என்பர்."
- சிவஞானசித்தியார், 1. 2 - 22
ஓரார் = உணரார். விளங்கிக்கொள்ளார். = those who do not understand
ஒல்லுமாறு இயலுமேல், உடன்பிறப்பின் பயன் ஓரான்;
கொல்லுமால், அவன் இவனை; குறிக்கோடி, கோடாதாய்! - கம்பர்
அழப்போகான், அஞ்சான், அலறினால் கேளான்,
எழப்போகான் ஈடு அற்றார் என்றும் – தொழப் போகான்,
என்னே இக் காலன்!ஈடு ஓரான், தவம் முயலான்,
கொன்னே யிருத்தல் குறை - ஏலாதி
20-ம் நூற்றாண்டில் முக்கியமான சமூகப் பிரச்சினை பற்றி எழுந்த கவிதையை
மகாகவி ருத்ரமூர்த்தி எழுதினார். இலங்கையில் ஓர்தல், ஓராமை வழக்கில்
உள்ளதைப் புலப்படுத்தும் கவிதை:
”"நில்!" என்றான் ஓரான்
"நிறுத்து!" என்றான் மற்றோரான்.
"புல்" என்றான் ஓராள்
"புலை" என்றான் இன்னோராள்
"சொல்" என்றான் ஓராள்
"கொளுத்து" என்றான் வேறோராள்.
கல்லொன்று வீழ்ந்து
கழுத்தொன்று வெட்டுண்டு
பல்லோடு உதடுபறந்து சிதறுண்டு
சில்லென்று செந்நீர் தெறிந்து
நிலம் சிவந்து
மல் லொன்று நேர்ந்து
மனிசர் கொலையுண்டார்.
ஊரெல்லாம் கூடி இழுக்க உகந்த தேர்
வேர் கொண்டதுபோல் வெடுக்கென்று நின்றுவிடப்
பாரெல்லாம் அன்று படைத்தளித்த அன்னையோ
உட்கார்ந் திருந்துவிட்டாள் ஊமையாத் தான்பெற்ற
மக்களுடைய மதத்தினைக் கண்டபடி.
முந்த நாள் வான முழுநிலவைத் தொட்டுவிட்டு
வந்தவனின் சுற்றம்
அதோ மண்ணிற் புரள்கிறது! ”
Memorandum of Understanding - ஓர்மை ஒப்பந்தம், ஓர்ப்பொந்தம்.
நா. கணேசன்