தேடினாலும் கிடைக்காத திரவியம்! — முனைவர் ஔவை அருள்

29 views
Skip to first unread message

தேமொழி

unread,
Sep 27, 2025, 12:49:32 AM (5 days ago) Sep 27
to மின்தமிழ்
விளையும் பயிர் முளையிலேயே தெரியும்' எனும் தமிழ் முதுமொழிக்கு இலக்கணமாக வாழ்ந்தவர்; சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றவர்; தமிழிலக்கியங்கள் மீது மாளாக் காதல் கொண்டவர்; இதழியல் மற்றும் பதிப்புத்துறையில் ஆழங்கண்டவர்;  அரசு நிர்வாகத்தில் துணை இயக்குநர் முதல் அரசு தலைமைச் செயலாளர் வரை எட்ட முடியாத உச்சத்தை எட்டியவர் என்ற பல்திறப் பன்முகங்களைக் கொண்ட தகுதிச் சான்றோர் தான் கே.திரவியம்.

thiraviyam2.jpeg
தூத்துக்குடியில் 07.07.1925 அன்று காந்திமதிநாதன் -சீதாலட்சுமி இணையருக்குத் திருமகனாகப் பிறந்தார் திரவியம்.  நாட்டை மீட்பதற்காக மகாத்மா காந்தியின் அறைகூவலைக் கேட்டு, தேசப்பணியாற்ற விழைந்ததால், உயர் கல்வியைத் தொடர இயலவில்லை.  இருப்பினும், சுதந்திரத்துக்குப் பின்னர், ஒரு சிறப்பு அரசாணை வாயிலாக, தனித்தேர்வராக இளங்கலை பட்டப்படிப்புத் தேர்வெழுத திரவியம் அனுமதிக்கப்பட்டார்.

"வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின் "செய் அல்லது செத்து மடி' என்ற முழக்கம் விடுதலைப் போராட்டத்தில் அவரைத் தீவிரமாகப் பங்கேற்கத் தூண்டியது.  இதனால், பல்வேறு காலகட்டங்களில் அவர் கைது செய்யப்பட்டு, அலிப்பூர், வேலூர் மற்றும் தஞ்சை சிறைகளில் அடைக்கப்பட்டார்.  தென்னக காங்கிரஸ் தலைவர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வதற்கு அருமையான வாய்ப்பாக அது அமைந்தது.

1945-ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலையான பின்னர், தினமணி நாளிதழில் உதவி ஆசிரியராகவும், அதன் பின்னர் காமராசரின் ஊக்குவிப்பால் தொடங்கப்பட்ட, டி.எஸ்.சொக்கலிங்கம் ஆசிரியராகத் திகழ்ந்த, "நியூ டைம்ஸ்' என்ற ஆங்கில தேசிய நாளிதழின் இணை ஆசிரியராகவும் பணியாற்றினார்.

ஓர் உண்மையான இந்தியராக இருப்பதற்கு நீங்கள் முதலில் ஓர் உண்மையான தமிழராக இருக்க வேண்டும் என்றும், அதேபோல், உண்மையான தமிழராக இருக்க வேண்டுமெனில், நீங்கள் முதலில் உண்மையான இந்தியராக இருக்க வேண்டும் என்றும் அடிக்கடி கூறுவார். லீலா என்பவரை மணந்து, விஜயலட்சுமி மற்றும் அருட்செல்வி என்ற இரண்டு புதல்விகளைப் பெற்றார்.

1946-47-இல், பெருந்தலைவர் காமராசரின் ஆலோசனைப்படி, அப்போதைய சென்னை மாகாண அரசின் மெட்ராஸ் செய்தி (மெட்ராஸ் இன்ஃபர்மேஷன்) என்ற அரசிதழின் பதிப்பு மற்றும் வெளியீட்டுப் பணிக்காக திரவியம் பணியமர்த்தப்பட்டார்.

15.08.1947 அன்று, ஓமந்தூர் பி.இராமசாமி ரெட்டியார் சென்னைக் கோட்டையில் சுதந்திரக் கொடியை ஏற்றிய போது, அப்போது வயதில் மிகவும் இளைய அரசிதழ் பதிவு பெற்ற அலுவலராக தலைமைச் செயலகத்தில் பணியாற்றிய திரவியம், இளைய தலைமுறை நிர்வாகிகளுக்கான மேடையில் அவர்களின் பிரதிநிதியாகப் பேசுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது உண்மையிலேயே அவருக்குக் கிடைத்த ஒரு சிறப்பு அங்கீகாரமாகும்.

பின்னர் அவர் செய்தித் துறை துணை இயக்குநராகவும், பக்தவத்சலம் முதல்வராக இருந்தபோது செய்தித் துறையின் இயக்குநராகவும் பணியாற்றினார். பின்னர், அவர் மாநில அரசின் பல்வேறு அமைச்சரவைகளில், பல்வேறு அரசு அலுவலகங்களில் பணியாற்றினார்.  1958-ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றினார், அரசுப் பணியில் அவரது அர்ப்பணிப்பால் அவர் பணியாற்றிய துறைகள் விரைவான வளர்ச்சி பெற்றன.  வேளாண்மை, கல்வி மற்றும் உணவுத் துறையின் செயலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தலைவர், வருவாய் வாரியத்தின் உறுப்பினர் மற்றும் இரண்டாம் செயலாளர் எனப் பல்வேறு துறைகளில் தனக்கெனத் தனி முத்திரை பதித்தார். இவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்ததுபோல், 1981- ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் ஆனார்.

இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் அவர் தமிழ்நாட்டுக்கு வந்த போதெல்லாம் அவருக்கு மொழிபெயர்ப்பாளராகச் செயல்பட்டார்.  ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டின்போது பிரதமர் இந்திரா காந்தி நிறைவுரை ஆற்றிய போது உரைபெயர்ப்பாளராக அவர் இருந்த காலத்தில் அவருடன் நெருக்கமாகப் பணியாற்றும் வாய்ப்பு என் தந்தையாருக்கு (ஒளவை நடராஜன்) கிடைக்கப் பெற்றது.

உயர் பதவிகளை வகித்த போதிலும், எளிமை மற்றும் அன்பின் உறைவிடமாகத் திரவியம் திகழ்ந்தார். மருத்துவர் கே.எம்.செரியன் இதயநோய் மருத்துவமனையை நிறுவுவதற்கு நான்கு ஏக்கர் நிலத்தை ஒதுக்கியதும், சத்துணவுத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதும் அவரின் சிறந்த நிர்வாகத் திறனுக்குச் சான்று பகர்கின்றன.  இவ்வாறு பல்வேறு துறைகளில் தடம் பதித்த தனிப்பெரும் தகைமையாளர் 13.06.1983 அன்று காலமானார்.

இப்புவியில் தங்கள் பெயருக்கு விளக்கமாக வாழ்பவர்கள் வெகு சிலரே.  வள்ளுவரின் குறளுக்கு இலக்கணமாகப் புகழுடன் தோன்றிய திரவியத்துக்கு அப்பெயர் சாலப் பொருத்தமாகவே அமைந்துள்ளது.

சுதந்திரப் போராட்ட வீரரும், மெய்யியல் அறிஞரும் பலரின் வாழ்க்கையை மாற்றிய திறமையான நிர்வாகியுமான திரவியத்துக்கு தமிழ்நாடே கடன்பட்டிருக்கிறது. திரவியம் எழுதிய "தேசியம் வளர்த்த தமிழ்" என்னுடைய கல்லூரிப் படிப்பின்போது ஒரு பாடமாக அமைந்ததை எண்ணி மகிழ்கிறேன்.


thiraviyam.jpeg


நன்றி :  தினமணி - நடுபக்கக் கட்டுரை 
25.9.25 வியாழக்கிழமை   பக்கம் 4

Dr. Chandra Bose

unread,
Sep 28, 2025, 1:59:21 AM (4 days ago) Sep 28
to mint...@googlegroups.com

மிகச் சிறப்பான கட்டுரையை அளித்து தமிழகத்திற்குப் பல ஆக்க பூர்வமான திட்டங்களைத் தந்த திரு கா.திரவியம் அவர்களை நினைவு படுத்தியுள்ளீர்கள், திரு முனைவர் அருள். 

நான் மாணவராக இருந்த போது பெரியாரின் அணுக்க உதவியாளராகச் செயல்பட்ட திரு தவமணி ராஜன் மூலமாக திரு கா.திரவியம் அவர்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டேன். அவரை ஒரு பேராசிரியராகவே நான் மதிப்பு கொண்டிருந்தேன். ஜெயகாந்தனின் கதைகளை மொழி பெயர்த்து பழனியப்பா பிரதர்ஸ் (கோனார் நோட்ஸ் புகழ்) நிறுவனம் வழியாக நூலாக வெளியிட்டார். மிகச் சிறப்பாக இருந்த ஒரு மொழி பெயர்ப்பு. அது பற்றி அவரிடம் கூறியபோது, “நீங்களும் இது போலத் தமிழில் சிறப்பான படைப்புகளை மொழி பெயர்க்க வேண்டும்” எனக் கூறினார். 

மதுரைப் பல்கலையில் என் பேராசிரியர் டாக்டர் வி.சச்சிதானந்தன் அவரை ஒரு சிறப்புச் சொற்பொழிவாற்ற அழைத்த போது டி.எஸ்.எலியட் குறித்துத் தமிழில் அழகாகவும் சிறப்பாகவும் உரை தந்தார். நான் திரு திரவியம் குறித்து சிறப்பாகப் பேசி நன்றி உரையாற்றினேன். தொடர்ந்து என்னைக் கவனித்து வந்தார்.  என்னை கும்பகோணம் கல்லூரியில் பணியாற்றுமாறு ஏற்பாடு செய்தார். பகுத்தறிவாளர் மன்றத்தின் மாணவர் பிரிவின் செயலாளராக நான் செயல்பட்டு வந்த நேரம் அது.  அவரை அடிக்கடி சந்திக்கும்படி சில வேலைகளைச் செய்து கொடுத்தேன். மக்கள் அனைவரும் எளிதாக அணுகும் வகையில் சிறப்பான செயலாளராகப் பணியாற்றினார்.  நான் எளிதில் மறக்க முடியாத என் முதல் ஆசிரியர் அவர்தான். 

மிகச் சிறப்பான கட்டுரையைத் தந்த முனைவர் அருள், இதன் மூலம் தமிழக மக்களின் சார்பாக அவர் வாழ்வினைப் பதிவிட்டுள்ளார். மிக்க நன்றி அய்யா.

மிக்க அன்புடன்
பெ.சந்திர போஸ்
சென்னை.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/aa860b76-0866-4289-8ba1-615a93162628n%40googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages