![[Untitled-1+copy.jpg]](https://4.bp.blogspot.com/_fvNvMjsJ6Ow/Sj4to0ColnI/AAAAAAAAAy4/deVnEitFr3A/s1600/Untitled-1%2Bcopy.jpg)
ஓடும்நதி........!
www.odumnathi.blogspot.com
♥ "இலங்கைத் தமிழர் வரலாறு பாகம் 1,2,3,4,5 " -தினமணியில் தொடர் ♥
http://odumnathi.blogspot.com/2009_06_01_archive.html
http://odumnathi.blogspot.com/2009_06_04_archive.html
http://odumnathi.blogspot.com/2009_06_07_archive.html
புதிய பார்வையில் இலங்கையின் வரலாறு! - "ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு'

இலங்கைத்
தமிழர் போராட்டம் குறித்தும், ஈழம் குறித்தும், அங்குள்ள மக்களின்
எதிர்காலம் குறித்தும் ஆதியோடந்தமாக கட்டுரைத் தொடர் வெளியிட வேண்டும்
என்கிற எண்ணம் கடந்த ஆறு மாதமாகவே "தினமணி' ஆசிரியர் குழுவுக்கு இருந்து
வருகிறது. இப்படி ஒரு தொடரை எழுதுவதற்குத் தனக்கு எந்தவித விருப்பு
வெறுப்போ, அரசியல் முலாமோ இல்லாத ஒரு பத்திரிகையாளர்தான் பொருத்தமாக
இருப்பார் என்பதும் எங்கள் தேர்ந்த முடிவு.
அதற்கு 1985-ஆம்
ஆண்டிலேயே "இலங்கைத் தமிழர் போராட்ட வரலாறு' என்ற புத்தகத்தை வெளியிட்ட
மூத்த பத்திரிகையாளர் பாவை சந்திரனைவிட பொருத்தமான ஒருவர் இருக்க முடியாது
என்பது எங்கள் ஆசிரியர் குழுவின் ஒருமித்த கருத்து. இனி, பாவை சந்திரன்
தொடர்கிறார்.
-ஆசிரியர்
ஈழத் தமிழர் எனும் இலங்கைத்
தமிழர்களும் உலக அளவில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, மலேசியா,
சிங்கப்பூர், யாங்கூன் என்கிற பர்மா, தாய்லாந்து, மோரிஷஸ், தென்
ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வசித்து வரும் தமிழர்களும்
ஒன்றல்ல என்ற உண்மைகூட நம்மில் பலர் புரியாமல் விவாதம் செய்து
வருகின்றனர். மேலே குறிப்பிட்டவர்களைப் போலக் கடந்த இரண்டு நூற்றாண்டு
காலத்தில் வேலைக்காகவும் வயிற்றுப் பிழைப்புக்காகவும் இலங்கைக்குப் போய்
அங்கே குடியேறியவர்கள் அல்ல ஈழத் தமிழர்கள்.
அவர்கள் அந்தத் தீவின்
பூர்வ குடியினர். மண்ணின் மைந்தர்கள். இந்நிலையில் இலங்கைத் தமிழர்
என்பவர் அந்நாட்டையே பூர்வீகமாக கொண்டவர் என்ற உண்மையை எடுத்துரைக்க
வேண்டிய அவசியம் இருக்கிறது.
பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா -
இல்லையா என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கிற நிலையில் அவர் இல்லாத ஈழமும்,
ஈழமக்களும் இனி பெறப்போவது என்ன என்பதைவிட, அவர்கள் எதையெல்லாம்
இழந்தார்கள் என்று அறிவது அவசியம்.
விடுதலைப்புலிகளாகட்டும்
இன்னபிற அமைப்புகளாகட்டும் ஆயுதம் ஏந்தவேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது
என்பது குறித்தும் அறிய வேண்டியது அவசியமாகிறது.
அதேபோன்று
இந்தியாவின் பார்வை மற்றும் பங்களிப்பு, தமிழகத் தலைவர்களின் பார்வை
மற்றும் பங்களிப்பு, உலக நாடுகளின் பார்வை மற்றும் அதன் பங்களிப்பு
குறித்தும், இலங்கைக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் அளித்த உதவிகள்
குறித்தும் அலசவேண்டியதும் அவசியமாகிறது.
இன்று, இலங்கை வரலாற்று
ஏடுகளைப் புரட்டுபவர்கள் யாராக இருந்தாலும், உண்மைக்கு மிக நெருக்கமாக
இருக்க வேண்டும் என்று அவர்கள் கருதுவார்களேயானால், அவர்கள், இதுவரை
சொல்லப்பட்டிருக்கும் இலங்கை வரலாற்றை ஒதுக்கிவிட்டு, புதிய உண்மைகளின்
அடிப்படையில், புதிய பார்வையுடன் இலங்கை வரலாற்றை அணுகவேண்டியது
அவசியமாகும்.
இதுவரை சொல்லப்பட்ட இலங்கைத் தீவின் வரலாறு,
கற்பனையின் அடித்தளம் மீது கட்டப்பட்ட இலக்கிய ஆதாரங்களைக் கொண்டு
எழுதப்பட்ட மாய வரலாறு என்பதற்கான ஆதாரங்கள் நிறையவே கிடைத்துள்ளன. இன்று
பல்வேறு ஆராய்ச்சியாளர்களின் கடுமையான உழைப்பின் மூலம் உண்மைகள் வெளிவரத்
தலைப்பட்டிருக்கின்றன. எதிர்காலத்தில் இன்னும் அதிகமான புதிய உண்மைகள்
கிடைக்கலாம்.
மகாபாரதத்தையும், ராமாயணத்தையும் மட்டுமே துணையாகக்
கொண்டு இந்தியாவின் வரலாற்றைக் கூறுவது எப்படி உண்மைக்குப் புறம்பாக
இருக்குமோ, அதுபோலத்தான் சிங்களவரின் இதிகாசமான மகா வம்சத்தை மட்டும்
வைத்துக்கொண்டு இலங்கை வரலாற்றை எழுதுவது என்பது!
அப்படியென்றால்
உண்மையான வரலாற்றை எந்த அடிப்படையில் எழுதுவது அல்லது பார்ப்பது என்ற
நியாயமான கேள்வி எழுகிறது. உண்மையான வரலாறு என்பது ஆதாரபூர்வமான
உண்மைகளையும், விஞ்ஞான ரீதியான பகுப்பாய்வுகளையும் கொண்டு முடிவுக்கு
வரவேண்டிய ஒன்றாகும்.
இலங்கை இன்றிருக்கும் ரணகள சூழலில், இனவெறித்
தாக்குதல்கள் அத்துமீறி நடக்கும் அந்த குட்டித்தீவின் வரலாற்றுப்
பின்னணியை அறிவது, இலங்கைத் தமிழர்களுக்காக மட்டுமன்றி, ஒடுக்கப்பட்ட
மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அவர்களுக்காகக் கண்ணீர் சிந்தும்
ஜனநாயக உணர்வுகொண்ட ஒவ்வொருவரின் கடமையாகிறது.
அந்தக்
கடமையுணர்வின்பேரில் நிகழ்ந்த தேடல்களின் விளைவே இத்தொடர். இஃது
இலங்கையின் வரலாற்று நூல் மட்டுமல்ல; மாறாகத் தமிழர்களின் போராட்ட வரலாறு,
தமிழர்களின் போராட்ட வரலாறோ இலங்கையின் வரலாற்றோடு பின்னிப்
பிணைந்திருக்கிறது.
எனவேதான், சிங்களவரைவிடத் தமிழர்களுக்கு
இலங்கையில் எந்தவிதமான ஆதிபத்திய உரிமைகள் உண்டு, அவர்களது தொன்மையான
வரலாறுதான் என்னவென்று அறிந்தோமானால் அரையும் குறையுமான விமர்சனத்திற்கு
ஆளாக வழியிருக்காது.
இலங்கையில் இப்படியொரு நிலைமை எதனால்
ஏற்பட்டது? ஏன் ஏற்பட்டது? இலங்கையில் பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம்
பெறுவதற்கு முன்னும் பின்னுமாக இருந்த நிலைமை என்ன? இனரீதியாகவும்,
மதரீதியாகவும் சட்டவடிவிலும் தமிழர்கள் எப்படியெல்லாம்
நசுக்கப்பட்டார்கள்? என்ற கேள்விகளைக் கேட்டுக்கொண்டு அதற்கான விடையைத்
தேட...
பல நூல்களை ஆராய முயன்றபோது, எளிதாகக் கிடைத்த Story of
Ceylon, Ancient Ceylon போன்ற நூல்களிலும் மற்றும் சிங்களவர் பற்றிய பல
நூல்களிலும் சிங்கள புத்தபிக்குகளின் ஒருதலைப்பட்சமான கருத்துக்களே
மிகுதியாக இடம் பெற்றிருக்கின்ற என்பதை அறிய முடிகிறது. அந்த நூல்களின்
ஆசிரியர்கள் மிகுந்த சிரத்தையுடன் சிங்கள மத குருமார்களுக்கே நன்றி
தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.
சிங்களவ புத்த குருமார்களும்
வரலாற்றில் தங்கள் மதமும், இனமும், கலாசாரமும் பழுதுபடாமல் இருக்க
வேண்டும்; தமிழனும், அவனது கலாசாரமும் வீழ்த்தப்பட வேண்டும் - என்ற
நோக்கத்திலேயே தகவல் அளித்திருக்கின்றனர் என்பதும் புலனாகிறது.
இலங்கையில்
நடைபெறும் இனமோதல்கள் பற்றி உலகப் பத்திரிகைகளில் மாறுபட்ட செய்திகள்
வெளியானதால் உலக கிறிஸ்தவ ஆலயங்கள் கழகம் (Council of Churches) சார்பில்
அதன் ஆசியக் கிளையின் பிரதிநிதிகள் இலங்கை சென்று அங்கு நடைபெறும்
கொடுமைகளை நேரடியாகப் பார்த்து மிக விரிவான அறிக்கையொன்றை (1985-ல்)
வெளியிட்டனர்.
அவ்வறிக்கை இத்தொடருக்குப் பேருதவியாக அமைந்தது. அது
போன்றே "இண்டர்நேஷனல் கமிஷன் ஆஃப் ஜூரிஸ்ட்' அமைப்பு வெளியிட்ட "எத்னிக்
கான்ஃபிளிக்ட் அன்ட் வயலன்ஸ் இன் ஸ்ரீலங்கா' அறிக்கையிலிருந்தும்
உண்மைக்கு நெருக்கமான சில செய்திகளைக் கையாண்டிருக்கிறேன்.
நடுநிலை நோக்கோடு, சிங்கள அறிஞர்களே ஒத்துக்கொண்ட தகவல்களை ஆதாரமாகக் கொண்டே இத்தொடர் தொடுக்கப்பட்டுள்ளது.
நண்பர்
ஓவியர் சந்தானம் ஒருமுறை சொன்னார்: "சாலையில் போய்க் கொண்டிருக்கிறோம்.
வயதான மூதாட்டி வாகனம் ஒன்றில் அடிபட்டு வீழ்ந்து விடுகிறார். கூட்டத்தை
விலக்கிக்கொண்டு மூதாட்டியைப் பார்க்கிறோம். அவளைக் கண்டு பரிதாபப்பட்டு
நம்மால் முடிந்த உதவியைச் செய்கிறோம்.
இது மனித சுபாவம். ஆனால்
அடிபட்டு விழுந்த மூதாட்டி நமது தாயாக இருக்கும் பட்சத்தில் நம் உடம்பே
ஆடிப்போய்விடும்; ஐயோ அம்மா உனக்கா இப்படி என்று சுற்றுப்புறச் சூழல்
மறந்து வீரிடுவோம்'. இது மனித சுபாவம். அதுபோன்று ஈழமக்கள் படும் துயரைக்
கருதவேண்டும்.
உலகின் ஏதோவொரு மூலையில் பெரும்பான்மை இனமக்கள்,
சிறுபான்மையோர் பேரில் நடத்தும் கொடுமைகளைக் கேட்டு வேதனையுறுகிறோம்.
நம்மால் முடிந்தவரை விமர்சித்துத் தீர்க்கிறோம். மனிதாபிமான
உணர்வுள்ளவர்கள் செய்கிற வேலை இது.
ஆனால் நமது நாட்டுக்கு
அண்மையில் சற்று ஏறக்குறைய இருபதாவது மைலில் இலங்கையைப் பூர்வீக நாடாகக்
கொண்ட நம் சகோதரத் தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள். பெண்கள்
கற்பழிக்கப்படுகிறார்கள். சிறார்கள் தரையில் வீசிக் கொல்லப்படுகிறார்கள்.
அவர்களின் உடைமைகள் சூறையாடப்பட்டுத் தீக்கிரையாகின்றன.
பிள்ளைத்தாச்சியானால் அவளது வயிற்றைக் கிழித்து "தமிழ்ச் சிசுவா தரையிலடி!' என்று சிசுவதை செய்யப்படுகிறது.
இதையெல்லாம்
பத்திரிகைகளில் படித்தும், வானொலியில் கேட்டும் மானமுள்ள தமிழனால்
எப்படிச் சும்மா இருக்க முடியும்? அதுவும் படைப்புத் துறை சம்பந்தப்பட்ட
பத்திரிகையாளன், எங்கோ எதுவோ நடக்கிறது என்று வாளாவிருந்துவிட முடியுமா?
இந்தப்
பிரச்னையை எல்லாரும் புரிந்து கொள்ளும் அளவுக்கு உண்மை என்னவென்று
விளக்கப்படவில்லையா? ஆம் என்றால் இஃது ஆராய்ச்சிக்குரிய விஷயம்தானோ!
ஆகவேதான் "ஈழத்தமிழர் போராட்ட வரலாறு' என்ற இத்தொடர்
தொகுக்கப்பட்டிருக்கிறது.
இலங்கையின் முழுமையான வரலாறாக
முதன்முதலாகத் தமிழில் நானறிந்தவரை தொகுக்கப்பட்ட தகவல்களில் தவறு
ஏதுமிருக்க வாய்ப்பில்லை. மேலும் இத் தொடரின் சில தலைப்புகளில் வெளியாகும்
விஷயங்களில் "கூறியது கூறல்' இருக்கலாம். ஒரு விஷயத்தைத் திரும்பத்
திரும்பக் கூறினால் மனதில் பதியும்தானே?
http://dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=67582&SectionID=133&MainSectionID=0&SEO=&Title=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81!+-+%22%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81
http://odumnathi.blogspot.com/2009_06_01_archive.html


இலங்கைத்தீவு,
இந்தியாவுக்குத் தென்கிழக்கில் பூமத்திய ரேகைக்கு ஐந்தாவது, ஒன்பதாவது
அட்சக்கோடுகள் வரையிலும், சுமார் 79 டிகிரி கிழக்கு தீர்க்க
ரேகையிலிருந்து 82 டிகிரி கிழக்குத் தீர்க்க ரேகை வரையிலும் பரவியுள்ளது.
இத்தீவின் தென், வட பகுதி தாழ்ந்தும், மத்தியப்பகுதி எட்டாயிரம் அடி
வரையில் உயர்ந்த மலைகளைக் கொண்டும் அமைந்திருக்கிறது. இலங்கைக்கும்
இந்தியாவுக்குமுள்ள தூரம், உறுதிமிக்க மன இயல்பு கொண்டவர்களால்
நீந்தியும், நடந்தும் கடக்கக் கூடியதாக இருக்கிறது.
இத்தீவில்
தற்போது சிங்களமொழி பேசும் புத்தர்கள், கிறிஸ்தவர்கள்,
பெரும்பான்மையாகவும், தமிழ்மொழி பேசும் சைவ இந்துக்கள், முஸ்ஸிம்கள்,
கிறிஸ்தவர்கள் முதலியோர் சிறுபான்மையாகவும் வசிக்கிறார்கள். மொத்தத்தில்
இருவேறு கலாசார மரபுகொண்ட இனங்களாகச் சிங்கள இனமும், தமிழ் இனமும்
இருக்கிறது. பெரும்பான்மை இனம் என்கிற காரணத்தினால் நாட்டை ஆளும் பொறுப்பை
சிங்களவர் எடுத்துக் கொண்டனர்.
பெரும்பான்மை இனமாகக் கருதப்படுகிற
சிங்களவரின் வரலாறு என்பது மகாவம்சம் என்னும் புத்த காப்பியத்தை
அடிப்படையாக வைத்துப் பேசப்பட்டும், எழுதப்பட்டும் இன்றுவரை இருந்து
வருகிறது.
இந்த மகாவம்சம், செவிவழிவந்த நாட்டுப்புறப் பாடல்கள்,
கர்ண பரம்பரைக் கதைகள் முதலியவற்றால் ஒழுங்குபடுத்தப்பட்டது.
சிங்களவர்களின் பெருமையை மிகவும் உயர்த்திக்காட்டவென்றே எழுதப்பட்ட நூல்
இது. இந்த மகாவம்சத்தை எழுதியவர் மகாநாமதேரர் என்னும் புத்தபிக்கு ஆவார்.
ஐந்தாம் நூற்றாண்டில் சிங்கள அரசனாக வாழ்ந்த தாதுசேனின் (கி.பி.463-479)
மாமன் இவர். பாலி மொழியில், தமிழின் சில சொற்களைத் துணைக்கொண்டு கவிதை
வடிவில் எழுதியுள்ளார். மகாநாமதேரரின் காலத்தில் வாழ்ந்த,
அநுராதபுரத்திலிருந்த புத்தமடத்தின் உயர்குருவான உத்தரபிரவீணா
இக்காப்பியம் சிறப்புற அமைய உரிய ஆலோசனைகள் வழங்கியிருக்கிறார்.
மகாநாமா
தொடங்கி வைத்த இந்த மகாவம்சத்தில் சிங்கள அரசர்களின் பெருமைகளை 13, 14,
18-ஆம் நூற்றாண்டுகளில் அவ்வப்போது வாழ்ந்த கவிஞர்களைக் கொண்டு
சேர்த்திருக்கிறார்கள். பல்வேறு கால கட்டங்களில் வாழ்ந்த சிங்கள
மன்னர்களின் வரலாறு இணைக்கப்பட்ட போதிலும் மூலநூலுக்கு ஏற்ற மொழி
லாகவத்துடன் பிசிறு இல்லாது ஒரே நபரால் எழுதப் பட்டதற்கான தோற்றத்தை
இந்நூல் பெறுகிறது.
சிங்களவர் வரலாறு என மகாவம்சம் கூறுவது என்ன?
இந்தியாவின்
வடகிழக்குப் பகுதியில் வங்க மக்களுக்குச் சொந்தமான நாட்டில் ஓர் அரசன்
இருந்தான். இவன் கலிங்க நாட்டு அரசனின் மகளை மணந்தான். இவர்களுக்கு ஒரு
பெண் குழந்தை பிறந்தது. இவளுக்கு உரிய வயது வந்ததும் பூப்பெய்தினாள்.
இளவரசி
பருவமுற்றதும் சோதிடர்கள் கொண்டு அந்நாளைக் கணக்கிட்டு அவளுக்கு எந்த
நாட்டு இளவரசன் கணவனாக அமைவான்; கல்வி, கேள்விகளில், வீரத்தில் அவனது
தேர்ச்சி என்னவாக இருக்கும் என்று கணிக்க முற்பட்டனர். யாருக்கும்
ஒழுங்கான விடை கிடைக்கவில்லை. எல்லாருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில்-
"இளவரசி மிகுந்த காமவெறி கொண்டவளாயிருப்பாள். மிருகராஜனைக் கூடுவாள்'
என்று தலைமைச் சோதிடர் கூறினார். இது ஒழுக்கக் குறைவானதாக,
அவமானமடையத்தக்கதாக இருந்தபோதிலும் மன்னனிடம் உண்மையைச் சொல்வதே முறை
என்று அவன்முன் தங்களது கணிப்பை எடுத்து வைத்தார்கள்.
"இளவரசி காம
இச்சை மிகுந்து சிங்கத்துடன் உறவு கொள்வாள்' என்ற செய்தி கேட்ட வங்க
மன்னன் அதிர்ச்சிக்காளானான். இதனால் வெறுப்பும் அவமானமும் அடைந்த மன்னன்
தன் மகள் எப்படியோ போகட்டும் என்று விதிப்படி விட்டுவிட்டு அமைதியானான்.
இளவரசியின்
நலனில் ஆர்வமற்றவனாக அவளது திருமண ஏற்பாடுகளில் கவனம் செலுத்தாதவனாக
இருந்தான். அதுமட்டுமன்றி, அவளின் விருப்பத்திற்கு குறுக்கே நிற்காது அவள்
போக்கில் விட்டுவிட்டான். சுதந்திர வாழ்வின் சுகத்தை விரும்பியவளாக
தன்னந்தனியே அரண்மனையை விட்டுப் புறப்பட்டாள் இளவரசி. மகதநாட்டுக்குச்
சென்று கொண்டிருந்த நாடோடிக் கும்பலுடன் அவர்கள் அறியாத விதத்தில்
சேர்ந்து கொண்டாள்.
அடர்ந்த கானகத்தை நாடோடிக் கும்பல் கடந்து
கொண்டிருந்தது. பயங்கரமான சிங்கம் ஒன்று எதிர்ப்பட்டு நாடோடிக் கும்பலைத்
தாக்கியது. சிங்கத்திற்குப் பயந்து அனைவரும் நாலாபக்கமும் சிதறி ஓடினர்.
இளவரசி மட்டும் சிங்கம் சென்ற பாதையில் சென்றாள்.
தனது எதிர்காலம்
பற்றிச் சோதிடர்கள் கூறியது இப்போது அவள் காதில் ரீங்காரமிட்டுக்
கொண்டிருந்தது. அவர்களின் கூற்றுக்கு ஏற்பவே தான் வந்த நாடோடிக் கும்பலைச்
சிங்கம் தாக்கியதை உணர்ந்தாள். தான் கூட வேண்டிய சிங்கம் இதுவே என்றும்
நினைத்தாள். இந்த உறுதியுடன்தான் சிங்கத்தின் பாதச்சுவட்டைப் பின்பற்றி
அதன் குகையை நோக்கி நடக்கலானாள்.
வழியில் சிங்கமோ உண்ட மயக்கத்தில்
இளைப்பாறிக் கொண்டிருந்தது. இளவரசி சிங்கத்தின் எதிரே வந்ததும் அது காமம்
மிகக்கொண்டு வாலை ஆட்டியது. இளவரசி சிறிதும் பயப்படாமல் அதன் அருகே சென்று
உடலைத் தட்டிக் கொடுத்தாள். தன்னை உடன் அழைத்துத் செல்லுமாறும் வேண்டினாள்.
ஏற்கெனவே
இளவரசியைப் பார்த்த மாத்திரத்திலேயே காமம் மிகுந்திருந்த சிங்கம், அவளைத்
தன் முதுகுமீது அமர்த்திக் கொண்டு தனது குகையை நோக்கிச் சென்றது.
குகையை
வந்தடைந்ததும் இரவு பகல் பாராது சிங்கமும் இளவரசியும் கூடி
மகிழ்ந்தார்கள். சிங்கத்தினது கூடலின் விளைவாக இளவரசி கருவுற்றாள். ஒரே
பிரசவத்தில் இரண்டு குழந்தைகளைப் பெற்றாள். ஆண் குழந்தைக்கு சிங்கபாகு
என்றும், பெண் குழந்தைக்கு சிங்கவல்லி என்றும் பெயரிட்டாள். மகன்
சிங்கபாகுவின் கைகளும் பாதங்களும் சிங்கத்தினுடையதைப் போல் அமைந்திருந்தன.
சிங்கபாகுவிற்கு பதினாறு வயதானபோது தன் மனதிலெழுந்த சந்தேகம் பற்றித் தாயிடம் கேட்டான். அவன் கேட்டது இதுதான்:
""அம்மா, நீயும் அப்பாவும் பெருத்த வித்தியாசத்துடன் இருக்கிறீர்களே. இது எப்படி நிகழ்ந்தது?''
இளவரசி அனைத்தையும் ஒன்று விடாமல் சொன்னாள். சிங்கபாகு, ""நாம் இந்தக் குகையை விட்டு ஏன் போய்விடக் கூடாது?'' என்றான்.
""போய்விடலாம். எனக்கும் அந்த எண்ணம் உண்டு. ஆனால் இந்தக் குகையின் வாயிலை உன் தந்தை பலமான பாறையினால் மூடி இருக்கிறாரே!'' என்றாள்.
இது
கேட்டதும் சிங்கபாகு தன் பலம் முழுவதும் செலுத்தி, குகையின் வாயிலை
அடைத்துக் கொண்டிருக்கும் கல்லை நகர்த்தி, அதைத் தன் முதுகில் ஐம்பது
யோசனை தூரம் சென்று எறிந்துவிட்டு வந்தான். பிறகு தன் தாயை ஒரு தோளிலும்,
தங்கையை மற்றொரு தோளிலுமாகச் சுமந்தவாறு வெளியே வந்தான்.
இளவரசியின்
யோசனைப்படி இலைத்தழைகளை ஆடையாகத் தரித்துக்கொண்டு காட்டை விட்டு வெளியே
வந்தனர். ஒரு மரத்தினடியில் படைவீரன் ஒருவன் இளைப்பாறிக்கொண்டிருந்தான்.
அவன் இளவரசியின் மாமன் மகனும், வங்க அரசனின் படையில் ஒரு தலைவனாகவும்
விளங்குபவன் என்பதை இளவரசி கண்டுகொண்டாள்.
சத்தம் கேட்டு
கண்விழித்த படைத்தலைவன் இவர்களைப் பார்த்து யாரென்று விசாரித்தான். இளவரசி
தனது வரலாற்றை அவனிடம் கூறினாள். படைத்தலைவன் மிகுந்த மகிழ்ச்சியுற்று
இளவரசியையும் அவளது பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு சென்றான். பறையறிவித்து
அவளை தனது மனைவியாக்கிக் கொண்டதாகவும் அறிவித்தான்.
இளவரசியும் தனது முன்னாள் கணவனான சிங்கத்தை மறந்து தனது புதிய கணவனுடன் வாழ்ந்து வந்தாள்.
காட்டில்
இரை தேடப் போயிருந்த சிங்கம் குகைக்கு வந்ததும் தனது பிள்ளைகளையும்
மனைவியையும் காணாமல் எல்லையோரக் கிராமங்களுக்குச் சென்று கோபத்தில் போவோர்
வருவோர் எல்லாரையும் தாக்கியது.
""சிங்கம் எங்களைத் தாக்குகிறது; எங்களை அதனிடமிருந்து காக்க வேண்டும்'' என்று குடிமக்கள் மன்னனிடம் முறையிட்டனர்.
தன்னிடமுள்ளவர்களில்
சிங்கத்தின் கொட்டத்தை அடக்கும் நபர் யார் என்று கண்டுபிடிக்க முடியாத
நிலை. பரிசுத் தொகையை யானை முதுகில் வைத்து, ""சிங்கத்தைப் பிடித்து,
சிங்கத்தைக் கொல்பவர்கள் இந்தத் தொகையை அடையலாம்'' என்று முரசு கொட்ட
வைத்தான் அரசன்.
படை வீரர்களிலும் பொதுமக்களிலும் யாரும் முன் வராத
நிலையில், பரிசுத் தொகையைப் பன்மடங்கு கூட்டினான். இந்த நிலையில்
சிங்கபாகு தானே சிங்கத்தின் கொட்டத்தை அடக்குவதாக அறிவித்தான். அத்துடன்
தாய் தடுத்தும் கேளாது யானை முதுகின் மேலுள்ள பரிசுத்தொகையை எடுத்துக்
கொண்டான். பொதுமக்கள் சிங்கபாகுவை அரசன் முன்னிலையில் கொண்டு போய்
நிறுத்தினர்.
அரசனோ, ""சிங்கத்தைக் கொன்றால் என் ராஜ்ஜியத்தையே தரச் சித்தமாயிருக்கிறேன்'' என்றான்.
சிங்கபாகு
சிங்கத்தைத் தன் தந்தையென்றும் பாராமல் அதனை வீழ்த்தக் காட்டுப்
பகுதிக்குச் சென்றான். தூரத்தில் சிங்கபாகுவைக் கண்டதுமே தனது மைந்தன்
வந்துவிட்டான் என்ற மகிழ்ச்சியில் நெருங்கி வந்தது. சிங்கபாகுவோ தான்
எடுத்துக்கொண்ட காரியத்தை நிறைவேற்றும் எண்ணத்தில் அம்பு எய்து
சிங்கத்தைக் கொல்ல முயன்றான். இரண்டு முறை முயன்றும் அம்பு சரியாகச்
சிங்கம் மீது தைக்கவில்லை. மூன்றாவது முறையாக சிங்கபாகு எய்த அம்பு
சிங்கத்தை வீழ்த்தியது.
கொய்த தலையுடன் சிங்கபாகு அரண்மனையை நோக்கி
வந்தான். பொதுமக்கள் அவனது தீரத்தைப் பாராட்டிப் புகழ்ந்தார்கள்.
ராஜ்ஜியத்தைத் தருவேன் என்று கூறிய மன்னன் உயிருடன் இல்லை. இருப்பினும்
இளவரசி மூலம் சிங்கபாகு மன்னனின் பேரன்தான் என்பதைப் பொதுமக்களும்,
மந்திரிமார்களும் அறிந்த காரணத்தால் சிங்கபாகுவை அரசனாக்க முயன்றார்கள்.
எல்லாருடைய விருப்பத்திற்கிணங்க அரசனாகப் பதவி ஏற்றுக்கொண்டு, பின் தனது
தாயாரையும் அவளது புதிய கணவனையும் அழைத்து ராஜ்யத்தை அவர்கள் வசம்
ஒப்படைத்தான்.
தனது தங்கையை அழைத்துக்கொண்டு தான் வாழ்ந்த காட்டுப்
பகுதிக்குச் சென்றான். அங்கே தனக்கென ஒரு நகரை நிர்மாணித்துக் கொண்டான்.
தங்கையை (சிங்கவல்லியை) தனது மனைவி ஆக்கிக் கொண்டான். இவர்களுக்குப்
பதினாறு முறை இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.
இந்த முப்பத்திரண்டு
குழந்தைகளில் மூத்தவனுக்கு விஜயன் என்றும், இரண்டாமவனுக்கு சுமிதன்
என்றும் பெயர்களிட்டார்கள். உரிய வயது வந்ததும் விஜயனுக்கு இளவரசுப்
பட்டமும் சூட்டினார்கள்.
விஜயனின் நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு
வெறுப்பைத் தந்தன. பொறுத்துப் பார்த்த மக்கள் நேரிடையாக மன்னனிடம் சென்று,
""உங்கள் மகனைக் கொன்று விடுங்கள்; இல்லையெனில் அவனையும் அவனது
தோழர்களையும் நாடு கடத்துங்கள்'' என்று முறையிட்டனர்.
சிங்கபாகு தனது மந்திரிகளைக் கூப்பிட்டு ஆலோசனை கலந்தான். அவர்களும் பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்பவே முடிவு சொன்னார்கள்.
வேறுவழியின்றி
மன்னன் சிங்கபாகு, விஜயன் உட்பட அவனது எழுநூறு தோழர்களையும் பிடித்து
வந்து தலையில் பாதி முடியை சிரைத்து, சுக்கான் இல்லாத கப்பலில் ஏற்றி
அனுப்பி வைத்தான். விஜயனும் அவனது நண்பர்களும் இலங்கையில் தாமிரபரணி
என்னும் பகுதியில் கரையேறினார்கள்.
அனைவரும் கரையேறியதும் விஜயனின்
ஆட்களில் ஒருவன் தூரத்தில் பெண்ணொருத்தியைக் காண்கிறான். அவள் அத்தீவில்
வசிக்கும் இயக்க குல ராணியான குவேனி என்பவள்.
குவேனி அவர்களது
பசியைப் போக்க விருந்து படைத்தாள். தன்னைப் பதினாறு வயதுப் பருவப் பெண்ணாக
மாற்றிக் கொண்டாள். நானாவித ஆடையாபரணங்களைத் தன்மேல் அலங்கரிக்குமாறு
மந்திர சக்தியால் செய்து கொண்டாள்.
ஒரு மரத்தடியில் அழகிய
வெண்கொற்றக் குறையுடன் கூடிய சிறந்த மஞ்சத்தைச் சிருஷ்டித்துக் கொண்டாள்.
சுற்றிலும் பாதுகாப்புக்கெனக் கூடாரம் ஒன்றையும் எழுப்பிக் கொண்டாள்.
விஜயனும் குவேனியின் அழகில் மயங்கி அவளை ஏற்றுக் கொண்டான். இன்பமாகப்
பொழுதைக் கழித்தான்.
குவேனியின் புத்திமதிப்படியே விஜயன்
இயக்கராஜனுடைய உடைகளை அணிந்து கொண்டான். தாமிரபரணி என்னும் நகரத்தை
ஏற்படுத்திக் கொண்டான். குவேனியையும் முறைப்படி மனைவியாக்கிக் கொண்டான்.
ஆனாலும்
அவன் தன்னை அரசனாக முடிசூட்டிக் கொள்ளவில்லை. உயர்குலப் பெண்ணொருத்தியை
மணந்து அவளைப் பட்டமகிஷியாக்கிக் கொண்ட பிறகே தான் அரசனாக முடியும் என்று
கருத்துக் கொண்டிருந்தான். அதனால் விஜயனின் மந்திரிமார்களில் சிலர்
பாண்டிய நாடு சென்று அந்த மன்னனிடம் பெண் கேட்டார்கள்.
பாண்டிய
மன்னனும் தனது மகளை விஜயனுக்குத் தரச் சம்மதித்து, விஜயனின் நண்பர்களை
மணந்து கொள்ளவும், தனது மகளுக்குத் துணையாக இருக்கவும் என்று நூறு பாண்டிய
நாட்டுப் பெண்களையும் அனுப்பி வைத்தான்.
ஒரு குறிப்பிட்ட தினத்தில்
பாண்டிய நாட்டு இளவரசியை மணந்து கொண்டான் விஜயன். பின் குவேனியை தனது
நாட்டை விட்டே துரத்துகிறான். குவேனியின் மூலம் பிறந்த ஒரு மகன், ஒரு
மகளையும் கானகத்துக்குத் துரத்தியடிக்கிறான் விஜயன். இந்த விஜயனே முதல்
சிங்கள மன்னன் என்று மகாவம்சம் நூல் கூறுகிறது. இவனது வாரிசுகளே இன்றைய
சிங்களவர்கள்!
நாளை: இலங்கையின் பூர்வ குடிகள் யார்?
http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Headlines&artid=68025&SectionID=128&MainSectionID=128&SEO=&Title=
ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-3 : இலங்கையின் பூர்வ குடிகள் யார்?பாவை சந்திரன்
மகாவம்ச
வரலாறு மூலம், விஜயன் வருவதற்கு முன்பு இலங்கைப் பகுதியில் மக்கள்
வசித்திருக்கிறார்கள்; அவர்கள் இயக்கர்கள் என்றும், நாகர்கள் என்றும்
அழைக்கப்பட்டிருக்கிறார்கள்; அவர்களுக்கென்று ஓர் அரசு இருந்திருக்கிறது
என்பது புலனாகும்.
மகாவம்சம், சிங்களவர்களின் பெருமை பேசவென்று
எழுதப்பட்ட நூலானதால் குவேனியையும் அவளது சுற்றத்தாரையும் அமானுஷ்ய சக்தி
கொண்ட, மனிதர்களைப் பிடித்துத் தின்னும் நாகரிகமற்றவர்களாகக்
காட்டுகிறார்கள். உண்மையில் இவர்களே இலங்கைத் தீவின் பூர்வகுடிகளாவர்.
அழியாத குமரிக்கண்டத்தின் வரலாற்றுப்படி ஒப்பு நோக்கினால், அவர்கள் அசல்
திராவிடர்கள் என்பதும் புலனாகும்.
புத்த மதம் வந்தபோது இருந்த மன்னன் யார்?
மகாவம்சக் கூற்றுப்படி இலங்கைக்குப் புத்த மதம் வந்தபோது அரசனாக இருந்தவன்
யார் என்பது ஒரு பெரிய சந்தேகம். புத்த மதம் இலங்கைத் தீவுக்குள்
நுழைந்தபோது இலங்கையை ஆண்ட மன்னன் மூத்தசிவனின் (மூத்த+சிவம்) மகன்
தேவனாம்பிய தீசன். இவன்தான் மகிந்ததேரரை (அசோகனின் மகன்
மகேந்திரன்-மகாவம்ச கூற்றுப்படி) வரவேற்றது. இவன் ஒரு தமிழ் மன்னன். இங்கு
கூறப்படும் மூத்தசிவனின் மகனான தேவனாம்பிய தீசன் வேறு; அசோக மன்னனின்
அடைமொழியைத் தன் பெயராக வைத்துக்கொண்ட தேவனாம்பிரிய தீசன் வேறு!
தேவனாம்பிரிய~என்றால் தேவனுக்குப் பிரியமான என்பதைக் குறிக்கும். இங்கு
தேவன் என்பது புத்தரைக் குறிக்கிறது. தீசன் என்பது மோகாலி என்பவருடைய மகன்
ஆகிறது. இந்த மோகாலி, அசோக மன்னனின் காலத்தில் இருந்த புத்தமகாசபையின்
தலைவர் ஆவார்.
இக்குறிப்புகள் மூலம் சிங்கள வரலாற்று அறிஞர்கள்
அசோகனின் மகனான மகிந்ததேரரை வரவேற்றது தமிழ் மன்னன் மூத்தசிவனின் மகனான
தேவனாம்பிய தீசன் என்பதைத் திரித்து புத்த மகாசபையின் தலைவர் மோகாலியின்
மகனான தேவனாம்பிரியதீசன் என்று உண்மைக்கு மாறாக வரலாற்றை உலகிற்குக்
கூறுகின்றனர்.
இந்த திரித்தல் வேலை ஏன் நடைபெற வேண்டும்? விடை
சுலபமானது. இந்த திரித்தல் மூலம் மகிந்ததேரரை வரவேற்றது தேவனாம்பிரியதீசன்
என்று குறிப்பிட்டுவிட்டால் தமிழர்களுக்கு முன்பாகவே புத்தர்கள்
இலங்கையில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்று வலியுறுத்த முடியும்.
அதற்காகவே தேவனாம்பியதீசன்~தேவனாம்பிரிய தீசன் ஆகிய இருபெயர்களிலும்
இருக்கும் ஓர் எழுத்து (ரி) வித்தியாசத்தை மூடி மறைத்து தேவனாம்பிய
தீசனுக்குப் பதில் தேவனாம்பிரிய தீசனை நுழைக்கிறார்கள். இப்படி நுழைப்பதன்
மூலம் புத்தமத வாதத்திற்கு மேலும் வலுவிருக்கும் என்று நம்புகின்றனர்
என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாகும்.
மேற்கண்ட தகவல்களுக்கு மகாவம்சக் கூற்றே மகா முரணாக இருக்கிறது. அது~
""இரண்டு சாம்ராஜ்யாதிபதிகளும், அதாவது தேவனாம்பிரியதீசனும் தம்மசோகாவும்
ஏற்கெனவே ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டதில்லை. இருப்பினும் ஒருவரையொருவர்
புரிந்துகொண்டு நட்புக் கொண்டிருந்தார்கள்'' (மகாவம்சம் 11:19) என்பதாகும்.
இதிலிருந்து தேவனாம்பிரிய தீசனும் தம்மசோகாவும் (தர்ம அசோகர்) வேறுவேறு
மன்னர்கள் என்பதும் அவர்கள் நட்புரிமையுடன் பழகி வந்தார்கள் எனவும்
தெரிகிறது. சிங்கள அறிஞர்களின் கூற்றுப்படி மோகாலியின் மகன்தான் அசோகனின்
மகனை வரவேற்றது என்பது உண்மையானால், அசோக மன்னனை அவன் சந்திக்காது
இருந்திருக்க முடியுமா என்பது வரலாற்று அறிஞர்களின் கேள்வியாக இருக்கிறது.
சிங்கள வரலாற்று அறிஞர்கள் இத்துடன் நின்று விடவில்லை. சிங்கள இனத்தை ஆரிய
இனமாகக் காட்ட வேண்டும் என்பதற்காக மேலும் பல திரிப்பு வேலைகளைச்
செய்கிறார்கள். தென்னிந்தியாவில் மதுரையையும் அதை ஆண்ட பாண்டியர்களையும்
பற்றிய குறிப்புகளை (மகாவம்சத்தில் வரும்போது) யமுனை நதிக்கரையில் வாழ்ந்த
பாண்டுவுடனும், முத்ராவுடனும் முடிச்சுப்போட்டு திரிக்கின்றனர்.
அதுமட்டுமல்ல; மகாவம்சத்தில் குறிப்பிடப்படும் இலங்கைக்கு, இந்தியாவுடனான
தெற்கத்திய தொடர்புகளைப் பற்றி ஏனைய அறிஞர்கள் ஏற்றுக் கொண்டாலும்,
சிங்களவர்கள் மட்டும் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராய் இல்லை, என்றும்
பொருளாகிறது.
இப்படி யமுனை நதிக்கரைப் பாண்டுவோடும், முத்ராவோடும்
விஜயனைத் தொடர்புப்படுத்தித் திரித்துக் கூறுவதன் மூலம் மகாவம்சத்தின்
ஆசிரியர் மகாநாமதேரரைக் கேலிக்குரியவராக்குகிறார்கள் என்பதே பொருள்.
வேதகாலத்திற்குப் பின் குருவம்சம் மிகச் சிறப்பான ஒரு பழங்குடி வம்சம்
என்று இந்திய வரலாறு (பக். 46-இல்) எழுதிய சின்ஹா~பானர்ஜி
தெரிவிக்கிறார்கள். மிகச் சிறப்பான வம்சம் என்று கருதப்படும்
குருவம்சத்துடன் விஜயன் தொடர்பு வைத்துக்கொள்ளாமல் கீழான நாகரிகம் கொண்ட
யமுனை நதிக்கரைப் பாண்டுவுடன் சம்பந்தப்பட்டிருப்பதாக மூல நூலான மகாவம்சம்
கூறியிருக்க முடியுமா? (1) இலங்கையின் ஆதிக்குடிகளான தமிழர்கள்
தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்களே என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன.
மேலைநாட்டு அறிஞர் கால்டுவெல் கருத்துப்படி முதல்சங்க, இடைச்சங்க
காலத்தில் நிகழ்ந்த கடல் கொந்தளிப்பின் விளைவாக லெமூரியாக்
கண்டத்திலிருந்து பிரிந்த நிலத்திட்டுத்தான் இலங்கை ஆகும். இதன் மூலம்
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் உள்ள புராதனத் தொடர்பை அறிய முடியும்.
மேலும், சின்ஹா~பானர்ஜி தமது இந்திய வரலாற்றில் குறிப்பிடுகையில்
வரலாற்றுக்கு முந்தைய திராவிடர்கள் கடற்பயணம் மேற்கொண்டு அதன் மூலம்
வணிகத்தில் சிறந்து விளங்கினார்கள்; சிறந்த பயன் அடைந்தார்கள் என்று
குறிப்பிடுகிறார்கள். அதுபோலவே, ஆங்கில வரலாற்று ஆசிரியர் டியோலி
கிழக்கத்திய மற்றும் தூரக்கிழக்கு நாடுகளோடு மிக நீண்ட காலமாகவே வணிகத்
தொடர்பினைத் தமிழர்கள் கொண்டிருந்தார்கள் என்று குறிப்பிடுகிறார்.
ஆனால், வட இந்திய ஆரியர்கள் கடல் போக்குவரத்துப் பற்றிய தெளிவான அறிவினை
கொண்டிருந்தார்கள் என்று நம்புவதற்குப் போதிய ஆதாரம் இல்லை. கி.மு. 2500
ஆண்டுகளுக்கு முன்பே திராவிடர்களுக்கும் இலங்கைக்கும் உள்ள தொடர்பு,
சமீபத்தில் அங்கு நடந்த அகழ்வாய்வுச் சான்றுகளின் மூலம் அறியப்படுகிறது.
அச்சான்றுகளை மூன்று பிரிவாக வகைப்படுத்தலாம்.
1. சிர்கா (Circa-Wintle and Oakley-1972)
குகை ஓவியம்
2. அநுராதபுரத்தைச் சேர்ந்த ""கிடுக்கி'' பகுதி அகழ்வாய்வுகள் ((Gadige-S. Deraniyagala-1972; S.Deraniyagala-1971))
3. பொன்பரப்பி (Ponbarippu) குருகல் கின்னா (Gurugal hinna) கதிரவெளி (Katiraveli) போடியகம்பளை (Podiya Gampala).
இப்பகுதியில் கிடைத்த சான்றுகள் தென்னிந்தியத் தொடர்போடு இலங்கைக்கிருக்கும் நெருக்கத்தை சுட்டிக் காட்டுகின்றன. (2)
முதல் பிரிவான சிர்கா மற்றும் குகை ஓவியச் சான்றுகளின்படி அவை சுமார்
கி.மு. 4500-க்கு முந்தைய காலத்தைச் சார்ந்தன என அறிஞர்கள் மதிப்பீடு
செய்கின்றனர். இவைகளின் காலத்தை வரையறுக்கும்போது இச்சான்றுகள்
ஸ்ட்ராட்டம்-1 ((Stratum-1) காலம் என மானுடவியல் ஆராய்ச்சியாளர்கள்
வரையறுக்கின்றனர்.
மனித சமூகம் காட்டுமிராண்டிக் கால
நிலையிலிருந்து வேட்டையாடுவதை விட்டுவிட்டு, நாகரிகமடைந்து, ஓரிடத்தில்
நிலையாகத் தங்கி விவசாயம் செய்யும் தொழிலில் இறங்கியது வரையிலான
வளர்ச்சிக் காலத்தை, மானுடவியலாளர் ""ஸ்ட்ராட்டம்'' என்று குறிப்பிட்டு,
அதன் வளர்நிலையைக் கணிக்கின்றனர். அதன்படி ""சிர்கா'' பகுதியின் காலம்
முதல் பிரிவைச் சார்ந்ததாகிறது. மனித சமூகம் கல் ஆயுதத்தைப் பயன்படுத்திய
காலம். இந்தப் பகுதியில் கல் ஆயுதங்கள் மற்றும் அக்கால மனித சமூகம்
பயன்படுத்திய பொருட்கள் கிடைத்தன.
அதேபோன்று இரண்டாவது பிரிவான
அநுராதபுரத்தின் கிடுக்கிப் பகுதியில் நடந்த அகழ்வாய்வுகளில் கிடைத்த
ஆயுதங்கள், நாணயங்கள், ஓடுகள் ஆகிய சான்றுகளின் மூலம் இவைகளின் காலம்
ஸ்ட்ராட்டம் ஐஐ-ன் காலம் என அறிஞர்கள் கூறுகின்றனர். இப்பகுதியில் கிடைத்த
நாணயங்களை மதிப்பீடு செய்த அறிஞர் மறைதிரு டாக்டர் எஸ். தனிநாயகம்,
""குறைந்தபட்சம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மொகஞ்சதாரோ, ஹரப்பாவின்
காலத்தை ஒட்டிய சிந்துவெளி நாகரிக வரலாற்றைச் சேர்ந்தவை'' என்கின்றார்.
அவை ஆரியருக்கு முந்தைய திராவிடர் நாகரிகத்தை ஒட்டியதாகும் எனவும்
வரலாற்று அறிஞர்கள் மதிப்பீடு செய்கின்றனர்.
மூன்றாவது பிரிவைச்
சார்ந்த பொன்பரப்பி, குருகல்கின்னா, கதிரவெளி, போடிய கம்பளை, யாழ்ப்பாணம்,
ஆனைக்கோட்டை ஆகிய பகுதிகளின் அகழ்வாய்வுகளில் இரும்பாலான ஆயுதங்களும், அக்
காலத்தைச் சேர்ந்த பொருட்களும் கிடைத்தன. இவை தமிழகத்தின் திருநெல்வேலி
மாவட்ட ஆதித்தநல்லூரில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழியை ஒத்தும் தமிழ்
எழுத்துக்களுடன் காணப்படுகின்றன (படம் காண்க). ஆகையால் அப்பகுதி மக்கள்
இரும்புக் காலத்தைச் ((Megalithic Age) சேர்ந்தவர்கள் என
கணிக்கப்படுகின்றனர். இந்தச் சமூக மக்கள் இரும்பைப் பயன்படுத்த
தெரிந்துகொண்டு, அலைந்து திரியும் நாடோடிக் கூட்டமாக இல்லாது ஓரிடத்தில்
நிலையாகத் தங்கி வாழ்ந்தனர். விவசாயத்தை அறிந்து இருந்தனர். மூன்றாவது
பிரிவைச் சார்ந்த அகழ்வாய்வுச் சான்றுகளின்படி இரும்பாயுதக் காலத்தைச்
சேர்ந்தவர்கள் இவர்கள். இக்காலமே ஸ்ட்ராட்டம்-IIIA ஆகும். இந்த
ஆய்வுகளின்படி கிடைத்த தகவல்களிலிருந்து பார்க்கையில் இவை தென்னிந்திய
இரும்புக் காலத்தை (கி.மு. 800-100) ஒத்து உள்ளன. மேலும், இப்பகுதி வாழ்
மக்கள், குடியிருப்பு விவசாயத்தை மேற்கொண்டிருந்தனர் என வரலாற்று
அறிஞர்கள் மதிப்பீடு செய்கின்றனர்.
இப்பகுதி மக்களின் காலமான
ஸ்ட்ராட்டம்-ஐஐஐஅக்குப் பின்னரே வட இந்திய மெüரிய சாம்ராஜ்யம் வருகிறது என
வரலாற்று ஆசிரியர்கள் கணிக்கின்றனர். ஆக மேற்கண்ட அகழ்வாய்வுகளின் மூலம்
இலங்கை வாழ் பூர்வகுடிகள் அம்மண்ணில் குளங்களின் மூலம் பாசனம் செய்து
விவசாயத்தை மேற்கொண்டதாக அறிய முடிகிறது. உதாரணமாக அநுராதபுரத்தில்
கிடைத்த சான்றின்படி அப்பகுதியில் இருக்கும் குளமானது ஐம்பத்து நான்கு
மைல் நீளமான கால்வாயுடன் இணைக்கப்பட்டு விவசாயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வரலாற்றுச் சான்றுகளின்படி நான்கு விஷயங்கள் தெளிவாக உணரப்படுகின்றன. அவை:
(1)‘‘The
Kurus were one of the most prominent tribes of the later Vedic period,
but it is curious that Pandus are mentioned for the first time in
Buddhist literature, when they are described as a hill tribe’’
-Sinha & Banerjee in History of India (1952) page 46.
‘‘A.L.Basham
was inclined to think that this claim of the arrival of Vijaya and his
followers was only a personification of the first Aryan contact.
However, G.S.Mendis had rejected their Vijayan episode as a mere
legend. There is no authentic record about the arrival of Vijaya except
scanty references in the Chronicles especially the Mahavamsa...
The Mahavamsa is a puranic work heavily laden with legends and politico-religious fervour...’’
-Poson : It has historical significance too ..
By A.Thevarajan.
‘‘However,
despite the weight of popular and semi scholarly acceptance of the
Vijaya story itself is purely legendary, a myth of origin synthesized
from various early Indian legends and to be understood in terms of the
histographical objectives of the chroniclers rather than as actual
historical records. The same historians however premise of the Vijaya
story that civilization in Srilanka had its origins in the settlement
and expansion of migrant colonists from the Indian mainland.’’
‘‘Ethnicity and Social Change’’
Dr. SenakeBandaranayake.
(2)
(i) ‘‘To many the history of our country begins with the legend of
Vijaya and Kuveni, itself a parallel, according to John Still, to the
tale of Ulysses and Circe. Some declare there can be no Tamil homelands
since the ruins of Buddhist Shrines have been unearthed in areas
considered to be Tamil and because some Tamil places have Sinhala
origins. But the burial mounds of ‘‘Anaikoddai’’ and the megalithic
artifacts of ‘‘Ponbarippu’’ and other places in the North-western
sector may well tell a different story.
It is reasonable to
assume that some of the earliest settlers in the North Ceylon came from
the South-Eastern part of the adjoining subcontinent.’’
- by S.K.Gnanamuttu.
‘‘Noses & Dravidian Kissingers’’, Saturday Review, 4th Aug, 1984
(ii)
The physical basis for early Srilanka culture was in the village tanks
associated with this South Indian megalithic culture.
- Dr.Susantha Gunathilake
‘‘Formation of Srilankan Culture’’
(iii)
‘‘Artifacts and remains of stone tool using man have been found in
several sites of Srilanka with the site at Bellan-Bandi Pelassa being
dated by thermoluminiscent testing of associated artifacts as circa
4500 BC (Wintle and Oakley 1972). Excavations at a carefully stratified
basis at the Gedige area of Anurathapura (S.Deraniyagala 1972) has also
brought out artifacts associated with this culture was wide spread in
the country. But it is not with stone age man or his cultural products
to whom one could possibly assign cave paintings (S.Deraniyagala
1971-page 38) that we are interested in, it is with the culture
associated with settled agriculture.
However there is
considerable evidence both direct and indirect that settled irrigated
agriculture arose before independent of the coming of the North Indian
language speakers.’’
- Dr.Susantha Gunathilake
http://dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial%20Articles&artid=69281&SectionID=133&MainSectionID=0&SEO=&Title=%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-3+:+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D?
ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு: 4. இலங்கை கொண்ட சோழன்
வட
இந்தியர் இலங்கைக்கு வருவதற்கு முன்னரே அம்மண்ணில் மனித சமூகம்
வாழ்ந்துள்ளது. அவர்கள் இயல்பாகப் படிப்படியாக நாகரிகமடைந்துள்ளனர்.
அவர்கள் (பூர்வகுடிகள்) திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள். இத்
திராவிடர்களின் காலமும், தென்னிந்தியத் தமிழர்களின் காலமும் ஒரே காலத்தைச்
சேர்ந்தவை. தென்னகத்திலும் இலங்கையிலும் கிடைத்த சான்றுகளின்படி இரு
பகுதிகளினது சமூக நாகரிகமும் ஒத்தே உள்ளன. அப்பகுதி வாழ் மக்கள்
குளங்களின் மூலம் விவசாயம் செய்யும்-குடியிருப்பு விவசாயம் மேற்கொண்ட
நாகரிகச் சமூகமாகும்.
ஆக, இலங்கைக்கு ஆரியர்கள் (விஜயன்)
வருவதற்கு முன்னரே அப்பகுதி மக்கள் விவசாயத்தை அறிந்து இருந்தனர் என்பது
தெளிவாகும். ஆனால் சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் இந்தோ ஆரியர்கள்தான்
இலங்கைத் தீவிற்கு வந்து விவசாயத்தை அறிமுகம் செய்தார்கள் என்று
கூறுகின்றனர். மேற்காணும் சான்றுகளின் மூலம் அந்த வாதம் வரலாற்றைத்
திரித்துக் கூறும் மிகப்பெரிய பொய் என்பது தெளிவாகும்.
இதைப்பற்றி
இலங்கையின் தொல்பொருள் ஆராய்ச்சி இயக்குநர் ஒருவர், "ஆயிரம்
ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட எல்லாள மன்னன், கடவுளாக மதிக்கப்பட்டு
வணங்கப்படுகிறான் என்றால், அவனது செல்வாக்கு அசாத்தியமானது' என்கிறார்.
மகாவம்சம் குறிப்பிடும் தமிழ் மன்னனின் புகழ்ச்சியைப் பொறுத்துக் கொள்ளாத
சிங்கள வரலாற்று ஆய்வாளர்கள், தமிழ் மன்னனின் செல்வாக்கு, வீரம் ஆகியவற்றை
மறைத்து, துட்டகாமினியின் செயலைப் புகழ்ந்து புத்தமத கலாசாரத்தின்
சிறப்பம்சமாக, அதன் மேன்மையை வெளிப்படுத்துவதாக இந்நிகழ்ச்சிக்கும் புதிய
விளக்கம் அளிக்கின்றனர்.
சிங்களவரின் வரலாறாகக் கருதப்படும் மகாவம்சம், எல்லாளன் என்ற தமிழ் மன்னனுக்கும் துட்டகாமினி என்ற சிங்கள
மன்னனுக்கும்
நடந்த போரைக் குறிப்பிடுகிறது. * (1) இந்தப் போர் கி.மு. 161-இல்
நடந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. மன்னர்கள் சார்பில் படைவீரர்கள் மோதுவது
உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தும். ஆகவே, இதைத் தவிர்க்கும் பொருட்டு இரு
மன்னர்களும் யானை மீது அமர்ந்து மோதினர். எல்லாளன் யானை துட்டகாமினியின்
யானையான கந்துலனைவிட உருவத்தில் சிறியது. உயரத்தில் பெரிய யானையான
கந்துலன் மீது அமர்ந்து துட்டகாமினி வீசிய வேலால் தாக்குண்டு எல்லாளன்
இறந்தான். எல்லாளன் எதிரி என்றும் கருதாமல், அவனது இறுதி ஊர்வலத்தில்
கலந்துகொண்டு, அவனை அடக்கம் செய்த இடத்தில் நினைவுச் சின்னம் ஒன்றும்
எழுப்புகிறான் துட்டகாமினி.
கி.பி. ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட
மகாவம்சம் மேலும் அதைப் பற்றிக் குறிப்பிடுவது என்னவென்றால், ""இளவரசர்கள்
அனைவரும் அந்த நினைவுச் சின்னத்திற்குச் சென்று இன்றும் கூட அஞ்சலி
செலுத்துகிறார்கள்'' என்பதாகும். இதன் மூலம் தெரிவது இரு சமூகக்
குழுக்களும் ஆரம்ப நாட்களிலிருந்தே பகைமை கொண்ட சமூக குழுக்களா என்றால்,
இல்லை.
இரு மன்னர்கள் தங்கள் தங்கள் ஆட்சியை நிலைநாட்ட
எடுத்துக்கொண்ட யுத்தங்கள்தான் அவை. இரண்டு இனங்களிலும் அக்கம்
பக்கமிருந்து சட்டம், சாதிமுறை, சமூக அமைப்பு முதலியவற்றில் ஒரே சீரான
நடைமுறைதான் தொடர்ந்து பேணப்பட்டு வந்திருக்கிறது என்பது புலனாகும்.
அடுத்து, வரலாற்றுக் காலத்தை எடுத்துக் கொண்டால் ஏழாம் நூற்றாண்டில்
நரசிம்ம பல்லவன் புலிகேசியுடன் போர் புரிந்தபோது இலங்கை அரசன் மானவர்மன்
படைத் தலைவனாகச் சென்றதாக சரித்திரக் குறிப்பு ஒன்று கூறுகிறது.
இதற்குப் பிரதியுபகாரமாக நரசிம்ம பல்லவன் இலங்கை மன்னனான மானவர்மனுக்கு
உதவியாக பெரும் படையொன்றை அனுப்பி, அவன் இழந்த நாட்டை மீட்டுத் தந்ததாக
காசுக்குடிப் பட்டயம் கூறுகிறது.
சோழ அரசன் முதலாம் பராந்தகனுக்கும்
பாண்டிய மன்னன் இராசசிம்மனுக்கும் நடந்த போரில் பாண்டியன் தோற்கிறான்.
அவன் தனது அரச முடியையும், அரசியின் முடியையும், இந்திர ஹாரத்தையும்
இலங்கை மன்னன் ஐந்தாம் மகிந்தனிடம் அளித்துவிட்டு சேரநாடு ஓடுகிறான்.
பாண்டியனின் குலச்சொத்தை கைப்பற்றச் சோழ அரசர்கள் பலமுறை படையெடுப்பை
நடத்துகிறார்கள். பராந்தக சோழனின் மகன் சுந்தரசோழன் ஆட்சியிலும், அவனது
மகன் இராஜராஜசோழன் ஆட்சியிலும் கூட படையெடுப்பு நிகழ்கிறது. முடிவில்
இராஜராஜ சோழனின் மகன் இராஜேந்திர சோழன் சிங்களவரைக் கொன்றதோடு "முன்னவர்
பக்கல் தென்னவன் வைத்த சுந்திரமுடியும், இந்திரஹாரமும் அங்கவர் தேவியர்
ஓங்கெழில் முடியும்' திரும்பப் பெற்றதாக ஒரு கல்வெட்டு மூலம் பெருமை
கொள்கிறான்.
சோழர்கள் இலங்கை கொண்ட சோழராக மாறி அந்நாட்டை ஒரே மண்டலமாக்கி அநுராதபுரத்தை தலைநகராக மாற்றி ஆட்சி புரிகின்றனர்.
மேலும் இலங்கையின் வரலாற்றுச் சான்றுகளை வைத்து மதிப்பீடு செய்த அறிஞர்,
"நேரிடையாகவும் மறைமுகமாகவும் கிடைக்கும் சான்றுகளை வைத்துப்
பார்க்கும்போது, இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் சிறந்த நாகரிகம்
உடையவர்களாகவும் குடியிருப்புப் பாசன விவசாயத்தை மேற்கொண்டவர்களாகவும்
இருந்தனர்.
இச்சமூக மக்கள் வட இந்திய மொழி பேசும் மக்களுக்கு
முந்தைய காலகட்டத்து மக்கள் சமூகமாகும்' (டாக்டர் சுசந்தா
குணதிலகா~"சாட்டர்டே ரிவ்யூ'~30, டிசம்பர் 1983) என்கிறார்.
இதன்
மூலம் சிங்கள அறிஞர்கள் கூறும் ஆரியர்கள் குளநீர்ப் பாசன விவசாயத்தை
இலங்கைத் தீவில் அறிமுகம் செய்தனர் என்பது தவறான கூற்றாகும் என்பது தெளிவு.
நாளை: சிங்கள மொழி உருவானது எப்படி?
*
(1) ‘Bikku Rahula Who viewed Dutugamunus’ war as a ‘‘Great crusade to
liberate Buddhism from foreign rule. His cry was not for Kingdom, but
for Buddhism’’. The entire Sinhalese race was united under the banner
of the young Gamini. This was the begining of nationalism among the
Sinhalese. It was a new race with healthy young blood organized under
the new order of Buddhism. A kind of religio-nationalism which almost
amounted to fanaticism roused the whole Sinhalese people. A
non-Buddhist was not regarded as a human (ibid).
-Prop.Ludowyk. E.F.C
‘‘The Story of Ceylon’’’’
http://dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=68842&SectionID=133&MainSectionID=0&SEO=&Title=%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81:+4.+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D
ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு: 5. சிங்களமொழி உருவானது எப்படி?பாவை சந்திரன்
மொழியியல்
ஆராய்ச்சியின்படி சிங்களம் திராவிட இனமொழிக் குடும்பத்தைச் சார்ந்தது
என்கிறார் மொழி இயலாளர் எச்.எஸ். டேவிட் (டேவிட் 1981-இல் யாழ்ப்பாண
நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட செய்தி கேட்டு மாரடைப்பால் மரணமுற்றவர்). (1)*
""சிங்களம்
இலங்கைத் தீவில் பேசப்பட்டதை கி.மு. 2000-த்துடன் இணைக்கலாம். அப்போது
அம்மொழிக்கு எழுத்து வடிவம் இல்லை; பேச்சு வழக்கில் மட்டுமே அம்மொழி
இருந்தது. அந்தப் பேச்சு வழக்கோ ஆதிகால திராவிட இன மொழிக் குடும்பத்தில்
பிறந்தது. அப்படிப் பிறந்தனவே தமிழ், சிங்கள மொழிகள்'' என்கிறார்.
மொழியியல் அறிஞர் ஆக்ஸிமோரன் (Oxymoron).(2)* இவ்வாறு ஆக்ஸிமோரன்
கூறியிருந்தாலும் அண்மைக்கால வரலாற்று மொழியியல் மற்றும் தொல்லியல்
ஆய்வாளர்கள் கூற்றுப்படி சிங்கள மொழி பெருவழக்காக கி.பி. 800}900ல் பேச்சு
மொழியாக எழுந்ததாகக் கொள்ளலாம்.
பழந்தமிழர் இலக்கியங்களில் இலங்கை
"ஈழம்' என்றே குறிப்பிடப்படுகிறது. ஈழு என்ற திராவிட மொழியிலிருந்து ஈழம்
பிறந்தது. இம்மொழியே இப்பொழுது "எலு' என்ற மொழி. தமிழுக்கும் முந்தைய
திராவிட மொழியாகும்; இது திருந்தாத பேச்சு வழக்கு மட்டுமே உள்ள
மொழியாகும். இதற்கு இலக்கியமோ, இலக்கணமோ கிடையாது.
இப்படிப்
பழந்தமிழ் வடிவம் இங்கு வழக்கில் இருந்தபோதுதான் புத்தமதம் கி.மு.
இரண்டாம் நூற்றாண்டில் இலங்கையில் நுழைகிறது. அப்போதுதான் பாலி மொழி
இலங்கைக்குள் அடியெடுத்து வைக்கிறது. பேச்சு வடிவத்தில் இருந்த ஈழமொழியின்
மீது பாலியும் சம்ஸ்கிருதமும் ஆதிக்கம் செலுத்த, இந்த ஆதிக்கத்தின்
விளைவால் உருவான கலப்பு இன மொழியே சிங்கள மொழியாகும். அதனாலேயே
தமிழ்மொழியில் உள்ள அநேக சொற்கள் சிங்களத்திலும் கலந்து இன்று வரை
பேசப்பட்டு வருகின்றன.
தமிழ்தேவி, சோழமக்கள், அன்னியக்கரை, மறுகரை போன்றவை மகாவம்சத்தில் காணப்படும் தமிழ்ச் சொற்களாகும். (3)*
கி.பி.
12-ஆம் நூற்றாண்டில் சோழப் பேரரசின் ஆதிக்கத்தில் இலங்கை வந்த பிறகே
சிங்களமொழிக்கென எழுத்து வடிவம் கிடைத்தது என்பது அறிஞர்கள் பலரின்
கருத்தாகும்.
தமிழர்கள் புத்த மதத்துக்கு தீராத விரோதிகளாக என்றும்
இருந்ததில்லை. அவரவர் தத்தமது மதக் கொள்கையை கடைப்பிடித்து வந்தனர்
என்பதற்கும் சான்றுகள் இலங்கையில் மட்டுமல்ல; தென்னிந்தியாவிலும் உண்டு.
தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் மணிமேகலையும், சீவகசிந்தாமணியும்
புத்தமத்தை உயர்த்திப் பிடித்திருக்கின்றன. இலங்கையிலோ தமிழர்களும் புத்த
மதப்பீடத்தில் தலைமைக் குருமார்களாக பொறுப்பு வகித்து
சிறப்பித்திருக்கிறார்கள். புத்த மடாலயத் தலைவர்களாக இருந்த தமிழர்கள்:
சங்கமிதா - 4-ஆம் நூற்றாண்டு
புத்தமித்ரா - 5-ஆம் நூற்றாண்டு
வஜ்ரபோதி - 7-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியும் 9-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும்.
அனுராதா - 12-ஆம் நூற்றாண்டு
தர்மகீர்த்தி - 12-ஆம் நூற்றாண்டு
மற்றும் குபலன்கா - 13-ஆம் நூற்றாண்டு.
மேலும்
திக்கநாகர், (வட இந்திய நாளந்தா பல்கலைக்கழகத்தில்) தர்மபாலா போன்ற
தமிழர்கள் புத்த பீடத்திற்குத் தலைவர்களாகத் தங்களது பங்கினை விரும்பி
அளித்திருக்கிறார்கள்.
போர்த்துக்கீசியர் இலங்கைக்கு வந்தபோது
இருந்த கோட்டை மன்னனின் ஆட்சிப் பகுதியில் தமிழர்கள் நிறையப் பேர்
வசித்ததாகவும், மேற்கு, வடமேற்கு ஆட்சிப் பகுதியில் தமிழ்ப்
பள்ளிக்கூடங்களைக் கண்டதாகவும், நிர்வாகத்தில் கூட அவர்கள்
பங்கேற்றிருந்ததாகவும் போர்த்துக்கீசியக் குறிப்புகள் கூறுகின்றன.
இன்றைய
சிங்கள வரலாற்று ஆசிரியர்களோ இலங்கையின் வரலாற்றை, தமிழர்-சிங்களவர்
ஆகியோரின் பகைமையை அவ்விரு இனங்களும் போரிட்டுக் கொண்டே இருந்த வரலாறாகவே
உள்ளது என்று திரித்து எழுதுகின்றனர். மேலும் வரலாற்றில் தமிழர்களின்,
தமிழ் மக்களின் கலாசாரப் பங்களிப்பை அதன்மூலம் கிடைத்த மேன்மையை
இழிவுபடுத்தி, குறைத்து மதிப்பிட்டு அல்லது மறைத்துவிடும் முயற்சியில்
இலங்கையின் வரலாற்றை அவர்கள் சித்திரிக்கின்றனர்.
இது மன்னராட்சிக்
காலத்தில் தங்களது மதமான புத்த மதத்தின் மேலாண்மை வீழ்ந்தது என்ற
கருத்துக் கொண்டு மதவாதிகளின் உள்ளங்களில் ஏற்பட்ட கருத்துக்
குழப்பமாகும். (4)*
மகாவம்சத்தையும் புத்தமத தத்துவத்தையும் விவாதிக்கையில் மூன்று நம்பிக்கைகள் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டிருப்பதைக் காண முடிகிறது.
(1) ஆரிய இனம் என்ற நம்பிக்கை; சிங்கள மொழி பேசும் மக்கள் இனரீதியாக ஆரிய இனத்தைச் சார்ந்தவர்கள் என்ற நம்பிக்கை.
(2) சிங்கதீவு~விஜயன் என்ற மன்னன் இலங்கைத் தீவில் அடியெடுத்து வைத்து ஆட்சியை நிலைநாட்டுவதற்கு காரணமானவன் என்ற மூட நம்பிக்கை.
(3) தர்மதீவு~புத்தரின் இலங்கையோடு உள்ள அவரது சிறப்பான உறவு பற்றிய மூட நம்பிக்கை. (5)*
இவை
யாவும் தவறான தத்துவங்களின் மேல் எழுந்த நம்பிக்கைகள் ஆகும். இவை ஏன்
எழுப்பப்பட்டன? கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இலங்கையில் வடபகுதியைத்
தமிழர்கள் கைப்பற்றி ஆண்டபோது வெறுப்புற்ற புத்த மதவாதிகளால்
தோற்றுவிக்கப்பட்ட பொய்யான கருத்துக்களே இவை.
அப்போது உறுதியான
தேசியத் தத்துவம் எதையும் புத்தர்கள் கொண்டிருக்கவில்லை. தங்களின் தனித்
தன்மைக்கு ஒரு தத்துவத்தைத் தேடிக் கொண்டிருக்கையில் இது பிறந்தது. (6)*
இதன்
மூலம் "இன மேலாண்மை, நாகரிகப் புகழ்பாடுதல், ஆரிய இனத்துடன் சிங்கள இனத்தை
இணைத்த கடந்த காலத்துதி, புத்த கலாசார நம்பிக்கை முதலியவற்றை அவர்கள்
தேர்ந்தெடுத்தார்கள்' என்று வரலாற்று ஆய்வாளர் டாக்டர் குமாரி.
ஜெயவர்த்தனே குறிப்பிடுகிறார்.
சுருக்கமாகச் சொன்னால், வரலாற்றைப்
பொய்யாக்கி, தொன்று தொட்டு வாழ்ந்தவரைத் தாழ்ந்தவராக்கி, பெரும்பான்மைத்
திமிராலும், அதிகார சிம்மாசனத்தில் அமர்ந்து இருக்கும் ஆணவத்தாலும்
தமிழர்கள் உரிமைக்கு உலைவைத்து, உயிருக்கு விலைவைத்து, உடமைக்குத்
தீவைத்து, தமிழ் இனத்தையே பூண்டோடு அழித்து வரும் கொடுமையான நிலைமை
திடீரென்று குதித்து விடவில்லை. படிப்படியாக, திட்டமிட்டு
உருவாக்கப்பட்டது. அந்தத் திட்டம் பெரும் அளவிற்கு வெற்றியும்
பெற்றிருக்கிறது. ஆனால், வரலாற்றில் இந்த ஒழிப்பு முறைக்கு எதிராகப்
பாதிக்கப்பட்ட தமிழ் இனம் தொடர்ந்து போராடி வந்திருக்கிறது. அந்தப்
போராட்டம் இறுதி வெற்றி வரை தொடரும் என்பதில் சந்தேகமே இல்லை.
தமிழன்
இலங்கை மண்ணுக்குச் சொந்தக்காரன்~முதல் பங்குதாரன் என்ற உண்மையை கடந்த
இரண்டாயிரம் ஆண்டு கால வரலாறு, நமக்குப் புலப்படுத்துகிறது.
நாளை: இலங்கை - ஐரோப்பியர் வருகையும்
அவர்களது ஆட்சியும்
*(1)
(i) ‘‘The Tamil spoken in Ceylon represents a pre Pallava period with
its ancient morphological and grammatical forms and its repertoire of
words considered obsolete for centuries on the neighbouring continent’’
-Tamil
Culture -Its past, Its present and future - By Father (Dr) Xavier
S.Thanianayagam, Tamil Cultural Society -Ceylon 1955 - Page 8-9
NOTES
W.Geiger ‘‘The Mahavamsa’’ -P-165, 264
Colombo 1950
*(2)
(ii) "கி.மு.2000 முந்தைய தமிழர் (இலங்கைத் தீவில் பேசப்பட்ட மொழி) சுய
மொழியில் பேசினர். அப்போதைய காலத்தில் அது உருவானது. அவர்கள் ஆதிகால
திராவிடர் ஆகும்'!- மொழியியலாளர் எச்.எஸ்.டேவிட்.
*(3) (iii) ""ஆதிகால திராவிடத்திலிருந்து தமிழ் சிங்கள மொழி உட்பட 20 மொழிகள் பிறந்தது'' Oxymoron- மொழி இயலாளர்.
*(4) NOTES
W. Geiger ‘‘The Mahavamsa’’-p-165, 264 Colombo 1950
*(5)
‘‘The writings of many of the Buddhist ‘patriots’ Anagarika Dharmapala,
Piyadasa Sri Srisena, Battaramulle Sri Subuti, and articles in journals
like the ‘‘Sinhala Jatiya’’ and Sinhala Baudhaya, abounded in claims
not only that Buddhism was the only true religion, all others being
mere superstitious, but the pure Aryan Singhala of the Sihadipa were
the chosen race with a historic mission to preserve Buddhism in
Dhammadipa and were therefore superior to the Tamils, Moors, Malayalis,
Sindhis and Chettiars who were Doubly doomed as being ‘‘infidels of
degraded race.’’
-Kumari Jayawardane
‘‘Revival revolt and race’’
*(6)
Vijaya according to Mahavamsa was the founder of the Sinhala ‘race’ and
landed in Srilanka on the day of Buddha’s death, interwoven with
‘Sihadipa’ idea; that civilization began in Srilanka with the landing
of Vijaya and the founding of the Aryan Sinhala race is the
‘Dhammadipa’ concept of the special role of the Sinhalese as guardians
of the Buddha Dhamma. For not only was it believed that Buddha visited
Srilanka three times, but on his death bed he is also said to have
asked ‘Sakra’ to protect Vijaya in his historic mission to Srilanka the
land where the Damma would flourish for five thousand years. In this
way were interwined the racist theory of Aryan Origin, the traditional
myths of Vijaya and divinely ordained mission of the Sinhala ‘race’ to
project the Buddhist religion. Racial purity and religious purity were
thus, combined and the ‘Pure Aryan Sinhalese’ became the appointed
guardians of the ‘Pure Doctrine’ of Buddhism.
-Dr.Kumari Jayawardane
http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=69376&SectionID=133&MainSectionID=0&SEO=&Title=%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81:+5.+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF+%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF?
![[Untitled-1+copy.jpg]](https://4.bp.blogspot.com/_fvNvMjsJ6Ow/Sj4to0ColnI/AAAAAAAAAy4/deVnEitFr3A/s1600/Untitled-1%2Bcopy.jpg)
ஓடும்நதி........!
www.odumnathi.blogspot.com
♥ "இலங்கைத் தமிழர் வரலாறு பாகம் 1,2,3,4,5 " -தினமணியில் தொடர் ♥
http://odumnathi.blogspot.com/2009_06_01_archive.html
http://odumnathi.blogspot.com/2009_06_04_archive.html
http://odumnathi.blogspot.com/2009_06_07_archive.html