இவற்றை முதன் முதலாகத் தனி நூலாக ரா.ராகவையங்கார் 1905-இல் பதிப்பித்துள்ளார். பின் வந்த பதிப்பாசிரியர் சிலர் இதைப் பின்பற்றியுள்ளனர்.
- ந.சுப்பு ரெட்டியார்,
- ஞா.மாணிக்கவாசகன்,
- கபிலர்
போன்றோர் 110 பாடல்களைத் தந்துள்ளனர்.
- டி.கே.சி.பதிப்பில் 99 பாடல்கள் அமைய ந.சேதுரகுநாதன், தன் இருபத்திரண்டு பாடல்கள் இவற்றோடு சேர்த்து உரை எழுதி 130 பாடல்கள் தருவது குறிப்பிடற்பாலது.
- புறம் 43,
- கைக்கிளை 65
என அமையும் இந்நூலுக்கு கடவுள் வாழ்த்தும் உண்டு.
- பாண்டியன்- 56,
- சோழன்- 30,
- சேரன்- 22
என்பனவாகக் கிடைத்த பாடல்கள் அமைகின்றன. தொகுப்பு நூலாதலின் பாடல் வரிசை அமைப்பு உரையாசிரியர் விருப்பம்போல் அமைகின்றது. இந்நூலுக்குப் பா உரை எனச் செம்பை சேவியர் புதுக்கவிதை வடிவில் உரை கண்டிருப்பது (2005) சுட்டத்தக்கது.
பேராசிரியர், நச்சினார்க்கினியர், அடியார்க்கு நல்லார், யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர், திவாகர முனிவர் எனப் பல பழைய உரையாசிரியரால் எடுத்துக் காட்டுப்பட்டுள்ள இம்முத்தொள்ளாயிரப் பாடல்கள் அதன் பெருமையையும், பரவலையும் உணர்த்துகின்றன. கற்பனைக் களஞ்சியமாகத் திகழும் இந்நூலுள் காணப்படும் சில பழக்க வழக்கங்கள் குறிப்பிடத்தக்கன.
- பாண்டியனும்(26), சோழனும் (70) பிடிமீதமர்ந்து வலம் வரல்;
- குதிரையில் உலா வரல் (28);
- பிறந்த நாளில் (நட்சத்திரம்) போரில் ஈடுபடாதிருத்தல் (22);
- போரில் தோற்ற வேந்தனின் மனைவியர் எரிமூழ்கல் (13);
- தன் சிறுவனை முன்னிறுத்தி மனைவியர் மூலமாக அடைக்கலம் புகுதல்(17);
- தன் மதில் மீது தன்னை வென்ற அரசின் இலச்சினையைத் தீட்டித் தன் பணிவைப் புலப்படுத்துதல் (90);
- மறவர், தம் தலைவன் பெயரினை மார்பில் பொறித்தல் (73);
- நெற்றியில் திருநீறு பூசுதல் (29)
என்பன அவை.
இனி இந்நூல் தமிழ் இலக்கிய வரலாற்றில் திருப்புமுனையாக அமையும் கூறுகளைக் காணலாம்.
தனித்தனியே தாம் விரும்பும் அரசனையோ வள்ளலையோ பாடும் சங்க மரபு இதில் மூவேந்தரையும் இணைத்து ஒருவரே ஒரே நூலில் பாடும் பண்பினை வளர்த்துள்ளது. சிலப்பதிகாரக் காண்டப் பகுப்பு இவருக்கு இவ்வெண்ணத்தைத் தூண்டியிருக்கலாம்.
மூவேந்தரும் சிறப்பிழந்து தமிழகத்தில் அந்நியர் ஆட்சி நிகழ்ந்த காலகட்டத்தில் தோன்றிய நூல் என்பதும் எண்ணற்பாலது. அந்நியராட்சிக்கு எதிரான தமது மனநிலையை உணர்த்த புலவர், மூவேந்தரின் பொதுப்பெயரில் இந்நூலை உருவாக்கினார் எனவும் கொள்ளலாம்.
இது மூவேந்தர்களுக்கான முதல் நூல் எனும் பெருமையுடன் பாட்டுடைத் தலைமை என்பது குறிப்பிட்ட ஒருவரைச் சுட்டாது பொதுப்படையாய் நிற்கும் மாற்றத்தையும் உருவாக்கியுள்ளது.
நூலுக்குப் புறத்தே தனித்துக் கடவுள் வாழ்த்து அமைத்தல் எனும் நிலையும் இதனுள் அமைகிறது. பக்தி இயக்கப் படைப்புகள் உட்பட பிற்கால இலக்கியங்கள் பலவும் சென்ற நூற்றாண்டுவரை இதற்கு முதன்மையளித்துள்ளன.
சங்கச் செய்யுட்கள்
எனும் யாப்புகளில் அமையத் திருக்குறளை அடியொற்றி இந்நூல் முழுமையும் வெண்பா யாப்பில் அமைந்துள்ளது.
ஒவ்வொரு பாடலும் ஒரு கருத்துடையது என்ற நிலையில் தனிப்பாடலாகவும் கொள்ளலாம்; பாட்டுடைத் தலைமை ஒன்று என்ற நிலையில் தொடர் நிலைச் செய்யுளாகவும் ஏற்கலாம் என்ற இரட்டை நிலையும் அதற்கு வெண்பாவும் ஏற்புடையது என்பதுவும் இதில் வெளிப்படுகிறது. தொடர்நிலை அமைப்பில்
- நளவெண்பா,
- அரிச்சந்திரவெண்பா
போல்வன பின்னெழுந்துள்ளமை உன்னத்தக்கது.
திணை துறைப் பகுப்பின்றியும் அகப் பொருளைச் சுவைக்க வள்ளுவர் வழிகாட்ட இப்புலவர் அதனைப் புறப்பொருளுக்குமாக விரிவுபடுத்தியுள்ளார். பிற்காலத்தியப் படைப்புகளில் திணைக் கோட்பாடு நீர்த்துப் போனமைக்கு இவையும் காரணமாகலாம். "கிடைத்துள்ள முத்தொள்ளாயிரப் பாடல்களும் ஒவ்வொன்றும் இன்னின்ன துறை பற்றி பாடப்பட்டன என்று அறிதற்கேற்ற பழைய குறிப்பு ஒன்றும் இல்லை. ஆதலால் ஒவ்வொரு பாடலுக்கும் ஏற்ற துறைக் கருத்து அமையும்படி பாடலுக்கு அடியில் குறிப்பு என்று அமைத்து எழுதியுள்ளேன்.'' (ந.சேதுரகுநாதன், முன்சுட்டியது, ப.22) என்ற கூற்றுப்படியே முத்தொள்ளாயிரத்திற்கு உரை கண்ட பிறகும் இதனைப் பதிப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனால் ஒரே பாடலுக்குப் பலவித நயங்கள் வெளிப்பட வாய்ப்பமைகிறது.
புரவலரை நேருக்கு நேர் நோக்கிப் பாடும் புறப்பாடல் சூழல் இங்குக் கற்பனைப் பாங்கினதாக அமைகிறது. இது அறங்கூறும் இலக்கியங்களில்
- மகடூஉ முன்னிலை,
- ஆடூஉ முன்னிலையாக
அமைய வழிகாட்டியது எனலாம்.
கிடைக்கும் முத்தொள்ளாயிரப் பாடல்களில் மிகுதியாக அமைவது கைக்கிளைப் (65) பாடல்களாகும். தொல்காப்பியர் சுட்டும் கைக்கிளையாகிய அகத்திணை இங்கு இடம்பெறவில்லை. பாடாண் திணையுள் அமையும் கைக்கிளைத் துறையின் விளக்கமாக, விரிவாகக் காணப்படுகின்றன. "காமப்பகுதி கடவுளும் வரையார் ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்" (1029); "ஊரொடு தோற்றமும் உரித்தென மொழி" (1031) எனும் தொல்காப்பிய நூற்பாக்களை இவற்றுடன் இணைத்துக் காண்பதற்கும் இடனுண்டு.
புறநானூற்றுப் பாடலுள் அமையும் பாட்டுடைத் தலைவனும், பாடிய புலவரும் உண்மை நிலையினர். ஆயின் இங்கு இடம் பெறுவது கற்பனைத் தலைவியும் கற்பனைத் தலைவனும் ஆகும். இங்ஙனம் கற்பிக்கப்பட்ட கைக்கிளை, கலம்பகம் போன்ற சிற்றிலக்கியங்களில் இடம்பெற ஏதுவாயிற்று.
இந்நூல் அகம், புறம் இணைவு காட்டுவதா? புறநூலா என்ற வினா எழும்பொழுது
புறமும் அகப்புறமும் சார்ந்த நூலாக, அதற்குரிய எடுத்துக்காட்டாக அமையக் காணலாம். இவ்வகையிலும் இதுவே முதல் நூலாகிறது. இதனுள் அமையும் பாடல்கள் அனைத்தும் பெண்பாற் கைக்கிளையைச் சார்ந்தனவாகும். முத்தொள்ளாயிரம் மானிடர் மீது பெண்டிர் காமுற்று நிற்பதைக் காட்ட, பக்திப்பாவலர்கள் இறைமீது மானிடம் கொண்ட காதலாக, நாயக நாயகி பாவமாகத் தொடர்ச்சி காட்டுவது சுட்டத்தக்கது.
தனிப்பாடல்களாக முத்தொள்ளாயிரம் அரசரின் நாடு, நகரங்களைச் சிறப்பித்த நிலை காப்பியங்களில் நாட்டுப்படலம், நாகரபபடலமாக விரிந்தமையும் காண்கிறோம்.
வீரமும் கொடையுமாகப் பெருமை காட்டிய சங்கப் புற மரபில் முத்தொள்ளாயிரத்துள் கிடைக்கும் பாடல்கள் வீரத்தையே முன்னிருத்துகின்றன.
என இவரைத் தம் கொடைத்திறத்தால் போற்றிப் பாதுகாத்த கொடை மரபு அருகிய நிலையை இது உணர்த்துகிறது. தொடரும் காலங்களில் எழுந்த இலக்கியத்துள்ளும் பாட்டுடைத் தலைவனின் வீரம் புகழப்பட்டுள்ள அளவிற்குக் கொடைத்திறம் பாராட்டப்படாமையும் நோக்கத்தக்கது.
மூவேந்தர்களைப் பாடினும், அவர் தம்
- வீரச் சிறப்பும்,
- வெற்றிச் சிறப்பும்,
- யானை மறமும்,
- குதிரை மறமும்
சிறப்பிக்கப்பட்டிருப்பினும் அவர் செய்த போர் குறித்த- எங்கே, எப்பொழுது, யாருடன் என்பன போன்ற விளக்கங்கள் இல்லை.
மூவேந்தருக்கும் உரிய அடையாளச் சின்னமான
என அமைதல் சுட்டப்படாது மூவரும் பொதுவாகப் பிற மலர்களால் அமைந்த மாலைகளை அணிந்துள்ளதாக மாற்றம் கண்டிருப்பதும் நோக்கற்பாலது.
அகப்பொருள் துணை கொண்டும் பாட்டுடைத் தலைவனைப் புகழ்ந்துரைக்கலாம் எனும் உத்தியை முத்தொள்ளாயிர ஆசிரியர் உணர்த்துகிறார். பிற்காலத்தே புரவலர் மீதெழுந்துள்ள அகப்பொருட் சிற்றிலக்கியங்கட்கு இது வழிகாட்டி எனலாம்.
தலைவியின் கைக்கிளை புறத்தே வெளிப்படுத்தப் படுகின்றமையால்
- செவிலிக்கூற்று (82),
- தோழிகூற்று (98)
என்பனவும் அமைகின்றன. இவண் தோழி தன் தலைவியின் நிலையைச் சுட்டித் தலைவனான சேரனிடம்,
வரை பொரு நீள்மார்பின் வட்கார் வணக்கும்
நிரை பொரு வேல் மாந்தைக் கோவே -
நிரை வளையார்
தம் கோலம் வவ்வுதல் ஆமோ அவர் தாய்மார் செங்கோலன் அல்லன் என (98)
என முறையிடுதல் சிந்திக்கத்தக்கதாம்.
முத்தொள்ளாயிரம் வழிகாட்டலின் பயனாக, அல்லது இதில் உள வித்துகளின் இயல்பாகத் தமிழ் இலக்கியப் பரப்பில் புதிதாகத் தோன்றிய இலக்கியங்கள் பற்றிய சுட்டுதல் இங்கு அமைகிறது.
இவையே மட்டுமின்றிப் பாட்டுடைத் தலைவனை அக, புறப் பொருண்மைகளால் புகழ்ந்துரைக்கும் கலம்பகம்; தூதுப் பாடல்கள் வழி தூதிலக்கியம் என்பன தோன்றுவதற்கும் இது கால்கோளிட்டுள்ளது.
உலா வந்த தலைவனைக் கண்டு காமுற்ற பெண்ணை முத்தொள்ளாயிரம் காட்ட அத்துடன் அப்பெண்ணுக்குக் குறி கூறுவதாக அமையும் குறம், குறவஞ்சி என்பனவும் நினைக்கற்பாலன.
இலக்கிய வகைமைகளைச் சுட்டும் பாட்டியல்களில்
- கைக்கிளை,
- மறம்,
- யானைத் தொழில்,
- ஊரின்னிசை,
- தசாங்கம்,
போல்வன இடம்பெறவும் முத்தொள்ளாயிரம் துணை நின்றுள்ளது எனக் கருதலாம்.
மறைந்துபோன தமிழ் நூல்களுள் ஒன்றாக மயிலை சீனி வேங்கடசாமி, யாப்பருங்கல விருத்தியுரை சுட்டும் கடிய நன்னியார் இயற்றிய "கைக்கிளைச் சூத்திரம்," எனும் நூலைத் தருகிறார் (பக்.261- 262). இதன் காலம் அறியப்படவில்லையாயினும் இத்தகையதொரு இலக்கண நூல் எழ முத்தொள்ளாயிரக் கைக்கிளைப் பாக்கள் கை கொடுத்திருக்கலாம் என எண்ணவும் இடனுண்டு.
- இற்செறிப்பு (24),
- கெளவை (29),
- வெறியாட்டு (106),
- அலர் (100)
என்பன போன்ற அகப் பாடல் மரபுச் சொற்களுடன் சங்க மரபுத் தொடர்ச்சி காட்டும் இந்நூலின் கற்பனை வளம் அளப்பரிது. இதனுள் கிடைக்கும் கைக்கிளைப் பாடல்களைத் தனியே மேலாய்வு செய்யவும் வாய்ப்புள்ளது. தொடர்ந்து உரைகள் தோன்றிக் கொண்டேயிருத்தல் இதன் பெருமைக்குச் சான்றாம்.
இந்நூலின் முழுமை கிடைத்திருப்பின் இக் கட்டுரையின் கருதுகோளான "தமிழ் இலக்கிய வரலாற்றுத் திருப்புமுனை - முத்தொள்ளாயிரம்" என்பது மேலும் வலுப்பட்டிருக்கும்.
இணைப் பேராசிரியர் ச. சிவகாமி, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்.