பனைமர வகைகளுக்குத் தக்கவாறு பனையோலைகளின் மூப்பு வேறுபடும். 18நூ முன்னர் எந்த ஓலையை எந்தப் பனையில் இருந்து எடுத்து எழுதினர் என்று சொல்ல முடியாது. இன்று பொத்தக வெளியீட்டாளர் மலிவான தாள்களை மலிவுப் பதிப்பிற்கும், தரமான தாள்களை தரமான பதிப்பிற்கும் பயன்படுத்துவது போல, ஓலை வெளியீட்டாளர் அன்று ஓலைகளைப் பயன்படுத்தினர் என்பதால், ஓலைகளின் காலமூப்பு 100 இல் இருந்து அதிகப் பக்கம் 300 ஆண்டுகள் வரை இருக்கக் கூடும்
என்று அறிவியலாளர் கூறுவர்.
1) இயல்பாகவே ஓலைமூப்பு என்பது நுண்ணுயிரி, செல்லரிப்பு போன்ற உயிரியல் காரணங்களாலும், தட்பவெப்ப நிலையாலும், தூசி, அழுக்கு, பாசி போன்ற வேதியியல் காரணங்களாலும் ஏற்படும். அதுவே, நூலகம் பேணல் குறையோடு இருந்தால் சிதைவு அதிவேகமாகும். சாதாரணமாக நமது வீட்டில் இருக்கும் பழம் பொத்தகங்களின் சிதைவுகளைப் பார்த்துத்தானே இருக்கிறோம்.
கடந்த 2012 இல் "பிரான்சிய நிறுவனம், புதுச்சேரி" செய்த ஆய்வில், பேணல் குறைபாட்டால், 25% சுவடிகள் உலுத்து, நுணுங்கிப் போய்விட்டன.
ஆக, நாம் ஏற்கனவே கணக்கிட்ட 40 நெய்தல் (இலச்சம்) ஓலைப்பக்கங்களில் 10 நெய்தலை, அனலிலும் புணலிலும் போடாமல், நமது அறிவின்மையால் கரையானிடம் போட்டு விட்டோம்.
இப்ப அரசிடம் உள்ள சர்க்கரை மூட்டைகளை எறும்பு தின்று தீர்த்துவிடுவது போலத்தான், நெல்மூட்டைகளை எலி தின்று தீர்த்து விடுவது போலத்தான், 10 நெய்தல் ஓலைப் பக்கங்களை கரையான்கள் தின்று தீர்த்து விட்டன.
"வாடிய கரையானுக்கும் வாடும் ஊழி அல்லவா இது?". படம்-1. ஒரு நூலகத்தில் அழிந்து போன சுவடிகளைப் பார்வையிட்ட போது நான் எடுத்த படம்.
2) ஓலைக்கு அகவை மூத்துப் போனால் என்னதான் செய்வது? என்று சிலர் கருதக் கூடும். ஓலை பேணலில் மிகப்பெரிய வல்லுநர் என்றால் அது திரு.பெருமாளாகத்தான் இருக்கக்கூடும். எளிமையான முறைகளை அவர் செய்வதும் பயிற்றுவிப்பதும் போற்றத்தக்கது. நான் அவரின் கருத்தரங்கம் அல்லது பட்டறை ஒன்றில் கலந்து கொண்டு வியந்து போனேன்.
படம்-2 ஐக் காண்க. 2012ல் நடந்த ஒரு கருத்தரங்கில், புதுவை பிரான்சிய நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் திருவாட்டி ஈவா வில்டன், பேணல் குறைவாலும், குளுமி (A.C) வசதிக் குறைவாலும் எத்தனை அழிவு ஏற்பட்டிருக்கிறது என்று படத்தோடு விளக்கினார்.
இங்குக் காட்டப்பட்டிருக்கும் படம்-2 அவருடையது. ஒரே இலக்கியத்தின் படிகள் வெவ்வேறு நூலகத்தில் பராமரிக்கப்படும் நிலையை அது காட்டுகிறது.
இதில், 3-ஆவது ஓலைப்படம், குளுமி வசதியோடு சிறப்பாகப் பேணப்படும் கொல்கத்தா நூலகத்தில் உள்ள ஓலையின் படம். ஓலை சிதையாமல் இருப்பதைக் காண்க. 2-ஆவது ஓலைப்படம், உ.வே.சா நூலகத்தில் பராமரிப்புக் குறையொடு குளுமி வசதியும் அன்றைய அளவில் இல்லாததனால் ஏற்பட்டுக் கொண்டிருந்த சிதைவைக் காட்டுகிறது. 1-ஆவது ஓலைப்படம், “இந்த ஓலை இனி இருந்தென்ன போயென்ன” என்ற நிலை எட்டியதைக் காட்டுகிறது.
தமிழ்நாட்டில் இருக்கும் ஓலைபேணல் குறைபாடுகளை வெளிநாட்டு அறிஞர் வந்து சொன்னபோதுதான் எனக்கு, எமக்கு தலையில் குட்டியது போல நாணிப் போனோம். ஆனால், அரசு அதிகாரங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும், கல்வியாளருக்கும் சிறிது கூட நாணம் வரவில்லை என்பதைக் காலந்தாழப் புரிந்து கொண்டோம்.
3) படம்-3ஐக் காண்க. சங்க இலக்கியங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகள் இருக்கின்றன. அவை எத்தனை எத்தனை என்று நம்மில் யாருக்குத் தெரியும்? யாராவது ஓர் அதிகாரி அல்லது கல்வியாளரிடம் கேட்டுப் பார்த்து எனக்கும் சொல்லுங்கள்.
ஈவா வில்டன் 2012ல் பல நூலகங்களிலும் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் படம்-3ல் உள்ள சில சங்க இலக்கியங்களுக்கான புள்ளி விவரம் தந்தார். அந்த அட்டவனையை ஆழ்ந்து பார்க்க.
குறைந்த பக்கமாக, பரிபாடலுக்கு 3 ஓலைச்சுவடிகள் இருந்ததையும், அதிக பக்கமாக திருமுருகாற்றுப் படைக்கு 55 ஓலைச்சுவடிகள் இருந்ததையும் அவற்றில் கொல்கத்தாவில் 5 சுவடிகள் காணாமல் போனதையும் அட்டவனைக் காட்டுகிறது.
இந்த அட்டவனை சொல்லும் பல செய்திகள் ஒவ்வொருவரையும் சிந்திக்க வைக்கும். உணர்வாலும் அறிவாலும் எழக்கூடிய கேள்விகள் நிறைய.
ஆயினும், அட்டவனை சொல்லாத ஒரு செய்தியை இங்கே சொல்கிறேன்: குறுந்தொகைக்கு 10 சுவடிகள் (2+8) இருந்ததில் 1 காணாப்போக, மீதி 9ம் நுணுங்கி அழிந்து விட்டன. அதாவது, குறுந்தொகைக்கு ஓலைச்சுவடியோ தாட்சுவடியோ ஒன்றுகூட இல்லை (2015 நிலையில்). அல்லது படிக்கும் நிலையில் இல்லை. இருந்தால் அது ஓலைத்தூளாக இருக்கக் கூடும். அதைச் சாம்பிராணியோடு வேண்டுமானால் கலந்து பூசைதான் போடமுடியும்.
இன்னொரு செய்தியையும் சொல்கிறேன். குறுந்தொகைக்கு உ.வே.சா உள்ளிட்ட எத்தனையோ பேர் உரை எழுதியிருக்கலாம். ஆனால் தி.வே.கோபாலையரிடம் குறுந்தொகை பயின்ற முனைவர் ஈவா வில்டன், குறுந்தொகைக்கு செம்பதிப்புக் கொண்டு வந்தவர். அரிய செயல். இந்தப் பதிப்பை விட உண்மையான பதிப்பு என இனி யாரும் கொண்டு வந்து விட முடியாது. மாணவர்களோ, ஆராய்ச்சியாளரோ ஈவாவின் பதிப்பை மட்டுமே இறுதிப் பதிப்பாகக் கொண்டு ஊழிதொறும் படிக்க முடியும். ஏனென்றால், குறுந்தொகைக்குக் காலம் கொடுத்த எல்லா சாட்சிகளும் அழிந்து விட்டன.
ஒன்று செய்யலாம்: ஈவாவின் குறுந்தொகை உள்ளிட்ட பல பதிப்புகள் தப்பு என்று சொல்லி, அரசியல் பலத்தைக் கொண்டு இடைச் செருகல் செய்து வேறொரு பதிப்பைத் தமிழ்க் கல்வியுலகில் உலவ விடலாம். அதில் நமது அரசியல் கோட்பாடுகளை அள்ளி விடலாம். சாட்சி அழிந்து போனபின் யார் கேள்வி கேட்க முடியும்?.
சரி - தமிழ்த்துறையினர் சொல்லட்டும்: சங்க இலக்கியங்களுக்கு எது செம்பதிப்பு? எனக்குத் தெரியாது. யாரேனும் கல்வியாளரிடம் கேட்டு எனக்குத் தெரிவித்தால் நன்றியுடையவனாவேன்.
ஓலைகளின் நிலையை அறிய இன்னும் இருக்கிறது.
4) 2012 அளவில், முதன்மையான 6 நூலகங்களில், நான்கில் குளுமி வசதிகூட இருந்ததில்லை. மீதி இரண்டிலும் பேருக்கு வைத்திருந்தார்கள் என்பர். 2015ல் தஞ்சைப் பல்கலை சார்ந்த ஓர் ஊழியர் அலுவலரிடம் பேசிக் கொண்டிருந்தேன். "நாங்க ஏ.சி போட்டு வைச்சுட்டோம் சார். ஆனாலும் சேதாரம் குறைய மாட்டேங்குது. அதனால், இப்ப ஏ.சி போடறதில்லை சார்" என்றார். நானே என்னடா இது? என்று குழம்பிப் போய்ட்டேன். ஆனாலும் மேலும் உரையாடிய போதுதான்
புரிந்தது, காலையில் 10 மணிக்குக் குளுமியைப் போட்டு, மாலை வீட்டுக்குப் போறப்ப அணைத்து விடுவது வழக்கம் என்று.
குளிர்ப்பும் வெக்கையும் 8, 16 மணிநேரத்திற்கு ஒரு முறை மாறி மாறி வருமென்றால், வார இறுதியில் 48 மணிநேரம் வெக்கையிலேயே கிடக்கும் என்றால், அதனால் உள்ளேயிருக்கும் பொருள் அதிவேகமாக விரியவும் சுருங்கவும் செய்து ஆயுளை இழக்கும். நடந்தது அதான். இவ்வளவு அற்பத்தனத்தை, அற்ப அறிவை எப்படி எமது பல்கலைக்கழகத்திற்குப் படைத்தாய் இறைவா என்று கேட்டு நகர்வதைத் தவிர எனக்கு வேறுவழியில்லை.
5) ஆயிரக் கணக்கான ஓலைக் கட்டுகள், நெய்தல் (இலச்சம்) கணக்கில் ஓலைப் பக்கங்கள் கொண்ட நூலகங்களில் பேரிடர்க் காப்பு (disaster mgmt) ஏற்பாடுகள் ஏதுமில்லை. எதாச்சும் நடக்கக்கூடாதது நடந்தால் யாழ்ப்பாண நூலக வரிசையில் சேர்த்துவிட்டு நினைவு நாளில் பொங்கித் தீர்க்கும் நிலைதான் உள்ளது.
6) நிருவாகக் குறைகள் மலிந்து கிடப்பதை எல்லா நூலகங்களிலும் அறியமுடிகிறது. சுவடிகளின் பகுப்பட்டவணைக்கும், நூலகத்தில் அவை இருக்கின்ற இடத்திற்கும் தொடர்பில்லாத நிலைகளைக் காணமுடிகிறது. அட்டவணையில் இருந்தாலும் பல ஓலைகள் நூலகத்தில் இருக்கின்றனவா? களவு போயினவா? அல்லது அழிந்து போயினவா? என்று யாராலும் சொல்லமுடியா நிலை உள்ளது. பல சுவடிகள் துணி மூட்டைகளைப்போல கட்டி வைக்கப் பட்டிருக்கின்றன. (Catologues are inaccurate and Fake. No Inventory process or practice in place.)
7) மூலஓலைகளில் இருந்து பின்னாளில் அறியப்பட்ட பாடபேதங்களும், பதிப்புப் பிழைகளும் பொருள் இழந்துபோகின்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆதாரம் இல்லாமையால் இலக்கியச் செம்பதிப்புகள் என்பன கேலிப்பொருளாகும் அவலநிலை உருவாகும் என்ற அச்சத்தைக் காணமுடிகிறது. அரிதின் பெற்ற தொன்மத்தின் தொடர்ச்சியானது, தமிழ் மொழிக்கு உலகெங்கும் பெருமை சேர்த்த அந்தச் சான்றானது, குமுகம் அறிய அழிந்துபோய்க் கொண்டிருக்கும் இந்தச்சூழல், “எந்தப் பாட்டை வேண்டுமானாலும் திருத்தி இதுதான் உண்மை” என்று யார் வேண்டுமானாலும் வெளியிடலாம் என்ற பேராபத்தை உள்ளடக்கியிருக்கிறது என்ற செய்தியையே கூறுகிறது. நேரிய சிந்தனையாளர்களை கலங்க வைக்கும் செய்தி இதுதான். அதேவேளையில் உண்மையான பாட்டு அல்லது பாட்டின் சொற்கள் “இடைச்செருகல்” என்று புறந்தள்ளப்படும் அவலமும் உண்டாகும். இந்திய அரசியல் வரலாறு, மூலத்தை மழுங்கடிக்கும் செயல்கள் நடந்துள்ளதை நமக்குக் காட்டுவதை நினைவுகூரல் வேண்டும். தமிழ் மூலங்களும், அந்தந்தக் காலத்தில் வலுப்பெறும் அரசியல் வலு, கொள்கை வலு, வகுப்பு வலு போன்ற காரணங்களால் திருத்தப்பட்டுவிடக்கூடும் என்பதே நிலைமை.
தமிழர்களின் கலாச்சாரத்தை, பண்பாட்டை முழுமையாகத் திசை திருப்பவும், தமிழர்களின் இலக்கியமெல்லாம் ஆரிய மலம் என்று இயக்கம் சொன்னதை நடைமுறைப் படுத்தவே மலத்தைப் போல அழியவிடப் படுகின்றன ஓலைச் சுவடிகள்.
உங்களுக்கு ஐயம் இருந்தால் ஏதாவது திராவிடப் பற்றுடைய தமிழறிஞரை, "திருக்குறளில் கடவுள் வாழ்த்து இருக்கிறதே" என்று கேளுங்கள். உடனே அவர் "அது இடைச்செருகல்" என்பார்.
சங்க இலக்கிய நிலையே மோசமென்றால், இடைக்கால, பிற்கால ஓலை நிலைகள் எப்படியிருக்கும், எவ்வளவு இருக்கும் என்ற செய்தியையே அறிய முடியவில்லை.
கோயில்களை விட்டு, தமிழை, வடுக, நம்பூதிரி, தீட்சித, சுமார்த்த பிராமணர்கள் துரத்தி அடித்தார்கள் என்றால், அவர்களுக்குத் துணையாக எள்ளளவும் குறைவின்றி, இடைக்காலப் பத்தி இலக்கியங்களை திராவிட, மார்சிய, தலித்திய அரசியல், கல்வி உலகை விட்டே துரத்தி அடித்திருக்கிறது என்றே சொல்லலாம். "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று சொல்லி செய்யும் கபட அரசியல், இதுவரை ஏதாவது இரண்டு தேவார வரிகளையோ, பாசுர வரிகளையோ, அல்லது முருக வரிகளையோ பேசியிருக்குமா?
எண்ணிப் பாருங்கள். தொன்மங்களின் சாட்சிகள் ஏன் அழிக்கப் படுகின்றன என்று?
9) எல்லா நூலகங்களிலும் இன்னும் படிக்காத, பதிப்புக்கு வராத எண்ணற்ற தமிழ்ச் சுவடிகள் இருக்கின்றன. உ.வே.சா நூலகத்தில் மட்டுமே 2014-15 காலக் கட்டத்தில், 450 ஓலைக்கட்டுகள் பதிப்பிடப் படாமல் இருந்தன. அதற்குள் எத்தனை தலைப்புகள் என்று தெரியாது. சரசுவதி மகாலிலும் ஏராளம்.
தமிழ்க் கல்வி, அறிவு உலகில் சுவடிக் காவந்து, எதிர்காலச் சூழல், படிக்கப்படாத ஓலைகள் பற்றிக்
கேட்டால், அவர்கள் பதில் என்ன தெரியுமா? "இலக்கியங்கள் எல்லாம் தாளுக்கு வந்துவிட்டன. அதனால் ஓலைகளைக் காப்பாற்றி வைக்க வேண்டிய தேவை இல்லை. மீதி எதாவது எங்காவது இருந்தால் அவை நாடி சோசிய ஓலைகள்தான்; அவை தேவையில்லை" - என்று இதையே பரப்புரை செய்கிறார்கள்.
விட்டால் இவர்களே சுவடி நூலகங்களைக் கொளுத்தி விடுவார். அது அப்படியே கிடந்து அழியட்டும் என்று பெருந்தன்மையோடு விட்டு வைத்திருக்கிறார் போல.
தமிழ் அறிவுலகம் அல்லது அறிஞருலகம் என்பது வறண்டு போய்விட்டதையே இது காட்டுகிறது.
இந்திய ஒன்றிய அரசின், இ.கா.தே.க.ந, தேசிய சுவடிக் காப்பகம், போன்ற இந்திய நிறுவனங்களும், ஆசிய ஆராய்ச்சி நிறுவனம் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களும், இந்தியாவில் பல மொழிகளில் இருக்கும் தொன்ம ஆவணங்களைக் கிட்டத்தட்ட 15க்கும் மேற்பட்ட வகைகளாகப் பிரித்து முறையாகச் சேகரிக்கின்றன.
“இலக்கியம்”, “மருத்துவம்(சித்த ஓமியோ யுனானி)”, “வருமம், அறுவை சிகிச்சை போன்ற உயர் மருத்துவ முறைகள்”, “விலங்குகளின் பிறப்பு, காப்பு, மருத்துவ முறைகள்”, “வேளாண்மை”, “கட்டடப் பொறியியல்”, “கோயிற் கட்டடக்கலை”, “கப்பல் கட்டும் பொறியியல்”, “மாழை அறிவியல்(Metal Science)”, “தச்சுக்கலை”, “சிற்பக்கலை”, “இசைக்கலை”, “நாட்டியக்கலை”, “வானவியல்”, “சோதிடக்கலை”, “யோகக்கலை”, “மற்போர்க் கலைகள்” போன்ற இத்தலைப்புகளில் எல்லாம் அவர்களின் சேகரிப்பு பரந்துவிரிகின்றது.
https://ignca.gov.in ,
https://namami.gov.in என்ற இவ் இரண்டு ஒன்றிய அரசின் தளங்களைக் காணுங்கள். எவ்வளவு பரந்து சிந்தித்திருக்கிறார் என்பது புரியும். நாம் தூக்கி வீசும் ஓலைப் பிரிவுகளை அவர்கள் காத்து வைப்பது புரியும். நம்மை எந்தக் கணக்கில் சேர்ப்பது?
தமிழ்நாடு தமது சுவடிகளை, செப்பேடுகளை, கல்வெட்டுகளை காவந்து செய்த அடையாளத்திற்காவது ஏதாவது ஒரு இணையத் தளத்தைச் செய்திருக்கிறதா?
இந்திய அரசை பல விதயங்களுக்குக் குறை சொல்லும் தமிழ்நாடு, தேசிய சுவடிக் காப்பகம் என்ற அமைப்பை உருவாக்கிச் சுவடிகளைக் காப்பதும் கண்காணிப்பதும் செய்வது போல, ஏன் தமிழ்நாடு, தமிழ்ச் சுவடிக் காப்பகம் என்ற ஒன்றைத் தொடங்கவில்லை?
தமிழ் அழிந்து நாசமாகப் போகட்டும் என்ற எண்ணந்தானே?
10) ஆயுர்வேத மருத்துவத்தை அண்டையில் கேரளா மிகப்பெரிய அளவில் வளர்த்திருக்கிறது. மருந்து உற்பத்தி நிறுவனங்கள் பெருகியிருக்கின்றன. இயற்கை, ஆயுர்வேதம் தேடி நம்மவர் கேரளாவிற்கு ஓடுகிறார். தற்போது ஆயுர்வேத மருத்துவமனைகள் த.நாவிலும் பெருகுகின்றன. இதற்கான ஓலைகள் கேரளாவுக்கு வெளிநாட்டில் இருந்து வந்ததா?
என் நூல்களை, ஓலைகளை மொழிபெயர்த்தோ, திருடியோ சங்கதத்திற்கு மாற்றிக் கொண்டனர் என்று சொல்லும் நமக்கு, நம்மதை காவந்து பண்ணி வைக்கணும், பயன்படுத்த வேணும், அதில் மரபுத் தொழில் அமைக்க வேண்டும் என்ற சொரனை மட்டும் ஏன் இல்லை?
11) தற்காலத்தில் ஓலைகளைக் காப்பது என்பது எண்மயஞ் (digitization) செய்தலே என்ற புரிதல் உருவாகியிருப்பது வரவேற்கத் தக்கதாகும். தமிழகத்தைப் பொறுத்தவரை, அந்த எண்மயத் திட்டங்கள், கடந்த 10-15 ஆண்டுகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சிறுசிறு திட்டுகளாக சிறிய அளவில் பயனற்ற மலிவான முறையில் செய்யப்பட்டுள்ளன.
வெறுமெ Xerox கடைக்காரரைக் கூப்பிட்டு அவருக்கு விலைப்புள்ளியைத் தந்து பக்கத்துக்கு இத்தனை பைசா என்று சில ஆயிரம் ஓலைப்பக்கங்களை கண்ணித்து (கண்ணித்தல்=Scanning), அவற்றை குறுசிறு வட்டுகளில் (CD/DVD/Thumb Drive) சேமித்து அலமாரியிலோ, மேசைத் தட்டிலோ வைத்துப் பூட்டி வைப்பதே வழக்கமாக இருக்கிறது. திருப்பி அதில் இருந்து ஏதாவது இலக்கியத்தின் படியை எடுக்க முடியுமா என்று கேட்டால், அப்படி எடுத்துப் பயன்படுத்தியவர் இருந்தால் எனக்கும் சொல்லுங்கள்!
இந்த ஓலைக் கண்ணிப்பு ஒரு கண்துடைப்பு. அதை கணிமை ஒழுக்கத்தோடு செய்யவேண்டும். Xerox கடைக்காரரை வைத்து அல்ல. கண்ணிப்பை ஒழுக்கமாகச் செய்தாரா என்ற தரக்கட்டுப்பாடு செய்தது கூட இல்லை. காட்டாக,
tamilvu.org என்ற தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் தளத்தைக் காண்க. மிக மட்டமான கண்ணிப்பு, தெளிவற்ற கண்ணிப்பு, தேடமுடியாத அல்லது தேடி அயர்ந்து போக வைக்கும் இணையத் தளம் என பல்வேறு குறைகளையும் அதிற்காணலாம். (நீளம் கருதி சுருங்கச் சொல்கிறேன்.)
நான் ஏதோ விவரமில்லாமல், தமிழ்ப் பற்றின் காரணத்தால் இங்கே அளந்து கொண்டிருக்கவில்லை. கணித்துறையில் Data, Content Management துறையில் புலமையுடைய எனக்கு, Information Architect ஆக, இன்னும் பல ஆளுமைப் பணிகளில் பணி செய்த எனக்கு, உலகில் இதை எவ்வளவு உயர்வாகச் செய்திருக்கிறார்கள், நாம் எவ்வளவு தரங்கெட்டுப் போய்க் கிடக்கிறோம் என்பது நன்கு புரிந்ததால் மட்டுமே இந்தக் கதறல்.
மனம் நொந்து சொல்கிறேன்: "உலகம் தலையின் மயிரைக் கூட மிகத் துல்லியமாக, பொறுப்பாக, அழகாகப் படமெடுத்து அதைக் காவந்து செய்கிறது, பேசுகிறது, முக்கியமாகப் பயன்படுத்துகிறது.
அந்த மயிரின் அளவுக்கேனும், தமிழ்நாடு ஓலைச்சுவடிகளைத் தரமாக விளக்கமாகக் கண்ணித்துப் படமாக்கிப் பாதுகாக்க வேண்டும், பயன்படுத்த வேண்டும் என்றுதான் நாம் கவலைப்படுகிறோம். ஆனால் செய்ததாகச் சொல்லி விசயராகவன் மாதிரி ஊழல் செய்திருக்கிறார்கள். வருத்துகிறது.
ஓலைச் சுவடிகளை மின்மயம் செய்தோம் என்று சொல்வோரிடம், இந்தச் செய்தியைச் சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம்.
படங்கள்: படமாக்கப் பட்ட ஒரு பெண்ணின் மயிரும், தமிழ் இணையக் கல்விக் கழகம், தனது சுவடிக் காட்சியகத்தில் வைத்திருக்கும் புறநானூற்று ஓலையின் ஒரு பக்கமும். ஒப்புமை பொருளுக்கல்ல. அந்தப் பொருளில் செய்த வேலையின் நேர்த்தியை ஒப்பிடவே நான் வருத்தத்தோடு எடுத்து இட்டிருக்கிறேன்.
நான் இன்னும் நுண்ணியமாக நீள நீளமாக எழுத முடிந்தவன். ஆனால் மேலோட்டமாக எழுதிய இவை போதும் என்று அமைகிறேன்.
சரி - என்னதான் செய்ய வேண்டும்? என்று நீங்கள் கேட்கலாம். கணி நுட்பியல் வழி என்ன செய்ய வேண்டும் என்பதை விரிவாக "சுவடிப் பாதுகாப்பு - ஒரு செயற்றிட்டம்" என்ற ஒரு கட்டுரையாய்ச் செய்து
academia.edu -இல் இட்டுவிட்டு ஓலைச்சுவடிகளை நான் மறந்து சுமார் 6,7 ஆண்டுகள் ஆயின. அக்கட்டுரையின் சுருக்கத்தை இயலுமெனின் இங்கே இடுகிறேன்.
ஓலைகளின் நிலையைப் படித்து என்னைப்போல வருந்தியோர்க்கும், பின்னூட்டந் தந்து ஊக்கியோர்க்கும் மிக்க நன்றி.
https://www.facebook.com/nayanam.nayanan