அருள் மெர்வின்

முனைவர் பாண்டியராஜாவை சென்னையில் அவரது வீட்டில் சந்தித்து உரையாடும் வரலாற்று நிகழ்வு (என் வாழ்க்கையின்) சென்ற டிசம்பர் மாதம் அரங்கேறியது. அன்றிலிருந்து இந்த பதிவை எழுதிக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம் மிஸ்ஸாகி சங்கப் புலவர்கள் எனக்கு முன்னால் பிறந்துவிட்டதால் அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. எத்தனையோ தமிழறிஞர்கள் இருந்தாலும் இருந்திருந்தாலும் சங்கப் புலவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை கொடுத்துத் தங்கள் பிரதிநிதியைத் தேரந்தெடுக்கச் சொன்னால் அதிக வாக்கு வித்தியாசத்தில் முனைவர் பாண்டியராஜாவைதான் தேர்ந்தெடுப்பார்கள் என்கிறது ஆக்ஸிஸ் இந்தியா அளவிலான ஒரு கருத்து கணிப்பு.
பழந்தமிழ் இலக்கியங்களை இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்குத் தேடிச்செல்லப்போகும் மனித இனமும், AI இனங்களும் முனைவர் பாண்டியராஜாவைக் கடந்துதான் செல்ல வேண்டும் என்ற அளவுக்குத் தமிழ் இலக்கியங்களை எளியவர்கள் முதல் அப்பாடக்கர்கள் வரை அணுகும் விதத்தில் டிஜிடல் உலகிற்குள் தனி ஆளாகத் தள்ளிவிட்டிருக்கிறார். தமிழ் இலக்கியங்கள் இவருக்கு முன்பாகவே டிஜிடைஸ் செய்யப்பட்டிருந்தாலும் நமக்கெல்லாம் செரிமானம் ஆகும் அளவுக்குத் தொடரடைவுகளை ஏற்படுத்தியிருக்கிறார். அவற்றை வைத்து இதுவரையிலான தமிழறிஞர்கள் மற்றும் இன்றைய அளவிலான AI செய்ய இயலாத பல்வேறு ஆய்வுகளைச் செய்து தமிழ் இலக்கியங்களுக்குப் புதிய பரிமாணங்களைக் கொடுத்திருக்கிறார்.
சங்கச் செம்மலான இவர் தமிழுக்காற்றியிருக்கும், ஆற்றிவரும் தொண்டுகள் பற்றி ஒருவேளை இதை வாசிக்கும் உங்களுக்கு இதுவரை தெரியவில்லை என்றால் அது உங்களது அறியாமையே தவிர வேறொன்றுமில்லை. மைக்கேல் ஜாக்ஸன் யாரென்று உங்களுக்குத் தெரியவில்லை என்றால் அது மைக்கேல் ஜாக்ஸனின் பிரச்சனையல்ல. முனைவர் பாண்டியராஜாவின் தமிழ் இலக்கியத் தொண்டு பற்றி இங்கே எழுதி தங்கள் அறிவை விருத்தி செய்து புண்ணியம் தேடுவதும் என் நோக்கமல்ல. நீங்களே தேடித் தெரிந்து கொள்ளுங்கள்.
மனிதக் கூட்டங்களின் ஒவ்வொரு தலைமுறையின் தலையெழுத்தைத் தீர்மானிப்பவர்கள் அந்த கூட்டத்தில் இருக்கும் பேராற்றல் படைத்த ஒரு சிலர். இப்படியெல்லாம் பேராற்றல் படைத்த மனிதர்கள் இந்த உலகில் வாழ்ந்திருக்கிறார்களா என்று அவர்களது வாழ்க்கை வரலாறுகளை அவர்கள் வாழ்ந்த ஊர்களுக்கே தேடிச் செல்லும் வாய்ப்பு எனக்கு ஓரளவு கிடைத்திருந்தது. முதன் முதலாக நம்முடன் வாழும் தமிழில் பேராற்றல் படைத்த ஒருவரைத் தேடிச் சென்றேன். முனைவர் பாண்டியராஜா தமிழின் ஐன்ஸ்டீன், ப்ரூஸ்லீ, ஜாக்ஸன், நெப்போலியன் எல்லாம். என்னுடைய ஆர்வமெல்லாம் ஒரு மனிதராக இவர் யார் என்பதை அறிந்து கொள்ள வேண்டுமென்பதாக இருந்தது. தமிழ் மரபு அறக்கட்டளை மூலமாக இவர் எனக்குப் பிரபலமானார். அதுவரை நம்மில் பலபேர் போல சங்க இலக்கியங்கள் மீதான ஆர்வம் எனக்கு இருந்தும் ஈடுபாடு இருக்கவில்லை.
ஏனென்றால், சங்க இலக்கியங்களுக்குள் நுழைவதற்கான நுழைவாயிலே எதுவென்று தெரியாமல் சுற்ற விட்டிருந்தார்கள். பிரபலமான உரைகள், புத்தகங்கள் எல்லாம் சங்க இலக்கியங்களைவிடக் கடினமாக இருந்தன. சங்க இலக்கியம் பக்கமே வந்துவிடாதே என்று ஹாரர் படங்கள் போல ஓட ஓட விரட்டி விட்டன. இன்டர்நெட்டில் கிடைத்த எளிமையான சங்க இலக்கியப் பதிவுகள், உரைகளெல்லாம் எழுதியவரின் திறமையை அவிழ்த்துக் காட்டுபவையாக இருந்தன. சங்க இலக்கியங்களை நேர்மையாக அவை எப்படி இருக்கின்றனவோ அப்படியே அணுக நுழைவாயிலில்லாமல் இருந்தது. சங்க இலக்கியத்துக்குள் நம் சொந்த வீட்டுக்குள் சாதாரணமாக நுழைவது போல நுழைந்து உள்ளே நாம் நினைத்தபடியெல்லாம் உலாவ, டீ போட்டுக் குடிக்க எளிமையான நுழைவாயிலாக முனைவர் பாண்டியராஜாவின் இணையத்தளங்களும் புத்தகங்களும் கண்ணில் பட்டன. நம் முன்னோர்கள் நமக்காக எழுதிவைத்துவிட்டுச் சென்ற சங்க இலக்கியங்களை நாமாகவே பள்ளிக்கூட அளவு தமிழறிவை வைத்துக்கொண்டே அணுகலாம் என்ற தைரியம் முனைவர் பாண்டியராஜாவின் தொடரடைவுகள் மூலமும் புத்தகங்கள் மூலமும் வந்தது. நம் இலக்கியங்களதானே என்று சங்க இலக்கியங்களில் எனக்குத் தெரியவந்ததையெல்லாம் சிறுகுழந்தை போல முகநூலில் எழுத ஆரம்பித்தேன். என்னைப் பாராட்டினார். தவறாக எழுதும் போதெல்லாம் தவறாமல் வந்து நறுக்கென கொட்டிவிட்டுப் போனார். ஆசிரியர் போல கொட்டுகிறார் என்று நினைத்தேன். ஆனால் அதில் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. கடைசியில் சொல்கிறேன்.
முகநூலிலேயே அவருக்குக் குறுஞ்செய்தி அனுப்பி தங்களைச் சந்திக்க முடியுமா என்று கேட்டேன். உடனே நாளும் நேரமும் குறித்து ஓகே சொல்லிவிட்டார். பத்திரிகையுலக பிரபலம் பரிசல் கிருஷ்ணா தங்களது தீவிர ரசிகர், அவரும் தங்களைச் சந்திக்க விரும்புகிறார் என்றேன். பெண்ணியப் புரட்சியாளர் எழுத்தாளர் காளியும் சந்திக்க விரும்புகிறார் என்றேன். எல்லாவற்றுக்கும் மேலாக என் மனைவியும் உங்களைச் சந்திக்க விரும்புகிறார் என்றேன். வரவேணும் வரவேணும் என்று சொல்லிவிட்டார். அவரைச் சந்திக்கப் படையெடுத்தோம்.
எங்கள் உரையாடலில் அவரது வாழ்க்கை பற்றி ஓரளவு அறிந்து கொண்டது என் வாழ்க்கைப் பாடமாகியது. தான் மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்று தங்கள் வாழ்க்கையை சுயசரிதை என்ற பெயரில் படம் போட்டுக் காட்டும் தைரியம் மகாத்மாவிலிருந்து பல பிரபலங்களுக்கு வரலாற்றில் இருந்திருக்கிறது, இருந்து வருகிறது என்பதும் மறுப்பதற்கில்லை. ஆனால், பெரும்பாலான பிரபலங்களின் வாழ்க்கை சாதாரண மனிதர்களால் முன்னுதாரணமாக எடுத்து வாழ லாயக்கில்லாதவை. முனைவர் பாண்டியராஜாவின் வாழ்க்கை சாதாரண மனிதர்களுக்கானது. அசாதாரணச் செயல்களைச் செய்ய சாதாரணமாக வாழ்ந்தால்கூட போதுமானது என்று உணர்த்துவது.
எனக்கு நாற்பது வயதைத் தாண்டியவுடனேயே வாழ்ந்து முடித்துவிட்ட நினைப்பு வந்துவிட்டது. இன்னும் கால் கிணற்றை எவருக்கும் பிரச்சனை கொடுக்காமல் தாண்டிவிட்டால் போதும் என்று சிந்தனையைச் செதுக்கிக் கொண்டிருந்த நேரத்தில்தான் மேற்படி சந்திப்பு நிகழ்ந்தது. முனைவர் பாண்டியராஜா சாக்ரடீஸ் போல நாற்பது வயதுக்கு மேல் மனிதனுக்குத் தாண்ட வேண்டிய கிணறுகள் இன்னும் பல இருக்கின்றன என்று கையில் விளக்குடன் வந்தார். கணிதப் பேராசிரியராகப் பணியாற்றி ரிடையர்ட் ஆகி பென்ஷன் வாங்க ஆரம்பித்த வயதில் தமிழ் இலக்கியங்களுக்காக செஞ்சுரிகள் பல போட்ட இன்னிங்க்ஸை ஆரம்பித்திருக்கிறார்.
இவர் ரிடையர்ட் ஆகி இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. இன்னும், தனக்கான உணவை, தன் மனைவிக்கான உணவை அவரே சமையலறை சென்று சமைக்கிறார். அவரது வீட்டில் வேலை செய்வதற்காக ஒரு பெண்ணும் இருக்கிறார். அவரை வேலை செய்யவிடாமல் பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறார். தன் பேரப்பிள்ளைகளுக்காக கதைகள் எழுதி ஆன்லைனில் தமிழ் கற்றுக் கொடுக்கிறார். மாலை வேளைகளில் தன் மனைவியாருடன் அமரந்து கடவுள் கீர்த்தனைகள் கேட்கிறார். கடவுள் நம்பிக்கையுள்ள முனைவர் பாண்டியராஜாவின் மேல் தமிழ் மொழி நம்பிக்கை வைத்திருக்கிறது. அதன் பிறகு நடு இரவு வரை தமிழ் இலக்கியங்களுடன் லேப்டாப்பில் வாழ்கிறார்.
இந்த சமயத்தில் அவரது மனைவியையும் அறிமுகப்படுத்த வேண்டும். கிராமத்துக் காதலை பாரதிராஜா போன்றவர்கள் படமெடுப்பதற்கு முந்தைய காலகட்டத்திலேயே ஒரு காதல் கதையுடன் திருமணம் செய்து இன்றுவரை இருவரும் காதலித்துக் கொண்டிருக்கிறார்கள். முனைவர் பாண்டியராஜா தமிழ் இலக்கியங்களுக்காகச் செய்த, செய்து கொண்டிருக்கும் அத்தனை விஷயங்களையும் அவருக்கே டஃப் கொடுக்கும் அளவுக்குத் தெரிந்து வைத்திருக்கிறார் அவரது மனைவி. நடமாட இயலாத நிலையியிலும் எங்களைச் சந்தித்துப் பேச அவரும் எழுந்து வந்து அமர்ந்து கொண்டார். “இவர் நேரம் செலவழிப்பதெல்லாம் தமிழ் இலக்கியங்களுக்கு, ஆனால் பென்ஷன் கிடைப்பது என்னவோ இவர் கணித ஆசிரியராகப் பணியாற்றிதற்கு”, என்று சொல்லிச் சிரித்தார்.
தங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த கடினமான பல சம்பவங்களையும் சிரித்துக் கொண்டே சொல்லும் ஒரே மனம் இருவரிடமும் இருந்தது. தங்களது சொந்த வாழ்க்கையில் சந்தித்த சந்தித்துக் கொண்டிருக்கும் சிறுபெரு சிரமங்களையெல்லாம் சிறுபிள்ளைகள் போல சிரித்துக் கொண்டே கதை போல சொல்லிக் கொண்டிருந்தார்கள். அது நாங்கள் கற்றுக் கொண்ட இன்னொரு வாழ்க்கைப் பாடமாகியது. வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நாம் சிரித்து வாழ்வதைக்கூடத் தடுக்க முடியாது.
நான் சங்கம் பற்றி எழுதிவருவதற்கு முனைவர் பாண்டியராஜாவிடம் அடிக்கடி கொட்டு வாங்கியதால் எனக்கு ஆசிரியர் என்ற டெரர் மனநிலையுடன் சந்திக்கச் சென்றேன். நேரில் சந்தித்த போது நீ என் பையன் மாதிரி என்றார். உருகிவிட்டேன்.
தமிழிலுள்ள எல்லா நிகண்டுகளின் (பழங்காலத் தமிழ் Thesaurusகள்) சொற்களையும் ஒரே சொடுக்கில் தேடும் வசதியை உருவாக்கும் மிகப்பெரிய ப்ராஐக்டை தன் லேப்டாப்பில் தனி ஆளாகத் தற்போது தன் இரவு நேரங்களில் செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியவருகிறது. பல கோடிகள் செலவில் பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டிய ப்ராஜக்ட் இது. தமிழால் வாழ்பவர்களால் சூழப்பட்ட இந்த உலகில் தமிழுக்காக வாழ்பவர்.