ஆணும் பெண்ணும்
நிகரெனக் கொள்வதால்
அறிவிலோங்கி இவ்வையம் தலைக்குமாம்.
என்று ஆணித்தரமாகப் பாடிய மகாகவி பாரதியின் சிந்தனையை நினைவூட்டி,
பெண்ணியம் போற்றி, பெண்ணியம் பேசுவோம். ஐநா சபை
1975 ஆம்
ஆண்டு மார்ச் எட்டாம் தேதியை உலக மகளிர் தினமாக அறிவித்தது.
அத்துடன் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச பெண்கள் தினத்திற்கு ஒரு முழக்கத்தையும்
முன்வைத்து வருகிறது. அதன்படி 2026 ஆம் ஆண்டிற்கான
உலக மகளிர் தினத்திற்கு ஐ.நா சபையின் முழக்கமாக
இருப்பது,
“Rights, Justice, Action for All Women and Girls”
( பாலினச் சமத்துவத்தை நிலைநாட்டவும், பாகுபாடான சட்டங்களை நீக்கவும், கட்டமைப்பு ரீதியான தடைகளை உடைக்கவும் இந்த முழக்கத்தை ஐ.நா சபை இந்தாண்டு வலியுறுத்துகிறது.)
பாலினச் சமத்துவத்தை நோக்கி நாம் எவ்வளவு தூரம் வந்திருக்கிறோம். இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டி இருக்கிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு நாளும் இதுதான். பெண்களுக்கு, ஒரு காலத்தில் வாக்களிக்க உரிமை இல்லை; இன்று நாடுகளையே வழி நடத்துகின்றனர்; வேலை செய்யக் கட்டுப்பாடுகள் இருந்தன; இன்று பல நிறுவனங்களையே நடத்திவருகிறார்கள். பண்டைய காலத்தில் போற்றப்பட்ட பெண்கள் இடைக்காலத்தில் பழிக்கப்பட்டனர். அயலர் ஊடுருவியபோது பெண்களின் மீதான அடிமைப் போக்கும் மெல்ல மெல்ல ஊடுருவியது. பண்டைய தமிழ்ச் சமுதாயத்தில் பெண்கள் கற்கும் உரிமையும், கவி பாடும் உரிமையும், காதல் உரிமையும், காதல் களவு உரிமையும் காதலனை இடித்துறக்கும் உரிமையும், அரசுக்கு அறிவுரை கூறும் உரிமையும், தலைமைத்துவ உரிமையும், தூது உரிமையும் பெற்றிருந்தனர் என்பதற்கு நம் சங்க இலக்கியங்கள் சான்று பகர்கின்றன.
தனது அரண்மனைக்கு ஒளவையார் வருவதை அறிந்த அதியமான் தன் கோட்டை வாசலில் சென்று ஒளவையாரை வரவேற்றுள்ளான். பெண்கள் கல்வியில் சிறந்து விளங்கியதையும், அவர்கள் சிறப்பிக்கப்பட்டதையும் பெண்பாற் புலவர்கள் பாடிய பாடல்களிலிருந்து நாம் அறிய முடிகிறது.
மன்னனு
மாசறக் கற்றோனுஞ் சீர்தூக்கின்
மன்னனிற் கற்றோன்
சிறப்புடையன்-மன்னற்குத்
தன்தேச மல்லாற்
சிறப்பில்லை கற்றோற்குச்
சென்றவிட மெல்லாம்
சிறப்பு.
என்று பாடிய ஒளவையார், தான் பாடியது போலவே சென்ற இடங்களிலெல்லாம் பெற்ற பெருஞ்சிறப்பையும் வரவேற்று வரிசை செய்ததையும்,
பாரி
பறித்த பறியும் பழையனூர்க்
காரி அன்று ஈந்த
களைக்கொட்டும் - சேரமான்
வாராயோ என்று
அழைத்த வாய்மையும் இம் மூன்றும்
நீலச்
சிற்றாடைக்கு நேர் .
என்ற பாடலில் உறுதிப்படுத்துகிறார்; பெண்மை போற்றப்பட்டதில் பெருமை கொள்கிறார்.
ஒரு குடும்பத் தலைவி முந்தைய நாள் போருக்கு தன் தந்தையை அனுப்பினாள், தன் தந்தை யானைகளை கொன்றுவிட்டு அந்தப் போரில் வெற்றி பெற்று தானும் இறந்து போகிறான். நிகழ் நாள் போருக்கு அப்பெண் தன் கணவனை அனுப்புகிறாள். தன் கணவன் போரில் வெற்றி பெற்று, எதிரிகளால் கவர்ந்து சென்ற பசுக்களை மீட்டுக் கொடுத்துவிட்டு போர்க்களத்தில் அவனும் இறந்து போகிறான். மறுநாள் போருக்கு தன்னுடைய பதின்பருவ மகனை அழைக்கிறாள்; அவன் தலையில் எண்ணெய் தேய்த்து அவனுக்கு குடுமியை போட்டுவிட்டு போருக்கு செல் என்று கையில் வேலை கொடுத்து அனுப்புகிறாள். சங்க காலத்தில் பெண்கள் எவ்வளவு வலிமை உடையவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை ஒக்கூர் மாசாத்தியாரின் பாடல் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்; தெளிவு பெறலாம்.
பிசிராந்தையார் தன்னுடைய மனைவியை, மாண்புமிகு மனைவி, மாட்சிமை பொருந்திய மனைவி என்று அழைப்பதில் இருந்து தமிழன் பெண்ணியத்தை போற்றியதையும் பெண்களை மரியாதையாக நடத்தியதையும் புறநானூற்றுப் பாடல் நமக்குப் புரிய வைக்கிறது; நம் விழிகளை விரிய வைக்கிறது.
அறிவுசான்ற இளம் பெண்ணை “சிறுமுதுக் குறைவி” என்று குறிப்பிடுவதை அகநானூற்றுப் பாடலிலும், இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்திலும், திருத்தக்கத் தேவர் இயற்றிய சீவக சிந்தாமணியிலும்(பாடல் 1051) காணமுடிகிறது. தலைவி தலைவனுடன் உடன்போக்குச் சென்றுவிடுகிறாள். இதனை அறிந்த செவிலித்தாய் ஏங்கிப் புலம்பும் பாடலில் “சிறுமுதுக் குறைவி சிலம்பார் சீறடி” (அகநானூறு 17, பாடியவர் கயமனார்) என்று தான் வளர்த்த, பருவத்தாலும் உருவத்தாலும் சிறிய அறிவுசான்ற மகளை எண்ணிப் புலம்புகிறாள். “சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையும் செய்தேன்” (சிலப்பதிகாரம் 16: 67-68) என்ற அடியானது சிலப்பதிகாரத்தில் கோவலன் கூற்றாக அமைந்துள்ளது. சிறிய வயதிலேயே சிறந்த அறிவைப் பெற்றவளாக விளங்கியவள் கண்ணகி என்பதைக் கோவலனின் இக்கூற்றிலிருந்து நாம் அறிய முடிகிறது.
இப்படி உயிராய் உயர்வாய் போற்றப்பட்ட பெண் சமூகம் இடைக்காலத்தில் முடக்கப்பட்டன; அடிமைச் சேற்றில் விழுந்து தவித்தன. அப்போதுதான் சில பேராண்மையாளர்கள் நாட்டில் தோன்றினர். பெண்களின் கையில் கல்வி என்னும் அறிவுக் கோலைத் தந்தனர். அந்த ஊன்றுகோல் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்தனர்; வருகின்றனர்; வருவர் என்பதில் ஐயமில்லை. பெண்களின் உயர்வுக்காக நீள நினைந்து தன் வாழ்நாளை ஒதுக்கிய சில நல்ல உள்ளங்களையும் நாம் இன்றைய தினத்தில் நினைவு கூற வேண்டும்.
சாவித்திரிபாய் பூலே திருமணம் செய்து கொண்ட பிறகு தன்னுடைய கணவரின் உதவியால் நான்கு ஆண்டுகள் பள்ளிப் படிப்பை படித்தார். சாவித்திரிபாய் பூலே தன்னுடைய கணவரின் உதவியால் படித்துக் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்த புலேவின் குடும்பத்தினர் சாவித்திரியையும் அவரது கணவரையும் வீட்டை விட்டு வெளியேற்றுகின்றனர். இருவரும் தங்களுடைய நண்பர்கள் உதவியோடு வெளியில் தங்கி, தொடர்ந்து சாவித்திரிபாய் பள்ளிப் படிப்பை முடித்து, கல்லூரிப் படிப்பையும் முடித்து, இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என்ற பட்டத்தைப் பெற்றார். அதன் பிறகு மகாராஷ்டிரா மாநிலத்தில் பள்ளிக்கூடம் ஆரம்பித்து அந்த பள்ளிக்கூடத்தில் ஏழைப் பெண்கள், நடுத்தரப் பெண்கள், கணவர்களால் கைவிடப்பட்ட பெண்கள் அனைவரையும் பள்ளிக்கூடம் அழைத்து வந்து அவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்தார். இதில் சாவித்திரிக்குப் பல எதிர்ப்புகள் வந்தன. பெண்களுக்குக் கல்வி கற்பிக்கக் கூடாது, பள்ளிக்கூடம் திறக்கக் கூடாது என்று சாவித்திரிபாயை ஆணாதிக்க வர்க்கத்தினர் கடுமையாக எதிர்த்தனர்; கல்லால் அடித்தனர்; சாணத்தால் எறிந்தனர்; மனித கழிவுகளைக்கொண்டும் எறிந்தனர். என்றாலும் சாவித்திரிபாய் சற்றும் மனம் தளராது பெண்களுக்கு கல்வி கற்றுக் கொடுப்பதில் முனைப்போடு செயல்பட்டார். தடைகள் அனைத்தையும் கடந்து பல பெண்களை கல்வியில் முன்னேற்றிக் காட்டினார். இது தவிர இலவச மருத்துவ சேவையும் மக்களுக்கு கிடைக்கும் படி செய்தார். பிளேக் நோய் பரவியபோது பலரை மருத்துவமனையில் சேர்த்து, அவர்களுக்கு இலவச சிகிச்சை அளித்துக் காப்பாற்றினார். கடைசியாக கங்காராம் என்பவரை தூக்கி வந்து, மருத்துவமனையில் சேர்த்து அவருக்கு சிகிச்சை அளித்தார். சிகிச்சை பெற்ற கங்காராம் பிழைத்துக் கொண்டார். அவரால் பிளேக் நோய் தொற்று சாவித்திரிபாய் பூலேவிற்கும் பரவியது. இந்நிகழ்வில், சாவித்திரிபாய் பூலே இறந்துவிட்டார். சாவித்திரிபாய் பள்ளிக்கூடம் கட்டும்போது அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தவர்தான் இந்த கங்காராம். தடைகள் அனைத்தையும் படிக்கட்டுகளாக்கி, பெண்களின் முன்னேற்றத்திற்காகப் போராடிய சாவித்திரிபாய் பூலேவை நாம் இந்த நேரத்திலே நினைவு கூற வேண்டும்.
“நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்ப செயல்” என்று கூறிய வள்ளுவரின் இலக்கணத்தை தொகுத்து வகுத்து விரித்து விளக்கி சிந்தித்தவர் மயூரம் வேதநாயகம் பிள்ளை. வேதநாயகம் பிள்ளை பெண்களிடம் உள்ள அறியாமை என்னும் நோயைக் கண்டறிந்தார். அந்த நோய் உண்டாகக் காரணமானவர்கள் ஆண்கள் தான் என்பதை உணர்ந்தார். அந்த நோய் முற்றி பெண்கள் அழிவதற்குள் அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று ஆவேசம் கொண்டார். பெண் கல்வி என்ற அருமருந்தை பெண் உலகிற்கு வழங்கினார். அந்த மருந்தின் விளைவு தான் இன்று தமிழகத்தில் பல பெண்கள் ஆளுமையில் சிறந்து விளங்கி இருக்கிறார்கள் என்பது வெள்ளிடைமலை.
சமுதாய வளர்ச்சிக்கு ஆண் பெண் இருவரின் குணங்களும் சமமாக இருக்க வேண்டும். சமமாக இருக்க இயற்கையில் இடம் இருக்கிறது, அது செயற்கையால் ஆண்களின் சுயநலத்தால் சூழ்ச்சியால் மறுக்கப்பட்டு வருகிறது என்றார் தந்தை பெரியார். இரண்டு மாறுபட்டவை இணைந்தது தானே உலகம். நீர் -நெருப்பு, பகல் - இரவு, உயிருள்ளவை - உயிரற்றவை, வெற்றி- தோல்வி, இன்பம் - துன்பம், அப்படி இருக்கும் போது ஆண் பெண் இருவரும் சமமாக இணைந்தது தானே சமுதாயம் என்பதை மக்களுக்குப் புரிய வைத்தார்; மடமைத்தனத்தை அகற்றச் செய்தார். பெண்கள் அடிமைத் தளைகளை உடைத்து எறிந்து உரிமை வாழ்வு வாழ அவர்களை ஊக்கப்படுத்தினார்; வளமான வாழ்வுக்கு வழி அமைத்துக் கொடுத்தார்.
இப்படி பெண்மையின் பேராற்றலைப் புரிய வைத்த மயூரம் வேதநாயகம் பிள்ளை, தந்தை பெரியார், பாரதியார், பாரதிதாசன், திரு வி.க. போன்ற பேரான்மையாளர்களின் சிந்தனையால் உருவான பெண்களின் தலைமைப் பண்பையும் நாம் இந்நேரத்திலே நினைவு கொள்ள வேண்டியது அவசியமான ஒன்று. நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் உயர் நீதிமன்றத்தின் ஐந்தாவது பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர். சமூக சமத்துவத்திற்கு குரல் கொடுத்த சிறந்த ஆளுமைப் பெண்மணி. இந்தியாவில் புற்றுநோய் மருத்துவத்திற்கான மருந்து குறைந்த விலையில் அனைவருக்கும் கிடைக்கிறது என்றால், அதற்கு அவர் வழங்கிய தீர்ப்பே காரணம். மதுரை யானைமலையைக் குடைந்து கிரானைட் கல் எடுக்கக்கூடாது என்று பெண்கள் போராட்டம் நடத்தினர். அந்த வழக்கு இவரிடம் விசாரணைக்கு வந்தது. அவ்வழக்கில் யானைமலையிலிருந்து ஒரு கல்லைக் கூட எடுக்கக் கூடாது என தடை விதித்தவரும் இவரே. இவரது தீர்ப்பால் தான் யானைமலை இன்றுவரை எழில் மிகு தோற்றத்துடன் மதுரையை அலங்கரிக்கிறது.
இளமையில் மலை ஏற்றப் பயிற்சியை முடித்தவர் அமுதா IAS. கல்லூரி படிப்பில் 15 பிரிவுகளில் தங்கப்பதக்கம் வென்றவர். இந்திய குடிமைப் பணித்தேர்வில் தேர்ச்சி பெற்று, மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றபின், செங்கல்பட்டு பாலாற்றில் இரவு நேரங்களில் நடக்கும் மணல் திருட்டை முற்றிலுமாக தடுத்தவர். இவருக்கு தேர்தல் பணி கொடுக்கப்பட்டபோது நடிகர்கள் சூர்யா, கார்த்திக்கை வைத்து ‘வாக்கு என்பது உங்கள் உரிமை. அதை விற்பது பெரும் குற்றம்” என்று தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களை விழிப்படையச் செய்தார். அப்துல் கலாம், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் இறுதிச்சடங்கை அரசுமுறைப்படி நடத்தியவரும் இவரே. விளையாட்டோ, படிப்போ, செயல்பாடுகளோ எதுவாக இருந்தாலும் முழு ஈடுபாட்டோடு செய்தால் வெற்றியை வசப்படுத்தலாம் என்பதை நிரூபித்து காட்டியவர் அமுதா IAS.
இராமநாதபுரத்தைச் சேர்ந்த ரிதமிகா என்ற ஆறு வயதேயான சிறுமி தன் பெற்றோருடன் துபாயில் வசித்து வருகிறாள். இவள் 9 நிமிடங்களில் 1 முதல் 10 ஆம் வாய்பாடு வரை எழுதிக்கொண்டே 100 திருக்குறளையும் கூறி “கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்” அருஞ்செயல் புத்தகத்தில் இடம் பெற்றாள். “இந்தியாவின் நடமாடும் கணினி” என்று போற்றப்படுகிறார் பிரியன்ஷி சோமாளி. ஆண்டுதோறும் கணித நுண்ணறிவுத் திறன் போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடத்தப்படுகின்றன. 2010 ஆம் ஆண்டுக்கான “மெண்டல் கால்கலேஷன் உலகக் கோப்பை போட்டி” ஜெர்மனியில் நடைபெற்றது. ஏறத்தாழ 16 நாடுகளிலிருந்து 37 கணித வல்லுநர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். இதில் முதலிடம் பெற்றவர் 12 வயது நிரம்பிய பிரியன்ஷி சோமானி.
போரினால் உண்டாகும் அவலங்களையும், பதின் பருவத்தினரின் ஏக்கங்களையும், இழந்த வெளியுலக வாழ்வையும், ஏமாற்றங்களையும், நிறைவேறாத ஆசைகளையும் நாட்குறிப்பில் எழுதிவைத்து தன வலிகள் அனைத்தையும் வரிகளாய் விட்டுச் சென்றாள்; நம்மை விம்ம வைத்துவிட்டுச் சென்றாள் 13 வயது சிறுமி ஆன் ஃபிராங்க். அமெரிக்காவிற்கும் ரசியாவிற்கும் எப்போது வேண்டுமானாலும் அணு ஆயுதப் போர் நிகழலாம் என்று இருந்த சூழலில், இளம் அமைதித் தூதுராகச் சென்று போர் ஏற்படாமல் தடுத்தவர் 13 வயதுடைய சிறுமி சமந்தா. பேரறிவு பெற்ற பெண்களும் சிறுமிகளும் நாட்டையும் நம்மையும் வழிநடத்தி நன்மை பல புரிந்து வருகின்றனர்.
பல்வேறு துறைகளிலும் மகளிர் முன்னேற்றம் அடையப் பெற்றாலும் ஏற்றத்தாழ்வுகள் தலைமைத்துவத்திலும், பொருளாதார இடங்களிலும், சம பங்களிப்புப் பெற வேண்டிய இடங்களிலும் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. முதல் ஒலிம்பிக் போட்டி 1896 இல் ஏதேன்ஸ் நகர் கிரேக்கத்தில் நடைபெற்றது. அப்போட்டியில் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. இரண்டாவது ஒலிம்பிக் 1900 இல் பாரிஸில் நடைபெற்றது. அப்போட்டியில் முதல் முறையாக பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். 24 நாடுகளைச் சேர்ந்த 997 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்ட வீராங்கனைகளின் எண்ணிக்கை 22 பேர் மட்டுமே. கலந்து கொண்ட வீராங்கனைகளின் சதவிகிதம் 2.2% மட்டுமே. அதே பாரிஸில் 33வது ஒலிம்பிக் போட்டி 124 ஆண்டுகளுக்குப் பிறகு 2024 இல் நடைபெற்றது. 206 நாடுகளைச் சேர்ந்த 10,500 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்ட வீராங்கனைகளின் எண்ணிக்கை 5250. முதன் முறையாக இப்போட்டியில் பாலினச் சமத்துவம் கடைபிடிக்கப்பட்டது என்பதை பல ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டன. எனினும் நடைபெற்ற 32 விளையாட்டுப் போட்டிகளில் 28 போட்டிகளில் மட்டுமே பாலினச் சமத்துவம் பின்பற்றப்பட்டது. மீதமுள்ள நான்கு போட்டிகளில் பாலினச் சமத்துவம் பின்பற்றப்படவில்லை. எனவே பெண்மையின் பேராற்றல் இன்னும் வெளிப்பட வேண்டி இருக்கிறது. ஆற்றல் வெளிப்பட வெளிப்பட அனைத்திலும் சம உரிமை என்பது சாத்தியமே.
பெண்கள் பாலினச் சமத்துவத்தைப் பெறவேண்டிய சரியான தருணமும் இதுவே. தமிழகத்தில் திருத்திய வாக்காளர்கள் பட்டியல் 24.02.2026 அன்று வெளியிடப்பட்டது. அதன்படி மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5,67,07,380. இதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2,77,38,925, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2,89,60,838. ஆண்களைவிட பெண் வாக்காளர்கள் 12,21,913 பேர் அதிகமாக உள்ளனர் என்பதை இந்த புள்ளி விவரங்கள் நமக்கு தெரிய வைக்கின்றன. 2026 புள்ளி விவரப்படி உலக அளவில் ஆண் பெண் விகிதம் 100 பெண்களுக்கு 101 ஆண்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் ஆண் பெண் விகிதம் 100 பெண்களுக்கு 106 ஆண்கள் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், 60 வயதிற்கு மேல் இந்தியாவில் பெண்களே அதிக அளவில் உள்ளனர்; ஆண்கள் குறைவான விகிதத்தில் உள்ளனர். மேலும் 100 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்திய அளவில் ஆண்கள் 16,000 பேர் உள்ளனர் பெண்கள் 26 ஆயிரம் பேர் உள்ளனர். பெண்மையின் பேராற்றல் வெளிப்பட வேண்டிய சரியான நேரம் இது என்பதை இந்த புள்ளி விவரங்கள் எல்லாம் நம் சுயஅலசலைத் தூண்டிவிடுகின்றன. சிமோன் டி போவா என்ற பிரெஞ்சு தத்துவஞானி எழுதிய தி செகண்ட் செக்ஸ் என்ற புத்தகத்தில் இடம் பெற்ற ஒரு வாசகம் பெண் என்பவள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறாள் என்று. ஆம், பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை அந்தக் குழந்தை அறியாது. இந்தச் சமுதாயம் தான் ஒரு குழந்தை ஆணா பெண்ணா என்பதை அடையாளப்படுத்துகிறது. இதனால், சமுதாயத்தின் கண்ணோட்டத்தை மாற்ற வேண்டும் என்பதற்காகவே, இந்த ஆண்டு ஐ.நா சபை கூடுதலாக ஒரு முழக்கத்தை வைத்திருக்கிறது. ‘Give to Gain’ (பாலினச் சமத்துவத்தைப் பெறுவதற்காக கொடுப்போம்) என்ற முழக்கமாகும். வேலையில், வீட்டில், சமுதாயத்தில் பெண்களை முன்னேற்றுவதற்கு நாம் எவையெல்லாம் கொடுக்க வேண்டும்;
அறிவை கொடுங்கள், அறிமுகம் கொடுங்கள், உந்துதல் கொடுங்கள், உண்மையைக் கொடுங்கள், கடன் கொடுங்கள், குரல் கொடுங்கள், கொண்டாட்டம் கொடுங்கள், சம ஊதியம் கொடுங்கள், தலைமை கொடுங்கள், தன்னம்பிக்கை கொடுங்கள், பயிற்சி கொடுங்கள், பாதுகாப்பு கொடுங்கள், நிதி கொடுங்கள், நீதி கொடுங்கள், வளர்ச்சி கொடுங்கள், வாய்ப்பு கொடுங்கள், வளங்களைக் கொடுங்கள், அவர்களுக்கு நேரமும் கொடுங்கள்.
பெண்களால் முன்னேறக் கூடும் -- நம்
வண் தமிழ்
நாடும்எந் நாடும்!
கண்களால் வழிகான
முடிவதைப் போலே
கால்களால் முன்னேற
முடிவதைப் போலே
பெண்களால்
முன்னேறக் கூடும்!
யாழ்க்கோ
கோ குடில், மதுரை-07
