விஜயாலர், ஆதித்தர், பல்லவ அபராஜிதர் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பல்லவ நிருதுபங்கன், வரகுணபாண்டியன் கூட்டணி தோல்வியுற்றது. வரகுணபாண்டியர் பின்வாங்கினார். நடைபெற்ற இப்போர் பாண்டியர்களுக்குப் பெருத்த இழப்பை தந்திருக்க வேண்டும். ஆறாம் நூற்றாண்டு முதல் ஆதிக்கம் செலுத்திய பாண்டியர்கள், இதன் பிறகு தங்கள் இருப்பை தக்கவைக்க இயலவில்லை. நிருதுபங்கவர்மனை பற்றிய தகவல் ஏதுமில்லை. போரில் வெற்றிபெற்ற அபராஜிதன் சோழத்தை சுதந்திர தேசமாக அறிவித்தார். சோழம் ஸ்தாபிக்கப்பட்டது. குடந்தை பகுதியில் ஆதித்தர் கல்வெட்டுகளும், தொண்டை மண்டலத்தில் அபராஜிதனது கல்வெட்டுகளும் கிடைப்பதால், இச்செய்தி உறுதியாகிறது.
திருப்புறம்பியம் போர் பற்றிய சில ஐயங்கள் . . . சில சர்ச்சைகள் . . .
திருத்தணியை அடுத்துள்ள ஒரு ஊர் வேளஞ்சேரி. இவ்வூரில் உள்ள ஒரு பள்ளியில் 6.10.1977 அன்று இரண்டு செப்பேட்டுத்தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டன. வேளஞ்சேரி செப்பேடு பராந்தகர் காலம். திருத்தணி செப்பேடு பல்லவன் அபராஜிதன் வெளியிட்டதாக ஆய்வார்கள் உறுதி செய்தனர். அபராஜிதனின் திருத்தணி செப்பேடுதான் சில சர்ச்சைகளை கிளப்பியது.
மூன்றாம் நந்திவர்மனின் மகன் கம்பவர்மன். கம்பவர்மனுக்கும், கங்க இளவரசி விஜயா என்பவருக்கும் பிறந்தவரே அபராஜிதவர்மன். இவர்கள், நிருபதுங்கனிடமிருந்து பல்லவ ராஜ்யத்தைவென்று, பல்லவ அரசனாக அபராஜிதன் இருந்தான் என அச்செப்பேடு கூறுகிறது. திருப்புயம் போரில் அபராஜிதன் சோழ பாண்டியர்களை வென்றதாக அச்செப்பேடு தகவல் தருவதாக சில ஆய்வாளர்கள் பதிவுசெய்கின்றனர்.
அதாவது . . . பாண்டியனும் சோழனும் ஒன்று சேர்ந்தே பல்லவன் அபராஜிதனை எதிர்த்தார்கள். இவ்வாறாக ஒரு சிலர் கருத்திட்டார்கள் (இச்செப்பேட்டுக் குறிப்பை இணைப்பில் உள்ள சிறு கோப்பில் காண்க). இதை ஒரு சில ஆய்வாளர்கள்; மேற்கூறியவாறு இருப்பதற்கு சாத்தியங்கள் குறைவு. தெள்ளாற்றுப் போரில் மூன்றாம் நந்திவர்மனை, சோழனும் பாண்டியனும் ஒன்று சேர்ந்து எதிர்த்தார்கள். இதையே அச்செப்பேடு கூறுகிறது என்பார்கள்.
திருப்புறம்பியம் போரில் சோழனும், பாண்டியனும் எதிரெதிர் அணியில் இருந்தார்கள் என்பது உறுதி. இது சில ஆய்வாளர்களின் முடிவு. ஆய்வுகள் தொடர்கின்றன. அதிகபட்ச சான்றுகள் கிடைத்தால் சில முடிவுகள் மாறவும்கூடும்.
எது எப்படியோ. யார் யாருடன் அணி சேர்ந்தார்களோ. திருப்புறம்பியம் போர் சோழவரலாற்றில் ஒரு திருப்புமுனை என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
அபராஜிதனிடமிருந்து குடந்தை மற்றும் பழயாறையை தன்வயப்படுத்திய விஜயாலரும், ஆதித்தரும் சற்றும் ஓய்வெடுக்கவில்லை. தஞ்சையைக் குறிவைத்தனர். தஞ்சையை ஆண்டுகொண்டிருந்த முத்தரையர்களை வீழ்த்தி, தஞ்சையைக் கைப்பற்றினர்.
முத்தரையர்கள்:
கி.பி ஆறாம் நூற்றாண்டுமுதல் சோழத்சத்தின் ஆற்றங்கரை பகுதியை ஆதிக்கம் செலுத்தியவர்கள் முத்தரையர்கள். இவர்கள் பல்லவர்களின் பட்டப் பெயர்களான பெரும்பிடுகு, விடேல் விடுகு என்னும் பட்டங்களை கொண்டிருந்தனர். பெரும்பிடுகு, விடேல் விடுகு என்னும் பட்டங்களுடன் தங்களை அழைத்துக்கொண்டதை செந்தலை கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன.

புதுக்கோட்டை நார்த்தாமலை, தற்போது விஜயாலய சோழீஸ்வரம் என்னும் அழைக்கப்படும் கற்றளி மலையை, இளங்கோவதி முத்தரையர் எடுத்ததாக அங்குள்ள கல்வெட்டு உறுதி செய்கிறது. சூழலுக்குத் தகுந்தாற் போல் பல்லவர் மற்றும் பாண்டியர்களை மாறி மாறி ஆதரித்தனர்.

தந்திவர்மன் கீழ் முத்தரையர்கள் நிவந்தம் No 88 of 1910
பாண்டியன் மாறஞ்சடையன் கீழ் முத்தரையர்கள் No 380 of 1930 - 31
நார்த்தாமலை கல்வெட்டு No 365 of 1904

நிருதுபங்கவர்மனின் 7ம் ஆட்சியாண்டில் முத்தரையர்கள் நிவந்தம். இக்கல்வெட்டின் காலம் ( 862 + 7 ) 869.
செந்தலை கல்வெட்டுகள் இவர்களை, தஞ்சை கோ ( தஞ்சை அரசன்) என அழைப்பதால், இவர்கள் தஞ்சையை ஆண்டது தெளிவாகிறது. Ep.of. ind. Pa. 142, 143, 144.
திருப்புறம்பியம் போரில் வெற்றிப் பெற்ற விஜயாலர் தஞ்சையை முத்தரையர்களிடமிருந்து கைப்பற்றினார் என்பதும் உறுதியாகிறது.
இதன்பிறகும் முத்தரையர்கள், சோழர்களின் கீழ் சிற்றரசாகவே தொடர்ந்தனர். Ins 314 of 1904.
குடுமியான்மலைக் கல்வெட்டு.
முதலாம் ஆதித்தரின் ஆட்சியில் முத்தரையர்கள் நிவந்தம் அளிக்கின்றனர்.
ஆக, திருப்புறம்பியம் போருக்கு முன்பும், பிறகும் தஞ்சையை முத்தரையர்களே ஆண்டுவந்தனர். ஆக, தஞ்சையை முத்தரையர்களிடமிருந்துதான்
சோழர்கள் கைப்பற்றினார்கள்.
சமீபத்தில் ( 2010) ல் நாகைமாவட்டம் கழுக்கானிமுட்டம், அதாவது திருவிந்தளூர் என்னும் இடத்தில், ஒரு செப்பேட்டுத் தொகுதி கண்டெடுக்கப்பட்டது. இது ஒரு சர்ச்சை செய்தியை தருகிறது. கம்பவர்மனிடமிருந்து சோழர்கள் தஞ்சையை கைப்பற்றினார்கள் என்கிறது. இதற்கு நேரடிச்சான்றுகள் ஏதுமில்லாததால், இத்தகவல் குறித்து மேலும் ஆய்வுகள் நடைபெறுகிறது.

தஞ்சையை முத்தரையர்களிடமிருந்து கைப்பற்றிய விஜயாலர், தங்கள் குல தெய்வமாம் நிசும்ப சூதனிக்கு ஆலயம் எடுத்தார் என்பது திருவலங்காடு செப்பேடு தரும் தகவலாகும்.

நிசும்பசூதனி ஆலயம் எது? தஞ்சை கீழவாசல், பூமால் ராவுத்தர் தெருவில் உள்ள வடபத்திர காளியா? குயவர் தெருவில் உக்ரகாளியா? இன்றும் இது குறித்து சர்ச்சை. வடபத்திரகாளியே, நிசும்பசூதனி என்பதாக முடிவு எடுக்கப் பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் உள்ள வீரராஜேந்திரரின் கல்வெட்டு, விஜயாலரின் பெயரை குறிப்பிட்டு, அவர் தஞ்சையை கைப்பற்றியதை பதிவு செய்கிறது.

அன்பில் செப்பேடு, நரகாசுரனை அழித்த திருமால் போல் விஜயாலர் இருந்தார். அவருக்கு இராசகேசரியான ஆதித்தன் மகனாக பிறந்தார்.

ஆக பரகேசரியான விஜயாலரே, பிற்காலச் சோழர்களின் முதல் அரசன் ஆகிறார்.
விஜயாலரைப் பற்றிய செப்பேட்டுத் தகவல்கள்:
உதயந்திரம் செப்பேடு இவரை அரசர்களால் வணங்கப்பட்டவர் என்கிறது.
வேளஞ்சேரி செப்பேடு இவரை ஒற்றியூரன் என்பவரின் மகன் என்கிறது.
அன்பில் செப்பேடு இவரை, விஜயத்திற்கு (வெற்றி) ஆலயம் ( இருப்பிடம்) என்பதால் விஜயாலர் எனப் பெயர் பெற்றார் என்கிறது.
திருவலங்காடு செப்பேடு இவர் தஞ்சையை கைப்பற்றி நிசும்ப சூதனிக்கு ஆலயம் எடுத்ததை கூறுகிறது.
பெரிய லெய்டன் செப்பேடு இவரை அரசர்களால் வணங்கப்படும் முடியினைக் கொண்டவர் என்கிறது.
கரந்தை செப்பேடு குன்றாத வலிமையுடையவர் என்கிறது.
எசாலசெப்பேடு அளவிடமுடியாத புகழையுடையவர் என்கிறது.
சாரலச்செப்பேடு தஞ்சையை கைப்பற்றியதை கூறுகிறது.
ஆக, சோழத்தை ஸ்தாபித்த பிதாமகர் விஜயாலயர் கி.பி 881 ல் இறைவனடி சேர்ந்திருக்கலாம்.
நம்மிடையே ஒரு இயல்பான ஐயம் தோன்றுகிறதோ? விஜயாலயருக்கு ஏன் இவ்வளவு சிறப்பு? அவர் ஒரு போரில் கூட கலந்துகொண்டதற்கு நேரடிச் சான்று
இல்லையே!?
நேரடிச்சான்று இல்லைதான். ஆனால் அவர் தன் வாழ்நாள் முழுவதும் போர்க்களத்தில்தான் கழித்திருக்கிறார். வரலாறு அந்நிகழ்வுகளை பதிவு செய்யவில்லை? எப்படி பதிவுசெய்வது? யார் பதிவு செய்வது.? சோழர்களுக்குத்தான் அந்த அதிகாரம் இல்லையே. பதிவுசெய்யும் அந்த அதிகாரத்தை பெற்றார் விஜயாலயச்சோழர்.
மனுநீதிச்சோழன், சிபிசக்கரவர்த்தி, கரிகாலன், என்று ஆர்பாட்டமாக ஆரம்பித்த சோழவம்சம், மூன்றாம் நூற்றாண்டில் முற்றிலும் முடங்கியது. ஏறக்குறைய அறுநூறு ஆண்டுகாலம், வரலாற்றிலிருந்து மறைந்தது. மூன்றாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை உள்ள எந்த சோழ அரசனின் பெயரையாவது
நாம் அறிந்துள்ளோமா? பதிவு செய்யப்பட்டுள்ளதா? இல்லை என்பதுதான் நிதர்சனம்.
நாங்கள் அழிந்துவிடவில்லை. சூரியனின் வம்சம் நாங்கள். இதோ நாங்கள் மீண்டும் வந்து விட்டோம். என் பெயர் விஜயாலயர் என்று தன் பெயரை அதன் மூலம் சோழத்தை வரலாற்றில் அழுத்தமாக பதிவு செய்தவர்தான் விஜயாலயச்சோழர். அதனால்தான் வித்திட்ட விஜயாலயர் என அழைக்கப்படுகிறார். விஜயாலரின் மறைவுக்குப்பிறகு அவரது மைந்தன் ஆதித்தச் சோழரின் புலிப் பாய்ச்சல் தொடங்கியது.
இனி வரும் நானூறு ஆண்டுகாலம் . . .வரலாறு சோழர்கள் வசமாகியது. . .
எத்தனை நிகழ்வுகள். எண்ணிலடங்கா போர்கள் மகத்தான சாதனைகள். நெஞ்சதிரும் இறப்புகள் எழில் மிகு கற்றளிகள்.கற்பனைக்கெட்டா மர்மங்கள் விண்முட்டும் கோபுரங்கள். வியப்பூட்டும் விரிசல்கள் அத்தனையும் பார்க்க இருக்கிறோம். . .