(வெருளி நோய்கள் 719 -722 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 723
கனவு தொடர்பான பெருங்கவலையும் தேவையற்ற பேரச்சமும் கனவு வெருளி.
கனவு பற்றிய இயல்புக்கு மீறிய பேரச்சமே கனவு வெருளி.
உறங்கினால் தீய கனவுகள், பேய்க்கனவுகள் வரும், மார்பில் பேய் அமர்ந்துஅழுத்தி மூச்சுத்திணற வைக்கும் என்பன போனற் அச்சங்களால் தூங்குவதற்குக்கூட அச்சம் கொள்வர்.நல்ல எண்ணங்களை மனத்தில் கொண்டு படுக்கச் சென்றால் கனவு வெருளி வர வாய்ப்பில்லை. அச்சம் தரும் கதைகளையும் செய்திகளையும் படித்தலும் கேட்டலும் ஒரு முறை கெட்டக் கனவு வந்தது எனில் அதைப்பற்றியே எண்ணி அஞ்சுவதும் கனவு குறித்த அச்சத்தை விளைவிக்கிறது.
கனவு நிலை உரைத்தல் எனத் திருவள்ளுவர் திருக்குறளில் ஒர் அதிகாரம்(122) வைத்துள்ளார். தலைவனைப் பிரிந்துள்ள தலைவி கனவில் தலைவனைக் கண்டு இன்புறுதலை இது கூறும். இது நல்ல கனவே ஆகும்.
oneiro என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் கனவு.
வீர பாண்டிய கட்ட பொம்மனில் கு.மா.பாலசுப்பிரமணியன் பாடல் “போகாதே போகாதே என் கனவா” என வரும் பாட்டாகும். வெள்ளையத்தேவன் போருக்குச் செல்லும் பொழுது அவன் மனைவி பாடுவதாக அமையும். தீக்கனவால் பெரிதும் அச்சமும் கவலையும் கொண்டு அவர் பாடுவார். இத்தகைய அச்சமும் கவலையும் பேரளவாக மாறும் பொழுது கனவு வெருளியாகிறது.
போகாதே போகாதே என் கணவா
பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்
பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்
கூந்தல் அவிழ்ந்து விழவும் கண்டேன்
கொண்டையில் பூவும் கருக்கக் கண்டேன்
ஆந்தை இருந்து அலறக் கண்டேன்
யானையும் மண்மேலே சாயக் கண்டேன்
பட்டத்து யானையும் மண்மேலே சாயக் கண்டேன்.
மேலும் இவைபோல் பாடல் வரிகள் தீயகனவுகளைக் குறிப்பிடும்.
கனவில் நல்ல காட்சிகள் வரும்பொழுது மகிழ்வதும் துயரக் காட்சிகள் அல்லது தீக்குறிகள்(சகுனங்கள்) வரும் பொழுது கவலைப்படுவதும் மக்கள் இயற்கை.
சிவகங்கைச் சீமை படத்தில்
“கனவு கண்டேன் நான் கனவு கண்டேன்”
எனக் கண்ணதாசனின் இன்பியல் பாடலும் துன்பியல் பாடலும் இடம் பெறுகிறது.
கனவு கண்டேன் நான் கனவு கண்டேன்
நம் காதல் கனிந்து வரக் கனவு கண்டேன்
மேளம் முழங்கி வரக் கனவு கண்டேன்
அங்கே விருந்து மணங்கமழக் கனவு கண்டேன்
வாழை மரங்கள் வைக்கக் கனவு கண்டேன்
பெண்கள் வாழ்த்துக்கள் பாடி வரக் கனவு கண்டேன்
பளிங்கு மணவறைக்கு நடந்து வந்தேன்
நம் காதல் கனிந்து வரக் கனவு கண்டேன்
என்பன நற்கனவுப்பாடல் வரிகளில் ஒரு பகுதி.
கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் – உன்னைக்
காலம் அழைத்ததுபோல் கனவு கண்டேன்
வாழைமரங்கள் விழக் கனவு கண்டேன் – அங்கு
வைத்த விளக்குகளும் அணையக் கனவு கண்டேன்.
மாலை உதிர்ந்து விழக் கனவு கண்டேன் – என்
மஞ்சளும் குங்குமமும் கலையக் கனவு கண்டேன்
என்பனபோல் தீக்கனவுக்காட்சிகள் குறிக்கப்பெறும்.
இரத்தத்திலகம் திரைப்படத்தில் நகைச்சுவை நாடகத்தில் இதுபோல் பாடல் வரும்.
பூனை எல்லாம் நான் உன்னைத்
துரத்தக் கண்டேன் துரத்தக் கண்டேன்
புல்லு தடுக்கி நீ விழுகக் கண்டேன் ஒரு
புல்லு தடுக்கி நீ விழுகக் கண்டேன்
என்பனவாகக் கண்ணதாசனின் பாடல் வரிகள் அமைந்திருக்கும்.
கனவுகளின் பலன்கள் குறித்த மக்களிடம் உள்ள நம்பிக்கையே தீக்கனவுகளால் கனவு வெருளி அமையக் காரணமாக உள்ளது.
சிலப்பதிகாரத்தில் கண்ணகி, கோவலன் திரும்பிவந்து தன்னை அழைத்துக்கொண்டு நகர் ஒன்றிற்குச் சென்றதாகவும் அங்கேபழி நேர்ந்ததாகவும் அது கண்டு தான் வழக்குரைத்ததாகவும் பின்னர் காவலனுக்கும் நகருக்கும் தீங்கு நேர்ந்ததாகவும் கூறினாள். இதுவே பின்னர் நிகழ்ந்தது. எனினும் கனவினால் கண்ணகி அச்சமுற்றாள். இத்தகைய அச்சம் வளர்கின்றபொழுது கனவு வெருளியாகிறது.
சங்க இலக்கியத்தில் ஏறத்தாழ நாற்பத்து நான்கு கனவுக் குறிப்புகள் காணப்படுகின்றன என அறிஞர் ச.வே.சுப்பிரமணியனார் குறிப்பிட்டுள்ளார். இவற்றுள் பறவைகள், விலங்குகள் கண்ட கனவுக்காட்சிகளும் அடங்கும்.
தீய கனவுகள் சிலவற்றைப் புறநானூறு கூறுகிறது.
திசையிரு நான்கு முற்க முற்கவும்
பெருமரத், திலையி னெடுங்கோடு வற்றல் பற்றவும்
வெங்கதிர்க் கனலி துற்றவும் பிறவும்
அஞ்சுவரத் தகுந புள்ளுக்குர லியம்பவும்
எயிறுநிலத்து வீழவு மெண்ணெ யாடவும்
களிறுமேல் கொள்ளவுங் காழக நீப்பவும்
வெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழவும்
அஃதாவது,
எட்டுத்திசைகளிலும் கொள்ளி விழுந்து பற்றுவது, இலைகள் உதிர்ந்த வற்றல் மரம் தீப்பற்றி எரிதல், சூரியன் நெருப்பாக எரிவது, பறவைகள் அச்சத்துடன் குரல் எழுப்பவுவது, பல் உடைந்து நிலத்தில் வீழ்ந்தது, பன்றி சிங்கத்தைப் புணர்வது, ஆடைகள் அவிழ்த்து அம்மணமாய் இருப்பது, படைக்கலன்கள் அவை அடுக்கப்பட்டிருந்த கட்டிலோடு கவிழ்ந்து வீழ்ந்தமை முதலானவை தீக்கனவுகளாகச் சொல்லப்படுகின்றன. இத்தகைய கனவு காண்போர்க்குக் கனவு வெருளியை உண்டாக்குகிறது.
oneiro என்பதன் மூலக்கிரேக்கச் சொல்லின் பொருள் கனவு.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5
(சமற்கிருதத்திற்கு கூடுதல் நிதி- சரிதானே!?- 4: தொடர்ச்சி)
சமற்கிருதத்திற்குக் கூடுதல் நிதி- சரிதானே!?
உரையின் எழுத்து வடிவம் 5
நான் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு கூட அரசு நிறுவனத்தில் செம்மொழி ஒதுக்கீடு பற்றிய ஒரு கருத்தரங்கில் பங்கேற்றேன். அப்போதே நிதி நிலை அறிக்கையில் இருந்து மொழிகளுக்கான பல்வேறு நிதி குறித்துக் குறிப்பிட்டு இருந்தேன். இன்னின்னவாறு ஒதுக்கி இருக்கிறார்கள். ஆனால் தமிழுக்கு இல்லையே என்பதாக குறிப்பிட்டு இருந்தேன். பல்வேறு ஒதுக்கீடுகள். ஆனால் இப்பொழுது இன்னும் கூடுதலாக இருக்கிறது. இந்தக் கூடுதலான நிதி ஒதுக்கீட்டிற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் ஒன்றிய அரசைக் கேட்க வேண்டும். மீண்டும் கேட்க வேண்டும். கேளுங்கள். கட்சி வேறுபாடு இன்றி மக்களைத் திரட்டி அணி சேர்ந்து ஒன்றிய அரசுக்குக் குரல் கொடுங்கள், செய்யுங்கள் இங்கே வந்து நீங்கள் தமிழை வாழ்த்தினால் போதாது. தமிழுக்கான செயற் திட்டத்தை நிதி ஒதுக்கீட்டுடன் தாருங்கள் என்று கேட்க வேண்டும் அல்லவா அதைச் செய்வதற்கு நமக்குத் தெம்பு இருக்க வேண்டும். நான் கூட “**யாருக்கும் வெட்கமில்லை**” என்று கட்டுரை எழுதி இருக்கிறேன். அப்போதைய செம்மொழி விருது அறிவிப்புக்கு எழுதி இருந்தேன். இதற்கு முன்பு என்னென்ன எழுதி இருந்தேனோ, அஃது இன்றைக்கும் பொருந்துவதாய் இருக்கிறது செம்மொழிக்கு ஒன்றிய அரசு ஒன்றும் செய்யவில்லை தமிழ்நாடு அரசும், தமிழகக் கட்சிகளும், தமிழ் இயக்கங்களும் குரல் கொடுக்க வேண்டும். கொடுக்கவில்லை. விருது கொடுத்தபோது கூட ஏன் மூத்த அறிஞர்களுக்கு விருது கொடுக்கவில்லை என அப்பொழுதே கேட்டிருந்தேன். அதை அந்த “யாருக்கும் வெட்கமில்லை“ என்ற கட்டுரையில் எழுதி இருந்தேன். அஃதாவது அரபி, பெருசியன் போன்ற மொழிகளுக்கு கூட பல கோடி நிதி உதவி தருகிறது. ஆனால் தமிழுக்குக் குறைவு. தமிழ்நாட்டில் இருந்து வெளிநாட்டிற்குப் போன அரபி, பெருசியன், சமற்கிருதம் அதற்கெல்லாம் போகிறது. தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் இருந்து ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு விருதுக்கு உரிய பணத்தைத் தரவில்லை. ஏன் அப்படி? ஆண்டுதோறும் 22 சமற்கிருத அறிஞர்களுக்கு மூத்த செம்மொழி விருது தரும் ஒன்றிய அரசு ஏன் ஒரு மூத்த தமிழறிஞருக்குக்கூட விருது தரவில்லை, அதைத் தட்டிக் கேட்கும் திறன் ஏன் இவர்களுக்கு இல்லை. இவர்களுக்குத் தெரியுமா? தெரியாதா? தெரியாவிட்டால் அதுவும் தவறு. நாம் பல்வேறு இடங்களிலே பார்த்துத் தெரிந்திருக்க வேண்டும். தெரியாவிட்டால் அரசு நிருவாகத்தில் குறை என்றாகிவிடும். உளவுத்துறை, செய்தித்துறை அரசின் கருத்திற்குக் கொண்டு சென்றிருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை? உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை 2008 சூனில் நடத்தினார்கள் அப்பொழுது கூட அறிவித்திருக்கலாம். இல்லை. 2008 இல் இருந்து இன்று வரை எண்ணிப் பாருங்கள். 17 ஆண்டுகள். இந்த 17 ஆண்டுகளுக்கு ஆண்டிற்கு 15 விருதுகள் கொடுத்திருக்க வேண்டும். நீங்கள் ஆண்டிற்கு 5 அல்லது 10 பேர் என்றாவது எத்தனை பேர் என்று எண்ணிப் பாருங்கள். இல்லையே நமக்கு! எங்கு சென்றன அவை?
சரி, பல்கலைக்கழகத்தை எடுத்துக் கொள்வோம். சமற்கிருதப் பல்கலைக்கழகங்கள் 18, செருமனியிலே 17. பத்தாததற்கு 121 சமற்கிருதக் கல்வி நிலையங்கள் இருக்கின்றன. நேரடியாக ஒன்றிய அரசு மாணவர்களுக்கு நிதி உதவி செய்து தருகிறது. இவ்வாறு பல நாடுகளில் ஒன்றிய அரசு சமற்கிருதக் கல்விக்கு உதவி செய்து வருகிறது. தமிழ்நாட்டில் ஏன் ஒரே ஒரு தமிழ் பல்கலைக்கழகம். 1947 இல் 26 மாவட்டங்கள் மொழிவாரி மாநிலம் வந்த பிறகு 12 மாவட்டங்கள் உள்ள தமிழ்நாட்டிலே அப்படி இருக்கும்போது தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கழித்து விட்டுப் பார்த்தால் இன்னும் 11 பல்கலைக்கழகங்கள் இருக்க வேண்டும். குறைந்தது, பழைய மாவட்ட கணக்கில் வைக்கலாமே, மாவட்டங்கள் தோறும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை வைக்கலாமே, இதற்கான திட்டத்தை அரசுக்குக் கொடுக்க வேண்டும். மாநிலத்திற்கு ஒரு தமிழ் பல்கலைக்கழகத்தை வைத்து அந்தப் பல்கலைக்கழகத்தில் தமிழாய்ந்த தமிழ் அறிஞர்களை வைக்க வேண்டும். நீங்கள் பார்த்தீர்கள் என்றால் பல்வேறு இடங்களில் தமிழ்த்துறையின் பொறுப்பாளர்களாக வேறு துறையைச் சார்ந்தவர்கள் தான் இருப்பார்கள் அல்லது பேச்சு மொழிக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய தமிழ் படித்த அறிஞர்களாக இருப்பார்கள். தமிழ் அறிஞர்கள்தான் ஆனால் பேச்சு மொழியை வாழ வைக்க வேண்டும் என்று சொல்வார்கள். செம்மொழி விருதுக்குத் தேர்ந்தெடுக்கும் குழுவினரைத் தமிழறிவு தேவையில்லாமல் எடுத்தார்கள். ஒன்றிய அரசைப் பாராட்டித்தான் ஆகவேண்டும். செம்மொழி விருதுக்குத் தேர்ந்தெடுக்கும் போது தமிழ் அறிவு தேவை இல்லையா? தமிழக அரசியல் இதழில் இது குறித்து வந்த என் செவ்வியை ஒன்றிய அரசிற்கு அனுப்பி வைத்தேன். , செம்மொழி நிறுவனத்தில் அப்போதைய பதிவாளராக முனைவர் முத்துவேல் இருந்தார் அவரும் அதை அனுப்பி வைத்தார். அதைப் பார்த்து அவர்கள் நியாயமான கேள்வி என்றார்கள். உடனடியாக அக்குழுவை மாற்றினார்கள்.
அதேபோலச் செம்மொழி விருது கொடுக்கும் பொழுது, அவ்விழாவிலே தமிழிலே அறிமுகம் இல்லை. தமிழ் அறிஞன் தமிழில் விருது பெறுகிறான், தன்னைப் பற்றி என்ன சொல்கிறான் என்று கேட்கக் கூடிய அறிவு வேண்டாமா? இஃது எப்படி? தமிழில் தான் நடத்து என்று சொன்னவுடன், இது நியாயமான கோரிக்கை என்று கேட்டார்கள். இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் ஒன்றிய அரசு சொன்னால் கேட்கிறார்கள், சொல்ல வேண்டிய முறையில் நாம் சொல்ல வேண்டும். மேம்போக்காகக் கட்சியைத் திட்டுவதாலேயும் ஒன்றிய அரசைத் திட்டுவதாலேயும் பயனில்லை. இன்னமும் அப்படித்தான். திட்டிப் பயனில்லை. நாம் சரியாகக் கேட்க வேண்டும். இவ்வாறு பலவற்றை நாம் சொல்லலாம். அவ்வாறு நாம் கேட்க வேண்டியதைக் கேட்டுப் பெற வேண்டியதைப் பெற்றுத்தான் ஆக வேண்டும்
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
இணைய வழி உரையின் எழுத்தாக்கம்
13.07.2025
(நாலடி நல்கும் நன்னெறி 17: கல்வியே உண்மையான அழகு- தொடர்ச்சி)
செய்யும் செயல்களுக்கேற்பவே நன்மை தீமை விளையும்
சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா
உறுகாலத்து ஊற்றாகா ஆமிடத்தே ஆகும்
சிறுகாலைப் பட்ட பொறியும் அதனால்
இறுகாலத்து என்னை பரிவு
(நாலடியார் 110)
பதவுரை:
சிறுகா=சிறுத்துப் போகா; குறைய மாட்டா; பெருகா=பெருத்துப் போகா; கூடா;
முறை பிறழ்ந்து வாரா=முறை மாறி வாரா;
உறுகாலத்து=துன்புறுங்காலத்து,
ஊற்று ஆகா=ஊன்றுகோல் போல் துணை ஆகா
ஆம் இடத்தே=ஆகும் காலத்தில்
ஆகும்= நிகழும்
சிறுகாலை=முற்காலத்து,
பட்ட= உண்டாகிய,
பொறியும்=நல்வினைகளும்,
அதனால்=ஆதலால்,
இறு காலத்து=(தீவினைப்பயனால்) கேடுவருங் காலத்து,
பரிவு=வருந்துவது,
என்னை=யாது?
சிறுகாலை யென்றது பிறவித்தொடக்கம் என்றும் அதனால் கருவியின் நிலையை உணர்த்துவதாகவும் விளக்கம் தருகின்றனர். இதனடிப்படையில் கருவமையுங் காலத்திலேயே அமைந்த ஊழ்வினைகள் அல்லது கருவிலேயே அமைந்து விட்ட பழவினைகள் என்கின்றனர்.
முறைபிறழ்ந்து வாரா-முறை மாறி வாரா என்றால், தீச்செயல்களுக்கு நற்பயன், நற்செயல்களுக்குத் தீப் பயன் என நேர்மாறாக அமையா எனப் பொருள்.
நிகழ்வு, இன்பம், துன்பம் எதுவாக இருந்தாலும் குறைதல் கூடுதல் மாறுதல் இன்றி வினைப்பயனுக்கேற்ப நிகழத்தான் செய்யும் என்கின்றனர். அஃதாவது எது எது எவ்வப்பொழுது நடக்க வேண்டுமோ அது அது அவ்வப்பொழுது நடக்கும் என்பதே ஊழ்வினை என்கின்றனர்.
அந்தந்தப் பிறவியிலேயே நாம் செய்யும் நற்செயல் தீச் செயல்களுக்கேற்ப வினைப்பயனை அடைவர் என்றுதான் கொள்ள வேண்டும்.
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும். (திருக்குறள், ௩௱௰௯ – 319)
என்கிறார் திருவள்ளுவரும்.
ஒளவையாரும்
முற்பகல் செய்யிற் பிற்பகல் விளையும்
(கொன்றை வேந்தன் 74(
என்கிறார்.
இந் நன்மொழி, மக்களிடையே, ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்னும் பழமொழியாக உலா வருகிறது.
இவற்றின் பொருள் ஒரே நாளிலேயே வினைப்பயன் விளையும் என்றில்லை. அதனை விரைவு கருதிய தொடராக எடுத்துக் கொள்ளலாம்.
எனவே, நாம் செய்யும் நற்செயல்கள் என்றும் நமக்கு உற்ற துணையாக நற் பயன் விளைவிக்கும். தீச் செயல்கள் உடனே நன்மை தந்தாலும் துன்பத்தையே விளைவிக்கும் என்பதை உணர்வோமாக!
–இலக்குவனார் திருவள்ளுவன்