(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):35 – ஆட்பெயரும் ஊர்ப்பெயரும் தொடர்ச்சி)
5. தேவும் தலமும்
தமிழ் நாடு, என்றும் தெய்வ மணங்கமழும் திருநாடு. பல பழமையான ஊர்களில் இன்றும் ஆண்டவன் கோயிலே நடுநாயகமாக அமைந்திருக்கின்றது. அப்பெருமானது தேர் ஓடும் திரு வீதிகளே சிறந்த தெருக்களாகத் திகழ்கின்றன. இத்தகைய பண்பு வாய்ந்த நாட்டில் பல ஊர்கள் இறைவனோடு தொடர்புற்று விளங்குதல் இயல்பேயன்றோ?
பழங்காலத்தில் ஆண்டவனை மரங்களிலும் சோலைகளிலும் தமிழ் நாட்டார் வழிபட்டார்கள். ஈசன் கல்லாலின் கீழிருந்து நல்லார் நால்வர்க்கு உறுதிப் பொருளை உணர்த்திய காரணத்தால் ஆலமர் கடவுள் ஆயினார்.1 முருகவேள் கடம்பமரத்தில் விரும்பி உறைதலால் கடம்பன் என்று பெயர் பெற்றார்.2 பிள்ளையார் அரச மரத்தடியில் அமர்ந்திருக்கின்றார்.
காவிரிக் கரையில் அமைந்த நெடுஞ் சோலையில் ஒரு வெண்ணாவல் மரத்திலே ஈசன் வெளிப்பட்டார்.3 இன்னும், காஞ்சி மாநகரத்தில் இறைவன் மாமரத்தின் அடியிற் காட்சியளித்தார். அம் மாமரமே கோயிலாய் ஏகாம்பரம் என்றும், ஏகம்பம் என்றும் பெயர் பெற்றது.4
இன்னும், தமிழ் நாட்டில் வாழ்ந்த ஆன்றோர் பலர், மரங்களின்
கீழிருந்து மெய்யுணர்வு பெற்றுள்ளார்கள். திருவாசகம் பாடிய மணிவாசகர் குருந்த மரத்தடியில் ஈசன் திருவருளைப் பெற்றார். திருமால் அடியார்களிற் சிறந்த நம்மாழ்வார் புளியமரத்தின் கீழ் அமர்ந்து புனிதராயனார்.5
இங்ஙனம் சிறந்து விளங்கிய மரங்களும் சோலைகளும் இறைவனை வழிபடுதற்குரிய கோயில்களாயின. திருக்குற்றாலத்தில் உள்ள குறும்பலா மரத்தைத் திருஞான சம்பந்தர் நறுந்தமிழாற் பாடியுள்ளார்.6
நறுமணம் கமழும் செடி கொடிகள் செழித்தோங்கி வளர்ந்த
சூழல்களிலும் பண்டைத் தமிழர் ஆண்டவன் அருள் விளங்கக் கண்டார்கள். தேவாரத்தில் கொகுடிக் கோயில் என்னும் பெயருடைய ஆலயமொன்று பாடல் பெற்றுள்ளது.7 கொகுடி என்பது ஒருவகை முல்லைக் கொடி. எனவே, நல்மணம் கமழும் முல்லையின் அடியில் அமைந்த திருக்கோயில் கொகுடிக் கோயில் ஆயிற்று. இன்னும், தேவார வைப்புத் தலங்களுள் ஒன்று ஞாழற்கோயில் என்ற குறிக்கப்படுகின்றது.8 ஞாழல் என்பது கொன்றையின்
ஒரு வகை. கொன்றையங் கோயிலே ஞாழற்கோயில் என்று பெயர் பெற்றது.
காவும் காடும்
நிழல் அமைந்த சோலைகளும், நெடிய காடுகளும், இனிய
பொழில்களும் வனங்களும் பாடல் பெற்ற பழம் பதிகளாகத் தமிழ் நாட்டில் விளங்கக் காணலாம். அவற்றுள் சில காவும் காடும் தேவாரப் பாட்டிலே காணப்படுகின்றன.
திருவானைக்கா
காவிரிக் கரையில் உள்ளதொரு பெருஞ்சோலையிற் காட்சியளித்த
ஈசனை ஒரு வெள்ளானை நாள்தோறும் நன்னீராட்டி, நறுமலர் அணிந்து வழிபட்டமையால் திரு ஆனைக்கா என்று அத் தலத்திற்குப் பெயர் வந்ததென்பர்.9 அக கோவிலுள்ள திருக்கோவில் ஜம்புகேச்சுரம் எனப்படும்.
திருக்கோலக்கா
சீகாழிக்கு அருகே திருக் கோலக்கா என்னும் சோலைப்பதி உள்ளது.
அப் பதியில் இளங்கையால் தாளமிட்டு இனிய தமிழ்ப்பாட் டிசைத்தார் திருஞானசம்பந்தர். இப் பாடலுக்கு இரங்கிய ஈசன் பிள்ளைப் பெருமானுக்குப் பொற்றாளம் பரிசாக அளித்தார் என்றும், அன்று முதல் கோலக்காவில் உள்ள கோயில் திருத்தாள முடையார் கோயில் எனப் பெயர் பெற்றதென்றும் கூறுவர்.10
ஏனையகாக்கள்
இன்னும், ஒரு நெல்லி வனத்தில் ஈசன் காட்சியளித்தமையால் திரு
நெல்லிக்கா என்னும் பெயர் அதற்கமைந்தது. திருவிடை மருதூரின்
அருகேயுள்ள திருக்கோடிகா என்பது மற்றொரு சோலைக்கோவில்.11
வைத்தீசுவரன் கோவிலுக்கு ஐந்து கல் தூரத்திலுள்ள குரங்குக்கா என்பது மந்திச்சோலை, பாலைவனத்திலும் கொற்றவை என்னும் வீரத் தெய்வத்தைச் சோலையில் வைத்து மறவர்கள் வழிபட்டமுறை பழைய நூல்களிற் குறிக்கப்டுகின்றது.12
காடுகள்
ஈசன் உறையும் காடுகளும் தேவாரப் பாடல்களால் இனிது விளங்கும். திருமறைக்காடு முதலிய காட்டுத் திருப்பதிகளை ஒருபாசுரத்திலே தொகுத்துப் பாடினார் திருநாவுக்கரசர்.13 திருமறைக்காடு முதலாகத் திருவெண்காடு ஈறாக எட்டுப்பதிகள் அப்பாட்டிலே குறிக்கப்படுகின்றன.
திருமறைக்காடு
இக் காலத்தில் வேதாரண்யம் என வழங்கும் திருமறைக்காடு மூவர் தேவாரப் பாடலும் பெற்ற மூதூராகும். மறைவனம் என்றும், வேதவனம் என்றும் திருஞான சம்பந்தர் அப்பதியைக் குறித்தருளினார்.14 நான் மறைகளும் ஈசனை வழிபட்ட இடம் திருமறைக்காடு என்பர்.
“சதுரம் மறைதான் துதிசெய்து வணங்கும்
மதுரம் பொழில்சூழ் மறைக்காடு”
என்னும் தேவாரத்தில் அவ்வூர்ப் பெயரின் வரலாறு விளங்குகின்றது.
தலைச்சங்காடு
காவிரி யாற்றின் மருங்கே அமைந்த தலைச்சங்காடு திருஞான சம்பந்தரால் பாடப் பெற்றது. அப் பதியில் கட்டுமலை மேலுள்ள திருக்கோயிலில் அமர்ந்த இறைவனை,
“கூடஞ்சூழ் மண்டபமும் குலாய வாசற் கொடித் தோன்றும்
மாடஞ்சூழ் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே”
என்று அவர் பாடியுள்ளார். இப்பொழுது தலையுடையவர் கோயிற் பத்து என்னும் பெயரால் அப்பதி வழங்கும்.15
(தொடரும்)
இரா.பி.சேது(ப்பிள்ளை)
ஊரும் பேரும்
அடிக் குறிப்பு
1. “அன்றால் நிழற்கீழ் அருமறைகள் தானருளி” – திருவாசகம்,
திருப்பூவல்லி,13. முருகனை “ஆலமர் கடவுட் புதல்வ” என்று திருமுருகாற்றுப் படை
அழைக்கின்றது.
2. “நன் கடம்பனைப் பெற்றவள் பங்கினன்” – திருநாவுக்கரசர் தேவாரம்,
திருக்கடம்பூர்ப் பதிகம்,9.
3. “திரையாரும் புனற்பொன்னித் தீர்த்தம் மல்கு
திருவானைக் காவில்உறைதேனே”
-திருநாவுக்கரசர், திருவானைக்காத் திருத்தாண்டகம்,6.
“வெண்ணாவல் அமர்துறை வேதியனை” – திருஞான சம்பந்தர், திருவானைக்காப் பதிகம், 11. ‘ஜம்புகேசுரம்’ என்ற வடசொல்லுக்கு, ‘நாவற் கோயில்’ என்று பொருள்.
4. ஆமிரம் என்ற வடசொல்*** மாமரத்தைக் குறிக்கும். ஏக ஆமிரம் என்பது ஏகாமிரமாகி, பின்னர் ஏகாம்பரம் எனத் திரிந்ததென்பர். கச்சி ஏகம்பம் என்று தேவாரத்திற் பாடப்பெற்ற திருக்கோயிலில் பழமையான மாமரமொன்று இன்றும் காணப்படும். கம்பை யென்னும் வேகவதி யாற்றை யடுத்துள்ளமையால் ஏகம்பம் என்ற பெயர் அமைந்த தென்பாரும் உளர். See “South Indian Shrines” – P.V. jagadisa Ayyar, p.86.
[ அயிர் என்னும் சொல்லில் இருந்து பிறந்த ஆயிரம் என்பது தமிழ்ச்சொல்லே. ]
“கம்பக்கரை ஏகம்பம் உடையானை” என்னும் திருஞான சம்பந்தர் வாக்கு இதற்கு ஆதராமாகக் கொள்ளப்படுகின்றது. -திருக்கச்சி யேகம்பத் திருப்பதிகம்.5.
5. திருப்பருத்திக் குன்றத்தில் குரா மரத்தடியில் அமர்ந்து ஞானம் பெற்றார் சமண அடிகளாகிய வாமன முனிவர்.
6. “பூந்தண்நறு வேங்கைக் கொத்திறுத்து மத்தகத்திற் பொலிய ஏந்திக்
கூந்தற் பிடியும் களிறும் உடன்வணங்கும் குறும்பலாவே” -திருஞான சம்பந்தர், குறும்பலாப் பதிகம், 8.
7. “கருப்பறியல் பொருப்பனைய கொடிக் கோயில்” -திருநாவுக்கரசர் அடைவு திருத்தாண்டகம்,5.
8. “கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற்கோயில்” -திருநாவுக்கரசர் அடைவு
திருத்தாண்டகம்,5.
9. சேக்கிழார், கோச்செங்கட் சோழர் புராணம், 2, 3.
10. கோலம் என்பது இலந்தை மரத்தின் பெயர், எனவே கோலக்கா இலந்தை வனம் ஆகும்.
திருஞான சம்பந்தர் பொற்றாளம் பெற்றதை வியந்து பாடியுள்ளார் சுந்தரர்.
“நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும்
ஞானசம்பந்தனுக்கு உலகவர் முன்
தாளம் ஈந்துஅவன் பாடலுக்கு
இரங்கும் தன்மையாளனை” – திருக்கோலக்காப் பதிகம், 8.
11. திருநெல்லிக்கா இப்பொழுது திருநெல்லிக்காவல் எனவும், திருக்கோடிகா,
திருக்கோடிகாவல் எனவும் வழங்கும். மலையாள தேசத்தில் இன்றும் ஐயனாரும், நாகமும் வழிபாடு செய்யப்படும் இடங்கள் காவு என்று அழைக்கப்படுகின்றன. நாயர் இல்லந்தோறும் பாம்புக்காவு உண்டு என்பர்.
12. ஐயை என்னும் கொற்றவையின் கோட்டம் “குரவமும் மரவமும் கோங்கமும் வேங்கையும், விரவிய பூம்பொழில் விளங்கிய இருக்கை” என்று சிலப்பதிகாரம் கூறும். காடுகாண் காதை, 207-208.
13. “மலையார்தம் மகளோடு மாதேவன் சேரும்
மறைக்காடு வண்பொழில்சூழ் தலைச்சங் காடு
தலையாலங் காடுதடங் கடல்சூழ் அந்தண்
சாய்க்காடு தள்ளுபுனற் கொள்ளிக் காடு
பலர்பாடும் பழையனூர் ஆலங் காடு
பனங்காடு பாவையர்கள் பாவம் நீங்க
விளையாடும் வளைதிளைக்கக் குடையும் பொய்கை
வெண்காடும் அடையவினை வேறா மன்றே”
-அடைவு திருத்தாண்டகம்.
14. திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் அப் பதியை வணங்கச் சென்றபோது, திருக்கோயிலின் கதவு அடைக்கப்பட்டிருந்த தென்றும்,
“கண்ணினால் உமைக்காணக் கதவினைத்
திண்ணமாகத் திறந்தருள் செய்ம்மினே”
என்று திருநாவுக்கரசர் பாடிய நிலையில் கதவு திறந்தமையால், இருவரும்மறைக்காட்டு இறைவனைக் கண்டு பாமாலை பாடிப் போற்றினர் என்றும், மீண்டும் திருக்காப்புச் செய்வதற்குத் திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடினார் என்றும் திருத்தொண்டர் புராணம் கூறும்.
15. இவ்வூர் தலைச் செங்காடு எனவும் வழங்கும். தஞ்சை நாட்டு, மாயவர வட்டத்தில் உள்ள தலையுடையவர் கோயிற் பத்து என்ற ஊரே பழைய தலைச்சங்காடென்பது சாசனத்தால் விளங்கும்.- M.E.R.,1925,37.
(தோழர் தியாகு எழுதுகிறார் 112: சனவரி 26 – தொடர்ச்சி
தோழர் தியாகு எழுதுகிறார்
சோசிமத்து: நிலத்தில் அமிழும் நிலம்
விழுங்கப்படுமுன் விழித்துக் கொள்வோமா?
“இயற்கையின் மீது நம் மாந்தக் குலம் ஈட்டிய வெற்றிகளைச் சொல்லி நம்மை நாம் பாராட்டிக்கொள்ள வேண்டா. ஒவ்வொரு வெற்றிக்கும் இயற்கை நம்மைப் பழிக்குப் பழி வாங்குகிறது. ஒவ்வொரு வெற்றியும் முதலில் நாம் எதிர்பார்த்த வெற்றிகளைக் கொண்டுவருவது மெய்தான். ஆனால் இரண்டாவதாகவும் மூன்றாவதாகவும் அது அறவே வேறான எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்துகிறது. இந்த விளைவுகள் முதலில் கிடைத்ததைப் பல நேரம் ஒழித்து விடுவதே உண்மை….”
இது 1876ஆம் ஆண்டில் பிரெடெரிக்கு எங்கெல்சு தந்த எச்சரிக்கை. (கட்டுரை: மாந்தக் குரங்கிலிருந்து மாந்தராக மாறிச் செல்வதில் உழைப்பு வகித்த பங்கு)
இன்று இந்த 2023ஆம் ஆண்டில் வட இந்தியாவில் இமயமலைத் தொடருக்கு நடுவில் உத்தரகாண்டு மாநிலத்தில் சோசிமத்து(Joshimath) என்ற அழகிய சிறு நகரத்தை நிலமடந்தை விழுங்கிக் கொண்டிருக்கிறாள். இயற்கைச் சீற்றமும் அதனால் ஏற்படும் பேரழிவுகளும் இந்த மாநிலத்துக்கும் ஊருக்கும் புதியவை அல்ல என்றாலும் இம்முறை மாந்தர்தம் பேராசையாலும் செயற்கையான வளர்ச்சி வெறியாலும் இந்த அவலம் நேரிட்டிருப்பதாக வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
உத்தரகாண்டு மாநிலத்துக்கு இயற்கைப் பேரிடர்கள் புதியவை அல்ல. 1880க்கும் 1999க்கும் இடைப்பட்ட காலத்தில் நிலநடுக்கங்களும் நிலச்சரிவுகளுமான ஐந்து நிகழ்ச்சிகளில் மட்டும் 1,300க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2000 – 2009 காலத்தில் மட்டும் நிலச் சரிவுகளாலும் முகில் வெடிப்புகளாலும் திடீர் வெள்ளப் பெருக்குகளாலும் 433 உயிர்கள் பறிபோனதாக அதிகார முறைத் தரவுகள் சொல்கின்றன. 2010 – 2020 ஆண்டுகளுக்கிடையே மோசமான பருவநிலையின் கொடுந்தாக்கத்தால் 1,312 உயிர்கள் பலியாகின. சற்றொப்ப 400 சிற்றூர்கள் பாதுகாப்பான வாழ்க்கைக்கு உகந்தவை அல்ல என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டில் மட்டும் நிலச்சரிவுகளும், திடீர் வெள்ளப்பெருக்குகளும், பனிப்புயல்களும் 300க்கு மேற்பட்ட உயிர்களைக் காவு கொண்டன.
“மழைப் பொழிவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று. இந்த மாற்றங்களுக்குக் காலநிலை மாற்றமே காரணம்” என்று பேரிடர் மேலாண்மை வல்லுநர்கள் கருதுகின்றனர். இத்துடன் இவ்வளவு இடர்முனைப்பான பகுதிகளில் மனிதர்களின் கண்மூடித்தனமான வளர்ச்சித் திட்டங்களும் சேர்ந்து கொண்டதன் விளைவே சோசிமத்து அமிழ்வு என்னும் பேரிடருக்கு மூலக் காரணம் என்று சூழலியல் ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகின்றார்கள்.
கடல்நீர் உள்வாங்குதல் பலநேரம் நாம் கண்டிருப்பதுதான், மண்சரிவுகளும் கூட மலைப் பகுதிகளில் புதியவை அல்ல. ஆனால் சோசிமத்தில் நாம் கண்டு வருவது வேறு வகையான நிகழ்வு. இதனை நில அமிழ்வு (land subsidence) என்று கூறுவர். இதில் நிலம் மெல்ல மெல்லக் கீழிறங்கும். ஊரே அடித்தளமில்லாத கட்டடம் போல் உள்வாங்கிச் செல்லும். இதுதான் சோசிமத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நில அமிழ்வினால் இப்போதைக்குச் சோசிமத்தில் கால் பகுதி பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக உத்தரகாண்டு முதலமைச்சர் புட்கர் சிங்கு தாமி (Pushkar Singh Dhami)சொல்கிறார். சற்றொப்ப 25,000 மக்கள் வாழும் சோசிமத்து நகரத்தில் 2.5 சதுர அயிரை8ப்பேரடி(கிலோமீட்டர்) பரப்பில் 4,500 கட்டடங்கள் உள்ளன. இவற்றில் இது வரை 800க்கு மேற்பட்ட கட்டடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. பாதுகாப்பற்ற கட்டடங்களை அதிகாரிகள் இடித்து வருகின்றார்கள். இந்த அமிழ்வைத் தடுத்து ஊரைக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை இல்லை என்று நிலக்கூறியல் வல்லுநர்கள் கூறுகின்றார்கள். மலைச் சரிவில் மரங்கள் அடர்ந்து பசும் போர்வையாக அமைந்திருக்குமானால் மண்சரிவையும் நில அமிழ்வையும் தடுக்கலாம். இருந்த மரங்களை எல்லாம் வளர்ச்சிப் பூதம் விழுங்கி முடித்து விட்டது. இப்போது திடீரென்று ஒரு நாளில் பசும்போர்வையை மந்திரத்தால் வரவழைக்க அலாவுதீனின் அற்புத விளக்கு யாரிடமும் இல்லை.
ஒரு நூற்றாண்டுக்கு மேல் முன்னதாக நடந்த நிலநடுக்கத்தால் மண்சரிந்து அந்த மண்மேட்டில்தான் சோசிமத்து நகரமே கட்டப்பெற்றது. அது நிலநடுக்க இடர்முனைப்பான ஒரு பகுதியில் அமைந்திருப்பது வேறு.
இப்படியொரு பகுதியில் இந்திய அரசின் ‘வளர்ச்சி’ வெறி எப்படியெல்லாம் செயல்பட்டுள்ளது, பாருங்கள்.
1976ஆம் ஆண்டே சோசிமத்தில் திண்ணிய கட்டடங்கள் கட்டக் கட்டுபாடுகள் விதிக்க வேண்டும் என்று அரசு அறிக்கை முன்மொழிந்தது. மண்ணின் சுமைதாங்கும் திறனை ஆய்வு செய்த பிறகே கட்டுமானப் பணிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றது. ஆனால் அரசே என்ன செய்தது பாருங்கள். திட்டவரைமுரையற்ற கட்டுமானத்துக்கு இடமளித்தது மட்டுமல்ல, முறையான வடிகால் வசதி செய்யவும் தவறியது. நீர்மின் திட்டநிலையங்கள் அமைத்தது. இந்திய அரசுக்குச் சொந்தமான தேசிய அனல் மின் நிறுவனம் (NTPC) தபோவன் விட்ணுகாடு(Tapovan Vishnugad) நீர்மின் திட்டம் என்ற ஒன்றை அமைத்து வருகிறது. இந்தத் திட்டத்துக்காக மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட குகைப் பாதைதான் சோசிமத்தின் நில அமிழ்வுக்கு முகன்மைக் காரணம் என்று உள்ளூர் மக்கள் கருதுகின்றார்கள்.
நிலத்தடி நீரை மிகையாக உறிஞ்சி எடுப்பதும், நிலத்தடி நீர்ப்படுகைகளை வற்றச் செய்வதும் கூட நில அமிழ்வுக்குக் காரணமாகக் கூடும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இந்தோனேசியத் தலைநகர் சகர்த்தா உலகிலேயே மிக விரைவாக அமிழ்ந்து கொண்டிருக்கும் நகரமாக இருப்பதற்கு இதுவே காரணம் எனப்படுகிறது. உலக அளவில் 80 விழுக்காட்டுக்கு மேல் நில அமிழ்வுக்குக் காரணமாயிருப்பது மிகையளவில் நிலத்தடி நீரை உறிஞ்சுவதுதான் என்று அமெரிக்க நிலக் கூறியல் ஆய்வகம் சொல்கிறது.
சோசிமத்து சிறிய நகரமே என்றாலும், பத்துரிநாத்து போன்ற புனிதத் தலங்களுக்கு நுழைவாயிலாகத் திகழ்கிறது. சில காலம் முன்பு இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோதி பத்துரிநாத்தில் வழிபாடு செய்யும் காட்சி படம்பிடிக்கப்பட்டு விரிவாக விளம்பரம் செய்யப்பட்டது. இவ்வகையில் சோசிமத்து முக்கியச் சுற்றுலாத் தலமாக இருப்பதால் பெருமளவிலான நீர்த் தேவையை சமாளிக்க நிலத்தடி நீர் ஒட்ட உறிஞ்சப்படுவதும் இப்போதைய அவலத்துக்கான காரணங்களில் ஒன்று.
இந்திய அரசின் ‘வளர்ச்சி’ வெறியோடு இந்து மதவெறியும் சேர்ந்து கொண்டால் என்னாகும்? இதே உத்தரகாண்டில் உள்ள அரித்துவாரில் 2021 திசம்பரில் நடைபெற்ற ‘தரும சம்சத்து’ நிகழ்வில்தான் ‘சாது’க்கள் ஒன்றுகூடி இசுலாமியர்களை இனக் கொலை செய்ய வேண்டும் என்று வெறியோடு வெறுப்புமிழ்ந்தார்கள்.
அயோத்தியில் பாபர் மசூதியை அநியாயமாக இடித்துத் தரைமட்டமாகிய இடத்தில் இராமர் கோயில் கட்டுவது என்ற மதவெறித் திட்டத்தோடு நாடெங்கும் புனித யாத்திரைத் தலங்களை மேம்படுத்தி இந்துக் கடவுளர் மேல் பக்தி வளர்த்து மதவாத அரசியலுக்குத் தூபமிடுவதும் இந்துத்துவ ஆற்றல்களின் திட்டம்தான். இந்தத் திட்டத்தின் ஒரு கூறுதான் கேதர்நாத்து, பத்துரிநாத்து, கங்கோத்திரி, யமுனோத்திரி ஆகிய நான்கு புனித யாத்திரைத் தலங்களை இணைக்கும் ‘சார் தாம்’ சாலைத் திட்டமாகும். இதன் ஒரு பகுதியாக சோசிமத்து ஊடாக புறவழிச் சாலை அமைக்கப்பட்டு வந்தது. மக்கள் போராட்டங்களுக்குப் பின் இந்தப் பணி நிறுத்தபட்டுள்ளது. போராடியவர்களும் இந்துக்களே! இந்துக் கோயிலுக்குப் புனித யாத்திரை சென்று சாமி கும்பிடுவதற்கும் மண்ணில் அமிழ்ந்து போய் விடாமல் உயிரோடிருக்க வேண்டுமல்லவா?
இந்திய அரசைப் பொறுத்த வரை சோசிமத்து துயரத்திலிருந்து படிப்பினை கற்றுத் தன் ‘வளர்ச்சி’த் திட்டங்களை மீளாய்வு செய்வதற்கு மாறாக உண்மைச் செய்திகள் வெளிவராமல் தடுப்பதில்தான் கண்ணும் கருத்துமாகச் செயல்படுகிறது. இது சீன எல்லையோர நகரம் என்று சாக்குச் சொல்கின்றனர். பாதுகாப்புக் காரணங்கள் சொல்லி அகக் கட்டமைப்பு என்ற பெயரில் புதுப்புதுக் கட்டுமானங்கள் வரப் போகின்றன என்று பொருள்!
சோசிமத்து துயரம் உத்தரகாண்டுக்கும் இந்தியாவுக்கும் மட்டுமல்ல, உலகெங்கும் புதுத் தாராளிய வளர்ச்சி வெறி கொண்டு அலையும் ஒவ்வொரு நாட்டுக்கும் எச்சரிக்கையே!
இறுதியாக, மா எங்கெல்சின் தொலைநோக்கான எச்சரிக்கையோடு நிறைவு செய்வோம்:
“… அயல்நாட்டு மக்கள் மீது படையெடுத்து வெற்றி கொள்கிறவனைப் போல், இயற்கைக்கு வெளியே நிற்கிற யாரோ போல், நாம் இயற்கையை எவ்விதத்தும் அடக்கியாள முடியாது என்று ஒவ்வோர் அடியிலும் நமக்கு நினைவூட்டப்படுகிறது. நாம் சதையும் குருதியுமாய் இயற்கைக்குச் சொந்தம், அதற்கு நடுவில் வாழ்கிறோம். இயற்கையின் மீதான நம் வல்லமை என்பதெல்லாம்: இயற்கையின் நெறிகளைக் கற்றுக் கொண்டு அவற்றைச் சரியாகப் பயன்படுத்த மற்ற விலங்குகளால் முடியாது, நம்மால் முடியும் என்பதே.”
(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 83