அறம்சார் அரசியலின் அடையாளம் தோழர் என்.சங்கரய்யா

60 views
Skip to first unread message

தேமொழி

unread,
Jul 10, 2021, 11:04:04 PM7/10/21
to மின்தமிழ்

Comrade NSankaraiah 100 Communist Leader.jpg


---------------------------------------------------------

நன்றி - இந்து நாளிதழ் 


சங்கரய்யா 100: மக்களின் விடுதலைக்காக ஒளிர்ந்து படரும் சுடர்

11/7/2021 
   
- ஜி.செல்வா


குரோம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் நான் படித்துக்கொண்டிருந்த காலம் அது. ரயிலிலிருந்து இறங்கி வீட்டுக்கு நடந்துசெல்லும் கம்யூனிஸ்ட் தலைவர் என்.சங்கரய்யாவை அடிக்கடி பார்ப்பதற்கான வாய்ப்பு அப்போது கிடைத்தது. பள்ளிக்கூடத்தில் நாங்கள் நடத்திய போராட்டத்துக்கு உதவி கேட்டுச்சென்ற அவருடைய வீடு, பெரும் அரசியல் வரலாற்றைக் கொண்டது என்பதை அப்போது அறிந்திருக்கவில்லை. பழைய புத்தகக் கட்டுகளுக்கு இடையில் செய்தித்தாளில் அச்சாகியிருந்த, ‘வறுமையின் நிறம் சிவப்பு அல்ல, வறுமையைப் போக்க வந்த நிறமே சிவப்பு - சட்டமன்றத்தில் சங்கரய்யா பேச்சு’ என்ற செய்தியைப் பார்த்த பிறகு, ‘தாத்தா’ என அதுவரை அழைத்துக்கொண்டிருந்த சங்கரய்யா எனக்குத் தோழராக மாறினார்!

சங்கரய்யாவின் 40 வயது வரையிலான வாழ்க்கையை ஒரே வாக்கியத்தில் சொல்ல வேண்டுமானால் ‘ஏறுனா ரயில், இறங்கினா ஜெயில்’ எனலாம். அவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை மாணவராகப் பயின்றுகொண்டிருந்தபோது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை அழைத்துக் கூட்டம் நடத்தினார். அதன் காரணமாக, இறுதியாண்டுத் தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பு கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

பிற்காலத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நீலம் சஞ்சீவ ரெட்டி, ஆர்.வெங்கட்ராமன், தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த காமராஜர் ஆகியோர் சங்கரய்யாவின் சிறைச்சாலை சகாக்கள். கல்லூரி மாணவராக இருந்த காலத்தில், மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சி கிளை உறுப்பினராக ஆன அவர், சில ஆண்டுகளிலேயே ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஆனார். விடுதலைப் போராட்டத்தால் அடிக்கடி சிறை சென்ற அவர், சிறையினுள்ளே காங்கிரஸ் சார்புடையவர்களுக்குப் பொதுவுடமை அரசியலின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி அவர்களை கம்யூனிஸ்ட் ஊழியர்களாக மாற்றிவிடுகிறார் என்று சிறை நிர்வாகம் அஞ்சியது. இதனால், வேலூரிலிருந்து கேரள மாநிலம் கண்ணூர் சிறைக்கு மாற்றப்பட்டார். நாட்டு விடுதலைக்காக, மக்களின் வாழ்வாதார உரிமை சார்ந்த போராட்டங்களுக்காக என எட்டு ஆண்டுகள் சிறையிலும், ஐந்து ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையும் வாழ்ந்தார் சங்கரய்யா.

கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் பி.சி.ஜோஷி மதுரையில் 1946-ல் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் ஒரு லட்சம் பேர் பங்கேற்றனர். மக்கள் கூடுவதற்கு இடமில்லாததால், வைகை ஆற்றுக்குள்ளேயே கூட்டம் நடத்தப்பட்டது. எப்படி அந்தக் காலத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சியால் ஒரு லட்சம் பேரைக் கூட்ட முடிந்தது என்ற கேள்விக்கு, “மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அவர்களுடைய பிரச்சினைகளுக்காகத் தன்னடக்கத்தோடு இணைந்து செயல்பட்டால், மக்கள் நம்மை நோக்கி வந்துகொண்டே இருப்பார்கள்” என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதல் பொதுச் செயலாளர் பி.சி.ஜோஷி தொடங்கி, மார்க்சிஸ்ட் கட்சியின் இன்றைய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வரை கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துத் தலைவர்களுடனும் இணைந்து பொதுவுடைமை இயக்கத்தை வழிநடத்திய தலைவர் சங்கரய்யா. அன்றைய சென்னை மாகாணத்தின் முதல்வர் ராஜாஜி தொடங்கி, இன்றைய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரை தமிழ்நாட்டின் முதல்வர்களுடனும் இணைந்து பயணித்தவர்.

பொதுவுடைமை இயக்கத்தின் தமிழ் நாளிதழான ‘ஜனசக்தி’யின் முதல் பொறுப்பாசிரியர் அவர்தான். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘தீக்கதிர்’ நாளேட்டுக்கு அதிகாரபூர்வமாகத் தேர்வுசெய்யப்பட்ட முதல் ஆசிரியரும் அவரே. தேர்ந்த தமிழ் இலக்கிய வாசிப்பும், உரையாடல்களில் பொருத்தமான இடங்களில் இலக்கியத்தை மேற்கோள் காட்டுவதிலும் வல்லவர். அவரது பேச்சானது எதிரில் இருப்பவர்களைச் சுண்டியிழுக்கும். புதிய சிந்தனைகளுக்குத் திறவுகோலாக அமையும். “ஒவ்வொரு மண்ணுக்கும் உரிய மரபான கலை, இலக்கியங்களை முற்போக்காளர்கள் ஆழ்ந்து பயில வேண்டும். சமயத் தலைவர்களுக்கோ மற்ற பண்டிதர்களுக்கோ இருப்பதைவிட, முற்போக்காளர்களுக்குத்தான் ஆழ்ந்த புலமை வேண்டும். அப்போதுதான் நம் சொல்லை நாடு கேட்கும்” என்பார் சங்கரய்யா.

அத்தியாவசியப் பொருட்களை வாங்க கிராமப்புற மக்கள் நகரங்களுக்குச் செல்ல வேண்டிய சூழல் இருப்பதால், அனைத்துக் கிராமங்களிலும் நியாய விலைக் கடைகளைத் திறப்பது குறித்து ஆளுநர் உரையில் அறிவிக்க வேண்டும் என முதல்வராக இருந்த எம்ஜிஆர், அமைச்சர் நாஞ்சில் மனோகரன் ஆகியோரைச் சந்தித்து வலியுறுத்தினார் சங்கரய்யா. அந்தக் கோரிக்கையை எம்ஜிஆர் ஏற்றிருந்த நிலையில், ஆளுநர் உரை ஏற்கெனவே அச்சிடப்பட்டுவிட்டதால், கோரிக்கையைச் சேர்க்க இயலாது என்றார் நாஞ்சில் மனோகரன். இந்த விஷயத்தை மட்டும் தட்டச்சு செய்து, ஆளுநர் உரையின் கீழே ஒட்டிவிடுங்கள் என ஆலோசனை கூறினார் சங்கரய்யா. அதை நடைமுறைப்படுத்தினார் எம்ஜிஆர். இதையொட்டியே, “எனக்கு மட்டும் ஒரு லட்சம் வாக்குகள் இருந்தால், ஒவ்வொரு வாக்கையும் சங்கரய்யாவுக்கே அளிப்பேன். ஏனென்றால், எனது குறைகளை வெளிப்படையாகச் சொல்லி வழிநடத்துவார் சங்கரய்யா” என எம்ஜிஆர் பேசினார்.

“தலைவர் பொறுப்பில் இல்லாமல் திமுகவில் நீங்கள் எப்படிச் செயல்பட முடியும்” என்று திமுக தலைவர் கருணாநிதியிடம் நிருபர்கள் ஒருமுறை கேட்டபோது, “திமுக சங்கர மடம் அல்ல... ஜனநாயக இயக்கம். எப்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லாமல், சங்கரய்யா கட்சியை வழிநடத்துகிறாரோ அதுபோல் நானும் செயல்படுவேன்” என்று பதிலுரைத்தார். அரசியல் கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் இருந்தாலும் தனது ‘தாய்’ நாவலுக்கு சங்கரய்யாதான் முன்னுரை எழுத வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் கருணாநிதி.

கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிர்காலம் உண்டா என ஊடகவியலாளர்கள் எழுதியபோது, “உங்களைச் சுற்றிப் பாருங்கள்... முதலாளித்துவம்தான் இன்றைக்கு நெருக்கடியில் இருக்கிறது. அந்த நெருக்கடியைச் சமாளிப்பதற்காக தொழிலாளர், விவசாயிகள் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையில் சாதிய, மதவாதச் செயல்பாடுகளை அது முன்னெடுக்கிறது. இந்தச் சமூக அமைப்பிற்கு மாறானது சோஷலிசம். அந்தப் பாதையில் உலகம் பயணிக்கும்” என்று கணீர்க் குரலால் பதிலளித்தார் சங்கரய்யா. லட்சியவாத அரசியல் பொய்த்துப்போனதாகக் கூறப்படும் காலத்தில், ‘கம்யூனிஸ்ட்டுகள் வாக்கின் ஒளியில்தான் இந்திய தேசத்தின் இருள் மறையும். அது வெகு தொலைவில் இல்லை’ என்று பதின்பருவத்தில் தன் நெஞ்சில் ஏற்றிக்கொண்ட வார்த்தைகளுக்குச் சாட்சியமாக நூறாவது பிறந்த நாளில் அழியாச் சுடர்போல் ஒளிர்ந்துகொண்டிருக்கிறார் சங்கரய்யா!

- ஜி.செல்வா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர்.

தொடர்புக்கு: selv...@gmail.com


தேமொழி

unread,
Jul 14, 2021, 1:09:22 AM7/14/21
to மின்தமிழ்

-- தமிழறிஞர் சாலமன் பாப்பையா

நூற்றாண்டை நோக்கி வாழ்ந்துகொண்டிருக்கும் விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யாவைஎனது சிறுவயது முதலே நான் அறிவேன்.

மதுரையில் ஹார்வி மில்லை சுற்றியுள்ள அழகரடி, பொன்னகரம், கரிமேடு, மணிநகரம், பூந்தோட்டம், கிருஷ்ணாபாளையம், 14-தெரு பகுதிகள் உழைப்பாளி மக்கள் நிறைந்த பகுதி. இவர்கள் நில-புலன்கள் இல்லாதவர்களோ, விவசாயம் இல்லாதவர்களோ தான். இவர்கள் ஹார்வி மில்லில் பஞ்சாலைத் தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர். இந்த பஞ்சாலைத் தொழிலாளர் குடும்பங்களில் எங்கள் குடும்பமும் ஒன்று.ஹார்வி மில்லில் ஒன்பது நேரம் வேலை. கூலியோமிகக்குறைவு. ஒன்பது நேர வேலையை எட்டு மணி நேரமாக மாற்றியதில், பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு பெற்றுத் தந்ததில் பொதுவுடைமை இயக்கங்களுக்கு முக்கியப் பங்குண்டு. மணிநகரத்தின் மேற்குப் பகுதி, சௌராஷ்டிரா மக்கள் வாழ்ந்த பகுதிகளில் பொதுவுடைமை இயக்கம் வலுவாக இருந்தது.

ஹார்வி மில் தொழிலாளர்கள் வசித்த பகுதிகளில் யோகானந்தா சாமிமடத் தெருவும் ஒன்று. இந்தத் தெருவின்மேற்குக் கடைசியில் இருந்த வீட்டில் தொழிற்சங்க அலுவலகம் ஒன்று இருந்தது. இங்கு சங்கரய்யா வந்து செல்வார். எனது பெரியப்பா மகன் ஒரு பஞ்சாலைத் தொழிலாளி. ஜனசக்தி வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால், அவருக்கு படிக்கத் தெரியாது. எனக்குஜனசக்தியை பற்றி எதுவும் தெரியாது. அதில் உள்ளதை அப்படியேபடிப்பேன். அதை போவோர், வருவோர் கேட்டுச் செல்வர். சிலர் நின்று முழுமையாக நான் படிப்பதைக் கேட்டுச் செல்வர். ஒரு முறை சங்கரய்யா யார் இந்தப் பையன், நன்றாக வாசிக்கிறானே எனக் கேட்டு வியந்திருக்கிறார்.

எனது பெரியப்பா மகன் என்னை பொதுவுடைமை இயக்கக் கூட்டங்களுக்கு அழைத்துச் செல்வார். கூட்டங்கள் பரமேஸ்வரி தியேட்டர், வைகையாற்றின் மையமண்டபம், திலகர் திடல் ஆகிய இடங்களில் நடைபெறும். அங்கு சங்கரய்யாவின் உணர்ச்சி மிகு பேச்சைக்கேட்டிருக்கிறேன். 1946-48-ஆம் ஆண்டுகளில் அவருக்கு 26 வயது இருக்கும். எனக்கு வயது பதினெட்டுக்கும் கீழ் தான்.  அப்போது தொலைக்காட்சி பெட்டியோ, ரேடியோவோ கிடையாது. எங்காவது கிராம போன் இருக்கும். திரைப்படங்களுக்கு செல்வதற்கு கையில் காசிருக்காது. பொதுவுடைமை இயக்கங்கள் நடத்தும் கூட்டங்களுக்குச் செல்வது தான் எனக்கு பொழுதுபோக்கு.

அன்றைக்கு இருந்த நெருக்கடியான கால கட்டத்தில்கல்லூரி கல்வியை என்.சங்கரய்யாவால் முடிக்க முடியவில்லை. சங்கரய்யாவின் தந்தை ஹார்வி மில் பொறியாளர். மும்பையில் படித்தவர். அவர் நினைத்திருந்தால் மகனை கண்டிப்பாக படி எனக் கூறியிருக்க முடியும். ஆனால் சங்கரய்யாவின் முன் தேசத்தின் நிலை, உழைப்பாளி மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம், அவர் கற்றறிந்த மார்க்சியம் ஆகியவை தான்நின்றது. சஙகரய்யா அடிவயிற்றிலிருந்து பேசுவார். அவரது குரலில் ஆவேசம் இருக்கும். உணர்வோட்டமாக பேசுவார். அவரது பேச்சைக் கேட்பவர்கள் உணர்ச்சிப் பெருக்கோடு கலைந்து செல்வார்கள்.சங்கரய்யா உள்ளிட்ட பல தலைவர்கள் மீது  சதி வழக்குபதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் சங்கரய்யா உள்ளிட்டவர்கள்  வெற்றிபெற்றனர். சுதந்திரம் பெறுவதற்கு முதல்நள் தான் அவர்கள் சிறையிலிருந்து விடுதலையானார்கள். அவர்களை வரவேற்க மதுரை ஜெயில்முன் ஏராளாமானோர் கொடிகளுடன் திரண்டிருந்தனர். எங்கள் குடும்பத்தினருடன் நானும் சென்றிருந்தேன். அவர்கள் வெளியே வந்தவுடன் திலகர் திடல் நோக்கி பேரணி நடைபெற்றது. மிகவும் கால தாமதமானதால் நான்வீட்டிற்கு வந்துவிட்டேன். 

பொதுவுடைமை இயக்கம் நெருக்கடிகளைச் சந்தித்தபோது இயக்கத்தை விட்டு வெளியே வராமல், மார்க்சிய கருத்தில் அவர் உறுதியாக இருந்தார், சமயம், சாதி உணர்வுகளை அறுத்தெறிந்துவிட்டு மானுட வாழ்க்கை தான் அனைத்திற்கும் தீர்வு என்றார். சங்கரய்யாவின் பேச்சைக் கேட்டால் உடல் சிலிர்க்கும், மயிர்க்கால்கள் எழுந்து நிற்கும். அவரது உரை அந்தளவிற்கு உணர்வுப்பூர்வமாக இருக்கும். அவரது உரை என்னைப் போன்றவர்களை பக்குவப்படுத்தியது. வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டுமென உணர்த்தியது.எங்கள் வீடு இருந்த கிருஷ்ணாபாளையம் இரண்டாவது தெருவில் இரண்டு வீடுகள் தள்ளி சங்கரய்யா தங்கியிருந்துள்ளார். நான் வாசலில் அமர்ந்து சத்தமாக ஜனசக்தியை வாசிப்பதை அவரும் கேட்டு என்னைப் பற்றி விசாரித்துள்ளார். மனிதர்களைக் கனிப்பதில் சங்கரய்யா வல்லவர்.ஒரு முறை சௌராஷ்டிரா கல்லூரியில் தொழில்துறைசார்ந்தவர்களுக்கு ஒரு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.அதில் பல்வேறு தொழிற்சங்கத்தினர் கலந்தகொண்டிருந்தனர். மற்றொரு சந்தர்ப்பத்தில் கிறித்தவர்களும்-தமிழ்புலவர்களும் என்ற தலைப்பில் ஒரு கூட்டத்தில் நான்பேசினேன். நான் பேசியதை சங்கரய்யா கேட்டறிந்துள்ளார்.

எங்கள் வீட்டிற்கு ஒரு முறை வந்திருந்த சங்கய்யா என்னிடம், இயக்கத்தைப் பார்க்க வேண்டும், இயக்கத்திற்கு பலரும் வரவேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தார். நான் பணியாற்றிய இடத்தில் அது சாத்தியமில்லாமல் போனது.சாதி, சமயம் கடந்து மார்க்சிய இயக்கத்தை வளர்க்கவேண்டுமென்பதிலேயே அவருடைய முழுக் கவனமும் இருந்தது.என்.சங்கரய்யா கிருஷ்ணாபாளையம் இரண்டாவது தெருவில் தங்கியிருந்த வீட்டிலிருந்த குடும்பத்தினர்களில் ஒருவரது பெயர் நவமணி. அவரும் ஒரு பஞ்சாலைத்தொழிலாளி. அவரது வீட்டு வாசலில் “கடிகாரத்திற்கு சாவி கொடுக்க வேண்டிய நாள்” என எழுதப்பட்டிருந்தது.. இது குறித்து நான் கேட்டதற்கு வீட்டிற்குள் வந்து யாரும்மணி பார்க்க வந்துவிடக்கூடாது. அப்படி வந்தால் தலைமறைவாக உள்ளவர் குறித்த விவரம் தெரிந்தும் விடும்.யாரும் வீட்டிற்குள் வருவதைத் தடுக்கவே அவ்வாறுஎழுதப்பட்டிருந்தது என்பதை பின்னாளில் அறிந்துகொண்டேன்.மார்க்சிய இயக்கத்திற்கும் நாட்டு மக்களுக்கும் அவர்ஆற்றிய சேவைகளை எண்ணி பெருமை கொள்கிறேன். மகிழ்ச்சியடைகிறேன். அவரது பணி தொடர வேண்டும். எனது பாணியில் சொல்லவேண்டுமானால் அவரது திருவடியை சோவித்துக்கொள்கிறேன்.


கட்டுரையாளர் :  தமிழறிஞர் சாலமன் பாப்பையா
சந்திப்பு: ச.நல்லேந்திரன்
நன்றி: தீக்கதிர் 

தேமொழி

unread,
Jul 16, 2021, 4:22:37 PM7/16/21
to மின்தமிழ்
"தோழர் என் .சங்கரைய்யா : வாழ்க்கையும் இயக்கமும்"
 --  என்.ராமகிருஷ்ணன்
பாரதி புத்தகாலயம்  வெளியீடு 

இது முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் என்.சங்கரய்யா வாழ்க்கை வரலாறு. அவரது சகோதரர் என்.ராமகிருஷ்ணன் எழுதி பாரதி புத்தகாலயம் வெளியிட்ட புத்தகம். சங்கரய்யா நூறாண்டுக் கொண்டாட்டத்தையொட்டி கூடுதல் தகவலுடன் கட்சியால் மறுபதிப்பாக பிடிஎஃப் வடிவில் விலையின்றி வெளியிடப்பட்டுள்ளது.

நூல் இணைப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது 
கீழ்க்காணும் சுட்டியிலும் பெறலாம் ....

தகவல் உதவி: https://tncpim.org/தோழர்-என்-சங்கரய்யா-வாழ்/

Comrade-N-Sankaraiah-Vaalvum-Iyakkamum.pdf
Reply all
Reply to author
Forward
0 new messages