‘பராசக்தி’ என் பழைய நினைவுகளைத் தூண்டிவிட்டது.
M.Sc கணிதம் முடித்துவிட்டு, 1964 ஜூன்-இல் நான் அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியர் பணியில் அமர்ந்தேன்.
அப்போது எனக்கு வயது 21-தான். எனவே பட்ட இறுதி மாணவர்களைக் காட்டிலும் ஓரிரு வயதுதான் மூத்தவன்.
அப்போது கல்லூரி முதல்வர், திரு.சவரிராயன். முதல்வர் என்னப்படாமல் கல்லூரித்தந்தை என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர்.
1965-மார்ச் மாதம். நாள் நினைவில் இல்லை.
கல்லூரியில் முக்கிய கட்டிடம் Main Hall என்னப்படும் பேரவைக்கட்டிடம். அது கல்லூரியை உள்புறமாக நோக்கிக் கட்டப்பட்டிருக்கும். அதன் பின்புற வெராந்தா (மிக நீளமானது) கோரிப்பாளையம் சாலையைப் பார்த்தவண்ணம் இருக்கும். கல்லூரிக்கு வேலியாக, சிறிய சுவர் மேல் இரும்புக் கிராதிதான் இருக்கும். பின்புற வெராந்தாவிலிருந்து பார்த்தால் சாலை தெரியும். அந்த இடைவெளியில் நிறைய மரங்கள் இருப்பதால் அப்பகுதி ஒரு சோலை போல் இருக்கும்.
1965- மொழிப்போரில் அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் முழுப்பங்கு ஏற்றனர். வகுப்புகளைப் புறக்கணித்து, பேரவைக் கட்டிடத்தின் பின் வெராந்தாவை ஒட்டிய மரங்களின் கீழே கூடி முழக்கங்கள் எழுப்புவர். முதல்வர் உட்பட ஆசிரியர்கள் அனைவரும் அந்த வெராந்தாவில் நின்று பார்த்துக்கொண்டிருப்போம்.
அன்றைய மாவட்டக் கலெக்டரிடமிருந்து முதல்வருக்குச் செய்தி வந்தது. ‘போலீஸ் உள்ளே வரவா?’
முதல்வர் உறுதியாக மறுத்துவிட்டார்.
இப்படியாகச் சில நாட்கள் கழிந்தன. ஒவ்வொரு நாளும் இதே நிகழ்வுதான். மாணவர்கள் கூட்டம் – சிலர் பேச்சு – முழக்கங்கள்.
முதல்வர் மாணவர்கள்சங்கத் தலைவனை அழைத்து எச்சரித்தார்.
எந்தக் காரணத்தைக் கொண்டும் மாணவர்கள் கல்லூரி எல்லையைத் தாண்டி வெளியே சாலைக்குச் செல்லக்கூடாது.
ஆனால், ஒவ்வொருநாளும் செய்திகள் வந்தன - ஆங்காங்கே மாணவர்கள் முழக்கமிட்டு ஊரின் தெருவழியே ஊர்வலம் போவதாக.
ஒருநாள் – எந்த நாள் என்று சரியாக நினைவில் இல்லை. மாணவர்கள் பூட்டிய கதவுகளை உடைத்துக்கொண்டு தெருவுக்குப் போய்விட்டார்கள்.
நாங்கள் பதறிப்போனோம்.
சாலையில் நின்றிருந்த போலீஸ் வாகனங்கள் மெதுவாக நகர்ந்து மாணவர்களைப் பின்தொடர்ந்து சென்றன.
மாணவர்கள் ஊர்வலமாக, முழக்கங்களை எழுப்பிக்கொண்டு ஆற்றை நோக்கிச் சென்றார்கள். ஆற்றுப் பாலத்தைக் கடந்து மாசிவீதிகளில் ஊர்வலம் போவது அவர்களின் திட்டம்.
நாங்கள் கலைந்துசெல்லாமல் அந்த வெராந்தாவிலேயே நின்றுகொண்டிருந்தோம்.
சற்று நேரத்தில் மாணவர்கள் கூட்டம் கூட்டமாக வேகமாக ஓடிவந்து கல்லூரிக்குள் நுழைந்தனர். நேராக எங்களிடம் வந்தனர்.
‘என்னப்பா?” என்று சிலர் கேட்டோம்.
“வெட்டுறாய்ங்க சார்”
எங்களுக்குத் தூக்கிவாரிப் போட்டது.
அவர்கள் சொன்ன தகவல்:
மாணவர்கள் கீழ்ப்பாலத்தைக் கடந்து வடக்குமாசி வீதியில் நுழைந்திருக்கிறார்கள். அங்கே காங்கிரஸ் கட்சி அலுவலகம் உண்டு. மாணவர்கள் அந்தக் கட்டிடத்தைக் கடக்கும்போது, அந்த அலுவலகத்துள்ளிருந்து சிலர் வேகமாக வெளியே வந்து அரிவாளால் மாணவர்களை வெட்டத் தொடங்கினர். பல மாணவர்கள் சிதறி ஓட, சிலர், அந்த அலுவலக வாசலில் குடியரசுதின விழாவுக்காகப் போடப்பட்டிருந்த பந்தலிலிருந்து மூங்கில் கம்புகளைப் பிடுங்கி, அந்தக் கயவர்கள் மீது சிலம்பம் வீசி அவர்களை விரட்டியிருக்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, இன்னொரு மாணவர் கூட்டம் வந்தது. ஒரு பத்துப் பதினைந்துபேர் இருக்கும். அனைவர் கைகளிலும், சட்டைகளிலும் இரத்தக்கறை. காயம்பட்ட மாணவர்களை அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, தகவல் சொல்ல வந்தோம் என்றார்கள்.
ஆசிரியர்கள் சிலர் மருத்துவமனைக்கு விரைந்தார்கள்.
நாங்கள் கல்லூரி வாசலுக்குச் சென்று, திரும்பிவரும் மாணவர்களின் நலம் விசாரித்து அனுப்பினோம்.
“வெட்டுறாய்ங்க சார்”
இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
அவர்கள் வெட்டியது மாணவர்களை அல்ல. அவர்களின் கட்சியின் ஆணிவேரையேதான்.
ப.பாண்டியராஜா
