நத்தார் நாளும் இலக்கியமும்
நூற்று அறுபதுக்கும் மேலான நாடுகளில், பல நூறு கோடி மக்களால் கடைபிடிக்கப்பட்டும், பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டும் கொண்டாடப்படுகின்ற நாள் டிசம்பர் 25.
சமூகத்தில் பண்டிகைகள் வெறும் கொண்டாட்டமாக மட்டும் இல்லாமல், மனித வாழ்வின் மிக முக்கியமான தேவைகளை ஈட்டிக் கொடுப்பனவாகவும் இருக்கின்றன. அவை அப்படியாக அமைந்திருக்கின்றன?
உழைப்பின்பாற்பட்டும் நியதியின்பாற்பட்டும் முசுவாக இருக்குமிந்த உலகில், மனிதர்கள் தனித்தனியாகப் பிரிந்து இருக்கின்றனர். பண்டிகைகள், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உறவினர்களை ஒன்று சேர்க்கின்றன. ஒன்றாக அமர்ந்து உண்ணும் விருந்து, பரிமாறப்படும் அன்பளிப்புகள் மனிதர்களுக்கிடையேயான பிணைப்பை வலுப்படுத்துகின்றன.
பண்டிகைகள் ஒரு சமூகத்தின் வரலாறு, வழக்காறுகள், மரபுகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்கின்றன. ஒரு குறிப்பிட்ட சமூகம் எதை மதிக்கிறது, எதைப் போற்றுகிறது என்பதை அந்தச் சமூகத்தின் பண்டிகைகள் வெளிப்படுத்துகின்றன.
தொடர்ச்சியான வேலை, அன்றாடப் பிரச்சனைகளிலிருந்து ஒரு தற்காலிக விடுதலையைப் பண்டிகைகள் வழங்குகின்றன. வண்ணமயமான விளக்குகள், பாடல்கள், பண்டங்கள், உண்டாட்டுகள் என்பன மனத்திற்கு நேர்மறையானதும் புத்தாக்கமானதுமான ஆற்றலை உண்டாக்குகின்றன. பண்டிகைகள் "ஈகை" அல்லது "கொடுத்தல்" என்பதை வலியுறுத்துகின்றன. வசதி படைத்தவர்கள் இல்லாதவர்களுக்கு உதவும் ஒரு பாலமாக இவை அமைகின்றன.
பண்டிகைகள் நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெரும் பங்களிக்கின்றன. புத்தாடைகள், பரிசுகள், உணவுப் பொருட்கள், பயணங்கள் மூலம் வணிகம் பெருகுகிறது. இது பலரின் வாழ்வாதாரத்திற்கு உதவியாக அமைகிறது.
இப்படியாகப்பட்ட நத்தார் நாளின் போது பார்க்கப்படுகின்றதும் அமெரிக்கச் செவ்வியல்த் திரைப்படமாகவும்
It's a Wonderful Life (1946) இருக்கின்றதென்பதைப் பார்த்தோம்.
https://shorturl.at/Wed3c அதே பாங்கில், நத்தார் நாள் விடுப்பில் எல்லோராலும் வாசிக்கப்படுகின்ற செவ்வியல்ச் சிறுகதைகளும் உள்ளன. அவற்றுள் தலையாயக் கதைகள் சிலவற்றைப் பார்ப்போம்.
The Gift of the Magi by O. Henry
டெல்லா மற்றும் ஜிம் என்ற இளம் தம்பதியினர் மிகவும் ஏழ்மையான நிலையில் வசித்து வந்தனர். அவர்களிடம் இரண்டு பொக்கிஷங்கள் இருந்தன: ஜிம்மிடம் அவனது தந்தை வழி வந்த தங்கக் கடிகாரம் இருந்தது; டெல்லாவிடம் முழங்கால் வரை நீளும் மிக அழகான நீண்ட கூந்தல் இருந்தது.
நத்தார் நாள்நெருங்கிய வேளையில், ஜிம்மிற்கு ஒரு விலையுயர்ந்த பரிசு வாங்க டெல்லாவிடம் வெறும் $1.87 மட்டுமே இருந்தது. தன் கணவன் மீது கொண்ட அளவற்ற அன்பால், அவள் ஒரு முடிவெடுத்தாள். ஒரு முடி திருத்தும் கடைக்குச் சென்று, தன் அழகான கூந்தலை 20 டாலருக்கு விற்றுவிட்டாள். அந்தப் பணத்தைக் கொண்டு, ஜிம்மின் தங்கக் கடிகாரத்திற்குப் பொருத்தமான ஒரு பிளாட்டினம் சங்கிலியை வாங்கினாள்.
அன்று இரவு ஜிம் வீட்டிற்கு வந்தபோது, மொட்டையடிக்கப்பட்ட நிலையில் இருந்த டெல்லாவைக் கண்டு அதிர்ச்சியடைந்தான். கோபத்தினால் அல்ல, அவன் கொண்டு வந்த பரிசினால். அவன் டெல்லாவிற்காக, அவள் நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட, விலை உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட அழகான சீப்புகளை பரிசாகக் கொண்டு வந்திருந்தான். அந்தச் சீப்புகளை வாங்குவதற்குத் தேவையான பணத்திற்காக, ஜிம் தன் மிக உயரிய பொக்கிஷமான தங்கக் கடிகாரத்தையே விற்றுவிட்டான்.
இப்போது டெல்லாவிடம் சீப்பு இருக்கிறது, ஆனால் முடி இல்லை. ஜிம்மிடம் சங்கிலி இருக்கிறது, ஆனால் கடிகாரம் இல்லை. அவர்கள் ஒருவருக்கொருவர் வாங்கிய பரிசுகள் அந்த நேரத்தில் பயன்படாமல் போனாலும், அவர்கள் ஒருவருக்கொருவர் காட்டிய அன்பும் தியாகமுமே உலகிலேயே மிகச்சிறந்த பரிசாகக் கருதப்படுகிறது.
The Elves and the Shoemaker by Jacob Grimm and Wilhelm Grimm
ஒரு நேர்மையான காலணி தைப்பவர் மிகவும் ஏழ்மையில் இருந்தார். அவரிடம் கடைசியாக ஒரே ஒரு ஜோடி காலணி தைப்பதற்கான தோல் மட்டுமே எஞ்சியிருந்தது. அன்று இரவு அந்தத் தோலை வெட்டி மேசை மீது வைத்துவிட்டு, "நாளை தைக்கலாம்" என்று உறங்கச் சென்றார்.
மறுநாள் காலை அவர் வேலைக்கு வந்தபோது, மேசை மீது தைக்கப்படாத தோலுக்குப் பதில், மிக நேர்த்தியாகத் தைக்கப்பட்ட ஒரு ஜோடி காலணிகள் இருப்பதைக் கண்டு வியந்தார். அந்த காலணிகள் அவ்வளவு அழகாக இருந்ததால், ஒரு வாடிக்கையாளர் அதை அதிக விலை கொடுத்து வாங்கிச் சென்றார். அந்தப் பணத்தில் அவர் இரண்டு ஜோடி தோல்களை வாங்கினார். அடுத்தடுத்த நாட்களிலும் இதுவே தொடர்ந்தது. அவர் இரவில் வெட்டி வைக்கும் தோல்கள் அனைத்தும் மறுநாள் காலையில் அற்புதமான காலணிகளாக மாறின. விரைவில் அவர் பெரும் செல்வந்தரானார்.
உதவியாளர்கள் யார்? ஒருநாள் நத்தார் நாள் சமயத்தில், அந்த உதவியாளர்கள் யார் என்று கண்டறிய அவரும் அவர் மனைவியும் நள்ளிரவில் ஒளிந்திருந்து பார்த்தனர். அப்போது ஆடையின்றி இருந்த இரண்டு சிறிய குள்ள மனிதர்கள் அங்கு வந்து, மின்னல் வேகத்தில் காலணிகளைத் தைத்து முடித்துவிட்டு மறைந்தனர்.
அந்தக் குள்ள மனிதர்கள் குளிரில் ஆடையின்றி இருப்பதைப் பார்த்து பரிதாபப்பட்ட மனைவி, அவர்களுக்காகச் சிறிய சட்டைகளையும் டிரவுசர்களையும் தைத்தார். கணவர் சிறிய காலணிகளைச் செய்தார். அன்று இரவு தோலுக்குப் பதில் இந்த உடைகளை வைத்துவிட்டு அவர்கள் மறைந்து பார்த்தனர். உடைகளைக் கண்டு மகிழ்ச்சியடைந்த குள்ள மனிதர்கள், அவற்றை அணிந்துகொண்டு ஆடிக்கொண்டே வெளியே சென்றனர். அதன் பிறகு அவர்கள் மீண்டும் வரவில்லை, ஆனால் காலணி தைப்பவர் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்.
இப்படியாகக் கதைகள் வாயிலாக, ஒருவருக்கொருவர், இருப்பவர், வாய்ப்புக்கிடைத்தவர் முதலானோர் மற்றவர்களின்பால் அக்கறை கொள்வதையே சொல்லிச் சொல்கின்றன. அக்கறை கொள்வோம்; அன்பு செலுத்துவோம்.
நத்தார் நாள் வாழ்த்துகள்!-பழமைபேசி.
https://maniyinpakkam.blogspot.com/2025/12/blog-post_24.html