தொல்காப்பியர் காட்டும் "கற்பு"!

1,432 views
Skip to first unread message

Kannan Natarajan

unread,
Oct 4, 2008, 10:12:27 PM10/4/08
to Min Thamizh

"கற்பு" என்பதற்குப் பல்வேறு பொருள்கள் சொல்லப்படுகின்றன.

 
"கற்பு என்றால் கல்லைப் போன்று மன உறுதியுடன் இருப்பது",
 
"கற்பு என்பது கணவன் சொற்படி நடப்பது," என்றெல்லாம் சொல்கிறார்கள்.
 
கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமல்ல, அது எல்லோருக்கும் பொதுவானது என்று பாரதியார் பொருள் கொண்டு "கற்பென்று சொல்ல வந்தார், அதை இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம்," என்று பாடினார். "கற்பு என்பது புனிதப் பொருளாகக் கருதப்படுவது" என்று ஒரு சாராரும், "கற்பு என்பது இல்லாத ஒன்று, அதை வலியுறுத்த வேண்டிய அவசியமில்லை,"என்று மற்றொரு சாராரும் தீவிரமாக வாதிட்டு வருகின்றனர்.
 
உண்மையிலேயே கற்பு என்பதற்கு என்னதான் பொருள்?
 
தொல்காப்பிய இலக்கணத்தில் வாழ்க்கை மரபுகளை உணர்த்தும் பொருளதிகாரப் பகுதியில், திருமணத்திற்குப் பிற்பட்ட வாழ்க்கை மரபுகளை உணர்த்துவது கற்பியல் எனும் பகுதியாகும். "கற்பியல்" எதைச் சொல்கிறது என்பதற்குத் தொல்காப்பிய உரையாசிரியர் நச்சினார்க்கினியர் தரும் விளக்கம் இங்கு கருதத்தக்கது.

"வரைதலின்பின் இன்னவாறு ஒழுகுதல் வேண்டும் என இருமுது குரவரால் கற்பித்தலின் கற்பாயிற்று," என்றார் அவர். அப்படியானால் கற்பு என்பதற்கு, "கற்பித்தவாறு ஒழுகுதல்" என்பது பொருளாகிறது. இதன் பொருட்பரப்பை இன்னும் விரிவாக்கிப் பார்த்தால், மனித சமுதாயத்தில் உள்ள அனைவருக்குமே "கற்பு" வேண்டும் என்பது புலனாகிறது. அதாவது, அவர்கள் "கற்றவாறு ஒழுகுதல்" வேண்டும். "கற்றல்" என்பது கல்விச் சாலைகளில் கற்பது மட்டுமன்று, அனுபவத்தால் கற்பது, பார்த்து அறிவதால் கற்பது, மரபு வழியாக ஒரு சந்ததியினர் மற்றொரு சந்ததியினருக்கு விட்டுச் செல்லும் வாழ்க்கை நெறிமுறைகளைப் பின்பற்றுவது இவை அனைத்தும் கற்றலில் அடங்கும். எனவே, இது கணவன், மனைவி இருவருக்கும், பிள்ளைகளுக்கும், பணியாளர்களுக்கும், வணிகர்களுக்கும் பொருந்தும். இதனால் இது அனைவர்க்கும் பொது என்றாகிறது. ஒவ்வொருவரும் வாழ்க்கையில் தாம் கற்றவாறு நெறிப்பட வாழ்தலே கற்பு என்று முடிவாகச் சொல்லலாம்.

தொல்காப்பியத்தில் இடம் பெற்றுள்ள கற்பியலின் முதல் நூற்பா, இந்தக் கற்பைத் திருமணத்தோடு பொருத்திப் பார்க்கிறது.

 
கற்பெனப்படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே. (தொல் - 1088)

இந்த நூற்பா திருமணம் தொடர்பான பல செய்திகளைக் கொண்டுள்ளது. கரணம் என்னும் திருமணச் சடங்கு, பெண்ணைக் கொள்வதற்குரிய மணமகன் வீட்டார், பெண்ணைக் கொடுப்பதற்குரிய மணமகள் வீட்டார் ஆகிய மூன்றையும் இணைத்து இந்நூற்பாவை யாத்துள்ளார் தொல்காப்பியர். "கற்பென்று சொல்லப்படுவது, சடங்குகளோடு பொருந்தி பெண்ணை மணம் செய்து கொள்வதற்குரிய மரபினையுடைய தலைவன், (பெண்ணைக்) கொடுப்பதற்குரிய மரபினையுடைய பெண் வீட்டார் கொடுக்க மணம் செய்து கொள்வது," என்பது இந்நூற்பாவின் பொருள்.

இங்கு நமக்கு ஓர் ஐயம் தோன்றலாம். பழந்தமிழ் இலக்கியங்கள் காதலைப் பற்றி அதிகமாகப் பேசுகின்றன. சொல்லப்போனால் பழந்தமிழ்ப் பாடல்கள் என்று சொல்லப்படும் சங்க இலக்கியத்தில் எண்பது விழுக்காடு காதல் பாடல்களேயாகும். அப்படியிருக்கும்போது, காதல் திருமணங்களைப் பற்றிச் சொல்லாமல் சடங்குத் திருமணங்களைப் பற்றி தொல்காப்பியம் சொல்கிறதே என்ற ஐயம் தோன்றலாம்.

இந்த ஐயத்தைக் களைவது போல கற்பியலின் இரண்டாவது நூற்பாவிலேயே உள்ளம் கலந்த காதலர் இருவர் பெற்றோர் ஒப்புதல் கிடைக்காத நிலையில், தாமே மணம் செய்து கொள்வதுண்டு என்று தொல்காப்பியர் கூறுகிறார். அந்நூற்பா வருமாறு,

 
கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே
புணர்ந்துடன் போகிய காலை யான். (தொல் - 1089)

"தலைவனும் தலைவியும் மனம் கலந்து உடன்போக்கு போனபோது, பெண்ணைக் கொடுப்பதற்குரிய பெண் வீட்டார் இல்லாமலும் (பெண்ணைக் கொள்வதற்குரிய மணமகன் வீட்டார் இல்லாமலும்) திருமண நிகழ்வு உண்டு,"என்று இந்நூற்பா சொல்கிறது.

முதல் நூற்பாவில் கிழவன், கிழத்தி என்ற இரு சொற்கள் இடம்பெற்றுள்ளன. இவை தவிர தலைவன், தலைவி என்ற சொற்களும் காணப்படுகின்றன. தலைவன், தலைவி என்பது இருபாலருள் தலைமக்களைக் குறிக்கும் சொற்களாகும். அதாவது தலைமைப் பண்புகளை உடையவர்கள் என்பது இதன் பொருள். ஆனால் கிழவன், கிழத்தி என்பது இவற்றைக் காட்டிலும் பொருள் ஆழம் மிக்கது. கிழமை என்றால் உரிமை என்பது பொருள். திங்களுக்கு (நிலவுக்கு) உரிய நாள் திங்கள்கிழமை. ஞாயிறுக்கு (கதிரவனுக்கு) உரிய நாள் ஞாயிற்றுக்கிழமை. நிலக்கிழார் என்றால் "நிலத்திற்கு உரியவர்" என்று பொருள். "சேக்கிழார்" என்றால் "செம்மையான பண்புகளுக்கு உரியவர்" என்று பொருள். அவ்வாறே கிழவன், கிழத்தி என்பதும் உரிமையைக் குறிக்கும் சொற்களாகும்.

 
கிழவன் - உரிமையுடையவன், கிழத்தி - உரிமையுடையவள். தலைவி மீது உரிமை உடையவன் கிழவன், தலைவன் மீது உரிமையுடையவள் கிழத்தி. திருமணத்திற்குப் பிறகுதான் இந்த உரிமை வருகிறது. எனவே, களவு வாழ்க்கையில் தலைவன், தலைவி என்று குறிப்பிடப்பட்டவர்கள், கற்பு வாழ்க்கையில் (திருமணத்திற்குப் பின்) கிழவன், கிழத்தி என்று குறிப்பிடப்படுகிறார்கள்.
 
இன்றைக்குக் கிழவன் கிழவனாகவே இருக்கிறான். கிழத்தி, கிழவியாகிவிட்டாள்! இவற்றின் பொருளும் எவ்வாறெல்லாமோ மாறிவிட்டது. ஆனால், ஒருவருக்கொருவர் உள்ள உரிமை மட்டும் அன்று முதல் இன்று வரை மாறாமல் தொடர்கிறது!
 
முனைவர் கி.இராசா
 
நன்றி: தமிழ்மணி (தினமணி)

வேந்தன் அரசு

unread,
Oct 5, 2008, 12:16:36 PM10/5/08
to minT...@googlegroups.com
நல்ல கட்டுரை

 
இன்றைக்குக் கிழவன் கிழவனாகவே இருக்கிறான். கிழத்தி, கிழவியாகிவிட்டாள்! இவற்றின் பொருளும் எவ்வாறெல்லாமோ மாறிவிட்டது.
 
சக கிழத்தி சக்களத்தி ஆகி விட்டாள். :)
 
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
Reply all
Reply to author
Forward
0 new messages