சீமைக்கருவேல் ... உண்மை என்ன?

29 views
Skip to first unread message

தேமொழி

unread,
Mar 22, 2017, 2:37:43 PM3/22/17
to மின்தமிழ்
ஒரு மரத்தின் மரண வாக்குமூலம்


முனைவர் ப.வெங்கடாசலம், முன்னால் உயிர் ஆற்றல் பேராசிரியர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்

கருத்தைக் கவர்ந்த சிற்சில கருத்துகள் மட்டும்  கீழே.... 
முழுக்கட்டுரையையும் "கீற்று" தளத்தில் படிக்கலாம் >>>http://keetru.com/index.php/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-76/32721-2017-03-21-16-53-52


எனது பெயர் சீமைக்கருவேல் ...

இந்தியாவில் 1911ம் ஆண்டில் இருந்து வளர்ந்து வருகின்றேன். இங்கு நானாக வரவில்லை. மனிதர்களின் எரிபொருள் தேவைக்கும், உயிர்வேலிக்காகவும் அவர்களே விரும்பிக் கொண்டு வரப்பட்டேன். 

மக்கள் காடுகளுக்குச் சென்று விறகு எடுப்பதை முற்றாக ஒழித்தேன். என்னால் வனங்கள் காப்பாற்றப்பட்டன எனப் பலர் எழுதினார்கள். அவைகள் இன்றும் அறிக்கைகளில் பாதுகாப்பாக உள்ளன. 

மனிதர்கள் எப்போதும் தங்களின் செயல்களுக்கு நியாயம் கற்பிக்க பிறரை பலி கொடுப்பதுண்டு. ஆனால் இங்கு அவர்களின் செயல்களுக்கு நான் பலியாக்கப்பட்டுள்ளேன். மனிதர்கள் இயற்கையின் மீது நடத்திவரும் அத்தனை அழிவுகளையும் சாதாரண மரத்தின் மீது குற்றம் சாட்டி, குறிப்பாக இளைஞர்களை திசைதிருப்பி விட்டுள்ளனர்.

குறைந்த நீரில் முப்போகம் விளைவித்த சிறு தானியங்களை விட்டு, பணப்பயிர்மேல் பற்று கொண்டு வாழையும் கரும்புமாய் பயிரிட்டு, ஆயிரம் அடிவரை ஆழ்துளைக் கிணறுகளை வெட்டி நிலத்தடி நீரை வீணடித்தார்கள். அந்தப் பலியை நாலடி வேர் கொண்ட என் மீது போட்டதை அமைதியாக ஏற்க வேண்டியதாகிவிட்டது. வேரோடு என்னைப் பிடுங்கும் இவர்களுக்குத் தெரியாதா எனது வேரின் நீளம் 5 அடிக்கு மேல் இல்லை என்பது? தெரிந்தும், 70 அடி, 80அடி என எங்கோ எவனோ கற்பனையாக எழுதி வைத்ததைக் காட்டி என்னைத் தண்டித்துவிட்டனர். எல்லா தாவரங்களைப் போலத்தான் நானும் சுவாசிக்கின்றேன். எந்த அளவுக்கு நீரை எடுக்கின்றேனோ அதே அளவுக்கு ஹைடிரஜனை சேர்ப்பேன் என்பதை இவர்கள் வசதியாக மறந்து, இல்லை மறைத்துவிட்டனர். 

 எனக்கு தெரிந்து இன்றைய தேதியில் தமிழகத்தின் முக்கால்வாசி காட்டன் சைஸிங் ஆலைகள், செங்கல் சூளைகள், அரிசி ஆலைகள், சின்னச்சின்ன தொழில் நிறுவனங்களின் பாய்லர்கள், கரியில் எரியும் தேநீர் அடுப்புகள், இஸ்திரி கடைகள் அனைத்துக்கும் இருக்கும் ஒரே எரிபொருள் நான் தான். என்து விலையும், ஒரு கிலோ மூன்று முதல் நாலரை ரூபாய் மட்டுமே என்பதோடு, மிகக்குறைந்த காற்று மாசுவை ஏற்படுத்தக்கூடிய எரிபொருள் நான் மட்டுமே என உறுதியாகச் சொல்வேன். எனது விலையில் மாற்று எரிபொருள் இல்லாததால் தமிழகத்தின் இன்னும் சில மாதங்களில், பல தொழில்கள் மிகப்பெரிய சரிவை சந்திக்கும். 

நிலமெல்லாம் காங்ரீட் காடாக மாற்றிவிட்டு தாவர அழிவுக்கு நீதான் காரணம் என்று கூறுவது எந்த வகையில் நியாயம்? உழவர்களின் தற்கொலைக்கு யார் காரணம்? நானா இல்லை, நிலத்தை நஞ்சாக்கிய வேதியல் உரங்கள், பூச்சிக்கொல்லி, பூஞ்சான்கொல்லிகளா? கடன்தொல்லை தாங்காமல் கால்நடைகளை விற்றார்கள், அதற்கு நான் என்ன செய்ய முடியும்? எனது இலைகளை உட்கொண்ட கால்நடைகள் மலடானது என, நான் வந்து ஒரு நூற்றாண்டு கடந்த பின் கதை கட்டப்படுகிறது, அதற்கு நீதிமன்றம் துணைபோகுது. இன்று கால்நடைகளின் எண்ணிக்கை குறைந்ததற்கு இயந்திரங்கள் காரணமா? இல்லை நானா? இயந்திரங்கள் வந்து அவற்றை ஒழித்ததா, இல்லை நான் ஒழித்தேனா? அனைத்தின் அழிவுக்கும் எப்படி உங்களால் என்னைப் பலியாக முடிந்தது? நிலத்தை நஞ்சாக்கிய பசுமைப்புரட்சியின் பாதகச் செயல்களுக்கும், இடையிடையே வந்துபோன பஞ்சங்களுக்கும் கூட நீ தான் காரணம் என்கிறீர்கள், நல்லவேளை என்டோசெல்பான் போன்ற விசமருந்துகளை நீ தான் உற்பத்தி செய்தாய் என்று குற்றம் சாட்டாமல் விட்டீர்களே அதுவே உங்களின் பெரிய மனசைக் காட்டுகிறது.

எனது ஆணிவேரும், சல்லிவேரும் பரவி மண்ணையும், மணல் குவியலையும் பாதுகாப்பதை யாரும் நினைவில் வைப்பதில்லை. ஆனால் மணல் கொள்ளையர்களுக்கு மட்டும் தெரியும், நான் மணல் மேடுகளை எவ்வளவு பாதுகாக்க முயற்சிக்கிறேன் என்பது. மணல் அள்ளத் தடையாக இருக்கிறேன் என்கின்றார்கள். 

விவசாயி சொன்ன பதில் "எங்களின் வாழ்வாதரமே இந்த மரங்கள்தான். இவற்றை வெட்டிக் கரியாக்கி விற்றே பல குடும்பங்கள் பிழைத்து வருகின்றோம். இனி என்ன தொழில் செய்வது என யோசிக்க வேண்டும்" மேலும் சிறு, குறு தொழிற்சாலைகளுக்கான எரிபொருளாகவும், எரிகரியாகப் பயன்படுவதன் மூலமாக ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் சில வறண்ட மாவட்டங்களில் கணிசமான மக்களின் வாழ்வாதாரமாகவும் விளங்குகிறேன்

இன்று தமிழ் நாடு முழுக்க எங்களை அகற்ற உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நாடு முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. நீதிமன்றத் தீர்ப்பை வேதவாக்காகக் கொண்டு பல்வேறு தன்னார்வக் குழுக்கள் எங்களை முற்றாக அழிக்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டுள்ளன. சமூக வலைத்தளங்களில் எங்களுக்கு எதிரான பரப்புரைகள் களை கட்டுகின்றன. சாதாரண பாமர மக்களும் கூட எங்களை அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றனர். 

அந்த அளவுக்கு விழிப்புணவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வியக்கும் அளவுக்கு அனைத்து தரப்பு மக்களாலும் வெறுக்கப்படும் அளவுக்கு என்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் நியாயமானவையா? அவைகள் தான் என்ன? அவற்றுக்கு அறிவியல் அடிப்படைகள் உள்ளனவா? என யாரும் கேள்வி கேட்கவில்லை.

என் மீது வைக்கப்படும் மிக முக்கியமான குற்றச்சாட்டு, நான் நிலத்தடி நீரை உறிஞ்சுகிறேன் என்பதுதான். மரம் என்றால் அதன் வேர்கள் நிலத்தில் உள்ள நீரை உறிஞ்சத்தான் செய்யும், அதுதான் அதன் இயல்பு. ஏன் மற்ற மரங்களெல்லாம் நிலத்திலுள்ள நீரை உறிஞ்சுவதில்லையா? 

என்னால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது என்பது பற்றி எத்தனை இடங்களில் முறையான ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது? எத்தனை ஆராய்ச்சியாளர்கள் விசாரிக்கப்பட்டனர்? அதற்கான ஆய்வுத்திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது? நிலத்தடி நீர் ஆதாரம் குறைந்துபோனதற்கு என்ன காரணம் என்பது நாடறிந்த உண்மை. 

கடினமான உப்புத்தன்மையால் பாதிக்கப்பட்ட கடலோரப் பகுதிகளிலும் கூட வளரக்கூடிய அரிதினும் அரிதான மரங்களில் நானும் ஒருவன். கடலோரப் பகுதிகளில் மண்ணரிப்பு ஏற்படாமலும், உப்பு நீர் ஊருக்குள் புகாமலும் தடுத்து உயிர் வேலியாக எனது பணியைத் திறம்பட செய்துகொண்டுதான் இருக்கிறேன். சுமார் 50 வருடங்களுக்கு முன்பிருந்த புல் பூண்டு கூட முளைக்க முடியாத மலட்டு மண்ணிலும் வளர்ந்து என் இலைகளை உதிர்த்து உதிர்த்து மண்ணின் மலட்டுத் தன்மையை கொஞ்சம் கொஞ்சமாகப் போக்கி, இப்போதுதான் ஆங்காங்கே புற்கள் தலைகாட்டத் தொடங்கியுள்ளன. 

தமிழ் நாடு முழுக்க உள்ள சீமைக் கருவேல மரங்களை மானவாரியாக அகற்ற வேண்டும் என்பதன் பின்னணி என்ன? அறியாமையா? அல்லது சர்வதேச சதியா? அதானிகளின் சூரிய மின்னாற்றல் அமைக்கத் தேவையான சுத்தமான நிலத்திற்கா? இல்லை, எல்லோரும் இனி எல்பிஜி தான் பயன்படுத்த வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுடன் ஒப்பந்தமா? 

‘எல்லா மரங்களும் வளிமண்டலத்திலுள்ள கார்பன் டை ஆக்ஸைடை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடும். ஆனால் சீமைக் கருவேல மரம் மட்டும் ஆக்ஸிஜனை உள்ளிழுத்துக்கொண்டு கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடும்’ என்ற எந்தவொரு அறிவியல் ஆதாரமும் இல்லாத கருத்தும் மக்களிடம் பரப்பப்படுகிறது. அறிவியலுக்கு எதிரான இந்தக் கருத்தை பரவவிட்டது யார்? இந்த கருத்து படித்த பட்டதாரி இளைஞர்களால்கூட அப்படியே நம்பப்படுகிறது என்பதுதான் இன்னும் வேடிக்கையானதாகவும், கேளிக்கையானதாகவும் உள்ளது. நமது கல்வித்தரத்தை குறைபட்டுக்கொள்வதா இல்லை, சொல்வதை எந்தப் பரிசீலனையும் செய்யாத இளைஞர்களை நொந்து கொள்வதா?

மற்ற மரங்களில் ஏதாவது மருத்துவ குணம் உள்ளது. ஆனால் இந்த மரத்தில் வெறும் முள் மட்டும்தான் உள்ளது எனத் திட்டமிட்டு பரப்பப்படும் பரப்புரைதான் சர்வதேச நாடுகளின் மீதான சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. Flavan-3-ols என்ற வேதிப்பொருள் எனது தண்டுகளில் அதிகமாக உள்ளது. சர்வதேச பானமாகிப்போன தேயிலை மற்றும் சாக்லேட் செய்யப் பயன்படும் கோகோ போன்ற தாவரங்களின் தனித்துவமே இந்த Flavan-3-ols என்ற வேதிப்பொருள்தான். 2014 ஆம் ஆண்டு ஐரோப்பிய உணவுப் பாதுகாப்பு அமைப்பினால் இந்த Flavan-3-ols என்ற வேதிப்பொருளின் மருத்துவத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அது ரத்த நாளங்களை விரிவடையச் செய்து சீரான ரத்த ஓட்டத்தை உறுதிப்படுத்தும். இந்த ஆராய்ச்சியை துரிதப்படுத்தினால் இதய அடைப்பு போன்ற ஏராளமான நோய்களுக்கு அறுவை சிகிச்சை இல்லாத எளிமையான மருத்துவமுறையை இந்த உலகுக்கு என்னால் அறிமுகப்படுத்தப்படும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

சாதாரணமாக எந்தவித முயற்சியும் இல்லாமல் வளரக்கூடிய என்னை ஆற்றல் காடுகளில் மிக முக்கியமான மரம் நான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? 

கிராமங்களில் நிலம் இல்லாதவர்களுக்கு சொத்தாக இருப்பது இயற்கை வளங்கள்தான். சென்ற காலங்களில் காடுகளும், ஆறுகளும், கரடுகளும் தான் சாதாரண மக்களின் சொத்தாக இருந்தன. காடுகளில் காய்ந்த மரங்களை வெட்டி விறகாகவும், மரக்கருவிகளாகவும் விற்று வாழ்ந்தனர். ஆறுகளில் மீன் பிடித்து விற்று வாழ்ந்தனர். காடுகளிலும், புல் தரைகளிலும் ஆடு மாடுகள் மேய்த்து வாழ்ந்தனர். இப்போது இந்த இயற்கை வளங்கள் எதுவும் இல்லை. இயற்கை வளமாக இருப்பவன் நான் மட்டும் தான். என்னை வெட்டி மரமாகவும், விறகாகவும் விற்று வாழ்பவர்கள் பலர் இன்று கிராமங்களில் வாழ்கின்றனர். என்னை எரிகரியாக மாற்றி விற்று வாழ்பவர்கள் பலர். எனது காய்களை நம்பியே ஆடு வளர்ப்பவர்கள் பலர். நிலமை இப்படி இருக்கும் போது நான் எப்படி மக்கள் விரோதியாவேன்?

இயற்கை வளங்களைச் சுரண்டி வாழும் கூட்டத்திற்கு தண்டனை கொடுப்பதில் இருந்து தப்பி, எங்களைப் பலிகொடுப்பது என முடிவு செய்துவிட்டால் நான் சொல்வதற்கு எதுவுமில்லை.

ஒரு அடி ஆற்றுமணல் உருவாக குறைந்தபட்சம் 100 ஆண்டுகள் ஆகும். வெட்ட வெட்ட வளர ஆற்று மணல் ஒன்றும் சீமைக்கருவேலமரம் இல்லை. காவிரி, அமராவதி, நொய்யல் ஆறுகளில் இரவு பகல் பாராமல் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மணல் அள்ளப்பட்டு கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. இதை ஏன் நீதிமன்றம் தடைபோட்டு நிறுத்தவில்லை? ஏன் அந்த மாநிலங்களில் ஆறு இல்லையா? மணல் இல்லையா? நிறையவே இருக்கிறது. ஆனால் அந்த மாநில அரசுகள் ஆற்று மணலை அள்ளத் தடை விதித்துள்ளன. மணலை அள்ளினால் மாநிலமும், மக்களும், விவசாயமும் நாசமாய் போகும் என்ற தெளிவான எண்ணம் அம்மாநில அரசுக்கு உள்ளது. மற்ற மாநிலங்களில் நடைமுறையில் உள்ள ஒன்றை இங்கு செயல்படுத்த ஏன் நீதிமன்றம் தாங்குகிறது?

இப்போது தெரிகிறதா நிலத்தடி நீர் யாரால் உறிஞ்சப்படுகிறது என்பது? ஆற்று மணலை விடாமல் அள்ளுவதால் குறைந்தபட்சம் சுற்றுப்பகுதிகள் 30-40 கிலோமீட்டர் தொலைவுக்கு நிலத்தடிநீர் குறைந்து விடும்

பஞ்சம், பட்டினி, விவசாயம் அழிவு, தற்கொலை, விலைவாசி உயர்வு என அழிவை மட்டுமே நோக்கிய பல விஷயங்கள் இந்த மணல் கொள்ளைக்குள் ஒளிந்திருக்கிறது. இதையெல்லாம் மறைக்க, நான் இப்போது பலியாக்கப்பட்டுள்ளேன்.

Reply all
Reply to author
Forward
0 new messages