இளங்கோ அடிகள் வாழ்ந்த ஊர்

10 views
Skip to first unread message

தேமொழி

unread,
Sep 16, 2026, 3:02:45 PM (6 days ago) Sep 16
to மின்தமிழ்
இளங்கோ அடிகள் வாழ்ந்த ஊர்

'குணவாயில் கோட்டத்து அரசு துறந்திருந்த குடக்கோச் சேரல் இளங்கோவடிகட்கு' என்ற சிலப்பதிகார வரிகள், அரண்மனை வாழ்க்கையைவிட்டு விலகிய இளங்கோ அடிகள், துறவறம் பூண்டு, கொடுங்கல்லூர் அருகில் உள்ள திருக்குணவாயில் என்
னும் சமணக் கோயிலுக்குச் சென்று வாழ்ந்ததைக் குறிப்பிடுகிறது.

- பனையபுரம் அதியமான், 13 செப்டம்பர் 2026
நன்றி : தினமணி - https://www.dinamani.com/weekly-supplements/sunday-kondattam/2026/Sep/12/the-town-where-ilango-adigal-lived


'குணவாயில் கோட்டத்து அரசு துறந்திருந்த குடக்கோச் சேரல் இளங்கோவடிகட்கு' என்ற சிலப்பதிகார வரிகள், அரண்மனை வாழ்க்கையைவிட்டு விலகிய இளங்கோ அடிகள், துறவறம் பூண்டு, கொடுங்கல்லூர் அருகில் உள்ள திருக்குணவாயில் என்னும் சமணக் கோயிலுக்குச் சென்று வாழ்ந்ததைக் குறிப்பிடுகிறது.

குணக்கு என்றால் கிழக்கு; குடக்கு என்றால் மேற்கு. கிழக்கே வாசலைக் கொண்டிருந்ததால் 'குணவாயில் கோட்டம்' எனப் பெயர் பெற்றது. பின்னர் இதுவே 'திருக்குணவாயில்' ஆயிற்று! தற்பொழுது இத்தலம் திருக்கணாமதிலகம் எனப்படுகிறது. பழங்காலத்தில் இவ்வூர் புகழ்பெற்ற சமண நகரமாக விளங்கியதையும், இங்கு பெரிய சமண ஆலயம் இருந்ததையும் வரலாற்று அறிஞர்கள் உறுதிப்படுத்துகின்றனர். காலச்சக்கரத்தில் இந்த இடம் இன்று 'மதிலகம்' என்ற பெயரில் சிறிய ஊராகத் திகழ்கிறது.

இளங்கோ அடிகள் குணவாயில் கோட்டத்தில் இருந்தபடி, சிலப்பதிகாரக் காப்பியத்தைத் தம் கற்பனை வளத்தாலும், கலைத் திறனாலும் பெருங்காப்பியமாக இயற்றி முடித்தார் என்கிறார்கள்.

கொடுங்கல்லூர்: கேரளத்தின் மிகப் பழமையானதும், வரலாற்றுச் சிறப்பு மிக்கதுமான கடற்கரைப் பட்டினம் கொடுங்கல்லூர். இங்குள்ள பகவதி கோயிலைக் கண்ணகிக்கு எடுக்கப்பட்ட கோயிலாகப் போற்றுகின்றனர். கேரளத்தின் ஒரேயொரு தேவாரத்தலமான திருவஞ்சைக்குளம் மகாதேவர் கோயிலும் இதன் அருகில்தான் உள்ளது. குலசேகர பெருமாள் எழுதிய வைணவக் கோயிலும் இங்குதான் உள்ளது. பழங்காலத்துச் சிறப்புமிக்க 'முசிறி' துறைமுகமும் இங்குதான் இருந்தது. இந்தத் துறைமுகம் இன்று மாநில அரசின் பாரம்பரிய வரலாற்றுச் சின்னமாக மாநில அரசு பராமரித்து வருகின்றது.

துறைமுகம், கோட்டைகள், கோயில்கள் நிறைந்த பழம் பெரும் திருத்தலம் என நினைவுகளைப் பகிர்கின்றார் கொடுங்கலூர் தமிழ் பிராமணர் சங்கம் செயலர் என்.நாராயணன். இளங்கோவடிகள் வாழ்ந்த மதிலகம் கொடுங்கல்லூரில் இருந்து சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தொல்லியல் துறையினர் மேற்கொண்ட ஆய்வுகளில் பல்வேறு வரலாற்றுத் தடயங்கள் கிடைத்துள்ளன. அதன் மூலம் இவ்வூரே 'குணவாயிற் கோட்டம்' என அழைக்கப்பட்டதை நம்மால் அறியமுடிகின்றது.

முதல் ஆதாரமாகத் திகழ்வது, மதிலகத்தில் உள்ள இலவஞ்சிக்குளத்தில் இருந்து கண்டெடுத்த கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு வட்டெழுத்துக் கல்வெட்டு ஆகும்.இக்கல்வெட்டின்படி , இன்றைய மதிலகம் பகுதி முக்கிய சமணத் தலமாக இருந்தது. சமணர்கள் நிறைந்து வாழ்ந்ததையும், அவர்கள் கடைப்பிடித்த 'வடக்கிருத்தல்' எனும் கடுமையான உண்ணாநோன்பு பற்றியும் கூறுகின்றது. இது சமண மையமாக விளங்கியதற்கு ஆதாரமாக பல சதுரக் கிணறுகள் இருந்தன. சிலவற்றை இப்போதும் பார்க்கலாம்.

வரலாற்றுச் சிறப்புமிக்க சமண ஆலயத்தின் அரை வட்ட வடிவ அஸ்திவாரம் கண்டுபிடிக்கப்பட்டது. அதைச் சுற்றி பல துணைக்கோயில்களைக் கொண்ட பெரிய சமண ஆலயம் இருந்ததை இது உணர்த்துகிறது. பத்து பாகங்கள் கொண்ட 'விஸ்வவிஜ்ஞான கோசம்' என்ற மலையாள மொழிக் களஞ்சியத்தின் ஏழாம் பகுதியில் (பக்க எண்கள் 75 முதல் 77 வரை) மதிலகம் குறித்த குறிப்பில் இவ்வூர் 'குணவாயிற்கோட்டம்' என்றும், 'திருக்கணாமதிலகம்' என்றும் கூறப்பட்டுள்ளது.

கோட்டம் என்பது சமண ஆலயத்தைக் குறிக்கும் ஒரு சொல்லாகும். இளங்கோவடிகள் இங்கு தங்கியிருந்ததையும், சமண, பெளத்த சமயங்களின் ஆலயங்கள் இவ்வூரில் இருந்ததையும் இது குறிப்பிடுகின்றது. டாக்டர் எம். ஜி. சசிபுஷண் எழுதிய 'தேசிய வரலாறு - கேரளக் கோயில்கள்' என்ற மலையாள நூலில் (513 மற்றும் 514 பக்கங்களில்) மதிலகம் குறித்துக் கூறப்பட்டுள்ளது.

டச்சு கிழக்கு இந்தியக் கம்பெனிக்கும் சாமுத்திரிக்கும் இடையே நடந்த பெரும் போரில் மதிலகத்தின் சமண ஆலயம் அழிக்கப்பட்டது. பின்னர், அந்த ஆலயத்தின் எஞ்சியப் பகுதிகள் தொல்லியல் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டன. கேரளத்தில் காணப்படும் சிவலிங்கங்களில் மிகவும் உயரமான 12 அடி சிவலிங்கம் திருக்குணவாயில் - மதிலகத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. கோயிலை அழித்த டச்சு கிழக்கு இந்தியக் கம்பெனி அந்த சிவலிங்கத்தை கொச்சிக்கு எடுத்துச் சென்று, அதைக் கடற்கரையோரத்தில் நட்டு வைத்து, அவர்களது கப்பல்களைக் கட்டி வைக்கும் பொருளாகப் பயன்படுத்தினர்.

அப்பகுதியில் செல்வாக்கு மிக்கவர்களாக விளங்கிய கொங்கணி பிராமணர்கள் இதைக் கண்டு வருத்தம் அடைந்தனர். அவர்களிடம் லிங்கத்தை விலைக்கு வாங்கி, அதை கொச்சி மட்டஞ்சேரியில் உள்ள திருமலை தேவஸ்தான ஆலயத்தின் வடக்கு சந்நிதி வீதியில் நிறுவி உத்யானேஸ்வரர் என்ற பெயரில் ஆலயம் எழுப்பியதாக வரலாறு.டச்சுக்காரர்கள் காலத்தில் இப்பகுதி பாப்பினி வட்டம் என வழங்கப்பட்டது.

இன்று இவ்வூரில் 13-14 -ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருப்பக்குளம் மகாதேவர் கோயில் அமைந்துள்ளது. இது வில்வமங்கலம் சுவாமியின் காலத்தைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது.
Reply all
Reply to author
Forward
0 new messages