நற்றமிழ்-17

1 view
Skip to first unread message

Thiruvengada Mani T K

unread,
Dec 1, 2009, 7:34:37 AM12/1/09
to Min Tamil

 

நற்றமிழ் – 17        (1.12.2009) 

 

6. சில பிழையான வாக்கியங்களும் திருத்தப்பட்ட வாக்கியங்களும்: தொடர்ச்சி….

 

21.       பிழை  :  இவர் மாத வருமானம் ஆயிரம் ரூபாய்கள்.

            சரி  :   இவர் மாத வருமானம் ஆயிரம் ரூபாய்.

                      (‘ரூபாய்கள்’ பன்மை வேண்டியதில்லை)

 

22.   பிழை  :    கை, கால் உடைந்துவிட்டது.

            சரி  :    கையும், காலும் உடைந்துவிட்டன. ‘அல்லது’ கைகால்கள்

                        உடைந்து விட்டன - என்றிருத்தல் தான் சரியானது).

 

23.    பிழை  :   உணவில்லாமல் வாழ முடியாது.

            சரி   :   உணவில்லாமல் வாழ்வது முடியாது.

                        (‘வாழ்வது’ என்றிருத்தல் வேண்டும்)

 

24.   பிழை  :   நம் நாட்டில் பெரும்பாலோருக்கு எழுதப் படிக்கத் தெரியாது.

 சரி   :   நம் நாட்டில் பெரும்பாலோர் எழுதவும் படிக்கவும் அறியார்  

  என்றிருத்தல் சிறந்தது. அல்லது, ‘நம் நாட்டில் பெரும்பாலோர்க்கு               

                                      எழுதவும், படிக்கவும் தெரிவதில்லை’ என்றும் இருக்கலாம்.

 

           25.  பிழை  :   நான் எப்போழுதும் பொறுத்துப் போக வேண்டியிருக்கிறது.

                     சரி    :   நான் எப்பொழுதும் பொறுத்துப் போகிறேன் அல்லது ‘நான்

                                    எப்பொழுதும் பொறுத்துப் போக   வேண்டியவனாயிருக்கிறேன்’       என்பது சிறந்தது.

 

          26.   பிழை :   புல், பூண்டு இல்லையானால் ஆடு மாடு வாழாது.

                      சரி :    புல்பூண்டுகள் இல்லையானால் ‘ஆடு மாடுகள் வாழா’

                                என்றிருத்தல் வேண்டும்.

 

          27.   பிழை :  தகுந்த மருத்துவ வசதியில்லாமையால் அவன் இறக்க நேரிட்டது.

                     சரி  :   தகுந்த மருத்துவ வசதியில்லாமையால் அவன் இறந்தான்

                               அல்லது அவன் இறத்தல் நேரிட்டது என்றிருத்தல் வேண்டும்.

 

28. பிழை : எவ்வாறு தந்தை வளர்க்கிறாரோ அப்படி மகன் வளர்வான்.

           சரி : எவ்வாறு தந்தை வளர்க்கிறாரோ அவவாறே மகன் வளர்வான்.

      (‘எவ்வாறு ‘ என வந்தால் பின்னர் ‘அவ்வாறே’ என வரல் வேண்டும்.)

 

29. பிழை :  கோவலன் மனைவிக்குக் கண்ணகி என்று பெயர்.

சரி   :  கோவலன் மனைவிக்குக் கண்ணகி என்பது பெயர் அல்லது ‘கோவலன்         மனைவி பெயர் கணணகி’ என்று இருத்தல் வேண்டும். ‘என்று’ இருத்தல்       தவறு; ‘என்பது’ என்பதுதான் சரியானது.

 

30. பிழை :  தவறு செய்பவர் இங்கு ஒருவரும் கிடையாது.

          சரி :  தவறு செய்பவர் இங்கு ஒருவரும் இலர் அல்லது ‘இல்லை’ என்றிருத்தல் வேண்டும்.

 

31. பிழை : அதிகம் செலவு செய்தால் கருவூலம் விரைவில் காலியாக ஆய்விடும்.

           சரி : அதிகம் செலவு செய்தால் கருவூலம் விரைவில் காலியாய்விடும்,                                              என்றிருத்தல்தான் சரியானது.

 

32.  பிழை :  அன்பு என்பது விலை கொடுத்து வாங்கும் பொருள் இல்லை.

           சரி : அன்பு என்பது விலை கொடுத்து வாங்கும் பொருள் அன்று. (அன்று                              என்றிருத்தல் வேண்டும்)

 

33.  பிழை : உடைந்து போன காலும் கையும் உடைய பலர் காணப்பட்டனர்.

           சரி : ‘காலும் கையும் உடைந்து போன பலர் காணப்பட்டனர்’ என்பதுதான் சிறந்தது.

 

34. பிழை : அவர் வருவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

          சரி : அவர் வருவார் என்பது எதிர்பார்க்கப்படுகிறது அல்லது அவர் வருகை  எதிர்பார்க்கப்படுகிறது அல்லது அவர் வருவார் என்று (நாங்கள்)    எதிர்பார்க்கிறோம் என்பது சரி.

 

35. பிழை : சிறிது காலம் கடந்திருக்கலாம் எனத் தெரிகிறது.

           சரி : சிறிது காலம் கடந்திருக்கலாம் என்பது தெரிகிறது (‘என்பது’ என்றிருத்தல்          வேண்டும்)

 

36. பிழை: பயணிகள் படிகளில் நின்றுக் கொண்டும் தொற்றிக் கொண்டும் பயணம்  செய்யக் கூடாது.

       சரி : பயணிகள் படிகளில் நின்று கொண்டும் தொற்றிக் கொண்டும் பயணம்                         செய்தல் கூடாது, என்றிருப்பதுதான் சரி.

      (நின்றுக் கொண்டும் – இங்கு ‘க்’ கூடாது. செய்தல் என்றிருத்தல் வேண்டும்.

 

37. பிழை: செய்தி அறிக்கை கேட்டீர்கள்.

      சரி: செய்தி கேட்டீர்கள் என்பதே போதும்.

 

38. பிழை: தப்பி விடுகிறார்கள் என்று கூறப்படுகிறது.

      சரி: தப்பி விடுகிறார்கள் என்பது கூறப்படுகிறது.

 

39. பிழை: இலங்கை அரசும் இந்திய அரசும் திட்டம் வகுத்திருந்தது.

               சரி: இலங்கை அரசும் இந்திய அரசும் திட்டம் வகுத்திருந்தன, என்பதுதான் சரி.     

                  (பன்மை வினைமுற்று வருதல் வேண்டும்)

 

40. பிழை: குறிப்பிடுவதைக் கைவிடப்பட வேண்டும்

சரி: குறிப்பிடுவதைக் கைவிடல் வேண்டும் என்று இருப்பதுதான் சரியானது.

 

     41. பிழை : நில நடுக்கத்தில் இறந்திருக்கப்பட வேண்டும்.

                சரி : நிலநடுக்கத்தால் இறந்திருத்தல் வேண்டும்.

 

    42. பிழை : வீடுகளின் கூறைகள் தீப்பற்றின.

            சரி : வீடுகளின் கூரைகளைத் தீப்பற்றியது என்பதுதான் சிறந்தது.

(‘தீ’ கூரையைப் பற்றுகிறது;  கூரை தீயைப் பற்றவில்லை.)

 

குறிப்பு: இங்குக் குறிப்பிட்ட தவறான வாக்கியங்களில், பலவற்றுள் எழுவாய் இல்லை. எழுவாயைப் பற்றிக்  கவலைப்படாமலேயே பலர் எழுதுகிறார்கள். மேலே காணும் வாக்கியங்களில் ‘எழுவாய் எது?’ என்ற கேள்வியைக் கேட்டுப் பார்த்தால், தவறு புலனாகும்.

            தவறுகளை நன்கு புரிந்துகொண்டு நல்ல தமிழ் பேசியும், எழுதியும், தமிழ் மொழியின் சிறப்பினையும், வழக்கினையும் காத்துவருவோமாக.

 

 

 

(……..பேராசிரியர் முனைவர் தி. முத்து - கண்ணப்பன், அவர்களின் “தமிழில் தவறுகளைத் தவிர்ப்போம்” என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்ட சில பகுதிகள்……)

 

…….நற்றமிழ் – 18 நாளை (02.12.2009)  வரும்….

 



The INTERNET now has a personality. YOURS! See your Yahoo! Homepage.
Reply all
Reply to author
Forward
0 new messages