பெரியார் அவர்களே தந்துள்ள சில வாழ்க்கைக் குறிப்புகள் உள்ளபடியால் அவற்றை விளக்கமாக இங்குத் தருகிறேன்.
"நான் சாதாரண ஆள்தான் என்றாலும், இன்றைய மந்திரிகள்போன்றவர்களைவிட எவ்வளவோ மேலானவன், உலகம் சுற்றியவன்; பூரண பகுத்தறிவுவாதி; சொத்து சம்பாதிக்க வேண்டிய தேவையில்லாதவன்; சாதி உணர்ச்சி, சாதிப்பற்று இல்லாதவன்; என்ன செய்தாவது சாதியை ஒழிக்க வேண்டுமென்பவன்; 70 ஆண்டு உலக அனுபவம், 30 ஆண்டு வியாபார அனுபவம்; 1915, '16, '17, '18,'19 வரை ரிஜிஸ்தர் செய்யப்பட்ட ஈரோடு வியாபாரச் சங்கத் தலைவன்; தெ.இ. வியாபாரச் சங்க நிர்வாகசபை அங்கத்தினனாக இருந்தவன்; 5 ஜில்லாவுக்கு இன்கம் டாக்ஸ் டிரிபியூனல் கமிஷனர்கள் மூவரில் ஒருவனாக இந்திய கவர்ன்மெண்டாரால் நியமிக்கப்பட்டவன்; ஈரோடு டவுன் ரீடிங்ரூம் செக்ரட்டரி; பழைய மாணவர் சங்க செக்ரட்டரி; ஹைஸ்கூல் போர்டு செக்ரட்டரி; பிறகு தலைவர்; 1914ஆம் ஆண்டு நடந்த கோவை ஜில்லா காங்கிரசு மாநாடு செக்ரட்டரி, 10 ஆண்டு காலம் ஆனரரி மாஜிஸ்ட்ரேட்; ஈரோடு தாலுக்கா போர்டு பிரசிடெண்ட்; பல வருடங்கள் ஈரோடு முனிசிபல்சேர்மென்; ஜில்லா போர்டு மெம்பர்; வாட்டர் ஒர்க்ஸ் கமிட்டி செக்ரட்டரி; பிளேக் கமிட்டி செக்ரட்டரி; கோவை ஜில்லா 2-வது சர்க்கிள் தேவஸ்தான கமிட்டி செக்ரட்டரியாக 10 ஆண்டு காலம் பிறகு, 1929 வரை வைஸ் பிரசிடெண்ட்; 1918ஆம் ஆண்டு உலக யுத்தத்தில் ஆனரரி ரெக்ரூட்டிங் ஆஃபீசர்; 1918ஆம் ஆண்டு யுத்தத்தில் தாலுக்கா, ஜில்லா அரிசி கண்ட்ரோலில் கவர்ன்மெண்டாரின் நிர்வாகி; அதாவது, அரிசி கண்ட்ரோலில் கவர்ன்மெண்டாருக்கு வரும் அரிசிவாகன்களின் ரசீதுகளை வாரம் ஒவ்வொரு தாலுக்காவிலிருந்தும் 15, 20 டன் வீதம் எனக்கே கொடுத்து, மற்ற வியாபாரிகளுக்கு விநியோகிக்கும்படிஜில்லா கலெக்டர் கேட்டுக் கொள்ளும் டிஸ்டிரிபியூட்டிங் அஃபீசர்; கார்னேஷன் கமிட்டி செக்ரட்டரி; காங்கிரசிலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செக்ரட்டரி; தலைவர்; காதிபோர்டு (ஃபவுண்டர்) அமைப்பாளராக இருந்ததோடு, 5 வருடம் தலைவராக இருந்தபோது எனக்குச் செயலாளராக டாக்டர் டி. எஸ். எஸ். ராஜன், கே. சந்தானம், எஸ். ராமநாதன், கே. முருகேசன், தங்கபெருமாள், அய்யாமுத்து முதலியவர்கள் இருந்தார்கள்.
இவைகள் ஒருபுறமிருக்க, 1940, 42-ல் 2 வைஸ்ராய்கள், 2 கவர்னர்கள் என்னை அழைத்து மந்திரிசபை அமைக்க வேண்டினார்கள். நான் மறுத்து விட்டேன். 1919 ஜூலையில் நான் ஜில்லா, தாலுக்கா போர்டு மெம்பர், சேர்மென் முதலிய பதவியை ராஜிநாமா கொடுத்த காரியம் பேப்பரில் வெளியானயுடன் லோகல் அண்டு முனிசிபல் போர்டு, கவுன்சில் மெம்பர். சி. ராசகோபாலாச்சாரியார் அவர்கள் ஈரோடு வந்து, "என்ன ராமசாமி நாயக்கரே! இப்படி முரட்டுத் தனமான வேலை செய்து விட்டீரே! உமக்கு புத்தியில்லையா?" என்றார்.
அவர் பக்கத்தில் கெரோசின் ஆயில் டீலர்ஸ் ஏஜெண்ட் கோவிந்தாச்சாரி இருந்தார். உடனே நான் வணங்கி, "நான் என்ன செய்து விட்டேன்?" என்று கேட்டேன், அவர் தன் மனைவியைப்
பார்த்து "அம்மா இவருக்குச் சொல்லு" என்று சொல்லி விட்டு மௌனமாக இருந்து விட்டார். அந்த அம்மையார் "அய்யர் உங்களுக்கு, நீங்கள் உங்கள் முனிசிபாலிடியில் தண்ணீர்க்குழாய் ஏற்படுத்தியதற்
காக "ராவ்பகதூர்" கொடுப்பது என்று சிபாரிசு பண்ணியிருக்கிறார். உங்கள் கலெக்டர் "ராவ்சாகிப்" தான் சிபாரிசு செய்தார். அய்யர் "ராவ்பகதூர்" என எழுதி கவர்னருக்கு ஃபைல்போய் இருக்கிறது.
நீங்கள் இப்படி அய்யருக்கு அவமானம் செய்து விட்டீர்களே; இது சரியில்லை" என்று சொன்னார். நான்பல காரணங்களைக் கூறி மறுத்து விட்டேன். நான் காங்கிரசுக்கு விரோதி என்று ஆனபிறகுங்கூட,
ஆச்சாரியார் என் வீட்டிற்கு வநதும் என்னை (காங்கிரசில் சேராமல், கதர் போடாமல்)ச் சட்ட சபைக்கு நாமினேஷன் போட ஃபாரம் நீட்டிக் கையெழுத்துக் கேட்டார். நான் மறுத்து விட்டேன்.
41இல் மந்திரி சபை அமைக்க ஒப்புக்கொள்ளும்படி சொன்னார். நான் கவர்னர், கவர்னர்-ஜெனரல் ஆகியவர்கள் இடமெல்லாம் மந்திரிசபை அமைக்க மறுத்து விட்ட பிறகு என்னை மந்திரிசபை அமைக்கும்படியும், நான் விரும்பினால் தானும் ஒரு மந்திரியாயிருந்து எனக்கு உதவியும், காங்கிரசு ஆதரவும் தருவதாயும் சொன்னார் நான் மறுத்துவிட்டேன்.
"போதும். இவ்வளவு எடுத்துக் காட்டுவதற்கே நான் மிக மிக வெட்கப்படுகிறேன். தறுதலைகளும், பொறாமைக்காரர்களும் சொந்த எதிரிகளும் இதன் மூலம் ஒரு பொது மனிதன் என்ன வென்று தெரிந்து கொள்ள வேண்டுமோ அதை விட்டு விட்டு குற்றம் குறை சொல்ல வழி காணத் துடிக்கிறார்கள்.
"இருந்தாலும் நான் ஏன் 'வெட்கம்' என்பதை விட்டு விட்டு இவ்வளவு எடுத்து காட்டுகிறேன் என்றால், துரோகம் செய்து அயோக்கியனாய் வாழவேண்டிய அவசியம் எனக்கு எந்தக் கட்டத்திலும் வந்ததில்லை என்பதைக் காட்டவேயாகும். எல்லாத்துறைகளிலும் எனக்கு இந்த மந்திரிகளுக்குச் சிறிது கூட குறையாத அனுபவமும் திறமையும் உண்டு என்பதைக் கூறவுமேயாகும். ஒன்றை ஒப்புக்கொள்ளுகிறேன். அதாவது, நான் பல விஷயங்களில் அறிவு குறைவு உள்ளவனாக இருக்கக் கூடும்; பல தவறுகள் செய்திருக்கக் கூடும்; இன்றைய கருத்தில் இருந்து நாளை மாறுதல் அடையக் கூடும்; பல கருத்துகளை மாற்றியும் இருக்கிறேன். இவைகள் எல்லாம் எனது கண்ணியமான அனுபவம், ஆராய்ச்சிச்யைக் கொண்டே இருக்குமே தவிர, பணம் சேர்க்கவோ பதவி பெறவோ, வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளவோ, பெரிய ஆள் ஆகவோ, இழிவை மறைத்துக்கொள்ளவோ கடுகளவுகூட காரணம் கொண்டதாய் இருக்காது. அதாவது, ஒரு பண்டம் கைநழுவி விழுந்து உடைந்து போவதற்கும், உடைக்க வேண்டு மென்றே கருதி, கீழேபோட்டு உடைப்பதற்கும் உள்ள பேதம் போன்றதாகும். இப்படிப் பட்ட என்னை இந்நாட்டு விடுதலைக்குக் குறுக்கே இருந்தவன், துரோகம் செய்தவன் என்று சொல்லும்போது எவ்வளவு மன உரம் இருந்தாலும் நிதானம் தவறத் தான் தூண்டுகிறது. அந்த நிதானம் தவறிய சொற்கள்தாம் மேலே என்னைப் பற்றிக் குறிப் பிட்டவையாகும். பொறுத்தருள்க.
"இன்னமும் சொல்லுகிறேன், நான் வெள்ளையன் வெளியேறுவதற்குக் குறுக்கே இருந்தாலும், இந்திய சுதந்திரத்திற்கு நான் துரோகம் செய்தது உண்மையாக இருந்தாலும் இந்தப்பாவிகள், 'மாபாவிகள் பார்ப்பான் ஆதிக்கத்திற்கும், அதனால் ஏற்பட்ட வட நாட்டான் சுரண்டல் ஆட்சிக்கும் இடம் கொடுத்து, அடிமையாகி அதனால் பணமும், பதவியும், பெருமையும் சம்பாதிக்கும் சுயநலம் கொண்டல்ல"!
பெரியார் அவர்கள் அன்று எழுதியது அப்படியே இங்கு "பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ. வெ. ரா." ஏ எஸ். கே. [1974] நூலில் கொடுக்கப்பட்டுள்ளது.
ref:
https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZM9lJYy/page/25/mode/2up