ஒன்பது - ஒன்பான் - தொண்டு

28 views
Skip to first unread message

Jeyapal K

unread,
Sep 3, 2025, 3:21:17 PM (2 days ago) Sep 3
to mint...@googlegroups.com

அண்மையில் வளர் என்ற காலாண்டிதழ் ஒன்றிற்கு எழுதிய கட்டுரை: 


ஒன்பது - ஒன்பான் - தொண்டு

ஒன்பது என்ற எண்ணைக் குறிக்குஞ் சொல் ஒரு குழப்ப நிலையைத் தமிழிற்குத் தந்துள்ளது. இந்த நிலை எல்லோரும் அறிந்த ஒரு தகவல். பலரும் விசனப்படும் ஒரு விடயமும் கூட. இதைப் பற்றிய ஒரு கண்ணோட்டம்.

எண்பது என்றால் எட்டு பத்து 80 ஆனால் ஒன் பது என்றால் அது 90 என்றல்லவா இருந்திருக்க வேண்டும். ஆனால் அது வினோதமான  9.

இதே போல் தொண்ணூறு என்னும் போது அது ஒன்பது பத்தைக் குறிக்கிறது 90. 

தொண்ணூறு = தொண்   நூறு (9x100=900) போல் ஒலித்துக் குழப்பத்தை விளைவித்து 90 ஆகவே இருக்கிறது. உற்று நோக்க: எண்ணூறு = எட்டு நூறு (8x100). அப்படியே தொள்ளாயிரமும். 

இது காலங் காலமாக பழகி விட்டவர்களுக்குப் பெரிய தொல்லை இல்லை. ஆனால் உற்று நோக்கினால் குற்றம் போல் இருக்கிறது.

இந்தக் குழப்பத்தோடு தான் தமிழ் இருக்க வேண்டுமா? நாம் இதற்கு என்ன செய்யலாம்? கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

இந்த எண்களின் பயன்பாடு காலங் காலமாக எப்படி இருந்தது. அதற்கான ஆய்வாக எங்கள் புகழ் பெற்ற பழந்தமிழ் நூல்கள் வாயிலாக ஆய்வோம்.

ஒன்பது 

ஒன்பது என்பது தொல்காப்பியத்தில், பல இடங்களில் காணப்படுகிறது.

தொல்காப்பியத்தில் இருந்து ஒரு பாடல்:

மாற்றருஞ் சிறப்பின் மரபியல் கிளப்பின்

பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும்

கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்(று)

ஒன்பதும் குழவியோ டிளமைப் பெயரே

ஒன்பது என்ற சொல் சிலப்பதிகாரத்திலும் உண்டு

ஒன்பது குடையும் ஒரு பகல் ஒழித்தவன் - சிலப்பதிகாரம்

இதே குறிப்பு சங்க இலக்கியங்களில் ஒன்றான அகநானூற்றிலும் உண்டு

ஒன்பது குடையும் நன் பகல் ஒழித்த - அகநானூறு

ஒன்பான் 

ஒன்பான் என்ற சொல் சிலப்பதிகரத்தில் ஒன்பதைக் குறித்து ஓரிடத்தில் வருவதைப் பார்ப்போம்.

அதிரா மரபின் யாழ் கை வாங்கி

மதுர கீதம் பாடினள் மயங்கி

ஒன்பான் விருத்தியுள் தலைக்கண் விருத்தி

பொருள்:

விருத்தி என்றால் உடற் பயிற்சியின் ஒரு வகை. ஒன்பான் விருத்தி என்றால் ஒன்பது ஆசனங்கள். ‘தலைக்கண் விருத்தி' என்றால் ஒன்பதில் முதலாவதான பத்மாசனம் ஆகும். பத்மாசனமாகிய இருக்கை அமைத்துக்கொண்டு மாதவி யாழ் வாசித்தாளாம்.

தொல்காப்பியத்திலும் பல இடங்களில் ஒன்பான் என்று ஒன்பதைக் குறிப்பிடப்படுவதை பார்க்கலாம்.

தொல்காப்பியத்திலும், சிலப்பதிகாரத்திலும்  ஒன்பானும் உண்டு, ஒன்பதும் உண்டு.

மேலும் ஒன்பான் என்பது இந்த நூல்களில் ஒன்பது என்பதை கவி நயத்திற்காகவும், இலக்கண நயத்திற்காகவும் புகுத்தப்பட்ட வடிவமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. தொல்காப்பியத்தில், சில இடங்களில் ஐந்தன், எட்டன் என்ற குறிப்புக்களைப் பார்க்கும்போது, ஒன்பான் என்பதும் அப்படியே ஒன்பது என்பதன் செல்லப் பெயரோ என்று தோன்றுகிறது.

மேலும், ஒன்பான் என்ற சொல் சங்க இலக்கிய நூல்களில் இடம்பெறவில்லை. 

தொண்டு

தொல்காப்பியத்தில் தொண்டு என்ற சொல் ஒன்பதைக் குறித்து உள்ளது.

மெய் பெறு மரபின் தொடை வகைதாமே

ஐ ஈர் ஆயிரத்து ஆறு ஐஞ்ஞூற்றொடு

தொண்டு தலை இட்ட பத்துக் குறை எழுநூற்று

ஒன்பஃது என்ப உணர்ந்திசினோரே

தொண்டு தலை இட்ட பத்துக் குறை எழுநூற்று ஒன்பஃது என்பது 

ஒன்பதை மேலே வைத்த பத்துக் குறை எழுநூற்று ஒன்பது என்று வரும்.

அத்துடன், தொண்டு என்ற சொல் ஒன்பதைக் குறிக்கு முகமாக சங்க கால இலக்கியங்களிலும் காணப்படுகிறது. பரிபாடலில் வரும் ஒரு பாடல் இதோ.

பாழ் என கால் என பாகு என ஒன்று என

இரண்டு என மூன்று என நான்கு என ஐந்து என

ஆறு என ஏழு என எட்டு என தொண்டு என  - பரிபாடல்

சிலப்பதிகாரத்தில் தொண்டு என்ற சொல்லைக் காண முடியவில்லை. 

தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் என்பவற்றில் குறிப்பிடப்படும் தொண்டு, அதே சம காலத்தில் குறிப்பிடப்படும் ஒன்பது என்ற நிலையை வைத்து, நாம் உய்த்தறிவது யாதெனில், ஒன்பது நுழையும் காலம் தொல்காப்பியக் காலத்தில் நடைபெறுகிறது.

தொல்காப்பியக் காலம், சங்ககாலம் வரை இருந்த தொண்டு சிலப்பதிகாரத்தில் இடம்பெறாததைக் கொண்டு ஒன்பதின் ஆட்சி பலப்படுத்தப் பட்டுவிடுவதை அவதானிக்கலாம். தொண்டு வழக்கொழிந்து போனதையும் காணலாம்.

தொண்ணூறு

தொல்காப்பியத்தில் ஒன்பானிற்கும்  ஒன்பதிற்கும் ஒரு தொடர்பு உருவாவது பற்றிய குறிப்புக் காணப்படவில்லை. ஆனால் “ஒன்பஃது” இலிருந்து தொண்ணூறு உருவாகும் முறை விபரிக்கப்பட்டுள்ளது.

ஐந்தன் ஒற்றே மகாரம் ஆகும்

எட்டன் ஒற்றே ணகாரம் ஆகும்

ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும்

முந்தை ஒற்றே ணகாரம் இரட்டும்

பஃது என் கிளவி ஆய்த பகரம் கெட

நிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி

ஒற்றிய தகரம் றகரம் ஆகும்

இதன் விளக்கமாவது: 

ஒன்பஃது இல் இருக்கும் ஒகாரத்தில் தகாரம் ஒற்றும். இதில் தொ ஆரம்பம்.

பின்னர் ணகாரம் இரட்டும். இப்போ தொண்ண் என்று வருகிறது.

மேலும், 

பஃது என் கிளவி ஆய்த பகரம் கெட

நிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி

ஒற்றிய தகரம் றகரம் ஆகும்

இது தொண்ணூறு என்பதைக் கொடுக்கிறது என்று விளக்குகிறார் தொல்காப்பியர். நீட்டி முடக்கி அளிக்கப்பட்டுள்ள விளக்கம் இது.

இதை ஒரு வரைவிலக்கணமாக நாம் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. அக்கால வழக்கில் இருந்த அந்தச் சிக்கலுக்கு தொல்காப்பியர் கொடுத்த ஒரு விளக்கமாக எடுக்கலாம்.

தொண்ணூறு, தொள்ளாயிரம் என்பவை சங்கப் பாடல்களிலோ, தொல்காப்பியத்திலோ, சிலப்பதிகாரத்திலோ வேறு இடங்க்களில் காணப்படவில்லை.

இலத்தீன்/உரோமன் எண் பாதிப்பு

உரோமன் எண்களில் 4 என்பது  IV என்றும்,  9 என்பது  IX என்றும் எழுதப்படுவது நாம் அறிந்ததே. இங்கே 4 என்பது “ஒன்று குறை ஐந்து” எனவும் 9 என்பது “ஒன்று குறை பத்து” எனவும் கொள்ளப்படலாம். இது ஒரு எச்சரிக்கையோடு கூடிய நெகிழ்ச்சி முறை. இந்த நெகிழ்ச்சியைக் கருத்திற் கொண்டு, தமிழில் ஒன்று குறை பத்து என்பதை ஒன்பது என்று அழைத்திருக்கலாம். ஆனால் இந்த நெகிழ்ச்சியை 4 இல் செய்யவில்லையே!. மேலும், இந்த நெகிழ்ச்சி முறை காணப்படும் உரோமன் எண்கள் அவற்றை உச்சரிப்பில் காட்டவில்லை. இதை கூகிளில் தேடிப் பார்க்கலாம்.


Roman Numeral

Latin

English

I

unus (oo-nus)

one

II

duo (du-oh)

two

III

tres (trays)

three

IV

quattuor (kwuht-tu-ohr)

four

V

quinque (kween-kweh)

five

VI

sex (sehks)

six

VII

septem (sehp-tehm)

seven

VIII

octo (ohk-to)

eight

IX

novem (noh-wehm)

nine

X

decem (deh-kehm)

ten

என்னவாயினும், தமிழின் சிறப்பைக் கருதி, ஒன்பது - 9, தொண்ணூறு - 90, தொள்ளாயிரம் - 900 என்ற உபயோகம் தவிர்க்கப்படுவது நல்லது

மாற்றுச் சிந்தனை

இவை எல்லாவற்றையும் பார்க்கும் போது ஒன்பது என்ற தற்கால வழக்கத்தை நாம் கைவிட வேண்டும். 

ஒன்பான் என்பது ஒன்பது என்பதன் ஒரு சேர்மானத்தோடு கூடிய ஒரு சொல்லே. அதனால், ஒன்பான் என்பதும் கைவிடப்படலாம்.

ஆக நாம் எங்கள் பெருமைமிகு “தொண்டு” என்ற சொல்லைப் புழங்குவதற்கு முன்வருவோம்.

தொண்டு என்பதன் வடிவங்களை அறிமுகப்படுத்துவோம்.

9 = தொண்டு

90 = தொண்பது

900 = தொண்ணூறு

9,000 = தொள்ளாயிரம்

90,000 = தொண்பதாயிரம்

900,000 = தொண்ணூறாயிரம் அல்லது தொண்டு இலட்சம்

9,000,000 = தொண்டு மில்லியன் அல்லது தொண்பது இலட்சம்

இப்படியாக உபயோகிக்க, மேலும் சில எடுத்துக்காட்டுகள் இதோ.

19 = பத்தொண்டு

29 = இருபத் தொண்டு

91 = தொண்பத்தொன்று

92 = தொண்பத்திரண்டு

99 = தொண்பத் தொண்டு

109 = நூற்றித் தொண்டு

199 = நூற்றித் தொண்பத் தொண்டு

190 = நூற்றித் தொண்பது

909 = தொண்ணூற்றித் தொண்டு

999 = தொண்ணூற்றித் தொண்பத்தொண்டு

செயற்படுத்தல்

தமிழ் மொழியை அரச மொழியாகக் கொண்ட நாடுகளுக்கான விண்ணப்பம்.

இந்தப் பரிந்துரைப்பை அரசுகளும், தொடர்பான அமைச்சுகளும் கவனத்தில் எடுத்துத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் புழங்கும் இடங்கள் எங்கும் அந்த அரசுகளும் அமைச்சுகளும் இதை ஒருமுகமாகச் செயற்படுத்த வேண்டும்.

தமிழ் நாடு, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய அதிகாரம் கொண்ட நாடுகளுக்கு இந்த வேண்டுகோளை வைப்போம். அவர்கள் ஒரு கூட்டு நடவடிக்கையாக இதைக் கையாண்டு, செயற்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும். 

இது நடைமுறைக்கு வந்ததும் எல்லோரும் பின்பற்றுவோம். அரச அதிகாரமில்லாத இடங்களில் உள்ள தமிழ் அமைப்புகள், பாடசாலைகள் அரச அறிவிப்புகளை ஏற்று நடக்க முன்வர வேண்டும்.

எல்லோரும் ஒருங்கிணைந்து இதை முன்னெடுத்தால், தமிழிற் புகுந்து கொண்ட  இந்தக் குறையை நீக்கி விடலாம். 


தேமொழி

unread,
Sep 3, 2025, 7:21:54 PM (2 days ago) Sep 3
to மின்தமிழ்

///தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் என்பவற்றில் குறிப்பிடப்படும் தொண்டு, அதே சம காலத்தில் குறிப்பிடப்படும் ஒன்பது என்ற நிலையை வைத்து, நாம் உய்த்தறிவது யாதெனில், ஒன்பது நுழையும் காலம் தொல்காப்பியக் காலத்தில் நடைபெறுகிறது.

தொல்காப்பியக் காலம், சங்ககாலம் வரை இருந்த தொண்டு சிலப்பதிகாரத்தில் இடம்பெறாததைக் கொண்டு ஒன்பதின் ஆட்சி பலப்படுத்தப் பட்டுவிடுவதை அவதானிக்கலாம். தொண்டு வழக்கொழிந்து போனதையும் காணலாம்.///


சிறப்பு . . .   மிக்க நன்றி. மாற்றம் மக்களால் வர வேண்டும்.  

அரசு சட்டம் போட்டு  மாற்றலாம் என்பது எந்த அளவு  நடைமுறைக்கு வரும் என்பது புத்தாண்டு மாற்றம் போன்ற ஒரு நிலையாகவும் இருக்கலாம்.  

புழக்கத்தில் உள்ள பெரியார் எழுத்து  மாற்றம் போல எளிதாக இருக்க வாய்ப்பில்லை என நினைக்கிறேன் - இது பள்ளியில் இளையோரிடம் இருந்து கொண்டு சென்றதால் வெற்றி பெற்றது  என்பது என் கணிப்பு. 

Jeyapal K

unread,
Sep 4, 2025, 8:55:18 AM (yesterday) Sep 4
to mint...@googlegroups.com
நன்றி தேமொழி. 
மாற்றம் இளையோரிலிருந்து தொடங்குவது நல்லது.
இப்படியொன்று உள்ளது என்பது முதலில் மக்கள் மயப்பட வேண்டும்.

அன்புடன்,
செயபாலன்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/YzaJFxfqm94/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/mintamil/3a8e727b-6d02-4834-90c5-4c2a5d5980dcn%40googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages