FeTNA: விழா மலரில் அடிகளாரின் கட்டுரை

36 views
Skip to first unread message

பழமைபேசி

unread,
Jul 8, 2010, 11:20:59 AM7/8/10
to ilakkiy...@yahoogroups.com, முத்தமிழ், tamizh...@googlegroups.com, மின்தமிழ்

பெட்னா விழா மலரில் அடிகளாரின் கட்டுரை


கருவறையில் தமிழ் ஒலிக்கக் கரம் கோர்ப்போம்

கடவுள் வழிபாடு காலங்கடந்த பழமை மிக்கது. வழிபாட்டால் தனிமனிதன் நலம் பெறுவதுடன் மக்களினம் வாழ்வும் வளமும் பெற வேண்டும். ஆதலின் அருளாளர்கள் ‘’சேரவாரும் செகத்தீரே ‘’ எனவும் ‘’மனிதர்காள் இங்கு வம்மின் ஒன்று சொல்லுகேன் ‘’ எனவும் அழைத்து வழிகாட்டினர். இது வாழையடி வாழையாக வளர்ந்துள்ள திருநெறி. நமது ஆதீன குருமுதல்வர் அருள்மிகு சாந்தலிங்கப் பெருமான் ‘”யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’’ என்னும் அருள்மொழிக்கேற்ப ‘’தேறும் நிமித்தம் திருத்தொண்டு செய்பவராய்க் கூறும் அடியார் குழாம் பலவும் கொண்டு அருள்புரிந்தார். மூதுணர்வோர் ஆகிய அருளாளர் பாடல்கள் பிறவிப் பிணியைப் போக்கும், சிவபெருமானுக்கு இனிமை தரும். இது உறுதியான வாக்கு. அவரது அருள்பெறும் அடியவர்கள் பெருவிருப்பம் இதுவேயென அருளியுள்ளார்.

‘’யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்

இனிதாவது எங்கும் காணோம்’’

எனப் பன்மொழி பயின்ற பாரதியார் கூறியுள்ளார்.தமிழ் தன்னேரில்லாத் தமிழ் எனப் போற்றினர் புலவர்கள்.உயர்தனிச் செம்மொழியாகிய தமிழ் வழிபாட்டு நெறியில் மனமுருகும் அருட்பாடல்களை உடையது.

வாழ்வியலோடு அருளியலை இணைத்து அப்பன் நீ அம்மை நீ அன்புடைய மாமனும் மாமியும் நீயென” ‘உலகியல் வாழ்வையே சமய வாழ்வாக மாற்றிச் செம்மை நலத்தைத் தருவன அருட்பாடல்கள்.

‘நிறைமொழி மாந்தர் ஆணையிற்கிளந்த

மறைமொழி தானே மந்திரம் என்ப ‘

என்று தொல்காப்பியர் அருளியுள்ளார்.. நிறைமொழி மாந்தர்களாக விளங்கியவர்கள் திருமுறை ஆசிரியர்கள். அவர்கள் அருட்பாடல்கள் ஆயும் அறிவினர்பெரும்பயன் உடைய சொற்களைச் சொல்லியவர்கள்.வாழ்வியலின் பல நிலைகளை உணர்ந்து மனித இனத்திற்கு வழிகாட்டினர். இறைவனை வான்பழித்து மண்புகுந்து வாழ்வருளச் செய்தவர்கள். ஆதலின் ‘’வான்பழித்து மண்புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல் ‘’எனப் பாடினார் மணிவாசகர். ‘புவனியில் சேவடி தீண்டினான் காண்க ‘ என்று அன்பால் நெகிழ்ந்தோனைக் காணுமாறு கூறினார்.

அப்பரடிகள் நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி நற்கனகக் கிழி தருமிக்கு அருளினோன் காண் ‘’ என்றும் சுந்தரர் ’’ பொன்னும் பொருளும் தருவார் அவனைமறக்கலாகாது ‘’என்றும் கூறினார். தன்னோடு இணைத்துத் துன்னிய பிணைமலர்க் கையினராய்த் தொழுது பாடிப் பரவும் அன்பர்களை நோக்கிக் ‘’காலனையும் காலால் கடிந்தான் கண்டாய் ‘’என்று தன்னுடன் இணைத்துப் போற்றினார் அப்பரடிகள். அதனால் கூற்றுவனை வெல்லும் திறமும் எய்தியது. இவையெல்லாம் நோற்றலின் ஆற்றலால் வெல்லும் சொற்களாக வெளிப்பட்ட மந்திர மொழிகள்.நிலைபெற்ற நெஞ்சத்தினராய் மேல்கீழ் என மயங்காமல் தொழுது தூமலர் தூவித் துதித்துச் செந்தன்மையாளர் ஓதிய மந்திர மொழிகள்காலத்தொடு கற்பனை கடந்த கருவூலத்துப் பழம் பாடல்கள் . மந்திரங்கள் ஒரு எழுத்தாகவும், ஒரு சொல்லாகவும் ஒரு தொடராகவும் உருப்பெற்றன. இவ்வாறு பிறப்பால் உயர்வு தாழ்வு காணாமல் உள்ளன்புடன்’’ பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’எனத் தொழும் அடியவர்கள் நெஞ்சினுள் கடவுள் தானாகவே வந்து தங்குவார் என்பதையே,

எவரேனும் தாமாக விலாடத்திட்ட

திருநீறும் சாதனமும் கண்டால் உல்கி

உவராதே அவரவரைக் கண்ட போதே

உகந்தடிமைத் திறம் நினைந்தங்கு உவந்து நோக்கி

இவர்தேவர் அவர்தேவர் என்று சொல்லி

இரண்டாட்டாது ஒழிந்து ஈசன் திறமே பேணிக்

கவராதே தொழுமடியார் நெஞ்சினுள்ளே

கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே ‘’

என அறுதியிட்டு அப்பரடிகள் அருளிய மந்திரப் பாடல் வலியுறுத்தும்.

நமது மொழி தொன்மை மிக்கது. பலர்கூடி ஆய்ந்த மொழி.தமிழ் கூட்டுண்ட தகைசால் மதுரை எனச் சங்கப் புலவர் போற்றிய சிறப்புடையது.விரிசடைக்கடவுளாகிய சிவனும் குன்றம் எறிந்த குமரவேலும் சங்கப் புலவர்களாய்த் தமிழ்ச் சுவையுணர்ந்தனர். பண்ணும் பதமேழும் பலவோடிசைத்தத்தமிழாய் விளங்கினார் எனத்திருஞான சம்பந்தர் போற்றியுள்ளார்.

தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்’ . ‘ பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி என அப்பரடிகள் அருளியுள்ளார். சுந்தரர் ‘’ ஏழிசையாய் இசைப்பயனாய் ‘’இறைவனைக் கண்டார். .மாணிக்க வாசகர்  தண்ணார் தமிழளிக்கும் தன்பாண்டி நாட்டான் எனப் பாடினார் . ஆதலின் நமது மொழி தெய்வத் தமிழாகவிளங்குகிறது.

ஆழ்வார்கள் ஞானத்தமிழ் நல்கினர். ‘’சங்கத்தமிழ் மாலை’’ எனப் போற்றினார் ஆண்டாள் நாச்சியார்.குமர குருபரர் ‘’ பைந்தமிழ் பின்சென்ற பச்சைப் பசுங்கொண்டல்’’ எனத் திருமால் அருட்செயலைப் போற்றியுள்ளார். மேலும் அன்னையாகிய சத்தியே அனைத்து ஆற்றல்களையும் தருபவர். ‘’முதுதமிழ் உததியில் வருமொரு திருமகள்’’ எனவும் ‘’ பழமதுரையில் தமிழொடு வருமகள்’’ எனவும் செந்தமிழ்த் திறத்தைப் புகழ்ந்துள்ளார்.

மதுரையில் தமிழ் இன்பத்தைப் பருகவே சிவனும் உமையும் முருகனும் கயிலையை விட்டு மதுரைக்கு எழுந்தருளினர் என்பதைத்

..................தண்டமிழ் மதுரம்

கூட்டுண வெழுந்த வேட்கையால் எனில்இக்

கொழிதமிழ்ப் பெருமை யாரறிவார்’’

என அருளியுள்ளார்.

‘ மொழிக்கு மொழி தித்திக்கும் மூவர் மொழி ‘ என்பார் தாயுமானவர்.’’திருவாசகம் இங்கு ஒருகால் ஓதின் கருங்கல் மனமும் கசிந்துருகும்’’என்பார் சிவப்பிரகாசர். ‘’ சந்தனக்குன்றின் மலைமேல் பிறந்த தமிழ்த் தெய்வமே ‘’என்றார் முருகதாச அடிகள்.

தொன்மைதொட்டு இன்றுவரை போற்றிப் புகழ்கின்ற தமிழைத் தெய்வத்தமிழ் என்று உணர்த்தி உளம் நெகிழச் செய்வது நமது கடப்பாடாகும்

‘’ ஓங்கல் இடைவந்து உயர்ந்தோர் தொழ விளங்கி

ஏங்கொலிநீர் ஞாலத்து இருள்அகற்றும் ஆங்கவற்றுள்

மின்னேர் தனிஆழி வெங்கதிர் ஒன்று; ஏனையது

தன்னேர் இலாத தமிழ் ‘’

என்று பாடிப் பரவினர் நம் முன்னோர்.ஆனால் செம்மொழியாகிய நம்மொழி கடவுள் வழிபாட்டில் கருவறையில் புகும் வாய்ப்பை இழந்தது. திருக்குட நீராட்டுகளில் தமிழ் இடம்பெற முடியாமல் அயல்மொழி இரும்புக் கோட்டையாய் இடைக் காலத்தில் அமைந்த து. அயலாதிக்கத்தால் கோயிற் கருவறையில்புகுந்துஅருளியல் நெறிகளைத் தமதாக்கித் தமிழையும்,தமிழ் நெறியாளர்களையும் இரண்டாம் நிலையமையச் செய்தும் அழித்தும் புறக்கணிப்பதுடன் வாழ்வியல் நெறி தியவற்றில் அயல்மொழியைப் புகுத்தி மயக்கினர்.

தெய்வத்தமிழ்ச் சான்றோர்கள் இந்நிலையைத் தவிர்க்கத் தொடங்கினர். மறைமலை அடிகள், திரு.வி. ஆதியோர் அயல்வழக்குகளைத் தவிர்க்க வலியுறுத்திச் சமய பீடங்களைப் புறக்கணித்தனர்.

தவத்திரு தமிழ்மாமுனிவர் குன்றக்குடி அடிகளார் செந்தமிழ் திருமுறை நெறியே இடம்பெற வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டு அரணாகப் பேணினார்.

அடிகளது பேணுதலையும் அரவணைப்பையும் நட்பையும் துணையாய்ப்பெற்ற திருக்கயிலாயப் பரம்பரை மெய்கண்டார் வழிவழி பேரூராதீனம் கயிலைக்குருமணி சீர்வளர்சீர் சாந்தலிங்க இராம சாமி அடிகளார் அவர்கள் கடவுள் வழிபாட்டில் தமிழே முதன்மை பெறவேண்டும் என்று திருநெறிய தமிழால் அருளியலில் திருக்குட நீராட்டுகளை1954 ஆம் ஆண்டு முதல் நடத்தி எங்கும் தமிழ் எதிலும் தமிழ் ,எல்லாம் தமிழ் என்பதை முதன்மையாக்கினார் . அவர் வழியில் இன்று பல்லாயிரக்கணக்கான வாழ்வியல் நிகழ்வுகளும் அருளியல் நிகழ்வுகளும் திருநெறிய தெய்வ ஒண்தீந்தமிழில்நடைபெற்று வருகின்றன..

இத்தகு திருநெறியத் தெய்வ ஒண்தீந்தமிழ் வழிபாட்டின் சிறப்புகளாவன:

v ‘ ஒன்றே குலம் ஒருவனே தேவன் ‘ எனும் பத்தாம் திருமுறை அருளிய திருமூலரின் கொள்கையைப் பரவலாக்குவது

v இறைவனை எளிவந்த பிரான் எனப்போற்றும் திருமுறைகளுக்கு ஏற்ப இறைவன் எளிமையானவன். யார் அழைத்தாலும் வருவான் எனும் உண்மையை வெளிக்கொணர்தல்.

v ‘’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ எனும் வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப ஆண், பெண் ,பெரியோர்,சிறியோர், மேலோர்,கீழோர் எனும் பாகுபாடின்றி எல்லோரும் வழிபாட்டில் ஈடுபடத் தகுதியுடையவர்கள் என்பதை வலியுறுத்துதல்.

v எளிய தமிழில் எல்லோருக்கும் புரியும் வண்ணம் போற்றினாலே இறைவன் ஏற்றுக்கொள்வார் என்பதை மக்களிடம் கொண்டு செல்லுதல்.

v இறைவனை வழிபடுவதற்கு இடையீட்டாளர்கள் தேவை இல்லை. தாயோடு பழகும் சேயைப்போல இறைவனோடு பழகும் வாய்ப்பைப் பெருக்குதல்.

v அன்பே சிவம் எனும் வாக்கிற்கேற்ப இறை அச்சமின்றி இறை அன்பு கொண்டு அச்சமோ,சையோ பாராட்டாமல் அன்பு எனும் பிடியில் அகப்படும் மலையாகிய இறைவனைக் கண்டு இன்புறச் செய்தல்.

v ஆடம்பரமும் , பொன்னும் ,பொருளும்,பகட்டும் இன்றி அன்பும்,அறனும், சீலமும், எளிமையும் கொண்டு இறைவனை வழிபாட்டாலே அருள் தருவான் என்பதை முன்னிலைப் படுத்துதல்.

v ஐயறிவு,மூன்றறிவு உயிரினங்கள் எல்லாம் சென்று வழிபட்ட கருவறையில் தகுதியுடைய அனைவரும் கருவறைக்குள் சென்று போதொடு நீர்சுமந்தேத்தி பூமாலை புனைந்து திருமேனி தீண்டி கண்ணின் மணியாகிய இறைவனைக் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதி வழிபடலாம் என்பதை வளம்பெறச்செய்தல்..

v ‘’இப்படியன்,இந்நிறத்தன், இவ்வண்ணத்தன்’’ என்று எழுதிக் காட்டவொண்ணாத இறைவனுக்கு முன்னர் எல்லோரும் ஒன்று ,அந்த எல்லாம் உடையானை எம்மதத்தோர் எவ்வகை நிட்டை சொல்லி வழிபடினும் சம்மதம் என்பதனையும் அந்நெறி வானோர்க்கு உயர்ந்த உலகை நல்கும் யான் எனது எனும் செருக்காகிய தற்போதத்தை மாய்க்கும் நெறியாக இருத்தலை முன்னிறுத்துதல்..

v வேண்டத்தக்கது அறியும் இறைவன் முன் எதிர்பார்ப்புகள் இன்றி நம்கடன் பணி செய்து கிடப்பதே எனத் தொண்டாற்றுதல்.

v மக்கள் தொண்டே மகேசன் தொண்டென நால்வர் காட்டிய வழியில் பசிப்பிணி, அறியாமைப்பிணி, உடற்ப்பிணி, உயிர்ப்பிணி போக்கும் , சமய,சமுதாய, மருத்துவ , கல்விப் பணிகளில் ஈடுபடல், ஈடுபடச் செய்தல் .

v தேவையற்ற பொருள் செலவுகளைத் தவிர்த்து நற்பணிகளுக்காகப் பொருள்பற்று, புகழ்பற்று, புலன்பற்று, அதிகாரப்பற்று இன்றிக் கொண்டும் கொடுத்தும் ஏற்றத் தாழ்வில்லாத ஐயுணர்வை மெய்யுணர்வாக்கும் வழியில் தொண்டாற்றுதலை நெறிப்படுத்துதல்.

இப்பன்னிரெண்டு நெறிகளையும் நமதாக்கிக் கொள்வோம். நாளும் நாமும் திருநெறிய தமிழைப் பரப்புவோம் . தெய்வத் தமிழ் வளம் காண்போம்.

Posted by நமச்சிவாய வாழ்க
Reply all
Reply to author
Forward
0 new messages