அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறைக்
கோயில்கள் ஓர் ஆய்வு
மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர்(M.Phil.)
பட்டத்தின் ஒருபகுதியாக அளிக்கப்பெறும் ஆய்வேடு
திருமதி. கஸ்தூரி தயாநிதி
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
ஏப்ரல்-1984
********************************************************************************
டாக்டர் நா. செயராமன், எம்.ஏ., எம்.லிட்., பிஎச்.டி.,
இணைப்பேராசிரியர்,
தமிழ் மற்றும் இந்திய மொழிப்புலம்,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,
மதுரை- 21. நாள் 30.4.84
மேற்பார்வையாளர் சான்றிதழ்
"அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறைக் கோயில்கள்- ஓர் ஆய்வு" என்னும் தலைப்பில் ஆய்வியல் நிறைஞர் (எம்.ஃபில்.) பட்டத்திற்குச் செய்யப்பட்ட இவ் ஆய்வு ஆய்வாளரின் சொந்த முயற்சியால் உருவானதே ஆகும். இதற்கு முன் இவ் ஆய்விற்கு எந்தவிதப் பட்டமும் அளிக்கப் பெறவில்லை என்று சான்று அளிக்கிறேன்.
மேற்பார்வையாளர் கையொப்பம்
(நா. செயராமன்)
கஸ்தூரி தயாநிதி,
எம்.ஃபில். மாணவி,
தமிழ் மற்றும் இந்திய மொழிப்புலம்,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,
மதுரை- 21.
நாள் :30.4.'84
ஆய்வாளர் உறுதிமொழி
"அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறைக் கோயில்கள் - ஓர் ஆய்வு என்னும் தலைப்பில் ஆய்வியல் நிறைஞர் (எம்பில்.) பட்டத்திற்குச் செய்யப்பட்ட இவ் ஆய்வு என் சொந்த முயற்சியில் உருவானதே ஆகும். இதற்கு முன் எந்தப் பட்டத்திற்கும் இவ் ஆய்வேடு அளிக்கப்பெறவில்லை என்று உறுதி அளிக்கிறேன்.
ஆய்வாளர்(கையொப்பம் ) கஸ்தூரிதயாநிதி
உறுதிக் கையொப்பம்
(நா. செயராமன்)
மேற்பார்வையாளர்
*****************************************************************************************************************************************************************
நன்றியுரை
இவ் ஆய்வினை மேற்கொள்ள வாய்ப்பினை நல்கிய பல்கலைக்கழக மானியக் குழுவிற்கும் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தாருக்கும் என் நன்றி உரித்தாகும்.
ஆய்வு நடத்த இசைவு தந்த எஸ். எப். ஆர் மகளிர் கல்லூரி நிர்வாகத்தினருக்கும்,கல்லூரி முதல்வர் திருமதி சரோஜினி நடராசன் அவர்களுக்கும் என் நன்றி உரித்தாகும்.
இவ் ஆய்வு நடத்த எனக்கு அனுமதியளித்த மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் டாக்டர் தமிழண்ணல் அவர்களுக்கும் என் நன்றி உரித்தாகும்.
ஆய்விற்கு மேற்பார்வையாளராக இருந்து, ஆய்வின் எல்லா நிலைகளிலும் ஊக்கம் அளித்துச் செம்மைப்படுத்தி முழுமையுறத் துணைபுரிந்த டாக்டர் நா.செயராமன் அவர்களுக்கு என் உளம் நிறைந்த நன்றி உரித்தாகும்.
ஆய்விற்குத் தேவையான உதவிகள் தந்த அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை நிர்வாகத்தினருக்கு என் நன்றி உரித்தாகும். "அருப்புக்கோட்டை ஈ.வெ.ராம.சகாப்த 'நாடார் குல மித்திரன்' பத்திரிகாதிபர் கு.ஆ.முத்து நாடார் நூல்நிலைய" உரிமையாளருக்கு என் நன்றி உரித்தாகும்.
சிறப்பான முறையில் தகவல்கள் நல்கி ஆய்விற்கு உறுதுணையாய் நின்ற உத்தண்ட நாடார், அ.காசி,எம்.ஏ.,பி.டி., கா.ஆவுடைத்தங்கம்,எம்.,ஏ.,பி.டி., ஆகியோருக்கு என் நன்றி உரித்தாகும். ஆய்விற்குத் தேவையான தகவல்கள் தந்த ஏனைய தகவலாளர்களுக்கும் என் நன்றி உரித்தாகும்.
தட்டெழுத்துப் பணியைச் செம்மையாகச் செய்து தந்த செல்வராஜ் அவர்களுக்கும் என் நன்றி உரித்தாகும். கஸ்தூரி தயாநிதி
****************************************************************************************************************************************************************************
சுருக்கக் குறியீடுகளின் விளக்கம் 1. தொ. ஆ. --- தொகுப்பு ஆசிரியர் 2. செ.மீ. --- சென்டி மீட்டர் 3. ப. --- பக்கம் 4. ப. ஆ. --- பதிப்பு ஆசிரியர் 5. ப. ஆ. இல்லை --- பதிப்பித்த ஆண்டு இல்லை 6.- மீ. --- மீட்டர் 7. மொ.ஆ. --- மொழிபெயர்ப்பு ஆசிரியர் 8 . Ed. --- எடிட்டர் 9. p . --- page ******************************************************************************************************************************************************
உள்ளடக்கம் 1. முன்னுரை 1 2. அருப்புக்கோட்டை நகரம் - ஓர் அறிமுகம் 7 3. கோயில்களின் தோற்றமும் வளர்ச்சியும் 16 4. கோயில்களின் அமைப்பு 35 5. கோயில்களின் நாள் வழிபாடு 57 6. ஆண்டு விழாக்களும் திருவிழாக்களும் 66 7. கோயில்களும் நாடார் சமூகமும் 118 8. கோயில்களும் இலக்கியங்களும் 138 9. முடிவுரை 170 10. துணைநூல் பட்டியல் 11. பின்னிணைப்பு *************************************************************************************************************************************************************
|
முன்னுரை
ஆய்வுத் தலைப்பு:
"அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறைக் கோயில்கள் - ஓர் ஆய்வு" என்பது ஆய்வுத் தலைப்பாகும்.
ஆய்வு எல்லை :
அருப்புக்கோட்டை நகரில் பல கோயில்கள் இருக்கின்றன. அவை இந்து சமய அறக் கட்டளையாலும்,தனிப்பட்ட சமூகத்தினராலும் நிர்வகிக்கப்படுகின்றன. அவற்றுள் நாடார் சமூகத்தினரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்கும் "நாடார்கள் உறவின்முறை" என்னும் அமைப்பின்கீழ்ச் சில கோயில்கள் நிர்வகிக்கப்படுகின்றன.
அவை :
1.அமுதலிங்கேஸ்வரர் கோயில்
2.முத்து மாரியம்மன் கோயில்
3.வால சுப்பிரமணிய சாமி கோயில்
4.சந்தி வீரசாமி கோயில்
5.சித்தி விநாயகர் கோயில்
சுருக்கம் கருதி கோயில்களின் பெயர்களுக்கு முன் 'அருள் மிகு' என்னும் சொல்லைச் சேர்க்கவில்லை. ஏனாதிநாத நாயனார் திருமடாலயம், சரப முத்துச்சாமி சங்கரலிங்க விலாஸ் பஜனாலயம் ஆகிய இரு சமூக நிறுவனங்களும் 'நாடார்கள் உறவின் முறை'யின் நிர்வாகத்தில் உள்ளன. இவை பற்றி ஆய்வது ஆய்வின் எல்லையாக அமைகின்றது.
ஆய்வு நோக்கம்:
தமிழ்நாட்டுக் கோயில்கள் சமய வளர்ச்சியையும், சமுதாய வளர்ச்சியையும் ஒட்டி வளர்ந்துள்ளன. இறைமை உணர்வு, பண்பாட்டு உணர்வு, கலை உணர்வு ஆகியவை இயைந்து சமுதாயத்தின் அங்கமாகக் கோயில்கள் செயல்படுகின்றன. எனவே அருப்புக்கோட்டை நகரில் அமைந்துள்ள நாடார்கள் உறவின்முறைக் கோயில்கள் எவ்வெவ் முறைகளில் நாடார் சமூகத்தோடு இணைந்து சமூகத்தைப் பண்படுத்துகின்றன என்பதைத் தொகுத்தும் வகுத்தும் ஆராய்வதே இவ் ஆய்வின் நோக்கமாகும்.
ஆய்வு மூலங்கள்:
ஆய்விற்கு முதன்மை ஆதாரங்களும் துணைமை ஆதாரங்களும் மிக இன்றியமையாதனவாய் அமைகின்றன. களஆய்வில் சென்று திரட்டிய செய்திகளும், வயது முதிர்ந்தோர், கோயில் நிர்வாகிகள், கோயில் நிகழ்ச்சிகளில் பங்கு பெறுகின்றவர்கள் ஆகியோருடன் நிகழ்த்திய பேட்டிகளும் முதன்மை ஆதாரங்களாக அமைகின்றன. இராமநாதபுரம் பற்றிய நூல்கள், அருப்புக்கோட்டை நகர்க்கோயில்கள் பற்றிய நூல்கள், கல்வெட்டுக்கள் ஆகியன துணைமைச் சான்றாதாரங்களாக அமைகின்றன.
ஆய்வு அணுகுமுறை:
அருப்புக்கோட்டை நகரில் நாடார்கள் உறவின் முறையின் நிர்வாகத்திற்கு உட்பட்ட கோவில்களின் அமைப்புக்கள், நாள் வழிபாடு நிகழ்த்தும் முறை, திருவிழாக்கள் நடைபெறும் முறை பற்றிய பகுதிகள் விளக்க முறையில் ஆராயப்பட்டுள்ளன. கோயில்களின் தோற்றமும் வளர்ச்சியும், கோவில்களும் சமூகமும் என்னும் பகுதிகள் வரலாற்று முறையில் ஆராயப்பட்டுள்ளன. அருப்புக்கோட்டை நகரம் - ஓர் அறிமுகம், கோவில்களும் இலக்கியங்களும் என்னும் பகுதிகள் மதிப்பீட்டு முறையில் அமைந்துள்ளன.
ஆய்வு முன்னோடிகள்:
கே.வி.ராமனின் ‘காஞ்சி வவரதராஜ ஸ்வாமி கோயில்’ என்ற நூலும், கே.கே.பிள்ளையின் ‘சுசீந்திரம் கோயில்’ என்ற நூலும், தொல்பொருள் ஆய்வுத் துறை அருங்காட்சியகக் காப்பாளர் வெ. வேதாசலத்தின் திருவெள்ளறை என்ற நூலும் கோயில் பற்றிய ஆய்வுகளுள் குறிப்பிடத்தக்கவையாகும்.
மதுரை காமராசர் பல்கலைக்கழக எம்.ஃ பில். பட்டத்திற்காக அளிக்கப்பட்ட சு.குருசாமியின் ‘திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்’, சு.தங்கமுத்துவின் ‘பழையாறைக் கோயில்கள்’, வ.தங்கவேலுவின் ‘திருவேடகம் கோயில் திருவிழாக்கள்’, யு.சண்முகசுந்தரியின் ‘சங்கர நயினார் கோயில் திருவிழாக்கள்’ ஆகிய ஆய்வேடுகளும் கோயில் பற்றிய ஆய்வுகளுக்கு முன்னோடிகளாக அமைகின்றன.
ஆய்வுப் பகுப்பு:
இவ் ஆய்வு ஒன்பது இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. அவை:
1.முன்னுரை
2.அருப்புக்கோட்டை நகரம் ஓர் அறிமுகம்
3.கோயில்களின் தோற்றமும் வளர்ச்சியும்
4.கோயில்களின் அமைப்பு
5.கோயில்களின் நாள் வழிபாடு
6.ஆண்டு விழாக்களும் பிற விழாக்களும்
7.கோயில்களும் நாடார் சமூகமும்
8.கோயில்களும் இலக்கியங்களும்
9.முடிவுரை
என்பன.
முன்னுரையில் ஆய்வுத் தலைப்பு, ஆய்வு எல்லை, ஆய்வின் நோக்கம், ஆய்வின் மூலங்கள், ஆய்வு அணுகுமுறை, ஆய்வு முன்னோடிகள், ஆய்வுப் பகுப்பு முதலிய செய்திகள் விளக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் இயலில் ‘அருப்புக்கோட்டை நகரம் - ஓர் அறிமுகம் என்னும் தலைப்பில் அருப்புக்கோட்டை ஊரின் வேறு பெயர், நல்லூர் என்னும் பெயருக்கான சான்றுகள், அருப்புக்கோட்டை என்னும் பெயர்க்காரணம், கோயில்கள், மக்கள், தொழில், அலுவலகங்கள், கல்விச்சாலைகள், முதலிய பல செய்திகள் சொல்லப்பட்டுள்ளன.
மூன்றாம் இயலில் ‘கோயில்களின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்னும் தலைப்பில் கோயில்களின் தோற்றக் காரணங்களும், தோன்றிய காலமும், அவை சிறிது சிறிதாக வளர்ச்சி அடைந்து இன்றுள்ள நிலையை அடைந்த தன்மையும் விரித்து உரைக்கப்பட்டுள்ளன.
நான்காம் இயலில் ‘கோயில்களின் அமைப்பு’ என்னும் தலைப்பில் கோயில்களில் அமைந்துள்ளன மண்டபங்கள், சன்னதிகள், உட்பிரகாரங்கள், வெளிப்பிரகாரங்கள் ஆகியவை தனித்தனியாக விளக்கப்பட்டுள்ளன.
ஐந்தாம் இயலில் ‘கோயில்களில் நாள் வழிபாடு’ என்னும் தலைப்பில் கோயில்களில் நடைபெறும் திருப்பள்ளி எழுச்சி, காலை - சந்தி, உச்சிக்காலம், மாலை - சந்தி, அர்த்தஜாமம் ஆகிய வழிபாடுகள் பற்றிக் கூறப்பட்டுள்ளன.
ஆறாம் இயலில் ‘ஆண்டு விழாக்களும், பிற விழாக்களும்’ என்னும் தலைப்பில் அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் நடைபெறும் வைகாசி விசாகத் திருவிழாவும், முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பங்குனிப் பொங்கல் விழாவும், ஏகாதசி, பிரதோஷம், நவராத்திரி, கார்த்திகை போன்ற பிற விழாக்களும், அவை நடைபெறும் நாட்கள், கொண்டாடப்படும் முறை, காரணங்கள் ஆகியன விளக்கப்பட்டுள்ளன
.ஏழாம் இயலில் ‘கோயில்களும் நாடார் சமூகமும்’ என்னும் தலைப்பில் நாடார் சமூகத்தினரின் சமய நெறி, அமுதலிங்கேஸ்வரர் கோயில் எழுந்த சூழல், திருவிழாக்களும் சமூகமும், கட்டளைதாரர்கள், உறவின்முறையும் கோயில்களும், நாடார் சமூகத்தினரும் பிற சமூகத்தினரும், ஏனாதி நாதநாயனார் திருமடாலயம், சரப முத்துசாமி - சங்கர லிங்க விலாஸ் பஜனாலயம் போன்றன ஆராயப்பட்டுள்ளன.
எட்டாம் இயலில் ‘கோயில்களும் இலக்கியங்களும்’ என்னும் தலைப்பில் அருப்புக்கோட்டை உறவின்முறைக் கோயில்களைப் பற்றி எழுந்த இலக்கியங்களைப் பற்றி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இறுதியில் முடிவுரையாக ஆய்வின் மதிப்பீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அடுத்து துணைநூற் பட்டியல் தரப் பெற்றுள்ளது. அதனையடுத்து பின்னிணைப்புகளாகப் பின்வருவன கொடுக்கப்பட்டுள்ளன.
1. பத்திரம்
2.வைகாசி விசாகத் திருவிழா அழைப்பிதழ்
3.சூ.ஆ.முத்து நாடார் தன்வரலாற்றுக் குறிப்பு
4.அமுதலிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக மகோத்சவ பத்திரிக்கை
5.அமுதலிங்கேஸ்வரர் கோயில் திருப்பணி செய்தவர்களின் பட்டியல்
6.அமுதலிங்கேஸ்வரர் கோயில் வைகாசி விசாகத் திருவிழா கட்டளைதாரர்கள்
7.முத்துமாரியம்மன் பங்குனிப் பொங்கல் விழாக் கட்டளைதாரர்கள்
8.அமுதலிங்கேஸ்வரர் கோயில் கார்த்திகை நாள் கட்டளைதாரர்கள்
9.அமுதலிங்கேஸ்வரர் கோயில் மாதாந்திர சிறப்பு நிகழ்ச்சிக் கட்டளைதாரர்கள்
10.வாழ்த்துக் கவிகள்
11.அருப்புக்கோட்டை கோயில்கள் பற்றிய இலக்கியங்கள்
12.அமுதலிங்கேஸ்வரர் கோயில் விக்கிரகங்களின் பட்டியல்
13.அமுதலிங்கேஸ்வரர் கோயில் உற்சவ மூர்த்திகளின் பட்டியல்
14.அமுத லிங்கேஸ்வரர் கோயில் முத்துமாரியம்மன்கோயில் ஆபரணங்கள்
15.அமுதலிங்கேஸ்வரர் கோயில் சாமான்கள்
16.முத்துமாரியம்மன் கோயில் சாமான்கள்
17.அமுதலிங்கேஸ்வரர் கோயில் முத்து மாரியம்மன் கோயில் வாகனங்கள்
18. தகவலாளர்கள்
19.நிழற்படங்கள்
20.கோயில்கள் அமைப்பு
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அருப்புக்கோட்டை நகரம் - ஓர் அறிமுகம்
ஊரின் வேறு பெயர்
நல்லூர் என்னும் பெயருக்கான சான்றுகள்
அருப்புக்கோட்டை என்னும் பெயர்க்காரணம்
கோயில்கள்
மக்கள்
அலுவலகங்கள்
பள்ளிகள், கல்லூரிகள்
அருப்புக்கோட்டை நகரம் - ஓர் அறிமுகம்
மதுரையில் இருந்து பாலையம்பட்டி வழியாக தூத்துக்குடி செல்லும் நெடுஞ்சாலையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை உள்ளது. மதுரையில் இருந்து தெற்கே 49 கிலோமீட்டர் தொலைவிலும் விருதுநகரில் இருந்து கிழக்காக 16 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இவ் ஊரிலிருந்து பல திசைகளிலும் உள்ள ஊர்களுக்குப் பேருந்துகள் பல ஓடுகின்றன. விருதுநகர் மானாமதுரை ரயில் தடத்தில் இங்கு ஓர் புகைவண்டி நிலையமும் அமைந்துள்ளது. 1963ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் நாள் முதல் விருதுநகர் அருப்புக்கோட்டை புகைவண்டி இணைப்பு தொடங்கியது. இராமநாதபுரம் அரசாங்கப் பதிவேட்டில் உள்ள குறிப்புகளின் அடிப்படையில் இவ் இயல் எழுதப்பட்டுள்ளது.
ஊரின் வேறு பெயர்:
இன்று அருப்புக்கோட்டை என வழங்கப்படும் இவ்வூர் திருநல்லூர் என்று முன்பு வழங்கப்பட்டிருக்கிறது. சொக்கலிங்கபுரம், வாழவந்தபுரம், புளியம்பட்டி, நல்லூர், கரையாம்பட்டி என இருந்த சிறுபகுதிகளை எல்லாம் ஒன்று சேர்த்து அருப்புக்கோட்டை எனப் பெயர் இடப்பட்டிருக்கிறது. சொக்கலிங்கபுரம் புளியம்பட்டி ஆகியன இன்றும் அருப்புக்கோட்டையில் சிறு பகுதிகளாக விளங்குகின்றன. ஊர் முழுவதும் அருப்புக்கோட்டை என வழங்கப்படுகின்றது. . ஊருக்கு மேற்கே விளங்கும் முஸ்லிம் பகுதியில் சிற்சில இடங்களில் இன்றும் விளம்பரப் பலகைகளில் நல்லூர் என்றே குறிப்பிடப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. நல்லூர் என்ற பெயர் மக்கள் இடையே பேச்சுவழக்கில் இல்லை; எனினும் இவ் ஊர்க்கு இப்பெயர் முன்பு வழங்கியுள்ளதைக் குறிக்கப் பல சான்றுகள் உள்ளன.
நல்லூர் என்னும் பெயருக்கான சான்றுகள்:
பத்திரங்களில் திருநல்லூர் என்று பெயர் வழங்கிய அருப்புக்கோட்டை என்றே குறிக்கப்பட்டுள்ளது1. இவ்வூர் பற்றிய இலக்கியங்களிலும்திருநல்லூர் என்னும் அருப்புக்கோட்டை என்றே குறிக்கப்பட்டுள்ளது2. இங்குள்ள அமுதலிங்கேஸ்வரர் கோயிலிலும், முத்து மாரியம்மன் கோயிலிலும் உள்ள கல்வெட்டுக்களில் திருநல்லூர் என்னும் அருப்புக்கோட்டை என்றே எழுதப்பட்டுள்ளது3. இக்கோயில்களில் நிகழும் திருவிழாக்களுக்குரிய அழைப்பிதழ்களில் திருநல்லூர் என்னும் அருப்புக்கோட்டை என்றே அச்சிட்டு உள்ளனர்4. இவ்வூர் முஸ்லிம் தெருவில் உள்ள அஞ்சல் பெட்டியில் நல்லூர் முஸ்லிம் தெரு என்றே எழுதப்பட்டுள்ளது. இராமநாதபுரம் அரசாங்கப் பதிவேட்டில், “இதன் இயற்பெயர் திருநல்லூர் என்று இருந்தது.” என்று குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பும் உள்ளது5. எனவே இதன் இயற்பெயர் ‘திருநல்லூர்’ என்று இருந்திருக்க வேண்டும் என்று அறியலாம்.
அருப்புக்கோட்டை என்னும் பெயர்க்காரணம்:
இவ்வூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் மல்லிகை அரும்புகள் மிகுதியாகக் கிடைத்த காரணத்தால் அருப்புக்கோட்டை என்று இவ்வூர் அழைக்கப்பட்டது; என்று இவ்வூர் மக்கள் கூறுகின்றனர். அய்யம்பெருமாள் நாடார் என்பவரால் இயற்றப்பட்ட; “அருப்புக்கோட்டை என்னும் திருநல்லூர், சான்றோர் குல திலகமும் சற்குணதயாளருமான (SIC) ஸ்ரீமான் சிவ. நாகலிங்க நாடார் அவர்கள் சிவபத விளக்கம்” என்னும் நூலில் அமைந்த,
“ எத்திசை பார்த்திடின் பிச்சி முல்லை வளம்
மிச்சமதாய்ப் பிரகாசிக்குமே”, என்னும் அடிகள் மேற்கூறிய கருத்தினை உறுதிப்படுத்துவனவாய் அமைகின்றன.
அரும்பு என்பது தமிழில் மணமுள்ள மலர் மொட்டுக்களைக் குறிக்கும். மலர்களின் கோட்டைப்பகுதியாக விளங்கியதால் அரும்புக்கோட்டை என்பது திரிந்து அருப்புக்கோட்டை ஆயிற்று என்று சொல்வர். இதற்கு வேறு ஒரு காரணமும் சொல்வர். இவ்விடத்திலுள்ள கோட்டையிலிருக்கும் மக்களின் வீரத்தால் பகைவர்களின் தலைகள் அறுவடை செய்யப்பட்டதால் இவ்வூர் அறுப்புக்கோட்டை எனப் பெயர் பெற்றது என்றும் சொல்வர். இவ் இரு காரணங்களும் இராமநாதபுரம் அரசாங்கப்பதிவேட்டில் விளக்கப்பட்டுள்ளன6. ஊர் மக்களும் இவ் இரு காரணங்களையும் கூறி இக் கருத்துக்களை அரண் செய்கின்றனர்.
மேலும் அறுவைத் தொழிலாகிய நெசவுத்தொழில் இங்குள்ள மக்களின் இன்றியமையாத தொழில் ஆகும். எனவே இவ் ஊர்க்கு அறுப்புக்கோட்டை என்று பெயர் வந்தது என்றும்; பின்னர் அருப்புக்கோட்டை எனத் திரிபடைந்தது என்றும் கூறுவர். இவ்வூர் அமுதலிங்கேஸ்வரர் கோயில் பற்றி எழுந்த கலம்பக நூலில் அறுப்புக்கோட்டை என்று குறிக்கப்பட்டுள்ளது7.
இவ்வூரை ஒட்டி வடுகர் கோட்டை, வெள்ளாளக் கோட்டை , பொம்மக்கோட்டை என்று முடியக் கூடிய பெயரை உடைய பகுதிகள் சில இருந்தன போன்று; சொக்கலிங்கபுரம், புளியம்பட்டி, வாழவந்தாள்புரம், நல்லூர், கரையாம் பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்த்து அருப்புக்கோட்டை என்று புதிய ஊர் உருவாகியது எனலாம்.
வீரப்பநாயக்கர் தம் காலத்தில் (1572-1598) இவ்வூரில் கோட்டை ஒன்று கட்டியுள்ளார் என்ற குறிப்பும் கிடைக்கிறது8. இவரது காலத்தில் இவ்வூருக்கு அருப்புக்கோட்டை என்னும் பெயர் கிடைத்து இருக்கலாம் என்று R. நாகசாமி அவர்களும், N.S. இராமசாமி அவர்களும் கருதுகின்றனர்9. மதுரை அரசு சீர் குலைந்த போது இக்கோட்டை தகர்க்கப்பட்டதாக அறிய முடிகிறது.
கோயில்கள்:
இவ்வூரில் பல கோயில்கள் உள்ளன. சொக்கநாதசாமி கோயிலைச் சுந்தரபாண்டியன் கட்டியதாகப் பேசப்படுகிறது. இக்கோயிலில் நிறையக் கல்வெட்டுக்கள் உள்ளன. வைகாசி, ஆனி மாதங்களில் இக் கோயிலில் திருவிழாக்கள் நடத்துகிறார்கள்.
காட்டு வாழவந்தம்மன் கோயில் என்று ஒரு அம்மன்கோயில், சொக்கநாதசாமிகோயில் அருகே உள்ளது . இக்கோயில்
கட்டப்பட்ட ஆண்டு தெரியவில்லை. இக்கோயிலில் பங்குனி மாதத்தில் திருவிழா நடைபெறும்.
நாடார் இனத்திற்கு சொந்தமாக அமுதலிங்கேஸ்வரர் கோயில், முத்து மாரியம்மன் கோயில், வால சுப்பிரமணியர் கோயில், சந்தி வீரசாமி கோயில், சித்தி விநாயகர் கோயில் ஆகியன உள்ளன.அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் வைகாசி மாதத்திலும், முத்து மாரியம்மன் கோயிலில் பங்குனி மாதத்திலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. சந்தி வீரசாமி கோயிலில் தை மாதத்தில் பொங்கல் விழா நடைபெறும்.
வெங்கடேசப் பெருமாள் கோயில் ஒன்றும் இங்குள்ளது . இக்கோயிலில் மார்கழி மாதத்தில் திருவிழா நடைபெறும். ஊருக்குத் தென்மேற்கே உள்ள குன்றின் மீது மலையரசன் கோயில் என்ற கோயில் உள்ளது. அமுதலிங்கேஸ்வரர் கோயிலுக்கருகில் கருப்பணசாமிக்குக் கோயில் ஒன்றும் உள்ளது. சந்திவீரசாமி, மலையரசன், கருப்பணசாமி, ஆகிய தெய்வங்களை நாடார் இனத்தவர் தங்கட்குரிய குலதெய்வமாக வழிபடுகின்றனர்.
முகம்மதியர்களுக்கு இரண்டு மசூதிகளும், கிறிஸ்தவர்களுக்கு ஒரு கிறிஸ்தவ ஆலயமும் இங்கு இருக்கின்றன.
மக்கள்:
இவ்வூரில் நாடார், தேவாங்கர், நாயக்கர் ஆகிய மூன்று இனமக்கள் நிறைந்திருக்கின்றனர். முகம்மதியர்களும், கிறிஸ்தவர்களும் சிறுபான்மையினராய் வாழ்கின்றனர்.
முன்பு இவ்வூரில் பல்வேறு இனத்தாருக்கும் இடையில் சண்டை சச்சரவுகள் நிறைந்து இருந்தன. 1914ல் இருந்தே இந்நிலை ஏற்பட்டு இருக்கிறது. 1914க்கு முன்னரே இங்கு காவலர் படை நிறுத்தப்பட்டுள்ளது. முதல் கலவரம் முகமதியருக்கும் கிருத்துவ நாடார்களுக்கும் இடையே ஏற்பட்டது. ஆனால் முக்கியமான கலவரம் நாடார்களுக்கும் தேவாங்கச் செட்டியார்களுக்கும் இடையே ஏற்பட்டதாகும். மதுரைச் சாலையில் ஒரு மசூதி அமைந்துள்ளது. எனவே அவ்வழியே பிறருடைய எந்த ஊர்வலமும் செல்லக் கூடாது என்று முகமதிர்கள் பிடிவாதமாக இருந்தனர். இதனால் முதல் கலவரம் ஏற்பட்டது. நாடார்களின் எந்த ஊர்வலமும் அவர்கள் வாழும் தெருக்களுக்குள் அன்றி பிற தெருக்களுக்குள் போகக் கூடாது என்றதால் ஏற்பட்டது.
(தொடரும் )
செல்வம் மிக்கோராய் வியாபாரம், கல்வித்துறை களில்முன்னேற்றம் கொண்டிருந்த நாடார்கள் திருவிழாக் காலங்களில் தாங்கள் பொதுச் சாலைகளைப் பயன்படுத்துவதைப் பிற இனத்தார் தடுக்கும் உரிமையை எதிர்த்தனர். 1928க்குப் பின் ஓர் முக்கிய திருப்பம் ஏற்பட்டது. கலவரமும் படுகொலைகளும் நிகழ்ந்தன. தங்கள் தெரு வழியாக நாடார்கள் தேர் இழுத்துச் செல்வதை முகமதியர்களும் எதிர்த்தனர். எனவே கொடிய கலகம் ஏற்பட்டது. காவலர்களுக்கும் இதனால் இவ்வூரில் தொடர்ந்து வேலை இருந்து வந்தது. கலவரம் திறமையாகக் கையாளப்பட்டு ஒடுக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பின்னர் சமூக அரசியல் வகைகளில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. தற்போது இந்த இனக்கலவரம் இன்றி ஊர் அமைதியாக உள்ளது. நாடார்கள் திருவிழாக்காலங்களில் சாமி புறப்பாட்டினையும் தேர் இழுப்பதையும் நிறுத்தி விட்டனர்.
தொழில்:
இவ்வூரில் நெசவுத்தொழிலே முக்கியமான தொழிலாகும். இவ்வூர் கைத்தறித் துணிகளுக்குப் பெயர் பெற்ற இடம் ஆகும். இங்கு உற்பத்தி செய்யப்படும் கைத்தறித் துணிகளின் பெரும்பகுதி மற்ற மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகின்றது. வேட்டி, துண்டு, புதுப்பட்டு, நூற் சேலைகள், படுக்கை விரிப்புகள், மற்ற துணி வகைகளும் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.
சாயச் சேலைகள், எண்ணெய் ஆலைகள், அரிசி ஆலைகள், வைக்கோல் தகடு செய்யும் ஆலைகள்(Straw board manufacturing company), பருத்தி ஆலைகள் முதலிய பலவும் இங்கு அமைந்துள்ளன.
அலுவலகங்கள்:
இவ்வூர் ஒரு நகராட்சி ஆகும். இந்தத் தாசிலுக்கும், பஞ்சாயத்து இணையத்திற்கும் இதுவே தலைமை இடமாகும். தாலுகா அலுவலகம், துணைப் பதிவாளர் அலுவலகம், கோட்ட ஆட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், துணைக் கஜானா, தந்தி, தொலைபேசி வசதி உள்ள தபால் நிலையம், காவல் நிலையம், துணை வணிக வரி அலுவலகம், மாஜிஸ்திரேட் கோர்ட், துணைப் பள்ளி ஆய்வாளர் அலுவலகம் முதலியன இங்கு அமைந்துள்ளன.
கல்விச்சாலைகள்:
சைவபானு க்ஷத்திரியர் கல்லூரி, தேவாங்கர் கலைக்கல்லூரி என்னும் இரு கல்லூரிகள் இவ்வூரில் நிறுவப்பட்டுள்ளன. இவ்வூரில் ஆறு மேல்நிலைப்பள்ளிகள் இருக்கின்றன. அவை நகராட்சி மேல்நிலைப்பள்ளி, தேவாங்கர் மேல்நிலைப்பள்ளி , சாலியர் மகாஜன மேல்நிலைப்பள்ளி, சைவபானு ஷத்திரியர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சைவபானு ஷத்திரியர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சி. எஸ். ஐ. மேல்நிலைப்பள்ளி என்பனவாம்.
மக்கள் வாழ்விற்கு இன்றியமையாத் தேவையான மருத்துவ மனைகள், சந்தை, பேருந்து நிலையம் போன்றனவும் சிறப்பாக அமைந்துள்ளன.
முத்துச்சாமி கவிராஜ சரபம் அவர்கள் இயற்றிய “அருப்புக்கோட்டை என்னும் திருநல்லூர் அனவரத செல்வ விநாயகர் விளையாடல்“ என்னும் நூலில் அமைந்த “அமுதலிங்கேஸ்வரர் அமுதவல்லி அம்மன் - வசந்த ருது என்னும் பகுதி அருப்புக்கோட்டையின் சிறப்பியல்புகளை எடுத்தியம்புவதாக அமைகிறது10. இப்பகுதி நொண்டிச்சிந்தில் அமைந்துள்ளது.
குறிப்புகள்
1. பின்னிணைப்பு -1
2. திருநல்லூர் என்னும் அருப்புக்கோட்டை மாநகர் ஸ்ரீஅமுதவல்லி அம்மன் பதிகம்
3. அ. அருப்புக்கோட்டை என்னும் திருநல்லூரில் வசிக்கும் க்ஷத்திரியர்களாலியற்றிய இச்சிவாலயத்தில் ……
ஆ.திருநல்லூர் என்னும் அருப்புக்கோட்டையில் எழுந்தருளியிருக்கும் நாடார்கள் பொது அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் திருப்பணி .
4. பின்னிணைப்பு - 2
5. This place was originally said to be known as Thirunalloor. Gazetteer of India Tamil Nadu State Ramanathapuram District. 1972 P . 864.
6. ibid.
7. அறுப்புக்கோட்டையென விளங்கும் நல்லூர்க் கலம்பகம்.
8. Ramanathapuram An Archeological Guide, R.Nagasamy and N.S.Ramasamy, P . 71.
9. ibid.
10. ”தாமரைக் கிணறடுத்து -சாந்தித்
தனிக்கதிர் குளித்த வகை கிளியே
மாமண வாளனுடன் - வாழ
வந்தம்மன் கோயிலில் வாசற்படி
சிந்தை கசிந்து வீழ்ந்து - வணங்கி
தேரடி போற்றித் திருநல்லூர்
காரணச் சந்திவீர - சாமி
கருப்பண சாமியருட் போற்றி
திருப் பணித் தீர்த்தக்கரை - இருந்து
தெள்ளுமுகத் தரும் வெள்ளைமடம்
வள்ளல் முத்துக்குமார - சாமி
வங்கிசத்தார் தரு - மந்தழைக்க
மங்களம் பாடிவந்து - சான்றோர்
மகிமைக் கடைவளர் புகழ்பேசி
பகவதி சாமுண்டி - தேவாங்கர்
பரவிய சவுடேஸ்வரி துலங்க
அரண்மனை மலையரசன் கோயில்
அலங்காரம் பெற நலம் பேசிச்
செங்கோட்டை வெள்ளைக்கோட்டை - விதைக்காம்
தேட்டு முதல் வடுகக்கோட்டைக் கொடி
நீட்டு பொம்மு கோட்டை யெல்லாம் - வளைக்கிற
நிதி அருப்புக்கோட்டை புளியம்பட்டி
துதிமிகு சொக்கலிங்க - புரமே
சோர்வடை யாமல் சீர்பெருக
ஊர்வலம் வரும் வீரி - மாரியம்மன்
ஒளிர் சிலம் பணி பதங்களில் இறைஞ்சி
மார்க்கண்டன் மகிழ் அமிர்த - லிங்கேசா
வாமத்தில் அமிர்தவல்லி சந்நிதி
பார்க்க வந்திடு நாளில் - இங்கே
பார்க்க வந்தொலிக்கும் பைங்கிளியே “
(தொடரும் )
3. கோயில்களின் தோற்றமும் வளர்ச்சியும்
முன்னுரை
அமுதலிங்கேஸ்வரர் கோயில்
முத்துமாரியம்மன் கோயில்
வாலசுப்ரமணிய சாமி கோயில்
சந்தி வீரசாமி கோயில்
சித்தி விநாயகர் கோயில்
முடிவுரை
கோயில்களின் தோற்றமும் வளர்ச்சியும்
முன்னுரை
இம்மையிலும் மறுமையிலும் இன்பம் பெறுவதற்காகப் பழைய கோயில்களைப் புதுப்பிக்கும் திருப்பணியையும், புதிய கோயில்களை உருவாக்கும் திருப்பணியையும் மக்கள் மேற்கொள்கின்றனர். மக்களைச் சமுதாய வாழ்விலும், கலை ஆர்வத்திலும்; பொருளாதார ஏற்றத்தாழ்வின்றி ஒன்றுபடுத்தும் பெரிய நிலையங்களாகக் கோயில்கள் உருவாகி இருக்கின்றன. ஒவ்வொரு ஊரிலும் பல கோயில்கள் இவை போன்ற காரணங்களால் தோன்றி இருக்கின்றன. அருப்புக்கோட்டையிலும் பெரிய கோயில்களும், சிறிய கோயில்களும் பழங்காலந் தொட்டுத் தோன்றி இருக்கின்றன. சிறு கோயில்கள் ஆன்றோர்களின் திருப்பணியால் வளர்ச்சி பெற்றுச் சிறக்கின்றன. அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறைக் கோயில்களின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி ஆய்வது இவ் இயலின் நோக்கமாகும்.
“கடந்த 150 வருடங்களில், தென்னிந்தியாவிலுள்ள சமூகங்களைப் பொறுத்தமட்டில், நாடார் சமூகம் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் அடைந்துள்ளது. 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உயர்ந்த சாதி இந்துக்களால், தாழ்த்தப்பட்டவர்கள் என்று கருதப்பட்ட நாடார்கள், பனைத்தொழில் செய்து வாழ்ந்து வந்ததோடு, ஏனைய சமூகத்தினர் செய்த அநீதிகளையும் அனுபவித்து வந்தனர். மேலும் நாடார்கள் தமிழகத்தில் பொருளாதார அடிப்படையிலும் நலிவுற்றுக் காணப்பட்டனர். ஆனால் 19ம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட சமூக பொருளாதார மாற்றங்களில் நாடார்கள் தங்களையும் ஈடுபடுத்திக் கொண்டனர். அதன் பலனாகத் தென்னிந்தியாவில் அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றில் மேம்பாடுற்ற சமூகங்களில் தலைசிறந்ததாக நாடார் சமூகம் மாறியது. பலர் தலைசிறந்த வியாபாரிகளாகவும், மருத்துவர்களாகவும், கல்வியாளர்களாகவும் திகழ்ந்து வருகின்றனர்.” என்று நாடார் சமூகத்தைப் பற்றி ஆராய்ந்த எல்.ஹார்டுகிரேன் அவர்கள் தமது முன்னுரையில் கூறுகின்றார்.1
மேலே கூறியவாறு 19ம் நூற்றாண்டின் இறுதியில் உயர்வடைந்த நாடார் இனத்தினர் ஆலயப் பிரவேச உரிமைகளைப் பெற அரும்பாடுபட்டனர். ஆலயப் பிரவேச உரிமைகளைப் பெறுவதற்கு பெரும் போராட்டமே நிகழ்த்த வேண்டி இருந்தது. ஒரு பக்கம் போராட்டம் நடத்தினர். மற்றொரு பக்கம் கோயில்களும் கட்டினர். இக்காலகட்டத்தில் தான் அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோயில் தோன்றியது. ”பெரும்பாலான நாடார்கள் அனைவரும் சைவ மதத்தைத் தழுவி இருந்தனர். ஆனால் ஒரு கூட்டத்தார் வைணவ மதத்தையும் தழுவி இருந்தனர். தெய்வங்களைப் பொருத்த வரையில் சிவனின் இரண்டாவது மகனாகிய சுப்ரமணியன் அல்லது முருகன்; நாடார் சமூகத்தினர் மத்தியில் சிறப்புத் தெய்வமாகக் காணப்பட்டார்.” என்று எல்.ஹார்ட்கிரேன் கூறுகிறார்.2 “நாடார்கள் பொதுவாக இந்து மதத்தைச் சார்ந்தவர்கள்; சிவபக்தர்கள். இவர்களது குலதெய்வம் காளியம்மன் என்று கருதப்படுகிறது.“ என்றும், “நாடார்களுக்குச் சிறந்த முருகபக்தி உண்டு“ என்றும் குரு.தேமொழி கூறுகிறார்.3
இக்கூற்றுகளுக்கேற்ப அருப்புக்கோட்டையில் நாடார்களுக்கு உரிமையுடைய சிவன்கோயில், முத்துமாரியம்மன் கோயில், வாலசுப்ரமணியர் கோயில் ஆகியன அமைந்துள்ளன. சிவன் கோயில் தோற்றக் காலத்திலிருந்தே வைணவக் கடவுளான ஆதிமூலப் பெருமாளும் அக்கோயிலில் இடம் கொண்டுள்ளார்.
அமுதலிங்கேஸ்வரர் கோயிலின் தோற்றத்தை முதலில் காண்போம்.
அமுதலிங்கேஸ்வரர் கோயில்:
அருப்புக்கோட்டை முதலாளி மு.மு.முத்துச்சாமி நாடார் அவர்களின் முயற்சியாலும், உறவின்முறையின் உறுதுணையாலும் அருப்புக்கோட்டையில் சிவன் கோயிலொன்று தோற்றுவிக்கப்பட்டது.1887ம் ஆண்டு தச்சுப்பணி செய்யத் தொடங்கப் பெற்று 1907ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப் பெற்றது. தச்சுப்பணி செய்த பின்னர் பல இடையூறுகளால் கோயில்வேலை நிறுத்தப்பட்டது என்று அறிய முடிகிறது. இராமநாதபுர ஜமீனுக்குச் சொந்தமான நிலத்தில், அவர்களது உத்தரவு பெறாமல் கோயில் கட்ட முற்பட்டதால் தடை செய்யப்பட்டது என்றும், பிற இனத்தார் இவ் இனத்தார் மீது கொண்ட பொறாமையால் ஜமீன் மூலம் தடை செய்தனர் என்றும் தகவலாளர்கள் கூறுகின்றனர். இத்தடை உத்தரவைப் பின்னர் சமஸ்தானாதிபதியைச் சந்தித்து நீக்கக் கோரி வெற்றி கண்டனர். பின்னர் கோயில் வேலையைத் தொடர்ந்தனர். இவ் வரலாற்றை நாடார் சமூக வரலாறு என்னும் நூலாசிரியர் குரு.தேமொழி அவர்கள் விரிவாக்க கூறியுள்ளார்.
“நாடார் உறவின்முறையார் அருப்புக்கோட்டையில் அமுதலிங்கேஸ்வரர் ஆலயம் ஒன்றைக் கட்ட எண்ணி, கி.பி.1887ம் ஆண்டு வேலையைத் தொடங்கினர். ஆனால் இராமநாதபுரம் சமஸ்தானாதிபதி 1893ம் ஆண்டு பல காரணங்கள் காட்டி, மானாமதுரை டி.மு.கோர்ட்டில் ‘பிராது’ செய்ய கோயில் கட்டுவதை நிறுத்தும்படி உத்தரவு கொடுக்கப்பட்டது. மதுரை மாவட்ட நீதிமன்றத்திலும் மன்ற உத்தரவே நிலைநிறுத்தப் பட்டது. ‘ஹைகோர்ட்டில்’ நாடார்கள் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வேளையில் அரல்வாயல் மகாவித்துவான் வேங்கட சுப்புப் பிள்ளையவர்கள் சிலரின் திட்டப்படி இராமநாதபுரம் அதிபர்கள் நடத்திய மகாநவமித் திருவிழாவில் அவர்கள் முன்னோருக்குப் புகழ்மாலை பாடினாராம். மனம் மகிழ்ந்த அதிபர்; புலவர் கேட்டதைக் கொடுப்பதாகக் கூற, அவர் தமது எண்ணத்தை,
‘பாட்டினைப் பாடும் பாவலர்க்கிலவப் பாட்டினைக்
கெடுத்துளம் (SIC) பரிவாய்
நாட்டினைக் கொடுத்தும் நகரினைக் கொடுத்தான்
நலியவர் வாழ்ந்திடக் குலவு
தேட்டினைக் கொடுத்தும் நின்புகழ் பேசும் மிக்க
சான்றோர்கள் வாழ் அருப்புக்
கோட்டையின் ஓங்கு சிவாலயம் வளரக்
கொற்றவை கிருபை செய்குவையே‘ என்ற பாட்டால் வெளியிட, அதிபரும் இசைந்து 1896ம் ஆண்டில் விடுதலைப் பத்திரம் பதிந்து கொடுத்த”தாகக் கூறுகிறார்கள்4. பல தகவலாளர்கள் இக்கருத்தை அப்படியே கூறுகின்றனர். மேலே குறிப்பிட்ட அதிபர் பாஸ்கரசேதுபதி என்று பெரும்பான்மையோர் கூறுகின்றனர். சிலர் இக்கருத்தை சற்று மாற்றியும் கூறுகின்றனர்.
“இராமநாதபுரம் மாவட்டத் தோற்றக் காலத்தில் இக்கோயிலில் தச்சுப்பணி நடந்து கொண்டிருக்கிறது. அப்பொழுது கோயில் சமஸ்தான நிலத்தில் அது நடைபெற்று இருந்திருக்கிறது. சமஸ்தான தாசில்தார் இச்செய்தியைச் சமஸ்தானத்திற்கு அறிவிப்பு செய்ய கோயில் வேலையைத் தொடரக் கூடாது என்று தடை விதித்தனர். ஊர்ப் பெரியவர்கள் ஒன்றுகூடி ஆலோசனை செய்ய சமஸ்தான திவான் வேண்டியவர் மூலம் வழி சொல்லிக் கொடுத்திருக்கிறார். ‘சென்னையில் இருந்து இராமநாதபுரம் வரும் ரயிலில் மதுரை சந்திப்பில் பாஸ்கர சேதுபதியை எதிர்கொண்டு அழையுங்கள். அப்பொழுது பேட்டிக்கு அவர் ஏற்பாடு செய்வார்.’ என்று சொல்லிக் கொடுத்து இருக்கிறார். அதுபோல இவர்கள் செய்து இராமநாதபுரத்தில் உத்தரவு பெற்றனர். பின் கோயில் வேலை தொடர்ந்தது.” என்று திரு.சூ.ஆ.மு.முத்து முருகன் அவர்கள் கூறினார்.
முத்துமுருகன் அவர்கள் தந்தையார் திரு.சூ.ஆ.முத்துநாடார் அவர்களும் தமது நாட்குறிப்பேட்டில் கோயில் கட்டுவதற்கு இருந்த இடையூறுகளையும், அவற்றை எல்லாம் நீக்கிக் கும்பாபிஷேகம் நடந்த முறைகளையும் தெளிவாகக் குறித்துள்ளார்.5
இவ் இடையூறுகளை எல்லாம் நிவர்த்தி செய்து மிகச் சிறப்பான முறையில் கும்பாபிஷேகம் 1907ம் ஆண்டு நிகழ்த்தி இருக்கின்றனர். கும்பாபிஷேகம் நடந்தபொழுது கோயில் காரியதரிசிகளாக அம்பலம் பி.பொன்னம்பல நாடார், அம்பலம் இராமலிங்க நாடார், மு.மு.முத்துச்சாமி
(தொடரும்)
1887ம் ஆண்டு தொடங்கப்பெற்று இக்கோயிலில் இன்றும் சிற்பிகள் செதுக்கும் ஒலி கேட்டுக் கொண்டே இருக்கிறது. அமுதலிங்கேஸ்வரர் சந்நிதி, அமுதவல்லியம்மன் சந்நிதி ஆகிய இரு சந்நிதிகளுடன் கும்பாபிஷேகம் நடத்தப்பெற்று இருக்கிறது. வளர்ச்சிக்கு முடிவு கிடையாது என்னும் கூற்றிற்கேற்ப நாள்தோறும் வளர்ந்து கொண்டே வருகிறது இக்கோயில். கோயில் சுமார் 54000 சதுரஅடி பரப்பில் அமைந்து இருப்பதால் பற்பல ஆன்றோர்களால் பற்பல சந்நிதிகள் உருவாகியுள்ளன. உட்பிரகாரம், வெளிப்பிரகாரம் எனக் கோயில் அமைப்பு விரிவுற்று வளர்ந்து கொண்டே வருகிறது. கோயில் சந்நிதிகளைச் சுற்றியும் தளவரிசைக் கற்கள் பதிக்கப் பெற்றுள்ளன. இக்கோயிலின் வளர்ச்சிப் படிநிலைகளைக் கால வரிசைப்படி காண்போம்.
1907ம் ஆண்டு :அமுதலிங்கேஸ்வரர் சந்நிதி& அமுதவல்லியம்மன் சந்நிதி
அமுதலிங்கேஸ்வரர் சந்நிதி, அமுதவள்ளியம்மன் சந்நிதி ஆகிய இரு சந்நிதிகள் இருந்தன. பாலாலயத்தில் இருந்த ஆதிமூலப்பெருமாளைத் தம் தேவியர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அமுதவல்லியம்மன் சந்நிதியில் எழுந்தருளச் செய்திருக்கின்றனர். அமுதலிங்கேஸ்வரர் சந்நிதியில் நடராஜர் சந்நிதியை அமைத்திருக்கின்றனர். இச்சந்நிதியின் பின்புறம் தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோரையும் எழுந்தருளச் செய்திருக்கின்றனர். கோயிலின் கிழக்கே ஒரு பெரிய தெப்பமும், வடகிழக்கில் ஒரு கிணறும், தெப்பமும் இருந்ததாக அறிய முடிகிறது. கிழக்கில் இரு பெரிய இரும்பு வாயில்களும், தெற்கில் ஒரு சிறு வாயிலும் வடக்கில் இரு சிறிய வாயில்களும் அமைக்கப்பட்டன. வில்வமரங்கள் அடர்த்தியாக மண்டியிருந்தமையால் வில்வவன க்ஷேத்திரம் என்றே இப்பகுதி அழைக்கப் பட்டு இருக்கிறது. வாதாம் மரங்கள் நிறைந்திருந்தன. கோயிலுக்கு வருபவர்கள் இயற்கைச் சூழலில் இறைவனை வழிபட்டு மகிழ்ந்தனர்.
1909ம் ஆண்டு: சலவைக்கல் பிள்ளையார்
மகா மண்டபத்தில் உற்சவ மூர்த்திகள் வைத்திருக்கும் இடத்தில் சலவைக்கல் வெள்ளைப் பிள்ளையார் ஒன்று உண்டு. இது 1909ம் ஆண்டு, இவ்வூருக்கு அருகிலிருக்கும் திருச்சுளி என்னும் ஊரைச் சேர்ந்த திரு.அல்லிமுத்து நாடார் என்பவரால் அன்பளிப்பாக வழங்கப்பட்டதாகும். இவர் பர்மா நாட்டில் இரங்கூன் நகரில் இருந்தபொழுது மாந்தளை என்னும் ஊரில் இப்பிள்ளையாரைச் செய்து தரச்சொல்லி வாங்கிக் கொண்டு வந்துள்ளார். இப்பிள்ளையாரின் சிறப்பைக் கண்டு அமுதலிங்கேஸ்வரர் கோயிலினை உருவாக்கிய திரு.மு.முத்துச்சாமி நாடார் அவர்கள் இதனை விலை கொடுத்து வாங்கி அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் வைக்க விரும்பினார். அவரது விருப்பத்தை உணர்ந்த திரு.அல்லிமுத்து நாடார் அவர்கள் விலைக்குத் தர மனமின்றி கோயிலுக்கே அன்பளிப்பாகத் தந்து விட்டார். அப்பொழுது திரு.அல்லிமுத்து நாடார்க்குச் சிறப்புச் செய்யும் வண்ணம் அவரையும், பிள்ளையாரையும் சாரட்டு வண்டியில் ஏற்றி ஊருக்குள் ஊர்வலமாக வரச்செய்து விழாவாகக் கொண்டாடினர் என்று அறிய முடிகின்றது. திரு.அல்லிமுத்து நாடாரின் மகன் திரு.அ.இரத்தின சாமி நாடார் இப்பிள்ளையாருக்குத் தனிச் சந்நிதி அமைக்க ஏற்பாடு செய்து கொண்டு இருக்கிறார்.
1911ம் ஆண்டு: அனவரத செல்வ விநாயகர்
அமுதலிங்கேஸ்வரர் சந்நிதியில் உட்பிரகாரத்தில் மேற்குப் புறத்தில் கன்னி மூலையில் அனவரத செல்வ விநாயகர் சந்நிதி அமைக்கப்பட்டது. இவ் விநாயகரை விருதுநகர் அருகிலிருந்து கொண்டு வரும் பொழுது வள்ளிக்குளம் என்னும் இடத்தில் வண்டியின் அச்சு முறிந்ததாகவும், பூசை செய்து எடுத்து வந்ததாகவும் செவிவழிச் செய்தியாகக் கூறப்படுகிறது. அனவரத செல்வ விநாயகர் பதிகத்தில் ,
“தொடர்ந்து நல்லூர் வந்திட விரைந்த போழ்து
நடந்த கால்கள் நொந்து களைப்புற்று நீ
கிடந்தாய் வள்ளிக் குளமாம் ………” என வரும் அடிகளும் இக்கருத்தை வலியுறுத்துகின்றன.
இக்கருத்து உண்மை என நம்பும் வண்ணம் விநாயகரின் தோற்றம் பெரிதாக அமைந்திருக்கின்றது. விநாயகர் வடிவத்தின் பாரம் தாங்காமல் அச்சு முறிவதற்கு வாய்ப்பு உண்டு. விநாயகர் வடிவத்தில் பெரிதாகக் கண்ணைக் கவரும் தோற்றத்தில் காட்சி தருகிறார்.
1912ம் ஆண்டு: நவக்கிரக சந்நிதி, வாழவந்தம்மன் சந்நிதி
இவ் ஆண்டில் இருசந்நிதிகள் உருவாக்கப் பெற்றுள்ளன. அவை நவக்கிரக சந்நிதியும், வாழவந்தம்மன் சந்நிதியும் ஆகும். அமுதலிங்கேஸ்வரர் சந்நிதியில் நுழைவாயிலில் வலது பக்கம் நவக்கிரக சந்நிதி அமைக்கப் பெற்று இருக்கிறது. இச்சந்நிதி அழகிய மரத் தூண்களுடன் சிறு மண்டபமாகக் காட்சி அளிக்கிறது. இதன் மேற்கூரையும் மரத்தால் ஆகியுள்ளது. நல்ல சித்திர வேலைப்பாடு இம்மண்டபத்தில் அமைந்துள்ளது.
கோயிலின் வெளிப்பிரகாரத்தில் அமைந்திருப்பது வாழவந்தம்மன் சந்நிதியாகும். கோயிலின் வடக்கு வாயிலை நோக்கி இச்சந்நிதி அமைந்து இருக்கிறது. இப்பகுதி பழைமைத் தோற்றத்துடன் உள்ளது. இக்கோயில் வளாகத்தில் இவ் அம்மனே முதன்முதலில் இருந்திருக்க வேண்டும். அமுதலிங்கேஸ்வரர் கோயில் கட்டிய பின்னர் இக்கோயிலையும் மராமத்து செய்து அதனுடன் இணைத்திருப்பர் என்று எண்ண இடமுண்டு.
1915ம் ஆண்டு: முத்துக்குமாரசாமி சந்நிதி
இவ் ஆண்டு முத்துக்குமாரசாமி சந்நிதி உருவாகி உள்ளது. அமுதலிங்கேஸ்வரர் சந்நிதியின் உட்பிரகாரத்தில் மேற்குப் புறத்தில் வாயு மூலையில் இச்சந்நிதி அமைக்கப் பட்டிருக்கிறது. முருகன் வள்ளி தெய்வானையுடன் விளங்கும் தோற்றத்தில் காட்சி தருகிறார்.
1920ம் ஆண்டு: உட்பிரகார மண்டபம்
இவ் ஆண்டில் அமுதலிங்கேஸ்வரர் சந்நிதியைச் சுற்றியுள்ள உட்பிரகாரத்தில் மண்டபம் கட்டப்பட்டு இருக்கிறது.
1928ம் ஆண்டு: வரதராஜப் பெருமாள் சந்நிதி
சிவன் கோயிலில் பெருமாள் சந்நிதியையும் இங்கு காண முடிகிறது. நாடார் சமூகத்தாரின் சமயப் பொதுநோக்கை எடுத்துக் காட்டுவதாக வரதராஜப் பெருமாள் சந்நிதி அமைகிறது. அம்மன் சன்னிதியை அடுத்து கோயிலின் வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ளது. அம்மன் சந்நிதியில் இருந்த ஆதிமூலப் பெருமாளையும், தேவியர் இருவரையும் மணி மண்டபத்தில் எழுந்தருளச் செய்து, வரதராஜப் பெருமாளைத் தம் தேவியருடன் கருவறையில் எழுந்தருளச் செய்திருக்கின்றனர்.
1974ம் ஆண்டு: அமுதலிங்கேஸ்வரர் சந்நிதியில் தளம்
1828ம் ஆண்டிற்குப் பின் கோயில் வளர்ச்சியடையாது இருந்து இருக்கிறது. மீண்டும் 1974ம் ஆண்டு முதல் வளர்ச்சி பெறத்தொடங்கியது. அமுதலிங்கேஸ்வரர் சந்நிதியைச் சுற்றியுள்ள உட்பிரகாரத்தில் தள வரிசைக் கற்கள் பதிக்கப்பெற்று செம்மைப்படுத்தப் பட்டது. கோயிலைச் சுற்றி இருந்த மரங்கள், செடிகொடிகள் அழிக்கப்பட்டன. கோயிலின் தலவிருட்சம் வில்வமரம். அதனால் ஓரிரு வில்வமரங்களே இன்று காணப்படுகின்றன. அவையும் வடக்கு வாயிலை ஒட்டி உள்ளன.
1975ம் ஆண்டு: அமுதவல்லி அம்மன் சந்நிதியில் தளம், கலாமண்டபம்
இவ் ஆண்டில் அமுதவல்லி அம்மன் சந்நிதியைச் சுற்றியுள்ள உட்பிரகாரத்தில் தள வரிசைக் கற்கள் பதிக்கப் பட்டிருக்கின்றன. தளங்களும் கற்களால் அமைக்கப்பட்டு விட்டதால் கோயிலைத் தூய்மை செய்வது எளிதாக இருக்கிறது. கோயில் எப்பொழுதும் தூய்மையாக விளங்குவதால் கோயிலுக்குள் சென்ற உடனேயே இறைவனை வழிபடக் கூடிய மனஉணர்வும் நம் உள்ளத்தில் தோன்றுகிறது.
விழா நிகழ்ச்சிகளைச் சிறப்புற நடத்தும் வண்ணம் ‘கலா மண்டபம்’ என்னும் பெயரில் ஓர் அரங்கு தோற்றுவிக்கப் பட்ட ஆண்டும் இதுவே. கோயிலில் கிழக்குப்புற வாயிலின் வலது பக்கத்தில் (முன்பு வாதாம் மரங்களும் கிணறும் இருந்த இடத்தில்) இம்மண்டபத்தை அமைத்து இருக்கின்றனர். கோயிலில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகளை மக்கள் நெரிசல் இன்றிக் கண்டு களிப்பதற்கும், கேட்டுக் களிப்பதற்கும் இம்மண்டபம் ஏதுவாக அமைந்து இருக்கிறது.
இம்மண்டபத்தை அமைத்துக் கொடுத்தவர்கள் எவ்விடத்தும் தங்கள் பெயரையோ, உருவச் சிலையையோ வைத்துத் தங்களை விளம்பரப் படுத்திக் கொள்ளவில்லை. இது முற்றிலும் புதுமையாக அமைந்து இறை அருளால் இறைவனுக்குச் செய்யும் தொண்டில் நமக்குப் பங்கில்லை என்பதை உணர்ந்தவர்களாகச் சிலர் இவ்வுலகில் வாழ்கின்றனர் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.
1976ம் ஆண்டு : நாயன்மார்கள், காசி விஸ்வநாதர்- விசாலாட்சி, வல்லப கணபதி, கற்பகவல்லி, பாலசண்முகர்
இவ் ஆண்டில் அமுதலிங்கேஸ்வரர் சந்நிதியின் உட்பிரகாரத்தில் உள்ள சுற்று மண்டபத்தில் 64 நாயன்மார்களையும், 9 தொகை அடியார்களையும், காசிவிஸ்வநாதர் - விசாலாட்சி அம்மையாரையும் எழுந்தருளச் செய்திருக்கின்றனர்.
மேலும் இவ் ஆண்டில் அமுதவல்லி அம்மன் சந்நிதியில் உட்பிரகாரத்தில் மேற்குப் பக்கத்திலுள்ள திருமதிலில் மாடங்கள் அமைத்து, வல்லப கணபதி, கற்பகவல்லி அம்மன், பாலசண்முகர் ஆகிய மூர்த்திகளைத் தனித்தனியே எழுந்தருளச் செய்திருக்கின்றனர்.
1978ம் ஆண்டு: ஆஞ்சநேயர் சந்நிதி
இவ் ஆண்டு வெளிப் பிரகாரத்தில் ஆஞ்சநேயர் சந்நிதியைத் தோற்றுவித்து உள்ளனர். இச்சந்நிதி வடக்கு நோக்கி அமைந்துள்ளது. இச்சந்நிதி தான் மிகச் சமீப காலத்தில் தோற்றுவிக்கப் பட்டதாக உள்ளது. இதன் பின்னர் வேறு சந்நிதிகள் ஏற்படுத்தப்படவில்லை.
(தொடரும்)
நாடார், க.பெ.சுப்பைய நாடார், மதுரை., சிவ.பெ.வ.வகை பழ. விநாயக மூர்த்தி நாடார், தூத்துக்குடி., மா.வே.மாயநாடார் ஆகிய அறுவர் இருந்திருக்கின்றனர். இதனைக் கும்பாபிஷேக அழைப்பிதழ் தெரிவிக்கிறது.61887ம் ஆண்டு தொடங்கப்பெற்று இக்கோயிலில் இன்றும் சிற்பிகள் செதுக்கும் ஒலி கேட்டுக் கொண்டே இருக்கிறது. அமுதலிங்கேஸ்வரர் சந்நிதி, அமுதவல்லியம்மன் சந்நிதி ஆகிய இரு சந்நிதிகளுடன் கும்பாபிஷேகம் நடத்தப்பெற்று இருக்கிறது. வளர்ச்சிக்கு முடிவு கிடையாது என்னும் கூற்றிற்கேற்ப நாள்தோறும் வளர்ந்து கொண்டே வருகிறது இக்கோயில். கோயில் சுமார் 54000 சதுரஅடி பரப்பில் அமைந்து இருப்பதால் பற்பல ஆன்றோர்களால் பற்பல சந்நிதிகள் உருவாகியுள்ளன. உட்பிரகாரம், வெளிப்பிரகாரம் எனக் கோயில் அமைப்பு விரிவுற்று வளர்ந்து கொண்டே வருகிறது. கோயில் சந்நிதிகளைச் சுற்றியும் தளவரிசைக் கற்கள் பதிக்கப் பெற்றுள்ளன. இக்கோயிலின் வளர்ச்சிப் படிநிலைகளைக் கால வரிசைப்படி காண்போம்.
1907ம் ஆண்டு :அமுதலிங்கேஸ்வரர் சந்நிதி& அமுதவல்லியம்மன் சந்நிதி
அமுதலிங்கேஸ்வரர் சந்நிதி, அமுதவள்ளியம்மன் சந்நிதி ஆகிய இரு சந்நிதிகள் இருந்தன. பாலாலயத்தில் இருந்த ஆதிமூலப்பெருமாளைத் தம் தேவியர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அமுதவல்லியம்மன் சந்நிதியில் எழுந்தருளச் செய்திருக்கின்றனர். அமுதலிங்கேஸ்வரர் சந்நிதியில் நடராஜர் சந்நிதியை அமைத்திருக்கின்றனர். இச்சந்நிதியின் பின்புறம் தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோரையும் எழுந்தருளச் செய்திருக்கின்றனர். கோயிலின் கிழக்கே ஒரு பெரிய தெப்பமும், வடகிழக்கில் ஒரு கிணறும், தெப்பமும் இருந்ததாக அறிய முடிகிறது. கிழக்கில் இரு பெரிய இரும்பு வாயில்களும், தெற்கில் ஒரு சிறு வாயிலும் வடக்கில் இரு சிறிய வாயில்களும் அமைக்கப்பட்டன. வில்வமரங்கள் அடர்த்தியாக மண்டியிருந்தமையால் வில்வவன க்ஷேத்திரம் என்றே இப்பகுதி அழைக்கப் பட்டு இருக்கிறது. வாதாம் மரங்கள் நிறைந்திருந்தன. கோயிலுக்கு வருபவர்கள் இயற்கைச் சூழலில் இறைவனை வழிபட்டு மகிழ்ந்தனர்.
1909ம் ஆண்டு: சலவைக்கல் பிள்ளையார்
மகா மண்டபத்தில் உற்சவ மூர்த்திகள் வைத்திருக்கும் இடத்தில் சலவைக்கல் வெள்ளைப் பிள்ளையார் ஒன்று உண்டு. இது 1909ம் ஆண்டு, இவ்வூருக்கு அருகிலிருக்கும் திருச்சுளி என்னும் ஊரைச் சேர்ந்த திரு.அல்லிமுத்து நாடார் என்பவரால் அன்பளிப்பாக வழங்கப்பட்டதாகும். இவர் பர்மா நாட்டில் இரங்கூன் நகரில் இருந்தபொழுது மாந்தளை என்னும் ஊரில் இப்பிள்ளையாரைச் செய்து தரச்சொல்லி வாங்கிக் கொண்டு வந்துள்ளார். இப்பிள்ளையாரின் சிறப்பைக் கண்டு அமுதலிங்கேஸ்வரர் கோயிலினை உருவாக்கிய திரு.மு.முத்துச்சாமி நாடார் அவர்கள் இதனை விலை கொடுத்து வாங்கி அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் வைக்க விரும்பினார். அவரது விருப்பத்தை உணர்ந்த திரு.அல்லிமுத்து நாடார் அவர்கள் விலைக்குத் தர மனமின்றி கோயிலுக்கே அன்பளிப்பாகத் தந்து விட்டார். அப்பொழுது திரு.அல்லிமுத்து நாடார்க்குச் சிறப்புச் செய்யும் வண்ணம் அவரையும், பிள்ளையாரையும் சாரட்டு வண்டியில் ஏற்றி ஊருக்குள் ஊர்வலமாக வரச்செய்து விழாவாகக் கொண்டாடினர் என்று அறிய முடிகின்றது. திரு.அல்லிமுத்து நாடாரின் மகன் திரு.அ.இரத்தின சாமி நாடார் இப்பிள்ளையாருக்குத் தனிச் சந்நிதி அமைக்க ஏற்பாடு செய்து கொண்டு இருக்கிறார்.
1911ம் ஆண்டு: அனவரத செல்வ விநாயகர்
அமுதலிங்கேஸ்வரர் சந்நிதியில் உட்பிரகாரத்தில் மேற்குப் புறத்தில் கன்னி மூலையில் அனவரத செல்வ விநாயகர் சந்நிதி அமைக்கப்பட்டது. இவ் விநாயகரை விருதுநகர் அருகிலிருந்து கொண்டு வரும் பொழுது வள்ளிக்குளம் என்னும் இடத்தில் வண்டியின் அச்சு முறிந்ததாகவும், பூசை செய்து எடுத்து வந்ததாகவும் செவிவழிச் செய்தியாகக் கூறப்படுகிறது. அனவரத செல்வ விநாயகர் பதிகத்தில் ,
“தொடர்ந்து நல்லூர் வந்திட விரைந்த போழ்து
நடந்த கால்கள் நொந்து களைப்புற்று நீ
கிடந்தாய் வள்ளிக் குளமாம் ………” என வரும் அடிகளும் இக்கருத்தை வலியுறுத்துகின்றன.
இக்கருத்து உண்மை என நம்பும் வண்ணம் விநாயகரின் தோற்றம் பெரிதாக அமைந்திருக்கின்றது. விநாயகர் வடிவத்தின் பாரம் தாங்காமல் அச்சு முறிவதற்கு வாய்ப்பு உண்டு. விநாயகர் வடிவத்தில் பெரிதாகக் கண்ணைக் கவரும் தோற்றத்தில் காட்சி தருகிறார்.
1912ம் ஆண்டு: நவக்கிரக சந்நிதி, வாழவந்தம்மன் சந்நிதி
இவ் ஆண்டில் இருசந்நிதிகள் உருவாக்கப் பெற்றுள்ளன. அவை நவக்கிரக சந்நிதியும், வாழவந்தம்மன் சந்நிதியும் ஆகும். அமுதலிங்கேஸ்வரர் சந்நிதியில் நுழைவாயிலில் வலது பக்கம் நவக்கிரக சந்நிதி அமைக்கப் பெற்று இருக்கிறது. இச்சந்நிதி அழகிய மரத் தூண்களுடன் சிறு மண்டபமாகக் காட்சி அளிக்கிறது. இதன் மேற்கூரையும் மரத்தால் ஆகியுள்ளது. நல்ல சித்திர வேலைப்பாடு இம்மண்டபத்தில் அமைந்துள்ளது.
கோயிலின் வெளிப்பிரகாரத்தில் அமைந்திருப்பது வாழவந்தம்மன் சந்நிதியாகும். கோயிலின் வடக்கு வாயிலை நோக்கி இச்சந்நிதி அமைந்து இருக்கிறது. இப்பகுதி பழைமைத் தோற்றத்துடன் உள்ளது. இக்கோயில் வளாகத்தில் இவ் அம்மனே முதன்முதலில் இருந்திருக்க வேண்டும். அமுதலிங்கேஸ்வரர் கோயில் கட்டிய பின்னர் இக்கோயிலையும் மராமத்து செய்து அதனுடன் இணைத்திருப்பர் என்று எண்ண இடமுண்டு.
பிற செய்திகள்:
பழனியாண்டவர் சந்நிதி எப்பொழுது தோற்றுவிக்கப்பட்டது என்று அறியச் சான்றுகள் கிடைக்கவில்லை. 1930ம் ஆண்டிற்குச் சற்று முன் பின்னாகத் தோற்றுவிக்கப்பட்டது என்று தகவலாளர்கள் கூறுகின்றனர்.
அமுதலிங்கேஸ்வரர் சந்நிதியில் திருச்சுற்று மதிலில் இடம் பெற்றுள்ள சனீஸ்வரர் மாடம், பைரவர் சந்நிதி, உஷா - சூரியன் - பிரதியுக்ஷா மாடம், கார்த்திகை - சந்திரன் - ரோகிணி மாடம் ஆகியனவும் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு அறிய முடியவில்லை. சனீஸ்வரன் மாடமும், பைரவர் மாடமும் பழைமையானவையாகத் தோன்றுகிறன. பிற இரு மாடங்களும் மிக அண்மைக் காலத்தில் தோன்றியிருக்க வேண்டுமென்று அவற்றின் புதுமைத் தோற்றத்தால் அறிய முடிகிறது.
கோயிலின் வெளிப்பிரகாரம் கலாமண்டபம் அமைந்த பகுதி தவிர ஏனைய இடம் மண் தரையாக உள்ளது. இப்பகுதியில் விரைவில் கற்கள் பதிக்கப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோயிலில் தோற்றக் காலத்தில் அமைந்திருந்த இரு தெப்பக்குளங்களும் மூடப்பட்டு உள்ளன. கோயிலின் தோற்றச் சிறப்பிற்கு இது பெருங்குறையாகவே அமைகிறது. பழையகிணறு மூடப்பட்டு விட்டது. வாழவந்தம்மன் சந்நிதிக்கு எதிரே உள்ள வாயிலை ஒட்டி வலது பக்கத்தில் புதிய கிணறு ஒன்று இப்பொழுது தோண்டப்பட்டுள்ளது.
கோயிலின் நிகழ்ச்சிகள் மின்சாரத்தடையினால் தடை ஏற்படா வண்ணம் நிகழ ஜெனரேட்டர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோயிலில் நுழைவாயிலில் இராஜகோபுரம் அமைக்கும் திருப்பணி தற்பொழுது விரைவாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு குடமுழுக்கு விழா நடத்துவதற்கான நிர்வாகப் பணிகளும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன .
கோயில் திருப்பணி செய்தவர்களின் பட்டியல் பின்னிணைப்பில் தரப்பட்டுள்ளது. திருப்பணி செய்தவர்களின் பெயர்கள் விளக்கமாக அவர்கள் திருப்பணி செய்த இடங்களில் குறிக்கப்பட்டுள்ளன. பழனியாண்டவர் சந்நிதி, சனீஸ்வரர் சந்நிதி, பைரவர் சந்நிதி ஆகிய இடங்களில் திருப்பணி செய்தவர் பெயர், செய்த ஆண்டு எதுவும் குறிக்கப் பெறவில்லை. கலாமண்டபத்தை உருவாக்கியவர்கள் வேண்டுமென்றே தங்கள் பெயரையும் ,உருவாக்கிய ஆண்டையும் குறிக்கவில்லை என்று தெரிகிறது. இம் மண்டபம் 1975ம் ஆண்டு கட்டப்பட்டிருப்பதால் கோயில் பதிவேடு மூலம் கட்டியவர் பெயர் அறிய முடிந்தது. உஷா - சூரியன் - பிரதியுக்ஷா, கார்த்திகை - சந்திரன் - ரோகிணி ஆகிய மாடங்கள் கட்டியவர் பெயர் மட்டும் தெரிய முடிகின்றது. கட்டப்பட்ட ஆண்டு குறிக்கப்படாதிருப்பதால் கட்டிய ஆண்டு கண்டுகொள்ள முடியவில்லை.
மிகப் பெரிய இடத்தில் சிறிய கோயிலாகத் தோற்ற மெடுத்த அமுதலிங்கேஸ்வரர் கோயில் இன்று அருப்புக்கோட்டையின் புகழ் பரப்பும் சிறப்புடைக் கோயிலாகப் பெரிய அளவில் தோற்றம் தருகிறது.
முத்து மாரியம்மன் கோயில்:
முத்து மாரியம்மன் கோயிலின் தோற்றம் கண்டு பிடிக்க முடியவில்லை. 1971ம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘Temples Of Madras State’ என்னும் அரசாங்கப் பதிவேட்டிலும் கோயிலின் தோற்றம் தெரியவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.7
நாடார் இனம் அருப்புக்கோட்டையில் நிலையாகத் தங்கத்தொடங்கிய காலத்தில் இக்கோயில் அமைக்கப்பட்டு இருக்கலாம் என்று கருத இடம் உண்டு. ஏனெனில் நாடார்கள் வியாபாரத்தின் பொருட்டுப் பல ஊர்களுக்கு எல்லாம் செல்ல வேண்டி இருந்ததால் தாங்கள் செல்லும் ஊர்களில் எல்லாம் பேட்டைகள் அமைத்தனர். பின்னர் வியாபாரம் பெருகப் பெருக அவ்வவ் வூரிலேயே தங்க ஆரம்பித்தனர். தங்களிடம் பணவசதி ஏற்பட்டவுடன் தங்கள் குலதெய்வங்களான பத்ரகாளியம்மன், மாரியம்மன் இவர்களுக்குக் கோயில்கள் கட்டத் தொடங்கினர்.
பத்ரகாளி நாடார் சமூகத்தின் அதிர்ஷ்ட தேவதை ஆகும் என்றும் அனைத்து நாடார்களும் பத்ரகாளியின் மைந்தர்கள் ஆவர் என்றும் ஹார்டுகிரேன் தமது நூலில் நாடார்கள் பற்றி வழங்குகிற குறிப்புக்களைக் குறித்துள்ளார்8. மேலும் இவர் நாடார்கள் பத்ரகாளியின் மைந்தர்கள் என்று கூறுவதற்கான புராணக்கதை ஒன்றையும் தம் நூலில் எழுதியுள்ளார்.
தேவலோக கன்னிகைகள் ஏழுபேர் பூலோகத்திலுள்ள நீரோடையில் குளித்துக் கொண்டு இருக்கும் போது இந்திரன் என்ற கடவுள் அவர்களைப் பார்த்து விட்டார். இந்திரன் அக்கன்னிகைகள் அணிந்திருந்த சேலைகளைத் திரட்டி எடுத்துக் கொண்டு அவர்கள் தண்ணீரிலிருந்து வெளிப்படுவது வரையிலும் செடிகளின் மறைவில் காத்திருந்தார். கன்னிகைகள் வெளிப்பட்ட போது அவர்கள் ஒவ்வொருவர் மீதும் இந்திரன் காதல் கொண்டார். அதன் விளைவாக ஏழு கன்னிகைகளும் ஏழு ஆண் குழந்தைகளை விட்டுவிட்டு தேவலோகம் சென்று விட்டனர். பெண் தெய்வமான பத்ரகாளி அக்குழந்தைகளின் மீது இரக்கம் கொண்டு அக்குழந்தைகளைத் தனது சொந்தக் குழந்தைகளாக வளர்த்து வந்தாள். அவ்வாறிருந்த போது ஒரு நாள் மதுரையிலுள்ள வைகைநதி வெள்ளப் பெருக்கால் உடைந்து விட்டது. அதனைத் தொடர்ந்து மதுரை நகருக்குள்ளும் வெள்ளம் புகுந்து விடுமோ எனப் பயம் ஏற்பட்டது. எனவே பாண்டியமன்னன் ஒவ்வொரு ஆண்மகனும் கூடைகளில் மண் எடுத்துத் தங்கள் தலையில் வைத்துச் சுமந்து வந்து வைகைக் கரையை மீண்டும் கட்ட வேண்டும் எனக் கட்டளை இட்டான். மேற்குறிப்பிட்ட ஏழு இளம் மைந்தர்களும் செல்வந்தர்கள் இல்லையென்றாலும் பாண்டிய மன்னனின் கட்டளைக்குப் பணிய மறுத்து விட்டனர். மகுடம் சூட்டப்பட வேண்டிய எங்கள் தலைகளில் கூடைகளைச் சுமக்க மாட்டோம் எனக்கூறி அவ் இளைஞர்கள் மறுத்து விட்டனர். அதைக் கேட்டுக் கடுங்கோபமுற்ற அரசன் இளைஞர்களில் ஒருவனைக் கழுத்தளவு மண்ணிற்குள் நிறுத்தி வைத்துப் புதைத்து அவனது தலையை யானையை விட்டு இடறச்செய்யக் கட்டளை இட்டான்.கட்டளையும் நிறைவேற்றப்பட்டது. தலை மிதிபட்டு இரத்த வெள்ளத்தில் தூக்கி எறியப்பட்ட போதிலும் கூட, ‘நான் கூடையைத் தொட மாட்டேன்’ என்று அத்தலை சத்தமிட்டுக் கொண்டே உருண்டு சென்றது. அதைக் கேட்டு மேலும் கோபம் கொண்ட அரசன், இரண்டாம் இளைஞனையும் அவ்வாறு தண்டிக்கும்படி கட்டளை இட்டான். இரண்டாம் இளைஞனின் தலை “அத்தலைக்கு இத்தலை பொய்த்தலையோ ! ஏழு தலை இடரினும் கூடை தொடேன்” என்று கூறிக்கொண்டே உருண்டு சென்றது. அந்த அற்புதம் கண்டு பயந்து போன பாண்டிய மன்னன் எஞ்சிய ஐந்து இளைஞர்களையும் விடுவித்தான். அவர்களிலிருந்து நாடார் இனம் தோன்றிற்று.”9
மேலே கூறிய கதையின் மூலம் நாடார் இனத்தின் குலதெய்வமாகப் பத்ரகாளி விளங்குவதன் காரணம் அறிய முடிகிறது. நாடார் சமூக வரலாறு எழுதிய ஆசிரியர் குரு.தேமொழி அவர்களும், ‘நாடார் காளிபுத்திரர்’ என்று அழைக்கப்பட்டதைச் ‘சான்றோர் குலமரபு காத்தல்‘ என்னும் நூலிலிருந்து சான்று காட்டுகிறார்10.
எனவே நாடார்குலம் அருப்புக்கோட்டையில் தங்கி வாழ முற்பட்ட போது தங்கள் குலதெய்வமான மாரியம்மனுக்கு முதலில் கோயில் கட்டி வழிபட ஆரம்பித்திருப்பர் என்று கருத இடம் உண்டு. பத்ரகாளியம்மன், காளியம்மன், மாரியம்மன் என வழங்கப்படும் தெய்வங்கள் யாவும் ஒருவரே.
அருப்புக்கோட்டையில் முதன்முதலில் அமைந்த இம்முத்துமாரியம்மன் கோயில் மண்சுவரால் ஆன கூரைக் கட்டிடமாகத்தான் தோன்றி இருக்கிறது. பின்னரே கற்றளியாக ஆக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலின் தோற்றம் பற்றிய கதை ஒன்றும் மக்களிடையே வழங்கி வருகின்றது. ‘முன்பு அருப்புக்கோட்டை காடு அடர்ந்த பகுதியாக இருந்தது. ஊர்ச் சிறுவர்கள் ஒன்று கூடி; காட்டுப் பகுதிக்குச் சென்று விறகு, சாணம் பொறுக்கி வருவர். ஒருநாள் ஒரு சிறுமி இப்பகுதியில் புகுந்து குறிப்பிட்ட இடத்தில் விறகு பொறுக்கிக் கொண்டு இருந்தாள். அப்பொழுது பின்பக்கமிருந்து “இவ்விடத்தைத் தூய்மை செய்து நீர் தெளிப்பாயாக“ என்று குரல் எழுந்தது. சிறுமி சுற்றும் முற்றும் பார்த்து விட்டுக் குரல் வந்த திசை தெரியாது மீண்டும் தன் வேலையைத் தொடர ஆரம்பித்தாள். பின்னர் மீண்டும் “இந்த இடத்தைச் சுத்தம் செய்து நீர் தெளித்தால் காற்பணம் கிடைக்கும்” என்று குரல் ஒலித்தது. “இவ்விடத்தில் நின்று மக்களுக்கு அருள் புரிவேன் மாரித்தாய் கூறுகிறேன்.” என்றும் அக்குரல் ஒலித்தது. அசரீரியாக அம்மன் கூறியதைக் கேட்ட சிறுமி வியப்புற்றுத் திகைப்படைந்தாள்.
அன்னை கூறியபடியே செய்வோம் என்று மனம் தெளிவடைந்த சிறுமி அவ்இடத்தைப் பெருக்கிச் சுத்தம் செய்து நீர் தெளித்தாள். அவள் வியப்படையும் வண்ணம், அவ்விடத்தில் அன்னை சொன்னபடியே காற்பணம் இருக்கப் பெற்றாள். காற்பணம் கிடைத்த இவ்விடத்தில் தான் முத்துமாரியம்மனின் கோயில் அமைந்துள்ளது என்று மக்கள் கூறுகின்றனர்.’11
தொடரும்
1977ம் ஆண்டு: நான்கு கால் மண்டபம்
மண் சுவரால் எழுப்பப்பட்ட கோயில் 1977ம் ஆண்டு திருப்பணி செய்யப் பட்டிருக்கிறது. 1977ம் ஆண்டு மகா மண்டபத்தில் நான்கு கற்றூண்கள் அமைத்து அர்த்தமண்டபத்தின் முன் பகுதியை அழகுபடுத்தி உள்ளனர். இதனை நான்கு கால் மண்டபம் என்று அழைக்கின்றனர். விழாக்காலங்களில் அம்மனை ஊஞ்சலில் எழுந்தருளச் செய்து காட்சி கொடுக்க இம்மண்டபம் பயன்படுகிறது.
1978ம் ஆண்டு: கோயில் கற்றளியாக்கப்படது
1978ம் ஆண்டு தான் இக்கோயில் முழுவதும் கற்றளியாக
ஆக்கப்பட்டு இருக்கிறது. இத்திருப்பணி பற்றிய விபரத்தைக் கோயிலின் கருவறையின் பின்புறச் சுவரில் குறித்து உள்ளனர். “இத்திருக்கோயில் கல்லினால் திருப்பணி செய்யப் பெற்ற நான்கு மதிற்சுவர்களும் அதனுள் அமைந்திருக்கும் அர்த்த மண்டபமும், கர்ப்பக்கிரகமும், கோபுரமும், கோயிலின் பின்புறம் உள்ள நான்கு கால் மண்டபமும், கோயிலின் கல்தள வரிசை முழுவதும் மின்சார இணைப்பு புதுப்பித்தலும், துவஜஸ்தம்பமும், பலிபீடமும்; நாடார்கள் பொது நிலக்கடலை எண்ணெய் மகமைத் தரப்பினரின் எண்ணெய் வியாபாரிகளிடமிருந்தும் சுமார் நாற்பது வருட காலமாகப் பெறும் எண்ணெய் நிதியிலிருந்து இத்திருப்பணி செய்து முடிக்கப்பெற்றது. (காளயுக்தி வருஷம் ஆவணி மாதம் 5ம் தேதி 21.8.1978)”
சிறிது சிறிதாகத் திருப்பணி செய்யாமல் திருப்பணிக்கென்றே பணம் சேர்த்து முழுமையாகச் செய்து இருக்கின்றனர். இக்கோயிலிலும் ஜெனரேட்டர் வசதி உண்டு. மகாமண்டபத்தில் தனிப்பட்டவர்களால் உபயமாகக் கொடுக்கப்பட்ட அலங்கார விளக்குகள் அணி செய்கின்றன.
வாலசுப்பிரமணியசாமி கோயில்:
வாலசுப்பிரமணியசாமி கோயிலின் தோற்றம் பற்றி எதுவும் அறிய முடியவில்லை. முத்துமாரியம்மன் கோயிலுக்குப் பின்னர் தோற்றம் பெற்றிருக்க வேண்டும் என்று தகவலாளர்கள் கூறுகின்றனர். இக்கோயிலின் வாயிலில் அமைத்து இருக்கும் சிற்ப வேலைப்பாட்டுடன் கூடிய மரக்கதவுகளும் வெளிப்பிரகாரமே இல்லாமல் உட்பிரகாரத்துடன் மட்டும் கூடிய கோயில் அமைப்பு ஆகியன இக்கோயில் மிகப் பழங்காலத்தது என்பதனை உறுதிப் படுத்துகின்றன.
இக்கோயில் அமுதலிங்கேஸ்வரர் கோயில், முத்து மாரியம்மன் கோயில் போன்று வளர்ச்சி அடைந்த நிலையைக் காண இயலவில்லை. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் தான் விநாயகரை இக்கோயிலில் எழுந்தருளச் செய்திருக்கின்றனர் என்று தகவலாளர்கள் கூறுகின்றனர். இது பற்றிய குறிப்புகள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை. இது தவிர இக்கோயிலில் மாற்றமோ வளர்ச்சியோ எதுவும் காண முடியவில்லை.
சந்திவீரசாமி கோயில்:
சந்திவீரசாமி கோயில் சுமார் ஐந்து தலைமுறைக்கு முன்னர் கட்டப்பட்ட தாகத் தகவலாளர்கள் கூறுகின்றனர். குழந்தைவேல் நாடாரால் தம் குலதெய்வ வழிபாட்டிற்காகக் கட்டப்பட்டதாகக் கூறுகின்றனர். கடைவீதியில் மிகச் சிறிய பகுதியில் அமைந்திருப்பதால் இக்கோயிலில் எந்தவித மாற்றமோ வளர்ச்சியோ ஏற்படுவதற்கு வழி இல்லாமல் கோயில் கட்டிய காலத்தில் இருந்தது போலவே இன்றும் உள்ளது.
சித்தி விநாயகர் கோயில்:
சித்தி விநாயகர் கோயிலின் தோற்றமும் அறிய முடியவில்லை. முன்பு சைவபானு க்ஷத்திரிய ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஒரு பகுதியில் அரச மரத்தடியில் இச்சித்தி விநாயகர் எழுந்தருளியிருந்தார். இப்பள்ளி பெண்கள் பள்ளியாக மாறிய பொழுது இக்கோயிலுக்கும், பள்ளியின் மதிற்சுவரை ஒட்டித் தனித்த வாசல் வைத்துக் கோயில் போன்ற அமைப்பினை ஏற்படுத்தினர். 30.3.1976ம் நாளன்று அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறையால் கோயில் மேற்கூரையும் திருவாச்சியும் பிற எழில் திருப்பணிகளும் செய்து முடிக்கப்பட்டு உள்ளன.
முடிவுரை:
“திருக்கோயில் மனித வாழ்வை மேம்படுத்துவதாயும், மனித வாழ்க்கை நலத்திற்கு வழிகாட்டியாகவும் மனிதனுக்கு இன்பவாழ்வினை இனிதே நல்குவதாயும், மனித வாழ்வின் நாகரிகச் சின்னமாயும், மனிதவாழ்வின் கலை நலத்தைப் பெருக்குவதாயும், பல்வகைக் கலைகளின் பிறப்பிடமாகவும், இருப்பிடமாகவும் இனிதே விளங்குகிறது.” என்று திருக்கோயில் தத்துவம் என்னும் நூலில் ஆசிரியர் புலவர் செந்துறைமுத்து அவர்கள் குறித்துள்ளார்கள்.12
இக்கூற்றின் உண்மையை அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறைக் கோயில்கள் வெளிப்படுத்துகின்றன.
தங்கள் குலம் சிறப்படைய இறைவனை வழிபட்டனர். இறைவனை வழிபடத் தங்களால் முடிந்த அளவு கோயில்கள் கட்டினர். தாழ்ந்த சமூகத்தினராகக் கருதப்பட்ட இம்மக்கள் பொருளாதார வளர்ச்சி அடைந்த பொழுது உயர்ந்த குலமாகிய பிராமணர்கள் போன்று அவர்களது பழக்க வழக்கங்களைப் பின்பற்றினார்கள். தங்கள் வாழ்க்கை முறைகளைச் சமஸ்கிருதமயமாக்க முற்பட்டனர். இதன் விளைவே சிவன் கோயிலின் தோற்றம் ஆகும். இங்ஙனம் தோற்றமெடுத்த சிவன் கோயிலும் பிற கோயில்களும் மனித வாழ்வின் நாகரிகச் சின்னங்களாகவும் மனித வாழ்வின் கலைவளத்தைப் பெருக்குவனவாகவும் கட்டிடக்கலை, சிற்பக்கலை சித்திரக்கலை போன்ற கலைகளின் பிறப்பிடமாகவும், இருப்பிடமாகவும் அமைந்துள்ளன.
குறிப்புகள்
S.T.ஜெயபாண்டியன் (மொ. ஆ) - தமிழக நாடார் வரலாறு - ப.8
Ibid.- ப. - 53-54
குரு. தேமொழி - நாடார் சமூக வரலாறு - ப. - 39
ibid. ப. - 29-30
பின்னிணைப்பு - 3
பின்னிணைப்பு - 4
Census Of India -1961 - Volume - 9 - Madras - Part-11-DTemples Of Madras State p. 339
S.T.ஜெயபாண்டியன் (மொ.ஆ.) - மு.நூ.- ப - 55
Ibid - ப. - 26- 27
குரு. தேமொழி - மு.நூ.- ப. - 38
அ.காசி - மாரியைப் பணிகுவம் - ப. - 4
செந்துறைமுத்து - திருக்கோயில் தத்துவம் - ப. - 108 (தொடரும் )
4 கோயில்களின் அமைப்பு
முன்னுரை
அமுதலிங்கேஸ்வரர் கோயில்
அமுதலிங்கேஸ்வரர் சந்நிதி - அதன் உட்பிரகாரம்
அமுதவல்லி அம்மன் சந்நிதி -அதன் உட்பிரகாரம்
வெளிப் பிரகாரம்
முத்துமாரியம்மன் கோயில்
வாலசுப்பிரமணியசாமி கோயில்
சந்திவீரசாமி கோயில்
சித்திவிநாயகர் கோயில்
முடிவுரை
கோயில்களின் அமைப்பு
முன்னுரை:
இறைவன் எழுந்தருளியிருக்கும் இடத்தைக் கோயில் என்று அழைக்கிறோம்.மழைநீரைப் பெரிய அளவில் தேக்கிக் கால்வாய்கள் மூலம் அனுப்புகிற அணை போலத் தெய்வ அருளை ஒருமுகமாகப் பெற்றுத் தேக்கிக் கொண்டு; ஊர் முழுவதும் நாலாபக்கமும் செலுத்துவதாகக் கோயில் அமைகிறது. இவ்வண்ணம் அருப்புக்கோட்டை நகரில் நாடார்கள் உறவின்முறையின் மூலம் கோயில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
அமுதலிங்கேஸ்வரர் கோயில் :
சுமார் தென்வடல் 200அடி; கீழ்மேல் 270அடி ஆக 54000 சதுர அடி நிலப்பரப்பில் அமைந்துள்ளது இக்கோயில். ஊரின் கிழக்கு ரதவீதியின் மேற்குப் பக்கத்தில் மதுரை செல்லும் சாலையில் அமைந்துள்ளது. காரண ஆகமத்தில் கூறியுள்ள சிவன்கோயில் அமைப்பின்படியே இக்கோயில் அமைந்துள்ளது என்று தகவலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கோயிலின் கிழக்கு வெளிப்பிரகாரத்தின் வழியாக நுழைய இரு வாயில்களும், தெற்கு வெளிப்பிரகாரத்தின் வழியாக நுழைய ஒரு வாயிலும், வடக்கு வெளிப் பிரகாரத்தின் வழியாக நுழைய இரு வாயில்களும் ஆக ஐந்து வாயில்கள் இக்கோயிலில் உள்ளன.
இக்கோயில் பல சந்நிதிகளை உடையதாயும், பற்பல கடவுளரை வழிபடக் கூடிய இடமாகவும் அமைந்திருக்கிறது. இக்கோயில் பெரிய அளவில் அமைந்து இருப்பதால் இதன் அமைப்பு முறையை மூன்று பெரும் பிரிவுகளாகப் பகுத்து விரிவாகக் காணலாம்.
1. அமுதலிங்கேஸ்வரர் சந்நிதி -அதன் உட்பிரகாரம்
2. அமுதவல்லி அம்மன் சந்நிதி - அதன் உட்பிரகாரம்
3. வெளிப்பிரகாரம்
அமுதலிங்கேஸ்வரர் சந்நிதி - அதன் உட்பிரகாரம்:
கோயிலின் கிழக்கு வெளிப் பிரகாரத்தில் நுழைவு வாயில்களுக்கு நேராக இரு உட்கோபுர வாயில்கள் உண்டு. அவற்றில் வடக்கு வாயிலில் அமுதலிங்கேஸ்வரரின் சந்நிதி அமைந்துள்ளது. இச்சந்நிதியின் வாயிலுக்கு முற்புறத்தில் நந்தீஸ்வரர், துவஜஸ்தம்பம், பலிபீடம் ஆகியன உயர்ந்த தோற்றத்தில் அமைந்துள்ளன. வாயிலைக் கடந்து சென்றால் வரிசையாகப் பல மண்டபங்கள் அமைந்துள்ளன. அவை முறையே கல்யாண மண்டபம், ஆறுகால் மண்டபம், மகாமண்டபம், மணிமண்டபம், அர்த்தமண்டபம் என்பனவாகும்.
கல்யாண மண்டபம்:
கோயில் வாயிலுக்கும் ஆறு கால் மண்டபத்துக்கும் இடையே உள்ள பகுதி கல்யாண மண்டபம் ஆகும். கல்யாண மண்டபத்திற்குப் பந்தல் கால்கள் அமைத்தது போல் நான்கு பெரிய கல் தூண்கள் பொருத்தி கோயிலின் வாயிலையும், ஆறுகால் மண்டபத்தையும் இணைக்கின்றன. இங்கு அமைந்துள்ள தூண் ஒன்றில் “இந்த கல்யாண மண்டபத்தில் இருக்கிற....” என்றே இம்மண்டபம் குறிக்கப்பட்டுள்ளது. கல்யாணங்கள் நடைபெறுவதில்லை எனினும் தோற்றத்தை வைத்துக் கல்யாண மண்டபம் என்று இம்மண்டபம் அழைக்கப்படுகிறது என்று கருதலாம். திரு அ. காசி அவர்கள் இக்கோயில் பற்றித் தாம் எழுதிய நூலில் இம்மண்டபத்தைப் பந்தல் மண்டபம் என்று குறித்துள்ளார்1.
ஆறுகால் மண்டபம்:
கல்யாண மண்டபத்தை அடுத்து நான்கடி உயரத்தில் இம்மண்டபம் அமைந்துள்ளது. ஆறு கல் தூண்களைக் கொண்டதாக இம்மண்டபம் அமைந்திருப்பதால் இம்மண்டபம் இப்பெயரால் அழைக்கப்படுகிறது. தெற்கு வடக்காக இம்மண்டபத்திற்குச் செல்ல இரு வழிகள் உண்டு. கல்யாண மண்டபத்தின் வழியாகத் தெற்குப்புற வாயிலின் படிகள் மீது ஏறி இம்மண்டபத்தை அடைய வேண்டும். இதனை அடுத்து மகாமண்டபம் அமைந்துள்ளது. மகா மண்டபத்திற்குச் செல்லும் வாயிலின் இருபுறத்திலும் துவாரபாலகர்கள் உள்ளனர். இம் மண்டபத்தில் உள்ள ஆறு கற்றூண்களிலும் கடவுளரின் திருவுருவங்கள், திருவிளையாடல் காட்சிகள் இவற்றைச் சித்தரிக்கும் நுணுக்கமான சிற்பவேலைப்பாடுகள் இடம் பெற்றுள்ளன.
முதலாம் தூண்:
நான்முகன் திருவுருவம், வள்ளுவர் - வாசுகி திருவுருவங்கள், பிச்சாண்டவராகப் பரமேஸ்வரன் காட்சி அளித்தல், யாழியின் உருவம், நந்தி மத்தளம் முழக்குதல், பசு லிங்கத்திற்குப் பால் சுரத்தல், கூத்தபிரான் தாண்டவக் கோலம் ஆகியன இத்தூணின் பக்கங்களில் காட்சி தருகின்றன.
இரண்டாம் தூண்:
வீணா வாணி திருவுருவம், பைரவர் திருவுருவம், பரசுராமனுக்கு லிங்கத் திருமேனியாக பரமேஸ்வரன் காட்சி அளித்தல், நாரைக்கு முக்தி கொடுத்தல், மகாலட்சுமி திருவுருவம், மயில் மேல் முருகன் வீற்றிருக்கும் காட்சி, மணிவாசகர் மந்திரியாக இருத்தல், கருங்குருவிக்கு உபதேசித்தல், ஆகிய சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.
மூன்றாம் தூண்:
அம்பிகையின் திருவுருவம், துவார பாலகர் திருவுருவம் ஆகிய இரு உருவங்கள் மட்டும் இத்தூணில் செதுக்கப்பட்டுள்ளன. பிற பகுதிகள் சாதாரண வேலைப்பாட்டுடன் உள்ளன.
நான்காம் தூண்:
துவார பாலகர் மட்டும் செதுக்கப்பட்ட எளிய வேலைப்பாடுடைய தூணாக இது காட்சி தருகிறது.
ஐந்தாம் தூண்:
கந்தர்வமாது இறைவனுக்கு மலர் சொரிதல், பரமேஸ்வரன் பார்த்தனுக்குப் பாசுபதம் அளித்தல், விசுவாமித்திரர் மேனகையின் ஆட்டத்தைக் கண்டு மகிழ்ந்து வரம் தருதல், பராசக்தியின் திருவுருவம், பரமேஸ்வரரும் பார்வதியும் இணைந்திருந்து உலக உயிர்களுக்குக் காட்சி தருதல், விநாயகர் மூஷிக வாகனத்தில் காட்சி கொடுத்தல், தட்சிணாமூர்த்தி கல்லால மரத்தடியில் குருவாகக் காட்சி தருதல், துர்க்கா தேவி அசுரனைச் சம்ஹாரம் செய்தல் ஆகிய அரிய பல காட்சிகளைச் சிற்பங்களால் வெளிப்படுத்தும் சிறந்த கற்றூணாக இது அமைந்துள்ளது.
ஆறாம் தூண் :
சிவலிங்கத் திருமேனி யானைக்குக் காட்சி கொடுத்தல், பரமசிவன் பல்லுயிர்க்கும் படிஅளத்தல், திருப்பெருந்துறையில் அந்தணனாக வந்து இறைவன் மணிவாசகருக்குக் காட்சி தருதல், பத்ரகாளி சும்பன், நிசும்பன் இவர்களைச் சம்ஹாரம் செய்தல், அரசனாக வந்த ஆண்டவன் அகத்திய முனிவரிடம் கேள்வி கேட்டல், கல்யானைக்குக் கரும்பு ஊட்டல், கர்ப்பமாகிய பன்றி பல குட்டிகளை ஈன்று உயிர் நீத்தல், பரமேஸ்வரன் பன்றி வடிவில் வந்து அக்குட்டிகளுக்குப் பாலூட்டல் ஆகிய காட்சிகள் இத்தூணில் அழகுறச் செதுக்கப்பட்டுக் காட்சி தருகின்றன.
மகா மண்டபம்:
ஆறுகால் மண்டபத்தை அடுத்து உள்ளது மகாமண்டபம். இம்மண்டபம் நான்கு தூண்களால் அமைக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்தின் தென்புறம் அமுதலிங்கேஸ்வரர் சந்நிதியின் உட்பிரகாரத்திற்கு இட்டுச் செல்லும் வாயில் உள்ளது. வாயிலை ஒட்டி உட்புறத்தில் சித்திரபுத்திரர் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இம் மண்டபத்தில் தெற்கு நோக்கி நடராஜர் சந்நிதி அமைந்துள்ளது. சிவகாமசுந்தரியும், மாணிக்க வாசகரும் இருபுறங்களிலும் இடம்பெற நடராஜர் வலது காலைத் தூக்கி நின்றாடும் கோலத்துடன் காட்சி தருகிறார். சந்நிதியின் வாயிலில் வியாக்ரபாதரும், பதஞ்சலி முனிவரும் இறைவனின் திருநடனக் காட்சிகளைக் கண்டு களிக்கும் கோலத்துடன் நிற்கின்றனர். இச்சந்நிதியின் பின்புறச் சுவர்களில் நடராஜரின் வலது காலைத் தூக்கி நின்றாடிய தோற்றம், இடது காலைத் தூக்கி நின்றாடிய தோற்றம், காலைத் தலை மேல் தூக்கி ஆடிய தோற்றம் ஆகியன அழகுறச் செதுக்கப்பட்டுள்ளன.
இம்மண்டபத்தின் இருபுறங்களிலும் உற்சவமூர்த்திகள் இடம் பெற்றுள்ளன. பெரிய சோமாஸ்கந்தர், நடராஜர், அமுதவல்லியம்மன், சிவகாமி, வள்ளி தெய்வானையுடன் முருகன் ஆகிய உற்சவமூர்த்திகள் உள்ளன. இவற்றுடன் வெள்ளைச் சலவைக் கல்லால் ஆன பிள்ளையார் உருவம் ஒன்று கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்துப் பாதுகாக்கப்படுகிறது.
மணிமண்டபம்:
மணிமண்டபத்தில் நந்தியும், பலிபீடமும் சிறிய அளவில் அமைந்துள்ளன. இம்மண்டபத்தின் தென்புறம் விக்னேஸ்வரரும் வடபுறம் சுப்பிரமணியரும் இருக்கக் காணலாம். வடபுறச் சுவரில் ஒரு அறை அமைக்கப்பட்டுள்ளது. கோயில் பொருட்கள் அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
அர்த்த மண்டபம்:
மணி மண்டபத்தை அடுத்து அர்த்த மண்டபம் அமைந்துள்ளது. இங்கு அமைந்த கருவறையில் அமுதலிங்கேஸ்வரர் சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். அமுதலிங்கேஸ்வரரின் சிலை ஒரு மீ. பதினோரு செ. மீ. உயரம் கொண்டதாகச் சிறந்த தோற்றத்துடன் விளங்குகின்றது.
வில்வ விருட்சத்தின் நிழலில் அநாதியாய் மலமில்லாத மூலப்பொருளாகி அடியார்க்கு இன்பம் செய்தலாலே அமுதலிங்கம் என்னும் பெயர் பெற்று விளங்கியுள்ளார். வினைகட்கு ஈடாகக் கண், கை, கால்களை வருத்தும் நோய்கட்கெல்லாம் இவ்வில்வ இலை மருந்தாகித் தீர்க்கின்ற சிறப்பால் அமுதலிங்கமாகக் காட்சி தருகிறார் என்று கூறப்படுகிறது.
தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெற வேண்டும் என்று திருப்பாற்கடலைக் கடைந்த போது அமுதமும் விஷமும் வெளிப்பட்டன. அப்பொழுது அமுதத்தை யார் உண்ணுவது, விஷத்தை யார் உண்ணுவது என்று இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. ஆலகால விஷத்தால் உலகம் முழுவதும் அழியக் கூடிய அபாயத்திலிருந்து மீள்வதற்குச் சர்வேஸ்வரனை வழிபட முற்பட்டனர். எக்காலத்திலும் எல்லாராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய உருவத்தால் வழிபட எண்ணினர். எனவே அருவம்-உருவம்-அருவுருவம் என்றும், சிவம்-சக்தி-உலகம் என்றும், பிரம்ம பாகம் - விஷ்ணுபாகம் - சிவ பாகம் என்றும், பரமாத்மா - ஜீவாத்மா - உடல் என்றும், ஆண் - பெண் - அலி என்றும்
(தொடரும்)
அர்த்த மண்டபத்தின் வெளிப்புறச்சுவர் :
அர்த்த மண்டபத்தின் தெற்கு வெளிப்புறச் சுவரில் தட்சிணாமூர்த்தியும், மேற்கு வெளிப்புறச்சுவரில் அண்ணாமலையாரும், வடக்கு வெளிப்புறச் சுவரில் துர்க்கையும் அமைக்கப்பட்டுள்ளன.
அண்ணாமலையார் வடிவம் லிங்கோத்பவர் வடிவமாக உள்ளது. அதாவது நெருப்புத்தூண் வடிவாகிய இலிங்கத்தில் இறைவன் தோன்றும் திருக்கோலம் ஆகும். இறைவன் இலிங்கத்தே தோன்றினான் என்பதற்கேற்ப இலிங்கத்தின் உள்ளே சிவபெருமானின் பிறை சூடிய திருக்கோலம் செதுக்கப்பட்டுள்ளது. இறைவன் அடி முடி தேடியும் காணா வண்ணம் அமைந்த நிலைக்கேற்ப முழந்தாளின் கீழும், முடியின் முடிவும் செதுக்கப்படவில்லை. சிவனின் இடது புறத்தில் மேற்பாகத்தில் நான்முகன் அன்ன வடிவத்தில் முடி காண மேனோக்கிப் பறத்தலும், வலது புறத்தில் கீழ்ப் பாகத்தில் மால் அடி காணக் கீழ்நோக்கி நிலத்தை அகழ்தலும் காட்டப்பட்டுள்ளன. இருவரும் தம் சொந்த வடிவங்களோடு மார்பில் கை கூப்பியபடி அளவிட முடியாதவாறு வளர்ந்துள்ள இலிங்கத்தை அண்ணாந்து நோக்கிய வண்ணம் காணப்படுகின்றனர்.
உட்பிரகாரம்:
அமுதலிங்கேஸ்வரர் சந்நிதியின் உட்பிரகாரத்தில் தென்புறத்திலுள்ள மண்டபத்தின் ஆரம்பத்தில் ஞானவிநாயகர் இடம் பெற்றுள்ளார். அடுத்து அறுபத்து மூன்று நாயன்மார்களின் உருவங்கள் வரிசையாக அமைக்கப்பட்டு உள்ளன. மண்டபத்தின் முடிவில் காசிவிஸ்வநாதரும், விசாலாட்சி அம்மையாரும் அமைந்துள்ளனர். தூத்துக்குடியைச் சேர்ந்த கடம்பவனத்தாள் என்னும் அம்மையாரால் காசியிலிருந்து கொண்டு வந்து வைக்கப் பெற்றதால் இவ் இலிங்கமும், அம்மனும் காசி விஸ்வநாதர் என்றும், விசாலாட்சி அம்மையார் என்றும் அழைக்கப் படுகின்றனர் என்று தகவலாளர்கள் கூறுகின்றனர்.
மேற்குப் புறத்தில் கன்னி மூலையில் அனவரத செல்வ விநாயகர் சந்நிதி அமைந்துள்ளது. இரண்டு மீ. இருபது செ.மீ. உயரமுள்ள பெரிய தோற்றத்துடன் இவ் விநாயகர் வடிவம் சிறந்து விளங்குகிறது.
மேற்குப்புறத்தில் வாயுமூலையில் முத்துக்குமாரசாமி சந்நிதி அமைந்து உள்ளது. முருகன் வள்ளி தெய்வானையுடன் நிற்கும் கோலத்தில் காட்சி தருகிறார்.
வடக்குப் பக்கம் சண்டேசுவரர் சந்நிதியுள்ளது.
வடக்கு மதிலில் சனீஸ்வரன் தெற்கு நோக்கித் தோற்றம் கொண்ட மாடம் உள்ளது. நவக்கிரக சந்நிதி என்று ஒரு சந்நிதி இருந்த போதிலும்; சனீஸ்வரனுக்குத் தனித்த மாடமும் இங்கிருப்பது இக்கோயிலின் சிறப்பை எடுத்து விளக்கும்.
கிழக்குப் புறத்தில் பைரவர் சந்நிதி உள்ளது. மேற்கு நோக்கிய தோற்றத்தில் பைரவர் காட்சி தருவதாக இச்சந்நிதி அமைந்துள்ளது.
கிழக்கு மதிலின் உட்புறத்தில் நவக்கிரக மண்டபம் உள்ளது. அமுதலிங்கேஸ்வரர் சந்நிதிக்கு உள்ளே நுழைந்தவுடன் வலப் பக்கமாய்க் கல்யாண மண்டபத்தில் இம்மண்டபம் அமைந்துள்ளது. இம்மண்டபத்தின் தூண்களும் மேற்கூரையும் மரத்தால் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்துள்ளன.
கிழக்கு மதிலின் உட்பிரகாரத்தில் வலப்பக்கம் கார்த்திகை - சந்திரன் - ரோகிணி ஆகிய மூர்த்திகளைக் கொண்ட மாடமும், இடப்பக்கம் உஷா - சூரியன் -பிரத்யுக்ஷா ஆகிய மூர்த்திகளைக் கொண்ட மாடமும் அமைந்து உள்ளன. இம்மாடங்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் உருவாக்கப் பட்டுள்ளன என்று அவற்றின் அமைப்பு முறையிலிருந்து அறிய முடிகின்றது.
அமுதவல்லியம்மன் சந்நிதி - அதன் உட்பிரகாரம்
கிழக்கு மதிலின் முன்புற வாயிலில் அமுத வல்லியம்மன் சந்நிதி அமைந்துள்ளது. சந்நிதியின் முன்புறத்தில் துவஜஸ்தம்பம், பலிபீடம், நந்தி ஆகியன முறைப்படி அமைந்துள்ளன. அமுதலிங்கேஸ்வரர் சந்நிதிக்கு துவஜஸ்தம்பம், பலிபீடம், நந்தி ஆகியன வெளிப்பிரகாரத்தில் அமைந்திருக்க அம்மன் சந்நிதிக்கு இவை உட்பிரகாரத்தில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அமுதலிங்கேஸ்வரர் சந்நிதி அமைந்த முறைப்படியே இச்சந்நிதியும் கல்யாண மண்டபம், ஆறு கால் மண்டபம், மகாமண்டபம், மணிமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை என்று அமைக்கப்பட்டுள்ளது.
கல்யாண மண்டபம்:
அமுதலிங்கேஸ்வரர் சந்நிதியில் போல இம்மண்டபம் நான்கு தூண்களால் அமையாமல் இரு தூண்களால் அமைந்துள்ளது. தூண்களைச் சுற்றியுள்ள பகுதி வெளியிடமாக அமைந்துள்ளது. அங்கு தான் துவஜஸ்தம்பம், பலிபீடம், நந்தி ஆகியவை அமைந்துள்ளன. இம்மண்டபத்தில் அமைந்த இரு தூண்களும் ஆறு கால் மண்டபத்தை இணைக்கின்றன. இருதூண்களும் உயர்ந்த தோற்றம் உடையவனாய் அமைந்துள்ளன. இருதூண்களிலும் மேற்பகுதியில் யாளியின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. வடபுறம் உள்ள யாளியின் வாயில் உள்ள உருண்டை உருளக் கூடிய சிறப்பு உடையதாகும்.
ஆறுகால் மண்டபம்:
கல்யாண மண்டபத்தை அடுத்து நான்கடி உயரத்தில் இம்மண்டபம் அமைந்துள்ளது. ஆறு கற்றூண்களைக் கொண்டதால் இம்மண்டபம் ஆறுகால் மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. தெற்கு வடக்காக இம்மண்டபத்திற்குச் செல்ல இரு வழிகள் உண்டு. கல்யாண மண்டபத்தின் வழியாகத் தெற்குப்புற வாயிலில் படிகள் மீது ஏறி இம்மண்டபத்தை அடைய வேண்டும். இதனை அடுத்து மகாமண்டபம் அமைந்துள்ளது. மகாமண்டபத்திற்குச் செல்லும் வாயிலில் இரு புறங்களிலும் துவாரசக்திகள் உள்ளனர். இம்மண்டபத்திலுள்ள ஆறு தூண்களிலும் அரிய வேலைப்பாடுகள் கொண்ட சிற்பங்கள் காணப்படுகின்றன. கடவுளரின் உருவங்களும் திருவிளையாடல் காட்சிகளும் காண்போர்க்கு இன்பத்தை நல்குகின்றன.
முதலாம் தூண்:
விநாயகர் சிவலிங்க வழிபாடு செய்தல், நான்முகன், பார்வதி பரமேஸ்வரன் அமர்ந்திருக்கும் பொழுது இராவணேஸ்வரன் மலையைப் பெயர்த்து எடுக்க முயற்சி செய்தல், பார்வதி பரமேஸ்வரன் முன் நாரதர் வீணையில் சாமகானம் இசைத்தல், ஊர்த்துவ தாண்டவம் ஆகிய காட்சிகளும், நந்திகேஸ்வரன், யாளி ஆகிய திருவுருவங்களும் இத்தூணில் சிறப்புறச் செதுக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் தூண்:
மகாலட்சுமி, பராசக்தி, வேணுகோபாலன், அமுத வல்லியம்மன், சுப்பிரமணியர் ஆகிய கடவுளரின் திருவுருவங்கள் இத்தூணில் காணப்படுகின்றன.
மூன்றாம் தூண்:
துர்வாசர் அக்னி யாகம், துர்க்கா தேவி, அர்த்த நாரீஸ்வரர், அமுதலிங்கேஸ்வரர் - அமுதவல்லியம்மன் திருக்கல்யாணம், துவார சக்தி, அம்மையின் திருநடனக் கோலம், நடராஜர் ஆகியன அழகுறச் செதுக்கப்பட்டுள்ளன.
நான்காம் தூண்:
பத்ரகாளி நிசும்பாசுரனை வதைத்தல்3, பராசக்தி மகாலட்சுமி, துவாரசக்தி, பரமேஸ்வரன் கஜமுகாசுரனை அழித்தல், கற்பகவல்லி ஆகியன சிறப்பாக இத்தூணில் அமைக்கப்பட்டுள்ளன.
ஐந்தாம் தூண்:
காலசம்கார மூர்த்தி, விநாயகர், பிச்சாண்டவர் ஆகிய இறைத்தோற்றங்கள் மட்டும் இத்தூணில் செதுக்கப்பட்டுள்ளன.
ஆறாம் தூண்:
பழனியாண்டவர், சண்டமுண்டாசுரனை அழித்தல், பத்ரகாளி, கல்யானைக்கு இறைவன் கரும்பு கொடுத்தல், பரமேஸ்வரன் ஆகிய காட்சிகளைக் கொண்ட அழகிய சிற்ப வேலைப்பாட்டுடன் இத்தூண் விளங்குகிறது.
மகாமண்டபம்:
ஆறு கால் மண்டபத்தை அடுத்து மகாமண்டபம் அமைந்துள்ளது. இம்மண்டபத்தின் வலப்பக்கம் தென்புறம் நோக்கிப் பள்ளியறை அமைந்துள்ளது.
மணிமண்டபம்:
மகாமண்டபத்தை அடுத்து மணிமண்டபம் அமைந்துள்ளது. இங்கு நந்தியும் பலிபீடமும் அமைக்கப்பட்டுள்ளன. இம்மண்டபத்தின் தென்புறம் பிள்ளையாரும், வடபுறம் சக்திவேலரும் உள்ளனர்.
அர்த்த மண்டபம்:
மணிமண்டபத்தை அடுத்து அர்த்தமண்டபம் அமைந்துள்ளது. இங்குள்ள கருவறையில் அமுதவல்லியம்மன் எழுந்தருளியுள்ளார். 1மீட்டர் 21செ. மீ. உயரத்தில் அம்மன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அம்மன் நான்கு கரங்களுடன் விளங்குகிறார். இரு கரங்கள் மலர்களைக் கொண்டும் ஒரு கரம் அபயமுத்திரை காட்டியும், ஒரு கரம் தொங்க விட்டும் காட்சி தருகிறார். இறைவன் அமுதலிங்கேஸ்வரராக விளங்க இறைவனுக்கு இணையாக உயிர்களுக்கு அமுதமாகவும் கொடி போன்ற தோற்றத்துடனும் விளங்குவதால் அமுதவல்லி அம்மன் என்று அழைக்கப்படுவது பொருத்தமாகக் காணப்படுகிறது.
அர்த்த மண்டபத்தின் வெளிப்புறச் சுவர்:
அர்த்த மண்டபத்தின் தெற்கு வெளிப்புறச் சுவரில் இச்சா சக்தியும், மேற்கு வெளிப்புறச் சுவரில் கிரியா சக்தியும், வடக்கு வெளிப்புறச் சுவரில் ஞான சக்தியும் அமைந்துள்ளன.
உட்பிரகாரம்:
உட்பிரகாரத்தின் மேற்கு மதிலின் உட்புறத்தில் வல்லப கணபதி, கற்பகவல்லி அம்மன், பாலசண்முகர் ஆகியோரின் மாடங்கள் தனித்தனியாக அமைந்துள்ளன. இவை சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் அமைக்கப்பட்டுள்ளன. உட்பிரகாரத்தில் வடக்குப் பகுதியில் சண்டேஸ்வ ரரின் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது.
(தொடரும்)
வெளிப்பிரகாரம்:
வெளிப்பிரகாரத்தில் ஆஞ்சநேயர் சந்நிதி, வரதராஜப் பெருமாள் சந்நிதி, பழனியாண்டவர் சந்நிதி, வாழவந்தம்மன் சந்நிதி, கலாமண்டபம், அமுதலிங்கேஸ்வரர் சந்நிதிக்கு நேராக அமைந்த துவஜஸ்தம்பம், பலிபீடம், நந்தீஸ்வரர் ஆகியன அமைந்துள்ளன.
ஆஞ்சநேயர் சந்நிதி:
வெளிப்பிரகாரத்தில் கிழக்குப் பக்கத்தில் எட்டடி உயரமுள்ள தனிச்சந்நிதிக்கு மேல் ஐந்தடி உயர மண்டபக் கோபுரத்துடன் ஆஞ்சநேயர் சந்நிதி உள்ளது. ஆஞ்சநேயர் வடக்கு நோக்கிய வண்ணம் நெடிய தோற்றத்துடன் இறைவனை இருகரம் கூப்பி வணங்கும் வண்ணம் காட்சி தருகிறார்.
வரதராஜப் பெருமாள் சந்நிதி:
வெளிப் பிரகாரத்தில் தெற்குப்பக்கம் வரதராஜப்பெருமாள் சந்நிதி உள்ளது. அமுதவல்லியம்மன் சந்நிதியின் உட்பிரகாரத்தின் வழியாக இச்சந்நிதிக்குள் நுழைய வாயிலும் உண்டு. பதினெட்டுத் தூண்களை உடைய சந்நிதியாக வரதராஜப் பெருமாள் சந்நிதி அமைந்துள்ளது. வெளிமண்டபம், மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்னும் பகுதிகளைக் கொண்டு அமைந்துள்ளது. மகாமண்டபத்தில் துவாரபாலகர் அமைந்துள்ளனர். அடுத்துள்ள அர்த்தமண்டபத்தின் தென்புறத்தில் ஆதிமூலப் பெருமாள்; ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருடன் நிற்கும் தோற்றம் உள்ளது. வடபுறத்தில் இராமானுஜர், நம்மாழ்வார் ஆகியோரின் திருவுருவங்கள் உள்ளன. கருவறையில் வரதராஜப்பெருமாள் நின்ற கோலத்துடன் தம் இரு தேவியருடன் காட்சி தருகின்றார். வரதராஜப் பெருமாளின் தோற்றம் ஒருமீட்டர் தொண்ணூறு செ.மீ. அளவு உயரம் உடையதாகும்.
வரதராஜப் பெருமாள் சந்நிதியின் வெளிப்புறச் சுவரின் தென்புறம் பாம்பணையில் துயிலும் ரெங்கநாதரையும், மகாவிஷ்ணுவையும், திருமாலின் பத்து அவதாரங்களையும் சிற்பவடிவில் காணமுடிகிறது. மேற்குப்புறச் சுவரில் நரசிம்மமூர்த்தியும், வடக்குப்புறச் சுவரில் வேணுகோபாலன் குழல் ஊதும் காட்சியும், இராமபிரானின் பட்டாபிஷேகக் காட்சியும் அழகுறச் செதுக்கப்பட்டுள்ளன.
இச்சந்நிதியின் முன்புறம் கருடாழ்வார் சந்நிதி சிறிய அளவில் அமைந்துள்ளது. வரதராஜப் பெருமாளை எதிர் நின்று வணங்குவது போல் காட்சி தருகிறார்.
பழனியாண்டவர் சந்நிதி:
வெளிப் பிரகாரத்தின் மேற்குப் பக்கத்தில் பழனி ஆண்டவர் சன்னிதி உள்ளது. ஆண்டிக் கோலத்துடன் முருகன் காட்சி தருகிறார்.
வாழவந்தம்மன் சன்னிதி:
வெளிப்பிரகாரத்தின் வடக்குப்பக்கத்தில் வாழவந்தம்மன் சந்நிதி உள்ளது. எட்டுத் தூண்களை உடையதாய் வெளி மண்டபம் அமைந்துள்ளது. வாழவந்தம்மன் என்று சிறு தெய்வத்தின் பெயர் இருந்தாலும், துர்க்கையம்மன் வடிவத்தில் இவ் அம்மன் காட்சி தருவது குறிப்பிடத்தக்கது ஆகும். சிவன், விஷ்ணு சேர்ந்த அம்சமாகக் கையில் சங்குசக்கர இலட்சினைகளுடன், எருமைக் கடா மீது நிற்கும் தோற்றத்துடன் கூடிய துர்க்கையின் தோற்றமாகவே இவ் அம்மன் தோற்றம் அமைந்துள்ளது.
கலா மண்டபம்:
கிழக்கு வெளிப் பிரகாரத்தின் வடபகுதியில் இம்மண்டபம் அமைந்துள்ளது. கோயிலின் விழாக் காலங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் இடமாக இம்மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தின் கிழக்கே உட்புறச் சுவரில் அழகிய வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டு உள்ளன. அவை விநாயகர் வடிவம், மார்க்கண்டேயனுக்கு இறைவன் அருள் புரிதல், பார்வதி - பரமேஸ்வரன் திருக்கல்யாணம், காளை வாகனத்தில் சிவபெருமானும் உமாதேவியும் முருகனைத் தம் மடி மீது அமர்த்திக் காட்சி தருதல், சுப்பிரமணியர் தம் இரு தேவியருடன் காட்சி தருதல் ஆகியனவாம்.
பிற செய்திகள்:
கிழக்கு வெளிப் பிரகாரத்தில் அம்மன் சந்நிதிக்கு நேரே உள்ள வாயிலை ஒட்டிக் கீழே விநாயகரும் மேலே ஆஞ்சநேயர் சங்கு சக்கரம் பொறித்த கற்றூண் ஒன்றும் உள்ளது.
அம்மன் சந்நிதிக்கு நேராக வெளிப் பிரகாரத்தில் இருந்த தெப்பம் இப்பொழுது மூடப்பட்டு விட்டது. கிழக்கு வெளிப் பிரகாரத்தின் வட பகுதியில் இருந்த கிணறு மூடப்பட்டுக் கலாமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது .
அமுதலிங்கேஸ்வரர் சந்நிதியிலுள்ள கல்யாண மண்டபத்திலும், அமுதலிங்கேஸ்வரர் - அமுதவல்லி அம்மன் சந்நிதிகளிலுமுள்ள மகாமண்டபங்களிலும், வரதராஜப் பெருமாள் சந்நிதியின் வெளிமண்டபத்திலும் , அனவரத செல்வ விநாயகர், முத்துக்குமாரசாமி சந்நிதிகளின் முன் மண்டபங்களிலும், தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், கருடாழ்வார், ஆகிய மூர்த்திகளின் மண்டபங்களிலும் வாழவந்தம்மன் சந்நிதியின் முன்மண்டபத்திலும் உள்ள தூண்களில் கோயில் திருப்பணி செய்துள்ள ஆன்றோர்களின் உருவங்கள் அழகுறச் செதுக்கப்பட்டுள்ளன. இன்றும் திருப்பணி செய்பவரின் உருவங்கள் செதுக்கப்பட்டு நிறுவப்பெறுவது குறிப்பிடத்தக்க செயலாகும். திருப்பணி செய்தவர்கள் நித்திய பூஜை செய்வதைக் காட்டுவதாக இது அமைகிறது.
மண்டபங்களில் அமைந்துள்ள தூண்கள் சதுர வடிவினவாய்ப் பதினாறு பட்டை வடிவத்தில் அமைந்துள்ளன. அமுதலிங்கேஸ்வரர், அமுதவல்லி அம்மன், வரதராஜப் பெருமாள், நடராஜர், விநாயகர், முருகன் ஆகிய சந்நிதிகளில் உள்ள கருவறை மீது கோபுர அமைப்பு உள்ளது. கோயில் திருப்பணி செய்தவர்களின் பட்டியல் பின்னிணைப்பில் தரப்பட்டுள்ளது4.
முத்து மாரியம்மன் கோவில்:
முத்து மாரியம்மன் கோயில் சைவபானு ஷத்திரியர் பெண்கள் மேல்நிலைப்பள்ளிச் சாலையில் அமைந்துள்ளது. கோயிலை அடையச் சாலையிலிருந்து இறங்கி வடபுறமாகச் சென்று கிழக்கே திரும்ப வேண்டும். கோயில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. இதன் பபரப்பளவு சுமார் 10000 சதுர அடியாகும். கோயில் கட்டிடம் உள்ள பகுதி சுமார் 2576 சதுர அடியாகும். கோயிலின் முன்புறம், வெளிமண்டபம், மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை, உட்பிரகாரம் எனும் பகுதிகளாக இக்கோயில் அமைப்பு காணப்படுகிறது. கோயிலின் கிழக்குப் பக்கமும், மேற்குப் பக்கமும் வாயில்கள் உள்ளன. கோயிலைச் சுற்றி நான்கு பக்கமும் பரந்த வெளி உள்ளது.
கோயில் முன்புறம்:
கோயிலின் முன்புறத்தில் வைரவ நாதர் பீடநிலையில் அமைக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்துக் கொடிக் கம்பம் உள்ளது.
வெளிமண்டபம்:
கோயில் நுழைவாயிலின் முன்புறம் உள்ள மண்டபம் வெளிமண்டபம் ஆகும். இம்மண்டபம் இரண்டு தூண்களை உடையது. இத்தூண்கள் சதுர வடிவமாய் எட்டுப் பட்டைகளுடன் சித்திர வேலைப்பாடுகள் நிறைந்து காணப்படுகின்றன. சிறு தெய்வக் கோயிலாக இருப்பினும் கோயில் முன் உயிர்ப்பலி கொடுக்கக் கூடாது என்று அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இவ் அறிவிப்பின் காரணமாகப் பங்குனிப் பொங்கலின் போது ஒன்பதாம் திருவிழா நாளன்று காலையில் ஆடு, சேவல் முதலியன வெட்டி உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கம் ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது.
மகா மண்டபம்:
வெளி மண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றால் நான்கு தூண்களுடன் கூடிய மகாமண்டபத்தைக் காணலாம். இதனை நான்கு கால் மண்டபம் என்றும் அழைப்பர்.
அர்த்த மண்டபம்:
மகாமண்டபத்தை அடுத்துள்ளது அர்த்தமண்டபம் ஆகும். இம்மண்டபத்தில் விநாயகரும் சுப்பிரமணியரும் உள்ளனர். உற்சவமூர்த்திகளான முத்துமாரியும் துர்க்கையும் இங்கு இடம் பெற்றுள்ளனர்.
கருவறை:
கருவறையில் அம்மன் தோற்றம் பீடநிலையிலேயே உள்ளது. உருவத்தோடு கூடிய திருவாச்சியைப் பீடத்தின் மேல் வைத்துப் பூஜை செய்வர் அம்மன் நான்கு கரங்களுடன் சாந்த முகத்துடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். மாரியம்மனின் நின்ற தோற்றம் பிற இடங்களில் காண முடியாத தோற்றமாகும். நான்கு கரங்களில் முறையே உடுக்கை, சூலம் பாசம் அக்கினி ஆகியனவற்றை ஏந்திக் கொண்டு அம்மன் காட்சி தருகிறாள். கருவறையின் மேற்கூரையில் கோபுர அமைப்பு உள்ளது.
உட்பிரகாரம்:
கோயிலின் உட்பிரகாரத்தில் தெற்குப் பக்கத்தில் வாழவந்தம்மன் சந்நிதி உள்ளது. இங்கு வாழவந்தம்மன் பீடநிலையில் காட்சி தருகிறார். அம்மனுக்குக் கிழக்கே சந்திவீரசாமி, வராகி, ஆரணி, பைரவி, மாதங்கி, முத்தாலம்மன் ஆகியோர் சிறுசிறு பீட நிலையில் அமைக்கப்பட்டுள்ளனர். அம்மனின் மேற்குப் பக்கம் முக்கனி, சுந்தரி, தேவி, உச்சயினி, சூலி, கருப்பணசாமி ஆகியோரும் சிறுசிறு பீடநிலையில் காட்சி தருகின்றனர். நாடார் சமூகத்தார் வழிபடும் குலதெய்வங்களாக இவை அமைகின்றன.
நாடார் சமூகத்தினரின் பண்டைய வழிபாட்டு முறையினை வெளிப்படுத்துவதாக இச்சந்நிதி அமைந்திருக்கிறது. சிறுதெய்வ வழிபாட்டு நெறியினரான நாடார் சமூகத்தினரின் குலதெய்வங்களாக இவர்கள் இருந்திருக்கின்றனர். முத்து மாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா நடைபெறும் பொழுது இங்குள்ள வாழவந்தம்மனுக்குப் பொங்கலிட்டு வழிபடுவர். அவ்வாறு வழிபடும் பொழுது அருகில் வேறு பல சிறுதெய்வங்களுக்கும் பீடங்கள் அமைத்து வழிபாடு நடத்தி விட்டு அவற்றை அழித்து விடுவது வழக்கம். சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் வாழவந்தம்மனுக்குக் கல்லால் பீடம் அமைத்து வழிபட்டுள்ளனர். அதனைச் சுற்றி அமைத்த பிற தெய்வ பீடங்களையும் அழிக்காமல் விட்டு விட்டனர் என்று தகவலாளர்கள் கூறுகின்றனர். அவை இன்று எல்லோராலும் வழிபடப்படுகின்றன. எனவே வாழவந்தம்மனைத் தலைமைத் தெய்வமாக நடுவிடத்தே கொண்டு சிறு தெய்வங்கள் சுற்றிலும் அமைய இச்சந்நிதி அமைந்திருக்கின்றது.
அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள வாழவந்தம்மன் சந்நிதியில் எழுந்தருளியுள்ள வாழவந்தம்மன் துர்க்கை வடிவினை உடையதாய் விளங்க; முத்து மாரியம்மன் கோயிலில் உள்ள வாழவந்தம்மன் சந்நிதியில் வாழவந்தம்மன் பீடநிலையில் எழுந்தருளி இருப்பது சிந்திக்கத்தக்க ஒன்றாய் அமைந்துள்ளது. மேலும் அருப்புக்கோட்டையில் சொக்கலிங்கபுரம் என்னும் பகுதியில் அமைந்த காட்டுவாழவந்தம்மன் கோயில் என்று அழைக்கப்படும் கோயிலில் இரு அம்மன் வடிவங்கள் காணப்படுகின்றன. கருவறையில் இருக்கும் அம்மன் பன்னிரு கரங்களுடன் அசுரனை அழிக்கும் ஊர்த்துவ நாயகியாய் விளங்குகிறாள். வெளிப்புறத்தில் அமைந்த அம்மன் தான்தோன்றி அம்மன் என்னும் பெயருடன் பூமியிலிருந்து தோன்றிய தோற்றத்துடன் இடுப்பு வரை உள்ள பகுதிகளே தெரியக் காட்சி தருகின்றாள் முகம், கை, மார்பு போன்ற பகுதிகளும் தெளிவான தோற்றத்துடன் காணப்படவில்லை. இவ் அம்மனையும் வாழவந்தம்மன் என்றே மக்கள் குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறு வாழவந்தம்மன் என்னும் பெயரில் பல வடிவங்களுடன் வாழவந்தம்மன் காட்சி தருவதை அருப்புக்கோட்டையிலுள்ள கோயில்களில் காண முடிகிறது.
தொடரும்
வால சுப்பிரமணியசாமி கோயில்:
வால சுப்பிரமணியசாமி கோயில் ஊரின் பெரிய கடைவீதியில் வடக்கு, கிழக்கு, மேற்கு ஆகிய திசைகள் கூடுமிடத்தில் அமைந்துள்ளது. அமுதலிங்கேஸ்வரர் கோயிலிலிருந்து நேராகக் கடைவீதி வழியே சென்றால் சுமார் ஒரு பர்லாங்கு தொலைவில் இக் கோயிலை அடையலாம்.
“கலகலத்த மூன்றுவீதி கூடுகின்ற அருப்புக்
கோட்டையெனும் நல்லூரின் மையமதில்
வலதுகரம் வேலேந்திக் காட்சி தரும் வாலனே”
என்று வால சுப்பிரமணியர் பதிகம் இக்கோயிலின் இருப்பிடத்தை எடுத்து உரைக்கிறது.
சுமார் தென்மேல் 38' கீழ்மேல் 88' ஆக 3344 சதுரஅடி நிலப்பரப்பில் இக்கோயில் அமைந்திருக்கிறது. இக்கோயில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது; அளவில் சிறியதாக உள்ளது. கோயில் சிறிய அளவில் இருந்தாலும் நெடிய கதவுகளை உடையதாய் உயர்ந்த தோற்றத்துடன் விளங்குகின்றது. ஆறுகால் மண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை, உட்பிரகாரம் என்னும் பகுதிகளை மட்டும் கொண்டது. கோயிலில் பிற சந்நிதிகளோ வெளிப் பிரகாரமோ கிடையாது.
ஆறு கால் மண்டபம்:
ஆறுகால் மண்டபத்தின் இருபக்கங்களிலும் படிகள் உண்டு. இம்மண்டபத்தில் உள்ள படிகள் வழியாக ஏறி மகாமண்டபம் செல்ல வேண்டும். இம்மண்டபத்தின் வாயிலில் துவார பாலகர்கள் இல்லை. இவ் ஆண்டு மாசிமாதம் அமாவாசை நாளன்று துவார பாலகர்கள் செய்யப்பட்டு வந்துள்ளன. அவை இனி பிரதிஷ்டை செய்யப்படும்.
மகா மண்டபம்:
மகாமண்டபத்தில் மயிலும், பலிபீடமும் அமைந்துள்ளன. மகா மண்டபத்தின் இடதுபுறம் ஒரு வாயில் உள்ளது. இதன் வழியாக உட்பிரகாரம் செல்லலாம்.
அர்த்தமண்டபம்:
மகாமண்டபத்தை அடுத்து அர்த்தமண்டபம் உள்ளது.
கருவறை:
அர்த்தமண்டபத்தை அடுத்துக் கருவறை அமைந்துள்ளது. கருவறையில் முருகன் தன் இரு கைகளில் வேலும், சேவற்கொடியும் ஏந்தியவராய்க் காட்சி தருகிறார்.
உட்பிரகாரம்:
கோயிலின் வாசலை அடுத்து உட்பிரகாரம் அமைந்துள்ளது. வாசலை ஒட்டி வலப்பக்கம் உட்பிரகாரத்தில் விநாயகர் எழுந்தருளியுள்ளார். பிற கடவுளர் எவரும் இக்கோயிலில் இடம் பெறவில்லை. ஆறு கால் மண்டபத்தின் முன் உள்ள உட்பிரகாரப் பகுதியில் பன்னிரண்டு தூண்கள் அமைந்துள்ளன.
மக்கள் நடமாட்டம் மிகுதியாக உள்ள கடைவீதியில் இக்கோயில் அமைந்திருப்பதால் அதிகமான மக்கள் வந்து வழிபடுகின்றனர். கோயிலின் முன் வாசலை ஒட்டி இருமருங்கிலும் பூக்கடைகளும், அவற்றை அடுத்துச் சுற்றிலும் பிற கடைகளும் அமைந்துள்ளன.
சந்திவீரசாமி கோயில்:
அருப்புக்கோட்டையிலிருந்து மதுரை செல்லும் வழியில் உள்ள பெரிய கடைவீதியில் சந்திவீரசாமி கோயில் உள்ளது. பெரிய கடைவீதியில் அமைந்த நாடார் உறவின்முறை மகமைக் கடைக்கு எதிர்ப்புறத்தில் சற்றுத் தள்ளி இக்கோயில் அமைந்துள்ளது.
கோயில் சதுர வடிவில் (9 1/2'×9 1/2') அமைந்துள்ளது. நாடார் சமூகத்திலுள்ள பூசாரி வகையறா என்னும் குழுவினருக்குக் குலதெய்வக் கோயிலாகும். இக்கோயிலைக் கட்டியவர் பூசாரி வகையறாவினரே. கோயிலைப் பராமரிக்க இயலாத காரணத்தால் உறவின்முறையாரிடம் ஒப்புவித்துள்ளனர். கோயிலின் நிர்வாகத்தை மட்டும் உறவின்முறையாரிடம் கொடுத்துவிட்டு பூஜை செய்யும் உரிமையை இவர்களே வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
நான்கு தூண்களாலான மண்டபத்தில் 4' உயரமுள்ள பீடத்தில் இறைவன் எழுந்தருளியுள்ளார். எனவே எல்லோரும் எளிதாகத் தரிசனம் செய்ய ஏதுவாக உள்ளது. இலிங்க வடிவத்தில் இறைவன் காட்சி தருகிறார். இது சுமார் 4' உயரமுள்ள பெரிய இலிங்கம் ஆகும்.
கோயிலுக்கென்று வாசலோ பிரகாரமோ இல்லாமல் மிகச் சிறிய அளவில் அமைந்த கோயிலாகும். இது வழிச்செல்வோர் பாதையிலேயே நின்று இறைவனை வழிபட்டுச் செல்லக் கூடியதாக அமைந்துள்ளது.
கோயிலின் பின்புறத்தில் தண்ணீர்ப்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இத்தண்ணீர்ப் பந்தல் கிராம மக்களுக்கு உதவும் நோக்கத்தில் அமைக்கப்பட்டதாகும். இன்றும் இத்தருமம் நாடார் உறவின்முறையால் செவ்வனே நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
சித்தி விநாயகர் கோயில்:
சைவபானு ஷத்திரிய மேல்நிலைப்பள்ளிச் சாலை என்று வழங்கப்படுகின்ற சாலையில் இக்கோயில் அமைந்துள்ளது. முத்துமாரியம்மன் கோயிலுக்கு மிக அருகில் உள்ளது. சைவபானு ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் மதிற்சுவரை அடுத்து அமைந்துள்ளது. இக்கோயில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. வேம்பு அரசு ஆகிய மரங்களின் கீழ் உள்ள மேடையில் விநாயகர் எழுந்தருளியுள்ளார். மிகச் சிறிய அளவிலேயே இக்கோயில் அமைந்துள்ளது.
முடிவுரை:
கோயில்களின் அமைப்பு முழுவதையும் கலை வடிவமாக அமைப்பதில் மிகுந்த அக்கறை கொண்டு உள்ளனர் . பெருந்தெய்வ நெறியை மேற்கொள்ள விரும்பியதால் பெருந்தெய்வக் கோயில் அமைப்பு முறையையே பின்பற்றி உள்ளனர் . முத்துமாரியம்மன் கோயிலையும் கற்றளியாக அமைத்து நல்ல தோற்றத்துடன் விளங்கச் செய்து உள்ளனர். மக்கள் எளிதாக இறைவனை வழிபட கோயில்கள் நகருக்குள் ஒன்றுக்கொன்று அருகிலேயே அமைந்துள்ளன.
குறிப்புகள்
1. சொ. இராஜாமணிப்பட்டர், அ. காசி - 'அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை பொது அருள்மிகு அமுதலிங்கேஸ்வரர் திருத்தல வரலாறும் திருவாலய அமைப்பும் - ப. 31
2. Ibid. - ப. - 13
3. Ibid. - ப. - 38
4. பின்னிணைப்பு - 5
(தொடரும்)
5.கோயில்களின் நாள் வழிபாடு
முன்னுரை
அமுதலிங்கேஸ்வரர் கோயில்
திருப்பள்ளியெழுச்சி
காலை- சந்தி
உச்சிக்காலம்
மாலை- சந்தி
அர்த்தசாமம்-பள்ளியறை
முத்துமாரியம்மன் கோயில்
காலை- சந்தி
உச்சிக்காலம்
இரவுபூசை
வாலசுப்பிரமணிய சாமி கோயில்
காலை- சந்தி
மாலை- சந்தி
சந்திவீரசாமி கோயில்
சித்தி விநாயகர் கோயில்
ஏனாதிநாத நாயனார் மடம்
முடிவுரை
கோயில்களில் நாள்வழிபாடு
முன்னுரை
மக்களின் சமய வாழ்வில் இன்றியமையாத இடத்தைப் பெறுவது கோயிலாகும். கோயிலுக்குச் சென்று இறைவனின் வழிபாட்டில் கலந்து கொள்வதை மக்கள் பெறற்கரிய பேறாகக் கருதுகின்றனர். தங்களின் அன்றாட வேலைகளில் ஒன்றாகவே இறைவழிபாட்டை நினைக்கின்றனர். கோயில்களில் நடைபெறும் வழிபாடுகள் கோயில்களின் சிறப்பை உணர்த்துவனவாக அமைகின்றன.
கோயில்களில் நிகழும் பூசையினை நித்திய, நைமித்திய, காமிய பூசைகள் என மூன்றாகப் பாகுபாடு செய்வர். நித்திய பூசை என்பது அன்றாடம் நிகழ்வது. ஏதேனும் ஒரு நிமித்தம் பற்றி நிகழ்வது நைமித்திய பூசையாகும். இதனைப் புண்ணிய காலங்களில் செய்யப்படும் சிறப்பு பூசை எனலாம். நித்திய பூசையில் தாழ்வு வந்துழிச் செய்வது நைமித்தியம் என்றும் ஆன்றோர் கூறுவர். தனிப்பட்டவர்களின் வேண்டுதலாகச் செய்யும் பூசை காமிய பூசையாகும்.
பூசை இல்லாவிட்டால் ரோகமும், புஷ்பம் இல்லாவிட்டால் குலநாசமும், சந்தனமில்லாவிடில் குஷ்டரோகமும், ஜலமில்லாவிடில் துக்கமும், தூபம் இல்லாவிடில் சுகத்தின் நாசமும், நைவேத்யமில்லாவிடில் துர்மிஷமும், மந்திரமில்லாவிடில் தரித்திரமும், வஸ்திரமில்லாவிடில் மகாரோகமும், ஹோமமில்லாவிடில் குலக்ஷயமும், பலி இல்லாவிடில் கிராம நாசமும், நெய் இல்லாவிடில் மரணமும்; வில்வம், அறுகு, அக்ஷதை இல்லாவிடில் சத்ருபயமும், மணி இல்லாவிடில் செவிட்டுத் தன்மையும், முத்திரை இல்லாவிடில் அசுரபயமும்; நித்யாக்னி காரியமில்லாவிடில் அரசர், இராஜ்யம் இவைகளுக்குக் கோபமும், பயமும், சர்வதிரவியமில்லாவிடில் தேவதைகளுக்குக் கோபமும் உண்டாகும். எல்லாத் திரவியங்களும் இல்லாவிடில் அளவுகடந்த தீங்கும் உண்டாகும். ஆதலால் சர்வமுயற்சியாலும் பூஜையைப் பக்தியோடு நன்றாய்ச் செய்ய வேண்டும் என்று காரண ஆகமம் கூறுகிறது1.
கோயில்களில் ஒரு கால பூஜையிலிருந்து ஆறு கால பூஜைகள் வரையிலும் நிகழ்கின்றன. இதற்கு மேலும் நடைபெறுகின்ற கோயில்களும் உண்டு. திருவனந்தல் அல்லது திருப்பள்ளியெழுச்சி, காலைசந்தி, உச்சிக்காலம், மாலைசந்தி, இரண்டாம்கால பூஜை, அர்த்த சாமபூசை என்பன ஆறு காலங்களில் நடைபெறும் பூசைகளின் பெயர்களாகும்.
காலை பள்ளிதிறப்பு முதல் இரவு சயனாலயம் பூஜை வரை நடைபெறுவன யாவும் இறைவனுடைய படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்று ஐந்து தொழில் முறைகளை விளக்குவனவாம். காலையில் பள்ளியறை திறப்பு; சிவனும் சக்தியும் பிரிந்து தொழிற்படுவதால் உண்டாகும் தோற்றத்தையும், இரவு பள்ளியறை மூடுதல்; சக்தியானது சிவத்தில் ஒடுங்கும் போது ஏற்படும் லயத்தையும் குறிப்பிடுவன2. இவை உலக மக்கள் நன்மையின் பொருட்டுச் செய்யப்படுவனவாம்.
திருவனந்தல் அல்லது திருப்பள்ளியெழுச்சி
காலை ஐந்து மணி அளவில் நிகழ்வதாகும். கதிரவன் தோன்றுவதற்கு முன் பள்ளியறையில் துயில் கொள்வதாகப் பாவிக்கப் பெற்ற இறைவனைத் துயில்எழ வேண்டிப் பல்லக்கில் ஏற்றிக் கருவறைக்குக் கொண்டு வருவர். பள்ளியறை மூர்த்தியில் துயில் ஒடுங்குவதாகப் பாவிக்கப் பெற்ற தெய்வீக சக்தியை மூலத்தானத்தே கோயிலில் எழுந்தருளச் செய்வதாகும்.
காலை - சந்தி
கதிரவன் தோன்றும் போது நடைபெறுவது இது. முதலில் சூரியனுக்குப் பூஜை செய்த பின்னரே விநாயகருக்கும் அதனையடுத்து மூலத்தானத்து இலிங்கத்துக்கும் பின் சுற்றுத் தெய்வங்களுக்கும் பூசை செய்வர்.
உச்சிக்கால பூசை
நண்பகலின் போது நடைபெறுவது. இப்பூசையிளைப் பல கோயில்களில் சிறப்பாக நடத்துவர். சிறப்பாக அபிஷேகம் செய்து நன்றாக அலங்காரம் செய்து நைவேத்யம் படைத்துப் பின் தீபாராதனை காட்டுவர்.
மாலை - சந்தி
கதிரவன் மறையும் நேரம் செய்யப்படுவது. முதலில் விநாயகருக்கும் அடுத்து மூலவருக்கும் அதனையடுத்து சுற்றுத் தெய்வங்களுக்கும் பூசை நடைபெறும்.
இரண்டாம் கால சந்தி
மாலை பூஜை முடிந்து ஒன்றரை மணி நேரம் கழிந்த பின்பு இப்பூசையினைச் செய்வர்.
அர்த்த சாமபூசை
இரண்டாம் கால பூஜை முடிந்து பின்னர் ஒன்றரை மணி நேரம் கழிந்த பின்பே இப்பூசை நடைபெறும். பள்ளியறை பூஜை என்றும் சொல்வர். அபிஷேகம், அலங்காரம், நைவேத்யங்களோடு, இப்பூசையைச் செய்வர். இறைவனைப் பள்ளியறைக்கு அழைத்து ச் சென்று வாசனைப் பொருள்களைப் படைத்துப் பள்ளி கொள்ள வேண்டுவர். பின் சண்டேசுர பூசை செய்து பைரவர் சந்நிதி சென்று பூசை நிகழ்த்திக் கோயில் திறவுகோலை அவரிடம் ஒப்படைத்தல் என்பது மரபாகும். காலையிலும் அவரிடம் திறவு கோலைப் பெற்றே கோயில் திறப்பதாக மரபு.
இந்நாள் வழிபாடு அருப்புக்கோட்டை உறவின்முறைக் கோயில்களில் நடைபெறும் முறைகளை இப்பகுதியில் காண்போம்.
அமுதலிங்கேஸ்வரர் கோயில்
அமுதலிங்கேஸ்வரர் கோயிலின் நாள் வழிபாடு காரண ஆகமப்படி நடைபெறுவதாகக் கூறுகின்றனர். நாள்தோறும் ஐந்து காலங்களில் வழிபாடு நடத்தப்படுகிறது. அவை திருப்பள்ளியெழுச்சி, காலைசந்தி ,உச்சிக்காலம், மாலைசந்தி, அர்த்த சாமம்- பள்ளியறை என்பன.
திருப்பள்ளியெழுச்சி
இவ்வழிபாடு காலை ஆறு மணிக்கு நடைபெறும். பள்ளியறையில் துயில் கொள்வதாகப் பாவிக்கப் பெற்ற இறைவனைத் துயிலெழச் செய்து கருவறைக்குக் கொண்டு வருவர். விநாயகருக்கு வழிபாடு செய்து தொடங்கப்படும்.
காலை - சந்தி
காலை- சந்தி வழிபாடு காலை எட்டு மணிக்கு நடைபெறும். கோயிலில் உள்ள அனைத்து மூர்த்திகளையும் நீராட்டி, மலர்மாலை அணிவித்து அலங்காரம் செய்து வழிபாடு நடைபெறும். சுத்த அன்னம் நைவேத்யப் பொருளாகும். வரிசைக் கிரமமாக குடதீபாராதனை காட்டப்படும். விக்னேஸ்வரர், சுப்பிரமணியர், அமுத லிங்கேஸ்வரர், நடராஜர், சோமாஸ்கந்தர், பிள்ளையார், அமுத வல்லியம்மன், சக்திவேலர், தட்சிணாமூர்த்தி, அனவரத செல்வவிநாயகர், முத்துமுருகன், அறுபத்துமூன்று நாயன்மார்கள், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அண்ணாமலையார், துர்க்கை, சனீஸ்வரர், பைரவர், நவக்கிரகம், கார்த்திகை - சந்திரன்- ரோகிணி, உஷா- சூரியன்- பிரதியுக்ஷா, வல்லபகணபதி, கற்பகவல்லி, பாலசண்முகர், வரதராஜப்பெருமாள், கருடாழ்வார், ஆஞ்சநேயர், பழனியாண்டவர், வாழவந்தம்மன், விநாயகர் (வெளிப்பிரகாரம்), ஆஞ்சநேயர் (வெளிப்பிரகாரத்தூண்), கொடிக்கம்பம், பலிபீடம், அமுதலிங்கேஸ்வரர் என்னும் வரிசையில் தீபாராதனை காட்டப்படும்.
உச்சிக்காலம்
நண்பகல் பன்னிரண்டு மணிக்கு நடைபெறும் பூசை உச்சிக்கால பூசை ஆகும். காலை சந்தி நடைபெற்ற வரிசை முறையிலேயே தீபாராதனை செய்யப்படும். நைவேத்தியப்பொருள் சுத்த அன்னம் ஆகும்.
இவ் வழிபாடு முடிந்த பின் கோயில் கதவுகள் சாத்தப்படும். மீண்டும் கோயில் நாலரை மணிக்குத் திறக்கப்படும்.
மாலை - சந்தி
இவ்வழிபாடு இரவு ஏழு மணிக்கு நடைபெறும். இதனைச் சாயரட்சை என்றும் கூறுவர். எல்லா மூர்த்திகளுக்கும் மலர் மாலை அணிவித்து தீபாராதனை காட்டுவர். காலை- சந்தி நடைபெற்ற வரிசை முறையிலேயே ஆராதனை நிகழும்.
அர்த்த சாமம்- பள்ளியறை
இவ்வழிபாடு இரவு பத்து மணிக்கு நடைபெறும். அமுத லிங்கேஸ்வரருக்கும், அமுத வல்லியம்மனுக்கும் மட்டும் வழிபாடு நடைபெறும். இறைவனைப் பள்ளியறைக்குக் கொண்டு சென்று தீபாராதனை காட்டி அங்குத் துயிலச் செய்வர்.
நாள்தோறும் நடைபெறும் நாள்வழிபாட்டில் சுத்தஅன்னம் நைவேத்யப் பொருளாகும். அமுதலிங்கேஸ்வரர், அமுதவல்லியம்மன் இருவருக்கு மட்டும் மாலையில் நீராட்டு நடைபெறும். நாள்தோறும் காலை நாலேமுக்கால் மணி முதல் ஐந்தேகால் மணி வரை பக்திப்பாடல்கள் ஒலிபரப்பப்படும். காலையில் மக்கள் சிலரே வந்து வழிபாட்டில் கலந்து கொள்வர். திருப்பள்ளியெழுச்சி, உச்சிக்காலபூசை, அர்த்தஜாமபூசை ஆகிய வழிபாடுகளில் மிகச் சிலரே வந்து இறைவனை வணங்குவர். மாலையில் நடைபெறும் பூசையில் பெரும்பாலான மக்கள் வந்து வழிபடுவர்.
மக்கள் தங்கள் குறைகளைக் களைவதற்காகவும், வாழ்வில் அமைதி கிடைப்பதற்கும் குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட தெய்வங்களை வந்து வழிபட்டுச் செல்வர். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கும், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கும், அனுமனுக்கும் சனிக் கிழமைகளில் சனீஸ்வரனுக்கும் வழிபாடு நிகழ்த்த மக்கள் பலர் வருவர்.
முத்து மாரியம்மன் கோயில்
இக்கோயிலில் நாள்தோறும் மூன்று முறை மட்டும் வழிபாடு நடக்கும். காலை, பகல், இரவு ஆகிய மூன்று வேளைகளில் வழிபாடு நடைபெறும்.
காலை- சந்தி
(தொடரும்)
காலை எட்டரை மணிக்கு முதல் பூசை நடைபெறும். கருவறையில் இருக்கும் அம்மனுக்குப் பீடநிலையிலேயே திருநீராட்டு நடைபெறும். பால், மஞ்சள் காப்பு, எண்ணெய் அபிஷேகம் நடத்திய பின்னர் திருவாச்சியுடன் கூடிய அம்மனை வைத்து அலங்காரம் செய்வர். அம்மனை அலங்கரித்த பின்னர் தீபாராதனை காட்டுவர். சாம்பிராணிப் புகை காட்டிச் சூடதீபம் காட்டுவர். குங்கும அர்ச்சனை செய்வர். சுத்த அன்னம் நைவேத்யப் பொருளாகும்.
வழிபாட்டு வரிசை முறையானது; விநாயகர், சுப்பிரமணியர், கருவறையில் பீடம், பின்னர் பீடத்தில் திருவாச்சியுடன் கூடிய அம்மன், உற்சவமூர்த்திகள், வாழவந்தம்மன், சந்திவீரசாமி, வராகி, ஆரணி, பைரவி , மாதங்கி, முத்தாலம்மன், முக்கனி, சுந்தரி, தேவி, உச்சயினி, சூலி, கருப்பணசாமி, கொடிமரம், பலிபீடம், அம்மன் என்னும் வரிசையில் அமையும்.
உச்சிக்காலம்
நண்பகல் பன்னிரண்டு மணிக்கு இப்பூசை நடைபெறும். காலை சந்தி பூசை நடைபெற்ற முறையிலேயே எந்தவித வேறுபாடும் இன்றி நிகழும்.
இரவு- பூசை
இரவு எட்டு மணிக்கு இரவு பூசை நடைபெறும். காலை சந்தி பூசை நடைபெற்ற முறையிலேயே நிகழும். ஆனால் நைவேத்தியப்பொருள் மட்டும் பொங்கலாக இருக்கும்.
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பெருந்திரளாக மக்கள் வந்து வழிபடுவர். அம்மனுக்கு எண்ணெயைக் காணிக்கைப் பொருளாகக் கொண்டு வருவர். வழிபாட்டில் கலந்து கொள்ளும் போது மக்கள் குலவை இடுவர். அம்மன் புகழ் பாடும் பாமாலைகளைப் பாடுவர். சிவன் கோயிலுக்குச் செல்லும் கூட்டத்தை விட இங்கு மக்கள் கூட்டம் மிகுதியாகவே இருக்கும்.
வாலசுப்பிரமணியர் கோயில்
வாலசுப்பிரமணியர் கோயிலில் இரண்டு வேளை வழிபாடு நடைபெறும். காலையிலும் மாலையிலும் பூசை நிகழும். இரு பூசைகளும் வேறுபாடின்றி நடைபெறும். இக்கோயிலில் எழுந்தருளி இருக்கும் விநாயகரையும் கருவறை முருகனையும் முதலில் நீராட்டுவர். பின்னர் அலங்காரம் செய்வர். அதன் பின் சூடதீபம் காட்டுவர். சுத்த அன்னம் நைவேத்யப் பொருளாகும். இம் முறையிலேயே இரு வழிபாடுகளும் நடைபெறும்.
சந்திவீரசாமி கோயில்
சந்திவீரசாமி கோயிலில் முறையான நாள்வழிபாடு இல்லை. கடைவீதி வழியாகச் செல்வோர் சந்தி வீரசாமியைக் கும்பிட்டு விட்டுச் செல்வர்.
சித்தி விநாயகர் கோயில்
சித்தி விநாயகர் கோயிலிலும் முறையான நாள்வழிபாடு இல்லை. அதிகாலையில் இக்கோயிலின் அருகாமையில் உள்ள தெப்பக்குளத்தில் குளித்து விட்டு வரும் மக்கள் சித்திவிநாயகரை சூடதீபாராதனை செய்து வழிபட்டுச் செல்வர். தனிப்பட்ட முறையில் வழிபாடு நிகழ்த்த விரும்பும் மக்கள் அருகிலுள்ள மாரியம்மன் கோயில் அர்ச்சகரைக் கொண்டு நிறைவேற்றுவர். மார்கழி மாதம் முப்பது நாட்களும் மாரியம்மன் கோயில் அர்ச்சகர் அதிகாலையில் விநாயகருக்கு அபிஷேகம் செய்வித்து அலங்காரம் செய்து தீபாராதனை காட்டுவார்.
ஏனாதி நாதநாயனார் மடம்
ஏனாதி நாதநாயனார் மடத்தில் உள்ள ஏனாதி நாதநாயனார் திருவுருவப் படத்திற்குக் காலையிலும் மாலையிலும் சூடதீபம் காட்டி வழிபாடு நடைபெறும்.
முடிவுரை
மக்கள் தங்கள் கவலைகளை மறக்கவும், மன அமைதி பெறவும், இறைவனைக் கண்டு களிக்கவும் கோயிலுக்குச் செல்கின்றனர். உள்ளத் தூய்மையுடனும், புறத்தூய்மையுடனும் கோயிலுக்குள் வலம் வரும் பொழுது தங்கள் புறவாழ்வுச் சிக்கலை மறந்து, இறை உணர்வில் ஈடுபட்டு மனத்தெளிவு பெறுகின்றனர். சமய வாழ்வும், இறைவழிபாடும் ஒன்றிணைந்து மலரும் போது மக்கள் சமுதாயத்திலே ஒற்றுமை உறுதி அடைகிறது.
குறிப்புகள்
1. அ.செல்வ பாண்டியன் - ஆலயங்களின் உட்பொருள் விளக்கம் - தொகுதி - 2-ப . 268 .
2. ibid. - ப. -203
(தொடரும்)
ஆண்டு விழாக்களும் பிற விழாக்களும்
முன்னுரை
அமுதலிங்கேஸ்வரர் கோயில்
வைகாசி விசாகத் திருவிழா
முத்துமாரியம்மன் கோயில்
பங்குனிப் பொங்கல் திருவிழா
அமுதலிங்கேஸ்வரர் கோயில்
ஏகாதசி
பிரதோஷம்
கார்த்திகை
சித்திரா பௌர்ணமி முதலியன
மாணிக்கக் காப்பு
நடராஜர் அபிஷேகம்
சூரிய பூசை
முத்து மாரியம்மன் கோயில்
நவராத்திரி
திருக்கார்த்திகை
தெப்பத் திருவிழா
திருவாதிரை
வால சுப்பிரமணியசாமி கோயில்
வைகாசி விசாகம்
கந்த சஷ்டி
திருக்கார்த்திகை
மாசிமாதம்
பங்குனி உத்திரம்
விநாயகசதுர்த்தி
சங்கடஹர சதுர்த்தி
சந்தி வீரசாமி கோயில்
தைப்பொங்கல்
சித்தி விநாயகர் கோயில்
முடிவுரை
ஆண்டு விழாக்களும் பிற விழாக்களும்
முன்னுரை
கோயில்களில் அன்றாடம் நடைபெறும் பூசைகள் மட்டுமின்றிப் பல திருவிழாக்களும் நடைபெறுகின்றன. திருவிழா என்று தமிழிலும், உற்சவம் என்று வடமொழியிலும் வழங்கப்படும் தெய்வத் திருவுலாவானது, பாசச் சேர்க்கையால் மயக்கமுறும் மக்களைப் பாச மயக்கத்திலிருந்து விடுபடச் செய்யும் சாம்பவீதீட்சை என்று ஆகமங்கள் கூறுகின்றன. முன்செய்வினை காரணமாக, அங்கம் நலிவுற்று, நோயுற்றுக் கோயில் சென்று வழிபட இயலாதோர்க்கும், மற்ற எல்லா வகையினருக்கும் ஆண்டவனின் அருள் நோக்கையும், ஆண்டவன் மூலமான ஆசார்யனின் அருள் நோக்கையும் அடையச் செய்வதே சாம்பவீதீட்சையான உற்சவங்களாகும்1. உத்தம யாகமாகிய உற்சவத்தைச் செய்தவர்களும் செய்வித்தவர்களும், உதவி செய்தவர்களும் சகல போகங்களை அனுபவித்து மோட்சத்தை அடைவார்கள்.
பெரிய திருக்கோயில்களில் ஒவ்வொரு மாதமும் ஒரு திருவிழா நடைபெறுவதுண்டு. ஆண்டுக்கு ஒரு முறை அல்லது இரு முறை பிரம்மோத்சவம் எனப்படுகின்ற பெரிய திருவிழாக்கள் நடைபெறுவதுண்டு. இப்பெரிய திருவிழாக்கள் பத்து நாட்களுக்கு மேல் நடைபெறும். அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவும், முத்து மாரியம்மன் கோயிலில் பங்குனிப் பொங்கல் விழாவும் பெரிய திருவிழாக்களாக நடபெற்று வருகின்றன.
அமுதலிங்கேஸ்வரர் கோயில்: வைகாசி விசாகத் திருவிழா
அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் நடைபெறும் பெரிய திருவிழா வைகாசி மாதத்தில் நடைபெறும் வைகாசி விசாகத் திருவிழா ஆகும். இத்திருவிழா பதினோரு நாட்கள் நடைபெறும். இத்திருவிழாவானது வைகாசித் திங்களில் புனர்பூச நட்சத்திர நாளன்று தொடங்கப் பெறும். இத்திருவிழாவின் பத்தாம் நாள் விசாக நட்சத்திரத்தன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடுவர். எனவே இத்திருவிழாவை விசாகத் திருவிழா என்று அழைக்கின்றனர்
அருப்புக்கோட்டையிலுள்ள சொக்கநாதசாமி கோயிலில் ஆனித் திங்களில் திருவிழா கொண்டாடுகின்றனர். அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரைத் திங்களில் திருவிழா கொண்டாடுகின்றனர். இவ்இரு விழாக்களிலும் அருப்புக்கோட்டை மக்கள் பெருந்திரளாகச் சென்று பங்கு கொள்வர். எனவே சித்திரை அல்லது ஆனித் திங்களில் அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் திருவிழா கொண்டாடினால் மக்கள் பலரும் பங்குகொள்ள இயலாமல் போய்விடும். இக்காரணத்தை மனதில் கொண்டே மக்கள் பலரும் பங்கு கொள்ள ஏதுவாக அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் வைகாசித் திங்களில் திருவிழா நடைபெற ஏற்பாடு செய்தனர் என்று தகவலாளர்கள் கூறுகின்றனர்.
முதலாம் திருவிழா
கொடியேற்று விழாவாக முதல் நாள் திருவிழா நடைபெறும். இது திருவிழாவின் தொடக்கத்தை மக்கட்கு அறிவிக்கும் திருநாளாகும். கொடியேற்றத்தைத் துவஜாரோகணம் என்று வடமொழியில் கூறுவர். விழாவின் தொடக்கத்தில் ஆகம விதிப்படி கொடியேற்றம் நிகழும். மும்மலத்திலே மூழ்கிக் கிடக்கின்ற ஆத்மா ஆசாரியனுடைய அருளால் பாசபந்தமற்றுச் சிவஞானத்தைப் பொருந்திப் பதியின் திருவடியை அடையும் முறையைக் கொடியேற்றம் காட்டுகின்றது. திருவிழாவின் முதல்நாளில் இக்கொடியேற்றுதலின் நோக்கமானது, திருவிழாவிற்கு வரும் அடியார்களை உயர்பதமடையச் செய்வதற்காக இறைவன் சிறப்பாக எழுந்தருளி அருள் செய்கின்றார் என்பதே.
1930ம் ஆண்டிற்குப் பின் சாமிபுறப்பாடு நிறுத்தப்பட்ட காரணத்தால் இந்நாள் நிகழ்ச்சிகள் மிகச் சாதாரண முறையில் நடைபெறும். சாமி சந்நிதியின் வெளிப்பிரகாரத்தில் உள்ள கொடிமரத்தின் அடியில் பூசை செய்து ரிஷப வாகனம் பொறித்த கொடியைக் கொடிமரத்தில் ஏற்றுவர்.
இரண்டாம் திருவிழா, மூன்றாம் திருவிழா
இவ் இரண்டு நாட்களிலும் சாதாரண முறையிலேயே விழா நடைபெறும். குறிப்பிடத்தக்க சிறப்பு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறுவதில்லை. அமுதலிங்கேஸ்வரர், அமுதவல்லியம்மன் இருவரையும் நன்கு அலங்கரித்து ரிஷபவாகனத்தில் வீற்றிருக்கச் செய்து கோயிலின் முன் புறத்தில் அமைந்த கலாமண்டபத்தில் மக்கட்குக் காட்சி கொடுக்கச் செய்வர். இரவு 9 மணிக்குத் தீபாராதனை நடைபெறும்.
நான்காம் திருவிழா
இந்நாள் கால சம்ஹார நிகழ்ச்சி நடைபெறும் நாளாகும். இந்நிகழ்ச்சியைச் சிறப்பாகக் கொண்டாடி இருக்கின்றனர். இந் நிகழ்ச்சியைச் சிறு நாடகம் போன்று நடித்துக் காட்டி இருந்திருக்கின்றனர். சிவலிங்க வடிவில் அலங்காரக் கூடு செய்து அதற்குள் நடராஜர் வடிவம் செய்து வைத்திருப்பர். இரு பக்தர்கள் யமனாகவும், மார்க்கண்டேயனாகவும் வேடம் பூண்டு கொள்வர். மார்க்கண்டேயனை யமன் விரட்டிக் கொண்டு வருவான். அப்பொழுது மார்க்கண்டேயன் சிவலிங்க வடிவத்தைக் கட்டிக் கொண்டு வழிபட யமன் மார்க்கண்டேயனையும் சிவலிங்கத்தையும் சேர்த்துத் தன் பாசக் கயிற்றை வீச இறைவன் நடராஜர் வடிவத்தில் தோன்றி அருள் புரிவார். இவ்வாறு இந்நிகழ்ச்சி முன்பு நடித்துக் காட்டப்பட்டிருக்கிறது. 1928 ம் ஆண்டு இந்நிகழ்ச்சி நடந்த பொழுது தான் ஊருக்குள் கலவரம் தோன்றியது என்று தகவலாளர்கள் கூறுகின்றனர். எனவே தற்பொழுது இந்நிகழ்ச்சியும் மிகச் சாதாரணமாகவே கொண்டாடப்படுகிறது.
ஐந்தாம் திருவிழா
இந்நாளை இந்திரனுக்குக் காட்சி கொடுத்தல் திருவிழாவாகக் கொண்டாடுவர். அமுதலிங்கேஸ்வரரையும், அமுதவல்லியம்மனையும் இந்திரனுக்குக் காட்சி கொடுப்பது போல அலங்காரம் செய்து ரிஷபவாகனத்தில் எழுந்தருளச் செய்து கலா மண்டபத்தில் வீற்றிருக்கச் செய்வர். வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் எதுவும் இல்லை.
ஆறாம் திருவிழா
சமணர் கழுவேற்றம் திருவிழாவாக இந்நாள் கொண்டாடப் பெறும். பெயரளவில் சமணர் கழுவேற்றல் திருவிழா என்று இருக்கின்றதேயொழியச் சிறப்பு நிகழ்ச்சிகள் எதுவும் இந்நாளில் நடைபெறுவதில்லை. அமுதலிங்கேஸ்வரரையும், அமுதவல்லியம்மனையும் வழக்கம் போல் அலங்காரம் செய்து ரிஷப வாகனத்தில் எழுந்தருளச் செய்து கலாமண்டபத்தில் மக்கட்குக் காட்சி கொடுக்கச் செய்வர்.
ஏழாம் திருவிழா
இத்திருநாளைப் பட்டாபிஷேகத் திருவிழாவாகக் கொண்டாடுவர். அம்மனுக்குச் செங்கோல் கொடுத்துச் சிறப்புச் செய்யும் திருவிழாவாகும் இது. அமுதலிங்கேஸ்வரரையும், அமுதவல்லியம்மனையும் அலங்காரம் செய்வர். அமுத வல்லியம்மன் கையில் செங்கோல் கொடுத்து ரிஷப வாகனத்தில் எழுந்தருளச் செய்து கலா மண்டபத்தில் வீற்றிருக்கச் செய்வர்.
எட்டாம் திருவிழா
திக்விஜயத் திருவிழா என்று எட்டாம் நாள் திருவிழாவை அழைப்பர். அட்டதிக்குப் பாலகர்கள் தூக்கிவர அம்மனும் சாமியும் ஊர்வலம் வருதல் திக்விஜயத் திருவிழாவாகும். ஊருக்குள் ஊர்வலம் செல்லாத காரணத்தால் கோயிலின் வெளிப்பிரகாரத்தை மூன்று முறை சுற்றி வரச் செய்வர். அமுதலிங்கேஸ்வரரும், அமுத வல்லியம்மனும் அலங்கரிக்கப்பட்டு ரிஷப வாகனத்தில் எழுந்தருளச் செய்து கோயிலை வலம்வரச் செய்வர்.
ஒன்பதாம் திருவிழா
இந்நாள் திருக்கல்யாணத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இறைவன் நித்திய கல்யாணராமன். நமக்கு ஒரு ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள். ஆகையால், நாம் ஆண்டுக்கு ஒரு திருக்கல்யாணம் நடத்துவது தினமும் நடத்துவதாகும். தினமும் நடத்துவது ஏனென்றால் சிவனிடமிருந்து சக்தி பிரியாதிருந்து அம்மையப்பராகிய போகவடிவம் கொண்டு அருள் செய்வதாலேயே நாம் உய்கின்றோம் என்பதற்கு நம் நன்றியறிதலைக் காட்டுவதற்காகவே ஆகும்.
அமுதலிங்கேஸ்வரருக்கும் அமுதவல்லியம்மனுக்கும் திருமணம் நடத்தி வைப்பர். திருமணத்தில் ஹோமம் வளர்க்கப்பெறும். மதுரை மீனாட்சி அம்மனின் திருக்கல்யாணத் திருவிழாவின் போது இரண்டு அர்ச்சகர்கள் பெண் மாப்பிள்ளை போன்று வேடமணிந்து திருமணத்தை நடத்தி வைப்பர். ஆனால் இங்கு அத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெறா.
பத்தாம் திருவிழா
தேர்த்திருவிழா என்று பத்தாம் திருவிழா கூறப்படும். தேவர்களின் வேண்டுகோட்கிணங்கிச் சிவபெருமான் சூரியன் சந்திரன் பூமி முதலிய வர்களைத் தேராகவும், உபகரணங்களாகவும் கொண்டு திரிபுரத்து அரசர்களை வதைக்கச் சென்ற போது தங்கள் துணையாலேயே சிவபெருமான் வெற்றி பெறப் போகின்றார் என்று அத்தேவர்கள் கருதியதால், உயிர்க்குயிராகிய சிவபெருமான்
(தொடரும்)
சக
அதனை உணர்ந்து அவர்கள் துணையின்றியே சிரித்து முப்புரத்தையும் அழித்த வரலாற்றை உணர்த்துவதே தேர்த்திருவிழாக் காட்சியாகும்.
அமுதலிங்கேஸ்வரர் அமுதவல்லியம்மன் பூரண அலங்காரத்துடன் தேரிலமர்ந்து நகரில் ஊர்வலம் வருதலாகும். திருவிழாவின் போது ஊர்வலம் நிறுத்தப்பட்டுவிட்டபடியாலும், கோயிலுக்கென இருந்த தேர் சிதைவுற்ற படியாலும், இப்பொழுது தேரில் சாமி புறப்பாடு நடைபெறுவதில்லை. அமுதலிங்கேஸ்வரரையும், அமுதவல்லியம்மனையும் அலங்கரித்து ரிஷபவாகனத்தில் அமர்த்திக் கலா மண்டபத்தில் வீற்றிருக்கச் செய்யும் நிகழ்ச்சியே இன்றும் நடைபெறுகிறது.
பட்டாபிஷேகம், திக்விஜயம், திருக்கல்யாணம், தேர் ஆகிய விழா நிகழ்ச்சிகள் மதுரை சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகளை நினைவு கூரச் செய்கின்றன. மதுரை மீனாட்சி அம்மன் மீது பற்றுக்கொண்ட மக்கள் இத்தகைய நிகழ்ச்சிகளைத் தங்கள் ஊரிலும் நிகழ்த்திப் பெருமை கொண்டனர் என்று தகவலாளர்கள் மூலம் அறிய முடிந்தது.
பதினோராம் திருவிழா
இறுதி நாள் திருவிழாவான பதினோராம் திருநாளைத் தீர்த்தவாரித் திருவிழா என்று அழைப்பர். இத்திருவிழா இறைவனின் அருட்தத்துவத்தை உணர்த்தும் திருவிழா ஆகும். ஆறு, குளம், கடல் முதலிய இடங்களுக்குச் சிவபெருமான் திருவுலாக் கொண்டு எழுந்தருளுவது தீர்த்தவாரி விழாவாகும். இவ்விழாவின் நோக்கம் அங்கேயுள்ள ஆன்மாக்களுக்கு அருள் செய்யும் குறிப்பே ஆகும்.
அட்டமூர்த்திகளுள் பகவான் என்னும் திருப்பெயருடைய சிவபெருமானது வல்லமை நீர் வடிவாக அமைந்து தன்னையடைந்து தரிசித்து நீராடும் அடியார்களது பிறவியாகிய வெப்பத்தை நீக்கித் தன்னிடத்தில் அமிழ்ந்தச் செய்த தத்துவாதீரராய் விளங்கும் சிவத்துடன் சேர்க்கும் என்று சமயச்சான்றோர் இவ்விழாவிற்கு விளக்கம் தருவர்.
அருப்புக்கோட்டை நகரின்கண் அமைந்த சிங்காரத்தோப்பு என்னும் வளமான சோலையில் அமுதலிங்கேஸ்வரரையும் அமுதவல்லியம்மனையும் எழுந்தருளச் செய்து மக்கட்குத் தீர்த்தம் வழங்கச் செய்வர். இந்நிகழ்ச்சியுடன் விழா முடிவடைவதாக அமைந்துள்ளது.
திருவிழா நிகழ்ச்சிகள் நன்கு நடைபெறக் கட்டளைதாரர்கள் பேருதவி செய்துள்ளனர்2. ஒவ்வொரு கட்டளைதாரரும் தனித்தனியாக மண்டகப்படி அமைத்திருப்பர். ஒவ்வொரு நாளும் அமுதலிங்கேஸ்வரரும் அமுத வல்லியம்மனும் அலங்காரத்துடன் ஊர்வலமாகச் சென்று அந்தந்த நாட்குரிய கட்டளைதாரரின் மண்டகப்படியில் தங்கி மக்கட்கு அருட்காட்சி வழங்குவது மரபு. அருப்புக்கோட்டைக்கு அருகிலுள்ள புளியம்பட்டி, பொட்டல்பட்டி ஆகிய ஊர்களில் நாடார்கள் உறவின் முறைகளின் கட்டளைகளின் போது கூட அமுதலிங்கேஸ்வரரையும் அமுதவல்லியம்மனையும் ஊர்வலமாக எடுத்துச் சென்று ஆங்காங்குள்ள மடத்தில் எழுந்தருளச் செய்வர். ஊரில் 1928 -1930 ல் ஏற்பட்ட மிகப் பெரிய கலவரத்தால் ஊர்வலம் நிறுத்தப்பட்டது. எனவே மண்டகப்படிகளுக்கு இறைவன் செல்லுதல், தேரோட்டம் போன்ற நிகழ்ச்சிகள் தடைபட்டன. திருவிழாவில் நடைபெறும் எல்லா நிகழ்ச்சிகளும் கோயில் வளாகத்திலேயே இப்பொழுது நநடைபெறுகின்றன.
நாள்தோறும் அமுதலிங்கேஸ்வரரையும் ,அமுதவல்லியம்மனையும் நன்கு பட்டாடையாலும், மலர்களாலும், அணிகலன்களாலும் அலங்கரித்து ரிஷபவாகனத்தில் அமர்த்திக் கலா மண்டபத்தில் எழுந்தருளச் செய்து மக்கட்குக் காட்சி வழங்கச் செய்வர். இரவு ஒன்பது மணி அளவில் சிறப்புத் தீபாராதனை வழிபாடு நடைபெறும்.
கர்ப்பக்கிரகத்திலுள்ள மூலவருக்கு இலிங்கக் கவசம் போட்டு நாகாபரணம் அணிவித்து விழா நாட்களில் அலங்காரம் செய்து இருப்பர்.
ஊர்வலம் இல்லாத குறையை நீக்கும் பொருட்டுத் திருவிழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்திச் சிறப்பிக்கின்றனர். சிறந்த ஆன்மீகச் செல்வர்களால் சமயச் சொற்பொழிவுகள், இறைச் சிறப்புணர்த்தும் கதா காலட்சேபங்கள் நடைபெறச் செய்கின்றனர். மக்களை மகிழ்விக்கும் வண்ணம் இன்னிசைக் கச்சேரிகளையும் நடத்துகின்றனர்.
அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் நடைபெறும் திருவிழா, பிற விழாக்கள் யாவும் பிற பெருங்கோயில்களில் நடைபெறுவதை அப்படியே மேற்கொள்வதாகத் தகவலாளர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் இங்கு நடைபெறுவதற்குக் குறிப்பிட்ட காரணங்கள் இல்லை என்கின்றனர். கோயில் கட்டினால் மட்டும் போதாது. அங்கு நடைபெற வேண்டிய நிகழ்ச்சிகளைக் குறையின்றிச் செய்வது தான் உண்மையான இறைத்தொண்டு என்று உணர்ந்தவர்களாய்க் கோயில்களில் நடைபெற வேண்டிய சிறப்பு நிகழ்ச்சிகளைக் குறைவின்றி நடத்துகின்றனர்.
முத்துமாரியம்மன் கோயில் பங்குனிப்பொங்கல் திருவிழா
முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திங்களில் நடைபெறும் பங்குனிப் பொங்கல் திருவிழா பெருவிழாவாகும். இத்திருவிழா பன்னிரண்டு நாட்கள் நடைபெறும். ஒரு செவ்வாய்க்கிழமையன்று தொடங்கப்பெற்று அடுத்த சனிக்கிழமையுடன் முடிவடையும் விழாவாகும் இப்பொங்கல் திருவிழா. கொடியேற்ற நிகழ்ச்சியை முதல் நாள் நிகழ்ச்சியாகக் கொண்டு தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடைபெறச் செய்வர்.
முதலாம் திருவிழா
முதல் நாள் திருவிழாவாகக் கொடியேற்றத் திருவிழா நடைபெறும் கோயிலில் விழா தொடங்கிவிட்டது என்று அறிவிக்கும் நிகழ்ச்சியே கொடியேற்றத் திருவிழாவாகும். கொடியேற்ற நிகழ்ச்சி இரவு பத்து மணிக்கு மேல் நடைபெறும். மகமைக் கடையிலிருந்து மாரியம்மன் படம் வரையப்பட்ட துணி ஒன்றையும், உற்சவமூர்த்திக்குரிய நகைகளையும் தேவஸ்தான கமிட்டியார் கொண்டு வருவர். அம்மன் படம் வரையப்பட்ட துணியில் ஒரு மூலையில் ஒரு ரூபாய் பணமும், தேங்காயும் முடிந்து கொடிமரத்தின் உச்சியில் கட்டி வைப்பர்.
ஊரின் அருகிலுள்ள புளியம்பட்டி என்னும் பகுதியிலுள்ள ஆதிதிராவிடர்கள் இருவர் ஆண் பெண் வேடம் கொண்ட ஆழிப் பொம்மைக்குள் இருந்து ஆடிப் பாடிக் கொண்டு வருவர். அதன் பின்னர் வழிபாடு நடக்கும்
திருவிழாவின் போது அக்கினிச்சட்டி எடுப்பதாகவும், பூக்குழி இறங்குவதாகவும் நேர்த்திக்கடன் பூண்டவர்கள் கோயிலுக்குச் சென்று அர்ச்சகரிடம் காப்பு கட்டிக்கொண்டு வருவர். இந்நாளில் மாரியம்மனுக்கு நேர்த்திக்கடனாகப் புதுப்புடவை அளிப்பவரும் உண்டு.
இரண்டாம் திருவிழா, மூன்றாம் திருவிழா
இந்த இரண்டு நாட்களிலும் சாதாரண நிகழ்ச்சிகளே நடைபெறும். மூலவரையும் உற்சவமூர்த்திஅம்மனையும் பட்டாடையாலும், மலர்களாலும், அணிகலன்களாலும் அலங்காரம் செய்து, கோயிலைச் சுற்றியுள்ள பரந்த வெளியில் போடப்பட்டிருக்கும் அலங்காரப் பந்தலில் அமைத்த ஊஞ்சலில் எழுந்தருளச் செய்வர். இரவில் மூலவருக்குச் சிறப்பான அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். உற்சவமூர்த்திக்குத் தீபாராதனை நிகழும்.
நான்காம் திருவிழா
நான்காம் திருவிழா வெள்ளிக்கிழமையாக இருப்பதால் மாரியம்மனுக்கு உகந்த நாளென்று மிகுதியான மக்கள் வந்து வழிபடுவர். மூலவரும், உற்சவமூர்த்தியும் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டிருப்பர். உற்சவமூர்த்தியை அலங்காரப் பந்தலில் எழுந்தருளச் செய்வர்.
மாவிளக்கு எடுப்பதாக நேர்த்திக்கடன் பூண்டவர்கள் மாவிளக்கைக் கோயிலுக்குள் எடுப்பர்.
ஐந்தாம் திருவிழா, ஆறாம் திருவிழா
இரண்டாம் மூன்றாம் திருவிழா நிகழ்ச்சிகள் போலவே இவ் இரு நாட்களிலும் நடக்கும்.
ஏழாம் திருவிழா
இன்று சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும் திருநாளாகும். இந்நிகழ்ச்சி இரவு பத்து மணிக்கு மேல் நடைபெறும். அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள பாலையம்பட்டி நாடார்கள் உறவின்முறைத் தலைவரும் பிறரும் பாலையம்பட்டி முருகன் கோயிலிலிருந்து வெண்பட்டு, தேங்காய், பழம், மாலை முதலியன கொண்டு வந்த பின்னரே சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும். இந்நிகழ்ச்சி முன்பு வாழவந்தம்மன் கோயிலுக்கு அருகிலுள்ள தேர்முட்டி என்னும் இடத்தில் நடந்திருக்கிறது. இப்பொழுது திருவிழாவிற்காகப் போடப்பட்டிருக்கும் அலங்காரப் பந்தலிலேயே நடைபெறுகின்றது.
எட்டாம் திருவிழா
பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெறும் நாள் இதுவேயாகும். நாடார்கள் உறவின்முறையிலிருந்து அதிகாலையிலேயே கோயில் முன் பொங்கல் வைத்து வழிபடுவர். அதன் பின் மக்கள் தனித்தனியாக கோயிலின் முன் பொங்கல் வைத்து அம்மனுக்குப் படைத்து வழிபடுவர்.
கோயிலில் காணிக்கை செலுத்துபவர்கள் இன்று அதிகாலையிலிருந்து தொடர்ந்து செலுத்திக் கொண்டே இருப்பர். மானிட உறுப்புக்கள் வடிவிலுள்ள பொம்மைகள், கண்மலர் கொண்டு வந்து கோயிலில் வைப்பர். அம்மைநோய் வாய்ப்பட்டவர் ஆயிரங்கண்பானை என்று அழைக்கப்படும் அதிகமான துளைகள் உடைய பானைகளையும், ஆமணக்கு விதைகளையும் கொண்டு வந்து கொடுப்பர். முளைப்பாரி வளர்த்துக் கோயிலுக்குக் கொண்டு வந்து வைத்துப் பலரும் அதைச் சுற்றி நின்று கும்மி அடிப்பர். உடம்பில் வெண்புள்ளி கரும்புள்ளி இட்ட வேடத்துடன் “ஆகோ ஐயாகோ” என்று ஆரவாரத்துக் கொண்டும்,
“ஆத்தா ஆத்தா மாரியாத்தா
ஐம்பது பிள்ளை பெத்தாத்தா
எனக்கு இரண்டு போடாத்தா”
என்று பாடிக் கொண்டும் கோயிலுக்கு வருவர். புலிவேஷம் போட்டுக் கொண்டு தெருவழியே ஆடிப்பாடிக் கொண்டும் கோயிலுக்கு வருவர்.
கும்பிட்டாரணம் போடுதல், உருண்டு கொடுத்தல் ஆகிய நேர்த்திக்கடன் நிகழ்ச்சிகள் குறிப்பிடத்தக்கவை.
கும்பிட்டாரணம் போடுதல்
மாரியம்மன் கோயிலுக்கருகில் உள்ள பள்ளிக்கூடத்தின் கிணற்றில் குளித்து விட்டு ஈரஉடையுடன் கோயிலைச் சுற்றி விழுந்து எழுந்து விழுந்து கும்பிட்டுக் கொண்டே வருதலாகும். ஆடவர், பெண்டிர், சிறுவர், பெரியவர் எனப் பலரும் இவ்வண்ணம் செய்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவர்.
உருண்டு கொடுத்தல்
குளித்து விட்டு ஈரஉடையுடன் கையில் ஒரு தேங்காயுடன் கீழே விழுந்து கோயிலைச் சுற்றி மூன்று முறை உருண்டு கொண்டு வருதலாகும். இவ்வாறு உருண்டு கொடுத்து வருபவருடன் உடன் வருபவர்கள் உருண்டு வருபவர்களுக்கு வழி உணர்த்தும் வண்ணம் ’பாதம் முந்தி; சிரசு முந்தி’ என்று கூறிக் கொண்டு பாதையில் உருண்டு வரச் செய்வர். கையில் ஒரு செம்பு நிறைய நீர் கொண்டு வந்து அதை வேப்பிலையால் பாதையில் தெளித்துக் கொண்டே வருவர்.
பனை ஏறுபவர்கள் மாரியம்மனுக்குச் சிறப்புச் செய்யும் வண்ணம் தாம் அன்று இறக்கும் பதனீரைக் கோயிலில் கொண்டு வந்து கொடுத்து விடுவர். கோயிலில் பதநீரைப் புதுப்பானையில் வைத்திருந்து மக்கட்கு வழங்குவர்.
பானக்காரம் கொண்டு வந்து கோயிலில் கொடுப்பதாக நேர்த்திக்கடன் உள்ளவர்கள் இரவில் தங்கள் வீடுகளிலிருந்து பானக்காரம் செய்து கொண்டு வந்து கோயிலில் கொடுப்பர். இதுவும் புதன்கிழமையன்று மக்கட்கு வழங்கப்படும்.
ஊர் மக்கள் அனைவரும் காலையிலேயே வீட்டைச் சுத்தம் செய்வர். மதியம் விருந்து சமைப்பர். விருந்தில் பூசணிக்காய்ப் பச்சடி செய்வதைக் குறிக்கோளாகக் கொள்வர். மாலையில் புத்தாடை பூண்டு கோயிலுக்குச் சென்று அம்மனை வழிபடுதலை மரபாகக்
(தொடரும்)............சக
கொண்டு இருக்கின்றனர்
உற்சவமூர்த்தி அம்மனை அலங்கரித்துக் கோயில் முன் உள்ள மண்டபத்திலேயே எழுந்தருளச் செய்வர். அலங்காரப் பந்தலுக்கு எடுத்துச் செல்ல மாட்டார்கள்.
ஒன்பதாம் திருவிழா
பொங்கல் திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியான அக்கினிச்சட்டி எடுத்தல் எனும் நிகழ்ச்சி ஒன்பதாம் திருவிழாவாக நடைபெறும்.
அக்கினிச்சட்டி எடுத்தல்
அக்கினிச்சட்டி எடுப்பவர் பங்குனித் திங்கள் முதல் நாளிலிருந்து விரதம் இருப்பர். சிலர் கொடியேற்றநாள் முதல் விரதம் இருப்பர். விரதம் இருப்பவர் தினமும் வீட்டைக் கழுவிச் சுத்தம் செய்வர். வீட்டின் வாசலில் வேப்பிலைத் தோரணம் கட்டி வைப்பர். தரையில் தான் படுப்பர். பிறர் வீடுகளுக்குச் செல்ல மாட்டார்கள். சமையல் செய்யும் பொழுது தாளிதம் செய்ய மாட்டார்கள். பயறு வகைகளையும் அசைவ உணவுப் பொருட்களையும் உண்ண மாட்டார்கள். மண் பாத்திரத்தில் சமைத்து தரையிலோ உலைமூடியிலோ இட்டுச் சாப்பிடுவர். சட்டி எடுக்கும் நாளில் பானக்காரம், நீர்மோர், பழம் முதலியவற்றை மட்டும் உணவாகக் கொண்டு, அம்மனுக்குச் சட்டியைச் செலுத்திய பின்னர் உணவு உட்கொள்வர்.
அக்கினிச்சட்டி எடுக்கும் நாளன்று வீட்டிலிருந்து மஞ்சள் பால், வேப்பஞ் சுள்ளிகள், வேப்பந்தழை, விளக்கெண்ணெய், அக்கினி வளர்ப்பதற்கான சட்டி இவற்றை எடுத்துக் கொண்டு அமுதலிங்கேஸ்வரர் கோயிலுக்குச் செல்வர். கோயிலிலுள்ள கிணற்றில் அல்லது அருகில் உள்ள சிலம்புப்பள்ளியில் உள்ள கிணற்றில் குளிப்பர். குளித்தபின் மஞ்சள் பாலை ஊற்றுவர். கோயிலிலுள்ள வாழவந்தம்மன் சந்நிதியின் அர்ச்சகர் தேங்காய் உடைத்து, அக்கினிச்சட்டியில் சூடம் பொருத்தித் தீ வளர்த்துக் கொடுப்பார். அதனை மேலத்தெரு சுற்றி எடுத்துக் கொண்டு கடைவீதி வழியாக வந்து வாலசுப்பிரமணியசாமி கோயிலுக்குள் சென்று ஒரு சுற்று சுற்றி விட்டு மீண்டும் கடைவீதி வழியாக முத்து மாரியம்மன் கோயிலை அடைந்து அக்கினிச்சட்டியைச் சேர்ப்பிப்பர். மீண்டும் அருகிலுள்ள பள்ளிக் கிணற்றில் குளித்து விட்டு வீடு செல்வர். முன்பு கோயிலுக்கு அருகில் இருந்த மற்றொரு கிணற்றில் குளித்து விட்டு வீடு திரும்புவர். இப்பொழுது அக்கிணறு இல்லை.
ஒருவரே 21அல்லது 101 அக்கினிச்சட்டிகள் எடுப்பதுண்டு. குழந்தையைத் தொட்டிலில் போட்டுத் தோளில் சுமந்து கொண்டு அக்கினிச்சட்டி எடுப்பதுமுண்டு. சிறுவர்கள் சேர்ந்து விளையாட்டு அக்கினிச்சட்டி எடுக்கும் பழக்கமும் உண்டு. அக்கினிச்சட்டியில் எண்ணெய், பசு நெய் ஊற்றுவதாக நேர்த்திக்கடன் செய்து கொண்டவர்கள் வழிநெடுகிலும் அக்கினிச்சட்டி எடுத்துக் கொண்டு வருபவர்களை நிறுத்தித் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்துவர்.
ஆக்கி வைத்தல்
இதுவும் ஓர் நேர்த்திக்கடன் செயலாகும். மாரியம்மனுக்குப் பல்வகை உணவுப் பொருட்களைச் சமைத்துப் படைப்பதாகும். உணவு சமைப்பதற்கு முன் வீட்டை வெள்ளை அடித்து வேப்பிலைத் தோரணம் கட்டி அலங்கரிப்பர். புதுப் பானையில் அத்தப் புழுங்கல் அரிசியால் சமைப்பர். பொங்கல், புளிக்குழம்பு, முருங்கைக்காய்ப் பொரியல்; கருவாடு, கத்தரிக்காய், முருங்கைக்காய் மூன்றும் சேர்த்துச் சமைத்த குழம்பு, கோழிக்குழம்பு முதலியன சமைப்பர். எள்ளும் புண்ணாக்கும் அவித்து வைப்பர். புதிய பரந்த உலை மூடியில் இவை யாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து வைத்துக் கொண்டு கோயிலுக்குச் சென்று பூசை நேரத்தில் வைப்பர். பூசை முடிந்தவுடன் வீட்டிற்குக் கொண்டு வந்து சூடதீபாராதனை காட்டி உண்பர். கோயில் வாசலிலும் சமைப்பது உண்டு.
நாடார்கள் உறவின்முறையிலிருந்து வெண்பொங்கலும், சர்க்கரைப் பொங்கலும் செய்து மக்கட்கு வழங்குவர்.
சிலார் குத்துதல்
விலாவில் துளை செய்து கம்பிகளைக் கோர்த்துக் கொண்டு வருதலைச் சிலார் குத்துதல் என்பர். இதனைக் கயிறு குத்துதல் என்றும் வழங்குவர். சிலார் குத்திக்கொள்பவர்களும் அக்கினிச்சட்டி எடுப்பவர்கள் போன்று விரதமிருப்பர். சிலார் குத்திக் கொள்பவர்கள் கம்பிகளைக் கோயிலில் கொடுத்து வைத்திருப்பர். கொடியேற்ற நாளில் இவற்றை வைத்துக் கோயிலில் கும்பிடுவர். புதன்கிழமை காலை சாமபூசை நடந்து சாமி கும்பிட்ட பின்னர் அர்ச்சகர் சிலார் குத்திக் கொள்பவர் கையில் சிலாரைக் கொடுப்பார். இவர்கள் அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் அல்லது வீட்டில் தூய்மையான இடத்தில் சிலாரை வைத்திருப்பர். மாலையில் கோயிலுக்குக் கொண்டு வந்து சாமி கும்பிட்டு, மஞ்சள் நீர் வாங்கிக் கொண்டு குத்திக் கொள்வர். அனுபவம் வாய்ந்த முதியவர் ஒருவர் சாமி கும்பிட்ட பின் சிலார் குத்தி விடுவார். இவ்வாறு சிலார் குத்திக் கொண்டு வருபவர்கள் தேரை இழுத்துக்கொண்டு வருவதுமுண்டு.
பூக்குழி இறங்கல்
பூக்குழி இறங்குதல் என்னும் இந்நிகழ்ச்சி இவ்வூருக்குத் தனிச்சிறப்பைத் தந்து கொண்டிருக்கிறது. புதன்கிழமை காலையில் கோயிலின் முன்புறத்தில் நான்கடி அகலமும் நாற்பதடி நீளமும் உள்ள குழியை வெட்டுவர். அக்குழியில் நாடார்கள் உறவின்முறையிலிருந்து கொண்டு வந்த விறகையும், ஊர்மக்கள் நேர்த்திக்கடனாகச் செலுத்திய விறகையும் இட்டு நிரப்புவர். குழியைச் சுற்றிப் பத்தடி தூரம் வரை மக்கள் அருகில் வராதவாறு நல்ல உறுதியான கட்டைகளை ஊன்றிக் கயிறு கட்டிப் பாதுகாப்பு செய்திருப்பர். இக்கட்டைகள் தீப்பிடிக்கா வண்ணமும், வேடிக்கை பார்க்கும் மக்களை வெப்பம் தாக்கா வண்ணமும் இருக்க இக்கட்டைகள் மீது தண்ணீர் ஊற்றிக் கொண்டே இருப்பர். தீ மூட்டும் முன் சகுனம் பார்ப்பது வழக்கம். கருடப் பறவை ஒன்று தாழ்வாகப் பறந்து வந்து மூன்று முறை சுற்றுவதைப் பார்த்த பின் நெய் விட்டுச் சூடம் பொருத்தித் தீ வளர்ப்பர். பொது மக்கள் நெய்யும் எண்ணெயும் நேர்த்திக்கடனாகக் கொண்டு வந்து குழியில் ஊற்றுவர். உப்பையும் நேர்த்திக்கடனாக இடும் வழக்கம் உண்டு. உப்பு மூட்டை ஒன்றையும் அருகில் வைத்துக் கொண்டு அடிக்கடி உப்பைக் குழியில் போட்டுக் கொண்டே இருப்பர்.
புதன்கிழமை பகலும் இரவும் கட்டைகள் எரிந்து கங்குகளாகக் கிடக்கும். மக்கள் அதனை பூக்கள் என்றே அழைப்பர். வியாழக்கிழமை அதிகாலையில் பக்தர்கள் இப்பூக்குழியில் இறங்குவர். பூக்குழி இறங்குபவர்களும் அக்கினிச்சட்டி எடுப்பவர்கள் போன்று கடுமையான விரதத்தை மேற்கொள்வர். பூக்குழியில் இறங்கும் அக்கினிச்சட்டி பக்தர்கள்; ஊரின் கண்ணுள்ள புளியம்பட்டி என்னும் பகுதியிலுள்ள மாரியம்மன் பீடத்திலிருந்து தான் தீ வளர்த்துக் கொண்டு வருவர். பூக்குழியில் இறங்காதோர் அவர் விரும்பிய கோயில்களில் தீ வளர்த்துக் கொள்வர். பூக்குழிக்குள் மிக எளிமையாக இறங்கி தீக்கங்குகளைப் பூவாகப் பாவித்து அள்ளித் தங்கள் மேல் தூவிக் கொள்ளும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். குழந்தையைத் தொட்டில் கட்டித் தோளில் போட்டுக் கொண்டு இறங்குவோரும் உண்டு. அமெரிக்க நாட்டு ஹென்றி ஆலன் என்பவர் இங்கு நடைபெறும் பூக்குழி விழாவினைக் கண்டு மகிழ்ந்து பாராட்டிச் சென்றுள்ளார்3.
பத்தாம் திருவிழா
முன்பு தேர்த்திருவிழா என்று பத்தாம் திருவிழா நடைபெற்று இருந்திருக்கிறது. தேர் இல்லாததாலும் ஊர்வலம் இல்லாத காரணத்தாலும் இத்திருவிழா இப்பொழுது தேர்த்திருவிழா என்று நடைபெறுவதில்லை. ஊரிலுள்ள சிலம்புப்பள்ளியும், உடற்பயிற்சிக் கழகமும் இணைந்து சில நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள திடல், புல் விற்குமிடம் போன்ற பரந்த வெளிகளில் பார் விளையாட்டு, உடற்பயிற்சி, சிலம்பு விளையாட்டு போன்ற விளையாட்டுக்கள் மக்கள் முன் செய்து காட்டுவர்.
உற்சவமூர்த்தியை அலங்கரித்து அலங்காரப் பந்தலில் எழுந்தருளச் செய்வர்.
பதினோராம் திருவிழா, பன்னிரண்டாம் திருவிழா
திருவிழாவின் இறுதி நாட்களாகிய இவ்விரண்டு நாட்களிலும் சாதாரண நிகழ்ச்சிகளே நடைபெறும். உற்சவமூர்த்தியை அலங்கரித்து அலங்காரப் பந்தலில் வீற்றிருக்கச் செய்வர். பதினொன்றாம் திருவிழா வெள்ளிக்கிழமை நிகழ்வதாக இருப்பதால் இன்றும் மக்கள் மாவிளக்கு எடுத்தல், பொங்கலிடுதல் முதலிய நேர்த்திக்கடன் நிகழ்ச்சிகளை மிகுதியாகச் செய்வர்.
பொங்கல் நாளன்றும், அக்கினிச்சட்டி எடுக்கும் நாளன்றும் உற்சவமூர்த்தியை அலங்காரப் பந்தலுக்கு எடுத்துச் செல்ல மாட்டார்கள். இவ்விரு நாட்களிலும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறா. பிற நாட்களில் இன்னிசைக் கச்சேரி போன்ற கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறும். மாரியம்மனுக்கு விழா நாட்களில் நாள்தோறும் வேப்பம்பூ மாலை சாத்துவர்.
பன்னிரண்டு நாட்களும் மாரியம்மனுக்கு நீர் எடுத்து ஊற்றுவதைப் பெண்கள் நேர்த்திக்கடனாகக் கொண்டு நிறைவேற்றுவர். பொய்க்கால் குதிரை ஆட்டம், கரகாட்டம்; கொடியேற்ற நாளிலும், பொங்கல் நாளிலும் நடைபெறும். பச்சரிசி இடித்துச் சீனி கலந்த துள்ளுமாவை வீட்டிலிருந்து கொண்டு வந்து வழங்குவர். சிலர் ஊறிய பச்சரிசியும் சீனியும் கலந்து வழங்குவர்.
மாரியம்மன் கோயில் திருவிழா மக்களின் பண்பாட்டையும், பழக்க வழக்கங்களையும் படம் பிடித்துக் காட்டுவதாக அமைகிறது. விழா நாட்களில் வீடுகளும் விழாக்கோலம் பூண்டிருக்கும்.
பொங்கல் விழாவின் போது மாரியம்மன் உலா வருவதற்கென்று தனியாக இக்கோயிலைக் சேர்ந்த தேர் ஒன்றும் முன்பு இருந்துள்ளது. இன்று தேர் இல்லை. ஊர்வலமும் இல்லை. விழா நாட்களில் நாள்தோறும் உற்சவமூர்த்திக்குச் செய்யப்படும் மலர் அலங்காரம் எல்லோராலும் போற்றற்குரியதாய் அமையும்.
பொங்கல் திருவிழாவை ஒட்டிப் பொருட்காட்சி ஒன்று சென்ற ஆண்டு முதல் நடைபெறுகிறது. சிறந்த மேடை நாடகங்கள், திரைப்படங்கள், இன்னிசைக் கச்சேரிகள் முதலியன நடைபெறுகின்றன. பொருட்காட்சியின் மூலம் கிடைக்கும் வருமானம் சைவபானு க்ஷத்திரிய மேல்நிலைப் பள்ளிகளின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படுகின்றது.
ஒவ்வொரு நாள் நிகழ்ச்சிக்கும் தனித்தனிக் கட்டளைதாரர்கள் உள்ளனர்4. கட்டளைதாரர்கள் தங்கள் நிகழ்ச்சிகள் செவ்வனே நடைபெற உதவி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் இரவு எட்டு மணிக்குக் கட்டளைதாரர்களைக் கொட்டு மேளத்துடன் ஊர்வலமாகக் கோயிலுக்கு அழைத்துச் செல்வர். அதன் பின்னர் தான் கோயிலில் அபிஷேக ஆராதனை நடைபெறும்.
விழா சிறப்புடன் நடைபெறத் தனிக்கமிட்டி ஒன்றும் அமைக்கப்படும்.
ஸ்ரீவால சுப்பிரமணியசாமி கோயில்
வாலசுப்பிரமணியசாமி கோயிலில் குறிப்பிடத்தக்க பெரிய விழா ஒன்றும் இதுவரை நடைபெறவில்லை. வருகிற பங்குனி மாதம் அமாவாசை நாளன்று உற்சவமூர்த்தி செய்யப்பட்டு இங்கு வந்து சேர இருக்கின்றது. வரும் வைகாசி மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்திச் சாமிபுறப்பாடு நிகழ்த்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
சித்தி விநாயகர் கோயில்
சித்தி விநாயகர் கோயிலிலும் திருவிழா எதுவும் நடைபெறுவதில்லை. அமுதலிங்கேஸ்வரர் கோயில் வைகாசி விசாகத் திருவிழா, முத்து மாரியம்மன் பங்குனிப் பொங்கல் விழா ஆகிய விழாக்கள் நடைபெறும் முறைகள் பற்றியும், அவற்றில் மக்கள் பங்கு பெறும் முறைகள் பற்றியும் இக்கட்டுரையின் முற்பகுதியில் விளக்கப்பட்டுள்ளன.
பிற விழாக்கள்
சில புண்ணிய நாட்களில் நடைபெறும் சிறப்புப் பூசையினையே பொதுவாக விழா என்கின்றனர். இவ்விழாக்கள் ஓர் ஆண்டில் பல நிகழ்வதுண்டு. தலப்பெருமையை உணர்த்தும் வண்ணம் இவ்விழாக்கள் இடம் பெறுகின்றன.
(தொடரும்)..........சக
தலப்பெருமையை உணர்த்தும் வண்ணம் இவ்விழாக்கள் இடம் பெறுகின்றன. இவ்விழாக்கள் நடைபெறும் நாள், அதற்குரிய காரணம், நடைபெறும் முறை ஆகியவற்றைக் காண்பது இப்பகுதியின் நோக்கமாகும்.
அமுதலிங்கேஸ்வரர் கோயில்
ஒவ்வொரு திங்களிலும் வரும் இரு ஏகாதசி நாட்கள், இரு பிரதோஷ நாட்கள், கார்த்திகை நாள் ஆகிய நாட்களில் சிறப்பாகப் பூசை நடைபெறும். இந்நாட்கள் தவிர ஒவ்வொரு திங்களிலும் ஒன்றிரண்டு விழாக்களும் நன்முறையில் நடத்தப்படுகின்றன. அவை
திங்களின் பெயர் விழாவின் பெயர்
சித்திரை பௌர்ணமி
வைகாசி விசாகம்
ஆனி திருமஞ்சனம்
ஆடி தபசு
ஆவணி விநாயகர் சதுர்த்தி
புரட்டாசி சனிக்கிழமைகள்
நவராத்திரி
விஜயதசமி
ஐப்பசி தீபாவளி
கார்த்திகை சோமவாரம்
திருக்கார்த்திகை
மார்கழி மாணிக்கவாசகர் காப்பு
அஷ்டமிபிரதட்சணம்
சிவராத்திரி
தை தைப்பூசம்
மாசி மாசிமகம்
சங்கடஹர சதுர்த்தி
பங்குனி பங்குனிஉத்திரம்
கந்தசஷ்டி ஐப்பசி அல்லது கார்த்திகை மாதத்தில் நிகழும்.
மேலும் நடராஜர் அபிஷேகங்கள், சூரிய பூசை ஆகியனவும் இக்கோயிலில் நடைபெறும் விழாக்களாகும்.
ஏகாதசி
ஒவ்வொரு திங்களிலும் வரும் இரண்டு ஏகாதசி நாட்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்பெறும். ஏகாதசி என்பது ஓர் சக்தி என்றும், அவள் விஷ்ணுவின் திருமேனியில் விளங்குகிறாள் என்றும், அசுர சக்தியை அழிக்கும் இச்சக்தியே விஷ்ணு என்றும், இச்சக்தி “விஷ்ணுவிடம் ஏகாதசியன்று தங்களை நினைத்து உண்மை மனத்துடனும், திடமான சித்தத்துடனும் விரதம் இருப்பவர்களைக் காத்தருள வேண்டும்” என்று வரம் கேட்க இறைவன் தந்நருளினார் என்றும் கூறுவர்.
இக்கருத்தை விளக்கப் புராணக்கதை ஒன்றும் கூறுவர். “முரன் என்னும் அரக்கன் தேவர்களையும் ரிஷிகளையும் துன்புறுத்தி வந்தான். அதைக் கண்ட இந்திரன் பயந்து சிவபெருமானிடம் சென்று முறையிட்டான். அவர் பரந்தாமனிடம் செல்லும்படி கூறினார். பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த பரந்தாமனிடம் சென்று வேண்டினான். அவர் உடனே போர்க்கோலம் பூண்டு புறப்பட்டார். அரக்கர் சேனையை அழித்தார். முரன் வீராவேசத்துடன் போர் புரிந்தான். அவனுடைய சக்தியைக் கண்டு பரந்தாமன் வியந்தார். பிறகு களைப்படைந்தவரைப் போல் காட்டி பத்ரிகாச்ரமம் சென்று அங்கே ஒரு குகையில் பள்ளி கொண்டார். முரனும் அவரைப் பின்தொடர்ந்து சென்று அவரைக் கொல்ல வாளை உருவினான். பரந்தாமனின் உடலிலிருந்து ஓர் அழகான கன்னிகை தோன்றினாள். அவளுடைய கரங்களில் பயங்கரமான ஆயுதங்கள் இருந்தன. அரக்கன் அம்பை எடுப்பதற்கு முன் அக்கன்னிகை ஓர் ஹூங்காரம் செய்தாள். அரக்கன் முரன் பிடிசாம்பலாகிக் கீழே விழுந்தான். உடனே பரந்தாமனும் துயில் நீங்கி எஎழுந்து வியந்தார். அவளுக்கு ஏகாதசி என்று பெயரைச் சூட்டினார். அவள் பிறந்த தினத்திலே உபவாசம் இருந்து தம்மை வழிபடுவோருக்கு வைகுண்டம் அளிப்பதாக வாக்களித்தார்.” என்பதாகும் அக்கதை. இதன் காரணமாகவே ஒவ்வொரு ஏகாதசியும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் உள்ள வரதராஜப் பெருமாளுக்கு இரவு ஏழு மணிக்கு சிறப்பான அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பால், எண்ணெய், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் நிகழும். பொங்கல், தேங்காய், பழம் ஆகியன நைவேத்யப் பொருள்களாகும். சோடச தீபாராதனை நடைபெறும்.
வைகுண்ட ஏகாதசி
மார்கழித் திங்கள் சுக்லபட்ஷ ஏகாதசி வைகுண்ட ஏகாதசி ஆகும். இதனை மோக்ஷஏகாதசி என்றும் கூறுவர்.
அறிதுயில் கொண்டுள்ள பெருமான் வைகுண்ட ஏகாதசியன்று தான் கண்ணைத் திறக்கிறாராம். அன்று தான் வைகுண்ட வாசல் திறக்கப்படுகிறது.
“காயத்ரிக்கு ஈடான மந்திரமில்லை; தாய்க்குச் சமமான தெய்வமில்லை; காசிக்கு அதிகமான தீர்த்தமில்லை; ஏகாதசிக்குச் சமமான விரதமில்லை.” என்று இதன் பெருமையை எடுத்துரைப்பர் மக்கள்.
அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வரதராஜப் பெருமாள் சந்நிதி விழாக்கோலம் கொண்டு திகழும். சந்நிதியில் மாக்கோலம் இட்டு, மாவிலைத் தோரணம் கட்டி அழகுபடுத்துவர். இரவு ஏழு மணிக்குச் சிறப்பான அபிஷேகம் நடத்துவர் . சோடச தீபாராதனை நடைபெறும். அதன் பின்னர் சொர்க்க வாசல் திறக்கப்படும்.
மக்கள் நாள் முழுவதும் விரதம் இருந்து இரவில் கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவர். கோயிலில் திருமால் பெருமை விளக்கும் கலை நிகழ்ச்சிகளைக் கண்டு கேட்டுக் களிப்பர். அதிகாலையில் நடைபெறும் வழிபாட்டில் கலந்து கொண்டு சொர்க்கவாசல் திறப்பினைக் கண்டபின் தத்தம் இல்லம் செல்வர்.
பிரதோஷம்
ஒவ்வொரு திங்களிலும் அமாவாசை அல்லது பௌர்ணமி கழிந்த பதின்மூன்றாம் நாள் திரியோதசி ஆகும். அன்று மாலை நாலரை மணிமுதல் ஆறுமணி வரை பிரதோஷ காலமாகும். அப்பொழுது சிறப்புப்பூசை நடைபெறும்.
அமிர்தம் உண்ட அமரர்கள் தங்கள் மகிழ்ச்சியைச் சிவபெருமானிடம் தெரிவித்தனர். சிவபெருமான் மகிழ்ந்து அமரர்களுக்கு அருள்புரியத் திருவுளம் கொண்டு கயிலையில் திரியோதசியன்று மாலை பிரதோஷ வேளையில் தம் முன் இருந்த ரிஷபதேவரின் இரு கொம்புகளுக்கு இடையில் நின்று அம்பிகை காணத் திருநடம் செய்து அருளினார். அமரர்கள் அதனைக் கண்டு சிவபெருமானைத் துதி செய்து வணங்கினார்கள். அதுமுதல் திரியோதசி திதியன்று மாலை நேரம் பிரதோஷ காலம் என்று வழங்கலாயிற்று.
மாலை நாலரை மணிக்கு மேல் அமுதலிங்கேஸ்வரர் சந்நிதிக்கு நேராக வெளிப்பிரகாரத்தில் உள்ள நந்தீஸ்வரருக்கு முதலில் பால், எண்ணெய், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் நடத்தி அருகம்புல் மாலை, மலர் மாலை சூட்டுவர். பின்னர் அமுதலிங்கேஸ்வரருக்கு இதுபோல் அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டியபின் மகாமண்டபத்திலிருககும் நந்தீஸ்வரருக்குத் தீபாராதனை காட்டுவர்.
அதன் பின்னர் ஆறுகால் மண்டபத்தில் அலங்காரத்துடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி இருக்கும் உற்சவமூர்த்திக்குத் தீபாராதனை காட்டிப் பிரகாரத்தை மூன்று முறை சுற்றி வரச் செய்வர். உற்சவமூர்த்தியைத் தூக்கிக் கொண்டு அமுதலிங்கேஸ்வரர் சந்நிதியின் உட்பிரகாரத்தைச் சுற்றி வெளிப்பிரகாரம் வந்து கொடிமரம் வரை சுற்றி வந்து சந்நிதிக்குள் கொண்டு செல்வர். முதல் சுற்றை நேரடியாகச் சுற்றச் செய்வர். இரண்டாம் சுற்றில் உற்சவமூர்த்தியை நான்கு திக்குகளிலும் நிறுத்தித் தீபாராதனை காட்டிக் காக்கைகளுக்குப் பொங்கல் வழங்குவர். மூன்றாம் சுற்றின் போது அட்டதிக்குப் பாலகர்களுக்குத் தீபாராதனை காட்டி அவ்வப்போது உற்சவமூர்த்திக்கும் தீபாராதனை காட்டுவர்.
மூன்று சுற்றுகளுக்குப் பின் ஆறுகால் மண்டபத்தில் உற்சவமூர்த்தியை எழுந்தருளச் செய்து தீபாராதனை காட்டுவர். பின்னர் உற்சவமூர்த்தியை ரிஷப வாகனத்தினின்றும் எடுத்துக் கருவறையில் அமுதலிங்கேஸ்வரர் முன் வைத்துச் சோடச தீபாராதனை காட்டுவர். தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்யப்படும். அடுத்து மகாமண்டபத்திலிருக்கும் நந்தீஸ்வரருக்குத் தீபம் காட்டி விட்டு வெளிப்பிரகாரத்தில் இருக்கும் நந்தீஸ்வரருக்கு அர்ச்சனை செய்து தீபாராதனை காட்டுவர்.
அமரபட்ச பிரதோஷம், பூர்வபட்ச பிரதோஷம் ஆகிய இரு நாட்களுக்கும் தனித்தனிக் கட்டளைதாரர்கள் உள்ளனர். அமரபட்ச பிரதோஷம் வெற்றிலை வியாபாரிகளாலும், பூர்வபட்ச பிரதோஷம் அருப்புக்கோட்டை மு.சுப்பையா நாடார் கட்டளையாலும் நடைபெறும்.
இவ்வாறு பிரதோஷ வழிபாடு முடிந்தவுடன் வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்களுக்குத் திருநீறு, குங்குமம், சுண்டல், சர்க்கரைப் பொங்கல், பஞ்சாமிர்தம் முதலிய பிரசாதங்கள் வழங்கப்படும் அதிகமான மக்கள் இவ்வழிபாட்டில் பங்கு பெறுவர்.
கார்த்திகை
ஒவ்வொரு திங்களிலும் வரும் கிருத்திகை நட்சத்திர நாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். கார்த்திகைப் பெண்கள் குமரக் கடவுளை வளர்த்த காரணத்தால் அவர்களுடைய நாளான கிருத்திகை நட்சத்திரத்தில் அவர்களுக்குச் சிறப்புச் செய்யும் வண்ணம் இந்நிகழ்ச்சி நடைபெறும்.
அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் இருக்கும் முத்துக்குமாரசாமி சந்நிதியில் பகல் பன்னிரண்டு மணிக்கு அபிஷேக ஆராதனை நடைபெறும். பால், எண்ணெய், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் நிகழும். பொங்கல், தேங்காய், பழம் ஆகியன நைவேத்யப் பொருள்களாகும். சோடச தீபாராதனை நடைபெறும்.
வள்ளி தெய்வானையுடன் இருக்கும் உற்சவமூர்த்தியாகிய முருகனை அலங்கரித்து மயில் வாகனத்தில் எழுந்தருளச் செய்து கோயிலின் முன் உள்ள கலாமண்டபத்தில் காட்சி தரச்செய்வர். அன்றிரவு திருவிளக்கு பூசை நடைபெறும். சொற்பொழிவு, இன்னிசைக் கச்சேரி, கதாகாலட்சேபம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இவை முடிந்த பின் உற்சவமூர்த்திக்குத் தீபாராதனை காட்டுவர்
பன்னிரு மாதங்களில் வரும் பன்னிரண்டு கார்த்திகை நாட்களை நடத்தத் தனித்தனிக் கட்டளைதாரர்கள். உள்ளனர்5. வருடத்தில் பதின்மூன்றாவது கார்த்திகை நாள் வரும் பொழுது அதை வெற்றிலை வியாபாரிகள் தரப்பு ஏற்று நடத்தும். பதினான்காவது கார்த்திகை வரின் அதை உறவின்முறையிலிருந்து நடத்துவர்.
கார்த்திகை நாளில் நடைபெறும் குத்துவிளக்கு பூசையில் பெண்கள் மகிழ்வுடன் கலந்து கொள்வர். கலை நிகழ்ச்சிகள் முடிந்த பின் உற்சவமூர்த்திக்கு வழிபாடு நடத்தி விட்டுக் கட்டளைதாரருக்குப் பரிவட்டம் கட்டிச் சிறப்புச் செய்து திருநீறு , குங்குமம், சுண்டல், பொங்கல் ஆகிய பிரசாதங்கள் வழங்கப்படும்.
சித்திரைத் திங்கள்: சித்ரா பவுர்ணமி
சித்திரைத் திங்கள் பௌர்ணமி நாளில் அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் அமுதலிங்கேஸ்வரர், அமுதவல்லியம்மன், வரதராஜப் பெருமாள், சித்திரபுத்திரர் ஆகியோருக்குச் சிறப்பு வழிபாடு நடத்தப்படும்.
அமுதலிங்கேஸ்வரருக்கும், அமுதவல்லியம்மனுக்கும், சித்திர புத்திரருக்கும் காலையில் அபிஷேக ஆராதனை நடைபெறும். வரதராஜப் பெருமாளுக்குப் பகல் பன்னிரண்டு மணிக்கு அபிஷேக ஆராதனை நடைபெறும்.
தவம் புரிந்து கொண்டு இருக்கும் பிரம்மாவின் உடலிலிருந்து சித்ரா பவுர்ணமி தினத்தில் தோன்றியதால் அவருக்குச் சித்திரகுப்தன் என்று பெயர் ஏற்பட்டது. எமதருமனின் கணக்கர்; உலக உயிர்களின் பாவபுண்ணியங்களைக் கணக்கு எழுதும்படி பிரம்மாவால் நியமிக்கப்பட்டவர். எமபயம் நீங்க இவரை வழிபடுவர். சித்ரகுப்தரையே சித்திரபுத்திரர் என்று இங்கு வழங்குகின்றனர்.
இவருக்குக் காஞ்சிபுரத்தில் ஓர் ஆலயமும், திருவண்ணாமலையில் ஒரு சந்நிதியும், உள்ளன. அமுதலிங்கேஸ்வரர்
(தொடரும்)........சக
இந்நிகழ்ச்சி கோயில் தோற்ற காலம் முதலாக இன்று வரை நடைபெற்றுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்திகைத் திங்கள் - சோமவாரம்
கார்த்திகைத் திங்களில் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமையன்று கொண்டாடப்பெறும். இம்மாதத்தில் வரும் நான்கு அல்லது ஐந்து திங்கள் கிழமைகளும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
கார்த்திகை மாதம் சுக்லபட்ஷ அஷ்டமியில் சந்திரன் தோன்றினான் என்றும்; அவன் தன்னுடைய கொடிய நோய் குணமாக சிவபெருமானை ஆராதித்து நவகிரகங்களில் ஒருவன் ஆனான் என்றும் ஆன்றோர் கூறுவர். தன் பெயரால் தோன்றிய சோமவாரத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று சந்திரன் சிவபெருமானை வேண்டிக் கொள்ள சிவபெருமான் அவ்வாறே அருள் புரிந்தார். அதன் காரணமாகவே கார்த்திகை மாதத் திங்கள் கிழமை சோமவாரம் என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் அமுதலிங்கேஸ்வரருக்கும் அமுதவல்லியம்மனுக்கும் சிறப்பாக அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இவ்வழிபாடு மாலை ஐந்து மணிக்கு நடைபெறும். பால், எண்ணெய், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் ஆகிய அபிஷேகங்கள் நடக்கும். சுத்த அன்னம், சுண்டல், தேங்காய், பழம் நைவேத்யப் பொருள்களாகும். சோடச தீபாராதனை நடைபெறும். கடைசி சோமவாரம் புளியம்பட்டி சி. மு. ஆவுடையம்மாள் கட்டளையாலும், பிற சோமவாரங்கள் அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறையாலும் நடத்தப்படும்.
திருக்கார்த்திகை
கார்த்திகைத் திங்களில் வரும் கிருத்திகை நட்சத்திர நாளன்று திருக்கார்த்திகை விழா கொண்டாடப்பெறும். இது சிவபெருமானுக்கும் முருகனுக்கும் சிறப்பு நாளாக அமைகிறது.
அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் முத்துக்குமாரசாமி சந்நிதியில் இரவு ஒன்பது மணிக்கு இவ்விழா கொண்டாடப்பெறும். உற்சவமூர்த்தி முருகனை அலங்கரித்து மயில் வாகனத்தில் எழுந்தருளச் செய்து கலாமண்டபத்தில் காட்சி தரச் செய்வர். பால், எண்ணெய், தயிர், பஞ்சாமிர்தம், சந்தன அபிஷேகம் நடைபெறும். பொங்கல், சுண்டல், தேங்காய், பழம் நைவேத்யப் பொருள்களாகும். சோடச பூசை மூலவருக்கும், உற்சவமூர்த்திக்கும் நடைபெறும்.
கோயில் முழுவதும் தீபங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். இரவில் முருகன் புகழ் பாடும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பெறும். இந்நாளில் சொக்கப்பனை கொளுத்துகிறார்கள். சிவபெருமான் ஜோதிவடிவமாக எழுந்தருளிய நாள் கார்த்திகை நாளாகும். சிவனின் அடிமுடியைத் திருமாலும் பிரம்மாவும் தேடிய வரலாற்றை உணர்த்தும் விழாவாகும். சிவன் ஜோதி வடிவாய்த் தோன்றியதை நினைவு படுத்தவே சொக்கப்பனை கொளுத்துவதாகச் சொல்கின்றனர்.
பனைமரத்தை வெட்டி நடுவில் வைத்துச் சுற்றிலும் பனை மடலை வெட்டிக் கட்டி வைத்துக் கொளுத்துவதனாலும், சொக்கனாகிய சிவபெருமானைக் குறித்து இதைச் செய்வதினாலும் சொக்கப்பனை என்று பெயர் வந்திருக்கலாம் என்று கருத இடமுண்டு. பனைமரத் துண்டுகளைக் கொண்டு வந்து அடுக்கி வைத்து, அவற்றின் மேல் தேவையற்ற பொருட்களையெல்லாம் போட்டுக் கொளுத்துவர். மிகப் பெரிதாக விளங்கும் தீப ஒளி கண்டு மக்கள் களிப்படைவர்.
மார்கழித் திங்கள் - தனுர் மாதபூசை
மார்கழித் திங்கள் முப்பது நாளும் அதிகாலையில் சிவபெருமானுக்கும் திருமாலுக்கும் நடைபெறும் பூசை தனுர் மாதபூசை எனப்படும்.
தேவர்களுக்குத் தைத்திங்கள் முதல் ஆனித் திங்கள் வரை பகல்பொழுது என்றும் ஆடித் திங்கள் முதல் மார்கழித் திங்கள் வரை இரவுப் பொழுது என்றும் வேதங்கள் கூறுகின்றன. இவ்வகையில் மார்கழித் திங்கள் தேவர்களுக்கு விடியற்காலைப் பொழுதுமாகும். அந்தத் திங்களில் விடியற்காலைப் பொழுதில் தேவர்கள் ஆகாய மார்க்கத்தில் உலா வரும் காலையில் ஆண்டவனைத் தரிசனம் செய்வது சிறப்பாகும். எனவே இப்பூசை அதிகாலையில் நடைபெறும்.
மார்கழித் திங்கள் முப்பது நாளும் கோயில் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். நாள்தோறும் சூரியஉதயத்திற்கு முன்பே அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் உள்ள எல்லா மூர்த்திகளுக்கும் அபிஷேக ஆராதனை நடைபெறும். ஆண்டாளின் திருப்பாவையும், மாணிக்கவாசகரின் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சியும் நாள்தோறும் ஓதப்படும்.
இத்திங்களில் வரும் வைகுண்ட ஏகாதசியும், ஆருத்ரா தரிசனமும் முறையே ஏகாதசி, நடராஜர் அபிஷேகங்கள் பற்றிய தலைப்புகளில் விளக்கமாக இடம் பெற்றுள்ளன.
குழந்தைகள் முதல் பெரியவர் வரை எல்லா மக்களும் அதிகாலையில் நீராடி கோயிலுக்குச் சென்று வழிபாட்டில் கலந்து கொண்டு இறையருள் பெற்றுத் திரும்புவர். விடியற்காலைப் பொழுதில் கோயில் கலகலப்பாகத் திகழ்வது இம்மாதத்தில் தான். குளிரைப் பொருட்படுத்தாது இறைமை உணர்வுடனும் ஆழ்ந்த பக்தியுடனும் மக்கள் விளங்க அதிகாலை வழிபாடு தூண்டுகோலாக அமைகிறது.
அஷ்டமி பிரதட்சணம் - மார்கழித் திங்கள்
பொதுவாகவே மக்கள் ‘அட்டமி நவமி தொட்டது துலங்காது’ என்று எச்சுப காரியத்தையும் தொடங்குவதற்கு விரும்பமாட்டார்கள். நன்னாளாகக் கருத மாட்டார்கள். ஆனால் இத்திங்களில் வளர்பிறையில் வருகின்ற அட்டமி நாளையும் மிகச் சிறப்புடையதாகக் கருதி விழா எடுக்கின்றனர். மாதங்களில் நான் மார்கழி என்று கண்ணன் பகவத்கீதையில் கூறுகிறான். இஃது இறைவனுக்கு எந்நாளும் உகந்ததே என்பதை உணர்த்துகிறது.
இறைவன் உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் படி அளக்கும் நாளாகக் கொண்டாடப் பெறுவது இத்திருநாள்.
இது அமுதலிங்கேஸ்வரர் சந்நிதியில் நடைபெறும் திருநாளாகும். அமுதலிங்கேஸ்வரருக்கு காலை ஆறு மணிக்கு அபிஷேக ஆராதனை நடத்தப் பெறும். பால், எண்ணெய், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் ஆகிய அபிஷேகங்கள் நடைபெறும். சுத்தஅன்னம், சுண்டல், தேங்காய், பழம் நைவேத்யப் பொருள்களாக அமையும். சோடச தீபாராதனை காட்டுவர். பின்னர் உற்சவமூர்த்திகளாகிய அமுதலிங்கேஸ்வரர், அமுதவல்லியம்மனை அலங்கரித்து ரிஷபவாகனத்தில் எழுந்தருளச் செய்து கோயில் வெளிப்பிரகாரத்தை மூன்று முறை சுற்றி வரச் செய்வர். அவ்வாறு சுற்றி வரும் பொழுது எல்லா உயிரினங்களுக்கும் உணவிடுவதாக வழியெல்லாம் தானியங்களை இறைத்துக் கொண்டே வருவர்.
திருவீதிப் புறப்பாடு இல்லாத காரணத்தால் இம்முறையில் இறைவனை உலா வரச் செய்கின்றனர். பிரதோஷ நாளில் உட்பிரகார உலாவும், அஷ்டமி பிரதட்சண நாளில் வெளிப்பிரகார உலாவும் குறிப்பிடத்தக்கனவாம்.
மக்கள் பலரும் இறைவனின் உலாவில் பங்கு கொண்டு இறையருளைப் பெறுகின்றனர்.
மாணிக்கவாசகர் காப்பு
மார்கழித் திங்களில் நடைபெறும் விழாக்களில் இதுவும் ஒன்றாகும். இவ்விழா பத்து நாட்கள் நடைபெறும். திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளுக்குப் பத்து நாட்கள் முன்னதாகக் காப்புக் கட்டித் தொடங்கப் பெற்றுத் திருவாதிரை நாளுடன் முடிவடையும்.
சைவசமய குரவருள் ஒருவரான மாணிக்கவாசகருக்குச் சிறப்புச் செய்யும் திருநாளாகும். மார்கழி மாதம் நாள்தோறும் திருப்பள்ளியெழுச்சியும், திருவெம்பாவையும் பாடப்பெறுவதால் இவற்றை இயற்றியவருக்குச் சிறப்புச் செய்யும் வண்ணம் இவ்விழா கொண்டாடப்பெறுவதாகத் தகவலாளர்கள் கூறுகின்றனர்.
அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் உள்ள நடராஜர் சந்நிதியில் இவ்விழா நடைபெறும். உற்சவமூர்த்தியாகிய மாணிக்கவாசகரை நடராஜப் பெருமான் முன் வைத்து ஆராதனை நடைபெறும். அதன் பின்னர் உற்சவமூர்த்தியைப் பல்லக்கில் வைத்துக் கோயிலுக்குள் மூன்று முறை சுற்றி எடுத்து வருவர். மீண்டும் நடராஜர் முன் வைத்து தீபாராதனை காட்டுவர். திருவாதிரையன்று நடராஜருக்கும் அபிஷேக ஆராதனை நடத்திய பின்னர் மாணிக்கவாசகருக்கும் தீபாராதனை காட்டி விழாவினை முடிப்பர். காப்புத் திருநாளன்றும், திருவாதிரைத் திருநாளன்றும் பால், எண்ணெய், தயிர், பஞ்சாமிர்தம், சந்தன அபிஷேகங்கள் நடைபெறும். சோடச பூசை நடைபெறும். சுண்டல், தேங்காய், பழம் நைவேத்யப் பொருள்களாகும். பிற நாட்களில் குட தீபாராதனை மட்டும் நடைபெறும்.
தைத்திங்கள் - தைப்பூசம்
தைத்திங்களில் பூச நட்சத்திரத்தன்று கொண்டாடப்படும் விழாவாகும் இது. பூச நட்சத்திரம் பௌர்ணமியன்று சேரும் நாள் சிறப்பான நாளாகும். அந்நாளைச் சிறந்த நாளாகக் கொண்டு இறைவனை வழிபடுகின்றனர்.
அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் உள்ள பழனியாண்டவர் சந்நிதியில் கொண்டாடப்பெறும் இவ்விழாவில் மாலை ஏழு மணிக்குச் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடத்தப்பெறும். பழனியாண்டவருக்குப் பால், எண்ணெய், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் ஆகிய அபிஷேகங்கள் நடைபெறும். பொங்கல், சுண்டல், தேங்காய், பழம் ஆகிய பொருட்கள் நைவேத்யப் பொருள்களாகும். அருப்புக்கோட்டை பர.பெரிய கருப்பாயி அம்மாள் கட்டளையால் இத்திருநாள் கொண்டாடப்படுகிறது.
மாசித் திங்கள் - மகா சிவராத்திரி
மாசித் திங்கள் கிருஷ்ணபட்ச சதுர்த்தியில் மகா சிவராத்திரி கொண்டாடப்பெறுகிறது.
சிவராத்திரி என்ற சொல்லுக்கு சிவனுடைய ராத்திரி, சிவமான ராத்திரி, சிவனை வழிபடும் ராத்திரி, சிவனுக்கு இன்பமான ராத்திரி என்று பல பொருள் உரைத்து சிவமான ராத்திரி என்பதற்குச் சிறப்பிடம் கொடுத்து சிவராத்திரி கொண்டாடுவதன் நோக்கத்தை வெளிப்படுத்துவர். ஒரு சமயம் உமா தேவி விளையாட்டாக ஈஸ்வரனது கண்களை அவருக்குப் பின்புறமாக வந்து பொத்திவிட எங்கும் பேரிருள் பரவுகிறது. இந்நிலையில் தேவர்கள் சிவபூஜை செய்த இரவே சிவராத்திரி என்றும் ஆன்றோர் கூறுவர். சிவபெருமான் இலிங்கத்தில் தோன்றியருளிய நாள் என்றும், புனர் உற்பவத்திற்காகத் தேவி பூசை செய்த நாள் என்றும் இவ்விழா கொண்டாடுவதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. இவ்வாறு விளக்கினாலும் சிவபூசையினை ஏற்றுக் கொள்வதற்காக சிவபெருமான் அமைந்து நின்ற நாள் என்றே கூறலாம்.
அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் அமுதலிங்கேஸ்வரருக்கும் அமுதவல்லியம்மனுக்கும் உரிய சிறப்பு நிகழ்ச்சியாக கொண்டாடப்படும். ஐந்து அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக நடைபெறும். இரவு பத்து மணி, பன்னிரண்டு மணி, இரண்டு மணி, விடியற்காலை நான்கு மணி, ஐந்து மணி ஆகிய காலங்களில் சிறப்புப்பூசை நடத்தப்படும். பால், எண்ணெய், தயிர், பஞ்சாமிர்தம், சந்தன அபிஷேகங்கள் நடைபெறும். ஒவ்வொரு முறையும் தேங்காய் பழத்துடன் நைவேத்யம் செய்யப்பெறும். விடியற்காலையில் நடைபெறும் இறுதி வழிபாட்டில் பாலாடை நைவேத்யம் செய்யப்பெறும்.
அருப்புக்கோட்டை மு. மு.முத்துச்சாமி நாடார், பெ.சி.வ.பெ.பெருமாள் நாடார் ஆகிய இவ்இருவர் சேர்ந்து அமைத்த கட்டளையால் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது. இன்று கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். மக்கள் பெருந்திரளாக வந்திருந்து வழிபாடுகளில் கலந்து கொண்டு சிவபூசையின் சிறப்பைப் பெற்றுச் செல்வர்.
மாசிமகம்
மாசித்திங்களில் மிகவும் சிறந்த நாளாகக் கருதப்படும் பௌர்ணமி மகநட்சத்திரத்தில் வரும் நாளன்று இவ்விழா கொண்டாடப்பெறும்.
(தொடரும் )..........சக
இவ்விழாவன்று மக்கள் கடலாடி இறைவனை வழிபடுவது சிறப்பாகக் கருதப்படுகிறது. கடல் இல்லாத இடத்தும் மக்கள் நீராடிவிட்டு இறைவனைக் கோயிலில் வந்து வழிபட்டுச் செல்வர்.
அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் உள்ள முத்துக்குமாரசாமிக்கும், பழனியாண்டவருக்கும் இந்நாளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இரவு ஏழு மணிக்கு பால், எண்ணெய், தயிர், பஞ்சாமிர்தம், சந்தன அபிஷேகங்கள் நடைபெறும். பொங்கல், சுண்டல், தேங்காய், பழம் நைவேத்யப் பொருள்களாகும். சோடச தீபாராதனை நடைபெறும். மக்கள் பலர் வந்து வழிபாட்டில் கலந்து கொண்டு இறையருள் பெற்றுத் திரும்புவர்.
சங்கடசதுர்த்தி
மாசித் திங்கள் அமரபட்சத்தில் செவ்வாய்க்கிழமை கூடிய சதுர்த்தியில் இவ்விழா கொண்டாடப்படும்.
அங்காரகனுக்குப் பெருமாள் காட்சி தந்த செவ்வாய்க்கிழமையன்று சதுர்த்தியாதலால் செவ்வாய்க்கிழமையில் வரும் சதுர்த்தி மிகச் சிறப்பானதாகும். மற்ற நாட்களில் வரும் சதுர்த்தியை விட அது பெருமாளுக்குச் சிறப்பாகவும், சங்கடங்களைப் போக்க வல்லதுமாக இருப்பதாலும் சங்கட சதுர்த்தி எனப் பெயர் பெற்றுக் கொண்டாடப்பட்டு வருகிறது.
அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் எழுந்தருளியுள்ள அனவரத செல்வ விநாயகருக்கு இவ்விழா கொண்டாடப்படுகிறது. இரவு ஒன்பது மணிக்கு வழிபாடு நடக்கும். பால், எண்ணெய், தயிர், பஞ்சாமிர்தம், சந்தன அபிஷேகங்கள் நடைபெறும். விநாயகர் சதுர்த்திக்கு வைக்கப் பெற்ற நைவேத்யப் பொருள்களைப் போலவே கொழுக்கட்டை, சுண்டல், பழங்கள், முதலியன வைத்து நைவேத்தியம் செய்யப்பெறும். அலங்கார தீபம், கும்பம், குடதீபம் மட்டுமே காட்டப்பெறும்.
மக்கள் பலர் கோயிலுக்கு வந்து விநாயகர் வழிபாட்டில் கலந்து கொண்டு விநாயகரின் அருட்பிரசாதம் பெற்றுக் களிப்புடன் வீடு திரும்புவர்.
பங்குனித் திங்கள் பங்குனி உத்திரம்
பங்குனித் திங்கள் பௌர்ணமியன்று உத்திரத் திருநாள் கொண்டாடப்படுகிறது.
சந்திரன் உத்திர நட்சத்திரத்தில் இருப்பதால் இதற்கு இப்பெயர் வந்தது என்பர். அம்பிகைக்கும் இறைவனுக்கும் திருமணம் நடந்த நாள் இந்நாளாகும். அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் உள்ள பழனியாண்டவர் சந்நிதியில் உத்திரத் திருநாள் கொண்டாடப்படும். இரவு ஏழு மணிக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும். பால், எண்ணெய், தயிர், பஞ்சாமிர்தம், சந்தன அபிஷேகங்கள் நடைபெறும். பொங்கல், சுண்டல், தேங்காய், பழம் நைவேத்யப் பொருள்களாகும். சோடச பூசை நடைபெறும். இந்நாளில் நடைபெறும் இவ்விழாவில் மக்கள் பலர் கலந்து கொண்டு இறைவனை வழிபடுவர்.
நடராஜர் அபிஷேகங்கள்
ஒவ்வொரு ஆண்டும் நடராஜருக்கு ஆறு நாட்கள் அபிஷேக ஆராதனை நடைபெறும். சித்திரைமாதத் திருவோண நட்சத்திரத்தன்றும், ஆனிமாதம் உத்திர நட்சத்திரத்தன்றும்; ஆவணி, புரட்டாசி, மாசி மாதங்களில் பூர்வபட்ச சதுர்த்தியன்றும், மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். ஆனி மாதம், மார்கழி மாதம் ஆகிய இரு மாதங்களில் காலை மூன்றரை மணிக்கும்; பிறமாதங்களில் காலை பத்தரை மணிக்கும் இவ்வழிபாடு நடைபெறும்.
திருவாதிரை
பதஞ்சலி முனிவருக்கும் வியாக்ரபாதருக்கும் சிற்சபையில் தன் நடனத்தை ஆடிக் காட்டினார் சிவபெருமான். இதனைக் கொண்டாடுவதே திருவாதிரையாகும். இவ்விழாவை ஆருத்ரா தரிசனம் என்றும் வழங்குவர். இக் கொண்டாட்டத்திற்கான சிவபெருமானின் சிறப்பு உணர்த்தும் கதை ஒன்று ஆன்றோர் கூறுவர்.
தாருகா வனத்திலுள்ள முனிவர்கள், கர்ம மார்க்கமே சிறந்தது; கர்மாவே மனிதர்களுக்குப் பலனை அளிப்பதால் ஈஸ்வரன் ஒருவன் தேவை இல்லை என்ற நாத்திக வாதத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்குப் பக்தி மார்க்கத்தை அறிவுறுத்த சிவபெருமான் பிச்சாண்டவராகவும் மகாவிஷ்ணு மோகினியாகவும் வந்து பிச்சை கேட்டனர். இறைவனுடைய சுந்தரக் கோலத்தில் மயங்கிய ரிஷி பத்தினிகள் அவர் பின்னே சென்றனர். கோபம் கொண்ட ரிஷிகள் அவரைக் கொல்ல யானையை அனுப்பினர். அதைக் கொன்றார். பிறகு பூதத்தை அனுப்பினர். அதைக் காலில் கீழே போட்டு மிதித்தார். பிறகு உடுக்கை, மான், தீ, பாம்பு ஆகியவற்றை அனுப்பினர். அவற்றை ஆபரணங்களாகக் கொண்டு நர்த்தனம் செய்தார். அதைக் கண்டு ஆனந்தம் அடைந்த ரிஷிகள் உண்மையை உணர்ந்து சிவபக்தர் ஆனார்கள். அந்த நாளே ஆருத்ரா தரிசனமாகும்.
ஆண்டில் நடைபெறும் ஆறு அபிஷேகங்களிலும் சிறப்பான வழிபாடு நடைபெறும். பால், எண்ணெய், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் ஆகிய அபிஷேகங்கள் நடைபெறும். பொங்கல், சுண்டல், தேங்காய், பழம் ஆகியன நைவேத்யப் பொருள்களாக அமையும். சோடச தீபாராதனை நடத்துவர்.
ஆனித் திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனம் ஆகிய இரு நாட்களின் நிகழ்ச்சிகள் தூத்துக்குடி மா.வே.சண்முகவேல் நாடார் அன் சன்ஸ் அவர்களது கட்டளையாலும், பிற நான்கு நாட்களில் நடைபெறும் அபிஷேகங்கள் காய்கறித் தரப்பினர் கட்டளையாலும் நடைபெறும்.
அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் இடம் கொண்ட நடராஜரின் தோற்றம் மதுரை வெள்ளியம்பலத்தில் இருப்பது போல் வலது காலைத் தூக்கி நின்றாடும் தோற்றமாக விளங்குவதும், இச்சந்நிதியில் நடைபெறும் ஆறு அபிஷேகங்களும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெறும் அபிஷேகங்களோடு ஒத்திருப்பதும் குறிப்பிடத்தக்கனவாம். திருவாதிரையன்று விரதமிருத்தலைப் பொதுவாகக் கூறினும் மார்கழி மாதத் திருவாதிரை மிகச் சிறப்பாகக் கருதப்படுவதால் மக்கள் பெரும்பான்மையோர் விரதம் இருந்து கோயிலுக்கு வந்து நடராஜரின் ஆடும் கோலத்தைக் கண்டு மகிழ்ந்து திரும்புவர்.
சூரிய பூசை
புரட்டாசித் திங்கள் ஏழு, எட்டு, ஒன்பது தேதிகளிலும், பங்குனித் திங்கள் பதின்மூன்று, பதினான்கு, பதினைந்தாம் தேதிகளிலும் சூரிய பூசை நடைபெறும். இந்நாட்களில் சூரிய ஒளியானது காலை ஆறு மணியளவில் சிவலிங்கத்தின் மீது விழும். அப்பொழுது வழிபாடு நடக்கும்.
உத்தராயன தட்சினாயன காலங்களில் சூரியன் தனது சாயைகளுடன் சிவனை வழிபட்டதாக ஆன்றோர் கூறுவர். எனவே அக்காலங்களில் சூரிய பூசை நடைபெறுகிறது.
சூரியபூசை காலை ஆறுமணிக்கு நிகழும். அப்பொழுது அமுதலிங்கேஸ்வரர் மீது சூரியஒளி படும். சுத்தஅன்னம், பழம் வைத்து நைவேத்யம் செய்து தீபாராதனை காட்டுவர்.
இக்காட்சியைக் கண்டு களிக்க மக்கள் வருவர். சூரிய பூசை வழிபாட்டில் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டுத் திரும்புவர்.
பிற நிகழ்ச்சிகள் - வாழவந்தம்மன் சந்நிதி, அனுமன் சந்நிதியில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகள்
வாழவந்தம்மன் சந்நிதி
பங்குனித் திங்களில் வாழவந்தம்மன் சந்நிதியில் சிறப்பு வழிபாடு நடைபெறும். அருப்புக்கோட்டையிலுள்ள முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி மாதம் பொங்கல் விழா கொண்டாடப்பெறும். அப்பொழுது அக்கினிச்சட்டி எடுத்தல் சிறப்பாக நடைபெறும். அக்கினிச்சட்டி எடுக்கும் நாளில் அக்கினிச்சட்டி எடுப்பவர்கள் இச்சந்நிதியில் தான் தீ வளர்த்துக்கொண்டு செல்வர். அந்நாளில் இச்சந்நிதி விழாக்கோலம் பூண்டிருக்கும். மஞ்சள் நீராட்டி அலங்கரித்து சூட தீபாராதனை காட்டுவர்.
அனுமன் சந்நிதி
கோயிலின் வெளிப்பிரகாரத்திலுள்ள அநுமன் சந்நிதியில் வாரந்தோறும் வியாழக்கிழமையன்று சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. இவ் வழிபாட்டிற்குத் தனிப்பட்ட கட்டளைதாரர்கள் இல்லை. அனுமன் பக்தர்கள் கொண்டு வரும் பால், தயிர் ஆகிய பொருட்களால் அபிஷேகம் நடைபெறும்.
ஏகாதசி, வைகாசி விசாகம், கந்தசஷ்டி, அஷ்டமிபிரதட்சணம், மாணிக்கவாசகர் காப்பு, மாசிமகம், பங்குனிஉத்திரம் ஆகிய விழாக்கள் அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறையில் நடத்தப் பெறுகின்றன.
கோயிலில் நடைபெறும் விழாநிகழ்ச்சிகளை முன்கூட்டியே கோயிலில் உள்ள விளம்பரப் பலகையில் அறிவித்து விடுகிறார்கள். எனவே மக்கள் பலரும் குறிப்பிட்ட காலங்களில் வந்து இறைவழிபாட்டில் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர்.
அமுதலிங்கேஸ்வரர் சந்நிதியில் பிரதோஷம், சித்ரா பௌர்ணமி, ஆடித் தபசு, கார்த்திகைமாத சோமவாரங்கள், அஷ்டமிபிரதட்சணம், சிவராத்திரி ஆகிய விழாக்கள் நடைபெறும்.
அமுதவல்லியம்மன் சந்நிதியில் சித்திரா பௌர்ணமி, ஆடித்தபசு, நவராத்திரி, கார்த்திகைமாத சோமவாரங்கள், சிவராத்திரி ஆகிய விழாக்கள் நடைபெறும்.
வரதராஜப்பெருமாள் சந்நிதியில் ஏகாதசி, திருமஞ்சனசேவை, புரட்டாசி மாத சனிக்கிழமைகள் ஆகிய விழாக்கள் நடைபெறும்.
அனவரத செல்வ விநாயகர் சந்நிதியில் விநாயகர் சதுர்த்தி, சங்கடசதுர்த்தி ஆகிய விழாக்கள் நடைபெறும்.
முத்துக்குமாரசாமி சந்நிதியில் மாதாந்திர கார்த்திகை நட்சத்திர நாட்கள், வைகாசி விசாகம், விஜயதசமி, திருக்கார்த்திகை, மாசிமகம் ஆகிய நாட்களில் விழாக்கள் நடைபெறும்.
நடராஜர் சந்நிதியில் ஆறு அபிஷேகங்கள் ஓர் ஆண்டில் நடைபெறும்.
பழனியாண்டவர் சந்நிதியில் வைகாசி விசாகம், கந்தசஷ்டி, தைப்பூசம், மாசிமகம். பங்குனிஉத்திரம் ஆகிய விழாக்கள் நடைபெறும்.
தீபாவளித் திருநாள் எல்லா மூர்த்திகளுக்கும் கொண்டாடப்பெறும் சிறப்பு விழாவாக உள்ளது.
முத்து மாரியம்மன் கோயில்
முத்து மாரியம்மன் கோயிலில் நவராத்திரி, திருக்கார்த்திகை, தெப்பத் திருவிழா, திருவாதிரை ஆகிய விழாக்கள் நடைபெறும்.
நவராத்திரி
இவ்விழா கொண்டாடப்படும் நாளும், காரணமும் முன்பே விளக்கப்பட்டுள்ளன.
இக்கோயிலில் நவராத்திரி கொண்டாடப்பெறும் ஒன்பது நாட்களிலும் உற்சவமூர்த்தி அம்மனை விதவிதமாக அலங்கரித்து மகாமண்டபத்தில் ஊஞ்சலில் எழுந்தருளச் செய்து மக்கட்குக் காட்சி வழங்கச் செய்வர். அலங்கார வரிசை வருமாறு:
1)உட்கார்ந்த கோலம்
2)வீணையுடன் அமர்ந்த கோலம்
(தொடரும் ).............சக
3)ஒரு காலை மடக்கிப் போட்டுச் சயன கோலம்
4)சம்மணம் போட்டு உட்கார்ந்த கோலம்
5)செங்கோல் கொண்டு அமர்ந்த கோலம்
6)சரஸ்வதி போல வீணையுடன் இருக்கும் கோலம்
7)உட்கார்ந்த கோலம்
8)துர்க்கை சூரனைச் சம்ஹாரம் செய்யும் கோலம்
9)அம்மன் சிவபூஜை செய்யும் கோலம்
ஒவ்வொரு நாளும் பீடநிலையில் இருக்கும் மூலவருக்கு இரவில் எட்டு மணிக்கு அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக நடைபெறும். பால், எண்ணெய், தயிர், மஞ்சள்காப்பு அபிஷேகம் நடக்கும். பின்னர் அம்மன் வடிவத்தோடு கூடிய திருவாச்சி வைக்கப்பெற்று ஆராதனை நடைபெறும். சாம்பிராணிப் புகை ஊட்டி சூட தீபாராதனை காட்டப்படும். நைவேத்தியப்பொருள் வெண்பொங்கல் ஆகும். குங்கும அர்ச்சனை செய்யப்பட்டுத் தேங்காய் உடைக்கப்படும். இதனை அடுத்து உற்சவமூர்த்திக்குச் சாம்பிராணிப் புகை ஊட்டி சூடதீபாராதனை காட்டப்படும். அடுத்து உட்பிரகாரத்தில் உள்ள தெய்வங்களுக்குத் தீபாராதனை காட்டியபின் கொடிமரம், பலிபீடத்திற்குத் தீபாராதனை காட்டிவிட்டு மீண்டும் மூலவருக்குத் தீபாராதனை காட்டி வழிபாட்டை முடிப்பர்.
பொம்மைகள் கொண்டு பெரிய அளவில் கொலு வைக்கப்பட்டிருக்கும். இவ்அம்மன் கோயிலில் வழிபாடு நடந்த பின்னர் தான் அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் வழிபாடு நடைபெறும். அதிகமான மக்கள் நாள்தோறும் கோயிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு அருள் பெற்றுச் செல்வர்.
திருக்கார்த்திகை
இவ்விழா கொண்டாடப்பெறும் நாளும், காரணமும் முன்பே விளக்கப்பட்டுள்ளன.
கார்த்திகை மாதம் கார்த்திகைத் திருநாளன்று உற்சவமூர்த்தி அம்மனை அலங்காரம் செய்து முன்மண்டபத்து ஊஞ்சலில் எழுந்தருளச் செய்வர். அம்மன் அமர்ந்த திருக்கோலத்தில் வீற்றிருப்பாள். மூலவருக்குப் பால், தயிர், எண்ணெய், மஞ்சள்காப்பு அபிஷேகங்கள் நடைபெறும். பொங்கல், சுண்டல், தேங்காய், பழம் வைத்து நைவேத்யம் செய்யப்படும். கோயில் முழுவதும் விளக்குகள் ஏற்றப்பட்டு அலங்கரிக்கப்படும்.
மக்கள் பலர் புத்தாடை பூண்டு திரளாக வந்து அம்மனை வழிபடுவர். தங்கள் மனக்குறைகளை நீக்க வேண்டிக்கொண்டு அம்மன் அருள் பிரசாதத்துடன் வீடு திரும்புவர்.
தெப்பத் திருவிழா
முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெறும் தனிச்சிறப்பு மிக்க விழாவாகும் இத்திருவிழா. திருக்கார்த்திகைத் திருநாளன்று நடைபெறும். கோயிலுக்கு அருகில் உள்ள நாடார் சமூகத்திற்கு உரிமை உடைய தெப்பத்தில் இவ்விழா நடத்தப் பெறும்.
சுமார் நாற்பது பேரல்களைக் கயிற்றால் கட்டி நீரில் மிதக்க விடுவர். இது மண்டபம் போல் அமைக்கப்படும். இதன்மேல் சப்பரம் செய்து நிறுத்தி மாரியம்மனை எழுந்தருளச் செய்வர். சப்பரத்தைக் கயிற்றால் கட்டி நீருக்குள்ளேயே இழுத்து வருவர். நான்கு திசைகளிலும் இருக்கும் படிகளின் முன் சப்பரத்தை நிறுத்தி தீபாராதனை நடத்துவர். இவ்வண்ணம் தெப்பத்திற்குள் மூன்று முறை அம்மனை வலம் வரச் செய்வர். இரவு ஏழு மணி அளவில் தொடங்கப் பெற்று நடு இரவு ஒரு மணி வரை விழா நடக்கும்.
தெப்பத்தில் நீர் இல்லாத போது இவ்விழா நடைபெறாது. ஊர் மக்கள் அனைவரும் கூடி தெப்பத்தைச் சுற்றி நின்று அம்மன் தரிசனம் கண்டு ஆனந்திப்பர்.
திருவாதிரை
இவ்விழா நிகழும் நாளும் காரணமும் முன்பே விளக்கப்பட்டுள்ளன.
முத்து மாரியம்மன் கோயிலில் இவ்விழா காலை ஆறு மணிக்கு நடைபெறும். பால், எண்ணெய், மஞ்சள்காப்பு ஆகியவற்றால் அபிஷேகம் நிகழ்த்துவர். சாம்பிராணிப்புகை ஊட்டி, குங்கும அர்ச்சனை செய்து சூடதீபாராதனை காட்டுவர். நைவேத்தியப்பொருள் களியாகும். மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்திய பின்னர் உட்பிரகாரத் தெய்வங்களுக்குச் சூட தீபாராதனை காட்டப்பெறும்.
மக்கள் பலரும் காலையிலேயே தூய்மையாகக் கோயிலுக்கு வந்து அம்மனை வழிபட்டுச் செல்வர். இக்கோயிலில் நடைபெறும் இவ்விழாக்களுக்குக் கட்டளைதாரர்கள் இல்லை.
வாலசுப்பிரமணியர் கோயில்
இக்கோயிலில் எழுந்தருளியுள்ள சுப்பிரமணியசாமிக்கு வைகாசி விசாகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, மாசிமகம், பங்குனிஉத்திரம் ஆகிய நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்பெறும்.
வைகாசிவிசாகம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, மாசிமகம், பங்குனிஉத்திரம்:
இவ்விழாக்கள் கொண்டாடப்படும் நாட்களும், காரணமும் முன்பே விளக்கப்பட்டுள்ளன. இக்கோயிலில் விழாக்கள் ஓரளவு சிறப்புடையனவாகவே கொண்டாடப்படுகின்றன. இவ்விழா நாட்களில் சுப்பிரமணியருக்குப் பால், எண்ணெய், தயிர், பஞ்சாமிர்தம், சந்தன அபிஷேகங்கள் நடைபெறும். சூட தீபாராதனை காட்டப்படும். பொங்கல், சுண்டல், தேங்காய், பழம் நைவேத்யப் பொருள்களாக அமையும். அபிஷேக ஆராதனைகள் இரவு ஏழு மணிக்கு நடைபெறும்.
திருக்கார்த்திகைத் திருநாள் மட்டும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். கோயில் சிறிய அளவுடையதாக இருப்பினும் லட்ச தீபம் ஏற்றுவதாகக் கொண்டு பெரும் அளவில் விளக்கேற்றி வைத்திருப்பர். மக்கள் மிகுதியாக வந்திருந்து முருகனை வழிபட்டு விட்டுத் தீப வரிசையைக் கண்டு மகிழ்ந்து வீடு திரும்புவர்.
இக்கோயிலில் எழுந்தருளி உள்ள விநாயகருக்கு இரு விழாக்கள் நடைபெறும். அவை விநாயகர் சதுர்த்தியும், சங்கடசதுர்த்தியும் ஆகும். இவ்விரு விழாக்களும் கொண்டாடப்படும் நாட்களும், காரணமும் முன்பே விளக்கப்பட்டுள்ளன.
விநாயகர் சதுர்த்தி
விநாயகருக்கு இரவு ஏழு மணிக்கு அபிஷேக ஆராதனைகள் நிகழும். பால், எண்ணெய், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் ஆகிய அபிஷேகங்கள் நடைபெறும். சூட தீபாராதனை காட்டப்படும். கொழுக்கட்டை, சுண்டல், தேங்காய், பழங்கள் நைவேத்தியப் பொருள்களாக அமையும்.
சங்கடசதுர்த்தி
விநாயகர் சதுர்த்தியன்று நடைபெற்றது போலவே அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இக்கோயில் தற்பொழுது தான் வளர்ச்சி அடைந்து வருவதால் விழாக்கள் பெரிய அளவில் எடுத்துச் செய்யப் பெறவில்லை. சிறிது சிறிதாக விழா நிகழ்ச்சிகள் சிறப்புடன் நடைபெறத் தொடங்கி உள்ளன. இக்கோயிலுக்கும் விழா நிகழ்ச்சிகளை ஏற்று நடத்தக் கட்டளைதாரர்கள் இல்லை.
சந்திவீரசாமி கோயில்: பொங்கல் விழா
இக்கோயிலில் ஒரே ஒரு விழா மட்டும் நடைபெறுகிறது. இதனைப் பொங்கல் விழா என்பர். இரண்டு நாட்கள் கொண்டாடப்படும் விழாவாகும் இது. தைமாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமை பொங்கல்விழா கொண்டாடுவர். இதற்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை காப்புக் கட்டிக் கொடி ஏற்றுவர். இந்த ஒரு வாரமும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறா. ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாட்கள் விழா நடைபெறும்.
நாடார் இனத்தாருள் ஒரு சிறு குழுவினரான பூசாரி வகையறாவினரின் குலதெய்வம் சந்திவீரசாமி ஆகும். இக்கோயிலைச் சரிவர நிர்வகிக்க முடியாத காரணத்தால் நிர்வாகப் பொறுப்பை அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின் முறையிடம் தந்துவிட்டு வழிபாடு இயற்றும் உரிமையைத் தாங்களே வைத்துக் கொண்டுள்ளனர். தைமாதம் கொண்டாடப் பெறும் பொங்கல் விழாவிற்கு உறவின்முறை ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து விடும்.
இக்கோயிலுக்கு அருகிலுள்ள கடைகள் இக்கோயிலைச் சார்ந்தனவாம். ஞாயிற்றுக்கிழமையன்று அக்கடைகளை எல்லாம் மூடச் செய்து கடைகளின் முன் இரண்டிரண்டு பீடம் அமைப்பர். கோயிலின் முன் அமைக்கப்படும் பீடம் சற்றுப் பெரியதாக இருக்கும். குயவர் வீட்டில் இருந்து கொண்டு வந்த மண்ணால் இப்பீடங்கள் அமைக்கப்படும். பீடங்களுக்கு வெள்ளை அடித்துச் செம்மண் பூசி மஞ்சள், குங்குமம், மலர் வைத்து அலங்காரம் செய்வர். கோயில் முன் உள்ள பீடத்திற்குக் கரும்புகளால் பந்தல் போடப்படும். பீடங்களின் முன் கிளியஞ்சட்டியில் விளக்கேற்றி வைப்பர்.
கோயிலுக்கு அருகில் கோயில்வீடு என்று ஒன்று உண்டு. சந்திவீரசாமியைக் குலதெய்வமாகக் கொண்டாடும் மக்கள் இவ்வீட்டில் வந்து தங்கி இருப்பர். இவ்வீட்டிற்கும் வெள்ளை அடித்துச் செம்மண் பூசி மாவிலையால் ஹோமியம் தெளித்துச் சுத்தம் செய்வர். இவ் வீட்டிற்குள் பூசை அறை ஒன்று உண்டு. இவ்வறையில் வழிபாட்டிற்கு உரிய பொருட்கள் ஒரு மரப் பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். கரகச்செம்பு, பொங்கல்பானை, மணி, போன்ற சாமான்களும், ஈட்டி, சிலம்பு, இரும்பாலான பழங்கால வழிபாட்டுப் பொருட்களும் உள்ளே இருக்கும். அவை இப்பொழுது சிதைவுற்ற நிலையில் உள்ளன.
உறவின்முறைக் காரியஸ்தர்கள் மேளத்துடன் வந்து இவர்களை அழைப்பர். விழாச் செலவிற்கான தொகையைக் கொடுப்பர். உறவின்முறையினர் வந்தவுடன் பூஜை அறைக்குள் பூஜை செய்பவரை மட்டும் அழைத்து அங்குள்ள பூஜைப் பெட்டிக்குச் சூட தீபாராதனை காட்டி எல்லாச் சாமான்களையும் வெளியே எடுத்து வருவர். இவற்றை ஊர்வலமாகக் கோயிலுக்கு எடுத்துச் சென்று சாமி முன்னர் வைப்பர். சில சாமான்களை ஒவ்வொன்றாக ஒவ்வொரு பீடத்தின் முன் வைப்பர்.
பூசாரி வகையறாவில் பிறந்த பதினைந்து வயதிற்குட்பட்ட இரு சிறுவர்களைச் சிங்காரத் தோப்பில் குளித்து விட்டுக் கரகச் செம்பில் நீர் கொண்டு வரச் செய்வர். கரகச் செம்பில் தேங்காய் வைத்து, மாவிலைகள் செருகி மலர் வைத்து வழிபாடு செய்து சிறுவர்களுக்குத் திருநீறு பூசி எடுத்துக் கொடுப்பர். கரகம் கொண்டு வரும் பொழுது விநாயகர் கோயில், ஏனாதிநாத நாயனார் திருமடம், மாரியம்மன் கோயில் முன் உள்ள பரந்த வெளி, பேட்டை போன்ற இடங்களில் நிறுத்திக் குலவை போட்டு ஆடச் செய்து கோயிலுக்குக் கூட்டிக் கொண்டு வருவர்.
பின்னர் சந்திவீரசாமிக்கு அபிஷேகம் செய்ய ஆரம்பிப்பர். சிறுவர்கள் கொண்டு வந்த கரகச்செம்பு நீரால் முழுக்காட்டிய பின் முறையே எண்ணெய், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர் இவற்றால் அபிஷேகம் செய்யப்படும். சாமிக்கு வேட்டி, துண்டு கட்டி அலங்கரிப்பர். பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சட்டத்தினைச் சாமிக்குப் பின் வைத்து அழகு படுத்துவர்.
சாமிக்கு இவ்வாறு அலங்காரம் செய்யும் பொழுதில் உறவின்முறையில் இருந்து வெண்பொங்கல் வைக்கப்படும். கம்புக்குடி வகையறா என்பவர் மட்டும் தங்கட்குரிய ஒரு பீடத்தின் முன் சர்க்கரைப் பொங்கல் வைப்பர்.
வெண்பொங்கலைத் தலைவாழை இலை போட்டு அனைத்துப் பீடம் முன்னும் படைப்பர். பீடங்களின் முன் இரு கலயங்களை வைத்து ஒன்றில் கரகச் செம்பு நீரையும், மற்றொன்றில் பானக்காரமும் ஊற்றி வைப்பர். சந்திவீரசாமிக்கு அலங்காரம் முடிந்த பின் தீபாராதனைகள் செய்வர். அடுத்து அனைத்துப் பீடங்களுக்கும் தீபாராதனை காட்டுவர். முடிவில் மீண்டும் சந்திவீரசாமிக்குத் தீபாராதனை காட்டி வழிபாட்டினை முடிப்பர். வழிபாடு முடிய அதிகாலை ஐந்துமணி ஆகிவிடும்.
தைமாதம் முதல் நாள் வீடுகளில் கட்டிய கூரைப்பூவினை ஒன்று சேர்த்துக் கொண்டு வந்து சொக்கப்பனை கொளுத்துவது இவ்விழாவின் சிறப்புச் செயலாகும்.
வழிபாடு முடிந்தபின் அனைவரும் கோயில் வீட்டிற்குச் சென்றுவிடுவர். உறவின்முறையினர் பொங்கல் பிரசாதத்தை அவர்களுக்கு அங்கு கொண்டு போய்க் கொடுப்பர்.
(தொடரும்).............சக
கோயில்வீட்டிற்கு வந்தபின் உறவின்முறையிலிருந்து கொடுக்கப்பட்ட பணத்தில் வாங்கப்பட்ட செம்மறிக்கடாவினைப் பலியிட்டுச் சமைப்பர். தட்டைப்பயிற்றுப் பருப்பால் குழம்பு செய்து வெண்பொங்கலுடன் காலை உணவு உட்கொள்வர். கறி உணவு பிற்பகலில் சாப்பிடுவர். கோயில் வீட்டிற்கு வருகின்ற அனைவருக்கும் உணவு பரிமாறுவர்.
மாலையில் மீண்டும் கோயிலுக்குச் செல்வர். ஊர் மக்கள் தேங்காய் பழத்துடன் வழிபாட்டிற்காக வருவர். அவர்களுக்கெல்லாம் தேங்காய் உடைத்துத் தீபம் காட்டுவர்.
திங்கட்கிழமை இரவு தான் உறவின்முறை கொடுத்த தேங்காய், வாழைப்பழம், கரும்பு, பஞ்சாமிர்தம், பூ போன்றவற்றைப் பூசாரி வகையறாவினர் தங்கட்குள் பிரித்துக் கொள்வர்.
இத்திருவிழா நடந்த பின்னர் தான் அமுதலிங்கேஸ்வரர் கோயில், முத்துமாரியம்மன் கோயில்களுக்குரிய திருவிழா நாட்கள் குறிக்கப்படும். இக்கோயிலில் இவ்விழா நடைபெறவில்லை என்றால் பங்குனிப்பொங்கல் விழாவும், வைகாசி விசாகத் திருவிழாவும் நடைபெறா.
இக்கோயில் இறைவனை நாடார் சமூகத்தில் ஒரு பிரிவினர் குலதெய்வமாகக் கொண்டிருப்பதால் இவர்களே மிகுதியாக இவ்விழாவில் பங்கு பெறுவர். நாடார் உறவின்முறையினர் இவ்விழாவை நடத்துவதால் சிறுபான்மை பிற நாடார் மக்களும் பங்கு பெறுவர். அமுதலிங்கேஸ்வரர் கோயில், முத்துமாரியம்மன் கோயில், வாலசுப்பிரமணியசாமி கோயில் ஆகிய கோயில்களில் நடைபெறும் விழாவில் பிற சமூகத்தினர் பலர் வந்து கலந்து கொள்வர். ஆனால் இக்கோயில் விழாவில் பிற சமூகத்தார் கலந்து கொள்வது கிடையாது.
சித்திவிநாயகர் கோயில்
இக்கோயிலில் விழாக்கள் எதுவும் சிறப்பாக நடைபெறுவதில்லை.
முடிவுரை
திருவிழாவன்று அருள் தந்திட இறைவன் விக்கிரகத்தில் சிறப்பாக முனைந்து நிற்கிறான் என்றும், தன்னிடத்தில் இருந்தே தரிசனம் அளித்த இறைவன் வெளியே எழுந்தருளி வந்து தரிசனம் தருகிறான் என்றும் ஆன்றோர் கூறுவதால் மக்கள் பெருந்திரளாக வந்து இறைவனை வழிபடுகின்றனர். திருவிழாக் காண்டலைப் பிறவிப்பயனாகக் கருதி இறைவனை வழிபட்டுப் பயனடைகின்றனர். தாங்கள் பெறும் இன்பத்தையும், பயனையும் உற்றார் உறவினரும் அடைய அவர்களுக்கு விழா நாட்களைத் தெரிவித்து வந்து பயனடையச் செய்கின்றனர்.
குறிப்புகள்
1.S.சந்திரசேகர பட்டர் - “மதுரைத் திருவிழாக்கள்” - திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர் - மதுரைத் திருக்கோயில் - 1974 - அருள் மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், மதுரை - ப.107
2. பின்னிணைப்பு - 6
3.அ.காசி - மாரியைப் பணிகுவம் - ப.3
4. பின்னிணைப்பு - 7
5. பின்னிணைப்பு - 8
6. கார்த்திகேயன் - விநாயகர் புராணம் - ப.107
கோயில்களும் இலக்கியங்களும்
முன்னுரை
இலக்கியங்கள்
முடிவுரை
கோயில்களும் இலக்கியங்களும்
முன்னுரை
ஊரின் சிறப்பு கோயில்களாலும், கோயில்களின் சிறப்பு இலக்கியங்களாலும் உணரப்படும். அருப்புக்கோட்டையில் கோயில் கொண்டருளிய இறையவர் மீது பாடப்பட்டிருக்கும் இலக்கியங்கள் இவ்ஊர்ச் சிறப்புக்களையும் இறையவர் சிறப்புக்களையும் நன்கு விரித்துரைக்கின்றன. இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் அமுதலிங்கேஸ்வரர் கோயில் உருவாக்கப்பட்டதாக இருப்பதால் தேவார மூவரால் இக்கோயில் பாடப்பெறவில்லை. எனினும் இக்காலப் புலவர் பெருமக்களால் பாடப்பெற்ற சிறப்பினை உடையதாய் விளங்குகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பாடப் பெற்றனவாக இரு நூல்கள் கிடைக்கின்றன.
கோயில் பற்றி எழுந்துள்ள இலக்கியங்கள் பலவற்றுள் அருப்புக் கோட்டையின் பழம்பெயரான திருநல்லூர் என்னும் பெயரே மிகுதியாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது. இலக்கியங்களில் இசைப் பாடல்கள் பெரும்பான்மையாகக் காணக் கிடக்கின்றன. இவண் இலக்கியங்கள் காலவரிசைப்படி முறைப்படுத்தப்பட்டுக் கொடுக்கப்பட்டுள்ளன.
1. அருப்புக்கோட்டை என வழங்கும் திருநல்லூர் அமுதலிங்க மாலை
இயற்றியவர் - வேங்கடசுப்புப் பிள்ளை
காப்புச் செய்யுள் - 2 வெண்பா
1.விநாயகர்
2. நடேசர்
நூல் - 100 ஆசிரிய விருத்தங்கள்
வாழ்த்துச் செய்யுள் - 1 எழுசீர் ஆசிரியவிருத்தம்
ஆக 103 பாடல்களைக் கொண்டது இந்நூல்
ஆண்டு - 1891
அருப்புக்கோட்டையின் வளம் பாடும் சிறப்போடு அமுதலிங்கேஸ்வரர் புகழ் பாடும் சிறப்பினையும் உடையது. இந்நூல் எளிய பாடல்களால் அமைந்துள்ளது.
“திங்களும் தெய்வக் கங்கையும் புனையும் செஞ்சடா மகுட நீள்முடியும்
பங்கய வதன மைந்தும் ஈரைந்து பனிமலர்க் கரங்களும் இன்பம்
பொங்கு தாள்மலரும் மங்கையோர் பங்கும் பொலிதிருக் காட்சி தந்தருள்வாய்
அங்கயல் வாவி மணிதிரு நல்லூர் அமுத லிங்கேச மாமணியே”
என்னும் பாடல் இறைவனின் தோற்றத்தை எளிமையாக முழுமையாக அழகுபடச் சித்தரிக்கிறது.
2. அருப்புக்கோட்டை என விளங்கும் நல்லூர்க் கலம்பகம் - நல்லூர் மாலை
இயற்றியவர் - வேங்கடசுப்புப் பிள்ளை
காப்பு - 1 நேரிசை வெண்பா - பாலசந்திர விநாயகர்
நூல் - 100 பாடல்கள்
ஆக 101 பாடல்களைக் கொண்டுள்ளது.
ஆண்டு - 1892
இருபத்து ஒன்பதின்மர் பாடிய சாற்றுகவிகளைக் கொண்ட நூலாகத் திகழ்கிறது.
இரங்கல், புயவகுப்பு, மேகவிடுதூது, சம்பிரதம், தலைவியைப் புகழ்தல், மடக்கு, அம்மானை, பிச்சியார், தவம், தழை, கைக்கிளை, ஊசல், இரு பனிக்காலம், குறம், சிலேடை, பாங்கன் தலைவியைக் கண்டு வியத்தல், கிளிவிடுதூது, சீர் பாத வகுப்பு, பாண், கொற்றியார், வண்டு விடு தூது, தலைவி நெஞ்சொடு கிளத்தல், வலைச்சியார், வெறி விலக்கல், சித்து, இடைச்சியார், மதங்கி, நற்றாய் கூறல், களி, கார், இளவேனில், முதுவேனில், கூதிர் காலம், சல்லாபம் எனும் 35 உறுப்புகளைக் கொண்ட நூலாக உள்ளது.
சல்லாபம் என்னும் உறுப்பு புதுமையாக உள்ளது. சல்லாபம் -அமுத லிங்கேஸ்வரர் என்னும் இறைவனுக்கும், அமுதவல்லியம்மன் என்னும் இறைவிக்கும் நடந்த உரையாடலைச் சேடியிடத்து அமுதவல்லியம்மன் கூறுவதாக அமைந்துள்ளது இப்பாடல்.
“கையிலோர் கபாலமுடன் அமுதலிங்கர் பலிக்கு வந்தார் கடைவாய்ச் சென்றே
கையமுதம் கொள்வீ ரென்றேன் கையமுதேன் வாயமுதம் கனிந்தீ என்றார்
ஐயவம்புத்தனம் விடும் என்றேன் வம்புத்தனம் விடுத லறியாய் என்றார்
அழகிது சையோக மென்றேன் பழகுதிசை யோக மென்றாரடி களோவேன்
மெய்யட்ட மூர்த்தி யென்றேன் மெய்யட்ட மூர்த்தியென்றார் மின்னீர் தம்மேல்
வீணாசை உடையீ ரென்றேன் மானாசையுடை யமென்றார் வினவற் கெல்லா
நைய விடை தந்திரென்றே னையவிடை தந்திரென்றே நகையும் செய்தார்
நல்லையர் போமென்றேனீர் நல்லையர் நாமென்றா ரெள்ளா டாய் சேடி”
இந்நூலில் சிவபெருமானின் பெருமைகள், திருவிளையாடல் செய்திகள், அருப்புக்கோட்டை என்னும் திருநல்லூர்ச் சிறப்புக்கள் விரிவாகப் பேசப் படுகின்றன. அமுதலிங்கேஸ்வரரின் வெற்றிப் புயங்களை,
“மாமதுரைப் பதியிருந் தரசு பேணி
மாநிலம் ஒருங்கே பொறுத்துப் புரந்தன
மாமகள் விரும்பி அமரும் திருநலூரில்
வாழமு தலிங்கேசர் வெற்றிப் புயங்களே” என்று புகழ்ந்து பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்
(தொடரும்).............சக
3.அருப்புக்கோட்டை என்னும் திருநல்லூர் அமுதலிங்கேஸ்வரர் சந்நிதியில் கோயில் கொண்டருளிய முத்துக்குமாரசாமி என்னும் சுப்பிரமணியக்கடவுள் பதிகம்
இயற்றியவர் - சூ.ஆ.முத்து நாடார்
காப்புச் செய்யுள் - 1 வெண்பா
நூல் - 10 பதினான்குசீர் ஆசிரிய விருத்தங்கள்
ஆக 11 பாடல்கள் கொண்ட நூலாகும் இது.
ஆண்டு - 1908
இந்நூற்கு அறுவர் சாற்றுக் கவிகள் பாடியுள்ளனர்.
“கந்தனே சோதியருள் மைந்தனே வந்தெனைக்
காத்து இரட்சித்து அருள்வையே”
என்னும் சீர்களை இறுதிச் சீர்களாக எல்லாப் பாடல்களும் கொண்டு உள்ளன. திருநல்லூர்ச் சிறப்பு எல்லாப் பாடல்களிலும் இடம் பெறுகிறது.
“காவினை யடற்கு நல்லூர்”,
“களித்து வாழ்ந்து ஓங்கு நல்லூர்”,
“காவலர்கள் ஓங்கு நல்லூர்”,
“கற்பு நிலை ஆர்ந்த நல்லூர்”,
“காமர் வளமுற்ற நல்லூர்”,
“கவிவாணர் தங்கு நல்லூர்”,
“கதிரொளி மழுங்கு நல்லூர்”,
என்று ஒவ்வொரு பாடலிலும் வரும் அடைமொழிகள் மூலம் நல்லூர்ப் பெருமையை நன்கு உணர முடிகிறது.
முருகனின் தோற்றப் பொலிவினையும், திருமால், பிரம்மா முதலான தேவர்கள் சூழ்ந்து நிற்கும் காட்சியையும்,
“சீருலவு மகுடமுடி ஓராறும் ஈராறு திரு நயன மாமலர்களும்
திகழ்மகர குண்டலக் காதுபனி ரண்டும் வினை
தீர்க்குநீ றணிபொன் நுதலும்
மேருமலை ஒத்தபுய மீராறு முந்நான்கு விரைமலர்க் கரமு மயில்கூர்
வெற்றிவடி வேல்முதற் படைகளு மெடுத்துமயில்
மீதினிற் கனிவு கொண்டு
வாருலவு கனதனக் குஞ்சரியொ டுங்குறவர் வஞ்சியிரு பாலு முலவ
மால்அயன் முதற்றேவர் சூழ்தரத் தொண்டர்திரு
வாய்மலர் திறந்து போற்ற
காருலவு பைந்தடங் காவுகள்வி னிந்திரன் காவினை யடற்கு நல்லூர்
கந்தனே சோதியருள் மைந்தனே வந்தெனைக்
காத்திரட் சித்தருள் வையே. “
எனும் பாடல் நன்கு எடுத்து இயம்புகிறது.
4. திருநல்லூரில் கோயில் கொண்டருளிய ஸ்ரீமத் அமுதலிங்கேஸ்வரர் சந்நிதான உச்சவாதிபதிகளாகிய புண்ணிய சீலர்களை வியந்து பாடிய வாழ்த்துக்கவிகள்
இயற்றியவர் - க.சு.வெங்கடாசலம் பிள்ளை
காப்புச்செய்யுள் - 1கட்டளைக்கலித்துறை - விநாயகர்
நூல் - 23 ஆசிரிய விருத்தங்கள்
ஆக 24 பாடல்கள் அடங்கிய நூலாக உள்ளது.
ஆண்டு - 1908
சோமவாரம், பிரதோஷம், அட்டமி, அமுதாம்பிகை சுக்கிரவாரம், நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, முத்துக்குமாரசாமியின் கார்த்திகை மகோற்சவ வாழ்த்துக் கவிகள் ஆகியன இடம்பெற்றுள்ளன.
பாடல்கள் பின்னிணைப்பு 10ல் தரப்பட்டுள்ளன.
5. அருப்புக்கோட்டை என்று பெயர் வழங்கிய திருநல்லூர்த் திருக்கோயிலில் எழுந்தருளும் முத்துக்குமாரசாமி என்னும் வேலவர் மாலை.
இயற்றியவர் - சூ.ஆ.முத்து நாடார்
காப்புச் செய்யுள் -1 வெண்பா - விநாயகர்
நூல் - 30 கலி விருத்தங்கள்
வாழ்த்துச் செய்யுள் -1 அறுசீர் ஆசிரியவிருத்தம்
ஆக 32 பாடல்களைக் கொண்டுள்ளது இந்நூல். பாடல்கள் எளிய நடையில் அமைந்துள்ளன .
ஆண்டு - 1910
முருகனின் தோற்றச் சிறப்பு, அவனது அருட்செயல்கள், திருநல்லூர் வளம் ஆகியன பேசப்படுகின்றன.
“ஆறுமுகமும் அழகுபுயம் பன்னிரண்டும்
நீரும் நுதலும் நேசவள்ளி குஞ்சரியும்
ஏறுமயில் மீதிலேறி வந்தெனது துயர்
தீருமையா கந்தா திருநல்லூர் வேலவனே”
இது போன்ற பாடல்கள் இனிமை நயம் வாய்ந்தனவாய் எளிமையாய் அமைந்து முருகன் புகழ் பேசுகின்றன.
6. அருப்புக்கோட்டை அருள்மிகு அமுதலிங்கேஸ்வரர் பதிகம்.
இயற்றியவர் - சு.ச.கதிர்வேலு நாடார்
காப்புச் செய்யுள் -1 வெண்பா - விநாயகர்
நூல் - 10 அறுசீர் ஆசிரிய விருத்தங்கள்
வாழி விருத்தம் -1
ஆக 12 பாடல்கள் உள்ளன.
ஆண்டு - 1910
விண்ணுள்ளார் துயரனைத்தும் தீர்த்த இறைவன்,
“மண்ணுள்ளார் குறை தீர்க்க இரவி, மதி, வன்னி என வகுத்த மூன்று
கண்ணுள்ளார் அமுதவல்லியுடன் வில்வ வனத்தமர்ந்தார்.” என்று அமுதலிங்கேஸ்வரர் வில்வமரத்தின் அடியில் அமுதவல்லியுடன் இருக்கும் தோற்றம் குறிக்கப்படுகிறது. மேலும் இறைவனின் அரும்பெருஞ் சிறப்புக்கள் எடுத்து இயம்பப் படுகின்றன. திருநல்லூர் என்று வழங்கிய அருப்புக்கோட்டையின் வளமும் இனிதுறக் கூறப்படுகிறது. அருப்புக்கோட்டையின் வளமும், சிறப்பும்,
“பானகநிகர் மொழிமடவார் நடனமிடும் பான்மையினைப் பார்த்தன் பாலே
தோகைவிளை யாடுபொழில் சூழ்திருநல் லூரென்னும தூத்த லத்தில்”
என்னும் அடிகள் மூலம் நன்கு உணர முடிகிறது.
7. அமுதலிங்கேஸ்வரர் சிறப்புணர்த்தும் தனிப்பாடல் ஒன்று.
இயற்றியவர் - உடுமலை முத்துச்சாமிக் கவிராயர்
ஆண்டு - 1910
வளம் செறிந்த நல்லூரில் எழுந்தருளியுள்ள அமுதலிங்கேஸ்வரரைத் துதிக்கத் திருவுள்ளம் கொண்டதை இப்பாடல் மூலம் ஆசிரியர் வெளிப் படுத்துகிறார்.
“இன்னம் எத்தனைநாள் இருந்தாலும் ஒருநாள்
இறப்பதே சத்தியந்தான்
தொண்டர்கீழ்த் தொண்டனான உன்கோயில் வலமாய்த்
துதித்திட விரும்புகின்றேன்
தென்னைமா பலவுமல் லிகைமுல்லை வர்க்கம்
செழித்ததிரு நல்லூரில் வாழ்
செம்பாக குணசீல சம்பூர்ண சுகபோக சிங்கார லிங்கேசனே.”
8. அருப்புக்கோட்டை என்னும் திருநல்லூர் முத்துமாரியம்மன் பேரில் சிந்து, கும்மி, கீர்த்தனை
இயற்றியவர் - சூ.ஆ.முத்து நாடார்
காப்பு - 4 பாடல்கள்
1.வெண்பா - விநாயகர்
2.சந்தப்பா - விநாயகர்
3.சந்தப்பா - சுப்பிரமணியர்
4.சந்தப்பா - சரஸ்வதி
நூல் - 55 சந்தப்பாக்கள் உள்ளன.
ஆக 59 பாடல்களை உடைய நூலாக உள்ளது.
ஆண்டு - 1911
மாரியம்மன் கோயில் வளம், ஒயில் கும்மி, சந்தக்கும்மி, கீர்த்தன மஞ்சரி, ஆசிரிய வண்ணச் சந்தம் என்னும் தலைப்புகளில் அனைத்துப் பாக்களும் சந்தப்பாக்களாக அமைந்துள்ளன.
ஒயில் கும்மி என்னும் தலைப்பில் உள்ள,
“சின்னஞ் சிறுசிறு பெண்டுகளே தேனில்
சேர்ந்து விளைந்த கற்கண்டுக ளே
சீதங்கமழ் தாதன்குள மேவும் குருவாம் ஐங்கரன்
சேவடி தன்னைப் படியுங்க டி
கும்மி யடிங்கடி கும்மியடி கையைக்
கொட்டியே கும்மி அடியுங்க டி
கொஞ்சும்கிளி அஞ்சுமொழி துஞ்சும்விழிப் பெண்காள் நலம்
கோரிக் கும்மி அடியுங்க டி
என்றும் இது போன்றும் அமைந்த பாடல்கள் நல்ல சந்த இன்பம் பயப்பனவாய் அமைந்துள்ளன.
நூலில் அமைந்துள்ள இசைப் பாடல்கள் போற்றத் தக்கனவாய் உள்ளன. கீர்த்தனமஞ்சரி என்னும் தலைப்பில் உள்ள பாடல் தக்க சான்றாய் அமையும்.
“பல்லவி
வரந் தருவாயே மகேஸ்வரி
அனுபல்லவி
செந்திரு நல்லூர் வாழ் சிவமய சொரூபி
(வ)
தீரசூர சங்காரி சிரியேன் நேரில்
(வ)
சரணம்
அல்லும் பகலும் உன்னை அடி பணிந்தேனே
கல்லும் கரைய நானே கவி செய்தேனே
(வ)
சிங்கவாகனம் ஏறி எங்கும் நிறைந்த மாரி
மங்களமாய் உன் பேரில் வழுத்தும் சொற்கு
(வ)
பக்தியுடன் துதிக்கும் முத்துச்சாமிக்கு
குற்றம் வராது காத்துக் கொண்டிருந்து
(வ)”
மாரியம்மன் மீது பாடப்பட்டு இதில் இடம் பெற்ற சந்தக்கும்மி என்னும் பகுதியிலுள்ள பாடல்கள் தனித்தும் அச்சிடப்பட்டுள்ளன.
9. திருநல்லூர் என்னும் அருப்புக்கோட்டை மாநகர் ஸ்ரீஅமுர்தவல்லியம்மன் பதிகம்
இயற்றியவர் - சூ.ஆ.முத்துநாடன்
காப்புச் செய்யுள் - 1கலிவிருத்தம் - விநாயகர்
நூல் - 10 பதினாறு சீர் ஆசிரிய விருத்தங்கள்
வாழ்த்துச் செய்யுள் - 1 ஆசிரிய விருத்தம்
ஆக 12 பாடல்கள் கொண்டதாய் இந்நூல் அமைந்துள்ளது.
ஆண்டு - 1914
பதிகமாய் அமைந்த பத்துப் பாடல்களிலும் ஈற்றுச் சீர்கள்,
“அரவமணி பரமனிடம் அமருமணி எனையாளும் அழகமுர்தவல்லி
உமையே”
என்று அமைந்துள்ளன.
“ஆர்குன் றிலங்குதிரு நந்தவன மும்சூழும் அழகு திரு நல்லூர்” என்றும்,
“ஆழ்ந்தகுள மும்படியும் சூழ்ந்தவய லும்திகழும் அமரர் புகழ் நல்லூர்”
என்றும்,
“அரிபஜனை சிவபஜனை விரிவாய் விளங்கிடும் அவனி துதி நல்லூர்”
என்றும்,
“அண்ணா மலைக்குள் வளர் உண்ணாமுலைக் குமரி அழகுதிரு நல்லூர்”
என்றும்,
“ஆயிமக மாயிசிவ மாயா சொரூபியே அழகு பொலி நல்லூர்”என்றும்
பாடப்பட்ட பகுதிகள்அருப்புக்கோட்டை என்னும் திருநல்லூரின் செல்வவளமும், தெய்வநலமும் பற்றி எடுத்துரைப்பனவாய் அமைகின்றன.
(தொடரும்)....................சக
10. அருள்மிகு முத்துமாரியம்மன் பதிகம்
இயற்றியவர் - ச.சு.சங்கரலிங்க நாடார்
காப்புச் செய்யுள் - 1 வெண்பா - விநாயகர்
தல விநாயகர் துதி - 1 விருத்தம்
நூல் - 10 பதினான்கு சீர் ஆசிரிய விருத்தம்
வாழ்த்து -1 விருத்தம்
ஆக 13 பாடல்கள் நூலில் உள்ளன.
ஆண்டு - 1915
“சீர்கொண்ட திருநல்லூ ரூர்கொண்ட வன்னையே திருமுத் துமாரியு
மையே”
என்னும் சீர்கள் எல்லாப் பாடல்களிலும் ஈற்றுச் சீர்களாக அமைகின்றன.
முத்துமாரியம்மனின் பல்வேறு பெயர்கள்' அம்மனின் வீரச்செயல்கள், அரும்பெருங் குணங்கள் சிறப்புற எடுத்து இயம்பப் படுகின்றன.
“தீராத வல்வினைகள் தீர்க்கும் உபகாரிநீ செகமெலாம் நின்ற வளும்நீ
சீர்பெற்ற பாண்டிய குமாரிநீ சான்றோர்தம் சிந்தைக் கிசைந்த வளும்நீ
சூரசங் காரிநீ வீரசிங் காரிநீ சுருதி முடிவான வளும்நீ
துர்க்கைப் பிசாசுபேய் பில்லிமா ரகவைப்பு சூனியம் தீர்ப்ப வளும்நீ
கோராத துட்டரிட மமதையை அடக்கியே கும்பிடச் செய்ப வளும்நீ
கோடித் துதிக்குமென் துயரத்தை மாற்றியான் கோருமோர் வரம
தருள்வாய்
தேரார்ந்த வீதியில் பேரார்ந்த மரகதச் செம்ப வளமே துலங்கும்
சீர்கொண்ட திருநல்லூர் ஊர்கொண்ட அன்னையே திருமுத் துமாரியு
மையே.”
11. அருப்புக்கோட்டை என்னும் திருநல்லூர் அனவரத செல்வ விநாயகர் விளையாடல்
இயற்றியவர் - முத்துச்சாமி கவிராஜ சரபம்
தற்சிறப்புப் பாயிரம் - 1 அறுசீர் ஆசிரிய விருத்தம்
காப்புச் செய்யுள் - 12 பாடல்கள் உள்ளன. வெண்பா, விருத்தம், கட்டளைக்
கலித்துறையால் ஆகியுள்ளன.
நூல் - 70 பாடல்கள்
ஆக 83 பாடல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. ஆண்டு - 1923
இந்நூல் விநாயகர் புராணத்தைத் தழுவி எழுதப்பட்டதாக அமைந்துள்ளது. இசைப் பாடல்கள் மிகுதியாக இடம் பெற்றுள்ளன. பிரதிஷ்டைக் கீர்த்தனம், கற்பு லட்சணம், கணேசர் வந்த சேதி தெரிந்து வள்ளி தன் சகியிடம் சொல்கிறாள், சகி சொல் பிரதி, விநாயகருக்கும் வள்ளிக்கும் வினா விடை, கைலாசம்- உமை- மகேசன் சல்லாபம், சிங்காரத்தோப்பு- திருநல்லூர்- அமிர்தலிங்கேஸ்வரருக்கும் அமிர்தவல்லிக்கும் சல்லாபம்- வசந்தருது, கஜமகாசுரனால் வந்த துன்பத்தைச் சொல்லித் தேவர்கள் முறையிடல், அதிதி- வரம் பெறல், காசிபமுனிவர் முன் காசிராஜன், அமிர்தலிங்கர் அமிர்தவல்லி வசந்தருது, வேதவதிக் கல்யாணப் பத்தினிக்கு உத்தமநாயகன் சொல்லும் சத்தியம், இந்திரன்- உருக்குமாங்கன் வடிவு கொண்டு முகுந்தனிடம் வருதல், வள்ளி நாயகி மணங்கொண்ட பின்பு மனம் வேறுபட்ட தெய்வயானைக்குப் பாங்கி பாங்கு பகர்தல் ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது.
விநாயகர் புராணத்தில் இடம் பெற்றுள்ள புராணச் செய்திகள் மிகுதியாக உள்ளன. அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் அமுதவல்லியம்மன் கோயிலில் எழுந்தருளியுள்ள அனவரத செல்வ விநாயகர் செயல் குறைவாக இடம் பெற்றுள்ளது. அருப்புக்கோட்டையின் சிறப்புக்களை எடுத்துக் கூறும் அமுதலிங்கேஸ்வரர் அமுதவல்லியம்மன் வசந்தருது என்னும் பகுதி அருப்புக்கோட்டை நகரம் ஓர் அறிமுகம் என்னும் பகுதியில் அடிக்குறிப்பாக கொடுக்கப்பட்டுள்ளது.
முத்துமாலைப் பிள்ளையார், தாதன்குளத்துப் பிள்ளையார், பாலச்சந்திர கணேசர், சந்தி விநாயகர், பாண்டிப் பிள்ளையார் இவர்களை ஆழாக்கு அரிசிப் பிள்ளையார் அழைத்துக் கொண்டு அனவரதச் செல்வப்பிள்ளையார் கோயிலுக்கு வருவதாகக் கூறும் பகுதி அருப்புக்கோட்டையின் பல்வேறு இடங்களில் அமைந்த பிள்ளையார்களின் தலைவராக அனவரத செல்வ விநாயகர் விளங்குவதை எடுத்துரைக்கிறது.
கற்பு லட்சணம் என்னும் பகுதியில் வாசுகி, அனுசுயை, சதிவிரதை, நளாயினி, காரைக்காலம்மை, தமயந்தி, ஜானகி, நல்லதங்கை, சுயம்புவல்லி, கன்னிகா பரமேஸ்வரி, கண்ணகி, சாவித்திரி, இல்லற மாதர் நற்குடிப்பெண் ஆகிய பதினான்கு பேர் பற்றிய சிறப்பியல்புகளைக் காண முடிகிறது.
“தூக்கிய கையுலக்கை - விட்டுவிட்டுச் சொல்வது கேட்க வந்தாள்
வீக்கிய தோண்டிதனைக் - கயிற்றுடன் விட்டு வந்தாள் ஒருத்தி”
என்றும்,
தாவியெம லோகம் - சென்றுமுன் தன் கணவன் உயிரை
மேவியுடன் கொண்டு - வந்த கதை மேதினி ஓதிடுமே”
என்றும்
வாசுகி, சாவித்திரி பற்றிப் பாடப் பட்டுள்ள சிந்துப் பாடல்கள் இனிமையாய் எளிமையாய் அமைந்து விளங்குகின்றன.
12. அருப்புக்கோட்டை என்னும் திருநல்லூர் வாழவந்தம்மை பிள்ளைத்தமிழ்
இயற்றியவர் - மு.நாகூர் முத்துப் புலவர்
காப்புச் செய்யுள் - 1 ஆசிரிய விருத்தம் - தாதன்குள விநாயகர் வணக்கம்
நூல் - 101 பன்னிருசீர் ஆசிரிய விருத்தங்கள்
ஆக 102 பாடல்ககளால் இந்நூல் அமைந்துள்ளது.
ஆண்டு - 1924 .
பெண்பாற் பிள்ளைத் தமிழ் என்பது; குழந்தை பிறந்த மூன்றாம் மாதம் முதல் இருபத்தோராம் மாதம் வரை ஒற்றித்த மாதங்களிலும், ஐந்தாம் ஏழாம் ஆண்டுகளிலும் காப்புப் பருவம் முதல் ஊசல் பருவம் வரை முறையே பாட்டுடைத் தலைவியைக் கேட்பித்தலாகும்.
இந்நூலில் காப்புப் பருவம், செங்கீரைப் பருவம், தாலப் பருவம், சப்பாணிப் பருவம், முத்தப் பருவம், வருகைப் பருவம், அம்புலிப் பருவம், அம்மானைப் பருவம், நீராடற் பருவம், ஊசற் பருவம் ஆகிய பத்துப் பகுதிகள் பற்றிப் பாடப்பட்டுள்ளன.
காப்புப் பருவத்தில் திருமால், சிவபெருமான், சுந்தர விநாயகர், மாப்பிள்ளை விநாயகர், பாலசுப்பிரமணியர், தேவேந்திரன், திருமகள், கலைமகள், காளி, சத்தமாதர்கள், முப்பத்து முக்கோடி தேவர் ஆகிய பதினொருவர் பாடப்பட்டுள்ளனர்.
இந்நூல் பெரும்பாலும் தோத்திரவடிவச் செய்யுட்களால் யாக்கப்பெற்று இடையிடையே பற்பல சந்த வேற்றுமை நயங்களையும் தழுவி உவமை முதலிய பல அலங்காரங்களையும் தன்னுட் கொண்டு படிப்பவர்க்கு இன்பம் பயக்கும் திறத்ததாய் அமைந்திருக்கிறது. வடசொற்கள் பல விராயிருப்பினும் இவை ஆன்றோர்களால் தமிழ்ச் செய்யுட்களில் எடுத்தாளப்பட்டவையாக உள்ளன.
‘இஃதை அரங்கேற்றி வரும் காலத்தோர் நாள், காப்புப் பருவத்தில் நல்லை நகர்க்கரசியென வந்திருப்பதை அங்குள்ளார்களில் ஒருவர், “கிராம தேவதையாகிய வாழவந்தம்மை அரசியாவது எங்ஙனம்?” எனக் கடா விடுத்தனராக; நூலாசிரியர் “சர்வ லோகேச நாயகியான அம்பிகையை நல்லை நகர்க்கரசி என்பதாற்படும் இழுக்கு என்னை?” என விடை இறுத்தாராகவும்; ஆசங்கித்த புலவர் கனவில் அன்றிரவு வாழவந்தம்மை ஓர் அரசிளங் கன்னியாகிச் சேவை தந்து புன்முறுவல் கோட்டித் திருவுருக்கரந்தனராம்! இவ்வுண்மை அரங்கேற்றவைக் களத்தகத்தே மேற்கூறிய அன்பரால் வெளிப்படுத்தப் பட்டதென்ப எனில் இந்நூலின் பெருமையை வேறு வகையாக மேன்மைப்படுத்திக் கூறுதல் மிகை’ என்று இந்நூற்கு அணிந்துரை எழுதிய சங்கமுத்து என்பவர் இந்நூற்சிறப்பை அழகுற எடுத்துரைத்து உள்ளார். நீராடி அருள வேண்டிப் புலவர் பாடிய பாடலான,
“வாசமிகு மான்மத மணிந்தம்பு யத்தினில் வழங்குமா வளமேந்தலால்
வாரணங் கொடுதிரைக ளள்ளிமரு வலர்சூழ வந்துமி னிறைந்தேறலாற்
தேசுலவு கொடிமகர மும்படைத் திடுதலாற் சேர்ந்தவரை யாற்றுநீரால்
தெள்ளிய தமிழ்க்கட லுண்மைபெற நிற்றலாற் தெய்வநன்னிலையு
முறலால்
மூசுவரி வண்டாட வேம்பார மைந்தலால் முந்துபரி வாரமுறலால்
முன்னுறத் தந்தாவ ளத்தினிற் சென்றெவரு முறையொடு
வணங்கிவரலால்
வீசுபுகழ் செழியனுன் தாதைநிகர் வைகைநதி வெள்ளநீர் ஆடியருளே
வேழவயல் சூழ்நல்லை வாழவந் தம்மைபுது வெள்ளநீர் ஆடியருளே.”
எனும் பாடல் வாழவந்தம்மையின் புகழ் பாடும் பாடலாக அமைந்து சிறக்கிறது.
13. அருப்புக்கோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் சங்கீத மாலை
இயற்றியவர் - ச.சு.சங்கரலிங்க நாடார்
காப்புச் செய்யுள் - 2
1.வெண்பா - விநாயகர்
2.விருத்தம் - முத்துமாரியம்மன்
நூல் - 52 பாடல்கள்
ஆக மொத்தம் 55 பாடல்கள் அடங்கியது இந்நூல்
ஆண்டு - 1925
பதிகம், தியானபஜனம், ஊசற் பஞ்சகம், ஊசல் பாட்டு, நிந்தாஸ்துதி, ஸ்தலதெய்வீகத்தியானம், என்னும் சிறு பிரிவுகளை உடையதாய் இந்நூல் அமைந்துள்ளது. இந்நூல் விருத்தப் பாக்கள், கீர்த்தனைகள், சந்த விருத்தங்கள், ஆகியவற்றால் ஆக்கப்பட்டுள்ளது. சந்தவிருத்தத்தால் ஆன ஊசல் பாட்டு ஒன்று முத்துமாரியம்மனின் துதிப் பாடலாக அமைவதைக் கீழே காண்போம்.
“பொன்னே மணியே புகழ்மே வியமா பூவே பூங்கவியே
புலவாதாரமே இருமா நிதியே புனிதச் சுட ரொளியே
மன்னே மதியே பாலே பழமே மருவே மரகதமே
மானே தேனே மருளே பொருளே மறையா கமவடிவே
சொன்னேன் எனதோர் மனமார் தமிழே சூடும் குண சீலி
துதிபெறு பாதம் அடிமை விநோதம் சுந்தரமூர்த்தி மகிழ்
அன்னே திருநல்லூர் கருமாரி ஆடுக திருவூசல்
ஆன்றோர் எனும் சான்றோர்க்கு அனுகூலி ஆடுக திருவூசல்.”
14. அருப்புக்கோட்டை என்னும் திருநல்லூர் சான்றோர் குலதிலகமும் சற்குணதயாழருமான ஸ்ரீமான் சி.த.நாகலிங்க நாடார் அவர்கள் சிவபத விளக்கம்
இயற்றியவர் - அய்யம்பெருமாள் நாடார்
நூல் - 100 பாடல்கள். பல்வகைப் பாடல்கள் உள்ளன.
ஆண்டு - 1925
சி.த. நாகலிங்க நாடார் அவர்கள் பெருமை கூறும் நூலாய் இருப்பதோடு அருப்புக்கோட்டையின் புகழ் பாடும் நூலாகவும் அமைந்துள்ளது. அருப்புக் கோட்டையின் புகழை,
“மருப்படாத திருநல் லூர்என் றிடும்
மாவருப் புக்கோட்டை தன்னில் எங்கும்
தெருக்கள் தோறும் சிவாலயமாம் எங்கும்
தேவ பஜனை களே முழங்கும்
இத்தலம் தன்னிலே உத்தம ஷத்திரியர்
ஏற்றதோர் ஆலயம் உண்டு செய்து
பக்தியுடன் ஆறு காலப் பூசையதும்
பல்லாண்டு தோறும் நடக்கச் செய்தார்.
எத்திசை பார்த்திடில் பிச்சிமுல்லை வளம்
மிச்சமதாய்ப் பிர காசிக் குமே
முத்திபெரும் நல்லை நாடார் ஹைஸ்கூல்என்ற
வித்தியா சாலையும் தோணுமடி
தித்திக்கு மேபுகழ் முத்துமாரி யம்மன்
திசைக ளெங்கும் முழங்குவது
பத்திக்கரு அமுதாம் பிகையோடு இப்
பாரில் அமுதலிங் கேஷனருள்
தொண்டர் திருக்கூட்டம் எங்கும் நிரைகாட்டும்
தோகையே இன்னல்லை மாநகரில்”
என்னும் பகுதி மிக விரிவாக எடுத்தியம்புகிறது. அருப்புக்கோட்டையில் அமைந்த அமுதலிங்கேஸ்வரர் கோயில், முத்துமாரியம்மன் கோயில், நாடார் உயர்நிலைப் பள்ளி, பற்றி நன்கு அறிய முடிகிறது. பிச்சி, முல்லை வளம் சூழ்ந்திருக்கும் அருப்புக்கோட்டையின் வளம் அறியப்படுகிறது.
(தொடரும்).................சக
15. அருப்புக்கோட்டை என்னும் திருநல்லூர் வாழவந்தம்மன் பேரில் சிந்து
இயற்றியவர் - பெயர் தெரியவில்லை.
நூல் - 1 பாடல்
ஆண்டு - தெரியவில்லை.
‘சென்னிகுள நகர் வாசன்’ என்ற மெட்டில் அமைந்த ஒரே பாடலாக உள்ளது. திருநல்லூர் வளமும், வாழவந்தம்மன் சிறப்பும் ஒருங்கே பேசப்படுகின்றன.
“வாசமலர்ப் பொழில் சூழு நல்லூர்
வாழ வந்தம்மனை நாளும் திரு
மணமட் டலரடி யைத் தொழுது
இனிதுற் றிட வருவோம்” என்று இவ்வாறு பாடல் தொடங்கிச் செல்கிறது.
16. பஜனைப் பாடல்
இயற்றியவர் - ச.சு.சர்க்கரைப் பாண்டியர்
பாடல் - 1
ஆண்டு -1965
வரதராஜப்பெருமாள் புகழ் கூறித் துதிக்கும் பாடலாக அமைந்துள்ளது.
17. அருப்புக்கோட்டை எனும் நல்லூரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு அமுதலிங்கேஸ்வரர் அகரவரிசைப் பன்னிருபா.
இயற்றியவர் - இராஜாமணிப்பட்டர்
காப்புச் செய்யுள் - 1 வெண்பா - செல்வவிநாயகர்
நூல் - 12 எழுசீர் ஆசிரியவிருத்தங்கள்,
வாழ்த்துக்குறள் வெண்பா
ஆக 14 பாடல்கள் உள்ளன.
ஆண்டு - 1979
ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு உயிரெழுத்தால் அகரம் முதல் ஔகாரம் ஈறாக ஆரம்பமாகி உள்ளது. பாடலின் நான்கு அடிகளும் பாட்டின் முதலடியில் வந்துள்ள உயிரெழுத்தைக் கொண்டே ஆரம்பமாகியுள்ளன. அமுதலிங்கேஸ்வரரின் பெருமையும் சிறப்பும் ஒருங்கே எடுத்துக் கூறும் சிறு நூலாக இது விளங்குகிறது.
“அமுதலிங்கேஸ் வரரைத் துதிக்கு மெவர்க்கும் அணுகா துதீவினை
யென்றும்
அணுவாகி மலையாகி அண்ட பிண்டமாய் அனைத்துயி ருமான பரமன்
அருவாகி உருவாகி அத்தனை யுமாகி அனைத்துக் கும்வே றாகி
அகரமுத லான அமுதலிங் கேஸ்வரா அடியே னைக்காத் தருள்வாய்.”
18. அனவரத செல்வ விநாயகர் அகவல்
இயற்றியவர் - அ.காசி
ஆண்டு - 1979
இது 24 அடிகளைக் கொண்ட ஆசிரியப் பாவாக அமைந்துள்ளது.
ஔவையார் இயற்றிய விநாயகர் அகவலின் இறுதிப் பகுதி, மிகக் குறைந்த மாற்றத்துடன் அந்நூலில் உள்ளவாறே இங்கு எழுதப்பட்டு இருக்கிறது.
“ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்” என்று தொடங்கி;
“கருத்தினில் கபால வாயில் காட்டி” என்று முடியுமளவு உள்ள பதினேழு அடிகள் ஏறக்குறைய ஔவையாரின் விநாயகர் அகவல் அடிகளாகவே உள்ளன.
19. அனவரத செல்வ விநாயகர் மஞ்சரி
இயற்றியவர் - அ.காசி
காப்புப் பாடல், வாழ்த்துப் பாடல் இல்லை.7 கலி விருத்தங்களால் ஆனது
ஆண்டு - 1979
விநாயகரின் பொதுவான தன்மைகளைக் கூறும் நூலாக உள்ளது.
20. வாலசுப்பிரமணியர் மஞ்சரி
இயற்றியவர் - அ.காசி
நூல் - 4 எழுசீர் ஆசிரியவிருத்தங்கள்
காப்புச் செய்யுள், வாழ்த்துப்பா இடம் பெறவில்லை.
ஆண்டு - 1979
தென்பொதிகை மாமுனிக்கு உபதேசம் செய்தது, கார்த்திகை மகளிரால் வளர்க்கப் பெற்றது ஆகிய செயல்கள் விளக்கப்பட்டுள்ளன.
21. அருப்புக்கோட்டை அருள்மிகு வாலசுப்பிரமணியர் பதிகம்
இயற்றியவர் - அ.காசி
காப்புச் செய்யுள் - 1 கலித்துறை - சித்திவிநாயகர்
நூல் - 10 எழுசீர் ஆசிரியவிருத்தங்கள்
வாழ்த்து - 1 அறுசீர் விருத்தம்
ஆண்டு - 1979
ஆக 12 பாடல்கள் உள்ளன.
எல்லாப் பாடல்களும் “வந்தருள்வாய் வாலசுப்பிரமணியா நீ” என்னும் ஈற்றுச் சீர்களைக் கொண்டு முடிவடைகின்றன. வாலசுப்பிரமணியர் கோயில் கொண்டுள்ள இடத்தை,
“..................................................................திருநல்லூர் நாடார்தம் பணிசிறக்க
கலகலத்த மூன்றுவீதி கூடுகின்ற அருப்புக் கோட்டையெனும் நல்லூரின்
மையமதில்
வலதுகரம் வேலேந்திக் காட்சிதரும் வாலனே...” என்று சிறப்பித்துப் பாடியுள்ளார்.
22. அருப்புக்கோட்டை அருள்மிகு அமுதவல்லியம்மன் பதிகம்
இயற்றியவர் - அ.காசி
காப்புச் செய்யுள் - 3 எழுசீர் ஆசிரியவிருத்தங்கள்
சங்கர விநாயகர், சிவபெருமான், அமுதவல்லியம்மன் ஆகிய மூவர் மீது பாடப்பட்டுள்ளன.
நூல் - 10 எழுசீர் ஆசிரியவிருத்தங்கள்
வாழ்த்து விருத்தம் - 1
ஆக 14 பாடல்கள் உள்ளன.
ஆண்டு - 1979
நல்லூரில் அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் சிறப்பிடம் கொண்டு எழுந்தருளியிருப்பது சிறப்பிக்கப்பட்டுள்ளது.
“அறைகின்ற நான்மறை சூல்(SIC) நல் லூரின் அமுதலிங் கேஸ்வரர்
பதிதனில்
உறைகின்ற நின்திருக் கோயில் நாடி நும்அருள் பெற்றுச் சிறக்க
நிறைந்தபெரு கருணை வரத ராசர் வலவெளிப் புறத்தே நிற்கக்
குறைதீர்க்கும் நல்லூர் உமையே சுகந்தனை அருள்வாய் அமுத வல்லியே.”
தொலையாத நிதியமும் கீர்த்தியும் தந்து உலக உயிர்களைப் புரக்கும் அமுத வல்லியம்மனின் சிறப்பு பலவாறாகப் பேசப்பட்டுள்ளது.
“அருள்வாய் அமுதவல்லியே” என்று முதல் பாடலில் வந்த ஈற்றுச் சீர்கள் எல்லாப் பாடலிலும் ஈற்றுச் சீர்களாக அமைந்து இருக்கின்றன.
23. அருள்மிகு அமுதவல்லியம்மன் போற்றி வழிபாடு
இயற்றியவர் - அ. காசி
நூல் - 108 போற்றிகள்
ஆண்டு - 1979
“அருந்தவச் செல்வியே போற்றி
அருமறையின் வரம்பே போற்றி”
என்று ஆரம்பித்து,
“வாட்டும் வல்வினை தீர்ப்போய் போற்றி
காட்சிக் கினியாய் போற்றி போற்றி”
என்று முடிவடைகிறது.
அம்மையின் அருட் பெருங் குணங்களை உணர்த்தியும், அம்மையின் பல்வேறு குணங்களை எடுத்துக் கூறியும் இப்போற்றி வழிபாடு அமைந்துள்ளது.
'ஊழ்வினை தீர்ப்போய்',
'.ஔவியம் அல்லாய்',
'வறுமை நோய் தீர்ப்போய்' என்பன அம்மையின் அருட்செயல்களை உணர்த்துகின்றன.
'ஏகன் துணைவி', 'கனகாம்பிகை', 'சொக்கர் தேவி மீனாட்சி அம்மை', 'அருப்புக்கோட்டை அமுது' போன்றன அம்மையின் சிறப்புப் பெயர்களை உணர்த்துவனவாக உள்ளன.
24. அமுதவல்லி அந்தாதி
இயற்றியவர் - இராஜாமணிப்பட்டர்
காப்பு - 1.வெண்பா - சித்திவிநாயகர் மீது
நூல் - 50 எழுசீர் ஆசிரியவிருத்தங்கள்
வாழ்த்துப்பா - 1 எழுசீர் ஆசிரியவிருத்தம்
ஆக 52 பாடல்கள் நூலில் உள்ளன.
ஆண்டு - 1979
அமுதவல்லியம்மன் மீது அந்தாதித் தொடையுடன் அமையப் பெற்றதால் இந்நூல் அமுதவல்லி அந்தாதி என்று பெயர் பெற்றுள்ளது. அமுதவல்லி அம்மையின் அரும்பெருங் குணங்கள் வரிசையாகப் பாடப்பட்டுள்ளன. அம்மனின் புகழ் பாடும் நூலாக அமைந்துள்ளது. அம்மனின் பல்வேறு பெயர்களைக் கூறி விளித்துப் பாடும் பாடல்கள் மிகுதியாக உள்ளன.
“நாயகீதி ரிபுவன தா(SIC)யகீ நவசக்தி நாரா யணன் சோதரீ
நாரீமணி அஷ்ட லக்ஷுமீ கலைவாணீ நாதாந்த மோன விளைவே
நாதனாம் அமுதலிங் கேஸ்வரன் நாயகீ அமுத வல்லித் தாயியே
நால்வேத மறுசமயமும் புகழ் ஞானஒளிச் சோதியே ஒளி விளக்கே.”
25. அருள்மிகு பழனியாண்டவர் பதிகம்
இயற்றியவர் - அ.காசி
காப்புச் செய்யுள் - 2 கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள்
1. விநாயகர் - எழுசீர் ஆசிரியவிருத்தம்
2. முருகன் - எண்சீர் ஆசிரிய விருத்தம்
நூல் - 10 எண்சீர் ஆசிரிய விருத்தங்கள்
வாழ்த்து - 1 அறுசீர் ஆசிரிய விருத்தம்
ஆக 14 பாடல்கள் கொண்ட நூலாகஉள்ளது.
ஆண்டு - 1979
“குறைதீர்க்க வந்தருள்வாய் நல்லூர்க் குமரா” என்னும் ஈற்றுச் சீர்களை எல்லாப் பாடல்களும் பெற்றிருக்கின்றன. முருகனின் தோற்றச் சிறப்பும் அவன் தன் அருட்குணங்களும் சிறப்பாகப் பாடப்பட்டுள்ளன. ‘நல்லூர்க் குமரா’ என்று நூலின் பல இடங்களில் விளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
26. அருப்புக்கோட்டை அருள்மிகு அனவரத செல்வ விநாயகர் பதிகம்
இயற்றியவர் - அ.காசி
காப்புச் செய்யுள் - 1 வெண்பா - அனவரத செல்வவிநாயகர்
நூல் - 10 கலி விருத்தங்கள்
வாழ்த்து - 1 விருத்தம்
ஆக 12 பாடல்கள் நூலில் உள்ளன.
ஆண்டு - 1979
“வரமெமக் கருள்வயே” என்னும் சீர்கள் எல்லாப் பாடல்களிலும் ஈற்றுச் சீர்களாக உள்ளன.
அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் இடம் கொண்ட அனவரத செல்வ விநாயகர் மீது பாடப்பட்ட பதிகம் ஆகும் இது. விநாயகரின் பெருமை பாடும் நூலாக உள்ளது. விநாயகரின் தோற்றமும் இனிது விளக்கப்பட்டுள்ளது.
“யானை முகத்தோய் நாலிரு புயமும் கொண்டோய்
பானை வயிறு பெற்றோய் வேலவர் முன்னோய்”
என்றும்,
“சுற்றிய பூந்துகில் ஆடையும் அரவக் கிண்கிணியும்
நெற்றியில் இலங்குசிந் தூரமும் மும்மதச் சுவடும்
பற்றிய அங்குச பாசமும் கொண்ட கணேச”
என்றும் விநாயகர் தோற்றம் வருணிக்கப்படுகிறது.
அனவரத செல்வ விநாயகரை அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் பிரதிஷ்டை செய்யக் கொண்டு வரும் பொழுது வள்ளிக்குளம் அருகே வண்டியின் அச்சு முறிந்து இடருற்றதைக் குறித்துள்ளார். இந்நிகழ்ச்சியினை,
“தொடர்ந்து நல்லூர் வந்திட விரைந்த போழ்து
நடந்து கால்கள் நொந்த களைப்பு உற்றுநீ
கிடந்தாய் வள்ளிக்குளமாம். .........”
என்னும் பாடலடிகள் உணர்த்துகின்றன.
(தொடரும்)....................சக
27.நல்லூர் பழனியாண்டவர் மஞ்சரி
இயற்றியவர் - அ.காசி
ஆண்டு - 1979
காப்புச் செய்யுள், வாழ்த்துப்பா எதுவும் இல்லை.
நூல் - 5 எண்சீர் ஆசிரிய விருத்தங்களால் ஆகியுள்ளது.
இதில் பழனி, திருத்தணிகை, திருப்பரங்குன்றம் ஆகிய தலங்களின் பெருமை பேசப்படுகிறது.
“தெள்ளுதமிழ்ச் சொல்லாலே ஒளவைக் கறிவைத் தந்தனனே“ என்று ஒளவைக்கு அறிவு புகட்டிய செய்தி பாடப்பட்டுள்ளது.
28. நல்லூர் பழனியாண்டவர் போற்றி அகவல்
இயற்றியவர் - அ.காசி
இப்பாடல் 17 அடிகளைக் கொண்டதாக உள்ளது.
ஆண்டு - 1979
“நல்லூர் வந்த ஆண்டவா போற்றி
இல்லம் சிறக்க இருப்பாய் போற்றி
....................................................................
அறப்பணி சிறக்க அருள்வாய் போற்றி” என்று பாடல் தொடங்கி முடிவுறுகின்றது. பழனியாண்டவரின் அருங்குணங்களே பாடப்பட்டு உள்ளன.
29. அருள்மிகு ஆஞ்சநேயர் பதிகம்
இயற்றியவர் - அ.காசி
காப்புச் செய்யுள் - 2 எழுசீர் ஆசிரியவிருத்தங்கள்
1 - விநாயகர்
2 - ஆஞ்சநேயர்
நூல் - 10 எண்சீர் ஆசிரிய விருத்தங்கள்
வாழ்த்து - 1 அறுசீர் ஆசிரிய விருத்தம்
ஆக 13 பாடல்களைக் கொண்ட நூலாகும் இது.
ஆண்டு - 1980
ஆஞ்சநேயர் புகழ் பாடும் நூலாக அமைந்துள்ளது.
“பராரை ஏற்றுநற் பணிபல புரிந்தனை
பயனுற மருந்து மலைதனைக் கொணர்ந்தனை
இராம நாமமும் உச்சரிப் போர்க்கு
இசைவுறு வாழ்வுங் கொடுத்து உதவினை
இராவண வதத்தைப் பிராட்டி அறிய
இனிதே இயம்பிய இன்முக முதல்வ
இராம தூதனாய் நற்பணி புரிந்தோய்
ஈன்ற தாயாய் வந்தெமைக் காப்பாய்” என்று இது போல் ஆஞ்சநேயர் புகழ் கூறும் நூலாக அமைந்துள்ளது.
30. அருள்மிகு வரதராஜப் பெருமாள் பதிகம்
இயற்றியவர் - அ.காசி
காப்புச் செய்யுள் - 2
1. கலிவிருத்தம் - விநாயகர்
2. எழுசீர் ஆசிரியவிருத்தம் - வரதராஜர்
நூல் - 10 எண்சீர் ஆசிரிய விருத்தங்கள்
வாழ்த்து - 1 கலிவிருத்தம்
ஆக 14 பாடல்கள் நூலில் உள்ளன
ஆண்டு - 1980
“வளமுற வாழவே வரந்தா வரதா”
என்று எல்லாப் பாடல்களின் ஈற்றுச் சீர்களும் அமைந்துள்ளன.
திருமாலின் அவதாரச் சிறப்புகள், உயிர்களுக்கு அருள் புரியும் தன்மைகள் எடுத்தியம்பப்பட்டுள்ளன.
“கள்ள நாடகம் ஆடிக் காட்டினை
கண்ண னாகநீ கீதை ஓதினை
குள்ள னாகநீ உருவங் கொண்டனை
காலால் மிதித்துமே மகிமை காட்டினை
பரந்தா மனாகநீ பாரில் உதித்தனை
பரமன் தத்துவம் பாரோர்க்கு உணர்த்தினை
விரைந்து கல்கியாய் வந்தெ மக்குமே
வளமுற வாழவே வரந்தா வரதா” என்று எல்லாப் பாடல்களும திருமாலின் பெருமை பாடுவனவாக அமைந்துள்ளன.
31. வரதராஜப் பெருமாள் மாலை
இயற்றியவர் - அ.காசி
நூல் - 20 எண்சீர் ஆசிரிய விருத்தங்கள்
காப்புச் செய்யுள், வாழ்த்துப்பா இதில் இடம் பெறவில்லை.
ஆண்டு - 1980
திருமாலின் புகழ் பேசுவதோடு வாழ்க்கை அறங்களை எடுத்துரைக்கும் நூலாக அமைகிறது.
“மிதமிஞ்சி வார்த்தைகளைப் பேச வேண்டாம்
மெய்யறத்தை ஒருபோதும் தகர்க்க வேண்டாம்
மதமான ஆங்காரம் கொள்ள வேண்டாம்
மர்மத்தை ஒருநாளும் விரிக்க வேண்டாம்
பதம்போற்றி வேங்கடவன் கோயில் கொள்ளும்
பதிதோறும் வலம்வந்தால் குறைகள் தீரும்.” என்று மக்கட்குத் தேவையான வாழ்க்கை நெறிகள் விரிவாகப் பாடப்பட்டுள்ளன.
32. அருள்மிகு ஆஞ்சநேயர் கவசம்
இயற்றியவர் - அ.காசி
காப்பு - 1 வெண்பா - விநாயகர்
ஆண்டு - 1982
கந்த சஷ்டி கவசம் போன்று அமைந்துள்ளது.
“நன்னெறி நெற்றிக் குங்குமம் காக்க
நன்பொன் மணியணி மார்புங் காக்க
மின்னும் இரத்தினத் தோடணி காக்க
மேதகு கிரீட முடியும் காக்க
காக்க காக்க கதையுங் காக்க
கருங்கடல் வண்ணத் தொண்டன் காக்க
நோக்க நோக்க நெஞ்சம் நோக்க
நெடுமால் தொண்டன் இணையடி காக்க “
33. மாரியைப் பணிகுவம்
இயற்றியவர் - அ.காசி
காப்புச் செய்யுள் - 2
1. விநாயகர் காப்பு
2. மாரியம்மன்
நூல் - 28 பாடல்கள் - எண்சீர் ஆசிரிய விருத்தம்
வாழ்த்து - 1
ஆக 31 பாடல்கள் நூலில் உள்ளன.
ஆண்டு - 1982
அருளமிர்தம், மாரியைப் பணிகுவம், வரம்தா மாரி, நல்லூர் முத்துமாரியம்மன் தோற்றம், மாரி புகழ் பாடுவம், அம்மன் கும்மி, நல்லூர் முத்துமாரியம்மன், அருள் முத்துமாரி, அகிலங் காக்கும் அன்னை, மாரிமகிமை, என்னும் பத்துத் தலைப்புகளில் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
இந்நூலில் மாரியம்மன் அருட்திறம், அவளது புகழ், வரம் தரும் மாண்பு ஆகியன பலவாறாகப் புகழ்ந்து பாடப்பட்டுள்ளன.
“நாதத் தில்ஒளிர் நல்லூர் மாரியே நாடும் பாவினில் கூடும் வீரியே
ஆதரித் தருள்வாய் அன்னை மாரியே அழகிய நல்லூரின் முத்து மாரியே
அறிவினால் சேர்வது நாளா னந்தம் அருளினால் பெறுவது பிரமா னந்தம்
அறிந்ததும் அருள்வதும் பேரா னந்தம் அதுவன்றி எமக்கிலை வேறானந்தம்.”
எனும் பாடல் மாரியம்மன் உயிர்களுக்கு ஆனந்தம் அளிக்கும் அருமையை எடுத்துரைக்கிறது.
34. அருள்மிகு பாலசண்முகர் பதிகம்
இயற்றியவர் - அ.காசி
காப்புச்செய்யுள் - அறுசீர் ஆசிரியவிருத்தம் - கணபதி
நூல் - 10 எண்சீர் ஆசிரிய விருத்தம்.
வாழ்த்து - 1 அறுசீர் ஆசிரிய விருத்தம்
ஆக 12 பாடல்கள் கொண்ட நூல்
ஆண்டு - 1983
அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் அமுதவல்லியம்மன் சந்நிதியின் உட்பிரகாரத்தில் அமைந்த முருகன் மீது பாடப்பெற்றதாகும்.
பாலசண்முகப் பெருமானின் அருட்செயல்கள், அவனது அருங்குணங்கள், அவனது தோற்றப்பொலிவு ஆகியன விளக்கமுறப் பாடப்பட்டுள்ளன. பால சண்முகனின் தோற்றச் சிறப்பை,
“ படெமடுத்து ஊர்ந்துவரும் நாகங் கண்டோம்
புள்ளிமயில் எழிலாக நிற்கக் கண்டோம்
அடம்பிடித்த பாலநீயும் அமரக் கண்டோம்
ஆறுமுகங் கொண்டுநீயும் விளங்கக் கண்டோம்
உடம்பினிலே உயிர்சேர வாழ்வும் கண்டோம்
ஒளிமயிலில் நீயமர்ந்த எழிலும் கண்டோம்.“ என்னும் பாடலடிகள் மூலம் அறியலாம்.
35. பாலசண்முகன் பாமாலை
இயற்றியவர் - அ.காசி
நூல் - 14 எண்சீர் ஆசிரிய விருத்தங்கள்
ஆண்டு - 1983
காப்புச் செய்யுள், வாழ்த்துப்பா இதில் இடம் பெறவில்லை.
முருகன் உலக உயிர்களின் துன்பத்தை நீக்கி அருள் தரும் சிறப்பு விரித்துரைக்கப்படுகிறது. முருகன் எல்லா இடங்களிலும் கோயில் கொண்டுள்ள சிறப்பை,
“எந்தமலை யானாலும் ஏறி நிற்பாய்
இறங்கி வந்து நிலத்தினிலே கூடி நிற்பாய்
கொந்தளிக்கும் கடலினிலே விரும்பி நிற்பாய்
கொத்து மலர்ச் சோலையிலும் உவந்து நிற்பாய்
தஞ்சமென்று உனைப் பணிந்தோம் நல்லூர் ...” என்னும் பாடலடிகள் மூலம் அறியலாம்.
36. பாலசண்முகர் வருகைப்பத்து
இயற்றியவர் - அ.காசி
நூல் - 10 கலி விருத்தப் பாக்கள்
ஆண்டு - 1983
காப்புச் செய்யுள், வாழ்த்துப்பா இல்லை.
‘வருவாயே’ என்று எல்லாப் பாடலும் முடிவடைவதாலும் பத்துப் பாடல்கள் உள்ளதாலும் இந்நூல் வருகைப் பத்து என்று பெயர் பெற்றுள்ளது.
“வானக வளர்வணிகர் அணிநல்கும் நல்லூரில்
ஆகமம் அருளுகின்ற அமுதலிங்க ஈஸ்வரர்தம்
பாகம் பெற்றவளாம் அமுதவல்லி அகமகிழ
தோகை மயிலேறி துயர் தீர்க்க வருவாயே “
இப்பாடலில் ஊர்ச்சிறப்பும், கோயிற் சிறப்பும் உடன்கூறி முருகனை அழைக்கும் திறன் சிறப்பாக உள்ளது.
37. அருள்மிகு சித்திவிநாயகர் பதிகம்
இயற்றியவர் - அ.காசி
காப்புச் செய்யுள் - 1.வெண்பா
நூல் - 10 எண்சீர் ஆசிரிய விருத்தங்கள்
வாழ்த்து - 1 அறுசீர் ஆசிரிய விருத்தம்
ஆக 12 பாடல்களைக் கொண்டது இந்நூல்.
ஆண்டு - 1983
“காப்பாய் எமையே” என்னும் இரு சீர்கள் எல்லாப் பாடல்களிலும் இறுதிச் சீர்களாக அமைகின்றன.
முடிவுரை
அருப்புக்கோட்டையிலுள்ள கோயில்களில் எழுந்தருளியுள்ள அமுதலிங்கேஸ்வரர், அமுதவல்லியம்மன், முத்துமாரியம்மன், வாழவந்தம்மன், அனவரத செல்வ விநாயகர், சுப்பிரமணியசாமி, வரதராஜப் பெருமாள், அனுமான், பாலசண்முகர் ஆகியோர் பற்றி முப்பத்தேழு நூல்கள் பாடப்பட்டுள்ளன. அ.காசி என்பவர் பத்தொன்பது நூல்களும், சூ.ஆ.முத்து நாடார் நான்கு நூல்களும், இராஜாமணிப்பட்டர், உடுமலை முத்துச்சாமிக் கவிராயர், வேங்கடசுப்புப் பிள்ளை, ச.க.சங்கரலிங்க நாடார் ஆகியோர் இரண்டிரண்டு நூல்களும் அய்யம்பெருமாள் நாடார், க.ச.கதிர்வேலு நாடார், ச.சு.சர்க்கரைப் பாண்டியர், மு. நாகூர் முத்துநாடார், க.சு.வெங்கடாசலம் பிள்ளை ஆகியோர் ஒவ்வொரு நூலும் இயற்றியுள்ளனர். வாழவந்தம்மன் சிந்து என்னும் நூலை இயற்றியவர் பெயர் தெரியவில்லை. அ. காசி என்பவர் குறைந்த பாடல்கள் கொண்ட பல நூல்கள் இயற்றி உள்ளார். அமுதலிங்கேஸ்வரர் மாலை, நல்லூர்க் கலம்பகம், வாழவந்தம்மன் பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்கள் ஒவ்வொன்றும் நூறு பாடல்களைக் கொண்டுள்ளன. விநாயகர் விளையாடல் எண்பத்து மூன்று பாடல்களைக் கொண்ட நூலாக உள்ளது.
மாலை, கலம்பகம், பதிகம், பிள்ளைத்தமிழ், பன்னிருபா, அந்தாதி போன்ற சிற்றிலக்கிய வகைகளில் சில நூல்கள் எழுந்துள்ளன. சிந்து, கும்மி, கீர்த்தனை போன்ற இசைப் பாடல்களைக் கொண்ட நூல்களும் குறிப்பிடத்தக்கனவாய் அமைந்துள்ளன. அகவல், கவசம், மஞ்சரி என்னும் பெயர்களிலும் நூல்கள் பாடப்பட்டுள்ளன. அனைத்து நூல்களும் இறைவன் சிறப்புக்களை வெளிப்படுத்தி மக்கள் உள்ளத்தில் இறை உணர்வைத் தோற்றுவிக்கின்றன.
(தொடரும்).........சக
முடிவுரை
அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறைக்கு உரிமையான கோயில்கள் பற்றி இவ் ஆய்வேடு மதிப்பீடு செய்கிறது. 1887ம் ஆண்டு தச்சுப்பணி செய்யப்பட்ட அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் தொடர்ந்து இன்னும் சிற்பிகள் வேலை செய்கின்றனர். இக்கோயிலைச் சிறிதுசிறிதாக வளர்ச்சி அடையச் செய்துள்ளனர். இப்பொழுதும் இக்கோயிலுக்கு இராஜகோபுரம் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பது நாடார் சமூகம் இடையறாது இறைப்பணியில் ஈடுபட்டிருப்பதை உணர்த்துகிறது.
மிகப்பெரிய கோயிலாக அமுதலிங்கேஸ்வரர் கோயில் அமைந்து இருப்பினும்; இங்கு வழிபட வருபவர் குறைவாகவே காணப்படுகின்றனர். முத்துமாரியம்மன் கோயிலில் வழிபட வருபவர் மிகுதியாக உள்ளனர். இதற்குக் காரணம் நாடார் சமூகம் சிறுதெய்வ வழிபாட்டிற்கு முதலிடம் கொடுப்பதாகக் கருத இடமுண்டு.
அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் நடைபெறும் விழாக்கள் யாவும் பிற சிவன் கோயில்களில் நடைபெறும் விழாக்களைப் பின்பற்றுவனவாக உள்ளன.
நாடார் சமூகத்தினர் சமயப்பொறை உடையவர் என்பதனை அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள வரதராஜப் பெருமாள் சந்நிதி, அனுமன் சந்நிதி ஆகியன எடுத்துக்காட்டி நிற்கின்றன. நாடார் உறவின்முறையினர் கோயில் வருமானம் கொண்டு மேலும் மேலும் கோயிலையே வளப்படுத்துகின்றனர். மக்களின் சமய அறிவை வளர்க்க ஆவன செய்யலாம்.
கோயிலுக்குத் தீர்த்தச் சிறப்பு மிகமிக இன்றியமையாததாகும். கோயிலில் அமைந்துள்ள தெப்பம் கோயிலின் பெருமையை உணர்த்துவதாக அமையும். ஆனால் அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் இரு தெப்பங்கள் இருந்து அவை மூடப்பட்டு விட்டன என்று அறிவது வருந்தத்தக்கது.
கோயில்களில் தேர்களும் யானைகளும் முன்பு இருந்தன என்று அறிய முடிகிறது. திருவிழாக்களின் போது சாமி புறப்பாடு இல்லாத காரணத்தால் தேர்கள் அழிவுற்றன. யானைகளும் பேணப்படவில்லை. பிற சமூகத்தாரோடு இணைந்து வாழத் தெரிந்த இச்சமூகத்தார் மீண்டும் திருவிழாக்களின் போது சாமி புறப்பாட்டினை ஏற்படுத்தினால் சிறப்பாக அமையும்.
வாழவந்தம்மன் தெய்வம் பற்றி மேலும் ஆய்வு நிகழ்த்த இடமுண்டு. பல தோற்றங்களில் காணப்படும் வாழவந்தம்மன் பற்றிய சில உண்மைகள், நாடார் சமூகம் பற்றிய சில உண்மைகள் ஆய்வில் வெளிப்பட வாய்ப்புண்டு.
அமுதலிங்கேஸ்வரர் கோயிலில், கோயில் திருப்பணி செய்தவர்கள் பெயர், ஆண்டு, கோயிலுக்குரிய சொத்து விபரம் முதலியன தெளிவாக அன்று முதல் இன்று வரை குறிக்கப்பட்டு வருகின்றன. ஒரு நூற்றாண்டுக் காலக் கல்வெட்டுத் தமிழ் பற்றி ஆராய இடமுண்டு.
கட்டிடக்கலை, சிற்பக்கலை பற்றிய நுணுக்கமான ஆராய்ச்சிக்கும் இடமுண்டு.
துணைநூற் பட்டியல்
தமிழ் நூல்கள்
அய்யம்பெருமாள் நாடார் - அருப்புக்கோட்டை என்னும் திருநல்லூர் சான்றோர் குலதிலகமும் சற்குணதயாழருமான ஸ்ரீமான் சி.த.நாகலிங்க நாடார் அவர்கள் சிவபத விளக்கம், நாடார் பிரஸ், மதுரை, 1925.
அருணாசலம்,ப.- சைவசமயம்- ப.அருணாசலம், நாகர்கோவில்.- முதல் பதிப்பு- 1979
இராகவன்,அ.- தமிழ் நாட்டுத் திருவிளக்குகள் - New Century Book House pvt. Ltd. , சென்னை. - முதல் பதிப்பு - 1964
இராசமாணிக்கம்,தி.- இந்து சமயக் கடவுள்களின் திருவுருவங்கள் - கழக வெளியீடு, திருநெல்வேலி. - முதல் பதிப்பு - 1982
இராஜாமணிப்பட்டர்& அ.காசி - அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை பொது அருள்மிகு அமுதலிங்கேஸ்வரர் திருத்தல வரலாறும் திருவாலய அமைப்பும், ஏகாதசி மாதர் குழுவினர், அருப்புக்கோட்டை. (ப.ஆ.இல்லை)
காசி.அ.- அருப்புக்கோட்டை அருள்மிகு அனவரத செல்வ விநாயகர் பதிகம், இலவச வெளியீடு, முதற்பதிப்பு 1979
காசி.அ. - அருப்புக்கோட்டை அருள்மிகு அமுதவல்லியம்மன் பதிகம், இலவச வெளியீடு, முதற்பதிப்பு, 1979
காசி.அ.- அருப்புக்கோட்டை அருள்மிகு பழனியாண்டவர் பதிகம், இலவச வெளியீடு, முதற்பதிப்பு, 1979
காசி.அ.- அருப்புக்கோட்டை அருள்மிகு வாலசுப்பிரமணியர் பதிகம், இலவச வெளியீடு, முதற்பதிப்பு, 1979
காசி.அ.- அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை பொது அருள்மிகு அமுதலிங்கேஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு வரதராஜப் பெருமாள் பதிகமும் மாலையும், இலவச வெளியீடு, முதற்பதிப்பு, 1980
காசி.அ. - அருப்புக்கோட்டை என்னும் திருநல்லூர் நாடார்கள் உறவின்
முறைக்குப் பொதுப் பாத்தியமான அருள்மிகு அமுதலிங்கேஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளிய அருள்மிகு ஆஞ்சநேயர் பதிகமும் நவக்கிரகத் தோத்திரமாலையும், இலவச வெளியீடு, முதற்பதிப்பு 1981
காசி.அ. - மாரியைப் பணிகுவம், இலவச வெளியீடு, முதற்பதிப்பு 1981
காசி.அ. - அருள்மிகு ஆஞ்சநேயர் கவசம், இலவச வெளியீடு, முதற்பதிப்பு, 1982
காசி.அ. - அருள்மிகு பாலசண்முகர் பாமாலை, இலவச வெளியீடு, முதற்பதிப்பு 1983
காசி.அ. - அருள்மிகு சித்திவிநாயகர் தரிசனமும், பதிகமும், இலவச வெளியீடு, முதற்பதிப்பு 1983
காசி.அ.& முத்துச்சாமிக் கவிராயர் - அருப்புக்கோட்டையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஏனாதிநாத நாயனார் பதிகமும் குருபூசைப் பாடல்களும், இலவச வெளியீடு, முதற்பதிப்பு, 1980
கார்த்திகேயன் - ஸ்ரீவிநாயகர் புராணம், வாசு பிரசுரம், சென்னை, முதற்பதிப்பு, 1980
சங்கரலிங்க நாடார்,ச.சு.,அருப்புக்கோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன்சங்கீத மாலை, ஸ்ரீநடராஜ நாடார் (ப.ஆ.), அருப்புக்கோட்டை, 1925
சங்கரலிங்க நாடார்,ச.சு. ,ஏனாதிநாத நாயனார் சரித்திரம், அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை, அருப்புக்கோட்டை. (ப.ஆ.இல்லை )
சிவப்பிரகாசமுதலியார் - அபிதானசிந்தாமணி - Asian Educational Services- புது டில்லி. - இரண்டாம் பதிப்பு - 1968
சுப்பிரமணிய முதலியார்,சி.கே. - பெரிய புராணம் என்னும் திருத்தொண்டர் புராணம் - இரண்டாம் பகுதி - கோவைத் தமிழ்ச் சங்கம், கோயம்புத்தூர். - 2-ம் பதிப்பு - 1968
செந்துறை முத்து - திருக்கோயில் தத்துவம் - ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை. 2ம் பதிப்பு - 1981
ஜெயபாண்டியன்,எஸ்.டி.(மொ.ஆ)- தமிழக நாடார் வரலாறு - முருகன் பப்ளிகேஷன்ஸ், தூத்துக்குடி. - முதல் பதிப்பு - 1979
ஜெகஜீவகருணாலயநிதி - இந்துமத விரதங்களும் அதன் மகிமைகளும் - பராசக்தி பதிப்பகம் , மதுரை. - 6ம் பதிப்பு - 1983
சொக்கலிங்கம்,அ.,- ஆலயங்களின் உட்பொருள் விளக்கம் - முதல் புத்தகம் - கழக வெளியீடு, திருநெல்வேலி - முதல் பதிப்பு - 1952
செல்லப்பாண்டியன், அ. - ஆலயங்களின் உட்பொருள் விளக்கம் - 2 ம் புத்தகம் - கழக வெளியீடு, திருநெல்வேலி. முதல் பதிப்பு - 1953
தேமொழி,குரு.- நாடார் சமூக வரலாறு - நாடார் மகாஜன சங்கம், மதுரை. - முதல் பதிப்பு - 1969
நடராஜன், எஸ். - தமிழர் பண்டிகைகளும் பண்பாடும் - பிரதிபா பிரசுரம், சென்னை. - முதற்பதிப்பு - 1976
நாகூர் முத்துப் புலவர்,மு.- அருப்புக்கோட்டை என்னும் திருநல்லூர் வாழ வந்தம்மை பிள்ளைத்தமிழ் - மதுராம்பிகை அச்சியந்திர சாலை, மதுரை. - 1924
முத்துச்சாமி கவிராஜ சரபம் - அருப்புக்கோட்டை என்னும் திருநல்லூர் அனவரத செல்வ விநாயகர் விளையாடல் - அரு.சுந்தரலிங்க சிதம்பர நாடார் - (ப. ஆ.)- 1923
முத்து நாடார்,சூ.ஆ.- அருப்புக்கோட்டை என்ற பெயர் வழங்கிய திருநல்லூர் திருக்கோயில் எழுந்தருளும் முத்துக்குமாரசாமி என்னும் வேலவர் மாலை - மீனாம்பிகை அச்சியந்திர சாலை, மதுரை. முதற்பதிப்பு - 1910
முத்து நாடார்,சூ.ஆ. - அருப்புக்கோட்டை என்னும் திருநல்லூர் அமுதலிங்கேஸ்வரர் சந்நிதியில் கோயில் கொண்டருளிய முத்துக்குமாரசாமி என்னும் சுப்பிரமணியக்கடவுள் பதிகம் - விஜயவிகடன் அச்சியந்திர சாலை, சென்னை.-1908
முத்து நாடார்,சூ.ஆ.- அருப்புக்கோட்டை என்னும் திருநல்லூர் முத்துமாரியம்மன் பேரில் சிந்து, கும்மி, கீர்த்தனை - விஜயவிகடன் அச்சுக்கூடம், சென்னை. - 1911
முத்து நாடார்,சூ.ஆ. - திருநல்லூர் என்னும் அருப்புக்கோட்டை மாநகர் ஸ்ரீஅமுர்தவல்லியம்மன் பதிகம் - அமெரிக்கன் டைமென்ட் பிரஸ், சென்னை. முதற்பதிப்பு -1916
மோசஸ் பொன்னையா - நாடார் வரலாறு - சீயோன் பதிப்பகம், மதுரை. முதற்பதிப்பு - 1978
வெங்கடாசலம் பிள்ளை,க.சு. - திருநல்லூரில் கோயில் கொண்டருளிய ஸ்ரீமத் அமுதலிங்கேஸ்வரர் சந்நிதான உச்சவாதிபதிகளாகிய புண்ணிய சீலர்களை வியந்து பாடிய வாழ்த்துக்கவிகள் - அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை, அருப்புக்கோட்டை. - 1908
வெற்றிச் செல்வன், (தொ. ஆ.)- விரதங்கள் - ஸ்டார் பிரசுரம், சென்னை. - மூன்றாம் பதிப்பு - 1982
வேங்கடசுப்புப் பிள்ளை - அருப்புக்கோட்டையென விளங்கும் திருநல்லூர் அமுதலிங்க மாலை - இந்து தியலாஜிகல் இயந்திரசாலை, சென்னை. - முதற்பதிப்பு - 1891
வேங்கடசுப்புப் பிள்ளை - அருப்புக்கோட்டையென விளங்கும் நல்லூர்க் கலம்பகம், நல்லூர் மாலை - இந்து தியலாஜிகல் இயந்திரசாலை, சென்னை. - முதற்பதிப்பு - 1892
(தொடரும்)..............சக
ஆசிரியர் இல்லாதவை/தெரியாதவை
அருப்புக்கோட்டைநாடார்கள் உறவின்முறை யாதாஸ்தும் சட்டதிட்டங்களும் - அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை, அருப்புக்கோட்டை - 1956
சான்றோர் குலமரபு காத்தல் - நாடார் மகாஜன சங்கம்,மதுரை.-(ப.ஆ.இல்லை)
அருப்புக்கோட்டை என்னும் நல்லூர் வாழவந்தம்மன் பேரில் சிந்து
இதழ்கள்
அய்யாத்துரை,டி.வி. - "சமயத் தலைமையில் நாடார்கள்" - சமூக ஒற்றுமை மலர் - 5 - இதழ் 11 &12- டிசம்பர் - 1973
காசி,அ. - "அமுதலிங்கேஸ்வரர் பெருமை"- திருக்கோயில் - சென்னை. - நவம்பர், டிசம்பர் -1980
குன்றக்குடி பெரிய பெருமாள் - "நாடார் சமூகம்"- 17. 4.'81, 8. 5. '81, 15.5.'81
திருஞானசம்பந்தன்,பெ.- "ஆலய அமைப்புகள்"- திருக்கோயில் - அக்டோபர் 1979
முத்துராமன் மு.- "ஆலய வழிபாட்டின் சிறப்பு"- திருக்கோயில்- ஜூன் 1979
வீரப்பன், இராம.- "கலைக்கோயில்கள் பண்பாட்டுக் கருவூலங்கள்" - திருக்கோயில் - நவம்பர், டிசம்பர் 1980
வீரப்பன், இராம. - "சமுதாய வளர்ச்சியில் ஆலயங்கள் ஆற்றும் பணிகள்"- செப்டம்பர், அக்டோபர் 1981
மலர்கள்
சோமசுந்தரம்,ஜே.எம். - "திருக்கோயில்களும் சமய வளர்ச்சியும்"- தமிழ் வட்டம் - முதல் ஆண்டு மலர் - பாஸ்கர நிலையம், சென்னை. - 1967
சந்திர சேகர பட்டர்,எஸ்.- "மதுரைத் திருவிழாக்கள்"- திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், மதுரை. - 1974
ஆய்வேடுகள்
குருசாமி,க.- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் - மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை. -1981
சண்முகசுந்தரி,யு.- சங்கர நயினார் கோயில் திருவிழாக்கள் - மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை. - 1981
தங்கமுத்து,சு. - பழையாறைக் கோயில்கள் - மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை. - 1981
தங்கவேல்,வ.- திருவேடகம் கோயில் திருவிழாக்கள் - மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ,மதுரை. - 1981
ஆங்கில நூல்கள்
Nagasamy,R.& Ramasami, N.S. - Ramanathapuram - An Archeological Guide - The collector of Ramanathapuram - First edition - 1979
Nambiyar,P.K.& Nayayana Kurup,K.C.- Census of India - volume- 9- Madras.- Part- 9-D- Temples of Madras State - 6- Madurai &Ramanathapuram.
Ramasami,A.(Ed) - Gazetteer Of India - Tamil Nadu State- Ramanathapuram District, Govt. Of Tamilnadu. - 1972
பின்னிணைப்பு 3
சூ. ஆ. முத்து நாடார் தன்வரலாற்றுக் குறிப்பு
அருப்புக்கோட்டையில் அமுதலிங்கேஸ்வரர் கும்பாபிஷேகம்நடத்த வேண்டிய வேலை துரிதமாய் நடந்தது. இக்கோயில் மகாகஷ்டப்பட்டுக் கட்டியும்; இடையில் இராமநாதபுர ஜமீன்தார் வியாச்சியம் பண்ணி அதை இடிக்கும் உத்தரவு ஆகியும்; பின் சமாதானம் ஆகி கட்டிடம் பூர்த்தியாகி கும்பாபிஷேகம் நடத்தப் போகும் போதும்; பல ஜாதியார்களும் பொறாமையுடன் காரியம் நடைபெறாமல் செய்ய வேண்டுமென்று பல சூழ்ச்சிகள் செய்தார்கள். அப்போது இராமநாதபுரம் சப்கலெக்டர் நாராயணஐயர் அவர்களும், உள்ளூரில் டெபுடி தாசில்தாராக இருந்த வெங்கடராம ஐயர் அவர்களும் (இருவரும் மு.மு.முதலாளி பேரில் அத்தியந்த விசுவாசம் உடையவர்கள்) வந்திருந்து யாதொரு விக்கினம் வராதபடி நடத்தி வைத்தார்கள். அப்போது நாடார்கள் பல ஊரிலிருந்தும் காணிக்கைகளும், இனாம்களும், அநேக ஆடை ஆபரணங்களும், யானை, சேனை, பரிவாரங்களுடன் வந்திருந்து சிறப்பித்து நடத்தினார்கள். சுமார் பத்தாயிரம் ஜனங்கள் கூடியிருக்கலாம். தர்மர் செய்த இராசசூய யாகத்திற்குப் பல தேசத்து அரசர்களும் வந்திருந்த வண்ணம் இக்கும்பாபிஷேகங்களுக்கு நாடார் பிரபுக்களும், நாடார் சமூகத் தலைவர்களும் ஒருங்கே வந்து குழுமி இருந்தார்கள். இக்காட்சி தேவலோகக் காட்சியாய் இருந்தது. பல இனத்தவர்களுக்கும் பந்தல்கள், கொட்டகைகள், யாகசாலைகள் போட்டு முடிக்க வேண்டிய பொறுப்பை நான் ஏற்று முடித்தேன். இதற்காக மரம் கொண்டு வருவதற்காக விருப்பாட்சி (ஒட்டன்சத்திரத்திற்கு) அருகில் போய் மரம் வண்டியிலேற்றி இரவு அவசரமாகக் கொண்டு வரும்போது வண்டி தூக்கிப் போட்டு; நானும் கள்ளிப்புதர் பக்கத்தில் விழுந்து; பெரிய அபாயத்தில் மீண்டேன். ஒரு சேதமில்லாமல் பிழைத்தது ஈஸ்வரகடாட்சம் என்றே சொல்ல வேண்டும். இந்த கும்பாபிஷேகம் நடந்த பொழுது; பாண்டிய அரசர்களுக்குப் பின்னே எந்த அரசனாவது ஒரு ஜமீன்தாராவது, ஒரு பிரபுவாவது, ஒரு ஜாதியாராவது சிவாலயம் ஒன்று புதிதாய்க் கட்டிக் கும்பாபிஷேகம் செய்வது கிடையாது என்றும், பாண்டிய குலத்தவராய் இருப்பதால் அக்காலப் பாண்டியன் செய்த வேலையை இவர்களும் செய்யச் சாத்தியப்பட்டது என்றும் யாவரும் பேசிக் கொள்ளலானார்கள். சுதேச பத்திரிகைகளும் புகழ்ந்து எழுதின. மு.மு.முத்துச்சாமி நாடார் என்னும் முதலாளி அவர்களே இக்கோயில் அஸ்திவாரமிட்டுக் கோயில் கட்டிக் கும்பாபிஷேகம் செய்து பற்பல திருவிழாக்களும் செய்து பார்க்கும்படிச் செய்து வைத்த மகான் என்று அவரை வாழ்த்துகின்றேன். அவரே இக்கோயில் கட்டக் காரணஸ்தராகவும், கும்பாபிஷேகம் சிறப்பாய் நடக்கவும், அதன் உற்சவங்கள் குறைவில்லாமல் நடக்கவும் உபகரணங்கள் செய்து வைத்த மகா உத்தம புருஷரை நாடார் சமூகம் என்றும் மறவாது. நன்றி பாராட்டும் என்று நம்புகிறேன்.
நாடார்களுக்குத் தெய்வ பக்தியும், நாகரீக விருத்தியும், அதிக யுக்தியும், ஒழுக்கமும் சைவ சமயாபிமானமும் கும்பாபிஷேக மகிமையால் அதிகப் பட்டுக்கொண்டே வந்தது. இவ்வைபவங்களைக் கண்ட இதர ஜாதிகளும் இடிந்து போன பழைய கோயில்களை எல்லாம் புதுப்பித்துப் பல கும்பாபிஷேகம் நடத்தினார்கள். பிராமணர்களும் கூட தங்கள் அக்கிரஹாரத்தில் ஒரு பெருமாள் கோயில் கட்டிக் கும்பாபிஷேகம் செய்தார்கள். நாடார்கள் செய்வது போல் நாமும் ஏன் செய்யக்கூடாது என்று பல ஜாதியார்களும் பொது மகமை வைப்பதும், பொதுப்பணம் சேர்ப்பதும், பொதுச் சொத்துக்கள் சேர்ப்பதும், பொது ஜனாபிமானம் காட்டுவதும், கோயில் கட்டுவதும் ஆடுவதும் பாடுவதும் நாகரிகமடைவதுமாக விருத்திமுகத்தில் மனதைச் செலுத்தினார்கள்.
(தொடரும்)............சக
பின்னிணைப்பு 5
அமுதலிங்கேஸ்வரர் கோயில் திருப்பணி செய்தவர்களின் பட்டியல்
எண் | ஆண்டு | திருப்பணி | திருப்பணியாளர் |
1 | 1907 | அமுதலிங்கேஸ்வரர் சந்நிதி கல்யாண மண்டபம் | திரு.ச.அருணாசல நாடார், திரு.ப.வெள்ளைய நாடார், திருமதி.மு.மு. மீனாட்சி யம்மாள், திரு.வ.மேகவர்ண நாடார் மனைவி மே.பச்சைமலை யம்மாள், திரு.பெ. அய்யாக் குட்டி நாடார், திரு.அ.பெரிய கருப்ப நாடார் |
2 | 1907 | அமுதலிங்கேஸ்வரர் சந்நிதி ஆறுகால் மண்டபம் | திரு.சொ.அருணாசல நாடார் திரு.மு.முத்துக்குமாரநாடார் |
3 | 1907 | நடராஜர் ஆலயம் | தூத்துக்குடி.திரு.மா.வேல் நாடார் |
4 | 1907 |
மணிமண்டபம், அர்த்தமண்டபம் |
மதுரையிலுள்ள அருப்புக்கோட்டை நாடார்கள் | |||
5 | 1907 | மணிமண்டபத்திலுள்ள நந்தி | திருமதி ச.சி.ஆவுடையம்மாள் |
6 | 1907 | விக்கினேஸ்வரர் | திருவாளர்கள் சிவ.இராம லிங்க நாடார் வகையறா |
7 | 1907 | அண்ணாமலையார் | திருமதி பெ.சு.கடம்பவன அம்மாள் |
8 | 1907 | தெஷினாமூர்த்தி | திரு.ப.பெரியகருப்பநாடார் & சின்னக் கருப்ப நாடார் |
9 | 1907 | தெஷினாமூர்த்தி சந்நிதி முன் உள்ள இரண்டு கால் மண்டபம் | திரு.சொ.பொன்னம்பல நாடார் |
10 | 1907 | சண்டேஸ்வரர் | திரு.இலைசி.அருணாசல நாடார் மனைவி திருமதி தெய்வானையம்மாள் |
11 | 1907 | அமுதவல்லியம்மன் சந்நிதி பந்தல் மண்டபம், நந்தி மண்டபம், துவஜ ஸ்தம்பம், பலிபீடம் | மதப்புலி கூட்டம் திரு. சி.த.நாகலிங்க நாடார் |
12 | 1907 | அமுதவல்லி அம்மன் சந்நிதி வானாதி ஸ்தூபி பரியந்தம் | திரு.ஆ.பெ.சிவ.பெரியகருப்ப நாடார் மனைவி திருமதி வள்ளியம்மாள், மைத்துனர் திரு.ப.விநாயகமூர்த்தி |
13 | 1907 | சண்டேஸ்வரி | திருவாளர்கள் அ.பெ.ம.சன்ஸ் & உ.பெ.ம.பால்காவடி சன்ஸ் |
14 | 1909 | சலவைக்கல் பிள்ளையார் | திரு.அல்லிமுத்து நாடார் |
15 | 1911 |
அனவரத செல்வ விநாயகர் |
தூத்துக்குடி திரு.சு.அருணாசல நாடார் மக்கள் திரு.சுந்தரலிங்க நாடார்&திரு.சிதம்பர நாடார் | |
16 | 1912 |
நவக்கிரக சந்நிதி |
திரு.அ.பெரிய கருப்ப நாடார் | |
17 | 1912 |
வாழவந்தம்மன் சந்நிதி |
தூத்துக்குடி திரு.அ.துரைச்சாமி நாடார் | |
18 | 1915 |
முத்துக்குமாரசாமி சந்நிதி |
திரு.ப.க.சங்கரநாராயண நாடார் | |||
19 | 1920 | அமுதலிங்கேஸ்வரர் சந்நிதி உட்பிரகார மண்டபம் | திரு.மு.சங்கரலிங்க நாடார், அவரது மனைவி சிவனணைந் தம்மாள், மைத்துனர் ச.க. சுப்பைய நாடார் |
20 | 1920 | சாமி கோயிலுக்கும் அம்மன் கோயிலுக்கும் இடையில் உள்ள வாசலில் நிலைக்கால் | பொட்டல்பட்டி திருமதி சி. முருகாயம்மாள் |
21 | 1928 |
வரதராஜப் பெருமாள் சந்நிதி |
திரு.சொ.ஆ.சொக்கலிங்க பாண்டியர்&சொ.ஆ.இலட்சுமண பாண்டியர் | |||
22 | 1928 | ரெங்கநாதர் | திருவாளர்கள் மாணிக்க நாடார் வகையறா& சி.வ.சு.சிவமுருக நாடார் |
23 | 1928 | முன்புற எட்டுக்கால் மண்டபம் | திரு.உலக நாத நாடார் மனைவி திருமதி உ.ஆவுடைச் செல்வி அம்மாள் |
24 | 1928 | கருடாழ்வார் வாணாதி ஸ்தூபி பரியந்தம் | திரு.தி.பெரியகருப்பநாடார் |
25 | 1974 | அமுதலிங்கேஸ்வரர் சந்நிதியில் தளம் | திரு.சொ.குருசாமி நாடார் &அவரது மனைவி திருமதி சேர்மதி அம்மாள் |
26 | 1975 | அமுதலிங்கேஸ்வரர் சந்நிதியில் தளம் | திரு.மா.வே.அ.மாணிக்க நாடார் அவரது மனைவி திருமதி மா.உமையவல்லி அம்மாள் |
27 | 1975 | கலா மண்டபம் | திரு.கு.ச.சண்முகவேல் நாடார் &ச.இராஜமாணிக்க நாடார் |
28 | 1976 | நாயன்மார்கள் | திரு.கு.ச.சண்முகவேல் நாடார்கள் முதலாக 65 பேர் |
29 | 1976 | வல்லப கணபதி, கற்பக வல்லியம்மன்& பால சண்முகர் | திரு.தா.பெரிய முத்துக் கருப்ப நாடார், அவரது மனைவி திருமதி பெ.தேனம்மாள் |
30 | 1978 |
ஆஞ்சநேயர் சந்நிதி |
ஏகாதசி மாதர் குழுவினர் | |||
31 | --- | உஷா-சூரியன்-பிரத்யுக்ஷா கார்த்திகை- சந்திரன்- ரோகிணி | திரு.சிவ.வள்ளிய நாடார் மனைவி அய்ய முத்தம்மாள் |
பின்னிணைப்பு 6
அமுதலிங்கேஸ்வரர் கோயில் வைகாசி விசாகத் திருவிழாக் கட்டளைதாரர்கள்
எண் | விழா விபரம் | கட்டளைதாரர் |
1 | 1ம் திருவிழா- கொடியேற்றம் | திருமதி மே.பச்சைமலையம்மாள் |
2 | 2ம் திருவிழா | பலசரக்கு வர்த்தக நாடார்கள் |
3 | 3ம் திருவிழா ள | திரு. சிவசங்கரநாடார் வகையறா பங்காளிகள் |
4 | 4ம் திருவிழா - காலசம்ஹாரம் | -காய்கறி, தேங்காய், பழம், பொரிகடலை வர்த்தக நாடார்கள் |
5 | 5ம் திருவிழா- இந்திரனுக்குக் காட்சி கொடுத்தல்} | ஜவுளி நூல் வர்த்தக நாடார்கள் |
6 | 6ம் திருவிழா- சமணர் கழுவேற்றம் | திருச்சுழி நாடார்கள் உறவின்முறை |
7 | 7ம் திருவிழா- பட்டாபிஷேகம் | திரு.ப.பெரிய கருப்ப நாடார் |
8 | 8ம் திருவிழா- திக்குவிஜயம் | நெல்,அரிசி,நவதானிய வர்த்தக நாடார்கள் |
9 | 9ம் திருவிழா- திருக்கல்யாணம் | - தூத்துக்குடி திரு.அ.து.அமுதலிங்க நாடார் |
10 | 10ம் திருவிழா - இரதம் | காய்கனி, தேங்காய், பழம், பொரிகடலை வர்த்தக நாடார்கள் |
11 | 11ம் திருவிழா - தீர்த்தவாரி | தூத்துக்குடி திரு.அரு.சி.அ.ராமமூர்த்தி & பிரதர்ஸ் |
முத்து மாரியம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் திருவிழாக் கட்டளைதாரர்கள்
எண் |
திருவிழா | கட்டளைதாரர் |
1 | 1ம் திருவிழா கொடியேற்றம் | சூத்தையன் நாராயண நாடார், பெருமாள் நாடார் வகையறா |
2 | 2ம் திருவிழா | பொட்டல்பட்டி நாடார்கள் உறவின்முறை |
3 | 3ம் திருவிழா | பலசரக்கு வர்த்தக நாடார்கள் |
4 | 4ம் திருவிழா | ஜவுளி,நூல்,ஸ்டேஷனரி வர்த்தக நாடார்கள் |
5 | 5ம் திருவிழா | காய்கனி, தேங்காய், பழம், கடலை வர்த்தக நாடார்கள் |
6 | 6ம் திருவிழா | புளியம்பட்டி நாடார்கள் உறவின்முறை |
7 | 7ம் திருவிழா சூர சம்ஹாரம் | நெல், அரிசி, நவதானியம் வர்த்தக நாடார்கள் |
8 | 8ம் திருவிழா |
அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை |
9 | 9ம் திருவிழா | கொத்தவேல் நாடார்கள் வகையறா |
10 | 10ம் திருவிழா | மதுரை கீழப்பேட்டை அருப்புக்கோட்டை இந்து நாடார்கள் உறவின்முறை |
11 | 11ம் திருவிழா | மோட்டார், ரைஸ்மில், ஸ்டேஷனரி &எலெக்ட்ரிக் வர்த்தக நாடார்கள் |
12 | 12ம் திருவிழா | நிலக்கடலை, எண்ணெய் வர்த்தக நாடார்கள் |
பின்னிணைப்பு 12
அமுதலிங்கேஸ்வரர் கோயில் விக்கிரகங்களின் பட்டியல்
எண் | பெயர் | அளவு மீ. செ.மீ. |
1 |
அண்ணாமலையார் |
0.75 |
2 |
அமுதலிங்கேஸ்வரர் |
1.14 |
3 |
அமுதவல்லி அம்மன் |
1.21 |
4 |
அனவரத செல்வ விநாயகர் |
2.20 | ||
5 | ஆதிமூலப் பெருமாள் | 0.75 |
6 | இச்சா சக்தி | 0.60 |
7 | உடையவர் | 0.55 |
8 | உஷா | 0.60 |
9 |
கார்த்திகை |
0.65 |
10 |
கிரியாசக்தி |
0.60 | ||
11 | குரு | 0.58 |
12 | கெயிடவர் | 1.08 |
13 | கெருடாழ்வார் | 1.25 |
14 | கேது | 0.55 |
15 | சண்டிகேஸ்வரர் | 0.59 |
16 | சண்டிகேஸ்வரி | 0.50 |
17 | சந்திரன் | 0.78 |
18 | சனி | 0.59 |
19 | சனீஸ்வரர் | 1.15 |
20 | சித்திரகுப்தர் | 1.08 |
21 |
சிவகாமசுந்தரி |
1.09 | ||
22 | சுக்கிரன் | 0.58 |
23 |
சுப்பிரமணியர் |
0.75 |
24 |
சுப்பிரமணியர் |
0.90 | ||
25 | சூரியன் | 0.60 |
26 | சூரியன் | 0.79 |
27 | செவ்வாய் | 0.60 |
28 | ஞானசக்தி | 0.60 |
29 | தக்ஷிணாமூர்த்தி | 0.69 |
30 | துர்க்கை | 0.80 |
31 | துவஜஸ்தம்ப நந்தி | 0.94 |
32 | துவஜஸ்தம்ப நந்தி | 0.80 |
33 | துவார பாலகர் (2) | 0.88 |
34 | துவார பாலகர் (2) | 0.70 |
35 | தெய்வயானை | 0.68 |
36 | நடராஜர் | 1.80 |
37 | நந்தி | 0.55 |
38 | நந்தி | 0.38 |
39 |
நம்மாழ்வார் |
0.55 | ||
40 | பதஞ்சலி | 0.88 |
41 | பழனியாண்டவர் | 0.48 |
42 | பிரதியுக்ஷா | 0.60 |
43 | புதன் | 0.65 |
44 | பூதேவி | 1.10 |
45 | பைரவர் | 1.15 |
46 | மதுரகவி ஆழ்வார் | 1.08 |
47 |
மாணிக்கவாசகர் |
0.40 | ||
48 | ராகு | 0.60 |
49 | ரோகிணி | 0.65 |
50 |
வரதராஜப் பெருமாள் |
1.90 | ||
51 | வள்ளி | 0.68 |
52 | வாழவந்தம்மன் | 1.30 |
53 | வியாக்ரபாதர் | 0.74 |
54 | வியாழன் | 0.58 |
55 | விநாயகர் | 0.66 |
56 | விநாயகர் | 0.55 |
57 | ஸ்ரீதேவி | 1.40 |
58 | ஸ்ரீதேவி | 0.59 |
கோவிலில் உள்ள பதிவேட்டின்படி கொடுக்கப்பட்டுள்ளது.
பின்னிணைப்பு 13
அமுதலிங்கேஸ்வரர் கோயில் உற்சவமூர்த்திகள் செய்யப்பட்ட பொருள்
எண் | பெயர் | அளவு மீ. செ.மீ. | செய்யப்பட்ட பொருள் |
1 | அப்பர் | 0.51 | பஞ்சலோகம் |
2 | அமுதவல்லியம்மன் (சிறியது) | 0.70 | பஞ்சலோகம் - திருவாச்சியுடன் |
3 | அமுதவல்லியம்மன் (பெரியது) | 1.04 | பஞ்சலோகம் - திருவாச்சியுடன் |
4 | அஸ்த்திர தேவர் | 0.44 | பஞ்சலோகம் |
5 | சண்டிகேஸ்வரர் | 0.63 | பஞ்சலோகம் |
6 | சந்திரசேகரர் | 0.73 | பஞ்சலோகம் |
7 | சிவகாமி | 0.69 | பஞ்சலோகம் |
8 | சுந்தரமூர்த்தி நாயனார் | 0.59 | பஞ்சலோகம் |
9 |
சுப்பிரமணியர் |
0.68 | பஞ்சலோகம் | ||
10 | சோமசுந்தரர் (சிறியது) | 1.03 | பஞ்சலோகம் திருவாச்சியுடன் |
11 | சோமசுந்தரர் (பெரியது) | 1.08 | பஞ்சலோகம் திருவாச்சியுடன் |
12 | திருஞானசம்பந்தர் | 0.54 | பஞ்சலோகம் |
13 | தெய்வயானை | 0.58 | பஞ்சலோகம் |
14 | நடராஜர் | 1.10 | பஞ்சலோகம் திருவாச்சியுடன் |
15 | பள்ளி.ஸ்ரீ.அமுதலிங்கேஸ்வரர் | 0.40 | பஞ்சலோகம் திருவாச்சியுடன் |
16 | பள்ளி.ஸ்ரீ.அமுதவல்லியம்மன் | 0.45 | பஞ்சலோகம் திருவாச்சியுடன் |
17 | பிரதோஷ மூர்த்தியும் அம்மனும் | 0.54 | பஞ்சலோகம் திருவாச்சியுடன் |
18 |
மாணிக்கவாசகர் |
0.40 | பஞ்சலோகம் |
19 |
வரதராஜப்பெருமாள் |
0.74 | பஞ்சலோகம் | ||
20 | வள்ளியம்மன் | 0.58 | பஞ்சலோகம் |
21 | விநாயகர் | 0.50 | பஞ்சலோகம் |
22 | ஸ்ரீஅம்மன் | 0.71 | பஞ்சலோகம் |
23 | ஸ்ரீதேவி அம்மன் | 0.75 | பஞ்சலோகம் |
24 | ஸ்ரீ பூதேவி அம்மன் | 0.75 | பஞ்சலோகம் |
கோயிலில் உள்ள பதிவேட்டின் படி கொடுக்கப்பட்டுள்ளது.
(தொடரும்)............சக
21
<td style="border-width:1pt;border-style:solid;
ன்னிணைப்பு 14
அமுதலிங்கேஸ்வரர், முத்துமாரியம்மன் கோயில் ஆபரணங்கள்
எண் | பெயர் | விளக்கம் |
1 | அபிஷேக கவசம் | வெள்ளி |
2 | அம்மன் கீழ் பாதகவசம் | செம்பு- தங்க முலாம் பூசியது |
3 | ஏழுகல் சிவப்புத்தோடு | தங்கம் |
4 | ஏழகல் வெள்ளைத்தோடு | தங்கம் |
5 | ஏழுகால் சூடத்தட்டு | வெள்ளி |
6 | ஒட்டியானம் | வெள்ளி |
7 | ஒட்டியானம் | தங்கம் |
8 | கண்டாபரணம் | தங்கம்&வெள்ளியில் செய்து 101 வெள்ளைக்கல் பதித்தது |
9 | ஒட்டுபாதம் | தாம்புரம்- தங்கமுலாம் பூசியது |
10 | கல் தொங்கட்டம் | தங்கம்-17கற்கள் உடையது. எலுமிச்சம்பழத்தில் குத்துவது . |
11 | கல் நெக்லஸ் மாலை | தங்கம் -13கற்கள் பதித்த நட்சத்திரம் 6 கொண்டது |
12 | காப்பு ஜோடி | தங்கம் |
13 | கால் சலங்கை ஜோடி1 | சலங்கை 30 |
14 | கால் சிலம்பு ஜோடி 1 | தங்கம்- 26சிவப்புக்கல், 26வெள்ளைக் கல்- வெள்ளிப்பட்டையால் கோத்தது |
15 | கால் செயின் ஜோடி 1 | வெள்ளி |
16 | கால்ஜோடி - சிறியது 1 | தாம்புரம் - தங்க முலாம் பூசியது |
17 | கால் ஜோடி பெரியது 1 | தாம்புரம் |
18 | கால் ஜோடி பெரியது 1 | வெள்ளி |
19 | கால் டாலர் ஜோடி | தங்கம் - 46வெள்ளைக்கல் |
20 | கிரீடம் | தாம்புரம் -தங்கமுலாம் பூசியது |
21 | கிரீடம் | வெள்ளி - தங்கமுலாம் பூசி 29கற்கள் பதித்தது |
22 | குவளைமாலை | உத்திராட்சம்-26 தங்கக்கவசம் போட்டுப் பொன்கம்பியில் கட்டியது. |
23 | குவளை மாலை | உத்திராட்சம்- 35 தங்கக்கவசம் போட்டுப் பொன்கம்பியில் கட்டியது. |
24 | கைக்கடிகாரம் - செயினுடன் | தங்கம் |
25 | கைக்கொலுசு ஜோடி 1 | தங்கம் |
26 | கைச்செயின் -சாதா 1 | தங்கம் |
27 | கைச்செயின் - டாலர் உட்பட- 2 | தங்கம் |
28 | கை ஜோடி | வெள்ளி - தங்கமுலாம் பூசியது . |
29 | கைஜோடி -1 சிறியது | வெள்ளி - தங்கமுலாம் பூசியது |
30 | கைஜோடி - பெரியது | தாம்புரம் - தங்கமுலாம் பூசியது |
31 | கைடாலர் - 4 மோதிரங்களுடன் | தங்கம் - 57 கற்கள் பதித்தது |
32 | சடைநாகம் | தங்கம் - பின்புறம் வெள்ளித்தகடு ராக்கடி1, ஐந்து தலை நாகம்1,சடைக் கோம்மை16, குஞ்சம்2 உட்பட . |
33 | சதுர்புஜம் | தாம்புரம் - தங்கமுலாம் பூசியது |
34 | சந்தனக்கும்பா ஜோடி | வெள்ளி |
35 | சிவந்திப்பூ மாலை | தங்கப்பூ84, வெள்ளித்தகடு போட்ட மகரி1, கௌரிசங்கர்1,வெல்வெட் துணியில் தைத்தது |
36 | சிவந்திப் பூமாலை | தங்கப்பூ-108, வெள்ளித்தகடு போட்ட மகரி-1, கௌரிசங்கர்-1, வெல்வெட் துணியில் தைத்தது. |
37 | சிவப்புக்கல் மோதிரம் | தங்கம்- சிவப்புக்கல் பதித்தது. |
38 | சிறிய கால் ஜோடி 1 | பித்தளை |
39 | சிறிய பொட்டு | தங்க முலாம் பூசியது |
40 | சிறிய பொட்டு | தங்கம் |
41 | சின்ன கிரீடம் | வெள்ளி |
42 | சின்னக்கிளி | வெள்ளி - தங்கமுலாம் பூசி 3கல் பதித்தது |
43 | சின்னப் பதக்கம் | தங்கம்- 45பலவிதக் கற்கள் பதித்து 11மெழுகு முத்துக்கள் உடையது |
44 | சின்னப்பொட்டு | தங்கம் |
45 | சின்னப்பொட்டு | தங்கமுலாம் பூசியது |
46 | சூடத்தட்டு | வெள்ளி |
47 | சூலாயுதம் | பித்தளை |
48 | சூலாயுதம் | வெள்ளி&தங்கத்தால் செய்தது வெள்ளைக்கல் பதித்தது |
49 | சூலாயுதம் | வெள்ளி - தங்கமுலாம் பூசியது |
50 | சூலாயுதம் - பெரியது | தாம்புரம் - தங்கமுலாம் பூசியது |
51 | செங்கோல் | தாம்புரம் - தங்கமுலாம் பூசியது |
52 | செயின் (கொம்புடன்) | தங்கம் |
53 | தங்க நெக்லஸ் | நீலக்கல் பதித்தது |
54 | தங்கப் பவளத்தாவடம் | பவளமணி - 26 - பொன்கம்பியில் கட்டியது. |
55 | தங்கப் பவளத்தாவடம் | பொன்மணி20, பவளம்20, வெள்ளிக் கம்பியால் கட்டியது |
56 | தங்க மோதிரம் | வெள்ளைக்கல்1 பதித்தது |
57 | தங்கமோதிரம் | வெள்ளைக்கல் 5 பதித்தது |
58 | தங்க மோதிரம் | சிவப்புக்கல் 1 பதித்தது. |
59 | திருத்தோடு ஜோடி 2 | தாம்புரம்- தங்கமுலாம் பூசியது |
60 | திருத்தோடு ஜோடி 1 | தாம்புரம் -தங்கமுலாம் பூசி வெள்ளைக்கல்18 பதித்தது |
61 | திருத்தோடு ஜோடி 1 | பித்தளை-தங்கமுலாம்-18வெள்ளைக் கற்கள் பதித்தது |
62 | திருமங்கல்யம் | தங்கம் |
63 | திருமங்கல்யம் | தங்கம் - மணி இரண்டுடன் கூடியது |
64 | திருமங்கல்யம் | தங்கம் - மணி இரண்டுடன் பொன் கொடியில் கோர்த்தது |
65 | திருமங்கல்யம் | தங்கம்- வெள்ளிக் கம்பியில் கோர்த்தது |
66 | துராய் செட் | தங்கம்- 175கற்கள் பதித்தது |
67 | நவராத்திரி பூசை லிங்கம் | பித்தளை & தாம்புரம் -தங்க முலாம் பூசிய லிங்ககவசம்1, அடிப்பாதம்1, நாகபடம்1, பணிமுடி5, செவி 2 |
68 | நாகாபரணம் | |
69 | நீர் முத்து மாலை | வெள்ளிக்கம்பியில் கட்டியது |
70 | பதக்கம் | தங்கம்- 56கல், மெழுகுமுத்து11 கொண்டது |
71 | பதக்கம் | தங்கம்- 60கல், மெழுகுமுத்து15 கொண்டது |
72 | பதக்கம் | தங்கம்- 66கல், தொங்கட்டான்முத்து3 கொண்டது |
73 | பதக்கம் | தங்கம்- பலவிதக்கல்67, சிப்பிமுத்து 11, கல்தொங்கட்டான்5 கொண்டது |
74 | பதக்கம் | தங்கம்- பலவிதக்கல்89, மெழுகு முத்து12 கொண்டது |
75 | பதக்கம் | தங்கம்- கல்112, மெழுகுமுத்து19 கொண்டது |
76 | பில்லக்கு | தங்கம்- வெள்ளைக்கல்,சிவப்புக்கல் 5 பதித்தது |
77 | பின்அலங்காரம் பெரியது 2 | தாம்புரம்- தங்கமுலாம் பூசியது |
78 | பெரிய பொட்டு | தங்கம்- 1கல் பதித்தது |
79 | பெரிய கிரீடம் | தாம்புரம்- தங்கமுலாம் பூசியது |
80 | பெரிய கிளி | வெள்ளி- தங்கமுலாம் பூசி 3கல் பதித்தது |
81 | பெரிய பதக்கம் | தங்கம்- பல விதக்கல்175, மெழுகுமுத்து19 கொண்டது |
82 | பொட்டு 2 | தங்கம்- 1கல் பதித்தது |
83 | மாம்பழக்கொண்டை 2 | தாம்புரம்- தங்க முலாம் பூசியது |
84 | மாம்பழக்கொண்டை | தங்கம்&வெள்ளி- நவரத்தினக் கற்கள் பதித்து தொங்கட்டான் இணைத்தது |
85 | மார்புக்கவசம் | தாம்புரம்- தங்கமுலாம் பூசியது |
86 | முன்கை ஜோடி 1 | தாம்புரம்- தங்கமுலாம் பூசியது |
87 | மைனர் செயின் | தங்கம் |
88 | ரோஜாப்பூ மாலை | தங்கப்பூ72, சுப்பிரமணியசுவாமி மகரி1, (டாலர்) தங்க,முத்து கற்கள் இணைத்து வெல்வெட் துணியில் தைத்தது |
89 | விநாயகர் நெற்றிப்பட்டம் | வெள்ளி |
90 | விநாயகர் கொம்பு ஜோடி | வெள்ளி |
91 | விபூதிப்பட்டம் | வெள்ளி- சிவப்புக்கல் பதித்தது |
92 | வெண்சாமரம்-2 சிறியது | வெள்ளி |
93 | வெண்சாமரம்- நடுத்தரம் | வெள்ளி |
94 | வெண்சாமரம்- பெரியது 1 | வெள்ளி |
95 | வெள்ளித்தடியில் வைக்கும் ரிஷபம் | வெங்கலம் |
96 | வெள்ளித்தடியில் வைக்கும் அம்மன் | வெங்கலம் |
97 | வெள்ளித்தடியில் வைக்கும் சங்கு,சக்கரம் | வெங்கலம் |
98 | வெள்ளித்தடியில் வைக்கும் வேதாளம் | வெங்கலம் |
99 |
திருவாச்சி |
வெள்ளி | ||
100 | வேல் ஜோடி 1 | வெள்ளி |
101 | வேலாயுதம் 2 | செம்பு |
102 | வேலாயுதம் | செம்பு- சிவப்புக்கல் பதித்தது |
103 | வேலாயுதம் | தாம்புரம்- சிவப்புக்கல் பதித்தது |
104 | ஜெபமாலை | தங்கமணி 11, பவளம் 22 |
105 | ஸ்ரீஅமுதலிங்கேஸ்வரர் நெற்றிப் பொட்டு | வெள்ளி |
<span style="font-size:11pt;font-family:Arial;color:rgb(0,0,0);background-color:transparent;font-variant-numeric:normal;font-variant-east-asian:normal;vertical-align:baseline;white-spac
--
பின்னிணைப்பு 15
அமுதலிங்கேஸ்வரர் கோயில் சாமான்கள்
எண் | பெயர் | எண்ணிக்கை |
1 | அண்டா | 1 |
2 | அபிஷேக கலயம் | 1 |
3 | அம்மன் கோயிலில் சரவிளக்கு | 31விளக்குகள் |
4 | அம்மன்பீட மேல்கவசம் | 3 |
5 |
அலங்கார தீபம் |
2 | ||
6 | ஆராய்ச்சி மணி | 1 |
7 | இரண்டு நட்சத்திர தீபம் | 1 |
8 | இருபத்தேழு நட்சத்திர தீபம் | 1 |
9 | ஏழிலை சூடத்தட்டு | 1 |
10 | ஏழு மூக்கு குத்து விளக்கு | 1 |
11 | ஐந்து தட்டு சரவிளக்கு | 1 |
12 | ஐந்து நட்சத்திர தீபம் | 1 |
13 | ஐந்துமூக்கு அன்னப்பக்ஷி குத்துவிளக்கு | 1 |
14 | ஐந்துமூக்கு அன்னப்பக்ஷி சரவிளக்கு | 2 |
15 | ஐந்துமூக்கு குத்துவிளக்கு | 5 |
16 | ஐந்துமூக்கு சரவிளக்கு | 1 |
17 | ஐந்துமூக்கு சரவிளக்கு சங்கிலி | 1 |
18 | ஐந்துமூக்கு சாவி குத்துவிளக்கு | 2 |
19 | ஐந்துமூக்கு சாவி விளக்கு | 1 |
20 | ஒரு நட்சத்திர தீபம் | 1 |
21 | கண்ணாடி | 1 |
22 | கமலம் | 4 |
23 | காலாஞ்சி மடல் | 1 |
24 | குங்குமக் கொப்பரை | 1 |
25 | குடம் | 3 |
26 | குடை | 1 |
27 | குண்டாச்சட்டி | 4 |
28 | கும்பதீபம் | 1 |
29 | கும்பா | 2 |
30 | கேன் | 1 |
31 | கைதீவட்டி | 2 |
32 | கைவிளக்கு | 2 |
33 | சங்குநாதம் | 1 |
34 | சட்டுவம் | 1 |
35 | சாதக்கிண்ணம் | 2 |
36 | சாம்பிராணி தூபக்கால் | 1 |
37 | சாமரம் | 1 |
38 | சிறுசட்டி | 1 |
39 | சுவாமி கோயிலில் சரவிளக்கு | 35விளக்குகள் |
40 | சுவாமி கோயிலில் திருவாச்சி | 1 |
41 | சூடத்தட்டு | 5 |
42 | செம்பு | 3 |
43 | சேகண்டி | 1 |
44 | டவண்டை | 1 |
45 | தாமரைக்கமலம் | 1 |
46 | தூங்காமணி அன்னபக்ஷி விளக்கு | 2 |
47 | தூங்காமணி விளக்கு | 1 |
48 | நகரா | 3 |
49 | நகரா சால்ரா | 2 |
50 | நந்தி தீபம் | 1 |
51 | நாகதீபம் | 1 |
52 | நாளி அண்டா | 1 |
53 | நான்குமூக்கு அன்னபக்ஷி சரவிளக்குடன் | 1 |
54 | நான்கு நட்சத்திர தீபம் | 1 |
55 | நான்குமூக்கு குத்துவிளக்கு | 1 |
56 | நான்குமூக்கு சரவிளக்கு சங்கிலியுடன் | 1 |
57 | பத்தி ஸ்டாண்டு | 2 |
58 | பதினோருமூக்கு குத்துவிளக்கு | 1 |
59 | பல்லக்கு கொம்பு பின்கவசம் | 1 |
60 | பல்லக்கு கொம்பு முன்கவசம் | 1 |
61 | பாதகமலம் | 1 |
62 | பானை | 2 |
63 | பூஜைமணி | 5 |
64 | மணிமண்டபத்து மணி | 1 |
65 | மூக்கு வாளி | 2 |
66 | மூன்றுநட்சத்திர தீபம் | 1 |
67 | மைசூர்ச்சட்டி | 1 |
68 | யானை கழுத்து மணி | 1 |
69 | யானை தீபம் | 1 |
70 | யானைமணி | 2 |
71 | ரிஷி தீபம் | 1 |
72 | வடிதட்டு | 1 |
73 | வாளி | 1 |
74 | விசிறி | 1 |
75 | விபூதி கொப்பரை | 2 |
76 | விபூதி கொப்பரை | 2 |
77 | விபூதி மடல் | 4 |
78 | ஜடாதரி | 1 |
பின்னிணைப்பு 16
முத்துமாரியம்மன் கோயில் சாமான்கள்
எண் | பெயர் | எண்ணிக்கை |
1 | அபிஷேகக் கலயம் | 2 |
2 |
அலங்கார தீபம் |
1 |
3 |
இரண்டு நட்சத்திர தீபம் | 1 |
4 |
இருபத்தேழு நட்சத்திர தீபம் | 1 |
5 | எழிலை சூடத்தட்டு | 1 |
6 | ஏழு நட்சத்திர தீபம் | 1 |
7 | எழுமூக்கு சரவிளக்கு | 1 |
8 | ஐந்துமூக்கு அன்னபக்ஷி குத்துவிளக்கு | 2 |
9 |
ஐந்துமூக்கு குத்துவிளக்கு |
6 | ||
10 | குழிவிளக்கு | 1 |
11 | ஒருநட்சத்திர தீபம் | 1 |
12 | கண்ணாடி | 1 |
13 | கமலம் | 6 |
14 |
காலாஞ்சி மடல் | 1 |
15 | கிளி தீபம் | 1 |
16 |
குங்குமக்கொப்பரை |
2 | ||
17 | குடம் | 11 |
18 | குடை | 1 |
19 |
குண்டாச்சட்டி |
1 | ||
20 | குதிரை தீபம் | 1 |
21 | கும்ப தீபம் | 1 |
22 | கும்பா | 2 |
23 | கைவிளக்கு | 1 |
24 | கொட்டுக்கூடை | 1 |
25 | சட்டுவம் | 1 |
26 |
சந்தனக்கும்பா |
1 |
27 |
சாதக்கிண்ணம் | 2 |
28 |
சாம்பிராணி தூபக்கால் | 1 |
29 | சாமரம் | 1 |
30 |
சூடத்தட்டு | 5 |
31 | செம்பு | 2 |
32 | தீபம் பத்தி பொம்மை | 1 |
33 | நாகதீபம் | 1 |
34 |
நான்குநட்சத்திர தீபம் | 1 |
35 |
நான்குமூக்கு சரவிளக்கு |
1 | ||
36 | பாதகமலம் | 1 |
37 | பாவை | 1 |
38 | பூஜைமணி | 3 |
39 | பொங்கல் பானை | 2 |
40 | மஞ்சள்பொடி கொப்பரை | 1 |
41 | மயில் தீபம் | 1 |
42 |
மூன்று நட்சத்திர தீபம் | 1 |
43 |
மைசூர்ச் சட்டி | 1 |
44 | விசிறி | 1 |
45 | விபூதிக்கொப்பரை | 2 |
கோவிலில் உள்ள பதிவேட்டின்படி கொடுக்கப் பட்டுள்ளது.
பின்னிணைப்பு 17
அமுதலிங்கேஸ்வரர் கோயில், முத்துமாரியம்மன் கோயில் வாகனங்கள் பெயர்
1.அக்கினி -செம்மறி கிடா
2.அக்கினிதேவர்
3.அன்னப்பக்ஷி
4.இந்திரன்
5.இந்திரன்,வெள்ளையானை
6.ஊஞ்சல் செட்
7.எமன் எருமைக்கிடாய் சிறியது, பெரியது (2)
8.காமதேனு
9.குதிரை
10.குபேரதேவர்
11.கருடாழ்வார்
12.கேடயம் சிறியது, நடுத்தரம், பெரியது(3)
13.சிங்கம்
14.தண்டிகை
15.தந்தப்பல்லக்கு
16.நிருதி தேவர் வேதாளம்
17.பலகை ஊஞ்சல் செட்
18.பள்ளியறை ஊஞ்சல்
19.பிள்ளை தண்டாயுதம் ஜோடி 2
20.பூமாதேவி
21.பெருச்சாளி
22.மகிஷாசுரன்யானைத் தலை1
குதிரைத்தலை 1
எருமைத்தலை 1
23.மயில் சிறியது,பெரியது (2)
24.யானை
25.ரிஷபம் சிறியது, நடுத்தரம்,பெரியது (3)
26.வாயுதேவர் (2)
கோயில் பதிவேட்டின் படி கொடுக்கப்பட்டுள்ளது.
(தொடரும்)...............சக
பின்னிணைப்பு 18
தகவலாளர்கள்
எண் | பெயர் | வயது | கல்வித் தகுதி | முகவரி |
1 | அருணாசல நாடார்,சு.சி. | 73 | --- | 7, கெங்கைமுத்து நாடார் தெரு, அருப்புக்கோட்டை . |
2 | அன்ன லட்சுமி,செ. | 59 | 5ம் வகுப்பு | 7, மு.பொ.முத்துச்சாமி நாடார் தெரு, அருப்புக்கோட்டை . |
3 | ஆவுடைத் தங்கம்,கா. | 44 | எம்.ஏ., பி.டி. | நாடார் கீழத்தெரு, அருப்புக்கோட்டை |
4 | இரத்தின நாடார், பி.வி.எஸ். | 71 | --- | 32, எஸ்.பி.கே.உயர்நிலைப் பள்ளி ரோடு, அருப்புக்கோட்டை. |
5 | இரத்தினசாமி நாடார்,அ. | 73 | 7ம் வகுப்பு | கீழச் சந்தைப்பேட்டை,மதுரை. |
6 | இராசாமணி பட்டர் | 62 | --- | நாடார் சிவன்கோயில் தெரு, அருப்புக்கோட்டை . |
7 | இருளப்ப நாடார்,சா. | 86 | 3ம் வகுப்பு ஏட்டுக்கல்வி | கீரைத்துறை, மதுரை. |
8 | உத்தண்ட நாடார்,இ. | 72 | 3ம் வகுப்பு ஏட்டுக்கல்வி | 24, ந.சி.சங்கரலிங்க நாடார் தெரு,அருப்புக்கோட்டை. |
9 | கணேசன்,கு. | 48 | எஸ்.எஸ். எல்.சி. | 7.2-6, நாடார் சிவன்கோயில் தெரு, அருப்புக்கோட்டை. |
10 | காசி,அ. | 48 | எம்.ஏ.பி.டி. | நாடார் கீழத்தெரு, அருப்புக்கோட்டை. |
11 | சங்கர லிங்கம்,வ.தி. | 78 | 8ம் வகுப்பு | 43, லட்சுமிபுரம்-8வது தெரு, மதுரை. |
12 | சந்திர சேகரன்,சீ. | 26 | 8ம் வகுப்பு ஆகமப் பாடசாலை | 114ஏ, நாடார் சிவன்கோயில் தெரு, அருப்புக்கோட்டை. |
13 | சீனிவாச ஐயர் | 64 | --- | 114ஏ, நாடார் சிவன்கோயில் தெரு, அருப்புக்கோட்டை. |
14 | நாகரத்தினம்,ச. | 44 | --- | கீரைத்துறை, மதுரை. |
15 | பெரிய கருப்பன்,என். | 60 | பள்ளி ஆசிரியர் (ஓய்வு) | 22, பிச்சைக்குட்டி நாடார் தெரு, அருப்புக்கோட்டை. |
16 | மலை யரசன், எஸ். | 58 | 7ம் வகுப்பு | 6-4-8, எம்.எஸ்.பி.தெரு, அருப்புக்கோட்டை |
17 | மீனாட்சி,க. | 44 | 8ம் வகுப்பு | 7-2-6, நாடார் சிவன்கோயில் தெரு, அருப்புக்கோட்டை. |
18 | மீனாட்சி யம்மாள்,வ.தி.ச. | 60 | 5ம் வகுப்பு | 43,லட்சுமிபுரம், 8வது தெரு, மதுரை. |
19 | முத்துச்சாமி நாடார்,மு. | 70 | --- | முத்துச்சாமி நாடார் தெரு, அருப்புக்கோட்டை |
20 | முத்துமுருகன், சூ.ஆ.மு. | 62 | இன்டெர் மீடியட் | பாண்டியன் லாரி செட், கருப்பணசாமி கோயில் ரோடு, அருப்புக்கோட்டை. |
21 | வாழவந்தாள், சி.ம. | 51 | 6ம் வகுப்பு | 15, லட்சுமிபுரம்,8வது தெரு, மதுரை. |
26
குடை
<p dir="ltr" style="line-height:1.2;
பஞ்சலோகம் | |||
22 | ஸ்ரீஅம்மன் | 0.71 | பஞ்சலோகம் |
23 | ஸ்ரீதேவி அம்மன் | 0.75 | பஞ்சலோகம் |
24 | ஸ்ரீ பூதேவி அம்மன் | 0.75 | பஞ்சலோகம் |
கோயிலில் உள்ள பதிவேட்டின் படி கொடுக்கப்பட்டுள்ளது.
(தொடரும்)...............சக
பின்னிணைப்பு 10
திருநல்லூரில் கோயில் கொண்டருளிய ஸ்ரீமத் அமுதலிங்கேஸ்வரர் சந்நிதான உச்சவாதிபதிகளாகிய புண்ணியசீலர்களை வியந்து பாடிய வாழ்த்துக்கவிகள்- க.சு.வெங்கடாசலம் பிள்ளையவர்கள்
தேவஸ்தான கமிட்டியார் வேண்டுகோளால் க.ச.கதிர்வேல் நாடார் அவர்களுடைய சென்னை இராயபுரம் விஜயவிகடன் அச்சியந்திர சாலையில் பதிப்பிக்கப்பட்டது- 1908
சிவமயம்
மகோற்சவ வாழ்த்துக்கள்
விநாயகர் துதி
(கட்டளைக்கலித்துறை)
சீர் கொண்ட நல்லை அமுதலிங் கேசற்குத் தேவியெனு
மேர் கொண்ட வல்லி அமுதாம்பிகைக்கு மிளையவற்குங்
கார் கொண்ட அங்கையொளிர் பாலசந் திரகணாத நிற்கும்
பார் கொண்ட உற்சவவாழ்த் தோதவந்தருள் பாலிப்பையே
அமுதலிங்கேஸ்வரர்
(எண்சீர்விருத்தம்)
சோமவாரம்
சீர்வளரும் திருநல்லூர் வாழமுதலிங்கர்
தேவியமு தாம்பிகை மனோமணியா மிவர்கட்
கேர்வளருங் கார்த்திகை நன்மதிச் சோமவாரத்
தெழிலாரு மால் விடையிற் றண்டிகை யினியல்பாய்
கார்வளரும் பானுமதி குலத்துதித்த நல்லூர்
நாடார்கள் திருப்பவனி நடத்தி மகிழ்சிறந்தார்
பார்வளரு மிவர்மரபு நாட்டுநா ளோங்கி
பலுகமகிமைப் பண்டும் வாழிய வாழியவே.
பிரதோஷம்
எத்திசையும் புகழ்வளமை ஏய்ந்த திருநல்லூர்
எனுமருப்புக் கோட்டைவளர் பானுமதி மரபுச்
சத்திரியராற் செய்த திருத்தளியினோங்கித்
தழைத்தருளும் அமுதலிங்கர் அமுதவல்லி யெனுமா
சித்திதரும் நமதுமுதற்றாய் தந்தைக்கு என்றும்
திகழ்பிரதோ ஷப்பவனி செய்வித்து மகிழ்ந்த
வெற்றிலைவியா பாரிகளும் சுப்பைய பூபதியும்
மேதினியிற் புகழோங்கி வாழிய வாழியவே.
அட்டமி
சித்திரம் சேர்ந்தொளிர் நல்லூர் அமுதலிங்கப் பெருமான்
தேவிஅமு தாம்பிகைஐங் கைத்தேவன் மயிலூர்
கந்தன் முருகேசன் நற்சண் டேசன் என்னக்
கவின்பஞ்ச மூர்த்திகளை மார்கழிஅட் டமியிற்
தத்தும்விடை தண்டிகைமூ ஷிகமயில் கேடயத்திற்
தனிப்பவனி செய்வித்த சத்திரிய மரபோன்
பத்தனுத் தண்டமகி பாலனுந்தங் குலத்துப் பார்த்திபரு நீடூழி வாழிய வாழியவே.
அமுதாம்பிகை
சுக்கிரவாரம்
சொன்மதுரை ஊராண்ட வழுதியர்கோன் மலையத்
துவசன்மர புதித்தருளும் சிவலிங்க மகிபன்
நன்மக வாய்வந்து தித்தபெரிய கருப்பணவேள்
நாட்டு மணம்புரி வள்ளியம்மை இவடமையனி
விளமதன சொரூபன் விநாயக மூர்த்திப் பெயர்கொள்
விற்பனரின் னோர் நல்லூர் அமுதலிங்கர் பால்வாழ்
நன்மைமலி அமுதவல்லியெனும் தாய்க்குமாதாந்
தரச்சுக்ர நாட்பவனி சமைத்தவர் வாழியவே.
நவராத்திரி
செல்வமலி திருநல்லூர் அமுதலிங்கர் மகிழ்மா
தேவியமுதாம் பிகைக்குச் சிரந்த கன்னிமதியின்
லகுவநவ ராத்திரிநாட் கொலுப் பெருக்கிவைத்து
மயில்முருக னாலம்பு போடுவித்து மகிழ்ந்த
கல்விமுதிர் மதிக்குலத்துப் பெரிய கருப்பணவேள்
கரந்தை வள்ளி யம்மையிவள் களிக்குமுதற் றமையன்
நல்லகுணம் படைத்த விநாயகமூர்த்திப் பெயர்கொள்
நரேந்தினு நீடூழி வாழிய வாழியவே.
விநாயகர் சதுர்த்தி
செந்திரு உகந்துகனிந் திலங்கு திருநல்லூர்
தேவ முதலிங்கேசன் திருத்தளிக்கு ளோங்கி
யந்தமத்தியாதி கடந் தொளிப்பால சந்த்ர
வைங்கரற்குச் சிங்கமதி தங்கு சதுர்த்தியில்
புந்திமகிழ்ந்தரும் பூசை நடத்திவைத் தன்றிரவில்
பொற்புறு மூடிகப் பவனி பொலிவின் வரக்கண்ட
சுந்தரலிங்கட் பெயரோ டிரவி குலத்துதித்த
தோன்றல் சிதம்பர பூமான் சுகம்பெற வாழியவே.
திருநல்லூர் முத்துக்குமார சுவாமியென்னும் ஸ்ரீமத் சுப்பிரமணியக்
கடவுளின் கார்த்திகை மகோத்சவ வாழ்த்துக்கவிகள்
(8 எண்சீர் விருத்தம்)
சித்திரை மாதம்
திருவளரு நல்லைநகர்க் கொருமுதல்வ னான
தேவ முதலிங்கேசர் திருத்தளியி னோங்கி
குருபரரென்றே பரவத் தழைக்கு முத்துக்குமரக்
குலமணியை மேடமதிக் கார்த்திகை நாளிரவிற்
கருவளர்பூங் குழல்வள்ளி தெய்வானை யெனவே
கதிக்கு மினாரிருவரோடு துதிக்குமயிற் பரிமேற்
பெருமையுடன் திருப்பவனி நடத்துரவி குலத்துட்
பிறந்ததில்லைச் சிதம்பரவேள் சிறந்திட வாழியவே.
வைகாசி மாதம்
பத்தர்தினம் புகழ்நல்லை யம்பதியில் மேவும்
பரரமுதலிங் கேசர் பதிவுறும் ஆலயத்தார்
முத்தர் பணிந்தருள் முத்துக்குமர சிகாமணியை
மொய்த்த எழிலார்ந்த வள்ளிதெய் வானையுடனே
சித்திரஞ்சேர் தோகைமயில் வாகனத் தினிடபச்
செருமதிக்கார்த் திகைப்பவனி செய்துவைத்து மகிழ்ந்த
கொத்தன் முத்துராமன் முதற்கதிர்க்குலத்துச் சான்றோர்
குடிமுழுது மகிழ்ந்தோங்கி வாழிய வாழியவே.
ஆனிமாதம்
நீடாழி யுலகத்தின் ஒன்றியும் ஒன்றாத
நிமலனெங்க டிருநல்லூர் அமுதலிங்கப் பெருமான்
வாடாதபுகழ் பெற்ற திருத்தளிக்குட் டழைத்து
வருமுத்துக் குமரனைத் தம்மாதிரு வருடனே
கோடாதமிகுவ ரவிக் கார்த்திகைநாட் பவனி
கோலம் செய்தேற்று இரவிகுலமதிச் சான்றோராம்
நாடார்கள் யாவர்களும் மகமைப் பண்டுடனே
நலந்திகழ் குபேரனென நாள்தோறும் வாழியவே.
ஆடி
செங்கமல மங்கைகலை மங்கையுடன் நாளும்
செழித்துலவு திருநல்லூர் அமுதலிங்கர் தளிவாழ்
துங்க மிகுந்திலங்கு முத்துக்குமர சிகாமணியைத்
துணைவியர்கள் இருவரோடு துலங்கு பச்சையின்மேற்
பொங்கமுறுங் கடகமதிக் கார்த்திகை நாட்பவனி
பூதலமெலாம் வியப்பச் செய்த ரவிகுலத்தச்
சங்கரன் கூட்டத்துற்ற சான்றோர்கள் எவருந்
தனகன குபேரனென வாழ்ந்திட வாழியவே.
ஆவணி
விஞ்சைமுனி வரர்பரவும் அமுதலிங்கப் பெருமான்
மிளிர்தரு நல்லூர் நாப்பணொன்று திருத்தளியிற்
கொஞ்சுகிளி மொழிவள்ளி தெய்வானை என்னும்
கொம்பனையா ரொடுமேவிக் குலவு முத்துக்குமரச்
செஞ்சரணத் திகழ்மணியைச் சிங்கமதி யாரற்
றிளம்பச்சை மயிற்பவனி செய்திதயம் களிகூர்
கஞ்சைநகர்ப் பானுமதி குலத்தோர் எவரும்
கனதனக் குபேரனெனக் கவினுற வாழியவே.
புரட்டாசி
வானாதி ஐம்பூதத் தொன்றியும் ஒன்றாத
மாதேவன் திருநல்லூர் அமுதலிங்கர் தளிக்குட்
கோனாதியென மிளிர் முத்துக் குமரமணிக்கு
குலவு கன்னியாரவிடைத் தோகை மயிற்பவனி
ஏனாதி நாதனார் கம்பேனி மெர்ச்சன்
டிளவரசு நாடாட்க ளியற்றுவித்து மகிழ்ந்தார்
மானாபி மானமுறு மிவர்கள் பெருஞ்செல்வ
மாநிலத் தேமேலோங்கி வாழிய வாழியவே.
ஐப்பசி
மட்டில்புக ழார்நல்லூ ரமுதலிங்க நாதன்
வளர்தளிக்குட் டழைத்தோங்கிவரு முத்துக்குமரக்
கட்டழகன் தனைவள்ளி தெய்வானை என்னும்
கன்னிமாரொடும் பச்சைமயில் மீதுபவனி
இட்டமுடன் ஓங்குதுலா மதியில் வருமார
விளங்குறு மத்திமைதனில் இயற்றுவித்து மகிழ்ந்த
பொட்டினகர்ப் பானுமதி குலச்சான்றோர் எவரும்
பொங்கமிகுந் திங்கிதமாய்ப் பொலிதர வாழியவே .
கார்த்திகை
(இரட்டை ஆசிரிய விருத்தம்)
மாமேவு தண்ணதியும் வெண்மதியும் மீதுபுனை வள்ளலார் அமுதலிங்க
மாதேவ வென்னையரு டாயமுதவல் லிநன்மனோ மணியொடுங் கரதலக்
(தொடரும்)............சக
நன்றி கண்மணி🌻
காமேவுமானை முகவாறு முகனோடு தந்தை காறடித்தோங்கு மைந்தர்
கவினுலவு மிப்பஞ்ச மூர்த்திகளையுந்திருக் கார்த்திகைக் கார்த்திகை நனாட்
பாமேவு மபிடேக நாட்டியொளிர் விடையாகு பச்சைமயில் கேடயத்திற்
பவனிசெய் தேசுவர்க் கப்பனைத் தீபமும் பாங்கினொடு செய்துவைத்த
தேமேவு குமரநகர் வாழ்வுபெறு பானுகுல திடபுருட வாறுமுகவேள்
செய்தவத் தால்வந்த விளையபெரு மாள்மகிழ் சிறக்கநிதம் வாழிமாதோ.
மார்கழி
குமுதமதி தவழ்சடிலத் தமுதலிங்கப் பெருமாள்
குலவிய நல்லூர் தளிக்குளில குமுத்துக்குமரச்
சமரரண கோளரியைத் தனுமதிக் கார்த்திகைநாட்
சாமள மயூரமிசைச் சத்திமா ருடனே
விமலமிருந் திருப்பவனி மண்ணுலக முழுதும்
வியப்பாகச் செய்வித்து விளங்குமதி குலத்துதிக்
கமுதியூர்ப் பிச்சிகுட்டி மகிபனிவன் மரபோர்
காசினியி லென்றென்றும் கதிர்ப்புற வாழியவே.
விற்பனர்கள் பொலிநல்லூ ரமுதலிங்கப் பெருமாள்
மேவு சிவாலயத் தென்றுமிளிர் முத்துக்குமரச்
சிற்பரனை மான்வள்ளி தெய்வானை என்னுந்
தேவிமா ரொடும் பச்சைமயில் மீதிலேற்றி
பொற்பவிர் மார்கழிமாதத் தீற்றுறுங் கார்த்திகைநாட்
பொங்கமிகுந் திருப்பவனி யிங்கு செய்துவைத்த
நெற்கடைவியா பாரிகளாம் பானுமதி குலத்து
நிருபரொடும் அவர்மகிமை நிலைபெற வாழியவே.
தை
(சோட சந்தா வாசிரிய விருத்தம்)
சீர் கொண்ட கங்கைமதி யக்கறு குதும்பைபுனல் தேவ முதலிங்கேச்சுரன்
திகழ் நல்லையம் பதியி லிந்து மரபினராய செழியர்முத னாட்டொடுத்துச்
செய்தவம் கைவந்த தென்னைமலை யொடு வந்த
தேவியமுதாம்பிகையை முன்
திருமணம் இஞற்றியன வரதங்களித்துவளர் செம்பொன்மணியா
லையத்துள்
வான் கொண்ட களபமுலை யம்பிகை யொடறுமினார் மைந்த னெனவுற்றொ
ரெட்டு
மாதங்கமும் சேடனோ கங்கமும் நெடிய மால்வரைக ளெட்டு முலைய
வட்டக் கடற்குழியி னுட்டத்து சூரனுயிர் மாய்த்தும்பர் கோவளித்த
மடவரலொடுங்கான மான்மருவு முத்துக்கு மாரனென வந்த மணியை
பார் கொண்ட மகரமதி யாரனாளிரவினிற் பண்ணவர் விண்மாரி பெய்யப்
பலமேளதாள வொலி யோரேழு முகிலினொடு பரவையொடு
மாறுகொள்ளப்
பகல்வத்தி மத்தாப்பு வாணமுதலாம் பற்பல பாங்கினொடு பொற்சப்பரம்
பச்சைமயில் வாகனத்தே யுலகுகொண்டாடு பவனியது செய்துவைத்த
தார் கொண்ட தின்புயல் மேருவைச் செண்டாற் தகர்த்து வரியேழு மெற்றிச்
சதமகன்பைம் பொன்முடி சிதரவளையோச்சுதிட தாட்டீக னுக்ரகுமரன்
தன்பெரிய மரபிடை வருங்குமர கூட்டமே சார்வுற்ற சான்றோரெலாம்
சந்தான சௌபாக்ய பிரபலத் தீரராய்ச் சந்ததம் வாழி மாதோ
மாசி
குணபதி யென் றவிர்நல்லூர் அமுத லிங்கநாதன்
கோயிலிடை தழைக்கமுத்துக் குமரசிகாமணியாம்
மணபதியை கான் வள்ளி தெய்வானையுடனே
மாகரவிக் கார்த்திகை நாள்மயிற் பவனி
பணபதியாகிய சேட வாயிரநா வினிலும்
பகரமுடி யாப்பாங்கி டைத்துமதி குலத்து
கணபதி வேளருள் சங்கர நாராயணேந்த்ரக்
காண்டிபனு மரபினரும் வாழிய வாழியவே.
பங்குனி
திருத்தகு நல்லூர்ப் பதிவாழ் அமுதலிங்கப் பெருமான்
திகழ்தரும் பொன்னாலயத்துட் சிறக்குமுத்துக்குமர
கருத்தனைநற் கிரியைசத்தி ஞானசத்தி என்னக்
கவின்மாத ரொடு மீன்மதியார விரவில்
நிருத்தமிடு தோகைமிசைப் பவனிசெய்து மகிழ்ந்த
நிருபனு ருத்திரசன்ம னீள்பொழில் முன்னோங்கிப்
பருத்தபுகழ் பெற்றிலகு குமரநகர் வதியும்
பானுமதிக் குலச்சான்றோர் பற்பலர் வாழியவே .
(தொடரும்)..................Sk
<span class="gmail-m
--
கணிப்பாளர் முன்னுரை
‘அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறைக் கோயில்கள்- ஓர் ஆய்வு‘ என்னும் பெயரில் அமைந்துள்ள இவ் ஆய்வேட்டை 1984ல் சமர்ப்பித்த திருமதி கஸ்தூரி தயாநிதி அவர்கள் ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் ராஜரத்தினம் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறையில் என்னோடு இருபத்தைந்து ஆண்டுக்காலம் ஒரே துறையில் பணியாற்றியவர். அவரது தலைமையின் கீழும் மூன்றாண்டு காலம் நான் பணியாற்றி உள்ளேன்.
ஆய்வு நிறைஞர் பட்டத்திற்காக இந்த ஆய்வை அவர் செய்திருக்கிறார்; எனினும் இந்த ஆய்வேட்டில் உள்ள வரலாற்றுக்கூறுகள் இதன் மதிப்பை மேலும் உயர்த்துகின்றன.
கணினியும், வலைத்தளமும் மக்களிடையே புழக்கத்தில் இல்லாத அந்தக் காலத்தில்; தட்டச்சு இயந்திரத்தில் தட்டி ஆய்வேடு சமர்ப்பித்தவர்கள் எல்லாம் 4+1என்ற கணக்கில் தான் பிரதிகள் எடுத்தோம். அவற்றில் முதல் 3பிரதிகளைப் பல்கலைக் கழகத்தில் சமர்ப்பித்து விடுவோம். நான்காவது பிரதி நெறியாளருக்கு உரியதென்று கொடுத்து விடுவோம். எஞ்சிய ஐந்தாவது(அதாவது(+1) பிரதியை மட்டும் தான் ஆய்வாளர்கள் சொந்தப் பயன்பாட்டிற்கு வைத்துக் கொள்வோம். அது அப்போதே மங்கலாகத் தான் இருக்கும். இந்த ஆய்வேடு 34ஆண்டுகள் கழித்து இப்போது கணிப்படுத்தப் பட்டுள்ளது. தட்டச்சு மை ஆய்வேட்டில் விரிந்து பரந்து; சில இடங்களில் எழுத்துக்களை அடையாளம் காண்பது சிக்கலான சவாலாகவும் இருந்தது. ஒவ்வொரு முறை ஆய்வேட்டைத் திறக்கும் போதும் , மூடும் போதும் பொன்னோ / பூவோ என்று தான் கையாள வேண்டி இருந்தது.
அது மட்டுமன்று; ஆய்வாளர் பின்னிணைப்புக்களாகக் கொடுத்திருக்கும் கையெழுத்துப் பிரதி, துண்டு அறிக்கை, கும்பாபிஷேக அழைப்பிதழ் எல்லாம் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தைச் சேர்ந்தவை. பின்னிணைப்பு 4ஐப் பார்க்கும் போது- நல்லவேளையாக இந்த ஆய்வேட்டை இப்போது கணிப்படுத்தினோம்; இல்லை யெனில் இன்னும் தெளிவின்றிச் சில உண்மைகள் மங்கி மறைந்திருக்கும் என்று தான் எண்ணத் தோன்றியது. இப்படி எத்தனையோ வரலாற்றுக் குறிப்புக்கள் அடங்கிய ஆய்வேடுகள் காப்பாற்றப்பட வேண்டிய சூழ்நிலையில் உள்ளன. சில தரமான ஆய்வேடுகள் தேடினாலும் கிடைப்பதில்லை என்பதும் வருத்தத்திற்குரிய உண்மை தான்.
ச.கண்மணி கணேசன்