ஓரியன் என்பது வடக்கு அரைக்கோளத்தில் குளிர்காலத்தில் மிகத் தெளிவாகத் தெரியும் ஒரு முக்கிய விண்மீன் கூட்டமாகும். இது வான நடுக்கோட்டிற்கு அருகில் அமைந்திருப்பதால், உலகின் பெரும்பாலான பகுதிகளிலிருந்து இது தெரியும். எனவே உலகின் பலபகுதிகளிலும் இந்த விண்மீன் கூட்டம் குறித்த கதைகள் பல உள்ளன. எல்லாமே இந்த விண்மீன் கூட்டத்தை ஒரு போர் வீரனாகவோ, வேடனாகவோ, தெய்வமாகவோ உருவகப்படுத்துவன. இரண்டாம் நூற்றாண்டின் வானியலாளர் டாலமியின் குறிப்புகள் முதற்கொண்டு, அமெரிக்க மாயன் மக்கள், கிரேக்கப் புராணங்கள், சுமேரியர்களின் தொன்மங்கள் எனக் காணக்கிடைக்கும் பண்டைய பதிவுகளிலும் ஓரியன் விண்மீன் கூட்டம் பற்றிய குறிப்புகள் உள்ளன. சுமேரியர்கள் ஓரியனை கில்காமேஷ் ஒரு காளை (டாரஸ்/ரிஷபம்) உடன் சண்டையிடுவதாகக் கற்பனை செய்ததும் பதிவாகி உள்ளது. வானியலில் கிரேக்கர்கள் முதன்மை நிலையில் இருந்ததால் கிரேக்கப் புராண வேட்டைக்காரனான 'ஓரியன்' பெயரால் இது பெயரிடப்பட்டது. இந்தியாவில் இதைச் சிவனின் நடனமாகக் காண்கிறார்கள். கருவானில் வெண்புள்ளிகளாகத் தெரியும் விண்மீன் புள்ளிகளை அவரவர் கற்பனைப்படி இணைத்து வடிவம் கொடுப்பதும் அவற்றுக்குக் கதைகள் சொல்லி விளக்கம் கூறுவதும் மக்களின் கற்பனை வளத்திற்குச் சான்று, கற்பனைக்கு ஏது கட்டுப்பாடு.




இரவு வானத்தில் ஒளிரும் ஓரியனின் ஒளிமிக்க ஏழு விண்மீன்களில் நான்கு நட்சத்திரங்கள் - பீட்டல்ஜியூஸ், பெல்லாட்ரிக்ஸ், ரிகல் மற்றும் சைப் (Betelgeuse, Bellatrix, Rigel and Saiph) ஆகியன தோராயமாக ஒரு பெரிய, செவ்வக வடிவத்தை உருவாக்குகின்றன, அதன் மையத்தில் ஓரியனின் இடைவார் (Orion's Belt) பகுதியில் மூன்று நட்சத்திரங்கள் - அல்னிடக், அல்நிலம் மற்றும் மின்டகா (Alnitak, Alnilam, and Mintaka) உள்ளன. வீரனின் தலையில் மெய்சா (Meissa) எனப்படும் கூடுதல் எட்டாவது விண்மீன் ஒன்றும் உள்ளது.
இவற்றில் பீட்டல்ஜியூஸ் விண்மீன் ஆல்பா ஓரியோனிஸ் என்றும் அழைக்கப்படும், இந்தியர்களால் ஆருத்ரா என்றும் தமிழில் 'திருவாதிரை' என்றும் அழைக்கப்படும் இந்தப் பெரிய சிவப்பு விண்மீன் ஓரியன் கூட்டத்தில் இரண்டாவது ஒளிமிக்க விண்மீன். இது புவியிலிருந்து 640 ஒளியாண்டுகளுக்கு அப்பால் (1 ஒளியாண்டு = 10 லட்சம் கோடி கிமீ) உள்ளது. பீட்டல்ஜியூஸ் என்பது அரேபியா சொல்லான yad al-jauzā' (the Hand of al-Jauzā’ / hand of Orion) ஓரியனின் கையின் தோள் பகுதியில் உள்ளது என்ற பொருளில் கூறப்பட்டது. இடைக்காலத்தில் y என்பதை எடுத்து எழுதும் பொழுது b என மாற்றியதில் Betelgeuse ஆனது. இந்த விண்மீன் பின்னணி கொண்ட திரைப்படம் ஒன்று 1988 இல் உருவாக்கப் பட்டபொழுது எளிய விளம்பர உத்தியாக; Betelgeuse என்பதன் உச்சரிப்பு Beetlejuice, பீட்டல்ஜியூஸ் என்று ஒளிப்பதைக் கருத்தில் கொண்டு மாற்றியதில் வீரனின் கை என்பது 'வண்டின் சாறு' என்று பொருள் தரும் வகையில் எதிர்பாராமல் அமைந்துவிட்டது.
உலகில் பல பண்பாட்டினர் ஓரியன் விண்மீன் கூட்டத்தைப் போரிடும் வீரனாகக் கற்பனை செய்திருக்க இந்தியர்கள் சிவனின் நடனமாகக் கற்பனை செய்துள்ளனர். வேதத்தில் சிவன் குறித்த குறிப்பு இல்லை என்பதையும், சிவனின் புராணக் கதைகள் பிற்காலத்தில் உருவானவை என்பதையும், அத்துடன் சிவனின் நாட்டியக் கோலம் கொண்ட உருவங்களும் காலத்தால் பிற்பட்டவை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். பல்லவ அரசரான முதலாம் மகேந்திரரின் (7 ஆம் நூற்றாண்டு) சீயமங்கலம் அவனிபாஜனம் குடைவரையிலேயே இன்று நாம் பரவலாக அறியும் சிவனின் இடக்கால் தூக்கி ஆடும் நடனக் கோலம் முதன்முதலாகச் சிற்பமாகக் காணப்படுகிறது.

எனவே, இந்தக் கற்பனை சற்றொப்ப ஆறாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஆரியப்பட்டர் வராகமிகிரர் காலத்திற்குப் பின்னர் எனவும் கொள்ளலாம், இதில் கிரேக்க வானியலின் தாக்கம் உள்ளது என்பதையும் புரிந்து கொள்ளலாம். இந்த ஓரியன் விண்மீன் கூட்டத்திற்குக் கீழே/தெற்கே 'லெபஸ்' விண்மீன் கூட்டம் (Lepus constellation) உள்ளது. லெபஸ் என்பதற்கு இலத்தீன் மொழியில் 'முயல்' என்பது பொருள். இதுவே சிவனின் காலில் மிதிபடும் முயலகன் என்ற அரக்கன். முயலகன் அசுரன் குறித்தும் தொன்மக் கதைகள் புனையப்பட்டன. இருப்பினும் முயலாக உருவகித்ததின் பின்னணி கிரக்க வானியலின் தாக்கத்தைக் காட்டிக் கொடுத்துவிடுகிறது.

சிவன் கையில் தழல் (நெருப்பு) இருப்பது, அவரது அழிக்கும் சக்தி மற்றும் படைக்கும் ஆற்றல் இரண்டையும் குறிக்கிறது என்று கூறப்படுகிறது. வானின் விண்மீன் கூட்டத்தை சிவனின் நடனமாகக் காண விரும்பியவர்கள் சற்றே கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்து, தழல் வலக்கையில் இருப்பதாகக் காட்டி இருந்தால் அதைச் செந்நிறத்தில் ஒளிரும் திருவாதிரை விண்மீன் எனக் கூறியிருக்கலாம் என்று தோன்றுகிறது. ரிஷபம் விண்மீன் கூட்டமும் அருகிலேயே இருக்கும் நிலையில் சிவனுக்கு காளையை ஊர்தியாக்கியதையும் மீளாய்வு செய்ய வேண்டியுள்ளது.
இந்திய வானியலில் ஒவ்வொரு முழுநிலவு நாளுடனும் இணைந்து வரும் விண்மீன்கள் நாளில் விழாக்கள் கொண்டாடப்படுவது பண்டைய நாளிலிருந்து வழமை, குளிர்கால மார்கழித் திங்களின் முழு நிலவுநாளில் திருவாதிரை விண்மீன் இணைந்துவரும் நாள் சிறப்பாகக் கொண்டாடப் படுவது வழக்கம் (அடுத்த முழுநிலவு நாளில் வருவது தைப்பூச விழா நாள், சித்திரைத் திங்கள் சித்திரை நாள் என்பதும் அவ்வாறே)