ஆன்மிக வழியைக் கைவிடும் மக்கள்
—தேமொழி
உலகின் பல நாடுகளில், குறிப்பாக மேலை நாடுகளான ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளிலும், ஆஸ்திரேலியாவிலும் மக்களிடையே சமயச் சார்பு, இறை நம்பிக்கை ஆகியன குறைந்து வரும் காரணத்தால் தேவாலயங்கள் போகும் வழக்கம் மக்களிடையே குறைந்து வருகிறது. அத்துடன், உலக அளவில் இறைநம்பிக்கை/சமயம் சாராதவர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
தோராயமாக; இன்றைய உலகில் 4 பேரில் ஒருவர் கிறித்துவராகவும் (28.8%), ஒருவர் இஸ்லாமியராகவும் (25.6%), ஒருவர் கடவுள்/சமய நம்பிக்கை சாராதவராகவும்(24.2%), மற்றும் ஒருவர் எந்த பிற சமயத்தவராகவோ( இந்து/பௌத்தம்/யூதம்/மற்றும் பிற=21.4%) இருப்பதாக பியூ ஆய்வு நிறுவனத்தின் (Pew Research Center) அறிக்கை கூறுகிறது.
உலகில் உள்ள ஒரு குறிப்பிட்ட அளவு மக்கள் தொகையில் இந்து மதத்தினர் அதிகம் இருப்பதற்கு ஒரே காரணம் இந்தியாவின் மக்கள்தொகை அதிகம் இருப்பதாலும், அவர்களில் 80% மக்கள் இந்து மதத்தைப் பின்பற்றுவதாலும் மட்டுமே. இந்து சமயத்தை வளர்க்க வேண்டும் என்றால் இந்திய-இந்துக்களின் மக்கள்தொகையை அதிகரித்தால் மட்டும்தான், அவர்களும் இந்து சமயக் கொள்கையைத் தொடர்ந்தால் மட்டும்தான் இயலும்.
உலகின் பல நாடுகளில், குறிப்பாக மேற்கு ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா முழுவதும், தேவாலயங்கள் விற்பனைக்கு வருவது வழக்கம். இதற்கு முக்கியமான காரணம் ஆலயங்களுக்கு வரும் மக்கள்தொகை குறைவது, அதன் தொடர் விளைவாகப் பெரிய வழிபாட்டு இடங்களைப் பராமரிக்கும் செலவும் கட்டுப்படியாகாமல் போவதும்தான். சமயம் இறை நம்பிக்கை ஆகியன குறித்து மக்கள் மனப்பாங்கில் ஏற்படும் மாற்றமும், நகரமயமாக்கல் வளர்ச்சியும் ஆலயங்களுக்கு மக்கள் செல்லும் நிலை குறைவதன் மூல காரணங்களாக அமைகின்றன.
ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம், டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி நாடுகளிலும்; அமெரிக்கா, கனடா ஆகிய வட அமெரிக்க நாடுகளிலும்; ஆஸ்திரேலியாவிலும் மக்கள் வருகையற்ற ஆலயங்கள் முதலில் பராமரிக்க இயலாமையால் மூடப்படுகின்றன. பல ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இல்லாத வழிபாட்டு ஆலயங்கள் பின்னர் கட்டிட விற்பனை சந்தையில் வைக்கப்படுகின்றன (
https://www.churchesforsale.com/). அவற்றை வாங்குபவரின் திட்டப்படி பின்னர் அவை மிகப் பெரிய வணிக வளாகங்கள், வர்த்தக நிறுவன கட்டிடங்கள், தங்கும் விடுதிகள், அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டிடங்கள், சிறு தொழிற்சாலைகள், உடற்பயிற்சிக் கூடங்கள், பண்பாட்டு மையங்கள் என்ற மாற்றங்களைப் பெறுகின்றன.

பொது வெளியில் சமய விழாக்கள், வழிபாடுகள் நடத்தப்படுவது குறைவதும்; இயல்பாகவே ஏற்படும் பிற வாழ்வியல் நடைமுறை மாற்றங்களால் வெளிப்படையாக மத அடையாளங்களை அணிவதை, பொது வெளியில் மதம் குறித்த உரையாடல்களை மக்கள் கைவிடுவதும் காலப்போக்கில் சமய சச்சரவால் ஏற்படும் கலவரங்களையும் அதனால் ஏற்படும் இழப்புகளையும் குறைத்து விடும். மக்கள் அனைவரும் தத்தம் கைப்பேசியில் ஆழ்ந்திருக்கும் போது, நேரில் அருகில் உள்ளவர்களிடையே உரையாடலே இருப்பதில்லை. பிறகு, சர்ச்சைக்குரிய உரையாடல் ஏது? பின்னர் அதனால் ஏற்படக்கூடிய மனக்கசப்பு, சண்டை சச்சரவுதான் ஏது? இதனால் தொலைநுட்ப வளர்ச்சிக்குத்தான் நாம் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்.
இன்றைய புள்ளிவிவரங்களின் படி சீனா (1.3
பில்லியன்), அமெரிக்கா (101
மில்லியன்), ஜப்பான் (73
மில்லியன்) ஆகிய நாடுகளில் சமயம்-இறை சாரா கொள்கை கொண்டவர் எண்ணிக்கை மிகுதி. இந்த நாடுகள் தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னணியில் இருப்பதும், அவர்கள் உருவாக்கித் தரும் கண்டுபிடிப்புகளைக் கொண்டு இந்திய ஆன்மிக மக்கள் தங்கள் மதச் சடங்குகள் வழிபாடுகள் ஆகியவற்றின் மூலம் மதத்தை வளர்க்கிறார்கள் என்பதுதான் நகை முரண். அண்மையில் அடுக்குமாடிக் குடியிருப்பு புதுமனைப் புகுவிழாவில் வேதியர் மந்திரம் சொல்ல ஒரு தானியங்கு பசு பொம்மை பயன்படுத்தப் பட்டு சடங்குகள் செய்யப்பட்ட காணொளி ஒன்று இணையத்தில் வலம் வந்ததை இங்கு நினைவு கூரலாம் (
https://www.youtube.com/shorts/f99bGVFtatM). இக்கருத்தை அறிஞர் அண்ணாதுரை சென்ற நூற்றாண்டில் எழுதிய ஆயுத பூஜை கட்டுரையிலேயே சுட்டிக் காட்டி இருப்பார்.
புதிய தொழில் நுட்பத்தைக் கண்டுபிடிப்பதைவிடக் கண்டுபிடிக்கப்பட்டவற்றை இந்தியர் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுபவர்களாகவே இருக்கும் நிலை மாற வேண்டும் என்றால் இந்திய மக்களிடம் அறிவியல் சிந்தனையும் மனப்பாங்கும் வளர வேண்டும். அந்த மானப்பான்மையையும் அரசியலமைப்பு வரையறை கொண்டுதான் இந்தியாவில் வளர்க்க வேண்டிய ஒரு நிலை. அறிவியல் கருத்தரங்குகளில் ஆன்மிகப் புராணக்கதைகளைப் பேசித் திரிக்கும் நிலையும் நடைமுறையாக இருக்கிறது. அறிவியலுக்கான நோபல் பரிசு பெற்ற அறிவியல் அறிஞர் வெ.ராமகிருஷ்ணன் இந்தியா அறிவியல் கருத்தரங்கங்கள் சர்க்கஸ் போல நடைபெறுகின்றன அவற்றில் நான் இனி பங்கேற்க மாட்டேன் என்று அறிவித்ததை நாம் கடந்து போக இயலாது.

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் மக்களிடையே சமயச்சார்பு இன்மையும் இறைநம்பிக்கை இன்மையும் அதிகம் இருப்பதை ஆய்வறிக்கைகள் காட்டுகின்றன. பின்லாந்து, டென்மார்க் மற்றும் ஸ்வீடன் போன்ற நாடுகள் மகிழ்ச்சியான நாடுகள் எனத் தொடர்ந்து தரவரிசைப் படுத்துதலில் முன்னிடங்களில் உள்ளன. இந்நாடுகள் மதச்சார்பற்றவையாகவும் அதிக அளவில் இறை நம்பிக்கையற்ற மக்கள் வாழும் நாடுகளாகவும் அறியப்படுகின்றன. இந்நாடுகளில் நிலவும் பொருளாதாரம், மக்களுக்கு ஆதரவான சமூக சூழ்நிலை, தனிமனித உரிமை ஆகியவையும் (Economic prosperity, High social support, Freedom to make life choices) மேம்பட்ட நிலையில் இருப்பவை. பொருளாதார வளர்ச்சியின் விளைவாக இந்நாடுகளின் மக்கள் வாழ்வில் பசி, வறுமை, நோய் குறித்த கவலைகளும் குறைவு. மனித நேய அடிப்படையில் சமூக ஆதரவுகள் அதிகம் இருப்பதுடன், தனி மனித வாழ்க்கையில் அவர்களின் வாழ்வின் விருப்பத்தைக் கட்டுப்படுத்தும் முன்னேற்றத்தைத் தடுக்கும் சமூகக் கட்டுப்பாடுகளும் குறைவு.
எங்கு மக்களுக்கு அடிப்படைத் தேவைகள் நிறைவேறுவதில் சிக்கல் இல்லையோ, எங்குத் தனிமனித உரிமை மதிக்கப் படுகிறதோ அந்தச் சூழலில் அவர்களுக்குப் பொதுவாழ்வில் மனமகிழ்ச்சி ஏற்படுவதும்; அதன் காரணமாக அம்மக்கள் தங்களுக்கு இறைமூலமோ சமயம் மூலமோ மீட்சி மற்றும் உதவி தேவை என்ற நிலையில் இல்லாமல் இருப்பதையும் புரிந்து கொள்ளலாம். துன்பம் ஏற்படக்கூடும் என்ற கலக்கமும், மக்களுக்குத் துன்பம் நேர்கையிலேயே கடவுள் குறித்த எண்ணம் உருவாவதன் உளவியல் அடிப்படைக்குச் சான்றாகவும் இதனைக் கருதலாம். "மதம் மக்களின் போதைப்பொருள்" ("religion is the opium of the people" ) என்ற கார்ல் மார்க்ஸின் கூற்று இதனை விளக்கக்கூடிய ஓர் உண்மையே. சமய போதையில் ஆழ்ந்து மக்கள் கவலைகளை எதிர்கால அச்சத்தை மறக்க முயல்கிறார்கள்.
சான்றாதாரங்கள்:
How the Global Religious Landscape Changed From 2010 to 2020
June 9, 2025
List of religious populations
Indian Science Congress is a circus, won't attend it: Nobel laureate V Ramakrishnan
January 6, 2016
These Are the World’s Happiest Countries in 2025
By Michelle Baran, March 20, 2025
2018 data: Across countries, the happiest ones are the least religious
March 22, 2018
Are religious people happier, healthier? Our new global study explores this question
நன்றி:
தமிழ் மரபுத் திணை — 39 [ஜனவரி — 2026]